வெள்ளி, 31 ஜூலை, 2009

சென்னையில் ஆகஸ்ட் 5 முதல் மகளிர் சிறப்பு இரயில்கள் இயக்கம்


பெண்களின் கஷ்டத்தை போக்க வரும் ஆகஸ்ட் 5 ஆ‌ம் தே‌தி முதல் சென்னையில் 3 மகளிர் சிறப்பு இரயில்கள் இயக்கப்பட உள்ளது என்று தெற்கு இரயில்வே கூடுதல் பொதுமேலாளர் கார்மெலஸ் தெரிவித்து‌ள்ளா‌‌ர்.

மதுரை‌யி‌ல் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், மதுரை இரயில் நிலையம் ரூ.12 கோடியில் ரீ-மாடலிங் செய்யப்படவுள்ளது. ரூ.5 கோடியில் ‘எஸ்கலேட்டர்’ அமைக்கப்படவுள்ளது. பாண்டியன் ‌விரைவு இர‌யி‌லி‌ல் படுக்கை விரிப்பு வசதி முதலில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

சென்னை சென்ட்ரல்-நாகர்கோவில் செல்லும் ஏழைகள் ரதம் சிறப்பு இரயில் தொடர்ந்து இயக்கப்படும். மதுரை-செங்கல்பட்டு இடையே மின்மயமாக்கும் பணி 2010ம் ஆண்டு மார்ச்சுக்குள் முடிவடையும். போடி- மதுரை, விருதுநகர்-மானாமதுரை, திண்டுக்கல்-போத்தனூர் பாதைகள் விரைவில் அகல பாதைகளாக மாற்றப்படும்.

இரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட புதிய இரயில்களை இயக்குவதற்கே 300 கோச்கள் பற்றாக்குறையாக உள்ளது. இந்நிலையில், தீபாவளி நெரிசலை தவிர்க்க மதுரை-சென்னை இடையே புதிதாக இரயில்களை இயக்குவது தற்போது சாத்தியமில்லை.

சென்னையில் வேலைக்கு செல்லும் பெண்கள், இரயில்களில் படும் கஷ்டத்தைப் போக்க சென்னை-தாம்பரம், சென்னை-வேளச்சேரி, சென்னை-அரக்கோணம் இடையே பெண்கள் மட்டுமே பயணிக்கும் மகளிர் சிறப்பு தினசரி இரயில்கள் வரும் ஆகஸ்ட் 5 ஆ‌ம் தே‌தி முதல் இயக்கப்படும். இதை இரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி தொடங்கி வைக்கிறார் எ‌ன்று கார்மெலஸ் தெரிவித்தார்.

சவூதியில் தவித்து வரும் 400 தமிழக தொழிலாளர்களை மீட்க கனிமொழி கோரிக்கை

டெல்லி: சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் தவித்து வரும் தமிழகம் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த 400 தொழிலாளர்களை மீட்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராஜ்யசபாவில் திமுக உறுப்பினர் கனிமொழி கோரிக்கை வைத்தார்.

இதுகுறித்து ராஜ்யசபாவில் கனிமொழி பேசுகையில்,

ஜெட்டா நகரில் 400 இந்தியத் தொழிலாளர்கள் வேலையின்றி மோசமான நிலையில் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஜெட்டாவுக்கு வேலைக்குச் சென்ற அவர்கள் ஏஜெண்டுகளால் ஏமாற்றப்பட்டு சரியான சம்பளம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

400 இந்தியத் தொழிலாளர்களும் நாடு திரும்ப சவூதி அரேபியாவில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கேரளாவைச் சேர்ந்த பி.ஜே. குரியன் உள்ளிட்ட பல்வேறு உறுப்பினர்களும் இதற்கு ஆதரவு தெரிவித்தனர்.

இதற்குப் பதிலளித்த வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, இப் பிரச்னை குறித்து சவூதி அரேபியாவில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

ஏ.டி.எம்.மில் பணம் வரவில்லையென்றால் தினசரி ரூ. 100 அபராதம்- ரிசர்வ் வங்கி உத்தரவு

தானியங்கி பணப்பட்டுவாடா இயந்திரத்தில் இருந்து (ஏ.டி.எம்) பணம் வராமல், வாடிக்கையாளர் கணக்கிலிருந்து குறைக்கப்பட்டால், புகார் கொடுத்த 12 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் வங்கிகள் ஒரு நாளைக்கு ரூ. 100 கொடுக்க வேண்டும் என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

வங்கிகள், பணம் எடுத்துக் கொள்வதற்காக, ஏ.டி.எம். கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது. இதனால் வங்கியில் கூட்டம் குறைவதுடன், அதன் ஊழியர்களுக்கு வேலைப்பளுவும் குறைகின்றது.

முன்பு கணக்கி வைத்திருந்த வங்கியின் ஏ.டி.எம் இல் இருந்து மட்டுமே பணம் எடுக்க முடியும். மற்ற வங்கியின் ஏ.டி.எம் இல் இருந்து பணம் எடுத்தால், அதற்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் எந்த வங்கியின் ஏ.டி.எம் இல் இருந்தும் பணம் எடுக்கலாம். இதற்கு கட்டணம் வசூலிக்க கூடாது என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

ஒரு வங்கி கணக்கில் பணம் வைத்திருந்து, மற்றொரு வங்கியின் ஏ.டி.எம். இல் பணம் எடுத்தால் சில நேரங்களில் பணம் வருவதில்லை. ஆனால் வாடிக்கையாளரின் கணக்கிலிருந்து பணம் குறைக்கப்பட்டு விடுகிறது.

இது தொடர்பாக வாடிக்கையாளர்கள் புகார் கொடுக்க சென்றால், அலைக்கழிக்கப்படுவதாக ஏராளமான புகார்கம் கூறப்பட்டன. இதன்படி கணக்கு வைத்திருக்கும் வங்கிக்கு சென்று புகார் கொடுக்க சென்றால், எங்கள் வங்கியில் பணம் இருக்கிறது. எங்கள் வங்கியின் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தியிருந்தால் உங்களுக்கு பணம் கிடைத்திருக்கும் என்று வங்கி அதிகாரிகள் கூறுகின்றனர்.

பணம் எடுத்த ஏ.டி.எம். இயந்திரம் சொந்தமான வங்கி கிளைக்கு சென்று கேட்டால் `உங்களுக்கு எங்கள் வங்கியில் கணக்கு இல்லை. எனவே நீங்கள் எங்கு கணக்கு வைத்திருக்கிறீர்களோ அந்த வங்கியில் சென்று கேளுங்கள் என்று வங்கி அதிகாரிகள் கூறுவதாக புகார்கள் வந்துள்ளன. இதனால் வங்கியில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள், யாரிடம் சென்று புகார் கொடுப்பது என்று புரியாமல் மன உளைச்சலுக்கும், அலைக்கழிக்கும் உள்ளானார்கள்.

இது தொடர்பாக ரிசர்வ் வங்கிக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இந்த பிரச்சனையை தீர்க்க, ரிசர்வ் வங்கி, அனைத்து வங்கிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அதில் ஒரு வங்கியில் கணக்கு வைத்திருந்து மற்றொரு வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுத்து வரவில்லையென்றால், அது பற்றி புகார் தெரிவித்த 12 வேலை நாட்களுக்குள் பணம் எடுக்கப்பட்ட ஏ.டி.எம் இயந்திரத்திற்கு உடைமையாளரான வங்கி நடவடிக்கை எடுத்து அந்த தொகையை வாடிக்கையாளருக்கு கிடைக்க செய்ய வேண்டும். இல்லையென்றால் வாடிக்கையாளர் புகார் கொடுத்து 12 நாட்களுக்கு பிறகு அந்த வாடிக்கையாளரின் கணக்கில் தினசரி ரூ.100 வங்கி செலுத்த வேண்டும்.

இந்த தொகையை வாடிக்கையாளர் கணக்கு வைத்திருக்கும் வங்கியிலிருந்து, பணத்தை கொடுக்க இயலாத ஏ.டி.எம். வங்கி பெற்றுக் கொள்ளலாம்.

இது சம்பந்தமாக வங்கிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

பொது இடங்களில் கோவில், மசூதி, சர்ச் கட்டக் கூடாது - சுப்ரீம் கோர்ட்

டெல்லி: பொது இடங்களில் கோவில்கள், சர்ச்சுகள், மசூதிகல், குருத்வாராக்கள் உள்ளிட்ட எந்தவிதமான வழிபாட்டு தலங்களையம் கட்டக் கூடாது. இதை அரசு அனுமதிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

குஜராத் மாநிலத்தில் பொது இடங்கள், சாலைகள், தெருக்களில் இடம் பெற்ற வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட அங்கீகாரம் பெறாத கட்டடங்களை இடிக்குமாறு 2006ம் ஆண்டு குஜராத் மாநில உயர்நீதிமன்றம் அகமதபாத் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதையடுத்து குஜராத் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று இந்த மனு மீண்டும் நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, எம்.கே.சர்மா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்துத.

அப்போது சாலைகள், தெருக்கள் உள்ளிட்ட பொது இடங்களில் கோவில்கள், சர்ச்சுகள், மசூதிகள், குருத்வாராக்கள் என எந்த வழிபாட்டுத் தலமும் இடம் பெறக் கூடாது.

தற்போது உள்ள வழிபாட்டுத் தலங்களை அகற்றினால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படக் கூடும் என வாதிடுவதை ஏற்க முடியும். இருப்பினும், மத்திய அரசு எதிர்காலத்தில் பொது இடங்களில் எந்தவிதமான வழிபாட்டுத் தலமும் இடம் பெறாமல் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொது இடத்தில் யாராவது ஒருவர் வழிபாட்டுத் தலத்தை ஏற்படுத்தினாலும் கூட அதை அனுமதித்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இந்த விவகாரம் குறித்து அரசு சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம் நான்கு வாரங்களுக்குள் மத்திய அரசின் கருத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

அதற்குப் பதிலளித்த கோபால் சுப்ரமணியம், மத்திய அரசு இதுகுறித்து அனைத்து மாநில அரசுகளுடன் பேசி ஒருமித்த முடிவை ஏற்படுத்த முயலும் என்று உறுதியளித்தார்.

இதையடுத்து வழக்கு செப்டம்பர் 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது

மதுரையில் யாஹூ ஆய்வு மையம்: விரைவில் பணிகள் துவக்கம்


உலகின் முன்னணி இணையதள நிறுவனமான யாஹூ தனது ஆய்வ மையம் ஒன்றை மதுரையில் துவங்கத் திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் தென்மாவட்டத் தலைநகராக விளங்கும் மதுரையில், யாஹூ ஆய்வு மையம் துவங்க உள்ளது. இது தொடர்பாக, இந்தியா நிறுவன அதிகாரிகள் குழு மதுரைக்கு வந்து ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். மதுரையைச் சேர்ந்த ஒரு கல்வி நிறுவனத்துடன் இணைந்து இந்த ஆய்வு மையம் தொடங்கப்படுகிறது.

இந்த ஆய்வு மையத்தின் மூலம் 3 ஆண்டு கால ஆய்வுத் திட்டம் ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளது. பல்வேறு கம்ப்யூட்டர் அறிவியல் தொடர்பான ஆய்வுகள் குறிப்பாக கிளவுட் கம்ப்யூட்டிங் குறித்த ஆய்வு முக்கியமாக மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்த ஆய்வில் ஆசிரியர்கள், மாணவர்களையும் ஈடுபடுத்த யாஹூ இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்த ஆய்வு மையத்துடன் கூட்டு செயல்பாட்டுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கல்வி நிறுவனத்தின் ஆசிரியர்களுடனும் யாஹூ இந்தியா அதிகாரிகள் குழு ஆலோசனை மேற்கொள்ளவுள்ளது.

அதன் பின்னர் ஆய்வு மையம் மற்றும் ஆய்வுத் திட்டங்கள் குறித்து விரிவாக முடிவு செய்யப்படும். அடுத்த 2 நாட்களில் இதுகுறித்த தகவல்கள் முறைப்படி வெளியிடப்படும் என யாஹூ இந்தியா ஆய்வு மற்றும் வளர்ச்சிப் பிரிவு இயக்குநர் கே.சிதம்பரம் தெரிவித்தார்.

திருச்செந்தூரில் அனிதா ஆதரவாளர்களுடன் சண்முகநாதன் சந்தி்ப்பு


திருச்செந்தூரில் அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர்களைச் சந்தித்து அதிமுகவை விட்டுப் போய் விட வேண்டாம் என்று கோரிக்கை விடுத்து வருகிறார் தூத்துக்குடி மாவட்ட புதிய அதிமுக செயலாளர் சண்முகநாதன்.

அதி்முகவில் இருந்து நீக்கப்பட்ட அனிதா ராதாகிருஷ்ணன் திமுகவுக்குப் போய் விட்டார். விரைவில் முதல்வர் கருணாநிதி முன்னிலையி்ல் பிரமாண்ட விழா எடுத்து திமுகவில் தனது ஆதரவாளர்களுடன் இணையவுள்ளார் அனிதா.

அந்த இணைப்பு விழாவில் அனிதாவின் ஆதரவாளர்கள் பலரும் திமுகவில் சேரக் கூடும் என்று தெரிகிறது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் அதிமுகவுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படக் கூடிய வாய்ப்புகள் உருவாகியுள்ளன.

இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட அதி்முக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் மாவட்டம் முழுவதும் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ளார்.

கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர்களை சந்தித்து கட்சியை பலப்படுத்த ஆதரவு திரட்டி வருகிறார். மாவட்ட செயலாளரான பின்னர் முதன்முறையாக சண்முகநாதன் நேற்று அனிதா ராதாகிருஷ்ணனின் தொகுதியான திருச்செந்தூருக்கு வந்தார்.

அப்போது ராதாகிருஷ்ணனின் தீவிர ஆதரவாளரான திருச்செந்தூர் பேரூராட்சி தலைவரும் நகர செயலாளருமான மகேந்திரனை சந்தித்து ஆதரவு திரட்டினார். கட்சியை விட்டுப் போய் விட வேண்டாம் என்று அனிதாவின் ஆதரவாளர்களை அவர் கோரியுள்ளதாக தெரிகிறது.

அதிமுக எம்எல்ஏ ராஜிநாமா: பேரவைத் தலைவர் ஏற்பு

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட திருச்செந்தூர் எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் இன்று தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார்.


ராதாகிருஷ்ணன் தனது ராஜிநாமா கடிதத்தை பேரவைத் தலைவர் ஆவுடையப்பனிடம் அளித்ததாகவும், ஆவுடையப்பன் அதை ஏற்றுக்கொண்டதாகவும் தகவல்கள் தெரிவித்தன.


கட்சிக் கட்டுப்பாட்டை மீறும் வகையில் நடந்துகொண்டதாக அதிமுக எம்எல்ஏக்கள் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் எஸ்.வி.சேகர் ஆகியோர் இரண்டு தினங்களுக்கு முன்னர் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துவிட்டு திமுகவில் இணையவிருப்பதாக அனிதா ராதாகிருஷ்ணன் அறிவித்தார்.

திமுகவில் சேருகிறார் "அனிதா' ராதாகிருஷ்ணன்


அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் "அனிதா' ராதாகிருஷ்ணன், தமது எம்.எல்.ஏ. பதவியை வெள்ளிக்கிழமை ராஜிநாமா செய்யப் போவதாக அறிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, திமுகவில் இணைய முடிவு எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான "அனிதா' ராதாகிருஷ்ணன் அதிமுகவில் இருந்து புதன்கிழமை நீக்கப்பட்டார். கட்சியின் கொள்கை மற்றும் கட்டுப்பாட்டை மீறும் வகையில் செயல்பட்டதால், அவரும், மற்றொரு எம்.எல்.ஏ.வுமான எஸ்.வி.சேகரும் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக அதிமுக தலைமை தெரிவித்தது.

இதையடுத்து, தனது ஆதரவாளர்களுடன் கடந்த சில நாள்களாக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார் ராதாகிருஷ்ணன்.

கருணாநிதியுடன் சந்திப்பு... கட்சியில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து, திமுகவில் இணைவாரா? அல்லது எக்கட்சியும் சாராத எம்.எல்.ஏ.வாக தொடர்வாரா? என்று "அனிதா' ராதாகிருஷ்ணனைச் சுற்றி பல்வேறு கேள்விகள் எழுந்தன.

இந்நிலையில், முதல்வர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் வியாழக்கிழமை மாலை அவர் சந்தித்துப் பேசினார். மாலை 6.45 மணிக்குத் தொடங்கிய இந்தச் சந்திப்பு, 7.05 மணி வரை நீடித்தது.

பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்:

முதல்வரைச் சந்தித்தன் காரணம்? முதல்வர் கருணாநிதியை மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினேன்.

திமுகவில் இணையப் போகிறார்களா? எனது எம்.எல்.ஏ. பதவியை வெள்ளிக்கிழமை ராஜிநாமா செய்யப் போகிறேன். இதைத் தொடர்ந்து, முறைப்படி திமுகவில் இணைகிறேன்.

திமுகவில் சேரக் காரணம்? அதிமுகவில் இருந்தபோது ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகள் கடுமையான மன உளைச்சலில் இருந்தேன். எனது தொகுதி மக்களுக்கும், மாவட்ட மக்களுக்கும் பல்வேறு நன்மைகளைச் செய்ய திமுகவில் இணைகிறேன். மக்களுக்கு நன்மைகளைச் செய்யும் கட்சி திமுக.

உங்களுடன் வேறு யாரும் திமுகவில் இணைவார்களா? பொறுத்து இருந்து பாருங்கள் என்றார்.

அனிதா ராதாகிருஷ்ணனும், எஸ்.வி. சேகரும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து, சட்டப்பேரவையில் அக் கட்சியின் பலம் 57 ஆகக் குறைந்தது.

தாம் எம்.எல்.ஏ. பதவியில் இருந்து விலகப் போவதில்லை என எஸ்.வி. சேகர் ஏற்கெனவே அறிவித்துள்ளார்.

கடந்த 2006-ல் அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்ற திருச்செந்தூர் தொகுதியில் அவரை எதிர்த்து திமுகதான் போட்டியிட்டது.

எனவே இத் தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்படும்போது திமுக போட்டியிட்டு தனது எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரித்துக் கொள்ள வாய்ப்பு உருவாகி உள்ளது.

ஸ்ரீவை இடைத்தேர்தல்: பிரச்சார களத்தில் இறங்கிய கம்யூனிஸ்ட் வேட்பாளர்


ஸ்ரீவைகுண்டம் இடைத் தேர்தல் அடுத்த மாதம் 18ம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் இன்று பரிசீலிக்கப்பட்டு அரசியல் கட்சிகள் தங்களது பிரச்சார யுக்தியை கையாளத் துவங்கியுள்ளனர். கம்யூனிஸ்ட் வேட்பாளர் தனலட்சுமி முக்கிய வி.ஐ.பி.களின் சந்திப்புடன் இடைதேர்தல் பிரச்சாரத்தை துவக்கியுள்ளார்

நேற்று காலை தனலட்சுமி, தூத்துக்குடி-நாசரேத் டயோசீசன் பேராயர் ஜெபச் சந்திரனிடம் ஆசிபெற்றார். அதனைத் தொடர்ந்து ஆறுமுகநேரி, ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு கேட்கிறார். பெண் வேட்பாளர் என்ற முறையில் தனலட்சுமி போட்டியிடுவதால் ஓட்டுக்கள் கிடைக்க வாய்புள்ளதாக மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் தெரிவித்தார்.

நான்குமுனை போட்டி ஸ்ரீவைகுண்டம் தொகுதி சூடுபிடிக்கும் தேர்தல் களம் !

ஸ்ரீவைகுண்டம் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் முடிவடைந்ததைத் தொடர்ந்து, ஆதரவு திரட்டும் பணியில் வேட்பாளர்கள் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

முக்கிய தலைவர்கள் அடுத்த வாரம் பிரசாரம் செய்ய இருப்பதால், தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

நான்குமுனை போட்டி:

ஸ்ரீவைகுண்டம் தொகுதியைப் பொருத்தவரை நான்குமுனை போட்டி ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் எம்.பி. சுடலையாண்டி, இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஞா. தனலட்சுமி, பா.ஜ.க. வேட்பாளர் அ. சந்தனகுமார், தே.மு.தி.க. வேட்பாளர் மா. செüந்திரபாண்டியன் ஆகிய 4 பேருக்கும் இடையே போட்டி நிலவுகிறது

தலைவர்கள் வருகை:

இந்நிலையில் கட்சிகளின் முக்கிய தலைவர்கள் அடுத்த வாரம் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் பிரசாரம் செய்யவுள்ளனர்.

தி.மு.க. தென்மண்டல அமைப்புச் செயலரும், மத்திய அமைச்சருமான மு.க. அழகிரி ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீவைகுண்டத்திற்கு வருகிறார்.

அவரது தலைமையில் தி.மு.க. கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

தொடர்ந்து துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகஸ்ட் 4, 5 ஆகிய தேதிகளில் பிரசாரம் செய்யவுள்ளார்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஆகஸ்ட் 7, 8 ஆகிய தேதிகளில் பிரசாரம் செய்கிறார்.

மேலும், கம்யூனிஸ்ட், பா.ஜ.க. தலைவர்களும் பிரசாரம் செய்யவுள்ளனர்

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் 11 வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், தேமுதிக, பா.ஜ.க. ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் உள்ளிட்ட 11 வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 11 சுயேச்சைகளின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

ஸ்ரீவைகுண்டம் சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஜூலை 22-ல் துவங்கி ஜூலை 29-ல் முடிவடைந்தது.

அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் உள்பட 22 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் மீதான பரிசீலனை வியாழக்கிழமை முற்பகல் 11 மணிமுதல் நடைபெற்றது. தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான மாவட்ட வருவாய் அலுவலர் துரை. ரவிச்சந்திரன் தலைமையில், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சிவன், தேர்தல் வட்டாட்சியர் சாமுவேல், ஆட்சியர் அலுவலக மேலாளர்கள் செல்லப்பா, முருகானந்தம் உள்ளிட்ட அதிகாரிகள் வேட்புமனுக்களை பரீசீலனை செய்தனர்.

வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

இந்தப் பரிசீலனையின்போது 11 சுயேச்சைகளின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் உள்ளிட்ட 11 வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலர் துரை. ரவிச்சந்திரன் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

காங்கிரஸ் வேட்பாளர் எம்.பி. சுடலையாண்டி, இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஞா. தனலெட்சுமி, பா.ஜ.க. வேட்பாளர் அ. சந்தனகுமார், தே.மு.தி.க. வேட்பாளர் மா. செüந்திரபாண்டியன், சுயேச்சை வேட்பாளர்கள் எம். ராமசுப்பிரமணியன், சி. மருதநாயகம், யு. நாகூர்மீரான் பீர்முகமது, எஸ். ஆறுமுகராஜ், எஸ். யாதவ், சி. அருணாசலம், எஸ். முருகன் ஆகிய 11 வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

காங்கிரஸ் மாற்று வேட்பாளர் எஸ். வேலம்மாள், இந்திய கம்யூனிஸ்ட் மாற்று வேட்பாளர் ஏ. திலகவதி, தே.மு.தி.க. மாற்று வேட்பாளர் ஐ. இமானுவேல், சுயேச்சை வேட்பாளர்கள் ஜி. முருகன், ஏ. அங்கப்பன், பி. அன்புசிங், சி. கிருஷ்ணபாக்கியம், எஸ். ராஜா, எம். குமார், ஆர். சுப்பிரமணியன், பி. தமிழ்ச்செல்வன் ஆகிய 11 பேரது வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

2006, பேரவைத் தேர்தலின்போது இருந்த எல்லை அடிப்படையில் தற்போது இடைத்தேர்தல் நடைபெறுகிறது. ஆனால், பெரும்பாலான சுயேச்சை வேட்பாளர்களுக்கு முன்மொழிந்தவர்கள் தொகுதி சீரமைப்புக்குப் பின்னர் உள்ள வரிசை எண், பாகம் எண் ஆகியவற்றைக் குறிப்பிட்டிருந்ததால், வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

வேட்புமனுக்களை ஆகஸ்ட் 1 பிற்பகல் 3 மணிக்குள் வாபஸ் பெறலாம். அதன்பின்னர் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு, சுயேச்சை வேட்பாளர்களுக்கான சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.

வியாழன், 30 ஜூலை, 2009

ஸ்ரீவைகுண்டம் தொகுதி வேட்பாளர்களின் சொத்து கணக்கு

ஸ்ரீவைகுண்டம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட 22 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். இதில் பிரதானமாக போட்டியிடும் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, தே.மு.தி.க., பா.ஜனதா கட்சி வேட்பாளர்களின் விவரம் வருமாறு:-

காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சுடலையாண்டி நேற்று வேட்பு மனுதாக்கல் செய்தார். அவர் தனது வேட்பு மனுவுடன் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தனக்கு ரூ.59 கோடியே 87 லட்சம் மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

ரொக்க கையிருப்பு ரூ.1 லட்சத்து 75 ஆயிரம், வங்கி கையிருப்பு ரூ.2091, சேமிப்பு பத்திரம் ரூ.10 ஆயிரம், நகைகள் 200 கிராம் (ரூ.2 லட்சம்).

தூத்துக்குடி அடுத்த சங்கரப்பேரியில் நிலம் ரூ.10 லட்சம், தூத்துக்குடியில் கட்டிடங்கள் ரூ.25 லட்சம், பார்த்தசாரதி தெருவில் மனைவி மற்றும் அவரது பெயரில் கூட்டாக உள்ள கட்டிடம் ரூ.20 லட்சம், வீட்டு உபயோகப்பொருட்கள் ரூ.1 லட்சம்.

மொத்தத்தில் அவரது பெயரில் ரூ.59 லட்சத்து 87 ஆயிரம் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. அவரது மனைவி வேலம்மாள் என்ற வேணி பெயரில் ரொக்க கையிருப்பு ரூ.1 1/2 லட்சம், வங்கி இருப்பு ரூ.1252, சேமிப்பு பத்திரம் ரூ.25 ஆயிரம், நகை 400 கிராம் (ரூ.4 லட்சம்), வீட்டு உபயோகப்பொருட்கள் ரூ.1 லட்சம் என மொத்தம் ரூ. 6,76,252 மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் தனலட்சுமி நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். இவர் இந்திய மாதர் தேசிய சம்மேளன மாவட்ட செயலாளர் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட குழு உறுப்பினராகவும் உள்ளார்.

10-ம் வகுப்பு வரை தனலட்சுமி படித்துள்ளார். இவரது கணவர் ஞானசேகர், மில் தொழிலாளி. இவர் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளராக உள்ளார்.

தூத்துக்குடி பூபால் ராயபுரத்தில் வசிக்கும் இந்த தம்பதியருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். தனலட்சுமியின் பெயரில் ரொக்கப்பணம் ரூ.3 ஆயிரம், வங்கியில் கையிருப்பு ரூ.1056, சேமிப்பு பத்திரம் ரூ.42,500, நகை 76.5 பவுன் (ரூ.7 லட்சம்), 3வீடுகள் ரூ.11 லட்சம் என மொத்தம் ரூ.18 லட்சத்து 46 ஆயிரத்து 556 மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன.

அவரது கணவர் ஞானசேகர் பெயரில் ரொக்க கையிருப்பு ரூ.5 ஆயிரம், வங்கி கையிருப்பு ரூ.2374, சேமிப்பு பத்திரம் ரூ.5 ஆயிரம் என 12 ஆயிரத்து 374 மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன.

இவை அவர் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தே.மு.தி.க. வேட்பாளர் சவுந்திர பாண்டியன். இவர் தனது வேட்பு மனுவுடன் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் ரூ.8 கோடியே 88 லட்சத்து 42 ஆயிரத்து 385 மதிப்புள்ள சொத்துக்கள் மற்றும் ஒரு கார் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ரொக்கம் ரூ.15 லட்சம், வங்கியிருப்பு ரூ.10 ஆயிரம், மெர்க்கண்டைல் வங்கி பங்கு பத்திரங்கள் ரூ.13 லட்சம், எல்.ஐ.சி சேமிப்பு பத்திரம் ரூ.5 லட்சம், 160 கிராம் தங்க நகை (ரூ.2 லட்சம்) உள்ளிட்டவை இதில் அடங்கும்.

இது தவிர நிலங்கள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் ஒரு கார் உள்ளிட்ட விபரங்களையும் குறிப்பிட்டுள்ளார்.

பா.ஜனதா வேட்பாளர் சந்தனகுமார் (வயது 41). இவர் தனது பிரமாண பத்திரத்தில் ரூ.1 லட்சத்து 16 ஆயிரம் மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

ரொக்கப்பணம் ரூ.5 ஆயிரம், வங்கியிருப்பு ரூ.4816, சேமிப்பு பத்திரம் ரூ.1 லட்சம், நகை 8 கிராம் (ரூ.7 ஆயிரம்). அவரது மனைவி சொர்ண சுகந்தி பெயரில் வங்கியிருப்பு ரூ.70 ஆயிரத்து 800, பத்திரங்கள் ரூ.67 ஆயிரம், சேமிப்பு பத்திரம் ரூ.1 1/2 லட்சம், நகை 60 கிராம் (ரூ.1.40 லட்சம்).

தூத்துக்குடி அடுத்த மீளவிட்டானில் நிலம் உள்ளிட்ட ரூ.6 லட்சத்து 6 ஆயிரத்து 800 மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. சந்தனகுமார், சொர்ண சுகந்தி பெயரில் தலா ஒரு இரு சக்கர வாகனம் உள்ளது.

தூத்துக்குடி மாவட்ட பா.ஜனதா பொதுசெயலாளரான சந்தனகுமாரின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் பேய்க்குளம், தற்போது தூத்துக்குடி மாசிலாமணிபுரத்தில் வசித்து வருகிறார். வக்கீலான இவருக்கு ஒரு மகன் உள்ளார்

இலங்கையில் வன்முறை தவ்ஹீத் பள்ளி தீக்கிரையாக்கப்பட்டது

இலங்கை, 25.07.2009 சனிக்கிழமை இலங்கையின் கல் (Diamond) வர்த்தகத்தில் சிறந்து விளங்குவது பேருவலை நகரம்.

இங்குள்ள மஹகோட பகுதியில் உள்ள மஸ்ஜிதுர்ரஹ்மான் தவ்ஹீத் பள்ளி பிரசித்தி பெற்றதாகும். நேற்று 24.07.2009 இரவு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வன்முறையாளர்கள் திரண்டு வந்து மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளியை தாக்கி சேதப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் அங்கிருந்த முஸ்லிம் சகோதரர்களை ஓடஓட விரட்டியடித்து ஆயதங்களால் கடும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இத்தாக்குதலில் சகோ.மாஹின் உள்ளிட்ட இருவர் ஷஹீதாக்கப்பட்டுள்ளனர். மேலுர் ஐவரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

50 க்கும் மேற்பட்ட சகோதரர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கபட்டுள்ளனர்.

பள்ளிக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 25 க்கும் அதிகமான இருசக்கர வாகனங்களும் காடையர்களின் கடும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

வாகனங்களை தீ வைத்து எரித்ததோடு மட்டுமல்லாமல் பள்ளிக்கும் இவர்கள் தீவைத்த காரணத்தினால் அங்கிருந்த புனித திருமறைகளும் (குர்ஆன்) மார்க்க விளக்க புத்தகங்களும் பெரும் எண்ணிக்கையில் எரிந்து சாம்பலாகி உள்ளன.

பள்ளிக்கு எதிரில் இருந்த மருந்தகம் (Pharmacy) ஒன்றும் கூட இவ்வன்முறையாளர்களால் கடுமையாக சேதப்படுத்தப்பட்டுள்ளது.

தர்ஹா டவுன் என்று அழைக்கப்படும் இங்கு, நேற்று புஹாரி கந்தூரி வைபவம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இவ்வன்முறையைத் தொடர்ந்து நாளை 26.07.2009 இப்பள்ளியில் நடைபெற இருந்த மார்க்க நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது.

நாளை நடைபெற இருந்த நிகழ்ச்சிகளில் மௌலவி முபாரக் மதனி, மௌலவி இஸ்மாயில் ஸலபி மற்றும் தமிழகத்தை சேர்ந்த சகோதரர் கோவை ஐயூப் ஆகியோர் உரையாற்ற இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


பேருவலையிலிருந்து இம்தியாஸ்
நன்றி : இஸ்லாமிய தஃவா டாட் காம்

காயல்பட்டணம் ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமியக் கல்லூரியில் இஸ்லாமியக் கல்வியுடன் பல்கலைக்கழகப் பட்டப்படிப்புகள்

காயல்பட்டணம் ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமியக் கல்லூரியில் இஸ்லாமியக் கல்வியுடன் பல்கலைக்கழகப் பட்டப்படிப்புகள்


நான்கு ஆண்டு கல்வித் திட்டம்


1. இக்கல்லூரியின் சித்தீக்கிய்யா B.I.S (Bachelor of Islamic studies)

2. மனோன்மணியம் சுந்தரனார் மற்றும் சென்னைப் பல்கலைக்கழகங்களில் அப்ஸலுல் உலமா B.Lit (Bachelor of Literature)

3. மனோன்மணியம் சுந்தரனார், மதுரை காமராஜர் மற்றும் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகங்களின் B.C.A. (Bachelor of Computer Application) அல்லது B.Com with computer Application


மாணவியருக்கான கல்வித்தகுதிகள்


1.திருக்குர்ஆனை சரளமாக ஓதத் தெரிந்திருப்பது, ஓதத் தெரியாதவர்கள் ஏப்ரல் முதல் மே மாதம் வரை (60 நாட்கள்) இக்கல்லூரியில் நடைபெறும் திருக்குர்ஆன் ஓதக் கற்றல் வகுப்பில் சேர்ந்து சரளமாக ஓதும் தகுதியைப் பெறுவது.

2.பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி அல்லது ஜூன் 30 ஆம் தேதி அன்று 18 வயது பூர்த்தியான, பிளஸ் டூ தேர்ச்சிக்கு இணையான திறமையினைப் பெற்றிருப்பது, இதற்கான தேர்வு நடத்தப்படும்.


மூன்று ஆண்டு கல்வித் திட்டம்

8 ஆம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரை படித்த திருக்குர் ஆனை சரளமாக ஓதத் தெரிந்த மாணவியருக்கு மூன்று ஆண்டு கல்வித் திட்டத்தில் நடைபெற்று வரும் சித்தீக்கிய்யா, அப்ஸலுல் உலமா ஆகிய வகுப்புகள் வழக்கம் போல் நடைபெற்று வருகின்றன.

லாப நோக்கின்றி உரிய கட்டணங்களை மட்டும் பெற்று சேவை மனப்பான்மையில் இயங்கும் இக்கல்லூரியின் நான்கு ஆண்டுகள் கல்வித் திட்டத்தில் மூன்று பட்டப்படிப்பு களையும், மூன்று ஆண்டு கல்வித் திட்டத்தில் சித்தீக்கிய்யா மற்றும் அப்ஸலுல் உலமா பட்டப்படிப்புகளையும் கற்றிட, மாணவியர் அஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு உரிய படிவங்களைப் பூர்த்தி செய்து ஜூன் 30 ஆம் தேதிக்குள் கிடைக்கச் செய்யுமாறு வேண்டுகிறோம்.


தொடர்புக்கு :

நிர்வாகி,
ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமியக் கல்லூரி,
அஞ்சல் பெட்டி எண் :8,
காயல்பட்டணம் – 628 204.
தொலைப்பேசி : +4639 283331, 281930, 283270

நன்றி : http://muduvaihidayath.blogspot.com/

சீனாவில் 10,000 இஸ்லாமியர்களை காணவில்லை ; உய்குர் தலைவர் குற்றச்சாற்று

சீனாவில் சுமார் 10,000 உய்குர் இன இஸ்லாமியர்களைக் காணவில்லை என்றும், அவர்களை சீன அரசு கொன்றிருக்கலாம் என்றும் உய்குர் இன தலைவர் ரெபியா கதீர் பரபரப்பான குற்றச்சாற்றைக் கூறியுள்ளார்.

சீனாவின் சிஞ்சியான் மாகாணத்தில் உய்குர் என்ற இஸ்லாமிய பிரிவினர் அதிக அளவில் வசித்து வருகின்றனர்.

இவர்களுக்கும், பெரும்பான்மை இன சீனர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்த நிலையில், இந்த மாதம் துவக்கத்தில் அங்கு வெடித்த கலவரத்தில் 150 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

இருப்பினும், அங்கு தற்போது இயல்பு நிலை திரும்பியுள்ள நிலையில், உய்குர் பிரிவினைவாத குழுக்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும் என்று சீன அரசு நேற்று எச்சரித்திருந்தது.

இந்நிலையில் சீனாவிலிருந்து வெளியேற்றப்பட்டு, அமெரிக்காவிலிருந்து செயல்படும் உலக உய்குர் சபையின் தலைவரான ரெபியா கதீர், ஐந்து நாள் பயணமாக ஜப்பான் வந்துள்ளார்.

அங்கு அவர் ஜப்பான் ஆளும் கட்சியின் முக்கிய தலைவர்களை சந்தித்து,உய்குர் இன இஸ்லாமியர்களுக்கு ஆதரவு திரட்ட உள்ளதாக செய்திகள் வெளியாயின.

இந்நிலையில் , இன்று டோக்கியோவில் பத்திரிகையாளர்களை சந்தித்த ரெபியா கதீர், இந்த மாதம் தொடக்கத்தில் சிஞ்சியான் மாகாணத்தில் கலவரம் நடந்தபோது, ஜூலை 5 ஆம் தேதியன்று ஒரே நாள் இரவில் சுமார் 10,000 க்கும் அதிமான உய்குர் இன இஸ்லாமியர்கள் காணாமல் போய்விட்டதாக கூறினார்.

அன்றைய தினம் இரவில் மின்தடையை ஏற்படுத்திய சீன அரசு, இருட்டில் உய்குர் இனத்தவர்களை சரமாரியாக சுட்டுக்கொன்றதாகவும், அடுத்த நாள் காலை மக்கள் விழித்து பார்த்தபோது ஏராளமான உய்குர் இன ஆண்கள் காணாமல் போய்விட்டதை அறிந்த்து கொண்டதாகவும் ரெபியா கதீர் தெரிவித்தார்.

உய்குர் இன மக்களை அழிக்க சீன அரசு முயற்சிப்பதாகவும், இதனை உலக நாடுகள் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதனிடையே ரேபியா கதீரை ஜப்பானுக்குள் அனுமதிக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தும், ஜப்பான் அரசு அதனை பொருட்படுத்தாமல் அவரது பயணத்திற்கு அனுமதி அளித்துள்ளது குறித்து சீனா அயலுறவுத் துறை அமைச்சகம கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளது.

ஆனால் ரெபியா கதீரை ஜப்பான் அரசு அழைக்கவில்லை என்றும், சில மக்கள் குழுக்கள்தான் அவரை அழைத்துள்ளதாகவும் ஜப்பான் அரசு பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இதன் காரணமாக ஜப்பான் - சீனா இடையேயான உறவில் பாதிப்பு எதுவும் ஏற்படாது என்றும் அவர் மேலும் கூறினார்.

ஸ்ரீவையில் விஜயகாந்த் தேர்தல் பிரசாரம்

இடைத்தேர்தல் நடைபெறும் 5 தொகுதிகளிலும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் 12 நாள்கள் பிரசாரம் செய்கிறார்

வரும் 7, 8 தேதிகளில் ஸ்ரீவைகுண்டத்தில் விஜயகாந்த் பிரசாரம் செய்ய இருப்பதாக தேமுதிக தலைமை அலுவலகம் அறிவித்துள்ளது.

ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங். வேட்பாளர் மனுத் தாக்கல்


ஸ்ரீவைகுண்டம் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் வேட்பாளர் எம்.பி. சுடலையாண்டி புதன்கிழமை வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

வேட்புமனுத் தாக்கல் முடிந்ததும் செய்தியாளர்களிடம் எம்.பி. சுடலையாண்டி பேசியதாவது:

இந்த தொகுதியின் வளர்ச்சிக்காக முழுமையாக பாடுபடுவேன். மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற முயற்சி எடுப்பேன்.

இந்த தொகுதியை தமிழகத்தின் முதல் தொகுதியாக்குவேன்.

தேர்தலில் மத்திய, மாநில அரசுகளின் சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்போம்.

25 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்றார் அவர்.

ஸ்ரீவைகுண்டம் இடைத்தேர்தல்: 22 பேர் வேட்புமனுத் தாக்கல்

ஸ்ரீவைகுண்டம் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட 22 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.

வேட்புமனுத் தாக்கல் கடந்த 22-ம் தேதி தொடங்கியது. 8 நாள்களாக நடைபெற்ற வேட்புமனுத் தாக்கல் புதன்கிழமை பிற்பகல் 3 மணியுடன் முடிவடைந்தது.

கடைசி நாளில் 12 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.

காங்கிரஸ் கட்சி சார்பில் எம்.பி. சுடலையாண்டி, மாற்று வேட்பாளராக அவரது மனைவி வேலம்மாள் என்ற வேணி, இந்திய கம்யூ. சார்பில் தனலட்சுமி, மாற்று வேட்பாளராக மாதர் சங்க மாநிலக் குழு உறுப்பினர் திலகவதி ஆகியோர் வேட்புனுத் தாக்கல் செய்தனர்.

சுயேச்சை வேட்பாளர்களாக தூத்துக்குடி மாவட்டம், மணக்கரை தெற்கூரைச் சேர்ந்த சுப்பிரமணியன் (35), உமரிக்காடு பி. தமிழ்ச்செல்வன் (53), செவத்தையாபுரம் அன்புசிங் (40), முடிவைத்தானேந்தல் புதூரைச் சேர்ந்த அருணாசலம் (63), ஸ்ரீவைகுண்டம் புதுக்குடியைச் சேர்ந்த எஸ். ராஜா (33), திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகேயுள்ள மூலச்சியைச் சேர்ந்த செ. கிருஷ்ணபாக்கியம் (30), மானூர் தெற்குபட்டி எஸ். முருகன் (33), சென்னை, சாலிகிராமத்தைச் சேர்ந்த எம். குமார் (50) ஆகியோர் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.

சமத்துவ மக்கள் கட்சி: இவர்களில், அன்புசிங் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் மாவட்ட விவசாய அணிச் செயலர்.

கட்சித் தலைவர் சரத்குமார் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ள நிலையில், இவர் சுயேச்சையாக வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.

கட்சித் தலைமையை மீறி போட்டியிடுகிறீர்களா என்று அவரிடம் கேட்டபோது, கட்சித் தலைமை முடிவை தொண்டர்கள் ஏற்கவில்லை.

தொண்டர்கள் ஆதரவுடன்தான் போட்டியிடுகிறேன்.

இது தொடர்பாக கட்சி என்ன நடவடிக்கை எடுத்தாலும் பரவாயில்லை என்றார் அவர்.

22 பேர் மனுத் தாக்கல்: இத் தொகுதிக்கு மொத்தம் 22 பேர் வேட்புனுத் தாக்கல் செய்துள்ளனர்.

இவர்களில், காங்கிரஸ் வேட்பாளர் எம்.பி. சுடலையாண்டி, இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஞா. தனலட்சுமி, பாஜக வேட்பாளர் அ. சந்தனக்குமார், தேமுதிக வேட்பாளர் மா. செüந்திரபாண்டியன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

காங்கிரஸ், தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒருவர் மாற்று வேட்பாளராக வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். 15 பேர் சுயேச்சை வேட்பாளர்கள்.

மனுக்கள் மீதான பரிசீலனை வியாழக்கிழமை முற்பகல் 11 முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறுகிறது.

வேட்புமனுவை விலக்கிக் கொள்ள ஆகஸ்ட் 1 கடைசி. அன்று மாலை வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். சுயேச்சைகளுக்கு சின்னங்களும் ஒதுக்கப்படும்.

காலம் கடந்து வந்த 2 பேர்

ஸ்ரீவைகுண்டம் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் புதன்கிழமை பிற்பகல் 3 மணியுடன் முடிவடைந்தது.

3 மணிக்கு மேல் வேட்புமனுத் தாக்கல் செய்ய வந்த 2 பேர் மனுத் தாக்கல் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

சாயர்புரம் செவத்தையாபுரத்தைச் சேர்ந்த பி. ராஜன் (43), தூத்துக்குடி வடக்கு ரத வீதியைச் சேர்ந்த டி. வீரபாகு (25) ஆகிய இருவரும் 3 மணிக்கு மேல் தேர்தல் நடத்தும் அலுவலர் அறைக்குள் வந்ததால், அவர்களது வேட்புமனுவை ஏற்க முடியாது என தேர்தல் அலுவலர் மறுத்துவிட்டார்.

இதனால், அவர்கள் மனுத்தாக்கல் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

ஜமாத் குழுவே உறுப்பினரைத் தேர்வு செய்ய உத்தரவு

ஜமாத் பொதுக்குழுவில் உறுப்பினராகத் தகுதியானவரை உள்ளூர் குழுவே இறுதி முடிவு செய்யவேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

இதுதொடர்பான வழக்கு விவரம்: காயல்பட்டினம் அல்ஜுமைவுல் ஜும்மா பள்ளிவாசல் கே.எஸ்.முகமது நாசர், பள்ளிவாசல் கண்காணிப்பாளர் மற்றும் தமிழ்நாடு வக்பு வாரியம் தாக்கல் செய்த மனு: இந்த பள்ளிவாசல் தேர்தல் தொடர்பாக சில வழக்குகள் தொடரப்பட்டன. அதில் தகுதி உள்ள எல்லோரையும் ஜமாத் பொதுக்குழு உறுப்பினராகச் சேர்க்கவும் அதற்கான விண்ணப்ப படிவங்களை வழங்கவும் உத்தரவிடப்பட்டது.

இதுவரை 2,430 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் தகுதியானவர்களைத் தேர்வு செய்ய 14 பேர் கொண்ட ஆய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உறுப்பினருக்கான தகுதி குறித்து நிர்ணயிக்குமாறு ஒரு ரிட் மனு தாக்கலானது.

அதில் வக்பு வாரியம் அதன் கண்காணிப்பாளரை உதவியாக்கொண்டு சரியான நபரைத் தெரிவு செய்யுமாறு தனி நீதிபதி உத்தரவிட்டார். இது சாத்தியமானதல்ல. எனவே, தேர்தல் சமயத்தில் போதிய போலீஸ் பாதுகாப்பு அளிக்கவும் உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், டி.ஹரிபரந்தாமன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் அளித்த உத்தரவு:

ஜாமாத்தின் பொதுக்குழு உறுப்பினராக ஒருவருக்கு 18 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். அதே ஊரில் குடியிருந்து ஜமாத்தைப் பின்பற்றுபவராகவும், தினசரி பள்ளிவாசலுக்கு வருகை தருபவராகவும் இருத்தல் வேண்டும்.

இத்தகையவரை உறுப்பினராகச் சேர்க்கும் விஷயத்தில் வக்பு வாரியம் அந்நபரை நிர்ணயிக்க முடியாது. உள்ளூரில் உள்ள தாற்காலிக குழுவே சரியான நபரை இறுதி முடிவு செய்ய வேண்டும். பள்ளிவாசலை நிர்வகிக்க ஒரு குழு உள்ளபோது உறுப்பினர்களை அக்குழுவே நிர்ணயிக்க வேண்டும்.

மேலும் தகுதியானனோர் பட்டியலைத் தயாரித்து வக்பு வாரியத்துக்கு 2 வாரகாலத்தில் அனுப்ப வேண்டும் எனக் கூறி, மனுக்களை பைசல் செய்து பெஞ்ச் உத்தரவிட்டது.

ஸ்ரீவைகுண்டத்தில் இரு கோயில்களில் பூட்டை உடைத்து திருட்டு

ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள 2 கோயில்களில் பூட்டை உடைத்து திருடியவர்களை போலீஸôர் தேடிவருகின்றனர்.

கீழபுதுக்குடியில் உள்ள பத்ரகாளியம்மன் கோயில், வீரபுத்திரசாமி உள்ளிட்ட 2 கோயில்களில் பூட்டை உடைத்து சுவாமி சிலைகளுக்கு அணிவிக்கப்படும் வெள்ளி நகைகள், 13 கிராம் தங்கத் தாலிகள் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் திருடியுள்ளனர். இவற்றின் மதிப்பு ரூ. 25 ஆயிரம்.

புகாரின் பேரில் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் நடராஜன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

நகைகளை திருடிய மர்ம நபர்களை போலீஸôர் தேடி வருகின்றனர்

புதன், 29 ஜூலை, 2009

நெல்லை மாநகராட்சியில் கவுன்சிலர்கள் மீது வடை வீசியதால் அடிதடிநெல்லை: நெல்லை மாநகராட்சிக் கூட்டத்தில் திமுகவினரைக் குறை கூறிப் பேசிய அதிமுக கவுன்சிலர் மீது திமுக கவுன்சிலர் வடை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டு பெரும் அமளி துமளியானது.

நெல்லை மாநகராட்சிக் கூட்டம் இன்று நடந்தது. அப்போது 17வது வார்டில், குடிநீர் இணைப்புகள் அனுமதி இல்லாமல் வழங்கப்பட்டிருப்பது குறித்து அந்த வார்டு அதிமுக கவுன்சிலர் சுதா பரமசிவம் கேள்வி எழுப்பினார்.

முறைகேடாக இந்த இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மேயர் ஏன் மெளனம் சாதிக்கிறார். இந்த விவகாரத்தில் திமுக கவுன்சிலர் ஒருவருக்கும் தொடர்பு உள்ளது என்று அவர் மேயர் சுப்ரமணியத்திடம் குற்றம் சாட்டினார்.

இதைக் கேட்டதும் திமுக கவுன்சிலர்கள் எழுந்து சத்தம் போட்டனர். அப்போது திமுக கவுன்சிலர் பிரான்சிஸ் என்பவர் சாப்பிடக் கொடுத்த வடையை எடுத்து சுதா பரமசிவம் மீது வீசினார். இதனால் அதிமுகவினர் கொந்தளித்தனர்.

இதைத் தொடர்ந்து இரு தரப்பு கவுன்சிலர்களும் கடும் வாய்ச் சண்டையில் இறங்கினர். பின்னர் கைகலப்பில் ஈடுபட்டனர்.

இதையடுத்து மேயர் சுப்ரமணியம், துணை மேயர் முத்துராமலிங்கம் உள்ளிட்டோர் குறுக்கிட்டு இரு தரப்பினரையும் அமைதிப்படுத்தினர். அதன் பின்னர் அமளி குறைந்து சகஜ நிலை திரும்பியது.

துபாயில் ச‌முதாய‌ங்க‌ளின் எழுச்சியும், வீழ்ச்சியும் சொற்பொழிவு

துபாயில் சுன்ன‌த் வ‌ல் ஜமாஅத் பேரவையின் சார்பில் இன்று (29ம் தேதி) மாலை அஸ்கான் டி பிளாக்கில் இஷா தொழுகைக்குப் பின் மார்க்க‌ சொற்பொழிவு நிக‌ழ்ச்சி ந‌டைபெறுகிற‌து.

நிக‌ழ்ச்சியில் திருக்குர்ஆன் விரிவுரையாள‌ர் காஞ்சி ம‌வ்ல‌வி அப்துல் ர‌வூஃப் 'ச‌முதாய‌ங்க‌ளின் எழுச்சியும் வீழ்ச்சியும்' எனும் த‌லைப்பில் சிற‌ப்புச் சொற்பொழிவு நிக‌ழ்த்துவார்.

பெண்க‌ளுக்கு த‌னியிட‌ வச‌தி செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து.

போலீஸ் காவலில் இருந்த கைதி மரணம்: பொதுமக்கள் முற்றுகை


தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஸ்ரீமூலக்கரை கிராமத்தைச் சேர்ந்தவன் ராமர் என்ற ராமச்சந்திரன் (வயது 32). இவன் பல்வேறு திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட கைதி ஆவான்.

திருச்செந்தூர் அருகே காயல்பட்டிணம் வ.உ. நகரை சேர்ந்த தொழிலதிபர் பாத்திமா பட்சானா(39) என்பவரின் வீட்டில் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 3ம் தேதி 380 சவரன் தங்கநகைகள், விலைமதிப்பு மிக்க ரூ. 2 லட்சம் மதிப்புள்ள நவரத்தின கற்கள், ரூ.33 ஆயிரத்து 500 ரொக்கப்பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது.

ராமர் என்ற ராமச்சந்திரனுக்கு 3 மனைவிகள். 8 வருடத்துக்கு முன்பு லட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்தான். பின்னர் அவளது தங்கை நேசம்மாள் என்பவரை 2-வதாக திருமணம் செய் தான். தற்போது கடந்த 5 மாதமாக தேமாஸ்குளத்தைச் சேர்ந்த ராஜலட்சுமி என்ற பெண்ணை 3-வதாக திருமணம் செய்து கொண்டு குடித்தனம் நடத்தி வந்தான்.

இதனால் ராமர் என்ற ராமச்சந்திரன் எங்கு தங்கி இருக்கிறார் என்று தெரியாமல் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் ஏரல் குற்றப்பிரிவு தனிப்படை போலீசில் கடந்த சில நாட் களுக்கு முன்பு ராமர் சிக்கினான். தூத்துக்குடி மாவட்டம் இல்லாமல் நெல்லை மாவட்டத்தில் நடந்த பல கொள்ளை சம்பவங்களிலும் ராமருக்கு தொடர்பு இருந்ததால் சிறப்பு தனிப்படை போலீசார் நிய மிக்கப்பட்டு ராமரிடம் துருவி துருவி விசாரணை நடந்தது.

மேலும் ராமரை ஆத்தூர், சாயர்புரம், நெல்லை உள்பட பல்வேறு இடங்களுக்கும் அழைத்துச் சென்றும் சிறப்பு தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.

நேற்று ஆத்தூர் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்திய போது ராமர் உடல்நிலை திடீர் கவலைக்கிடமானது. இதனால் போலீசார் அவனை ஒரு சைக்கிளில் தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி உள்ளனர். அங்கு அவனது உடல்நிலை மோச மானதால் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்துள்ளனர். அங்கு ராமர் என்ற ராமச்சந்திரன் பரிதாப மாக இறந்தான்.

இந்த சம்பவம் தூத்துக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராமரின் உறவினர்கள் ராமர் போலீ சாரால் அடித்து கொலை செய்யபட்டுள்ளார் என்று புகார் கூறி உள்ளனர்.

இதனால் ராமர் பிணம் வைக்கப்பட்டுள்ள தூத்துக்குடி அரசு ஆஸ் பத்திரியில் அவரது உடலை வாங்க மறுத்து ஏராளமான உறவினர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.

அங்கு அசம்பாவிதம் ஏற்படாதவாறு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய போலீசாரும் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி முன்பு குவிக்கப்பட்டுள்ளனர். இது போல ஆத்தூர் போலீஸ் நிலையத்திலும் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

பிரபல கொள்ளையன் ராமர் என்ற ராமச்சந்திரன் மர்மமான முறையில் இறந்தது குறித்து ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதில் கொள்ளையன் ராமர் என்ற ராமச்சந்திரனை போலீ சார் விசாரணைக்கு பின் வீட்டுக்கு சென்றுவிட்டு இன்று வருமாறு கூறியுள்ள தாகவும், ராமர் சைக்கிளில் சென்ற போது தவறி விழுந்து படுகாயம் அடைந்ததால் ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்டு இறந்ததாகவும் வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது.

இதுகுறித்து தூத்துக் குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், நெல்லை சரக டி.ஐ.ஜி. கண்ணப்பன் மற்றும் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஸ்ரீவைகுண்டத்தில் மத்திய அமை‌ச்ச‌ர்கள் & நடிக‌ர்கள் ஸ்ரீவையில் தொகு‌தில் ‌பிரசார‌ம்

கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவரு‌ம், மா‌நில‌ங்களவை உறு‌ப்‌பினருமான கனிமொழி 13ஆ‌ம் தே‌தி ஸ்ரீவைகுண்டம் தொகு‌தி‌யிலு‌ம்‌பிரசார‌ம் செ‌ய்‌கிறா‌ர்

மத்திய அமை‌ச்ச‌ர் நடிக‌ர் நெப்போலியன் ஆக‌ஸ்‌‌ட் 9ஆ‌ம் தே‌தி ஸ்ரீவைகுண்டம் தொகு‌தி‌யி‌ல் ‌பிரசார‌த்தை தொட‌ங்கு‌கிறா‌ர்.

நடிகர் வாகை சந்திரசேகர் 10, 11 ஆ‌கிய தே‌திக‌ளி‌ல் ஸ்ரீவைகுண்டம் தொகு‌தி‌யிலு‌ம் ‌பிரசார‌ம் செ‌ய்‌கிறா‌ர்.

நடிகர் குமரிமுத்து 15ஆ‌ம் தே‌தி ஸ்ரீவைகுண்டம் தொகு‌தி‌யிலு‌ம் ‌பிரசார‌ம் செ‌ய்‌கிறா‌ர்

ஏலத்திற்கு வரும் மகாத்மாவின் தென் ஆப்பிரிக்க வீடு


டர்பன்: ஜோஹன்னஸ்பர்க் நகரில் உள்ள மகாத்மா காந்தி வசித்த வீடு ஏலத்திற்கு வந்துள்ளது. வீட்டின் தற்போதைய உரிமையாளர் இந்த வீட்டை ஏலத்திற்கு விட்டுள்ளார்.

ஜோஹன்னஸ்பர்க் நகரின் வடக்கு மத்தியில் உள்ள ஆர்ச்சர்ட்ஸ் என்ற இடத்தில் உள்ள ஒரு குறுகிய தெருவில் இந்த வீடு உள்ளது. காந்தியின் நண்பரும், கட்டடக் கலை நிபுணருமான ஹெர்மன் கேலன்பேக் இந்த வீட்டை வடிவமைத்தார்.

ஓடுகளால் வேயப்பட்ட வீடாகும் இது. இந்த வீட்டுக்கு கிரால் (The Kraal) என்ற செல்லப் பெயரும் உண்டு. இந்த வீட்டில் கேலன்பேக்குடன் 1908ம் ஆண்டு முதல் 3 ஆண்டுகள் தங்கியிருந்தார் காந்தி.

இந்த வீடு தற்போது நான்சி பால் என்பவர் வசம் உள்ளது. இந்த வீட்டில் நான்சி பால், கடந்த 25 வருடங்களாக குடியிருந்து வருகிறார். இவர் தற்போது கேப்டவுன் நகருக்கு இடம் பெயர முடிவு செய்துள்ளார். இதையடுத்து இந்த வீட்டை ஏலத்திற்கு விட அவர் தீர்மானித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

ஆனால் இந்த வீட்டை வாங்க யாருமே ஆர்வம் காட்டவில்லையாம். இந்திய வம்சாவளியினர் கூட இந்த வீட்டை வாங்க ஆர்வம் காட்டாமல் உள்ளனராம்.

இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள நான்சி பால், இந்திய வம்சாவளியினர் யாராவது இதை வாங்க விரும்புகிறார்களா என்பதை அறிய ஆப்பிரிக்காவுக்கான இந்திய கல்வி மையத்தின் நிறுவன இயக்குநர் ஸ்டீபன் கெல்பின் உதவியை நாடியுள்ளார்.

அவரும், தென் ஆப்பிரிக்காவின் இந்திய வம்சாவளி பிரமுகர்களை அணுகிக் கேட்டுப் பார்த்தார். ஆனால் யாரும் வீட்டை வாங்க முன்வரவில்லையாம்.

இதுகுறித்து நான்சி கூறுகையில், மகாத்மா காந்தி வசித்த வீடு இது. இங்கு அவர் விட்டுச் சென்ற அமைதி நிறைய உள்ளது. இது மிகவும் விசேஷமான இடம் என்றார்.

இதே ஜோஹன்னஸ்பர்க் நகரில் காந்தி சம்பந்தப்பட்ட வேறு சில இடங்களும் உள்ளன. காந்தி பார்ம் என்ற இடம் இதே பகுதிக்கு அருகில் உள்ளது. இங்குதான் மகாத்மா காந்தி தங்கியிருந்து தனது ஆதரவாளர்களிடையே, சத்யாகிரகம் குறித்து போதித்தார்.

அதேபோல டர்பன் நகரில் பீனிக்ஸ் என்ற இடத்தில் மகாத்மா காந்தி குடியிருப்பு உள்ளது. இங்கும் காந்தி தங்கியிருந்து சத்யாகிரகத்தைப் போதித்துள்ளார்.

1800களின் இறுதியில் தொடங்கி 1900களின் தொடக்கம் வரை தென் ஆப்பிரிக்காவில் இனவெறி, நிற வெறிக்கு எதிரான போராட்டம் உலகப் புகழ் பெற்றவை என்பது நினைவிருக்கலாம்.

காந்தியடிகள் தங்களுக்காகப் போராடியதை நன்றியுடன் நினைவு கூறும் வகையில், தென் ஆப்பிரிக்காவில் பல தெருக்கள், மையங்களுக்கு காந்தியடிகளின் பெயர் சூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சீனாவில் இணையதளங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 34 கோடி

சீனாவில் இணையதளங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 33.8 கோடியாக அதிகரித்துள்ளது. இது அமெரிக்காவின் மொத்த ஜனத்தொகையைக் காட்டிலும் அதிகமாகும்.

சீனாவில் 2009-ம் ஆண்டில் முதல் ஆறு மாதங்களில் மட்டும் இணையதளங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 4 கோடி அதிகரித்துள்ளதாக சீன இணையதள நெட்வொர்க் தகவல் மையத்தின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

இணையதள இணைப்பு பெறப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த 6 மாதங்களில் மட்டும் 1 கோடியிலிருந்து 9.3 கோடியாக அதிகரித்துள்ளது.

சீனாவில் உள்ள 90 சதவீத கிராமங்களில் இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் 95 சதவீத நகரப் பகுதிகளில் அகண்ட அலைவரிசை இணை ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சீன தொலைத்தொடர்பு துறை நிறுவனங்கள் அதிக அளவில் முதலீடு செய்துவருகின்றன. இதனால் நாட்டில் 92.5 சதவீத கிராமங்களுக்கு தொலைபேசி வசதி கிடைத்துள்ளதாக அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீவைகுண்டம் காங். வேட்பாளர் தங்கபாலு ஆதரவாளர்

ஸ்ரீவைகுண்டம் சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வீ. தங்கபாலுவின் தீவிர ஆதரவாளரான எம்.பி. சுடலையாண்டி (42) போட்டியிடுகிறார்.

இடைத்தேர்தல் நடைபெறும் ஸ்ரீவைகுண்டம் தொகுதி, திமுக கூட்டணியில் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இத் தொகுதியில் ஜி.கே. வாசன் ஆதரவாளருக்கே சீட் கிடைக்கும் என்றும், மறைந்த எம்.எல்.ஏ. செல்வராஜின் மனைவி நளினி அல்லது தூத்துக்குடி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் எஸ்.டி.ஆர். விஜயசீலன் ஆகிய இருவரில் ஒருவருக்கு சீட் வழங்கப்படலாம் என்றும் பேசப்பட்டது.

இந்நிலையில், இத் தொகுதியில் கே.வீ. தங்கபாலுவின் தீவிர ஆதரவாளரான எம்.பி. சுடலையாண்டிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இவர் புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

அவரைப் பற்றிய விவரங்கள்:

சொந்த ஊர்: தூத்துக்குடி மட்டக்கடை.

பிறந்த தேதி: 13.8.1967.

மனைவி: வேணி.

மகள்கள்: கிருஷ்ணதேவி, ஆனந்ததேவி.

மகன்: பாலகிருஷ்ணன்.

கல்வித் தகுதி: எம்.ஏ. பி.எல்.,

தொழில்: வழக்கறிஞர்.

அரசியல் பின்னணி: 25 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் இருந்து வருகிறார்.

தற்போது தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினராக இருக்கிறார். இதற்கு முன்னர் மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் பதவி வகித்துள்ளார். 1996- 2001-ல் தூத்துக்குடி நகர்மன்ற உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார்.

தமுமுக ஆர்ப்பாட்டம்

கடந்த 3 ஆண்டுகளாக புதுவையில் வக்ஃபு வாரியத் தலைவர் நியமிக்கப்படாததை கண்டித்து தமுமுகவினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இஸ்லாமியர்களுக்கு தனி இடஒதுக்கீடு ஆணையம் அமைக்க வேண்டும்; லிபரான் கமிஷன் அறிக்கையை நாடாளுமன்ற நடப்புக் கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்ய வேண்டும்; ஓரினச் சேர்க்கையை தடை செய்ய வேண்டும்.

புதுவை வக்ஃபு வாரியத்குக்கு உடனடியாக தலைவரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரை தமுமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் அப்துல்ரஹீம் தலைமை வகித்தார். மாநில உலமா அணி செயலாளர் முகம்மது யூசுப் பைஜி கண்டன உரையாற்றினார்.

மாவட்ட நிர்வாகிகள், மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

கழுத்தை நெரிக்கும் வங்கிக் கடன் அட்டைகள்


எல்லா இடத்துக்கும் பணத்தை எடுத்துக் கொண்டு அலைய முடியாது. ஓர் அட்டையை கொண்டு சென்றால் நமக்குத் தேவையான பொருள்களை வீட்டுக்குக் கொண்டு வரலாம். இப்படி ஒரு சுலபமான வசதியை வங்கிகள் உருவாக்கிக் கொடுத்துள்ளன.

வாடிக்கையாளர்களுக்கு டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு என்று வங்கிகள் பல்வேறு அட்டைகளை கொடுத்துள்ளன. இந்த அட்டைகள் ஒரு வகையில் வசதியாக இருந்தாலும் மற்றொரு வகையில் வாடிக்கையாளர்களுக்குத் தொந்தரவாக மாறி வருகின்றன.

இதுவரை போலீஸ் நிலையம், நீதிமன்றத்தை எட்டிக்கூட பார்க்காத நடுத்தர குடும்பத்தினர் பலர், வங்கிகள் விரிக்கும் "கடன் அட்டை' வலையில் சிக்கி நீதிமன்றம் வரை செல்ல வேண்டிய நிலைக்கு வந்துள்ளனர். உண்மையில் கடன் வாங்கும் எண்ணமே இல்லாதவர்களையும் கடன் அட்டை வாங்கலாமே என்ற எண்ணத்தை உருவாக்கி அவர்களுக்கு நிர்பந்தம் செய்து கொடுத்து விடுகின்றனர். அந்த அட்டையை வாங்கியவர்களும் இதனால் ஏற்படும் பின் விளைவுகளைப் பற்றி தெரியாமல் மாட்டிக் கொள்கின்றனர்.

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் தனியார் நிறுவனத்தின் மூலம் கிரெடிட் கார்டு வசதி கொடுத்து வருகிறது. இந்த கார்டு வாங்கிய நடுத்தர வகுப்பினர் பலர் கடன் தொகை அதிகமாகி திருப்பிக் கொடுக்க முடியாத நிலையில் உள்ளனர்.

தேசியமயமாக்கப்பட்ட வங்கி என்பதால் இது போன்ற நபர்களிடம் சமாதான முறையில் அவர்களிடமிருந்து எவ்வளவு குறைவாக வாங்க முடியுமோ அந்த அளவுக்குப் பேசி தீர்க்கின்றன. அதற்காக அந்த வங்கி இலவச சட்ட உதவி மன்றத்தை அணுகியுள்ளது. புதுவையில் நீதிமன்றம் 150 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதில் 13 வழக்குகள் செவ்வாய்க்கிழமை தீர்வு காணப்பட்டன.

பாதிக்கப்பட்ட உஷாராணி என்பவர் கூறுகையில், ""கிரெடிட் கார்டு மூலம் ரூ.15 ஆயிரம் கடன் பெற்றேன். 2 ஆண்டுகளாக வட்டி உள்ளிட்டவைக்கு ரூ.30 ஆயிரம் கட்டிவிட்டேன். இப்போது ரூ.53 ஆயிரம் கட்ட வேண்டும் என்று கூறுகின்றனர். என்னுடைய கணவர் இறந்து விட்டார். என்னுடைய குடும்பத்தை நடத்த முடியாமல் கஷ்டப்படுகிறேன். இவ்வளவு பெரிய தொகையை கட்ட முடியாது என்று நீதிபதி டி.ஆர். வேணுகோபால் முன்பு கூறினார். வங்கி அதிகாரிகள் முன்னிலையில் சமரசம் நடந்தது. மாதம் ரூ.1500 வீதம் 6 மாதம் கட்டினால் போதும் என்று ஒப்புக் கொண்டனர். அதனால் இந்த வழக்கில் தீர்வு காணப்பட்டது'' என்றார்.

"ஆட் ஆன் அட்டை' (Add On Card) மூலம் ஒரே வங்கி கணக்கில் 2 பேர் பணம் போடலாம், எடுக்கலாம். அது போன்ற அட்டையை பசுபதி பயன்படுத்தி வந்தார். இந்த அட்டையில் இருந்து 4 ஆயிரம் கடன் பெற்றிருந்தார். இவருடன் இணைந்து அட்டை வைத்திருந்த இவரது நண்பர் இவருக்குத் தெரியாமல் பணம் எடுத்துள்ளார். இதனால் இப்போது ரூ.40 ஆயிரம் வங்கிக்குச் செலுத்த வேண்டியுள்ளது. அந்த அளவுக்குச் செலுத்த தன்னால் இயலாது. மணிலா கொள்முதல் செய்துவந்த தனக்கு இப்போது வேலையில்லை என்று கூறினார். இதையடுத்து அவர் ரூ.10 ஆயிரம் கட்டினால் போதும் என்று கூறி இந்த வழக்கில் தீர்வு காணப்பட்டது.

ஸ்ரீவை வேட்பாளரை மாற்றக் கோரி ஸ்ரீவைகுண்டத்தில் நேற்று காங்கிரஸôர் ஆர்ப்பாட்டம்

ஸ்ரீவைகுண்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர் வழக்கறிஞர் சுடலையாண்டியை மாற்றக் கோரி செவ்வாய்க்கிழமை காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஸ்ரீவைகுண்டம் காங்கிரஸ் வேட்பாளர் சுடலையாண்டி கட்சிக்கும், காங்கிரஸ் தொண்டர்களுக்கும் அறிமுகம் இல்லாதவர் என்றும், இவரை வேட்பாளராக கட்சி மேலிடம் அறிவித்திருப்பது தொண்டர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. எனவே, வேட்பாளரை உடனடியாக மாற்ற வேண்டும் என்று, ஸ்ரீவைகுண்டத்தில் நேற்று இரவு காங்கிரஸôர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் நல்லகண்ணு, நகரப் பொருளாளர் சந்திரன், நகர முன்னாள் தலைவர் புஹாரி, நகரத் தலைவர் சேதுபாண்டி, இளைஞர் காங்கிரஸ் நகரத் தலைவர் வெங்கடேஷ், வட்டார துணைத் தலைவர் மகராஜன், மாவட்டச் செயலர் ஆறுமுகம், காசி, வட்டாரத் தலைவர்கள் ஜெயராஜ், ஆறுமுகம், வட்டாரச் செயலர்கள் சீனிராஜேந்திரன், ராமச்சந்திரன், பேச்சி, பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஸ்ரீவைகுண்டம் தொகுதி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்

ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட தேமுதிக வேட்பாளர் சவுந்திர பாண்டியன் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வழக்கறிஞர் சந்தாணக்குமார் நேற்று தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

ஸ்ரீவை எஸ்.பி.சண்முகநாதன் தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளராக ஜெயலலிதா அறிவிப்பு


தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளராக இருந்த மாஜி மந்திரி அனிதா ராதாகிருஷ்ணன் நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதில் எஸ்.பி.சண்முகநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் ஆகஸ்ட் 4ம் தேதி மு.க.ஸ்டாலின் பிரசாரம்

துணை முதல்வர் மு.‌க‌.‌ஸ்டா‌லி‌ன், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதியி‌ல் ஆகஸ்‌ட் 4, 5 ஆகிய தேதிகளில் ‌பிரசார‌ம் செ‌ய்கிறார்.

த‌மிழக‌த்த‌ி‌ல் ஆக‌ஸ்‌ட் 18‌ஆ‌ம் தே‌தி இடை‌த்தே‌ர்த‌ல் நட‌க்கு‌ம் ஸ்ரீவைகுண்டம், க‌ம்ப‌ம், இளையா‌ன்குடி, தொ‌ண்டாமு‌த்தூ‌ர், ப‌ர்கூ‌ர் ஆ‌கிய 5 தொகு‌தி‌க‌ளி‌ல் ‌தி.மு.க. பொருளாளரு‌ம், துணை முதல்வருமான மு.க.‌ஸ்டா‌லி‌ன் 10 நா‌ள் ‌பிரசார‌ம் மேற்கொள்கிறா‌ர்.

மு.‌க‌.‌ஸ்டா‌லி‌ன், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதியி‌ல் ஆகஸ்‌ட் 4, 5 ஆகிய தேதிகளில் ‌பிரசார‌ம் செ‌ய்கிறார். பின்னர் ஆகஸ்ட் 6, 7 ஆ‌கிய தேதிகளில் கம்பம் தொகுதியி‌ல் ‌பிரசார‌‌ம் செ‌ய்‌கிறா‌ர். 8, 9 ‌ஆ‌கிய தேதிகளில் இளையான்குடி தொகு‌தி‌யிலு‌ம், 12, 13 ஆ‌கிய தே‌திக‌ளி‌ல் தொண்டாமுத்தூரிலு‌ம், 14, 15 தேதிகளி‌ல் ப‌ர்கூ‌ரிலு‌ம் துணை முதலமை‌ச்ச‌ர் மு.க.‌ஸ்ட‌ா‌லி‌ன் ‌பிரசார‌ம் செய்கிறார்

ஸ்ரீவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக சுடைலயாண்டி அறிவிப்பு


ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக தூத்துக்குடியைச் சேர்ந்த எம்.பி.சுடலையாண்டியை மாநில காங்கிரஸ் கட்சி இன்று அறிவித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில், தூத்துக்குடி மட்டக்கடை பகுதியைச் சேர்ந்த எம்.பி.சுடலையாண்டி என்பரை அக்கட்சியின் மாநிலத் தலைவர் தங்கபாலு அறிவித்துள்ளார்.

சுடலையாண்டி காங்கிரஸ் கட்சியின் மாவட்ட விவசாய சங்கத் தலைவராகவும், மாவட்ட காங்கிரஸ் துணை தலைவராகவும் பதவி வகித்துள்ளார். இவர் தற்போது காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினராக உள்ளார். 42 வயதாகும் சுடலையாண்டிக்கு வேலம்மாள் என்ற மனைவியும், கிருஷ்ண தேவி, ஆனந்த தேவி என இரண்டு மகள்களும், பாலகிருஷ்ணன் என்ற மகனும் உள்ளனர்.

செவ்வாய், 28 ஜூலை, 2009

இடைத்தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடாது என்று அக்கட்சியின் தலைவர் அறிவிப்பு

இடைத்தேர்தலில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடாது என்று அக்கட்சியின் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார்.

இது குறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

ஸ்ரீவைகுண்டம், இளையான்குடி, கம்பம், தொண்டாமுத்தூர், பர்கூர் ஆகிய 5 சட்டப் பேரவை தொகுதிகளில் ஆகஸ்டு 18-ம் தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி முடிவெடுத்துள்ளது.

வரும் 2011-ல் நடைபெறும் சட்டப் பேரவைத் தேர்தலின்போது இந்த 5 தொகுதிகளின் எல்லைகளும் மாறிவிடும். அடுத்த பொதுத்தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகளே உள்ளதால் தற்போது தேர்ந்தெடுக்கப்படும் எம்.எல்.ஏ.க்கள் மக்கள் நலத்திட்டங்களை முழுமையாக செயல்படுத்த முடியாது.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து நாடு முழுவதும் விவாதிக்கப்பட்டு வருகிறது.

வெற்றி தோல்விகளை பொருட்படுத்தாமல் போட்டியிடுவதுதான் ஜனநாயகக் கடமை. ஆனால் இடைத்தேர்தல் மட்டுமே ஒரு கட்சியின் பலத்தை நிரூபிக்கும் வாய்ப்பாக கருதிவிட முடியாது. எனவே இடைத்தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று முடிவு செய்துள்ளோம்.

2011 சட்டப் பேரவைத் தேர்தலை இலக்காகக் கொண்டு கட்சி வளர்ச்சிப் பணியில் ஈடுபட வேண்டும் என்று தொண்டர்களைக் கேட்டுக் கொள்கிறேன் என்று சரத்குமார் குறிப்பிட்டுள்ளார்.

"மனிதநேய மக்கள் கட்சி இடைத்தேர்தலில் போட்டியிடாது'

இடைத்தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று மனிதநேய மக்கள் கட்சி முடிவு செய்துள்ளது.

இளையான்குடி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுமாறு இடதுசாரி கட்சிகள் அழைப்பு விடுத்திருந்த நிலையில், அதுபற்றி திங்கள்கிழமை, உயர்நிலைக் குழு கூட்டத்தில் விவாதித்து முடிவு எடுக்கப்படும் என இக் கட்சி அறிவித்திருந்தது.

திங்கள்கிழமை கூட்டத்தில் இதுபற்றி விவாதிக்கப்பட்டது. 2011 தேர்தலை கருத்தில் கொண்டு கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், இந்தத் தேர்தலில் போட்டியிடுவது இல்லை என முடிவு செய்யப்பட்டதாக அதன் பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது தெரிவித்துள்ளார்.

இடதுசாரிகள் நிலை: இதையடுத்து இளையான்குடியில் தாங்கள் போட்டியிடுவதா அல்லது யாரும் போட்டியிடாமல் விட்டுவிடுவதா என்பது பற்றி மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் மூத்த தலைவர்கள் சென்னையில் செவ்வாய்க்கிழமை கலந்து பேசி முடிவு எடுக்க உள்ளனர்.

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் ஒரே நாளில் 4 சுயேச்சைகள் வேட்புமனு

ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட திங்கள்கிழமை 4 சுயேச்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், தெய்வசெயல்புரம் அருகேயுள்ள எல்லைநாயக்கன்பட்டியை சேர்ந்த முருகன் மகன் ராமசுப்பிரமணியன் (29) காலையில் முதல் நபராக வேட்புமனு தாக்கல் செய்தார். எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்துள்ள இவர், விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

தூத்துக்குடி மாவட்டம், அகரத்தை சேர்ந்த சிதம்பரம் மகன் மருதநாயகம் (47) வேட்புமனு தாக்கல் செய்தார். எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்துள்ள இவரும், விவசாயம் செய்து வருகிறார். இவர் மனைவி ஜெயா பொன்னம்மாள். இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

தேர்தலில் 41-வது முறையாக போட்டியிடும் நாகர்கோவிலை சேர்ந்த உ. நாகூர் மீரான் பீர்முகமது (48) வேட்புமனு தாக்கல் செய்தார்.

4-வது நபராக அகில இந்திய கைவினைஞர் முன்னேற்றக் கழகத்தின் திருநெல்வேலி மாவட்டச் செயலர் ஆறுமுகராஜ் (31) வேட்புமனு தாக்கல் செய்தார்.

திருநெல்வேலி நகரம் புகழேந்தி தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகனான ஆறுமுகராஜ், வழக்கறிஞராக உள்ளார்.

இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் இதுவரை 5 சுயேச்சைகள் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனு தாக்கல் புதன்கிழமையுடன் முடிவடைகிறது. அடுத்த இரு நாள்களில் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திங்கள், 27 ஜூலை, 2009

ஸ்ரீவைகுண்டம் இடைத்தேர்தல்: சுயேச்சை வேட்புமனு

ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கு முதலாவதாக சுயேச்சை வேட்பாளர் க.முருகன் (59) சனிக்கிழமை வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள பெருங்குளம் முத்தாரம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் இவர்.

விவசாயியான இவர், பெருங்குளத்தில் கேபிள் டி.வி. ஆபரேட்டராக உள்ளார். இவருக்கு லட்சுமி, ரசூல் பீவி என்ற இரு மனைவிகள், இரு மகன்கள், இரு மகள்கள் உள்ளனர்.

எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்துள்ள இவர், பெருங்குளம் பேரூராட்சி 4-வது வார்டின் முன்னாள் உறுப்பினராவார். எம்.ஜி.ஆர். மன்றத்தின் ஸ்ரீவைகுண்டம் ஒன்றியச் செயலராக பணியாற்றியுள்ளார்.
இவரது தந்தை கணபதி கடந்த 1962-ல் ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவை தொகுதியில் சுதந்திரா கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

சீனாவில் அரபு மொழியில் டி.வி. சேனல் தொடக்கம்

சீனாவின் அரசு தொலைக்காட்சி, அரபு மொழியிலும் ஒரு புதிய சேனல் ஒன்றை தொடங்கியுள்ளது.

சீனாவின் அரசு தொலைக்காட்சியின் பார்வையாளர்களை விரிவுபடுத்தும் நோக்கில் தொடங்கபட்டுள்ள இந்த சேனல், மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்காவின் 22 அரபு பேசும் நாடுகளில் தெரியும் வகையில் விரிவாக ஒளிபரப்பாகும் என்று சீன தொலைக்காட்சி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய சேனல் ஒளிபரப்பை ஏறக்குறைய 300 மில்லியன் மக்கள் கண்டுகளிப்பார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அதில் மேலும் கூறப்பட்டுள்ளது.

இணையதள பயன்பாடு: 2013இல் இந்தியாவுக்கு 3வது இடம்

வரும் 2013ஆம் ஆண்டில் அதிகளவில் இணையதளம் பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 3வது இடம் கிடைக்கும் என சமீபத்திய அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

‘ஃபாரஸ்டெர் ரிசர்ச்’ (Forrester Research) என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 2013ஆம் ஆண்டுக்குள் உலகளவில் இணையதளம் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை 45% அதிகரித்து 2.2 பில்லியனாக உயர்ந்து விடும். இதில் பிற கண்டங்களை விட ஆசியாவில் அதிகளவு வளர்ச்சி இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, வரும் 2013இல் இணையதளம் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் இந்தியா 3வது இடத்தில் இருக்கும் என்றும், சீனாவும், அமெரிக்காவும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2008 நிலவரப்படி, உலகம் முழுவதும் 1.5 பில்லியன் இணையதளப் பயனாளர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குளோபல் ஆன்லைன் பாப்புலேஷன் ஃபோர்காஸ்ட்- 2008 முதல் 2013 வரை என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில், ‘இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இணையதளம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை (2013க்குள்) 10 முதல் 20% வரை வளர்ச்சி பெறும்’ எனக் கூறப்பட்டுள்ளது.

யுஏஇ: வ‌ன‌வில‌ங்கு புகைப்ப‌ட‌ப் போட்டி

துபாய்: அமீர‌க‌ வ‌ன‌வில‌ங்கு குறித்த‌ புகைப்ப‌ட‌ப் போட்டி அறிவிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. இத‌னை அமீர‌க‌ சுற்றுச்சூழ‌ல் ஏஜென்ஸி ம‌ற்றும் ஆர்கிவ் ஆகிய‌வை அறிவித்துள்ள‌ன‌.

சிற‌ந்த‌ புகைப்ப‌ட‌ங்க‌ள் www.arkive.org என்ற‌ இணைய‌த்த‌ள‌த்தில் பிர‌சுரிக்க‌ப்ப‌டும். இதுவ‌ரை 36,000 புகைப்ப‌ட‌ங்க‌ள் ம‌ற்றும் வீடியோ ஆகிய‌வை இதில் பிர‌சுரிக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌.

புகைப்ப‌ட‌ங்க‌ளை ஆக‌ஸ்ட் 28 ஆம் தேதிக்குள் arkive@wildscreen.org.uk என்ற‌ மின்ன‌ஞ்ச‌ல் முக‌வ‌ரிக்கு அனுப்ப‌ வேண்டும். வெற்றி பெற்ற‌வ‌ர்க‌ள் செப்ட‌ம்ப‌ர் 11ம் தேதி அறிவிக்க‌ப்ப‌டுவ‌ர்.

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் போட்டியிடும் சென்னை தொழிலதிபர்


தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் இடைத் தேர்தலில் தேமுதிக வேட்பாளராக சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் செளந்திரபாண்டியனை அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் நிறுத்தியுள்ளார்.

ஸ்ரீவைகுண்டம் தொகுதி இடைத் தேர்தல் வருகிற 18ம் நடைபெறுகிறது. இந்த தேர்தலை அதிமுக கூட்டணி கட்சிகள் புறக்கணித்துள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. தற்போது தேமுதிக சார்பில் போட்டியிட அக்கட்சியின் மாநில வர்த்தக அணி துணைச் செயலாளராக பொறுப்பு வகித்துவரும், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த, சென்னையில் வசித்து வரும் மா.செளந்திர பாண்டியன் என்பவரை வேட்பாளராக விஜயகாந்த் நியமித்துள்ளார்.

இவர் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர். தற்போது சென்னையில் ரியல் எஸ்டேட் மற்றும் காமராஜர் பெயரில் கிங்மேக்கர் வித்யாலயா பள்ளிகயை நடத்தி வருகிறார். இவருக்கு அமுதா என்ற மனைவியும், ராகுல் என்ற மகனும், ரித்திகா என்ற மகளும் உள்ளனர். தேமுதிகவில் தீவிர உறுப்பினராக இருந்து செயல்பட்டு வருகிறார். அன்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், மேலிட பொறுப்பாளராக தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றியுள்ளார். இவர் சென்னை வில்லிவாக்கத்தில் குடியிருந்து வருகிறார்.

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ள செளந்திர பாண்டியன் நமது செய்தியாளரிடம் தொலைபேசியில் பேசுகையில், தமிழ் நாட்டில் ஏற்பாட்டுள்ள கடுமையான விலைவாசி உயர்வு, மின்வெட்டு பிரச்சனை, அடிப்படை வசதி உள்ளிட்ட பிரச்சனைகளை முன்வைத்து கேப்டன் விஜயகாந்தின் தலைமையில் சட்டமன்றத்தில் குரல் கொடுப்பேன் என்றார்

ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டவர் ஸ்ரீவையில் போட்டியிட வேட்புமனு தாக்கல்


ஜெயலலிதா, நரசிம்மராவ் உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரமுகர்களை எதிர்த்து போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் நாகூர் மீரான் பீர் முகம்மது இன்று ஸ்ரீவைகுண்டம் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட, வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

தமிழகம், ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களில் மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ள நாகூர் மீரான், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, முன்னாள் பிரதமர் நரசிம்மராவ், முன்னாள் கேரள முதல்வர் கருனாகரன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை எதிர்த்து போட்டியி்ட்டுள்ளார். இதுவரை 40 முறை சுயேட்சையாக வேட்மனு தாக்கல் செய்து நாகூர்மீரான் போட்டியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கிருஷ்ணன் கோவில் தெருவைச் சேர்ந்தவர். சொந்தமாக ரியல் எஸ்டேட் மற்றும் புகைப்பட தொழில் செய்து வருகிறார்.

தற்போது 41வது முறையாக போட்டியிட ஸ்ரீவைகுண்டம் தொகுதி தேர்தல் அதிகாரியான துரை ரவிச்சந்திரனிடம் இன்று காலை நாகூர் மீரான் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஒருமுறையாவது தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் மளம் தளராமல் போட்டியிடுவதாக தெரிவித்தார்.

பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

இடைத்தேர்தலுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் சென்னையில் இன்று வெளியிடப்பட்டது.


வேட்பாளர்கள் விவரம்:

1. ஸ்ரீவைகுண்டம் - எ.சந்தானம்


2. இளையான்குடி - பி.எம். ராஜேந்திரன்


3. கம்பம் - எம்.சசிகுமார்


4. பர்கூர் - கே. அசோகன்


5. தொண்டாமுத்தூர் - எம். சின்ராஜ்.


ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் பாரதீய ஜனதா கட்சியின் வேட்பாளராக தூத்துக்குடி மாவட்ட பொது செயலாளர் வழக்கறிஞர் சந்தாணக்குமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் போட்டியிட பா.ஜனதா கட்சி வேட்பாளரை அறிவித்துள்ளது. தூத்துக்குடி மாவட்ட பா.ஜனதா கட்சியின் பொது செயலாளர், வழக்கறிஞர் சந்தானக்குமார் (வயது 41) அறிவிக்கப்பட்டுள்ளார்.

சந்தாணக்குமாரின் மனைவி சொர்ணசுப்பு டாக்டராக பணிபுரிந்து வருகிறார். அவருக்கு கார்த்திக் அஸ்வின்(11) என்ற மகன் உள்ளார். எம்.காம்., மற்றும் பி.எல் படித்து தற்போது வழக்கறிஞராக தூத்துக்குடியில் பணியாற்றி வருகிறார்.

இவர், நாளை (28ம் தேதி) மாநில துணைத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்ராதாகிருஷ்ணன் முன்னிலையில் வேட்புமனுத்தாக்கல் செய்கிறார்.

பாளை. பேராசிரியர் அமெரிக்க விருதுக்கு தேர்வு

பாளையங்கோட்டையைச் சேர்ந்த முனைவர் பா. வளன் அரசுக்கு (படம்) அமெரிக்க வாழ்வியல் நிறுவனம் "பன்னாட்டுத் தூதர்' விருது வழங்க தேர்வு செய்துள்ளது.

கல்வி, இலக்கியம், சமூகம் ஆகியவற்றில் சிறப்பாக தொண்டாற்றியவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு அமெரிக்க வாழ்வியல் நிறுவனம் பன்னாட்டுத் தூதர் விருதை வழங்கி சிறப்பித்து வருகிறது.

இந்த ஆண்டு பாளையங்கோட்டையைச் சேர்ந்த முனைவர் பா. வளன் அரசு இத்தகைய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இவர் உலகத் திருக்குறள் தகவல் மையத் தலைவராக உள்ளார்.

இவர் கடந்த 1998-ல் உலக மாமனிதர் விருதை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நெல்லையில் ஜூலை 29- ல் தவ்ஹீத் ஜமாஅத் முற்றுகை

திருநெல்வேலியில் இம் மாதம் 29- ம் தேதி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் முற்றுகை போராட்டம் நடத்த உள்ளதாக அந்த அமைப்பின் மாவட்டச் செயலர் கே.ஏ.ஓ. சாதிக் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

உத்தரபிரதேசம் மாநிலத்தில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட

வழக்கில், 23 கோப்புகள் காணாமல் போய்விட்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக உத்தரபிரதேசம் உயர்நீதிமன்றம், சி.பி.ஐ.

விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ள நபர்களை கண்டுபிடித்து கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும்.

இதேபோல, இச் சம்பத்துக்கு துணைபோன அரசு அதிகாரிகளும் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இக் கோரிக்கைகளை வலியுறுத்தி இம் மாதம் 29-ம் தேதி திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன் முற்றுகை போராட்டம் நடத்த உள்ளோம்.

இப் போராட்டத்துக்கு அமைப்பின் மாநில மேலாண்மைக் குழுத் தலைவர் எம். ஷம்சுல்லுஹா ரஹ்மானி தலைமை வகிப்பார்.

மேலும், அமைப்பின் பல முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள் என்றார் சாதிக்.

ஸ்ரீவைகுண்டம் புனித சந்தியாகப்பர் ஆலயத் திருவிழா

ஸ்ரீவைகுண்டம் புனித சந்தியாகப்பர் ஆலயத் திருவிழா 10 நாள்கள் நடைபெற்றது.

இத் திருவிழா கடந்த 16-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாக் காலங்களில் தினமும் காலையும், மாலையும் திருயாத்திரை, திருப்பலி, நற்கருணை ஆசீர் நடைபெற்றது. 10-ம் திருவிழாவான சனிக்கிழமை திருப்பலி தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மைக் குரு ஆஸ்வால்ட் தலைமையில் நடைபெற்றது.

பின்னர் மாதா தேர்ப் பவனியும், புனித சந்தியாகப்பர் சப்பரப் பவனியும் நடைபெற்றன.

திருவிழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஜெயகர் தலைமையில் திருவிழா கமிட்டி நிர்வாகிகள் செய்தனர். திருவிழா நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை காலை திருப்பலி, கொடியிறக்கம் ஆகியன நடைபெற்றன.

சனி, 25 ஜூலை, 2009

ஸ்ரீவைகுண்டம் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் அறிவிப்பு


ஸ்ரீவைகுண்டம் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக தூத்துக்குடியைச் சேர்ந்த தனலட்சுமியை அக்கட்சியின் தேசிய கட்டுப்பாட்டுக் குழு தலைவர் நல்லகன்னு நியமித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் வருகிற 18ம் தேதி இடை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக, மதிமுக, பாமக உள்ளிட்ட கூட்டனிக் கட்சிகள் புறக்கனித்துள்ளது. அதிமுக கூட்டனியில் இருந்துவந்த கம்யூனிஸ்ட் கட்சியினர் இடைத் தேர்தலில் அதிமுகவின் தேர்தல் புறக்கனிப்பை ஏற்க மறுத்து தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம், பர்கூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுவது என முடிவெடுத்து, இன்று கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் தா.பாண்டியன், தேசிய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் நல்லகன்னு ஆகியோர் ஸ்ரீவைகுண்டம் தொகுதி வேட்பாளராக இந்திய தேசிய மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளரான தனலட்சுமி என்பவரை நிறுத்தியுள்ளனர்

இந்தியாவி்ல் மோட்டார் சைக்கிள் தயாரிப்பில் இறங்கும் பிஎம்டயிள்யூ!


ஜெர்மனியைச் சேர்ந்த புகழ்பெற்ற கார் உற்பத்தியாளர்களான பிஎம்டபிள்யூ, அடுத்து இந்தியாவில் மோட்டார் சைக்கிள்கள் தயாரிப்பதில் இறங்க திட்டமிட்டு வருகிறது.

இந்தியாவில் கார்களை விட மோட்டார் சைக்கிள்களுக்கு மக்களிடம் அதிகத் தேவை இருப்பதாலேயே இந்த முடிவை எடுத்துள்ளதாம் பிஎம்டபிள்யூ.

ஏற்கெனவே 90களில் மோட்டார் சைக்கிள் தயாரிப்பு முயற்சியில் இறங்கியது இந்நிறுவனம். ஆனால் அப்போது அந்த முயற்சியைத் தொடரவில்லை.

நீண்ட கால திட்டமிடலுக்குப் பிறகு மீண்டும் இப்போது முழு வீச்சில் களத்தில் குதிக்கிறது.

ஏற்கெனவே பிரபல கார் தயாரிப்பாளர்களான சுசுகி, ஹோண்டா மற்றும் யமஹா நிறுவனங்களும் மோட்டார் சைக்கிள்களைத் தயாரித்து வருகின்றன.

ஈரான் விமான விபத்தில் 16 பேர் பலி


தெஹ்ரான்: ஈரானில் அவசரமாகத் தரையிறங்கிய விமானம் ரன் வேயிலிருந்து விலகி ஓடி சுவற்றில் மோதி உடைந்தது. இதில் விமானிகள் உள்பட 16 பேர் பலியாயினர்.

ஈரானில் 10 நாட்களுக்குள் நடந்த இரண்டாவது விமான விபத்து இதுவாகும். கடந்த 15ம் தேதி நடந்த விபத்தில் 168 பேர் பலியான நிலையில் நேற்று இநத விபத்து நடந்துள்ளது.

ஏரியா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான இந்த விமானம் தலைநகர் தெஹ்ரானில் இருந்த 153 பயணிகளுடன் கிழக்கு ஈரானில் உள்ள மஷ்ஷத் நகருக்கு சென்றது.

மஷ்ஷத் நகரை அடைந்தபோது விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து விமானத்தை அவசரமாக தரையிறக்கினர் விமானிகள்.

விமானம் கட்டுப்பாடில்லாமல் அதிவேகத்தில் தரையிறங்கியதில் ரன்வேயிலிருந்து வெளியே குதித்து தறிகெட்டு ஓடியது. பின்னர் விமான நிலையத்தின் வெளிப்புற சுவரில் மோதி முன் பகுதி நொறுங்கிவிட்டது. அப்போது விமானத்தில் தீயும் பிடித்துக் கொண்டது.

இதில் விமானத்தின் முன் பகுதி முழுவதுமாக சிதைந்துபோனது. இதில் விமானிகள் இருவரும் முன் பகுதியில் அமர்ந்திருந்த 16 பயணிகளும் பலியாகிவிட்டனர்.

ரஷ்ய தயாரிப்பான இந்த விமானம் இல்யுசின்-62 எம் ரக விமானமாகும்.

கடந்த 15ம் தேதி ஈரானின் காஸ்பியன் ஏர்லைன்சுக்கு சொந்தமான ரஷ்ய தயாரிப்பான டுபலோவ் ரக விமானம் தரையில் மோதி வெடித்து சிதறியதில் 168 பேர் பலியானது நினைவுகூறத்தக்கது

காயல்பட்டினத்தை பரபரபாக்கிய முதியவர்

காயல்பட்டினத்தில் முகாமிட்டு பொதுமக்களை வேலை வாங்கிய முதியவரால் பரபரப்பு ஏற்பட்டது.

காயல்பட்டினம் பெரிய முத்துவாப்பா தைக்கா அருகில் சில தினங்களுக்கு முன்பு முதியவர் ஒருவர் முகாமிட்டிருந்தார்.

புகாரிஷ் ஷரீபு சபையின் அபூர்வ து ஆ நிகழ்ச்சிக்கு வருகை தந்ததாக கூறிய முதியவர் வருவோர் போவோரிடம் இளநீர், பதனீர் மற்றும் சாதம் என உரிமையுடன் கேட்டு வாங்கினார்.

அவரிடம் அவர்களது மூதாதையரை விசாரித்து தெரிந்துக் கொண்டார். நாளுக்குநாள் அவரால் அப்பகுதியில் சிரமம் ஏற்படவே அவரை அப்புறப்படுத்த இளைஞர்கள் எண்ணினர்.

சிலர் அவர் உருவத்தை வைத்து, அஞ்சலகத்தில் ரூ.13 லட்சம் பணம் முதலீடு செய்த எர்ணாகுளம் அருகேயுள்ள மாவூர்பள்ளியில் போலீஸôரால் பிடித்து விசாரிக்கப்பட்ட பணக்கார பிச்சைக்காரார் இவர்தான் எனக் கூறியதால் அவரைப் பார்க்கக் கூட்டம் கூடியது.

யானைக்கால் நோயால் அவதிப்பட்டு கொண்டிருந்த அவரை அப்பகுதி இளைஞர்கள் நைஸôக அவ்விடத்தை விட்டு அப்புறப்படுத்தினர். இருப்பினும், அவர் காயல்பட்டினத்தில் தான் முகாமிட்டுள்ளார் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

ஸ்ரீவையில் 3-ம் நாளிலும் வேட்புமனுத் தாக்கல் இல்லை

ஸ்ரீவைகுண்டம் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கு 3-வது நாளாக வெள்ளிக்கிழமையும் யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை.

ஸ்ரீவைகுண்டம் பேரவைத் தொகுதி உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த டி. செல்வராஜ் கடந்த 5-ம் தேதி மாரடைப்பால் இறந்ததையடுத்து, இத்தொகுதியில் இடைத்தேர்தல் ஆகஸ்ட் 18-ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் புதன்கிழமை (ஜூலை 22) தொடங்கியது.

முதல் 2 நாள்களில் யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை. 9 பேர் மட்டும் வேட்புமனு படிவங்களை வாங்கிச் சென்றனர்.

இந்நிலையில், 3-ம் நாளான வெள்ளிக்கிழமையும் மாலை 3 மணி வரை யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை. மேலும், சிலர் பேர் வேட்புமனு படிவங்களை வாங்கிச் சென்றுள்ளனர். இதுவரை மொத்தம் 13 பேர் வேட்புமனு படிவங்களை வாங்கிச் சென்றுள்ளனர்.

காங்கிரஸ், தேமுதிக, பாஜக உள்ளிட்ட சில கட்சிகள் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கட்சிகள் சார்பில் வேட்பாளர் பெயர் வெளியிடப்பட்ட பின்னரே அவர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்வார்கள். எனவே, வரும் திங்கள்கிழமைக்கு பின்னரே ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்கு வேட்புமனுத் தாக்கல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளி, 24 ஜூலை, 2009

சவூதிக்கு மருத்துவர்கள் தேவை

சென்னை, ஜூலை 24, 2009

சவூதி அரேபியா நாட்டில் பணிபுரிய விருப்பமுள்ள பல்துறை சிறப்பு மருத்துவர்கள், சென்னை அடையாற்றில் உள்ள தமிழ்நாடு அரசு நிறுவனமான வெளிநாட்டுப் பணியாளர்கள் கழகத்தைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இது தொடர்பாக அதன் தலைவரும் நிர்வாக இயக்குநரும் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:

சவூதி அரேபியாவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு அதிகளவில் பல்துறை சிறப்பு மருத்துவர்களைத் தேர்வு செய்யவிருப்பதாக சவூதி அமைச்சக பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

குழந்தை மருத்துவம், நரம்பியல், நீரிழிவியல், சிறுநீரியல், மகப்பேறு மருத்துவம், இதய மருத்துவம், அறுவை சிகிச்சை, பொது மருத்துவம், மூட்டு மருத்துவம், பிளாஸ்டிக் சர்ஜரி, கண் மருத்துவம், மயக்க மருத்துவம், பல் மருத்துவம், பயோ கெமிஸ்டிரி, அவசர கால மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பு மருத்துவர்களாக உள்ளவர்கள் விருப்பமும் தகுதியும் இருந்தால் உரிய ஆவணங்களுடன் 48, டாக்டர் முத்துலட்சுமி சாலை, அடையாறு, சென்னை-600 020 என்ற முகவரியில் உள்ள வெளிநாட்டு பணியாளர் கழகத்திற்கு (தமிழக அரசு நிறுவனம்) இம்மாதம் 31ஆம் தேதியன்றோ அல்லது அதற்கு முன்னதாகவோ நேரில் வர வேண்டும்.

இவர்களுக்கு இம்மாதம் 26ஆம் தேதியிலிருந்து 31ஆம் தேதி வரை புது தில்லியிலும் ஆகஸ்டு 1ஆம் தேதியிலிருந்து 12ஆம் தேதி வரை பெங்களூரூவிலும் நேர்முகத் தேர்வு நடத்தப்படும். இந்தப் பணிகளுக்கான வயது வரம்பு 55. குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு அரசில் பணியாற்றும் மருத்துவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம். வெளிநாட்டு பணியாளர் அலுவலகம் ஆவணங்களைச் சரிபார்க்கும் பணிக்காக 25.07.09, 26.07.09 ஆகிய நாள்கள் திறந்திருக்கும்.

இது தொடர்பாக மேலும் விவரங்களுக்கு பின்வரும் எண்களில் தொடர்பு கொள்ளலாம். 044-24464268, 24464269, 24467557 மற்றும் மொபைல் எண்கள் 99402 76356, 94448 72516.

இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஒரு கலாட்டதொண்டாமுத்தூர் இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் மாடு வண்டியில் வந்த சுயேச்சை வேட்பாளர்கழுதை மீது ஏறி வந்த சுயேச்சை வேட்பாளர்.மூன்று நிமிடம் தாமதமானதால் மனு தாக்கல் செய்யாமல் திரும்பினார்.

4000 போலி நோக்கியா போன்கள் சென்னை விமான நிலையத்தில் பிடிபட்டன.


ஹாங்காங்கிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 1 கோடி மதிப்பிலான 4000 நோக்கியா போலி மொபைல் போன்கள் சென்னை விமான நிலையத்தில் பிடிபட்டன.

விமான நிலைய சரக்குப் பிரிவில் இந்த பார்சலை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த போன்கள் அனைத்தும் உண்மையில் சீனத் தயாரிப்பு மொபைல் போன்கள் ஆகும். ஆனால் நோக்கியா என்ற பெயரை ஒட்டி இவற்றை விற்பனை செய்வதற்காக கடத்தி வந்துள்ளனர்.

டெல்லியில் உள்ள ஒரு முகவரிக்கு இந்த போன்கள் அனுப்பபட்டுள்ளன. மொத்தம் 4000 போன்களும், அவற்றுக்கான சில உதிரி பாகங்களும் பார்சலில் இருந்தன.

இந்தப் போன்களைப் பார்த்தால் அசல் நோக்கியா போன் போலவே உள்ளது. சாதாரண மக்களுக்கு இது போலி போன் என்று தெரியாத அளவுக்கு கச்சிதமாக இதை மாற்றியுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தப் போன்கள் சீனாவிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் சீன நிறுவனங்களின் சதியின் ஒரு பகுதியே இது என்று சுங்கத்துறையினர் கூறுகின்றனர்.

இந்திய‌ தொழிலாள‌ர்க‌ளுக்கு உத‌வும் இல‌வ‌ச‌ தொலைபேசி

அபுதாபியில் வெளிநாடு இந்திய‌ர் ந‌ல‌ அமைச்ச‌க‌த்தின் சார்பில் தொழிலாள‌ர்க‌ளுக்கு உத‌விடும் நோக்கில் இல‌வ‌ச தொலைபேசி சேவை ஏற்ப‌டுத்த‌ப்ப‌ட்டுள்ள‌து. வெளிநாட்டு இந்தியர் நலத்துறை அமைச்சகம் இந்த சேவையை வழங்குகிறது.

வெளிநாடுக‌ளுக்கு குறிப்பாக‌ வ‌ளைகுடா நாடுக‌ளுக்குச் செல்லும் தொழிலாள‌ர்க‌ள் ஏஜெண்டுக‌ளின் க‌வ‌ர்ச்சியான‌ வாக்குறுதிக‌ளைக் கேட்டு ஏமாந்து விடுகின்ற‌ன‌ர்.இத‌ன் கார‌ண‌மாக‌ ம‌னைவியின் ந‌கைக‌ள், சொத்து உள்ளிட்ட‌வ‌ற்றை விற்று பிழைப்பு தேடி வ‌ரும் இவ‌ர்க‌ளில் ப‌ல‌ர் த‌ங்க‌ள‌து அறியாமையின் கார‌ண‌மாக‌ ஏமாற்ற‌ப்ப‌டுகின்ற‌ன‌ர்.

இத்த‌கைய‌வ‌ர்க‌ளுக்கு விழிப்புண‌ர்வு ஏற்ப‌டுத்திம் வ‌கையில் இல‌வ‌ச‌ தொலைபேசி சேவை ஏற்ப‌டுத்த‌ப்ப‌ட்டுள்ள‌து.மேலும் இந்த‌ சேவையின் மூல‌ம் ஏமாற்றும் ஏஜ‌ண்டுக‌ள் குறித்தும் புகார் த‌ர‌லாம்.

த‌ற்பொழுது ஐக்கிய‌ அர‌பு அமீர‌க‌ம், குவைத்,ச‌வுதி அரேபியா உள்ளிட்ட‌ வ‌ளைகுடா நாடுக‌ளில் ப‌ணிபுரியும் தொழிலாள‌ர்க‌ள் 800 091 202 53 என்ற‌ இல‌வ‌ச‌ தொலைபேசி எண்ணில் வார‌த்தின் ஏழு நாட்க‌ளும், 24 ம‌ணி நேர‌மும் தொட‌ர்பு கொள்ள‌லாம்.

இனி, நவீன வாக்குப் பதிவு எந்திரங்கள்

இடைத்தேர்தல் நடைபெற உள்ள கம்பம், தொண்டாமுத்தூர், இளையான்குடி, பர்கூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய ஐந்து தொகுதிகளிலும் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய நவீன வாக்குப் பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படும் என்று தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்தப் புதிய எந்திரத்தில் எந்த வாக்காளர் எத்தனை மணிக்குத் தனது வாக்கைப் பதிவு செய்தார் என்பதைக் கூடத் துல்லியமாக அறிய முடியும் என்றார்.

ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குப் பதிவு மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். தேர்தல் நேர்மையாகவும் நியாயமாகவும் நடைபெற அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்புத் தர வேண்டும் என்றும் நரேஷ் குப்தா கேட்டுக்கொண்டார்.

இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகள் அடங்கிய மாவட்டங்களில் தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருப்பதால் அரசின் நலத்திட்ட உதவிகள் எதுவும் அங்கு தேர்தல் முடியும் வரை வழங்கக் கூடாது என்றும் நரேஷ் குப்தா கூறினார்.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையின் செயற்கைக் கோள் நூலகம் திறப்பு

நெல்லை: இந்தியாவிலேயே முதல் முறையாக, நெல்லை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழகத்தில் செயற்கோள் நூலக மையத்தை துணை வேந்தர் சபாபதி மோகன் திறந்து வைத்தார்.

சிங்கப்பூர் ஆசிய ஊடக தகவல் மற்றும் தொடர்பியல் மையத்தின் (Asian Media Information and Communication Centre (AMIC) கிளைப் பிரிவு நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழக தொடர்பியல் துறையில் அமைக்கப்பட்டுள்ளது.

இதை பல்கலைகழக துணை வேந்தர் ரா.சபாபதி மோகன் திறந்து வைத்தார்.

'அமிக்' மற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக தொடர்பியல் துறைக்கும் இடையேயான புரிந்துணர்வு ஓப்பந்தத்தின் விளைவாக இந்த செயற்கை கோள் நூலக மையம் அமைக்கப்பட்டுள்ளது.

பல்கலைகழக பதிவாளர் மணிக்குமார், தொடர்பியல் துறை தலைவர் பெ.கோவிந்தராஜூ, மற்றும் தொடர்பியல் துறை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

திறப்பு விழாவை முன்னிட்டு 130 புத்தகங்கள், 'அமிக்'கின் அனைத்து பதிப்பு நகல்களும் மையத்திற்கு இலவசமாக வழங்கப்பட்டது. நெல்லையில் உள்ள இந்த மையத்தின் முலம் 'அமிக்'கின் ஆய்வு இதழ்கள், புத்தகங்கள் மற்றும் அனைத்து பதிப்புகலை தொடர்பியல் ஆய்வாளர்கள், மாணவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

உலகிலேயே 2வது மற்றும் இந்தியாவிலேயே முதல் செயற்கை கோள் நூலக மையம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் 2-ம் நாளிலும் வேட்புமனு தாக்கல் இல்லை

ஸ்ரீவைகுண்டம் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கு 2-வது நாளாக வியாழக்கிழமையும் யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை.

ஸ்ரீவைகுண்டம் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் புதன்கிழமை (ஜூலை 22) துவங்கியது. முதல்நாளில் யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை. 4 பேர் மட்டும் வேட்புமனு படிவங்களை வாங்கிச் சென்றனர்.

இந்நிலையில், 2-ம் நாளான வியாழக்கிழமையும் மாலை 3 மணி வரை யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை. மேலும் 5 பேர் வேட்புமனு படிவங்களை வாங்கிச் சென்றுள்ளனர்.

இடைத்தேர்தல் என்றால் எப்போதும் விறுவிறுப்பாக இருக்கும். ஆனால், இம்முறை அதிமுக போட்டியிடவில்லை என்பதால் மந்தமான சூழ்நிலை காணப்படுகிறது. இது வேட்புமனுத் தாக்கலிலும் பிரதிபலித்தது.

காங்கிரஸ், தேமுதிக உள்ளிட்ட சில கட்சிகள் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இக் கட்சிகள் சார்பில் வேட்பாளர் பெயர் வெளியிடப்பட்ட பின்னரே அவர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்வார்கள். எனவே, திங்கள்கிழமைக்கு பின்னரே ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்கு வேட்புமனுத் தாக்கல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் வாக்காளர்களுக்கு எம்.பி. நன்றி

ஸ்ரீவைகுண்டம், கருங்குளம் ஒன்றியப் பகுதிகளில் எஸ்.ஆர். ஜெயதுரை எம்.பி. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

ஸ்ரீவைகுண்டம் ஒன்றியம், பழையகாயலில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் சுற்றுப்பயணத்தை ஜெயதுரை எம்.பி. துவக்கினார்.

3 நாள்கள் தொடர்ந்து அவர், ஸ்ரீவைகுண்டம், கருங்குளம், தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் கிராமம் கிராமமாகச் சென்று வாக்களர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

காயல்பட்டினத்தில் நாளை "புகாரிஷ் ஷரீபு"

காயல்பட்டினத்தில் நாளை சனிக்கிழமை (ஜூலை 25) புகாரிஷ் ஷரீபு நடைபெறுகிறது.

இங்கு மஜ்லிஸþல் புகாரிஷ் ஷரீபு 82-ம் ஆண்டு தொடக்க விழா கடந்த மாதம் 25-ம் தேதி தொடங்கியது. இம் மாதம் 26-ம் தேதி வரை இவ் விழா நடைபெறுகிறது.

நபிகள் நாயகம் மணிமொழிக் கோர்வையான அல்ஜாமிஉல் ஸஹீஹூல் எனும் பரிசுத்த கிரந்தம் 81 ஆண்டுகள் வாசித்ததுபோல இவ்வாண்டும் விழாவையொட்டி தினமும் அதிகாலை 5.30-க்கு தொடங்கி 9 மணி வரை வாசிக்கப்படுகிறது.

திங்கள், செவ்வாய்கிழமை புனித மிராஜ் தினமும், புதன்கிழமை புகாரி இமாம் நினைவு தினமும் கடைப்பிடிக்கப்பட்டன.

வியாழக்கிழமை புனிதர் புகாரி இமாம் ரழியல்லாஹூ அன்ஹூ மீது மெüலானா மெüலவி மர்ஹூம் அல்லாமா அல்ஹாபிழ் நஹ்வி முகம்மது இஸ்மாயினால் முப்தி ரஹ்மதுல்லாஹியால் தொகுக்கப்பட்ட மெüலீது ஷரீபு ஓதப்பட்டது.

இதையடுத்து வெள்ளிக்கிழமை (ஜூலை 24) புகாரி ஓதி ஹதீது நிகழ்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

நிறைவு நாள் நிகழ்ச்சிகள் சனிக்கிழமை நடைபெறுகின்றன. காலை 10.30-க்கு உலக அமைதி வேண்டியும், மழை வளம், தேசிய ஒற்றுமை உள்ளிட்டவை வேண்டி "அபூர்வ துஆ' எனும் சிறப்பு பிரார்த்தனை நடைபெறுகிறது.

புனித மக்கா ஷரீபு முப்தி இமாம் மெüலானா செய்யது அஹ்மதிப்னு ஜெய்னி தஹ்லானி ரழியல்லாஹூ அன்ஹூவால் தொகுக்கப்பட்ட இப் பிரார்த்தனை ஓதப்படும்.

இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்பர்.

தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 26) நேர்ச்சை விநியோகம் நடைபெறும். ஏற்பாடுகளை விழா கமிட்டியை சேர்ந்த எம்.கே. செய்யிது முஹம்மது, கே.எஸ். கிதுறு முஹம்மது, எம்.ஜே. செய்யிது இப்ராஹிம் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

வியாழன், 23 ஜூலை, 2009

தமிழகத்தில் பிஎஸ்என்எல் வைமேக்ஸ் சேவை!

சென்னை: இந்திய அரசின் தொலைபேசி நிறுவனமான பிஎஸ்என்எல் அடுத்து வைமேக்ஸ் பிராட்பேண்ட் சேவையில் களமிறங்குகிறது. இந்த சேவை மூலம் கேபிள் இல்லாமலேயே 3 மெகாபைட் வேகத்தில் இணையதள சேவையை வழங்க முடியும்.

முதல் கட்டமாக தமிழகத்தில் 30 வைமேக்ஸ் நிலையங்களை நிறுவுகிறது பிஎஸ்என்எல். ஒவ்வொரு நிலையமும் 15 கிமீ சுற்றளவுக்குள் சேவைகளை வழங்கும். இவற்றில் 22 நிலையங்கள் கிராமப் புறங்களை மையப்படுத்தி அமையவிருப்பதாக பிஎஸ்என்எல் பொது மேலாளர் ஆர் கணேசன் தெரிவித்தார்.

வைமேக்ஸ் நிலையம் அமைப்பதற்கான உபகரணங்கள் ஆகஸ்டுக்குள் தமிழகத்துக்கு வந்துவிடும் என்றும், அக்டோபர் மற்றும் நவம்பர் முதல் சேவை ஆரம்பமாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது கட்டமாக 300 வைமேக்ஸ் நிலையங்களை அமைக்க பிஎஸ்என்எல் முடிவு செய்துள்ளது.

குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதுகிறது


குற்றாலத்தில் தற்போது சீசன் களை கட்டி காணப்படுகிறது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி என அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுகிறது.

இதனால் குற்றாலத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் அனைத்து அருவிகளுக்கும் சென்று ஆனந்த குளியல் போடுகின்றனர்.

சுற்றுலா பயணிகளின் வருகையை தொடர்ந்து அங்கு வியாபாரமும் சூடு பிடித்துள்ளது. இதனால் வியாபாரிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஐந்தருவி அருகே உள்ள படகு குழாமிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதி காணப்படுகிறது.

அருவிகளில் கூட்ட நெரிசலை தடுப்பதற்காக சுற்றுலா பயணிகள் அனைவரும் வரிசையாக நின்று குளிக்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் வாகனங்களில் வருவதால் குற்றாலத்தில் வாகன நெருக்கடி அடிக்கடி ஏற்படுகிறது. அதை போலீசார் சமாளித்து வருகின்றனர். தீவிர பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே வருகிற 25-ந்தேதி குற்றாலத்தில் சாரல் விழா நிகழ்ச்சி நடக்கிறது.

நேற்று முதல் நாளில் யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை

ஸ்ரீவைகுண்டம் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் புதன்கிழமை தொடங்கியது. முதல் நாளில் யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை

தேர்தல் அறிவிக்கை வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து வேட்புமனுத் தாக்கலும் புதன்கிழமை முற்பகல் 11 மணிக்கு தொடங்கியது. தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் நாளான புதன்கிழமை பிற்பகல் 3 மணிவரை யாரும் மனுத் தாக்கல் செய்யவில்லை. 4 பேர் மட்டும் வேட்புமனு படிவங்களை வாங்கிச் சென்றனர். அடுத்த வாரம் திங்கள்கிழமைக்குப் பிறகுதான் கட்சியினர் வேட்புமனுத் தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது

புதன், 22 ஜூலை, 2009

தூத்துக்குடி குழந்தைகளை மகிழ்விக்க கிரேட் இந்தியன் சர்க்கஸ்: 24ம் தேதி துவக்கம்

தூத்துக்குடியில் ஆசியாவின் புகழ்பெற்ற சர்க்கஸ் நிறுவனமான கிரேட் இந்தியன் சர்க்கஸ் வருகிற 24ம் தேதி முதல் துவங்குகிறது.
தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள, எஸ்.ஏ.வி. பள்ளி மைதானத்தில், ஆசியாவின் புகழ்பெற்ற சர்க்கஸ் நிறுவனமான கிரேட் இந்தியன் சர்க்கஸ் வருகிற 24ம் தேதி முதல் துவங்கி 30 நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. பகல் 1மணி, மாலை 4மணி, இரவு 7 மணி என தினந்தோறும் 3காட்சிகள் நடைபெறுகிறது. இதற்காக ரூ.70, ரூ.50, ரூ.30 என கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

கிரேட் இந்தியன் சர்க்கஸ் நிகழ்ச்சியை வருகிற 24ம் தேதி மாநில சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், துறைமுக சபை பொறுப்பு கழக உறுப்பினர் என்.பெரியசாமி ஆகியோர் துவக்கி வைக்கின்றனர். மாநகர மேயர் கஸ்தூரி தங்கம், வ.உ.சி. கல்லூரியின் தாளர் ஏ.பி.சி.வி.சொக்கலிங்கம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.

கிரேட் இந்தியன் சர்க்கஸ் நிறுவனம் 15 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டதாகவும், இதில் பல்வேறு விலங்குகளும், பறவைகளும் தங்களது திறமைகளை வெளிபடுத்துகிறது. ஜெர்மன் நாய்களின் அற்புத சாகசங்களும், யானைகளின் கிரிக்கெட் விளையாட்டும் முக்கிய அம்சமாக இடம்பெற்றுள்ளது. ரஷ்யா, சீனா மற்றும் கொரியா ஆகிய நாடுகளில் பயிற்சி பெற்ற 200 வல்லுனர்களால் சிறப்பு சாகசங்கள் நிகழ்த்துவதாக இந்நிறுவனத்தின் மேலாளர் சனில் ஜார்ஜ் தெரிவித்தார்.

சென்னை கடலோரத்தில் டால்பின்கள்.. கிரகண எபெக்ட்?


சென்னை: தமிழக கடலோரப் பகுதியில் என்றும் காணப்படாத டால்பின்கள் இன்று காலை சூரிய கிரகணம் நடந்தபோது மெரீனா கடல் பகுதியில் தாவிக் குதித்துக் கொண்டிருந்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்று காலை சென்னை மெரீனா கடற்கரையி்ல் ஜாகிங் சென்றவர்களுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. கடற்கரைக்கு மிக அருகே டால்பின்கள் துள்ளிக் குதித்து விளையாடிக் கொண்டிருந்தன.

இதை நம்ப முடியாத பலரும் கடலுக்கு மிக அருகே சென்று பார்த்தபோது அது டால்பின்கள் தான் என்பது உறுதியானது.

இதையடுத்து உடனடியாக தகவல் பரவவே ஆயிரக்கணக்கானவர்கள் மெரீனாவில் கூடிவிட்டனர் டால்பின்களைக் காண.

சூரிய கிரகணத்தால் கடலில் ஏற்பட்ட மாற்றங்களால் தான் டால்பின்கள் வழக்கத்துக்கு மாறாக சென்னை கடலோரப் பகுதிக்கு வந்ததாக மீனவர்கள் கூறுகின்றனர்.

அரபு நாடுகளில் மனித உரிமைகள் இல்லை : ஐ.நா

அரபு நாடுகளில் தனி மனித முன்னேற்றத்திற்கு மனித உரிமைகள் இல்லாமையே முக்கிய தடையாக அமைந்துள்ளதாக ஐ.நா. வளர்ச்சி திட்ட அமைப்பு தெரிவித்துள்ளது.

அரபு நாடுகளில் ஐந்துக்கு இரண்டு பேர் வறுமையில் வாடுவதாகவும், பற்றாக்குறை வருமானத்தில் வாழ்பவர்கள் மிக அதிகமாக உள்ளதாகவும் ஐ.நா. வளர்ச்சி திட்ட அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரபு நாடுகளில் மனித உரிமைகள் இல்லாமை,நியாயமான அரசியல் மற்றும் சமூக நீதி இல்லாமை , அதிகாரம் மற்றும் வளங்களை கைப்பற்றுவதில் ஏற்படும் போட்டி, அன்னிய நாடுகளின் தலையீடு மற்றும் நிலையான அரசு அமையாதது போன்றவை தனி மனித முன்னேற்றத்திற்கு தடையாக உள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது

மாஷாஅல்லா ஒரு அழகிய காட்சி :

குறிப்பு : ஈமெயில் வந்தது உங்கள் பார்வைக்கு

சிறு, நடுத்தர தொழில்துறையினருக்கு ஆன்லைன் சேவை: மைக்ரோசாஃப்ட் அறிமுகம்

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வணிகத் துறைக்குத் தேவையான ஆன்லைன் சேவைகளை அறிமுகப்படுத்த உள்ளது.
இப்புதிய வசதியைப் பயன்படுத்தி சிறிய, நடுத்தர தொழில் துறையினர், செலவுகளைக் குறைத்து லாபம் ஈட்ட வழி ஏற்பட்டுள்ளது.

இந்த சேவையை இரண்டு மாதங்களுக்கு, சோதனை அடிப்படையில் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளவும் இந்நிறுவனம் அனுமதித்துள்ளது.

இந்த சேவை மூலம் மின்னஞ்சல், மின்வழி ஒருங்கிணைப்பு, ஒருங்கிணைப்பு, மின்வழிச் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல், உற்பத்தி திறன் பெருக்கம் ஆகிய வசதிகளை பெறலாம்.

இந்நிறுவனம் அக்டோபர் மாதத்தில், இதை வணிக ரீதியாக அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஆன்லைன் மூலமான பல்வேறு சேவைகளை அளிக்கிறது. இடையூறு இன்றி இத்தகைய சேவைகளை வாடிக்கையாளர்கள் பெறுவதோடு பயன்படுத்தும் அளவுக்கு ஏற்ப கட்டணத்தைச் செலுத்தும் வசதியையும் அளிக்கிறது.

நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்கள், விற்பனை முகவர்கள், விற்பனை குழுக்கள் ஆகியோருடன் 24 மணி நேரமும், உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தொடர்பு கொள்ள இத்தகைய இணைய வழி சேவைகள் பயன்படுகின்றன.

இதன் மூலம் நிறுவனச் செலவுகள் குறைவதோடு உற்பத்தி மற்றும் விற்பனைத் திறன் அதிகரிக்கிறது. விரைவான தகவல் பரிமாற்றத்துக்கும் வழிவகுக்கிறது.

ஏற்கெனவே இந்நிறுவனம் அளித்த பல்வேறு சேவைகள் வணிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போது இரண்டாம் கட்டமாக இத்தகைய சேவையை அளிக்க முன்வந்துள்ளதாக நிறுவனத்தின் வணிகப் பிரிவு இயக்குநர் சஞ்சய் மன்சந்தா தெரிவித்துள்ளார்.

இந்த வசதியைப் பெற விரும்புவோர், மைக்ரோசாப்ட் டாட் காம் என்ற இணைய தளம் மூலம் பெறலாம்.

யு.எஸ்.பி.சேப்லி ரிமூவ் ( USB Safely Remove )

விண்டோஸ் சிஸ்டத்திலேயே யு.எஸ்.பி. போர்ட்களில் இணைக்கப்படும் சாதனங்களை எடுத்திட சேப்லி ரிமூவ் வசதி தரப்பட்டுள்ளது. இருப்பினும் பல தேர்ட் பார்ட்டி புரோகிராம்கள் இதற்கென வடிவமைக்கப்பட்டு நமக்கு இணையத்தில் கிடைக்கின்றன.USB Safely Remove என்ற அந்த புரோகிராமின் புதிய பதிப்பு 4.1 தற்போது வெளியாகியுள்ளது.

இதில் என்ன புதிதாய் இருக்கிறது என்று பார்க்கலாமா!

1. இந்த புரோகிராமில் இருந்த ஆட்டோ ரன் வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது. எந்த சாதனத்தை யு.எஸ்.பி. போர்ட்டில் இணைத்தாலும் அதில் உள்ள தேர்ட் பார்ட்டி புரோகிராம் ஒன்றினை இயக்கும் வகையில் செட் செய்திடலாம். இதனைப் பயன்படுத்தி எக்ஸ்புளோரர் புரோகிராமினை இயக்கலாம். அல்லது பைல் மேனேஜரை இயக்கி என்ன என்ன பைல்கள் இருக்கின்றன எனப்பார்க்கலாம்.

2. யு.எஸ்.பி.யில் இணைக்கப்பட்டுள்ள சாதனத்தை நீக்கும் முன் அதில் உள்ள பைல்களை ஆட்டோ பேக் அப் எடுக்கும் வகையில் செட் செய்திடலாம்.

3. எக்ஸ்டெர்னல் டிரைவ் என்றால் அதனை இணைக்கும்போதே ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் சோதனை செய்திடும் படி அமைக்கலாம். இதே போல பல செயல்பாடுகளை செட் செய்திடலாம்.
யு.எஸ்.பி.யில் இணைத்த சாதனம் எந்நிலையில் உள்ளது என்று அறிய பல்வேறு ஐகான்கள் காட்டப்படுகின்றன. இணைக்கப்பட்டுள்ள சாதனங்கள் அனைத்தும் இயக்கத்தில் உள்ளனவா என்று காட்டப்படும். போர்ட்டில் சாதனங்களே இல்லை என்றாலும் ஐகான் மூலம் தெரிந்து கொள்ளலாம். இணைக்கப்பட்ட ஒரு சாதனத்தின் இயக்கம் நிறுத்தப்பட்ட பின்னர் அது நீக்கப்படவில்லை என்றால் காட்டப்படும். இதன் பயன்பாடுகள் குறித்து மேலும் அறிய மேலே தரப்பட்டுள்ள இணைய தளத்தினையே காணவும்

டவுன்லோட் செய்ய : http://safelyremove.com/

நெல்லையில் இன்று 40 சதவீத சூரிய கிரகணம் தெரிந்தது நவீன டெலஸ்கோப் மூலம் ஏராளமானோர் கண்டு களித்தனர்


நெல்லையில் உள்ள மாவட்ட அறிவியல் மையத்தில் இன்று ஏற்பட்ட சூரிய கிரகணத்தை பார்க்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. “ஒளிவிலகல் டெலஸ்கோப்”” மூலம் சூரிய பிம்பம் திரையில் காட்டப்பட்டது. முதலில் முழு வட்ட அளவில் இருந்த சூரியன் தேய்ந்து தேய்ந்து கால்பகுதிக்கும் சற்று கூடுதலாக மறைந்து “பிறைநிலா” போல் காட்சி அளித்தது.

இதை நெல்லைப்பகுதி பொதுமக்கள் மற்றும் மாணவ - மாணவிகள் ஏராளமானோர் கண்டு களித்தனர். அவர்களுக்கு மாவட்ட அறிவியல் மைய அதிகாரிகள் கோபாலகிருஷ்ணா மற்றும் ஜெபராஜன் ஆகியோர் விளக்கி கூறினார்கள்.

இது குறித்து நெல்லை மாவட்ட அறிவியல் மைய அதிகாரி கோபாலகிருஷ்ணா கூறியதாவது:-
நெல்லை மாவட்டத்தில் சூரியகிரகணம் காலை 6.35 மணிக்கு தொடங்கியது.

மெது மெதுவாக சூரியன் மறையத்தொடங்கியது. 6.55 மணி அளவில் அதிகபட்சமாக 40 சதவீத சூரியனை நிலவு மறைத்தது. பின்னர் மீண்டும் நிலவு விலகி சூரியன் வளர்ந்தது. 7.15 மணி அளவில் கிரகணம் முடிந்து முழுசூரியன் மறுபடியும் தெரிந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

இது போக ஏராளமானோர் அட்டையில் துவாரமிட்டும், கண்ணாடியில் புகை பிடித்தும் சூரிய கிரகணத்தை பார்த்தனர்.

சூரியகிரகணத்தை வெறும் கண்ணால் பார்த்தால் கண்ணுக்கு ஆபத்து என்று விஞ்ஞானிகள் எச்சரித்தனர். ஆனால் சிலர் மட்டுமே கண்ணாடி அணிந்து கொண்டு சூரியனை பார்த்தார்கள். பலரும் வெறும் கண்ணாலேயே கண்டு ரசித்தனர். அவர்களுக்கு பாதிப்பு எதுவும் ஏற்பட்டதா? என்பது இனிதான் தெரிய வரும்.

இந்த சூரிய கிரகணத்தின் போது பூகம்பம், சுனாமி போன்ற இயற்கை ஆபத்து ஏற்படலாம் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்து இருந்தனர். அதுபோன்று எதுவும் நடக்கவில்லை.

இனி இதேபோன்ற சூரிய கிரகணத்தை 122 ஆண்டுகளுக்கு பிறகு 2132-ம் ஆண்டுதான் பார்க்க முடியும்.

கிரகணத்தின்போது சாப்பிட கூடாதா?- இன்று திராவிடர் கழக சார்பில் விருந்து


சென்னை: சூரிய கிரகணத்தின்போது சாப்பிடக் கூடாது என்ற மூடநம்பிக்கையை உடைத்து மடமையைப் போக்கும் வகையில் கிரகண நேரத்தில் திறந்த வெளியில் காலை உணவு சாப்பிட திராவிடர் கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

இது குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சூரிய கிரகணத்தின்போது சாப்பிட்டால் ஆகாது என்ற மூடநம்பிக்கைகளை உடைத்துக் காட்டி பாமர மக்கள், படித்த பாமர மக்களின் அறியாமை- மடமையை போக்கிடும் வண்ணம்,

பெரியார் கல்வி நிறுவனங்களில் காலையில் மாணவர்கள்- ஆசிரியர்கள் அனைவரும் திறந்தவெளி அரங்கில், சிற்றுண்டியை அனைவரும் சேர்ந்து உண்டு கிரகணத்திற்கும், சாப்பிடுவதற்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது என்று செயல்முறை விளக்கமாக செய்து காட்ட உள்ளோம்.

தஞ்சை வல்லத்தில் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வளாகத்திலும், பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்திலும், திருச்சி கல்வி வளாகத்திலும், ஜெயங்கொண்டம் பெரியார் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும், சென்னை பெரியார் திடலிலும் அனைவரும் கிரகண நேரத்தில் சிற்றுண்டி சாப்பிடுவோம் என்று கூறியுள்ளார்.

பழனியில் கிரகணம் குறித்த கல்வெட்டு..

இந் நிலையில் பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் சூரிய கிரகணம் குறித்த, பண்டை கால அரிய கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் முக்கிய உபகோயில் தான் அருள்மிகு பெரியநாயகியம்மன் கோயில். இக்கோயிலில்தான் தைப்பூசம், வைகாசி விசாகம் உள்ளிட்ட பெருவிழாக்கள் நடைபெறுகின்றன.

கி.பி. 14ம் நூற்றாண்டுக்கு முன், பாண்டிய மன்னர்களால் சிவன் கோயிலாகக் கட்டப்பட்ட இக்கோயில், மாலிக் கபூரின் தாக்குதலுக்குப் பின் 17ம் நூற்றாண்டில், திருமலைநாயக்கர் காலத்தில் அம்மன் கோயிலாக உருமாற்றம் செய்யப்பட்டது.

இக்கோயிலில் தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி, கட்டடக்கலை நிபுணர் மணிவண்ணன் மற்றும் மகளிர் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது கோயிலின் யாகசாலை அறை சுவற்றில் பழங்காலக் கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டது. முன், பின் எழுத்துக்கள் அழிந்த நிலையில் 4 வரிகள் மட்டுமே இதில் மீதம் உள்ளன.

''பலவைய பேர்களுக்கு...... சூரிய கிராணப் புண்ணிய காலத்தில்..... நீராகத் தாரை வாத்து.........கல்வெட்டிக் கொள்ள.......'' என்று பொறிக்கப்பட்டுள்ள இந்த எழுத்துகள் 17ம் நூற்றாண்டின்போது சூரியகிரகணத்தன்று, பெரியநாயகியம்மன் கோயிலுக்கு நிவந்தத்துக்கு நிலம் தானமாக வார்த்துக் கொடுக்கப்பட்ட செய்தி பொறிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் பண்டைய காலத்தில் நவீன கருவிகள் இல்லாமலேயே, சூரிய கிரகணத்தை தமிழர்கள் அறிந்துள்ளதும், அது நடக்கும் காலத்தில், இறைவனுக்கு நிவந்தங்கள் அளித்ததும், பழங்காலத்தில் சூரியகிரகண நேரத்தில் கோயில்களுக்குத் தானம் வழங்கும் பழக்கம் இருந்ததும் தெரியவந்துள்ளது.

பழனி மலைக்கோயில் கருவறை வடக்குப் பகுதியில், மல்லிகார்ச்சுனராயர் பொறித்த சூரியகிரகணம் குறித்த கல்வெட்டு முன்னரே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறி்ப்பிடத்தக்கது. அந்தக் கல்வெட்டிலும், இதேபோல, சூரியகிரகண காலத்தை புண்ணியகாலம் என்றே தானத்துக்கு சிறந்த நேரமாகக் குறித்துள்ளனர்.

ஸ்ரீவைகுண்டம் இடைத்தேர்தல் வேட்புமனுத் தாக்கல் இன்று தொடக்கம்

ஸ்ரீவைகுண்டம் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்ய வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே தேர்தல் நடத்தும் அலுவலர் அறைக்குள் அனுமதிக்கப்படுவர்.

ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஆகஸ்ட் 18-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் புதன்கிழமை (ஜூலை 22) தொடங்குகிறது.

இத் தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலரான மாவட்ட வருவாய் அலுவலர் துரை. ரவிச்சந்திரனிடம் வேட்பாளர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்ய வேண்டும். இதற்கான வேட்புமனுக்கள் தேர்தல் ஆணையத்திடம் இருந்து போதுமான அளவு வந்துள்ளன.

வேட்புமனுத் தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்கள் முந்தைய மக்களவைத் தேர்தலின் போது கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைகளைத் தான் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேட்பாளர்கள் ரூ. 5000 பணம் வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. வேட்பாளர்கள் ரூ. 2500 மட்டும் செலுத்தினால் போதும்.

அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட தேசிய அல்லது மாநில அரசியல் கட்சி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர்கள் தங்களை வேட்பாளராக நியமனம் செய்த கட்சியிடம் இருந்து பெற்ற படிவத்தை கண்டிப்பாக தாக்கல் செய்ய வேண்டும்.

அங்கீகரிக்கபபட்ட கட்சியின் வேட்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்காளராக உள்ள ஒரு நபர் முன்மொழிய வேண்டும்.

மற்ற வேட்பாளருக்கு 10 பேர் முன்மொழிய வேண்டும்.

வேட்புனு மனுவை காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வருவாய் அலுவலர் அறையில் தாக்கல் செய்ய வேண்டும்.

வேட்பாளர்கள் வேட்புமனு மனுவுடன் 2 பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்ய வேண்டும். தங்களது சொந்து விவரங்கள் அடங்கிய பிரமாண பத்திரம் ஒன்றும், குற்ற வழக்குகள் விபரம் அடங்கிய பிரமாண பத்திரம் ஒன்றும் கண்டிப்பாக தாக்கல் செய்யப்பட வேண்டும்.

வேட்புமனுத் தாக்கல் செய்யும் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்யும் போது, தேர்தல் நடத்தும் அலுவலர் முன் அரசியல் அமைப்பு சட்டத்தின்படி நடந்து கொள்ள உறுதிமொழி ஒன்றை கண்டிப்பாக எடுக்க வேண்டும். இல்லையெனில் வேட்புமனு நிராகரிக்கப்படும்.

அனைத்து வேட்பாளர்களும் வேட்புமனுத் தாக்கல் செய்த நாளில் இருந்து தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் நாள் வரை செய்யப்படும் தேர்தல் செலவுகளுக்குரிய கணக்குகளை உரிய பதிவேட்டில் பராமரிக்க வேண்டும். வேட்பாளர்கள் மூன்று நாள்களுக்கு ஒருமுறை தங்கள் செலவு கணக்குகளை உரிய அலுவலர்களிடம் தணிக்கைக்கு தாக்கல் செய்ய வேண்டும்.

ஸ்ரீவைகுண்டம் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுக் தாக்கல் புதன்கிழமை தொடங்குகிறது. அரசியல் கட்சிகள் சார்பில் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படாததால் முதல் நாளில் அரசியல் கட்சி சார்பில் யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்ய வாய்ப்பில்லை. சுயேச்சைகள் வேட்புமனுத் தாக்கல் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

LinkWithin

Blog Widget by LinkWithin