புதன், 22 ஜூலை, 2009

நெல்லையில் இன்று 40 சதவீத சூரிய கிரகணம் தெரிந்தது நவீன டெலஸ்கோப் மூலம் ஏராளமானோர் கண்டு களித்தனர்


நெல்லையில் உள்ள மாவட்ட அறிவியல் மையத்தில் இன்று ஏற்பட்ட சூரிய கிரகணத்தை பார்க்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. “ஒளிவிலகல் டெலஸ்கோப்”” மூலம் சூரிய பிம்பம் திரையில் காட்டப்பட்டது. முதலில் முழு வட்ட அளவில் இருந்த சூரியன் தேய்ந்து தேய்ந்து கால்பகுதிக்கும் சற்று கூடுதலாக மறைந்து “பிறைநிலா” போல் காட்சி அளித்தது.

இதை நெல்லைப்பகுதி பொதுமக்கள் மற்றும் மாணவ - மாணவிகள் ஏராளமானோர் கண்டு களித்தனர். அவர்களுக்கு மாவட்ட அறிவியல் மைய அதிகாரிகள் கோபாலகிருஷ்ணா மற்றும் ஜெபராஜன் ஆகியோர் விளக்கி கூறினார்கள்.

இது குறித்து நெல்லை மாவட்ட அறிவியல் மைய அதிகாரி கோபாலகிருஷ்ணா கூறியதாவது:-
நெல்லை மாவட்டத்தில் சூரியகிரகணம் காலை 6.35 மணிக்கு தொடங்கியது.

மெது மெதுவாக சூரியன் மறையத்தொடங்கியது. 6.55 மணி அளவில் அதிகபட்சமாக 40 சதவீத சூரியனை நிலவு மறைத்தது. பின்னர் மீண்டும் நிலவு விலகி சூரியன் வளர்ந்தது. 7.15 மணி அளவில் கிரகணம் முடிந்து முழுசூரியன் மறுபடியும் தெரிந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

இது போக ஏராளமானோர் அட்டையில் துவாரமிட்டும், கண்ணாடியில் புகை பிடித்தும் சூரிய கிரகணத்தை பார்த்தனர்.

சூரியகிரகணத்தை வெறும் கண்ணால் பார்த்தால் கண்ணுக்கு ஆபத்து என்று விஞ்ஞானிகள் எச்சரித்தனர். ஆனால் சிலர் மட்டுமே கண்ணாடி அணிந்து கொண்டு சூரியனை பார்த்தார்கள். பலரும் வெறும் கண்ணாலேயே கண்டு ரசித்தனர். அவர்களுக்கு பாதிப்பு எதுவும் ஏற்பட்டதா? என்பது இனிதான் தெரிய வரும்.

இந்த சூரிய கிரகணத்தின் போது பூகம்பம், சுனாமி போன்ற இயற்கை ஆபத்து ஏற்படலாம் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்து இருந்தனர். அதுபோன்று எதுவும் நடக்கவில்லை.

இனி இதேபோன்ற சூரிய கிரகணத்தை 122 ஆண்டுகளுக்கு பிறகு 2132-ம் ஆண்டுதான் பார்க்க முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin