வெள்ளி, 24 ஜூலை, 2009

இனி, நவீன வாக்குப் பதிவு எந்திரங்கள்

இடைத்தேர்தல் நடைபெற உள்ள கம்பம், தொண்டாமுத்தூர், இளையான்குடி, பர்கூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய ஐந்து தொகுதிகளிலும் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய நவீன வாக்குப் பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படும் என்று தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்தப் புதிய எந்திரத்தில் எந்த வாக்காளர் எத்தனை மணிக்குத் தனது வாக்கைப் பதிவு செய்தார் என்பதைக் கூடத் துல்லியமாக அறிய முடியும் என்றார்.

ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குப் பதிவு மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். தேர்தல் நேர்மையாகவும் நியாயமாகவும் நடைபெற அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்புத் தர வேண்டும் என்றும் நரேஷ் குப்தா கேட்டுக்கொண்டார்.

இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகள் அடங்கிய மாவட்டங்களில் தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருப்பதால் அரசின் நலத்திட்ட உதவிகள் எதுவும் அங்கு தேர்தல் முடியும் வரை வழங்கக் கூடாது என்றும் நரேஷ் குப்தா கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin