ஜமாத் பொதுக்குழுவில் உறுப்பினராகத் தகுதியானவரை உள்ளூர் குழுவே இறுதி முடிவு செய்யவேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
இதுதொடர்பான வழக்கு விவரம்: காயல்பட்டினம் அல்ஜுமைவுல் ஜும்மா பள்ளிவாசல் கே.எஸ்.முகமது நாசர், பள்ளிவாசல் கண்காணிப்பாளர் மற்றும் தமிழ்நாடு வக்பு வாரியம் தாக்கல் செய்த மனு: இந்த பள்ளிவாசல் தேர்தல் தொடர்பாக சில வழக்குகள் தொடரப்பட்டன. அதில் தகுதி உள்ள எல்லோரையும் ஜமாத் பொதுக்குழு உறுப்பினராகச் சேர்க்கவும் அதற்கான விண்ணப்ப படிவங்களை வழங்கவும் உத்தரவிடப்பட்டது.
இதுவரை 2,430 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் தகுதியானவர்களைத் தேர்வு செய்ய 14 பேர் கொண்ட ஆய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உறுப்பினருக்கான தகுதி குறித்து நிர்ணயிக்குமாறு ஒரு ரிட் மனு தாக்கலானது.
அதில் வக்பு வாரியம் அதன் கண்காணிப்பாளரை உதவியாக்கொண்டு சரியான நபரைத் தெரிவு செய்யுமாறு தனி நீதிபதி உத்தரவிட்டார். இது சாத்தியமானதல்ல. எனவே, தேர்தல் சமயத்தில் போதிய போலீஸ் பாதுகாப்பு அளிக்கவும் உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், டி.ஹரிபரந்தாமன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் அளித்த உத்தரவு:
ஜாமாத்தின் பொதுக்குழு உறுப்பினராக ஒருவருக்கு 18 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். அதே ஊரில் குடியிருந்து ஜமாத்தைப் பின்பற்றுபவராகவும், தினசரி பள்ளிவாசலுக்கு வருகை தருபவராகவும் இருத்தல் வேண்டும்.
இத்தகையவரை உறுப்பினராகச் சேர்க்கும் விஷயத்தில் வக்பு வாரியம் அந்நபரை நிர்ணயிக்க முடியாது. உள்ளூரில் உள்ள தாற்காலிக குழுவே சரியான நபரை இறுதி முடிவு செய்ய வேண்டும். பள்ளிவாசலை நிர்வகிக்க ஒரு குழு உள்ளபோது உறுப்பினர்களை அக்குழுவே நிர்ணயிக்க வேண்டும்.
மேலும் தகுதியானனோர் பட்டியலைத் தயாரித்து வக்பு வாரியத்துக்கு 2 வாரகாலத்தில் அனுப்ப வேண்டும் எனக் கூறி, மனுக்களை பைசல் செய்து பெஞ்ச் உத்தரவிட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக