திங்கள், 14 செப்டம்பர், 2009

மறைந்த இதயேந்திரன் இதயம் நின்று போனது: உறுப்புதான பெருமைக்கு சொந்தக்காரர்


சென்னை: உடல் உறுப்புக்கள் தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்பட காரணமாக விளங்கிய இதயேந்திரனின் இதயம் பொருத்தப்பட்ட சிறுமி, மூச்சுத்திணறல் ஏற்பட்டு நேற்று இரவு சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தாள். திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த டாக்டர் தம்பதி அசோகன், புஷ்பாஞ்சலி. இவர்களது மூத்த மகன் இதயேந்திரன் (17). மாணவன் 11 ம் வகுப்பு படித்து வந்தான். தனது நண்பனை பார்க்க மோட்டார் சைக்கிளில் பார்க்க சென்ற போது ( கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 23ம் தேதி ) நடந்த ஒரு விபத்தில்,சிக்கினான். செங்கல்பட்டில் சேர்க்கப்பட்டு பின்னர் சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பபட்டான். இதயேந்திரனுக்கு மூளை செயல் இழந்து விட்டதை டாக்டர்கள் உறுதி செய்தனர்.

தானம் செய்ய முடிவு: இதனை அறிந்த டாக்டர் தம்பதியினர் மகனின் இதயம் , கண்கள் , சிறுநீரகம், நுரையீரல் , கல்லீரல் போன்ற உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்தனர். பெங்களூரைச் சேர்ந்த சேகர் என்பவரின் மகள் அபிராமி (9) சென்னை ஜெ.ஜெ., நகரில் உள்ள செரியன் மருத்துவமனையில் இதய நோயால் சிகிச்சை பெற்று வந்தார்,. இவருக்கு இதயம் தேவை என விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. இதனை அறிந்த இதயேந்திரன் பெற்றோர்கள் சிறுமி அபிராமிக்கு வழங்க முடிவு செய்தனர். இதன்படி 20 நிமிடத்தில் சிறுமி அபிராமிக்கு பொருத்தப்பட்டது.

முதல்வர் கருணாநிதி பாராட்டு : இந்த உறுப்புதான சம்பவம் மாநிலம் முழுவதும் பரபரப்பாகவும் , பெருமையாகவும் பேசப்பட்டது. மேலும் இது தொடர்பான விஷயத்தில் பெரும் பரந்த மனப்பான்மையுடன் நடந்து கொண்ட இதயேந்திரன் பெற்றோர்களுக்கு முதல்வர் கருணாநிதி பாராட்டினார். மேலும் தாயாரின் செயலை பாராட்டி அவருக்கு கல்பனா சாவ்லா விருதும் வழங்கப்பட்டது.

மூச்சுத் திணறலால், அபிராமி அவதி : இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு பின் அபிராமி, நல்ல உடல் ஆரோக்கியத்துடன் காணப்பட்டாள். அறுவை சிகிச்சை நடந்து ஓராண்டு நிறைவு பெற உள்ள நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் மூச்சுத் திணறலால், அபிராமி கடும் அவதிப்பட்டு வந்தாள். இதையடுத்து, அறுவை சிகிச்சை செய்யப்பட்ட செரியன் மருத்துவமனையில் மீண்டும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாள். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு 8 மணிக்கு பரிதாபமாக இறந்தாள்.

எங்கள் மகள் இனி உங்கள் மகள் : இத்தனை பெருமைக்கு சொந்தக்காரரான இதயேந்திரன் இதயம் நேற்று இரவு நின்று போனது. எங்கள் மகள் இனி உங்கள் மகள் என இதயத்தை தானமாக பெற்றபோது அபிராமி தாயார், இதயேந்திரன் பெற்றோரிடம் கூறியிருந்தார். ஆனால் இப்போது இரண்டு குடும்பத்தினருக்கும் சொந்தமான ஒரு உயிர் பிரிந்து விட்டது. இதயேந்திரன் குடும்பத்தினர் பெற்ற சந்தோசம் விரைவிலேயே முடிந்து விட்டது, என்றாலும் அவரது புகழ் என்றும் பேசப்படும்

செய்தி : தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin