ஸ்ரீவைகுண்டம் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்ய வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே தேர்தல் நடத்தும் அலுவலர் அறைக்குள் அனுமதிக்கப்படுவர்.
ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஆகஸ்ட் 18-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் புதன்கிழமை (ஜூலை 22) தொடங்குகிறது.
இத் தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலரான மாவட்ட வருவாய் அலுவலர் துரை. ரவிச்சந்திரனிடம் வேட்பாளர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்ய வேண்டும். இதற்கான வேட்புமனுக்கள் தேர்தல் ஆணையத்திடம் இருந்து போதுமான அளவு வந்துள்ளன.
வேட்புமனுத் தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்கள் முந்தைய மக்களவைத் தேர்தலின் போது கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைகளைத் தான் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வேட்பாளர்கள் ரூ. 5000 பணம் வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. வேட்பாளர்கள் ரூ. 2500 மட்டும் செலுத்தினால் போதும்.
அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட தேசிய அல்லது மாநில அரசியல் கட்சி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர்கள் தங்களை வேட்பாளராக நியமனம் செய்த கட்சியிடம் இருந்து பெற்ற படிவத்தை கண்டிப்பாக தாக்கல் செய்ய வேண்டும்.
அங்கீகரிக்கபபட்ட கட்சியின் வேட்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்காளராக உள்ள ஒரு நபர் முன்மொழிய வேண்டும்.
மற்ற வேட்பாளருக்கு 10 பேர் முன்மொழிய வேண்டும்.
வேட்புனு மனுவை காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வருவாய் அலுவலர் அறையில் தாக்கல் செய்ய வேண்டும்.
வேட்பாளர்கள் வேட்புமனு மனுவுடன் 2 பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்ய வேண்டும். தங்களது சொந்து விவரங்கள் அடங்கிய பிரமாண பத்திரம் ஒன்றும், குற்ற வழக்குகள் விபரம் அடங்கிய பிரமாண பத்திரம் ஒன்றும் கண்டிப்பாக தாக்கல் செய்யப்பட வேண்டும்.
வேட்புமனுத் தாக்கல் செய்யும் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்யும் போது, தேர்தல் நடத்தும் அலுவலர் முன் அரசியல் அமைப்பு சட்டத்தின்படி நடந்து கொள்ள உறுதிமொழி ஒன்றை கண்டிப்பாக எடுக்க வேண்டும். இல்லையெனில் வேட்புமனு நிராகரிக்கப்படும்.
அனைத்து வேட்பாளர்களும் வேட்புமனுத் தாக்கல் செய்த நாளில் இருந்து தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் நாள் வரை செய்யப்படும் தேர்தல் செலவுகளுக்குரிய கணக்குகளை உரிய பதிவேட்டில் பராமரிக்க வேண்டும். வேட்பாளர்கள் மூன்று நாள்களுக்கு ஒருமுறை தங்கள் செலவு கணக்குகளை உரிய அலுவலர்களிடம் தணிக்கைக்கு தாக்கல் செய்ய வேண்டும்.
ஸ்ரீவைகுண்டம் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுக் தாக்கல் புதன்கிழமை தொடங்குகிறது. அரசியல் கட்சிகள் சார்பில் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படாததால் முதல் நாளில் அரசியல் கட்சி சார்பில் யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்ய வாய்ப்பில்லை. சுயேச்சைகள் வேட்புமனுத் தாக்கல் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக