வெள்ளி, 31 ஜூலை, 2009

திமுகவில் சேருகிறார் "அனிதா' ராதாகிருஷ்ணன்


அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் "அனிதா' ராதாகிருஷ்ணன், தமது எம்.எல்.ஏ. பதவியை வெள்ளிக்கிழமை ராஜிநாமா செய்யப் போவதாக அறிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, திமுகவில் இணைய முடிவு எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான "அனிதா' ராதாகிருஷ்ணன் அதிமுகவில் இருந்து புதன்கிழமை நீக்கப்பட்டார். கட்சியின் கொள்கை மற்றும் கட்டுப்பாட்டை மீறும் வகையில் செயல்பட்டதால், அவரும், மற்றொரு எம்.எல்.ஏ.வுமான எஸ்.வி.சேகரும் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக அதிமுக தலைமை தெரிவித்தது.

இதையடுத்து, தனது ஆதரவாளர்களுடன் கடந்த சில நாள்களாக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார் ராதாகிருஷ்ணன்.

கருணாநிதியுடன் சந்திப்பு... கட்சியில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து, திமுகவில் இணைவாரா? அல்லது எக்கட்சியும் சாராத எம்.எல்.ஏ.வாக தொடர்வாரா? என்று "அனிதா' ராதாகிருஷ்ணனைச் சுற்றி பல்வேறு கேள்விகள் எழுந்தன.

இந்நிலையில், முதல்வர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் வியாழக்கிழமை மாலை அவர் சந்தித்துப் பேசினார். மாலை 6.45 மணிக்குத் தொடங்கிய இந்தச் சந்திப்பு, 7.05 மணி வரை நீடித்தது.

பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்:

முதல்வரைச் சந்தித்தன் காரணம்? முதல்வர் கருணாநிதியை மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினேன்.

திமுகவில் இணையப் போகிறார்களா? எனது எம்.எல்.ஏ. பதவியை வெள்ளிக்கிழமை ராஜிநாமா செய்யப் போகிறேன். இதைத் தொடர்ந்து, முறைப்படி திமுகவில் இணைகிறேன்.

திமுகவில் சேரக் காரணம்? அதிமுகவில் இருந்தபோது ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகள் கடுமையான மன உளைச்சலில் இருந்தேன். எனது தொகுதி மக்களுக்கும், மாவட்ட மக்களுக்கும் பல்வேறு நன்மைகளைச் செய்ய திமுகவில் இணைகிறேன். மக்களுக்கு நன்மைகளைச் செய்யும் கட்சி திமுக.

உங்களுடன் வேறு யாரும் திமுகவில் இணைவார்களா? பொறுத்து இருந்து பாருங்கள் என்றார்.

அனிதா ராதாகிருஷ்ணனும், எஸ்.வி. சேகரும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து, சட்டப்பேரவையில் அக் கட்சியின் பலம் 57 ஆகக் குறைந்தது.

தாம் எம்.எல்.ஏ. பதவியில் இருந்து விலகப் போவதில்லை என எஸ்.வி. சேகர் ஏற்கெனவே அறிவித்துள்ளார்.

கடந்த 2006-ல் அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்ற திருச்செந்தூர் தொகுதியில் அவரை எதிர்த்து திமுகதான் போட்டியிட்டது.

எனவே இத் தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்படும்போது திமுக போட்டியிட்டு தனது எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரித்துக் கொள்ள வாய்ப்பு உருவாகி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin