தானியங்கி பணப்பட்டுவாடா இயந்திரத்தில் இருந்து (ஏ.டி.எம்) பணம் வராமல், வாடிக்கையாளர் கணக்கிலிருந்து குறைக்கப்பட்டால், புகார் கொடுத்த 12 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் வங்கிகள் ஒரு நாளைக்கு ரூ. 100 கொடுக்க வேண்டும் என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
வங்கிகள், பணம் எடுத்துக் கொள்வதற்காக, ஏ.டி.எம். கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது. இதனால் வங்கியில் கூட்டம் குறைவதுடன், அதன் ஊழியர்களுக்கு வேலைப்பளுவும் குறைகின்றது.
முன்பு கணக்கி வைத்திருந்த வங்கியின் ஏ.டி.எம் இல் இருந்து மட்டுமே பணம் எடுக்க முடியும். மற்ற வங்கியின் ஏ.டி.எம் இல் இருந்து பணம் எடுத்தால், அதற்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் எந்த வங்கியின் ஏ.டி.எம் இல் இருந்தும் பணம் எடுக்கலாம். இதற்கு கட்டணம் வசூலிக்க கூடாது என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
ஒரு வங்கி கணக்கில் பணம் வைத்திருந்து, மற்றொரு வங்கியின் ஏ.டி.எம். இல் பணம் எடுத்தால் சில நேரங்களில் பணம் வருவதில்லை. ஆனால் வாடிக்கையாளரின் கணக்கிலிருந்து பணம் குறைக்கப்பட்டு விடுகிறது.
இது தொடர்பாக வாடிக்கையாளர்கள் புகார் கொடுக்க சென்றால், அலைக்கழிக்கப்படுவதாக ஏராளமான புகார்கம் கூறப்பட்டன. இதன்படி கணக்கு வைத்திருக்கும் வங்கிக்கு சென்று புகார் கொடுக்க சென்றால், எங்கள் வங்கியில் பணம் இருக்கிறது. எங்கள் வங்கியின் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தியிருந்தால் உங்களுக்கு பணம் கிடைத்திருக்கும் என்று வங்கி அதிகாரிகள் கூறுகின்றனர்.
பணம் எடுத்த ஏ.டி.எம். இயந்திரம் சொந்தமான வங்கி கிளைக்கு சென்று கேட்டால் `உங்களுக்கு எங்கள் வங்கியில் கணக்கு இல்லை. எனவே நீங்கள் எங்கு கணக்கு வைத்திருக்கிறீர்களோ அந்த வங்கியில் சென்று கேளுங்கள் என்று வங்கி அதிகாரிகள் கூறுவதாக புகார்கள் வந்துள்ளன. இதனால் வங்கியில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள், யாரிடம் சென்று புகார் கொடுப்பது என்று புரியாமல் மன உளைச்சலுக்கும், அலைக்கழிக்கும் உள்ளானார்கள்.
இது தொடர்பாக ரிசர்வ் வங்கிக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இந்த பிரச்சனையை தீர்க்க, ரிசர்வ் வங்கி, அனைத்து வங்கிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அதில் ஒரு வங்கியில் கணக்கு வைத்திருந்து மற்றொரு வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுத்து வரவில்லையென்றால், அது பற்றி புகார் தெரிவித்த 12 வேலை நாட்களுக்குள் பணம் எடுக்கப்பட்ட ஏ.டி.எம் இயந்திரத்திற்கு உடைமையாளரான வங்கி நடவடிக்கை எடுத்து அந்த தொகையை வாடிக்கையாளருக்கு கிடைக்க செய்ய வேண்டும். இல்லையென்றால் வாடிக்கையாளர் புகார் கொடுத்து 12 நாட்களுக்கு பிறகு அந்த வாடிக்கையாளரின் கணக்கில் தினசரி ரூ.100 வங்கி செலுத்த வேண்டும்.
இந்த தொகையை வாடிக்கையாளர் கணக்கு வைத்திருக்கும் வங்கியிலிருந்து, பணத்தை கொடுக்க இயலாத ஏ.டி.எம். வங்கி பெற்றுக் கொள்ளலாம்.
இது சம்பந்தமாக வங்கிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக