சனி, 31 அக்டோபர், 2009

நெல்லை, தூத்துக்குடியில் பரவலாக மழை

நெல்லை, தூத்துக்குடியில் பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் கார் பருவ சாகுபடி செய்யும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மலைப் பகுதியில் அணைகளின் நீர் பிடிப்பு இடங்களிலும் மிதமான மழை பெய்து வருகிறது. தொடர்ந்து இப்பகுதியில் மழை நீடித்தால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கும்

நேற்று ஸ்ரீவைகுண்டத்தில் 36 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.இதனால் ஸ்ரீவைகுண்டம் அணை நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

திருச்செந்தூர் இடைத்தேர்தல் ஜனவரி 30-ந் தேதிக்குள் நடத்தப்படும் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா தகவல்

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

திருச்செந்தூர் தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்ட அனிதா ராதாகிருஷ்ணன் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததால் சட்டசபையில் திருச்செந்தூர் தொகுதிக்கான இடம் 31-7-2009 முதல் காலியாக உள்ளது. இந்த காலி இடத்துக்கு 30-1-2010க்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். தேர்தல் ஏற்பாடுகள் தொடங்கி விட்டது.

தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டரிடம், திருச்செந்தூர் தொகுதி இடைத்தேர்தல் ஏற்பாடுகளை செய்ய உத்தர விடப்பட்டுள்ளது. தேர்தல் பணியாளர்கள் மற்றும் தகவல் தொடர்புக்கான எல்லா ஏற்பாடுகளையும் விரைவில் செய்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் தொகுதியில் உள்ள பதற்றமான ஓட்டுச்சாவடிகள் பற்றிய கணக்கெடுப்பை மாவட்ட தேர்தல் அதிகாரி நடத்தி உள்ளார். ஓட்டுப்பதிவுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இடைத்தேர்தலை நடத்துவது தொடர்பாக மாவட்ட கலெக்டர் அறிக்கை கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் திருச்செந்தூர் தொகுதி வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் சமீபத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்த போது ஓட்டுப்பதிவை முழுமையாக இணையத்தளத்தில் காட்டினோம். அதே போன்று திருச்செந்தூர் தொகுதி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவையும் இணையத் தளத்தில் நேரடியாக காணலாம்.

ஓட்டுப்பதிவு நிர்வாக வசதிக்காக எஸ்.எம்.எஸ். வசதியும் பயன்படுத்தப்படும். மத்திய தேர்தல் கமிஷன் திருச்செந்தூர் தொகுதி இடைத்தேர்தல் தேதியை அறிவித்ததும் மற்ற பணிகள் தொடங்கும்.

ஓட்டுப் பதிவுக்கு தேவையான பொருட்களை தயாராக வைத்திருக்க உத்தர விடப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் மற்றும் வேட்பாளர்பட்டியலை வெளியிட தேவையான ஏற்பாடுகளை செய்து கொள்ளவும் அறி வுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த பாராளுமன்றத்தேர்தலின் போது தேர்தல் கமிஷன் மூலம் பெங்களூர் “பெல்” நிறுவனத்திடம் இருந்து மின்னணு எந்திரங்கள் வாங்கப்பட்டன. திருச்செந்தூர் இடைத்தேர்தலுக்கு அந்த மின்னணு எந்திரங்கள் பயன்படுத்தப்படும்.

வாக்காளர் பட்டியலை நிர்வாக வசதிக்காக ஒரே சர்வரில் கொண்டு வந்துள்ளோம். இதன் மூலம் போலி வாக்காளர்களை நீக்க முடியும். இது வரை 12 முதல் 15 சதவீத போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

வாக்காளர் பட்டியலை வீடு வீடாக சென்று சரி பார்த்து 100 சதவீதம் மிகச் சரியான வாக்காளர் பட்டியலை தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பெயர் இட மாற்றம் மற்றும் பெயர் நீக்குவது போன்ற பணிகள் நடத்தி முடிக்கப்படும். இந்த பணிகள் அடுத்த மாதம் (நவம்பர்) 2-வது வாரத்தில் தொடங்கி நடைபெற உள்ளது.

மின்னணு எந்திரங்களை ஓட்டுச்சாவடிக்கு கொண்டு செல்லும் போது, பெட்டிகளில் ஜி.பி.எஸ்.கருவி பொருத்தப்படும். இதன் மூலம் மின்னணு எந்திரங்கள் எங்கு உள்ளது? எந்த பகுதியில் சென்று கொண்டிருக்கிறது என்பத கண்காணித்து உறுதி செய்து கொள்ள முடியும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் நரேஷ்குப்தா கூறி உள்ளார்.

ஸ்ரீவையில் தேவர் ஜெயந்தி கொண்டாடப்பட்டது

சுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 102-வது பிறந்த நாள் விழா ஸ்ரீவையில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

ஸ்ரீவைகுண்டம் பஸ் நிலையம் அருகிலுள்ள தேவர் சிலைக்கு எம்.பி.சுடலையாண்டி எம்எல்ஏ, எஸ்.ஆர்.ஜெயதுரை எம்.பி., ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் செல்வி அருள் உள்ளிட்டோர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ஸ்ரீவைகுண்டம் பாஜக சார்பில் தேவர் சிலைக்கு மாவட்டச் செயலர் கொற்கை மாரிமுத்து, அமைப்பு பொதுச் செயலர் ராஜா உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

துபாய் இந்திய‌ ச‌மூக‌ ந‌ல‌ அமைப்பின் இணைய‌த்த‌ள‌ம்

துபாய் இந்திய‌ க‌ன்ச‌ல் ஜென‌ர‌ல் ஆத‌ர‌வுடன் செய‌ல்ப‌ட்டு வ‌ரும் இந்திய‌ ச‌மூக‌ ந‌ல‌ அமைப்பின் இணைய‌த்த‌ள‌ (www.icwcdubai.com) துவ‌க்க‌ விழா வியாழ‌க்கிழ‌மை ந‌டைபெற்ற‌து.

இணைய‌த்த‌ள‌த்தை இந்திய‌ வெளியுற‌வுத்துறை இணைய‌மைச்ச‌ர் ச‌சி த‌ரூர் துவ‌க்கி வைத்தார். அவ‌ர் த‌ன‌து உரையில் இந்திய‌ ச‌மூக‌ ந‌ல‌ அமைப்பின் ப‌ணிக‌ளைப் பாராட்டினார்.

நிக‌ழ்வில் இந்திய‌ தூத‌ர் த‌ல்மிஷ் அஹ்ம‌த், க‌ன்ச‌ல் ஜென‌ர‌ல் வேணு ராஜாம‌ணி, இந்திய‌ன் முஸ்லிம் அசோஷியேஷ‌ன் பொதுச்செய‌லாள‌ர் ஏ. லியாக்க‌த் அலி, ம‌க்க‌ள் தொட‌ர்பு செய‌லாள‌ர் ஏ. முஹ‌ம்ம‌து தாஹா, துபாய் த‌மிழ்ச் ச‌ங்க‌ பொதுச்செய‌லாளர் ஜெக‌ந்நாத‌ன், துபாய் த‌மிழ் ம‌க‌ளிர் ச‌ங்க‌ நிர்வாகிக‌ள், ப‌ல்வேறு இந்திய‌ அமைப்புக‌ளின் நிர்வாகிக‌ள் உள்ளிட்ட‌ ப‌ல‌ர் ப‌ங்கேற்ற‌ன‌ர்.

வியாழன், 29 அக்டோபர், 2009

நெல்லையில் பள்ளி பேருந்து மீது தனியார் பேருந்து மோதல்: மாணவிகள் உட்பட 3பேர் பலி


திருநெல்வேலியில் இன்று காலை பள்ளி பேருந்து மீது தனியார் பேருந்து மோதியதில் 11ம் வகுப்பு மாணவி, பேருந்தின் டிரைவர் ஆகியோர் பரிதாபமாக பலியாகினர்.

திருநெல்வேலி, பாளையில் லட்சுமிராமன் மெட்ரிகுலேசன் பள்ளி இயங்கி வருகிறது. இன்று காலையில் பள்ளியிலிருந்து புறப்பட்ட பள்ளி பேருந்து திருநெல்வேலி மாநகர் பகுதிகளில் பள்ளி மாணவ, மாணவிகளை ஏற்றிக் கொண்டு பாளையங்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்தது. கே.டி.சி. நகர் அருகே, தூத்துக்குடியிலிருந்து திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தும் பள்ளி பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது.

இதில் அப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வரும் கற்பக வள்ளி என்ற மாணவி,இந்துஜா(16)என்ற பிளஸ் 1 மாணவியும், பேருந்தின் டிரைவர் மாரியப்பன் ஆகியோர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 20 மாணவ, மாணவிகள் காயம் அடைந்துள்ளனர்.

மதிமுக, த.மு.மு.க., தவ்ஹீத் ஜமாத் உள்ளிட்ட அமைப்புக்களை சேர்ந்தவர்கள் ஆஸ்பத்திரிக்கு விரைந்துவந்து ரத்ததானம் வழங்கி உதவினர். பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தகவல் : செல்வா, திருநெல்வேலி

எம்பிபிஎஸ், பிஇ- முஸ்லீம் மாணவர் எண்ணிக்கை 72% அதிகரிப்பு

முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கப்பட்டதையடுத்து மருத்துவ படிப்பில் அந்த சமூக மாணவர்கள் சேருவது 74 சதவீதமும், பொறியியல் படிப்பில் இஸ்லாமியர்கள் சேருவது 72 சதவீதமும் அதிகரித்துள்ளது.

இது குறித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:

இஸ்லாமிய சமுதாயத்தினரோடு நமது திராவிட இயக்கமும், நானும் கொண்டுள்ள தொய்வில்லாத தொடர்பும், உறவும் இன்று நேற்று ஏற்பட்டதல்ல. 70 ஆண்டுகளுக்கு முன்பு, பள்ளி செல்லும் மாணவனாக இருந்தபோதே, திருவாரூரிலே நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாட்டிலேயே - நான் கொடிபிடிக்கும் சிறுவனாக, பச்சைப் பிறைக் கொடியை கையிலே ஏந்துகின்ற சிறுவனாக, அந்த மாநாட்டிலே கலந்து கொண்டேன் என்பதை நான் பெருமையோடு நினைவு கூர்கிறேன்.

மாணவப் பருவத்திலே என்னுள் முகிழ்த்த அந்த உறவும், உணர்வும் இன்றைக்கு செழித்துப் பசுமையாகப் பரவியிருக்கின்றன. எனவே நான், இளமைப் பருவத்திலேயே இஸ்லாமிய சமுதாயத்தினரின் எண்ணற்ற நிகழ்ச்சிகளில், கூட்டங்களில், மாநாடுகளில் கலந்து கொண்டிருக்கிறேன்.

நான் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோதெல்லாம் அந்த சமுதாயத்தினருக்கு ஆற்ற வேண்டிய கடமைகளைத் தவறாது ஆற்றி வந்திருக்கிறேன்.

இளமைக் காலத்திலேயே இஸ்லாமிய சமுதாயத்தினர்மீது நான் கொண்டிருந்த மதிப்பின் தொடர்ச்சியாக காயிதே மில்லத் மீது நான் கொண்டிருந்த அன்புக்கும், பாசத்துக்கும் அடையாளமாக- இஸ்லாமிய சமுதாயத்தினருக்கு வாய்ப்பு கிடைத்திடும் போதெல்லாம் பல்வேறு நன்மைகளை வழங்கியிருக்கிறேன்.

1969ல் மீலாது நபிக்கு முதன் முதல் அரசு விடுமுறை; முந்தைய அதிமுக அரசு 2001ல் ரத்து செய்த மீலாது நபி அரசு விடுமுறையை 15.11.2006 ஆணை மூலம் மீண்டும் விடுமுறை நாளாக அறிவித்தது; 1973ல் உருது பேசும் லப்பைகள், தெக்கனி முஸ்லிம்கள் ஆகியோரைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது;

1974ல் சென்னை-அண்ணாசாலை அரசினர் மகளிர் கல்லூரிக்கு "காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி'' எனப் பெயர் சூட்டியது; 1989- இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மையினர் சமுதாய மக்கள் பெரும்பயன் எய்திடும் வகையில் சிறுபான்மையினர் நல ஆணையம் உருவாக்கியது;

1999ல் வக்பு வாரியச் சொத்துக்களைப் பராமரிப்பதற்கென முதன்முறையாக 40 லட்ச ரூபாய் வழங்கியது, 1999ல் "தமிழ்நாடு சிறுபான்மையினர் மேம்பாட்டுக் கழகம்'' என ஒரு அமைப்பினை உருவாக்கியது;

2000ல் உலமா ஓய்வூதியத் திட்டத்தை தர்க்காக்களில் பணிபுரியும் முஜாவர்களுக்கும் நீட்டிப்பு செய்தது, 2000ல் இஸ்லாமியர்களின் நீண்டநாள் கோரிக்கை ஏற்கப்பட்டு, 21.7.2000 அன்று உருது அகடமியைத் தொடங்கியது;

2001ல் காயிதே மில்லத் மணிமண்டபம் சென்னையில் அமைத்திட 25.2.2001 அன்று அடிக்கல் நாட்டி, திறக்கப்பட ஆவன செய்தது; சென்னைப் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய ஆய்வு மையம் ஏற்படுத்தியது;

சிறுபான்மையினரின் நலனுக்கென தனி இயக்குநரகம் ஒன்றை 2007ல் அமைத்தது; உலமா மற்றும் பணியாளர்கள் நல வாரியம் என ஒரு வாரியத்தை 2009, மார்ச் திங்களில் ஏற்படுத்தியது என்று இஸ்லாமிய சமுதாயத்திற்கு கழக அரசு வழங்கியுள்ள சலுகைகளும், நன்மைகளும் கணக்கிலடங்காதவை.

1947ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்றபிறகு, 1947ம் ஆண்டு முதல் 1962ம் ஆண்டு வரையில், தமிழகத்தில் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த யாரும் அமைச்சராக இல்லை. அண்ணா குரல் எழுப்பிய பின்னர் தான் 1962ல் கடையநல்லூர் மஜீத் காங்கிரஸ் அமைச்சரவையிலே இடம்பெற்றார். திமுக தான் முதன்முதலாக தமிழகச் சட்டமன்ற மேலவைக்கு முஸ்லிம் உறுப்பினர் ஒருவரை, அதாவது திருச்சி ஜானி பாயை நியமித்தது.

அப்துல் சமதுவை மாநிலங்களவை உறுப்பினராக ஆக்கியதும் திமுகதான். 1967ம் ஆண்டு திமுக சார்பில் பெரியகுளம் மேத்தா, நெல்லை கதிரவன், சாதிக்பாட்சா ஆகிய மூவர் முஸ்லிம் சமுதாயத்தின் சார்பில் சட்டப்பேரவை உறுப்பினர்களாக ஆனார்கள்.

2001 முதல் 2006 வரை அதிமுக ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது, முதலில் ஒரு ஆறு மாதகாலம் முஸ்லிம் சமுதாயத்தின் பிரதிநிதியாக அன்வர்ராஜா இடம் பெற்றிருந்தார்; ஆனால் அதற்கு பிறகு முஸ்லிம் பிரதிநிதியே இல்லாமல்தான் அதிமுக அமைச்சரவை நடைபெற்றது.

தற்போது 2006ல் பொறுப்பேற்ற திமுக ஆட்சியில் இரண்டு முஸ்லிம்கள், அதாவது உபயதுல்லா, மைதீன்கான் ஆகியோர் அமைச்சர்களாக இருந்து வருகின்றனர். முஸ்லிம் சமுதாயத்தினருக்கு பிரதிநிதித்துவம் இல்லாத திமுக அமைச்சரவையே இதுவரை இருந்ததில்லை என்ற உண்மைகள் அனைத்தையும் அந்த சமுதாயத்தினர் நன்கறிவார்கள்.

சிறுபான்மை முஸ்லிம்களுக்கு கல்வி நிலையங்களிலும், அரசுப் பணிகளிலும் தனியே இடஒதுக்கீடு வேண்டுமென்ற கோரிக்கை நீண்டகாலமாகவே இருந்து வந்தது. அதை ஏற்று, அண்ணாவின் 99ம் ஆண்டு பிறந்தநாள் பரிசாக, பிற்படுத்தப்பட்டோருக்கான 30 சதவீத இடஒதுக்கீட்டிலிருந்து, தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம்பெற்றுள்ள முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதம் தனி இடஒதுக்கீடு வழங்கி, 15.9.2007 அன்று அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

மருத்து படிப்பில் 74 சதவீதம்:

இப்படி இஸ்லாமியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கியதன் காரணமாக, கல்வி நிலையங்களில் அவர்கள் பெற்றுள்ள இடங்களின் எண்ணிக்கை பெருமளவுக்கு அதிகரித்துள்ளன.

எம்.பி.பி.எஸ். மருத்துவப் பட்டப்படிப்பைப் பொறுத்தவரை, இஸ்லாமியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு முன்; அதாவது, 2006-2007ம் ஆண்டில் அவர்கள் பெற்ற இடங்களின் எண்ணிக்கை 46.

2007-2008ம் ஆண்டில் அவர்களுக்கு கிடைத்த இடங்கள் 57. ஆனால், அவர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு பிறகு- 2008-2009ம் ஆண்டில் கிடைத்து்ள இடங்கள் 78.

2009-2010ம் ஆண்டில் கிடைத்துள்ள இடங்கள் 80.

அதாவது, மருத்துவப் பட்டப்படிப்பைப் பொறுத்தவரை இஸ்லாமிய மாணவர்கள் தனி இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு முன்பு பெற்றதைவிட 74 சதவீத அதிகமான இடங்களை தனி இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்குப் பின்பு பெற்றிருக்கிறார்கள்.

பொறியியல் படிப்பில் 72 சதவீதம்:

அதைப் போலவே, பி.இ. பொறியியல் பட்டப்படிப்பைப் பொறுத்தவரை, இஸ்லாமியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு முன், அதாவது, 2007-2008ம் ஆண்டில் அவர்களுக்கு கிடைத்த இடங்கள் 2,125.

ஆனால், இஸ்லாமியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு பிறகு- 2008-2009ம் ஆண்டில் அவர்களுக்கு கிடைத்த இடங்கள் 3,288.

2009-2010ம் ஆண்டில் அவர்களுக்கு கிடைத்த இடங்கள் 3,655.

அதாவது, பொறியியல் பட்டப்படிப்பைப் பொறுத்தவரை இஸ்லாமிய மாணவர்கள் தனி இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு முன்பு பெற்றதைவிட 72 சதவீதத்திற்கு அதிகமான இடங்களை தனி இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு பின்பு பெற்றிருக்கிறார்கள்.

இஸ்லாமியர்களுக்கு கழக அரசு வழங்கிய தனி இடஒதுக்கீட்டின் காரணமாக இப்பொழுது அவர்கள் பெற்றுள்ள வெற்றி, எதிர்காலத்தில் அவர்கள் பெறவேண்டிய பல வெற்றிகளுக்கு அடிப்படையாக அமைந்திட வேண்டுமென்பதே எனது ஆசை.

சிறுபான்மையினர் என்பதால் இஸ்லாமியர்களிடம் நாம் கொண்டிருக்கும் அக்கறையின் காரணமாக, அவர்களுக்கு பல்வேறு நன்மைகளைச் செய்திருந்தாலும்; இப்போதும் நான் சொல்லுகின்றேன்- எல்லாவற்றையும் நாம் செய்து முடித்து விடவில்லை.

அவர்களது மேம்பாட்டுக்கு நாம் ஆற்றிட வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது!. நம்மைப் பொறுத்தவரையில், சமூக நீதிக்கான பயணம் என்பது "நீதிக்கட்சி'' காலத்திலேயே தொடங்கிய நெடிய பயணமல்லவா!.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

ஷார்ஜா-வில் நடைபெற்ற இஸ்லாமிய அறிவரங்கம்


நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கை முறையிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய படிப்பினைகள் மற்றும் பின்பற்ற வேண்டிய அவசியங்களை வலியுறுத்தும் இஸ்லாமிய அறிவரங்கம் நிகழ்ச்சி அக்டோபர் 23, 2009 வெள்ளிக்கிழமை அன்று ஷார்ஜா ரோலா சதுக்கத்தில் அமைந்துள்ள அல் நஜஃப் ரெஸ்ட்டாரண்ட் அரங்கத்தில் நடைபெற்றது.

ஷார்ஜா மண்டல முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியை மண்டலப் பொருளாளர் அபுல் ஹசன் துவக்கிவைத்தார்.

நபி (ஸல்) அவர்கள் ஒரு அழகிய முன் மாதிரி என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த அறிவரங்கத்தில் அவருடைய குடும்ப வாழ்க்கையைப் பற்றி மௌலவி ஹிதாயத்துல்லாஹ் நூரி அவர்களும், அரசியல் வாழ்க்கைளைப் பற்றி யாசின் நூருல்லாஹ் அவர்களும், இறையச்சம் பற்றி அப்துல் ரஹ்மான் அவர்களும், சமுதாயப் பணி பற்றி அப்துல் ஹாதி அவர்களும், குண நலன்கள் பற்றி ஹ_சைன் பாஷா அவர்களும், கொடைத்தன்மை பற்றி நாசர் அலிகான் அவர்களும் எடுத்துரைத்தனர்.. அமீரக முமுக பொருளாளர் பொறியாளர் ஜெய்லானி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.


மண்டலத் தலைவர் நெல்லிக்குப்பம் இக்பால் தலைமையிலான குழுவினர் நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். உலகம் போற்றும் மாமனிதரின் வாழவியல் நெறியை பல்வேறு கோணங்களில் தெரிந்துக் கொண்டது மகிழ்ச்சி அளிப்பதாக கலந்துக் கொண்டவர்கள் கருத்து தெரிவித்தனர்.

தகவல்: உசைன் பாட்சா, சார்ஜா.

ஸ்ரீவையில் "ஸ்ரீவைகுண்டம் பாசன சங்க" நிர்வாகிகள் தேர்வு

தாமிரபரணி ஆற்றுப்பாசனத்தில் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு வடகால், மருதூர் அணைக்கட்டு கீழக்கால் பாசன விவசாய சங்க நிர்வாகிகள் தேர்தல் ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

வடகால் சங்கத் தலைவராக உதயசூரியன், உறுப்பினர்களாக தர்மராஜ், நடராஜன், குமாரசாமி, சுந்திரபாண்டி, ஜெயகோவிந்தன் உள்ளிட்டோர் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மருதூர் அணைக்கட்டு கீழக்கால் பாசன சங்கத் தலைவர் பதவிக்கு வைகுண்டம், சீனிபாண்டி ஆகியோர் போட்டியிட்டனர். 12 பேர் வாக்களித்தனர். இருவரும் சமமான வாக்குகளைப் பெற்றதால் திருவுளச்சீட்டு மூலம் சீனிபாண்டி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

உறுப்பினர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதாக வட்டாட்சியர் தெரிவித்தார்.

நெல்லை ராணி அண்ணா கல்லூரியில் நவ. 4-ல் வேலைவாய்ப்பு முகாம்

திருநெல்வேலி பேட்டை ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் நவம்பர் 4-ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் மு. ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருநெல்வேலி மாவட்ட கல்லூரிகளில் 2006 ஆம் ஆண்டு முதல் 2009 ஆண்டு வரை பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., பி.பி.ஏ., பி.சி.ஏ., எம்.ஏ., எம்.எஸ்சி., எம்.காம்., எம்.பி.ஏ., எம்.சி.ஏ. ஆகியவை படித்துள்ளவர்களும், இப் படிப்புகளை இறுதியாண்டு படிப்பவர்களும் திருநெல்வேலி பேட்டை ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் நவம்பர் 4 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம்.

இதேபோல, பொறியியல் பட்டதாரிகளுக்கும், பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. படித்தோருக்கும் திருநெல்வேலி அருகே சர்.சி.வி. ராமன் நகரில் உள்ள ஐன்ஸ்டின் பொறியியல் கல்லூரியிலும், பாவூர்சத்திரத்தில் உள்ள எம்.எஸ்.பி. வேலாயுதநாடார் லட்சுமிதாய் பாலிடெக்னிக் கல்லூரியிலும் நவம்பர் 5 ஆம் தேதி காலை 9 மணிக்கு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும்.

இதில் கலந்துகொள்ள விரும்பும் மாணவ, மாணவிகள் தாங்கள் படித்த கல்லூரியில் விண்ணப்ப படிவத்தை பெற்று, முதல்வரின் கையெழுத்தோடு இம் மாதம் 30 ஆம் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், திருநெல்வேலி என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும், தகவலுக்கு பொறியியல் துறையைச் சார்ந்தோர் 94434 - 24479, பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. படித்தோர் 98944 - 06548 ஆகிய செல்போன் எண்களை தொடர்பு கொள்ளலாம் என்றார் ஜெயராமன்.

ஸ்ரீவையில் கிராமக் கோயில் அர்ச்சகர்கள் ஆலோசனை கூட்டம்

கிராமக் கோயில் அர்ச்சகர்கள் பேரவையின் மாவட்ட நலவாரிய ஆலோசனை குழு கூட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் நடந்தது.

பென்சன், நலவாரிய சலுகைகள் பற்றி மாநில அமைப்பாளர் ஜெகதீசன், மாநில பயிற்சி பொறுப்பாளர் சௌந்திரராஜன், அருள்வாக்கு அருளும் அருளாளர்கள் பேரவையின் மாநில இணை அமைப்பாளர் மாரியப்பன், மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன், சுப்பையா, மாரியப்பன், வீரராஜ், சுந்தராஜன், பகவதி, முத்துக்குமார், மனோகரமுத்து, நடராஜன், வீரன், செந்தில் ஆறுமுகம், கந்தசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

திங்கள், 26 அக்டோபர், 2009

ஸ்ரீவை கே.ஜி.எஸ் பள்ளி மாணவிக்கு பாராட்டு

ஸ்ரீவைகுண்டம் பள்ளி மாணவி ஆற்றிவரும் சேவையை திருநெல்வேலி சட்டக் கல்லூரி மாணவர்கள் பாராட்டியுள்ளனர்.

ஸ்ரீவைகுண்டம் கே.ஜி.எஸ். அரசு மேல்நிலைப் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி எம். ராமலட்சுமி, சிறு வயது முதலே தனது பெற்றோர்கள் செலவுக்கு கொடுக்கும் பணத்தை சேமித்து, நாட்டில் ஏற்படும் வெள்ளம், புயல், சுனாமி போன்ற இயற்கைப் பேரிடர் மீட்பு நிதிக்கு அனுப்பி வருகிறார்.

அவரது இச் சேவையைப் பாராட்டி, திருநெல்வேலி சட்டக் கல்லூரி மாணவர் என். சுவாமிநாதன், தனது சேமிப்பில் இருந்து மாணவிக்கு பரிசு வழங்கினார்.

இந் நிகழ்ச்சியில் அரசு சட்டக் கல்லூரி முதல்வர் எபனேசர் ஜோசப், பேராசிரியர்கள் சந்தோஷ்குமார், முகம்மது, கந்தகுமார், ராமலட்சுமியின் தந்தை பாரதிமுருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.

காயல்பட்டினத்தில் ஓய்வு பெற்ற இமாம் கெüரவிப்பு

காயல்பட்டினத்தில் ஓய்வு பெற்ற இமாம் பணமுடிப்பு வழங்கி கெüரவிக்கப்பட்டார்.

காயல்பட்டினம் செய்து ஸலாஹூத்தீன் பள்ளி என்ற மேலப் பள்ளிவாசலில் கடந்த 20 ஆண்டுகளாக பணியாற்றி ஓய்வு பெற்ற இமாம் தாழையூத்தைச் சேர்ந்த முஹம்மத் கானுக்கு பண முடிப்பு வழங்கி கெüரவிக்கப்பட்டது.

விழாவிற்கு பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி தலைவர் பி.எஸ்.ஏ.பல்லாக்கு லெப்பை தலைமை வகித்தார்.

பள்ளியின் முன்னாள் முத்தவல்லி பி.எம்.ஏ.முஹ்யித்தீன் அப்துல் காதிர் இமாமுக்கு பொன்னாடை போர்த்தி கெüரவித்தார். நிர்வாகக் குழு உறுப்பினர் எம்.எஸ். ஸதக்கத்துல்லாஹ் வாழ்த்திப் பேசினார்.

பள்ளித் துணைத் தலைவர் எஸ்.எஸ்.எம்.புஹாரி பள்ளி சார்பில் இமாமுக்கு பணமுடிப்பை வழங்கினார்.

விழாவில் நிர்வாகக் குழு உறுப்பினர் இல்யாஸ், மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க சபைச் செயலர் பாளையம் இப்ராகிம், இலங்கை கொழும்பு அல்ஜாமி உல் அள்ஃபர் பி.எம்.ஏ.பல்லாக் லெப்பை, முஹியத்தீன் டிவி இயக்குநர் ஜே.எம்.அப்துர் ரஹீம் மற்றும் ஜமா அத்தினர் கலந்து கொண்டனர்.

சவுதி பெண் பத்திரிகையாளருக்கு 60 கசையடி

துபாய் : "டிவி'யில் செக்ஸ் பற்றிய நிகழ்ச்சி தயாரித்த பெண் பத்திரிகையாளருக்கு சவுதி அரேபியாவில் 60 கசையடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. லெபனான் நாட்டு "டிவி' சேனல் கடந்த ஜூலை மாதம் ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்பியது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அப்துல் ஜவாத் என்பவர் திருமணத்துக்கு முந்தைய தனது செக்ஸ் வாழ்க்கை பற்றி பெருமையாக பேசினார்.

இந்த நிகழ்ச்சி சவுதி அரேபியாவில் ஒளிபரப்பானது. இதற்காக ஜவாத்துக்கு ஐந்தாண்டு சிறையும், ஆயிரம் கசையடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை தயாரித்த பெண் பத்திரிகையாளர் ரோசனா அல் யாமி என்பவருக்கு 60 கசையடி அறிவிக்கப்பட்டுள்ளது. செக்ஸ் பற்றி பகிரங்கமாக "டிவி' மற்றும் ரேடியோவில் பேசுவது சவுதியில் சட்ட விரோதமாக கருதப்படுகிறது. "போல்டு ரெட் லைன்' என்ற பெயரில் லெபனான் "டிவி' யில் இந்த நிகழ்ச்சி தொடர்ந்து ஒளிபரப்பப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில், சவுதியை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு தங்கள் செக்ஸ் வாழ்க்கை பற்றி பெருமையாக பேசியது குற்றமாக கருதப்பட்டு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

"பத்திரிகையாளர் என்ற முறையில் தனது தொழிலை ரோசனா செய்துள்ளார். ஒரு பெண் பத்திரிகையாளருக்கு 60 கசையடி அறிவித்துள்ளதை எதிர்த்து மேல் முறையீடு செய்ய உள்ளோம்' என, ரோசனாவின் வக்கீல் தெரிவித்துள்ளார்.

காயல் ஷேக்முஹம்மது இசை பயணம் நூல் வெளியீட்டு விழா

இஸ்லாமிய பாடகர் காயல் ஷேக்முஹம்மதுவின் இசைபயணம் வாழ்க்கை வரலாறு நினைவு மலர் வெளியீட்டு விழா வரும் 31ம் தேதி சென்னையில் நடக்கிறது.

பிரபல தென்னிந்திய இஸ்லாமிய பாடகரும், சினிமா பாடகருமான காயல் ஷேக்முஹம்மது இசைபயணம் வாழ்க்கை வரலாற்று நினைவு மலர் வெளியீட்டு விழா வரும் 31ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடக்கிறது. விழாவிற்கு திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஆலிஜனாப் நாகூர் சச்சாமுபாராக் தலைமை வகிக்கிறார்.

ழ்நாடு அரசு சிறுசேமிப்பு துறை துணை தலைவர் ரஹ்மான்கான் நினைவுமலரை வெளியிடுகிறார். நினைவுமலர் வெளியீட்டுவிழாவில் அமைச்சர்கள், எம்பிக்கள் பலர் கலந்துகொள்கின்றனர்.

ஞாயிறு, 25 அக்டோபர், 2009

சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் நாக் குழு நாளை ஆய்வு

பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் தேசிய தர மதிப்பீட்டுக் (நாக்) குழுவினர் திங்கள், செவ்வாய் ஆகிய இரண்டு தினங்கள் தர மதிப்பீடு செய்ய உள்ளனர்.

இதுகுறித்து கல்லூரியின் முதல்வர் முனைவர் ஹெச். செய்யது உதுமான், ஒருங்கிணைப்பாளர் ஏ. நிசமத்துல்லா ஆகியோர் சனிக்கிழமை கூறியதாவது: எமது கல்லூரிக்கு 2003 ஆம் ஆண்டில் "நாக்' குழு வழங்கிய தர மதிப்பீடு சான்றிதழ் இந்த ஆண்டுடன் காலாவதியாகிறது. எனவே, அங்கீகாரத்தை புதுப்பிப்பதற்காக அக் குழுவினர் கல்லூரியில் உள்ள வசதிகளை ஆய்வு செய்ய உள்ளனர். அதன் அறிக்கையை "நாக்' அமைப்பிடம் தாக்கல் செய்வார்கள்.

2003-ம் ஆண்டு "நாக்' அங்கீகாரம் பெற்ற பின்பு 6 ஆண்டுகளில் தன்னாட்சி, ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ், பல்வேறு உள்கட்டமைப்புகள், புதிய பாடத் திட்டங்கள், ஆசிரியர் நியமனம், கிராம சீரமைப்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் கல்லூரி வளர்ச்சி கண்டுள்ளது.

எனவே, இந்த முறை மதிப்பீடு செய்யும் "நாக்' குழுவினர் கல்லூரிக்கு "ஏ கிரேடு' வழங்குவார்கள் என எதிர்பார்க்கிறோம் என்றனர்.

"நாக்' குழுவினரின் தர மதிப்பீட்டுக்கான ஏற்பாடுகளை கல்லூரித் தாளாளர் பத்ஹூர் ரப்பானி வழிகாட்டுதலின்பேரில் கல்லூரி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

ரகசிய குறியீடு இல்லாத செல்போன் இறக்குமதிக்கு தடை!

ரகசிய குறியீடு இல்லாமல் வரும் சீன, கொரிய, தைவான் மற்றும் தாய்லாந்து செல்போன்களுக்கு இந்தியாவில் விதிக்கப்பட்ட தடை அமலுக்கு வந்தது. இதனை மத்திய வெளிநாட்டு வர்த்தக இயக்குநர் அறிவித்துள்ளார்.

கொரியா, சீனா , தாய்லாந்து மற்றும் தைவான் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் செல்போன்கள் இந்தியாவில் குறைந்த விலைக்கு விற்கப்பட்டு வந்தன.

இந்த மாதிரி போன்கள் கிட்டத்தட்ட 10 கோடிக்கும் மேல் புழக்கத்தில் உள்ளதாக கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

மாதந்தோறும் புதிதாக 58 லட்சம் பேர், இந்த போன்களை வாங்கி பயன்படுத்தி வருவதாகவும் தெரிய வந்துள்ளது.

இந்த வகை செல்போன்களில், 'எலக்ட்ரானிக் சீரியல் நம்பர்'கள் (இ.எஸ்.என்) மற்றும் 'மொபைல் எக்விப்மெண்ட் ஐடெண்டிபைர்' (எம்.இ.ஐ.டி) என்று அழைக்கப்படும் ரகசிய குறியீட்டு எண்கள் பெரும்பாலும் இருப்பதில்லை.

இத்தகைய போன்களை ட்ரேஸ் செய்வதும் கடினம். இதனால் இவற்றை தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடையோர் அதிகம் பயன்படுத்த வாய்ப்பு ஏற்படும்.

ஆகவே இந்த போன்களுக்கு இந்தியாவில் அடியோடு தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்து சில மாதங்களுக்கு முன் அறிவிப்பு வெளியிட்டது.

தற்போது இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வந்திருப்பது மத்திய வெளிநாட்டு வர்த்தக இயக்குநர் உறுதிப்படுத்தியுள்ளார்

வாசிம்அக்ரம் மனைவி சென்னையில் மரணம்

வாசிம்அக்ரம் மனைவி சென்னையில் மரணம்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் மனைவி கியூமா மரணமடைந்தார். சிறுநீரக கோளாறு காரணமாக அவர், சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப் பட்டு இருந்தார்.அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று காலை அவரது உடல் நிலை மோசமடைந்தது. மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்ச‌ை அளித்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி கியூமா மரணமடைந்தார்.

செய்தி : நக்கீரன்

ஸ்ரீவை.,டி.வி.ஆர்.கே.பள்ளி மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் சாதனை படைத்தது

ஸ்ரீவைகுண்டம் டி.வி.ராமசுப்பையர் கிருஷ்ணம்மாள் இந்து வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியர்கள் தூத்துக்குடி கால்டுவெல் இன்ஜினீயரிங் கல்லூரியில் நடந்த மாவட்ட அளவிலான செஸ் போட்டிகளில் அதிக அளவில் வெற்றி பெற்று சாதனை படைத்தனர்.

இதில் டி.வி.ராமசுப்பையர் கிருஷ்ணம்மாள் இந்து வித்யாலாயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலிருந்து கலந்து கொண்ட மாணவ மாணவியர்களில் வயது வாரியாக நடந்த போட்டிகளில் நான்கு முதல் பரிசுகளையும் ஒரு மூன்றாம் பரிசினையும் வென்று பள்ளிக்குப் பெருமை சேர்த்தனர்.

மாணவ மாணவியரின் வயது வாரியாக நடந்த போட்டிகளில் வயது 7 பிரிவில் இரண்டாம் வகுப்பு மாணவன் ஜெயப்பிரகாஸ் முதல் பரிசினையும், வயது 9 பிரிவில் நான்காம் வகுப்பு மாணவி குமுதவல்லி முதல் பரிசினையும், வயது 13 பிரிவில் எட்டாவது வகுப்பு பயிலும் மாணவன் இசக்கியப்பன் முதல் பரிசினையும், இதே பிரிவில் எட்டாம் வகுப்பு மாணவன் அருண்சுந்தர் மூன்றாம் பரிசினையும், வயது 17 பிரிவில் பத்தாம் வகுப்பு பயிலும் சுரேஷ்கிருஷ்ணா முதல் பரிசினையும் பெற்றனர்

வெற்றி பெற்ற மாணவ மாணவியர்கள் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகளை தாளாளர் சங்கரபாண்டியன் முதல்வர் ஜெயராணி ஆகியோர் பாராட்டினர்.

வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் அனைவருக்கும் ஸ்ரீவை மக்களின் உள்ளங்கனித்த வாழ்த்துக்கள்.

சனி, 24 அக்டோபர், 2009

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழா: 312 பேர் நேரடியாக பெற்றனர்


திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 17-வது பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு, பல்கலைக்கழக இணைவேந்தரும், மாநில உயர்கல்வித் துறை அமைச்சருமான க. பொன்முடி தலைமை தாங்கி 312 பேருக்கு நேரடியாக பட்டங்களையும், பதக்கங்களையும் வழங்கிப் பேசினார்.

பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அரங்கில் நடைபெற்ற இந்த விழாவில், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஒüவை நடராஜன் பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தினார்.

88 பெண்களும், 107 ஆண்களும் என மொத்தம் 195 பேர் பிஎச்.டி. பட்டம் பெற்றனர். முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் பெறுவோராக 24 பெண்கள், 3 ஆண்கள் என மொத்தம் 27 பேர் எம்.ஃபில் பட்டமும், 42 பெண்கள், 6 ஆண்கள் என மொத்தம் 48 பேர் முதுகலைப் பட்டமும், 41 பெண்கள், 1 ஆண் என மொத்தம் 42 பேர் இளங்கலைப் பட்டமும் பெற்றனர். பதக்கம் பெற்ற 117 பேரில், 107 பேர் பெண்கள். 10 பேர் மட்டுமே ஆண்கள்.

இவர்கள் தவிர, தபால் மூலம் பட்டம் பெறுவோரில் 528 பேர் எம்.ஃபில் பட்டமும், 4,346 பேர் முதுகலைப் பட்டமும், 14,550 பேர் இளங்கலைப் பட்டமும் என மொத்தம் 19,424 பேர் பட்டம் பெறுகின்றனர்.

இந்த ஆண்டு நேரடியாகவும், தபால் மூலமும் மொத்தம் 19,736 பேர் பட்டம் பெற்றுள்ளனர். இவர்களில், தொலைநெறி தொடர்கல்வி மூலம் பயின்று பட்டம் பெறுவோரும் அடங்குவர்.

காயல்பட்டினத்தில் ஐக்கிய சமாதான அறக்கட்டளை அலுவலகம் திறப்பு

காயல்பட்டினத்தில் ஐக்கிய சமாதான அறக்கட்டளை அலுவலக திறப்பு விழா நடைபெற்றது.

வள்ளல் சீதக்காதி திடலில் நடைபெற்ற விழாவிற்கு அறக்கட்டளைத் தலைவரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உலமாக்கள் அணி மாநில அமைப்பாளருமான எம்.ஹாமீத் பக்ரீ ஆலிம் மன்பஈ தலைமை வகித்தார்.

தாருத்தியான் திருக்குர்ஆன் மனனப் பயிலக மாணவர் பஷீர் ஜஃப்ரான் இறைமறை ஓதி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்ட ஜமா அத்துல் உலமா சபை தலைவர் எஸ்.எம்.முஹம்மது ஃபாரூக், ஹாமிதிய்யா பேராசிரியர் எஸ்.ஹெச்.பாஷில் அஸ்ஹப், எஸ்.கே. முஹம்மது சாலிஹ், அறக்கட்டளை தலைமை நெறியாளர் லியாகத் அலி ஆகியோர் பேசினர்.

விழாவில், ஏழை, எளியோருக்கு முன்னாள் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தையல் இயந்திரங்களை வழங்கினார்.

முஸ்லிம் லீக் செயலர் அமானுல்லாஹ், துணைச் செயலர் அபூசாலிஹ், திமுக நகர செயலர் மு.த.ஜெய்னுத்தீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக பொருளாளர் அப்துல் ஹை வரவேற்றார். இறுதியில் துணை செயலர் ஏ.சுலைமான் சேட் நன்றி கூறினார்.

துபாயில் ச‌ர்வ‌தேச‌ க‌ணினிக் க‌ண்காட்சி


துபாயில் ஜிடெக்ஸ் என்ற‌ழைக்க‌ப்ப‌டும் ச‌ர்வ‌தேச‌ அள‌விலான‌ க‌ணினிக் க‌ண்காட்சி அக்டோப‌ர் 18 முதல் 22 வ‌ரை ந‌டைபெற்ற‌து.


இக்க‌ண்காட்சியில் ப‌ல்வேறு நாடுக‌ளைச் சேர்ந்த‌ முன்ன‌ணி நிறுவ‌ன‌ங்க‌ள் ப‌ல்வேறு ச‌லுகைக‌ளுட‌ன் த‌ங்க‌ள‌து நிறுவ‌ன‌ மின்ன‌ணு சாத‌ன‌ங்க‌ளை போட்டி போட்டுக்கொண்டு விற்ப‌னை செய்த‌ன‌.


29 ஆவ‌து வ‌ருட‌மாக‌ ந‌டைபெறும் இக்க‌ண்காட்சியில் ப‌ல்வேறு நாடுக‌ளைச் சேர்ந்த‌வ‌ர்க‌ள் ப‌ங்கேற்ற‌ன‌ர்.
சென்னையில் இருத்து ஹஜ் பயணிகளின் முதல் விமானம் நேற்று புறப்பட்டது

சென்னையிலிருந்து 417 ஹஜ் யாத்ரீகர்கள் நேற்று காலை மதீனாவுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள விரும்பும் பயணிகளுக்கு தமிழக அரசின் ஹஜ் கமிட்டி, ஆண்டுதோறும் தேவையான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

புனிதப் பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகளின் முதல் குழுவில் 417 பேர் உள்ளனர். இவர்கள் நேற்று அதிகாலை 4 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மதீனாவுக்கு புனிதப் பயணம் கிளம்பினர்.

இவர்களை வக்பு வாரியம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான் வழியனுப்பி வைத்தார். தமிழ்நாடு ஹஜ் கமிட்டித் தலைவரும் எம்.பி.யுமான ஜே.எம்.ஆரூண் ரஷீத், துணைத்தலைவர் பிரசிடெண்ட் அபுபக்கர் உறுப்பினர் செயலாளர் கே.அலாவுதீன் உட்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்த ஆண்டுக்கான புனித பயணத்தில் சில மாறுபாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பயணிகளை தவிர்ப்பதற்காக, சவூதி அரேபியா அரசு சில கட்டுப்பாடுகளை விதித்தது. பன்றிக் காய்ச்சல் நோய்க்கான அறிகுறி இல்லை என்ற மருத்துவ சான்றிதழைப் பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இந்தியாவில் இருந்து செல்லும் அனைத்து ஹஜ் பயணிகளும் சர்வதேச பாஸ்போர்ட்டு வைத்திருக்க வேண்டும் என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. எனவே, அனைத்து ஹஜ் பயணிகளுக்கும் 8 மாதத்துக்கு மட்டுமே பயன்படுத்தக் கூடிய சர்வதேச பாஸ்போர்ட்டுகளை மத்திய அரசு வழங்கியது. .

இந்த பாஸ்போர்ட்டை ஒருமுறைதான் பயன்படுத்த முடியும். மேற்கொண்டு அதை புதுப்பிக்க இயலாது. இதுவரை பொதுவான பாஸ்போர்ட் மூலம் ஹஜ் பயணிகள், புனிதப் பயணம் மேற்கொண்டு வந்தனர். ஆனால் சவுதி அரேபியா அரசு விதித்த சில நிபந்தனைகளால், சர்வதேச பாஸ்போர்ட்டுகளுடன் பயணம் செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. அந்த வகையில் இந்தியாவில் இருந்து சர்வதேச பாஸ்போர்ட் மூலம் பயணிகள் ஹஜ் பயணம் செல்வது இதுதான் முதன்முறை.

இந்தியாவில் இருந்து செல்லும் ஹஜ் பயணிகளுக்கு தேவைப்படும் மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவக் குழுவும் ஏற்கனவே சவூதி அரேபியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு இந்தியாவிலிருந்து 1 லட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் ஹஜ் செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அழகுபடுத்தப்பட்டுள்ள மெரீனாவுக்கு 24 மணி நேர தனியார் பாதுகாப்பு

சென்னை: பெரும் பொருட் செலவில் அழகுபடுத்தப்பட்டு வரும் மெரீனா கடற்கரைக்கு 24 மணி நேர தனியார் பாதுகாப்பை வழங்குவது குறித்து சென்னை மாநகராட்சி நிர்வாகம் யோசித்து வருகிறது.

தனியார் செக்யூரிட்டி ஏஜென்சி மூலம் 24 மணி நேரமும் இங்கு பாதுகாவலர்கள் நியமிக்கப்படவுள்ளனர். ரூ. 17 கோடி செலவில் தொடங்கப்பட்ட மெரீனா கடற்கரை அழகுபடுத்தும் திட்டம் தற்போது முடியும் தருவாயை நெருங்கி விட்டது.

நவம்பர் மாதம் இந்தத் திட்டம் முடிவடையும். இந்த நிலையில் அங்கு அமைக்கப்பட்டுள்ள புல்வெளிகள், நீரூற்றுகள், பளபள நடைபாதைககள், தடுப்புக் கம்பிகள் என உள்ளிட்டவற்றைப் பாதுகாப்பது இப்போது முக்கியமாகியுள்ளது.

மாநகராட்சியில் ஊழியர் பற்றாக்குறை இருப்பதால், இந்தப் பணிக்கு தனியார் பாதுகாவலர்களைப் பயன்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கோனி கூறுகையில், பாதுகாப்பு ஏற்பாடுகளை வெளியிலிருந்து பெறத் திட்டமிட்டுள்ளோம். குறைந்துத 10 பாதுகாவலர்கள் நியமிக்கப்படுவார்கள். 24 மணி நேரமும் இவர்கள் பணியில் இருப்பார்கள். இதற்கான டெண்டர் விரைவில் இறுதி செய்யப்படும்.

மேலும், அழகுபடுத்தப்பட்ட மெரீனாவை பராமரிக்கும் பணிக்காக இளநிலைப் பொறியாளர் தலைமையில் ஒரு தனிப் பிரிவையும் மாநகராட்சி அமைக்கவுள்ளது. இதில் கன்சர்வன்சி இன்ஸ்பெக்டர், பணியாளர்கள் இருப்பார்கள். 2 ஷிப்டுகளாக இவர்கள் செயல்படுவார்கள்.

விரைவில் இந்தத் திட்டத்திற்கு மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படவுள்ளதாக லக்கோனி தெரிவித்தார்.

இந்தநிலையில் கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள புல்வெளிகளை பராமரிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 70 ஊழியர்கள் அங்குள்ள பூங்காக்களைப் பராமரிப்பது, சுத்தப்படுத்துவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுதவிர அவ்வப்போது கடற்கரையை சுத்தப்படுத்தும் பணியையும் மாநகராட்சி மேற்கொள்ளவுள்ளது. இதற்காக தலா ரூ. 3 லட்சம் மதிப்பிலான தூய்மைப்படுத்தும் எந்திரம் வாங்கப்படவுள்ளது. மொத்தம் நான்கு எந்திரங்கள் இதுபோல வாங்கப்படும்.

இதன் மூலம் நடைபாதைகள் சுத்தப்படுத்தப்படும். அதேபோல, புல்வெளிகளும் சிறப்பாக பராமரிக்கப்படும்.

மேலும் கடற்கரைக்கு வருவோருக்கு நல்ல தண்ணீர் கொடுப்பதற்காக ஆர்.ஓ அமைப்பும் ஏற்படுத்தப்படவுள்ளது. இதற்காக தொண்டு நிறுவனங்களை மாநகராட்சி தொடர்பு கொண்டுள்ளது.

'மக்கள் உரிமை'' கேள்விகளுக்கு கமலின் பதில்கள்-2

'உன்னைப்போல் ஒருவன்' திரைப்படம் முஸ்லிம் சமுதாயத் தைக்காயப்படுத்தும் வகையில் அமைந்திருப்பதைத்தொடர்ந்து நடிகர் கமல்ஹாசனை நாம் நேரில் சந்தித்தோம். அவரது பேட்டி இந்த வாரமும் தொடர்கின்றன.

மக்கள் உரிமை: செப்.11, 2001 (அமெரிக்காவின் இரட்டை கோபுரத் தகர்ப்பு) சம்பவத்திற்குப் பிறகு ரஹழ் ர்ய் பங்ழ்ழ்ர்ழ்ண்ள்ம் என்ற பெயரில் முஸ்லிம்கள் மீது உலகளாவிய ஒடுக்குமுறை ஏவப்பட்டுள்ளது. பாபரி மஸ்ஜித் இடிப்பிற்குப் பிறகு வளர்ந்தோங்கிய மதவாதத்தால் பாதிக்கப்படுபவர்களும் முஸ்லிம்கள்தான். எல்லா முஸ்லிம்களும் பயங்கரவாதிகள் அல்ல, ஆனால் பயங்கரவாதிகள் அனைவரும் முஸ்லிம்களே! என்ற கருத்து பரப்பப்படுகிறது. வலுவான குரலில்லாத முஸ்லிம் சமுதாயத்தை சினிமா போன்ற சக்தி வாய்ந்த ஊடகங்கள் ஒடுக்குவது சரியா?

கமல்: விவாதம் செய்வது என்று தொடங்கி விட்டால், விவாதங்கள் தொடர்ந்து கொண்டேதான் போகும். என்னைப் பொறுத்தவரை எல்லா சமுதாயங்களிலும் நல்லவர்களும், கெட்டவர்களும் கலந்தே இருக்கிறார்கள். குறிப்பிட்ட சமுதாயத்தில் எல்லோரும் நல்லவர்கள் என்றோ, குறிப்பிட்ட சமுதாயத்தில் எல்லோரும் கெட்டவர்கள் என்றோ சொல்ல முடியாது. ஆர்.எஸ்.எஸ். பரப்பி வருகின்ற கருத்தான 'எல்லா முஸ்லிம்களும் பயங்கரவாதிகள் அல்ல, ஆனால் பயங்கரவாதிகள் எல்லோரும் முஸ்லிம்கள்'' என்ற கருத்தில் எனக்குத் துளியும் உடன்பாடில்லை.

'உன்னைப் போல் ஒருவன்' படம் பிடிக்காத பத்து முஸ்லிம் இளைஞர்கள் என் வீட்டின் மீது கல் வீசினால் அந்த பத்து பேர் மீது பத்து நாளைக்கு நான் கோபப்படலாம். ஆனால் அந்தக் கோபம் முஸ்லிம் சமுதாயமே இப்படித்தான் என்று திரும்பிவிடக் கூடாது. ஆனால் நடைமுறையில் அதுதான் நடக்கிறது. யாரோ சிலர் செய்யும் தவறுகளுக்கு ஒட்டுமொத்த சமுதாயத்தையும் பொறுப்பாக்குவது மிகத் தவறானது.(அருகிலிருந்த இயக்குநர் அமீரை சுட்டிக்காட்டி நகைச்சுவையாக) இவர் ஒரு கொலையே செய்துவிட்டார் என்று வைத்துக் கொள்வோம். அதற்கு அவர்தான் பொறுப்பு. அவர் சார்ந்திருக்கும் மதம் அவரது செயலுக்கு பொறுப்பாகாது. பயங்கரவாதத்தை மதத் தோடு சம்பந்தப்படுத்துவது தவறு. இன்றுகூட (9.10.2009) மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் பலரும் பலியான செய்தி பத்திரிகைகளில் வந்துள்ளது. அவர்களை மதத்தோடும், இனத்தோடும் சம்பந்தப்படுத்துவதில்லை. அவர்கள் ஏன் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டார்கள் என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்.

மக்கள் உரிமை: உன்னைப் போல் ஒருவன் படம் முஸ்லிம்களுக்கு ஆழமான காயத்தைத் தந்திருக்கிறது இதற்கு என்ன பரிகாரம் காணப் போகிறீர்கள்?

கமல்: முஸ்லிம்களைக் காயப்படுத் துவது என்பது என் நோக்கமல்ல. முஸ்லிம் களைக் காப்பாற்ற வேண்டும் என்பதும் என் நோக்கமல்ல. நானும் இவரும் (அமீர்) இணைந்து சமுதாயத்திற்கு நிறைய செய்ய வேண்டியுள்ளது. இவர் (அமீர்) என்றால் இவருக்கு சமய நம்பிக்கை உள்ளது. எனக்கு இல்லை.

முஸ்லிம் சமுதாயத்தைப் பற்றி படத்தில் தவறான செய்திகளைத் தந்துவிட்டு பிறகு, தெரியாமல் 'அறியாமையில் அவ்வாறு செய்துவிட்டேன்' என்று அறி யாமையை சிலர் கேடயமாக்கிக் கொள்ள லாம். ஆனால் நான் அறியாமையைக் கேடயமாக்கிக் கொள்ள விரும்பவில்லை. மேலும் நான் என்னைத் தற்காத்துக் கொள்ளவும் பேசவில்லை. படம் நன் றாகவே ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தை எதிர்த்து ஏதாவது செய்தால் அது ஒருவகையில் படம் மேலும் விளம்பரமாவதற்கு உதவும். மனக்காயப்பட்டிருந்தால் அந்தக் காயத்தை நான்தான் ஆற்றவேண்டும். அதை வெறும் விவாதங்களின் மூலம் செய்ய விரும்பவில்லை. செயல்பாடுகளின் மூலம் சரிசெய்ய விரும்புகிறேன்.

'நாம் மீண்டும் சந்தித்துப் பேசுவோம்'' என்று புன்னகையோடு பேட்டியை நிறைவு செய்தார்.

உன்னைப் போல் ஒருவன் படம் குறித்த 'கூர்மையான விமர்சனக் கணைகளை பிரதியெடுத்து கமலிடம் வழங்கினோம்.
நமது நியாயங்களை உணர்ந்து கமல் என்ன செய்யப் போகிறார்...? பொறுத்திருந்து பார்ப்போம்.

அதிரை POST

புதன், 21 அக்டோபர், 2009

துபாயில் இந்திய‌ எம்பிக்கு வ‌ர‌வேற்பு நிக‌ழ்ச்சி


துபாய் இந்திய‌ன் இஸ்லாமிக் சென்ட‌ரின் சார்பில் ஹைத‌ராபாத் லோக்ச‌பா உறுப்பின‌ர் ஆச‌துதீன் உவைஸிக்கு வ‌ர‌வேற்பு நிக‌ழ்ச்சி ச‌னிக்கிழ‌மை நடைபெற்ற‌து.

துவ‌க்க‌மாக‌ இறைவ‌ச‌ன‌ங்க‌ள் ஓத‌ப்ப‌ட்ட‌ன‌. துபாய் இந்திய‌ன் இஸ்லாமிக் சென்ட‌ரின் த‌லைவ‌ர் க‌லீல் த‌லைமை வ‌கித்தார். அவ‌ர் த‌ன‌து உரையில் ப‌ல்வேறு ச‌மூக‌ப் பிர‌ச்ச‌னைக‌ளில் லோக்ச‌பாவில் ஆச‌துதீன் உவைஸி திற‌ம்ப‌ட‌ ப‌ணியாற்றி வ‌ருவ‌த‌ற்கு பாராட்டு தெரிவித்தார்.

பொதுச்செய‌லாள‌ர் பி.டி. அப்துல் ர‌ஹ்மான் வ‌ர‌வேற்புரை நிக‌ழ்த்தினார்.

ஆச‌துதீன் உவைஸி எம்.பி. த‌ன‌து ஏற்புரையில் பொருளாதார‌த்தின் பின் த‌ங்கிய‌, தாழ்த்த‌ப்ப‌ட்ட‌ ம‌க்க‌ளுக்காக‌ த‌ன்னால் இய‌ன்ற‌ ப‌ணிக‌ளை மேற்கொள்வேன் என‌வும், த‌ன‌க்கு வ‌ர‌வேற்பு அளித்து கௌர‌வ‌ப்ப‌டுத்திய‌மைக்கும் ந‌ன்றி தெரிவித்தார்.

ச‌ல்மான் நிக‌ழ்ச்சியினை தொகுத்து வழ‌ங்கினார். இந்திய‌ன் முஸ்லிம் அசோஷியேஷ‌ன் (ஈமான்) பொதுச்செய‌லாள‌ர் குத்தால‌ம் ஏ. லியாக்க‌த் அலி, ம‌க்க‌ள் தொட‌ர்பு செய‌லாள‌ர் ஏ. முஹ‌ம்ம‌து தாஹா, ஊட‌க‌த்துறை பொறுப்பாள‌ர் முதுவை ஹிதாய‌த், கும்பகோண‌ம் ஜாஹிர் உசேன், உள்ளிட்ட‌ ப‌ல்வேறு அமைப்புக‌ளின் நிர்வாகிக‌ள் ப‌ல‌ர் ப‌ங்கேற்ற‌ன‌ர்.

த‌க‌வ‌ல்: துபாயிலிருந்து முதுவை ஹிதாய‌த்

ஹஜ் பயணிகள் இருக்கும் இடத்தை அறிய இன்டர்நெட் வசதி

ஹஜ் யாத்திரை சென்றுள்ள இந்தியர்களுக்கு இன்டர்நெட் வசதி செய்யப்பட்டுள்ளது.

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை 200 பேர் அடங்கிய முதலாவது ஹஜ் யாத்ரீகர்கள் அணி சவூதி புறப்பட்டுச் சென்றனர்.

இவர்களை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா வழியனுப்பி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

ஹஜ் யாத்திரை செல்லும் இந்திய யாத்ரீகர்களுக்கு மெக்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கம்ப்யூட்டர்கள் நிறுவப்பட்டு இண்டர்நெட் இணைப்பு தரப்பட்டுள்ளது.

இந்திய ஹஜ் கமிட்டி இணையத் தளத்தின் மூலம், ஹஜ் யாத்திரை மேற்கொண்டுள்ள இந்திய யாத்ரீகர்கள் எங்குள்ளனர் என்பதை அவர்களது உறவினர்கள் அறிந்து கொள்ளலாம்.

இந்த ஆண்டு இந்திய ஹஜ் கமிட்டி மூலம் 1,15,000 யாத்ரீகர்கள் ஹஜ் யாத்திரை மேற்கொள்கின்றனர். இவர்கள் தவிர, இந்தியாவிலிருந்து தனியார் பயண ஏற்பாட்டாளர்கள் மூலம் 45,000 பேர் ஹஜ் யாத்திரை மேற்கொள்கின்றனர்.

இந்தியா முழுவதிலும் உள்ள 19 மையங்களிலிருந்து இந்த மாதம் 20 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 20 ஆம் தேதி வரை இவர்கள் ஹஜ் புனித யாத்திரையை மேற்கொள்கின்றனர்.

இந்த முறை ராஞ்சி (ஜார்கண்ட்), மங்களூர் (கர்நாடகம்) ஆகிய புதிய மையங்களும் இணைந்துள்ளன.

ஹஜ் யாத்ரீகர்களுக்காக இந்தியா விலும், சவூதி அரேபியாவிலும் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை மத்திய அரசு உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.

ஜெட்டா, மெக்கா, மதினா, மினா, முன்னாவ்வரா உள்ளிட்ட இடங்களில் இந்திய ஹஜ் யாத்ரீகர்களுக்கு தேவையான வசதிகளைச் செய்து கொடுப்பதற்கும், ஏற்கெனவே உள்ள வசதிகளை மேம்படுத்துவதற்கும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் இதர அமைப்புகளுடன் மத்திய வெளியுறவு அமைச்சகம் ஒருங்கிணைந்து செயலாற்றி வருகிறது.

2004 ஹஜ் யாத்திரையின் போது அறிமுகப்படுத்தப்பட்ட ரொக்கம் மற்றும் பொருள்கள் இழப்புக்கான இழப்பீட்டுத் தொகை வழங்கும் திட்டம் தொடரும்.

பன்றிக் காய்ச்சல் பரவுவதைத் தடுக்க அரசின் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சவூதி அரேபியாவில் உள்ள இந்திய மருத்துவக் குழுவினர் எந்த நிலைமையையும் சமாளிக்க ஆயத்த நிலையில் உள்ளனர்.

நமது நாட்டைச் சேர்ந்த யாத்ரீகர்களுக்கு ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் ரியாத்தில் உள்ள இந்தியத் தூதரகம் மற்றும் ஜெட்டாவில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளலாம்.

ஹஜ் யாத்ரீகர்களுக்கு உதவுவதற்காக, நிர்வாக மற்றும் மருத்துவ அலுவலர்கள் 600 பேரை மத்திய அரசு பணியில் ஈடுபடுத்தியுள்ளது. இவர்கள் மெக்கா, மதினா, ஜெட்டா, மினா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தங்கியிருந்து, இந்திய ஹஜ் யாத்ரீகர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து கொடுப்பர் என்றார்.

செவ்வாய், 20 அக்டோபர், 2009

ஹஜ் பயணிகளின் முதலாவது விமானம் இன்று புறப்பட்டது

இந்தியாவில் இருந்து ஹஜ் புனித யாத்திரை செல்லும் பயணிகளின் முதலாவது குழு இன்று புதுடெல்லியில் இருந்து மெக்கா புறப்பட்டுச் சென்றது.

இந்த ஆண்டில் முதல்முறையாக ஹஜ் கமிட்டி இணையதளத்தில் பயணிகள் எங்கிருக்கிறார்கள் என்ற தகவல் கணினி மூலம் தெரிவிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டிருப்பதால், ஹஜ் பயணிகளின் உறவினர்கள் அவர்களைத் தொடர்பு கொள்ள வசதி ஏற்படும் என்று வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி விமான நிலையத்தில் முதல் ஹஜ் குழுவினரை வழியனுப்பி வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசுகையில் அமைச்சர் இத்தகவலைத் தெரிவித்தார்.

இந்திய ஹஜ் கமிட்டியின் இணைய தளத்தில் சவுதி அரேபியாவில் தங்கியிருக்கும் ஹஜ் பயணிகளுடன் தொடர்பு கொள்ளும் வசதியும் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஏர் இந்தியா விமானம் மூலம் சுமார் 200 ஹஜ் யாத்ரிகர்கள் இன்று புனிதப் பயணம் புறப்பட்டுச் சென்றனர்.

இந்திய ஹஜ் கமிட்டி மூலமாக இந்த ஆண்டு ஒரு லட்சத்து 15 ஆயிரம் பேரும், மேலும் 45 ஆயிரம் பேர் தனியார் அமைப்புகள் மூலமாகவும் புனிதப் பயணம் மேற்கொள்கிறார்கள்.

இன்று முதல் அடுத்த மாதம் (நவம்பர்) 20ஆம் தேதி வரை ஹஜ் பயணிகள் புனிதப் பயணம் மேற்கொள்வார்கள்.

ஹஜ் யாத்திரைக்காக இந்தியாவிலும், சவுதி அரேபியாவிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகளை அரசு உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் கிருஷ்ணா கூறினார்.

ஜெட்டா, மெக்கா முக்கார்மா, மதீனா, முனாவாரா, மினா, அராபத் ஆகிய பகுதிகளில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்து, சிவில் விமான போக்குவரத்து அமைச்சககும், இதர அரசு நிறுவனங்களும் மேற்பார்வையிட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

பன்றிக்காய்ச்சல் நோய் பரவுவதையும் கவனத்தில் கொண்டு, அரசு உரிய சுகாதார வசதிகளையும் அளிப்பதாகக் கூறிய அவர், ரியாத், ஜெட்டா உள்ளிட்ட இடங்களில் உள்ள இந்தியத் தூதகரங்களுக்கும் பயணிகள் தொடர்பு கொண்டு உரிய உதவியைப் பெறலாம் என்றார்.

தூத்துக்குடி மாவட்டத்துக்கு வரும் அக்டோபர் 23ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு இம் மாதம் 23-ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆட்சியர் (பொறுப்பு) துரை. ரவிச்சந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இவ்வாண்டு கந்த சஷ்டி விழா இம் மாதம் 18-ம் தேதி தொடங்குகிறது.

6-ம் நாளான 23-ம் தேதி அன்று முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடைபெறும்.

எனவே, அன்றைய தினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து

அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளித்து இதன் மூலம் ஆணை பிறப்பிக்கப்படுகிறது.

மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்களுடன் செயல்படும்.

இது செலாவணி முறிவு சட்டத்தின்படி பொது விடுமுறை நாளல்ல எனவும் அறிவிக்கப்படுகிறது.

இந்த விடுமுறைப் பதிலாக நவ. 14-ம் தேதி 2-வது சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது என்றார் ஆட்சியர்.

திங்கள், 19 அக்டோபர், 2009

இனி ஆன்லைனில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை தமிழிலும் பெறலாம்

: சென்னை மாநகராட்சி எல்லைக்குள் பிறப்பு , இறப்பு சான்றிதழ்களை இனிமேல் ஆன்லைனில் தமிழிலேயே பெற முடியும். நவம்பர் மாதம் முதல் இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது.

கடந்த ஆண்டு பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை ஆன்லைனிலேயே பதிவு செய்து பெறும் நடைமுறையை மாநகராட்சி ஆரம்பித்தது.

இந்த நிலையில் தற்போது தமிழிலேலேய சான்றிதழ் பெறும் முறை நவம்பர் மாதம் முதல் அமலுக்கு வருகிறது. இதுதொடர்பான தகவல் பதியும் நடைமுறைகள் அக்டோபர் மாதத்திற்குள் முடிவடையும். நவம்பர் மாதம் இந்த புதிய முறை அமலுக்கு வரும் என்று மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கோனி கூறியுள்ளார்.

முன்பு ஆங்கிலத்தில் மட்டும் சான்றிதழ்கள் தரப்பட்டு வந்தன. ஆனால் அதில் ஏராளமான ஸ்பெல்லிங் மிஸ்டேக்குள் இருப்பதாக புகார் கள் வந்தன. இதையடுத்து ஆன்லைனிலேயே பிழைகளைத் திருத்திக் கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டது.

இதையடுத்து கிட்டத்தட்ட 9488 பேர் பிறப்பு சான்றிதழ் பிழை திருத்தத்திற்காகவும், 1458 பேர் இறப்பு சான்றிதழ் பிழை திருத்தத்திற்காகவும் இந்த வாய்ப்பை பயன்படுத்தினர். இதையடுத்தே தமிழிலும் சான்றிதழ்களை வழங்க தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போது மாநகராட்சி டேட்டா பேஸில் 50 லட்சம் பிறப்பு தகவல்களும், 25 லட்சம் இறப்புத் தகவல்களும் இடம் பெற்றுள்ளன. தினசரி 5000 பேர் பிறப்பு, இறப்பு சான்றிதழ் கோரி விண்ணப்பித்து வருகின்றனர்.

மாநகராட்சியின் இணையதளம் தொடங்கப்பட்டது முதல் இதுவரை 5.31 லட்சம் ஹிட்டுகள் கிடைத்துள்ளன. இவற்றில் பெரும்பாலானவை பிறப்பு, இறப்பு சான்றிதழ் கோரி விண்ணப்பித்தவர்கள்தான்.

இதுவரை 2.97 லட்சம் பிறப்பு சான்றிதழ்களும், 78,000 இறப்பு சான்றிதழ்களும் டவுன்லோட் செய்யப்பட்டுள்ளன.

தமிழ் எழுத்துக்களுக்காக யுனிகோட் எழுத்துரு பயன்படுத்தப்படவுள்ளதாம். பெயர், பாலினம், பிறப்பு தேதி, பிறப்பிடம், தந்தை- தாய் பெயர்கள், நிரந்தர முகவரி, குழந்தை பிறந்தபோது பெற்றோர் இருந்த முகவரி, பதிவுத் தேதி, விநியோக தேதி ஆகியவை தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் இருக்கும்.

இந்த நடைமுறை அமலுக்கு வந்த பின்னர் மருத்துவமனைகள், தங்களது மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தை கள் குறித்த விவரங்களை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உள்ளீடு செய்யலாம்.

தற்போது பிறப்பு விவரங்களைப் பதிவு செய்து கொள்ள மாநகரில் உள்ள 500க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சிறப்பு லாகின் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் ஆகியவை தரப்பட்டுள்ளன. இவற்றைப் பயன்படுத்தி நேரடியாக சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் பிறப்பு குறித்த விவரங்களை பதிவு செய்ய வேண்டும்

ஞாயிறு, 18 அக்டோபர், 2009

மொபைல் போன் சூடாகும் வரை பேசுபவரா நீங்கள்?: அவசியம் படியுங்கள் இதை!


"ஹலோ...' என்று மழலைகூட கொஞ்சி பேசும் அளவிற்கு மொபைல் போன் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது. நல்லதோ, கெட்டதோ எந்த விஷயம் என்றாலும், உடனுக்குடன் தொடர்புக் கொள்ள உதவும் "மீடியேட்டராக' உள்ளது. இன்று ரோட்டில் குப்பை பொறுக்குபவர் கூட மொபைல் வைத்துள்ளார்.

இது அந்தஸ்தின் அடையாளம் அல்ல. இன்றைய வாழ்வின் அவசியம். ஆனால் மொபைல் போன் ஏற்படுத்தும் விளைவுகள் என்ன? மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் என்ன பாதிப்புகள்? மதுரை மூளை நரம்பியல் டாக்டர் வி.நாகராஜன் கூறுகிறார் :மொபைல் போன் நல்லதா, கெட்டதா என விவாதங்கள் நடந்தாலும், அதன் பலன் முழுமையாக இதுவரை தெரியவில்லை. விஞ்ஞான ரீதியாக மொபைல் போன் உபயோகிக்கக்கூடாது என எவரும் கூறவில்லை. ஒருவருக்கு மூளையில் கட்டி ஏற்பட்டால், அது மொபைல் போனால்தான் வந்ததாக கருதுகின்றனர்.

உண்மையில் மூளைக்கும், மொபைல்போனுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நரம்புகள் பாதிக்கும் என்கின்றனர். அதுவும் ஆதாரப்பூர்வமாக இல்லை. தினமும் 20 மணி நேரமும் மொபைல் போனுடன் பேசும் 150 பேரை நான் ஆய்வு செய்ததில், மூளையில் இருந்து வரும் சக்தி எந்தவிதத்திலும் மாறுபடவில்லை. மொபைல் போனிலிருந்து வரும் மின்காந்த அலைகள் ஒரு கட்டுப்பாட்டிற்குள்தான் இருக்கிறது. தரமற்ற மொபைல் போன்களால் பாதிப்பு வரலாம்.மொபைல் போனை இடுப்பில் வைத்தால் உயிரணுக்கள் குறையும், சட்டையில் வைத்தால் மாரடைப்பு வரும். பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வரும் என்ற தகவல்கள் எல்லாம் இன்னும் நிரூபிக்கப்படவில்லை.

அதேசமயம் மொபைல் போன் டவர்களின் மின்காந்த அலைகளால் பாதிப்பு வரலாம். அருகில் உள்ள பசுமைகள் பாதிக்கலாம். இந்த மின்காந்த அலைகளுக்கு சர்வதேச கட்டுப்பாடு உண்டு. சில மொபைல் போன் நிறுவனங்கள் இதை மதிப்பதில்லை. மொபைல் போனில் எந்த நேரத்தில் என்ன தகவல்கள் வரும் என்ற மனஉளைச்சல் ஏற்படுகிறது. இதே சிந்தனையுடன் இருப்பதால் மூளைக்கு ஓய்வு ஏற்படுவதில்லை. இதுவே மனநோய்க்கு காரணமாகிறது.

அளவுடன் பயன்படுத்தினால் எந்த பிரச்னையும் இல்லை.சிலர் மொபைல் போன் சூடாகும் வரை பேசுகிறார்கள். இது காதினுள் தூசி செல்வதை தடுக்கும் நுண்ணிய ரோமகால்கள் கருக காரணமாகிறது. பின் காது கருப்பாக மாறி அரிப்பு ஏற்படுவதோடு, ஜவ்வும் பாதிக்கும். மொபைல் போன் மூலம் ஏற்படும் மனஉளைச்சலிருந்து காத்துக்கொள்ள சில "டிப்ஸ்' :எப்போதும் போனும், கையுமாக இருப்பதை தவிர்க்கவும். மொபைல் போன் ஸ்பீக்கர் போட்டு காதில் வைக்காமல் பேசவும். தேவையில்லாத நேரங்களில் "சுவிட்ச் ஆப்' செய்யவும். வெளியூர் அல்லது தனிமையை நாடிச் செல்லும்போது, குடும்பத்தினர் அவசரம் கருதி தொடர்புக் கொள்ள புதிய சிம் கார்டு எண்ணை கொடுக்கலாம்.

பள்ளி மாணவர்கள் மொபைல் போன் வைத்திருக்க அனுமதிக்கக்கூடாது. தேவையெனில் பள்ளிக்கே போன் செய்து பெற்றோர் பேசலாம். மொபைல் போனில் திரைக்காட்சி பார்ப்பதால் கண் தசைகள் பாரமாகி, கண் வலி ஏற்படுகிறது. கழுத்திற்கும், தோள்பட்டைக்கும் இடையே மொபைல் போனை சொருகி பேசுவதால், கழுத்து நரம்பு பாதிப்பதோடு, குருத்தெலும்பும் விலகி விடுகிறது. மொபைல் போனை இடுப்பில் வைத்து தூங்கினால், திரும்பி படுக்கும்போது விலா எலும்பு பாதிக்கும். குறிப்பாக மொபைல்போனுக்கு சார்ஜ் ஏற்றிக்கொண்டிருக்கும்போதே பேசினால், "ஷாக்' ஏற்பட்டோ, வெடித்தோ உயிரிழப்பு ஏற்படலாம். இவ்வாறு கூறினார்.

சனி, 17 அக்டோபர், 2009

ரூபாய் நோட்டுகள் எந்தப் பகுதியில் கிழிந்தாலும் மாற்றலாம் : விதிமுறைகளை எளிதாக்கி ஆர்.பி.ஐ., அறிவிப்பு


ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு, ரிசர்வ் வங்கியால் திருத்தப்பட்ட விதிமுறைகள், கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி முதல் அமலாக்கப்பட்டுள்ளது. புதிய விதிமுறையின்படி, ரூபாய் நோட்டுகள் எந்தப் பகுதியில் கிழிந்திருந்தாலும், அது அழுக்கடைந்த நோட்டுகளாக கருதி, வேறு ரூபாய் நோட்டு மாற்றித் தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அழுக்கான மற்றும் கிழிந்த ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக, புதிய நோட்டுகளை மாற்றுவதற்கான விதிமுறைகள், ரிசர்வ் வங்கியால் 1975ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. 1985ம் ஆண்டு மாற்றம் செய்யப்பட்ட இவ்விதிமுறைகள், பொதுமக்களின் வசதிக்காக தற்போது மேலும் எளிமையாக்கப்பட்டுள்ளன.

இது குறித்து, சென்னை ரிசர்வ் வங்கியின் பணம் வழங்கும் துறையின் துணைப் பொது மேலாளர் ரங்கநாதன் கூறியதாவது:ரூபாய் நோட்டுகளின் வரிசை எண் பகுதியில் கிழிந்திருந்தால், முன்பு அவை செல்லாத நோட்டுகளாக கருதப்படும். இவற்றை ரிசர்வ் வங்கியால் அனுமதிக்கப் பட்ட, பண கருவூலங்கள் உள்ள வங்கிகளின் கிளைகளில் மட்டும் தான் மாற்ற முடியும்.தற்போதைய விதிமுறையின்படி, ரூபாய் நோட்டுகளின் எந்த பகுதியிலும் (வரிசை எண் பகுதி உட்பட) இரு துண்டுகளாக கிழிந்திருக்கும் பட்சத்தில், அவை அழுக்கடைந்த நோட்டுகளாகவே கருதப்படும்.

இவற்றை இந்தியாவிலுள்ள அனைத்து வங்கிகளிலும், அவற்றின் கிளைகளிலும் மாற்றிக் கொள்ளலாம்.இரண்டுக்கும் மேற்பட்ட துண்டுகளாக கிழிந்திருக்கும் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு, புதிய விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன. பல துண்டுகளாக கிழிந்திருக்கும் ரூபாய் நோட்டில், கிழியாத மிகப்பெரிய ஒரு துண்டு 50 சதவீத பரப்பளவிற்கு மேல் இருந்தால், அதற்கு முழுத்தொகை வழங்கப்படும்.இதற்கு அந்த ரூபாய் துண்டின் பரப்பளவு ஒரு ரூபாய்க்கு 31 ச.செமீ, இரண்டு ரூபாய்க்கு 34 ச.செ.மீ., ஐந்து ரூபாய்க்கு 38 ச.செ.மீ., 10 ரூபாய்க்கு 44 ச.செ.மீ., மற்றும் 20 ரூபாய்க்கு 47 ச.செ.மீ., ஆகவும் இருக்க வேண்டும்.கிழிந்த நோட்டின்,கிழியாத மிகப்பெரிய துண்டின் பரப்பளவு 50 சதவீதம் மற்றும் அதற்கு கீழும் இருந்தால், அதன் மதிப்பு முழுவதும் நிராகரிக்கப்படும்.

பல துண்டுகளாக கிழிந்திருக்கும் ரூபாய் நோட்டின் (50 ரூபாய் முதல் 1,000 ரூபாய் வரை), கிழியாத மிகப்பெரிய ஒரு துண்டின் பரப்பளவு 65 சதவீதத்திற்கு மேல் இருந்தால், அதற்கு முழுதொகை தரப்படும். இதற்கு அந்த ரூபாய் துண்டின் பரப்பளவு 50 ரூபாய்க்கு 70 ச.செ.மீ., 100 ரூபாய்க்கு 75 ச.செ.மீ., 500 ரூபாய்க்கு 80 ச.செ.மீ., மற்றும் 1,000 ரூபாய்க்கு 84 ச.செ.மீ., ஆகவோ அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்.

பல துண்டுகளாக கிழிந்திருக்கும் ரூபாய் நோட்டின், கிழியாத மிகப்பெரிய ஒரு துண்டின் பரப்பளவு 40 சதவீதத்திற்கு மேலும், 65 சதவீதம் வரையிலும் இருந்தால், அவற்றுக்கு பாதி தொகை வழங்கப்படும். இதற்கு அந்த ரூபாய் துண்டின் பரப்பளவு 50 ரூபாய்க்கு 43 ச.செ.மீ., 100 ரூபாய்க்கு 46 ச.செ.மீ., 500 ரூபாய்க்கு 49 ச.செ.மீ., மற்றும் 1,000 ரூபாய்க்கு 52 ச.செ.மீ., ஆகவோ அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்.கிழியாத மிகப்பெரிய ரூபாய் துண்டின் பரப்பளவு 40 சதவீதம் மற்றும் அதற்கு கீழும் இருந்தால், அவற்றின் மதிப்பு முழுவதுமாக நிராகரிக்கப்படும்.

இந்த ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கியிலும், ரிசர்வ் வங்கியால் அனுமதிக்கப்பட்ட தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மற்றும் இதர வணிக வங்கிகளின் 303 பண கருவூலங்கள் உள்ள கிளைகளிலும் மாற்றிக் கொள்ளலாம். இவ்வாறு ரங்கநாதன் கூறினார்

செய்தி : தினமலர்

ஹாங்காங்கில் ஒரு பிளாட்டின் விலை ரூ.268 கோடி


ஹாங்காங்கில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு பிளாட் ரூ.268 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆசியாவிலேயே மிக அதிக விலைக்கு விற்கப்பட்ட பிளாட் இது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹாங்காங் துறைமுகத்திற்கு மிக அருகில் உள்ள தீவுப் பகுதியில் இந்த அழகிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான ஹெண்டர்சன் லேண்ட் டெவலப்மென்ட் இந்த குடியிருப்பை கட்டியது.

அதில் உள்ள 5 படுக்கை அறைகளைக் கொண்ட டூப்ளக்ஸ் பிளாட் விற்பனை கடந்த வாரம் நடந்தது. 6,158 சதுர அடி பரப்பளவு உள்ள வீட்டை ரூ.267 கோடியே 90 லட்சத்துக்கு வாங்க முடிவு செய்த ஒருவர், ஒப்பந்தமும் செய்து விட்டார். இந்த வீட்டின் ஒரு சதுர அடியின் விலை ரூ.4.35 லட்சம். இந்த குடியிருப்பில் அதிநவீனமான சகல வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளது.

ஹாங்காங் பகுதிகளில் ரியல் எஸ்டேட் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருவதால், இந்த வீட்டை வாங்குவதற்கும் போட்டி அதிகரித்து வருகிறது.

ரூபாய் நோட்டுகள் எந்தப் பகுதியில் கிழிந்தாலும் மாற்றலாம் : விதிமுறைகளை எளிதாக்கி ஆர்.பி.ஐ., அறிவிப்பு

ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு, ரிசர்வ் வங்கியால் திருத்தப்பட்ட விதிமுறைகள், கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி முதல் அமலாக்கப்பட்டுள்ளது. புதிய விதிமுறையின்படி, ரூபாய் நோட்டுகள் எந்தப் பகுதியில் கிழிந்திருந்தாலும், அது அழுக்கடைந்த நோட்டுகளாக கருதி, வேறு ரூபாய் நோட்டு மாற்றித் தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அழுக்கான மற்றும் கிழிந்த ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக, புதிய நோட்டுகளை மாற்றுவதற்கான விதிமுறைகள், ரிசர்வ் வங்கியால் 1975ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. 1985ம் ஆண்டு மாற்றம் செய்யப்பட்ட இவ்விதிமுறைகள், பொதுமக்களின் வசதிக்காக தற்போது மேலும் எளிமையாக்கப்பட்டுள்ளன.

இது குறித்து, சென்னை ரிசர்வ் வங்கியின் பணம் வழங்கும் துறையின் துணைப் பொது மேலாளர் ரங்கநாதன் கூறியதாவது:ரூபாய் நோட்டுகளின் வரிசை எண் பகுதியில் கிழிந்திருந்தால், முன்பு அவை செல்லாத நோட்டுகளாக கருதப்படும். இவற்றை ரிசர்வ் வங்கியால் அனுமதிக்கப் பட்ட, பண கருவூலங்கள் உள்ள வங்கிகளின் கிளைகளில் மட்டும் தான் மாற்ற முடியும்.தற்போதைய விதிமுறையின்படி, ரூபாய் நோட்டுகளின் எந்த பகுதியிலும் (வரிசை எண் பகுதி உட்பட) இரு துண்டுகளாக கிழிந்திருக்கும் பட்சத்தில், அவை அழுக்கடைந்த நோட்டுகளாகவே கருதப்படும். இவற்றை இந்தியாவிலுள்ள அனைத்து வங்கிகளிலும், அவற்றின் கிளைகளிலும் மாற்றிக் கொள்ளலாம்.

இரண்டுக்கும் மேற்பட்ட துண்டுகளாக கிழிந்திருக்கும் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு, புதிய விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன. பல துண்டுகளாக கிழிந்திருக்கும் ரூபாய் நோட்டில், கிழியாத மிகப்பெரிய ஒரு துண்டு 50 சதவீத பரப்பளவிற்கு மேல் இருந்தால், அதற்கு முழுத்தொகை வழங்கப்படும்.இதற்கு அந்த ரூபாய் துண்டின் பரப்பளவு ஒரு ரூபாய்க்கு 31 ச.செமீ, இரண்டு ரூபாய்க்கு 34 ச.செ.மீ., ஐந்து ரூபாய்க்கு 38 ச.செ.மீ., 10 ரூபாய்க்கு 44 ச.செ.மீ., மற்றும் 20 ரூபாய்க்கு 47 ச.செ.மீ., ஆகவும் இருக்க வேண்டும்.கிழிந்த நோட்டின்,கிழியாத மிகப்பெரிய துண்டின் பரப்பளவு 50 சதவீதம் மற்றும் அதற்கு கீழும் இருந்தால், அதன் மதிப்பு முழுவதும் நிராகரிக்கப்படும்.பல துண்டுகளாக கிழிந்திருக்கும் ரூபாய் நோட்டின் (50 ரூபாய் முதல் 1,000 ரூபாய் வரை), கிழியாத மிகப்பெரிய ஒரு துண்டின் பரப்பளவு 65 சதவீதத்திற்கு மேல் இருந்தால், அதற்கு முழுதொகை தரப்படும்.

இதற்கு அந்த ரூபாய் துண்டின் பரப்பளவு 50 ரூபாய்க்கு 70 ச.செ.மீ., 100 ரூபாய்க்கு 75 ச.செ.மீ., 500 ரூபாய்க்கு 80 ச.செ.மீ., மற்றும் 1,000 ரூபாய்க்கு 84 ச.செ.மீ., ஆகவோ அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்.பல துண்டுகளாக கிழிந்திருக்கும் ரூபாய் நோட்டின், கிழியாத மிகப்பெரிய ஒரு துண்டின் பரப்பளவு 40 சதவீதத்திற்கு மேலும், 65 சதவீதம் வரையிலும் இருந்தால், அவற்றுக்கு பாதி தொகை வழங்கப்படும். இதற்கு அந்த ரூபாய் துண்டின் பரப்பளவு 50 ரூபாய்க்கு 43 ச.செ.மீ., 100 ரூபாய்க்கு 46 ச.செ.மீ., 500 ரூபாய்க்கு 49 ச.செ.மீ., மற்றும் 1,000 ரூபாய்க்கு 52 ச.செ.மீ., ஆகவோ அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்.

கிழியாத மிகப்பெரிய ரூபாய் துண்டின் பரப்பளவு 40 சதவீதம் மற்றும் அதற்கு கீழும் இருந்தால், அவற்றின் மதிப்பு முழுவதுமாக நிராகரிக்கப்படும். இந்த ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கியிலும், ரிசர்வ் வங்கியால் அனுமதிக்கப்பட்ட தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மற்றும் இதர வணிக வங்கிகளின் 303 பண கருவூலங்கள் உள்ள கிளைகளிலும் மாற்றிக் கொள்ளலாம். இவ்வாறு ரங்கநாதன் கூறினார்.

பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள் உறுதிமொழி அளிக்க உத்தரவு

"சமர்ப்பிக்கும் சான்றிதழ்கள் உண்மையானவை' என பாஸ்போர்ட் பெற விண்ணப்பிப்போர் உறுதிமொழி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மதுரை மண்டல அலுவலகத்தில் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கும் சிலர் முகவரி, வயது, இருப்பிட ஆதாரங்களுக்காக போலி சான்றிதழ்களை தருகின்றனர்.

போலீசில் புகார் செய்து அதன் பிறகு இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இதைத் தவிர்த்து, போலி சான்றிதழ் கொடுப்போர் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வசதியாக, உறுதிமொழி பெறப்படுகிறது. விண்ணப்பங்களை பெறும்போதே, உறுதிமொழி அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரத்தையும் பாஸ்போர்ட் அலுவலக ஊழியர்கள் தருகின்றனர். இதில் விண்ணப்பதாரர் கையெழுத்திட்டு தர வேண்டும். உறுதிமொழியில் கூறப்பட்டுள்ளதாவது:

"எனது பாஸ்போர்ட் விண்ணப்பத்துடன் இணைக்கப் பட்ட அனைத்து சான்றிதழ்களும் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து வழங்கப்பட்டவை என உறுதி அளிக்கிறேன். இதில் எந்த சான்றிதழும் பொய்யானதோ அல்லது தவறான முறையில் தயாரிக்கப்பட்டதோ அல்ல. பொய்யான சான்றிதழ்களை சமர்ப்பித்தால் பாஸ்போர்ட் மறுக்கப்படும் அல்லது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் அல்லது இவை இரண்டும் சேர்த்து எடுக்கப்படும் என்பதை நான் அறிவேன்.

மேலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சான்றிதழ்கள் அனைத்தும் அவற்றை வழங்கிய அதிகாரிகளின் உண்மைச்சான்றுக்கு உட்படுத்தப்படும் என்பதையும் அறிவேன்' என குறிப்பிடப்பட்டுள்ளது. பாஸ்போர்ட் அலுவலர் ஜோஸ் கே.மாத்யூ கூறும்போது, ""அவ்வப்போது போலி சான்றிதழ்களை சமர்ப்பிக்கின்றனர்.

வருமான வரி ரிட்டர்ன் படிவங்களிலும் போலிகள் வருவதால் அவற்றை சான்றிதழாக ஏற்றுக்கொள்ள முடியாது. மூன்று வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் பெற விரும்புவோர், குழந்தைகளை அழைத்து வர வேண்டியதில்லை. பெற்றோரில் ஒருவர் வந்தால் போதும்'' என்றார்.

ஹஜ் சிறப்பு விமான சேவை: ஏர் இந்தியா அறிவிப்பு

ஹஜ் பயணிகளின் வசதிக்காக ஏர் இந்தியா 137 சிறப்பு விமான சேவைகளை, வரும் 20ம் தேதி முதல் இயக்க உள்ளது. இது குறித்து, வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: ஹஜ் பயணிகளின் வசதிக்காக ஏர் இந்தியா நிறுவனம் வரும் 20ம் தேதி முதல், 137 சிறப்பு விமான சேவைகளை இயக்குகிறது.

மேலும், நாடெங்கிலும் உள்ள ஹஜ் பயணிகள், சவுதி அரேபியன் மற்றும் என்.ஏ.எஸ்., ஏர் நிறுவனங்களின் விமானங்களில் பயணிக்க வசதியாக 117 உள்நாட்டு சிறப்பு விமான சேவைகளையும் இயக்க உள்ளது.

இதன் மூலம், ஏர் இந்தியா 40 ஆயிரம் ஹஜ் பயணிகளுக்கு சேவை அளிக்கும். ஜெட்டா, மதீனா ஆகிய இடங்களுக்கு, கோல்கட்டா, நாக்பூர், கவுகாத்தி, ஜெய்பூர், இந்தூர், அவுரங்காபாத், ஸ்ரீநகர் ஆகிய இடங்களில் இருந்து தனது சொந்த விமானங்களில் ஏர் இந்தியா நிறுவனம் விமான சேவைகளை இயக்குகிறது.

சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் விமானங்களை இணைக்கும் வகையில், மும்பை, ஆமதாபாத், டில்லி, லக்னோ, ஐதராபாத், பெங்களூரு மற்றும் சென்னை ஆகிய இடங்களுக்கு விமான சேவை இயக்கப்படும்.

இந்தியாவில் இருந்து ஜெட்டா, மதீனா ஆகிய இடங்களுக்கு வரும் 20ம் தேதி முதல் அடுத்த மாதம் 20ம் தேதி வரை ஏர் இந்தியாவின் முதற்கட்ட ஹஜ் சிறப்பு விமான சேவை இயக்கப்படும். அடுத்த கட்டமாக, வரும் டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதியில் இருந்து அடுத்த ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி வரை, ஹஜ் பயணிகளை திரும்ப அழைத்து வருவதற்காக சிறப்பு விமான சேவை இயக்கப்படும். இவ்வாறு, அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெள்ளி, 16 அக்டோபர், 2009

'மக்கள் உரிமை'' கேள்விகளுக்கு கமலின் பதில்கள்

'உன்னைப் போல் ஒருவன்' திரைப்படம் முஸ்லிம் சமுதாயத்தின் மீது கருத்தியல் யுத்தம் தொடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக 'மக்கள் உரிமை'' சார்பில் நடிகர் கமலஹாசனை சந்தித்து இந்த படம் பற்றிய கண்டனத்தை தெரிவிக்க நாடினோம்.

இதற்காக கமல்ஹாசனுக்கு நெருக்கமானவரான திரைப்பட இயக்குநர் அமீரிடம் நமது கண்டனத்தைக் கூறி கமல்ஹாசனிடம் தெரிவிக்கக் கூறினோம். அதற்கவர் கமல்ஹாசன் இந்துத்வா சிந்தனை கொண்டவரில்லை. நீங்களே அவரை சந்தித்து விவாதியுங்கள் என்று கூறி கமல்ஹாசனுடன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார் 09.10.2009 அன்று திரைப்பட விருது நிகழ்ச்சி, முதலமைச்சருடன் சந்திப்பு, மாலை அமெரிக்க பயணம், எனப் பல்வேறு நிகழ்ச்சிகள் இருந்த நிலையிலும், நமக்கு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஒதுக்கித்தந்தார் கமல். வழக்குரைஞர் ஜெய்னுல் ஆபிதீன் மற்றும் ஜி.அத்தேஷுடன் 'முஸ்லிம் சமுதாயத்தின் மீதான ஊடக வன்முறை, உன்னைப் போல் ஒருவன் படம் தந்துள்ள பாதிப்பு'' ஆகியவை குறித்து விரிவாக உரையாற்றினோம். அந்த உரையாடலின் சில பகுதிகள்...

கேள்வி: உள்நாட்டு அளவிலும், உலகளாவிய அளவிலும் முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவும், பயங்கரவாதிகளாக வும், அமைதியைக் குலைப்பவர்களாகவும் சித்தரிக்கும் மதவாத செயல்கள் முழுவீச் சில் நடந்து வருகின்றன. திரைப்படத் துறையில் ஒரு மேதையாகவும், நியாய வானாகவும் அறியப்படுகின்ற நீங்கள் இந்த அநீதிக்குத்துணை போகலாமா?

கமல் : உன்னைப்போல் ஒருவன் படத்தின் மூலம் முஸ்லிம்களை கொச்சைப் படுத்துவதோ, பயங்கரவாதத்தோடு அவர்களை மட்டும் சம்பந்தப்படுத்துவதோ என் உள்நோக்கம் அல்ல. நான் யாருக் கும் எதிரானவன் அல்ல. குறிப்பாக முஸ்லிம்களுக்கு நான் எதிரி அல்ல என்பதை என்னோடு பழகியவர்கள் அறிவார்கள்.

''வெட்னஸ் டே'' என்ற வெற்றிப்படத்தை தமிழில் தயாரித்தால் பெரும் வெற்றிபெறும் என்று என்னை அணுகினார்கள்.

வெட்னஸ்டே படத்தின் கதாநாயகன் நஸ்ரூதீன் முஸ்லிம் என்பதாலும், ஆரிஃப் என்ற ஒரு நல்ல முஸ்லிம் அதிகாரி காட்டப்படுவதாலும், இந்திப்பட உலகில் இப்படம் முஸ்லிம்களுக்கு எதிரானதாக பார்க்கப்படவில்லை.

நான், ஆரிஃப் என்ற பாத்திரத்தை நல்லவராகக் காட்டுவது மட்டும் போதாது என்று மேலும் பல மாற்றங்களைச் செய்தேன். அதற்குப் பிறகும் கூட இது முஸ்லிம்களைப் பாதிக்கும் வகையில் இருப்பதாகக் கூறுவது ஆச்சர்யம்தான்.

நான் 'ஹேராம்' படம் எடுத்தபோது முஸ்லிம்களின் தரப்பைக் கூறுவதற்கு ஏகப்பட்ட இடங்களைத் திட்டமிட்டு உருவாக்கினேன். திரைப்பட வர்த்தகர்கள் ஹேராமில் எத்தனைப் பாட்டு, எத்தனை சண்டை? என்று கேட்டபோது, காந்தியை இந்துத்துவ தீவிரவாதி சுட்டுக்கொல்வது தான் உச்சக்கட்ட சண்டை என்றேன்.

'ஹேராம்' முஸ்லிம்களுக்கு எதிரானபடம் என்றார்கள் சிலர். ஆனால் இந்துத் தீவிரவாதத்தை எடுத்துக்காட்டிய படம். மறக்கடிக்கப்பட்ட மாபெரும் போராளியான யூசுப்கானின் வரலாற்றை 'மருதநாயகம்' என்ற பெயரில் படமாக எடுக்கத் துணிந்தவனும் நான்தான். முஸ்லிம்களைக் கொச்சைப்படுத்துவது என் நோக்கமல்ல.

கேள்வி : நீங்கள் முஸ்லிம்களுக்கு இணக்கமானவர்தான். ஆனால் உங்கள் படம் காயப்படுத்தும் வகையில் தானே அமைந்துள்ளது. உதாரணத்திற்கு கோவை குண்டு வெடிப்பு சம்பவம் 1998ல் நடந்தது. குஜராத் கலவரம் 2002ல் நடந்தது. குஜராத் கலவரத்தில் முஸ்லிம் ஒருவருடைய மூன்றாவது மனைவி (வயது 16) உயிரோடு எரிக்கப்பட்டதால், அவர் பயங்கரவாதியாக மாறி கோவையில் குண்டுவைப்பது போல் கூறியிருக்கிறீர்கள் இப்படி வரலாற்றைத் திரிப்பதால்தானே முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை நடக்கிறது. 2002ல் நடந்த சம்பவம் 1998ல் நடந்த சம்பவத்துக்கு எப்படி காரணமாக இருக்க முடியும்?

கமல்: வரலாறு முன்பின்னாகத் திரிவடைந்து மொத்தமாகவே குழப்பி இருக்கிறது. நடந்ததை மட்டும் சொல்வது தான் வரலாறு. நடந்த சம்வத்தின் மீது தன் கருத்தையும், பார்வையையும் கூறுவது வரலாற்றாசிரியனின் வேலை அல்ல. அதனால் ஹிந்தியில் இதிலிஹாஸ் (இவ்வாறு நடந்தது) என்று குறிப்பிடுகிறார்கள்.

நம்மவர் என்ற படத்தில் நான் வரலாற்று ஆசிரியராக நடித்தேன். வரலாற்றுக் குளறுபடிகளைப் பற்றி நான் செய்த விமர்சனத்தை என்ன காரணத்திற்காகவோ சென்சாரில் வெட்டிவிட்டார்கள். அதைச் சேர்க்க வேண்டும் என்று நான் வாதாடிய போதும் அவர்கள் ஏற்கவில்லை! அந்தப் பகுதி இதுதான்.

முகலாயர் படையெடுப்பு என்றும் வெள்ளையர் என்றும் நாம் பாடம் சொல்லித் தருகிறோம். முகலாயர்கள் இங்கு வந்து, இங்குள்ள பெண்களையே திருமணம் செய்து கொண்டு இங்கேயே அரண்மனைகளைக் கட்டி ஆட்சி செய்தார்கள். இந்த நாட்டை அவர்கள் வளப்படுத்தினார்களே தவிர, இங்கு சுரண்டி ஆப்கானிஸ்தானுக்கு கொண்டு போய் சேர்க்கவில்லை.

ஆனால் ஆங்கிலேயேர்கள் இங்கு வளங்களைச் சுரண்டி பிரிட்டனில் சேர்த்து வைத்தார்கள். அவர்கள் இந்த நாட்டைத் தம் நாடாக ஒரு போதும் கருதியதே இல்லை. ஆனால் முகலாய மன்னர் பஹதூர் 'இந்த நாட்டில் தன் உடலைப் புதைக்க ஆறுகெஜ நிலம் கிடைக்க வில்லையே என்று கண்ணீர்க் கவிதையை பர்மா சிறையிலிருந்து எழுதினார். (அந்த உருது கவிதையை கமல் மனப்பாடமாகவும் சொன்னார்.

இந்த நாட்டை வளப்படுத்தியவர்களை படையெடுத்தவர்கள் என்றும், சுரண்டியவர்களை வருகை தந்தவர்கள் என்றும் எப்படி சொல்லாம் என்பது தான் நான் வைத்த விவாதம்.

கேள்வி : தற்போதைய தமிழ்த் திரையுலகம் மீது எங்களுக்கு மரியாதை இல்லை. ஆனால் நியாயத்திற்காகக் குரல்கொடுப்பவர் என்ற முறையில் உங்கள் மீது ஒரு மதிப்பு உண்டு. பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட போது, நீங்கள் கண்டனம் செய்ததை நாங்கள் மறக்க வில்லை.

கமல் : நான் நடிகனாக அல்ல மனிதனாக இருந்து அந்த அராஜகத்தைக் கண்டித்தேன். ராமஜென்ம பூமி என்கிறார்கள். ராமர் பிரந்த இடம் என்று சதுரஅடிவரை கணக்கிட்டுச் சொல்கிறார் கள். பிரசவத்திற்காக கோசலை படுத்தி ருந்த இடம் அதுதான் என்கிறார்களா?. இதில் கலைஞரின் கருத்தோடு எனக்கு முழு உடன்பாடு உண்டு.

தலைப் பிரசவத்திற்கு பெண்கள் பிறந்த வீட்டிற்கு செல்வது தான் தொன்று தொட்ட வழக்கம். அப்படிப்பார்த்தால் கோசலையின் சொந்த ஊர் கந்தஹார் ஆப்கானிஸ்தானில் இருக்கிறது. ராமர் பிறந்த இடத்தில் கோவில் கட்ட வேண்டும் என்பவர்கள் ஆப்கானிஸ்தா னில் போய் வேண்டுமானால் கட்டலாம் என்றார். அதுதான் எனது நிலைப்பாடும்.

கேள்வி : அப்போது பிரதமர் நரசிம்மராவைக்கூட சந்தித்தீர்களே?

கமல் : பம்பாய் கலவரத்தின் (1993) கொடுமைகளை நேரில் பார்த்து என்னால் மனம்தாள முடியாமல் அங்கேயே அழுது விட்டேன். உடனே சென்று திரைப்படப் பிரமுகர்களுடன் பிரதமர் நரசிம்மராவை சந்தித்தேன். நடந்த சம்பவங்கள் குறித்துக் கேட்டேன். மஹா ஆரத்தி பற்றி எதுவுமே தெரியாது என்றார். என்னுடன் வந்த நண்பர் இதைக்கேட்டு கேலியாக சிரித்து விட்டார் (அவர் முஸ்லிம் நண்பர்) இதனால் அவருக்கு கொஞ்சம் கோபம்.

கலவரங்களின் போது மகாத்மா காந்தி வீதியில் இறங்கி நடந்துள்ளார். வாருங்கள், நாங்கள் உங்களோடு வருகிறோம். பம்பாய் வீதிகளில் நடந்து பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்போம் என்றேன்.

அது எனக்குப் பாதுகாப்பானதில்லை என்று பாதுகாப்பு அதிகாரிகள் சொல்கிறார்கள் என்றார்.

பிரதமருக்கே பாதுகாப்பில்லை என்றால் சாதாரண பாதசாரிகளுக்கு என்ன பாதுகாப்பு கிடைக்கும்? என்றேன்.

சற்று கோபமாக முறைத்த நரசிம்மராவ் நினைத்த உடன் கிளம்புவதற்கு இது ஒன்றும் சினிமா 'ஷுட்டிங் இல்லை என்றார். நீங்கள் நினைப்பது போன்ற தல்ல சினிமா 'ஷுட்டிங். அதற்கும் ஏராளமான முன் திட்டங்கள் வேண்டும். மக்களைச் சந்திப்பதற்காக எங்களுடன் வரமுடியுமா? என்றேன்.

நிலைமையின் வளர்ச்சியைப் பார்த்து முடிவு செய்யலாம்'' என்றார்.

உடனே நான் இந்த நிலைமை மேலும் வளர அனுமதிக்கப் போகிறீர்களா?'' என்றேன்.

உடனே கோபமான அவர், எனக்கு நீங்கள் ஆங்கிலம் கற்றுக் கொடுக்கிறீர்களா?

Do you teach me english? என்றார். வேறெதுவும் கேட்க வேண்டுமா? என்று வேறுபக்கம் பார்த்துக் கொண்டு கேட்டார்.

பெரிய கும்பிடாகப் போட்டுவிட்டு வெளியேறினோம். அப்போது ஆனந்த விகடன் இதழில் இச்சம்பவம் விரிவாக வந்திருந்தது.

கேள்வி : மணிரத்தினத்தின் பம்பாய் திரைப்படம் இந்தக் கலவரங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. அந்தப் படமும் முஸ்லிம்களை வன்முறையாளர் களாகத்தானே சித்தரித்தது?

கமல்: இதை நான் அப்போதே எதிர்த்தேன்.

(முஸ்லிம்களைத் தொடர்ந்து குற்றவாளிகளாக சித்தரிப்பது தவறானது மணிரத்னத்தின் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கமல்ஹாசன் பம்பாய் படம் குறித்து பேட்டியளித்திருந்தார்) இவ்வளவுக்கும் மணிரத்னம் எனது உறவுக்காரர். அவருக்கு எங்கள் பெண் ணைக் (மணிரத்தினம் மனைவி சுஹாசினி கமலின் அண்ணன் மகள்) கொடுத்திருக்கிறோம். அவர் எனக்கு மாப்பிள்ளை முறை, ஆனாலும் கூட நியாயத்தை நான் கூறினேன். அவரது படத்தின் விளைவாக எதாவது விபரீதம் நடந்திருந்தால், எங்கள் பெண்ணுக்குதானே பாதிப்பு...

கேள்வி : செப்-11, 2001 சம்பவத்திற்குப் பிறகு (அமெரிக்காவின் இரட்டை கோபுரத் தகர்ப்பு) ரஹழ் ர்ய் பங்ழ்ழ்ர்ழ்ண்ள்ம் என்ற பெயரில் முஸ்லிம்கள் மீது உலகளாவிய அளவில் ஒடுக்கு முறை ஏவப்பட்டுள்ளது. நம் நாட்டில் பாபரி மஸ்ஜித் இடிப்பிற்குப்பிறகு வளர்ந்தோங்கிய மதவாதத் தால் பாதிக்கப்படுவர்களும் முஸ்லிம்கள்தான்.

எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதிகள் அல்ல, ஆனால் தீவிரவாதிகள் அனைவரும் முஸ்லிம்கள் என்ற கருத்து பரப்பப் படுகிறது. ஊடகங்களிலும் வலுவான குரலற்ற (Voiceless Community) சமுதாயமாக உள்ள முஸ்லிம் சமுதாயத்தை சினிமா போன்ற சக்திவாய்ந்த ஊடகங்கள் மேலும் ஒடுக்குவது சரியா?

கேள்வி : பயங்கரவாதிகள் ஏன் உருவாகிறார்கள்?

கேள்வி : உன்னைப் போல் ஒருவன் உருவாக்கிய காயத்தை எப்படி ஆற்றப் போகிறீர்கள்?

போன்ற கேள்விகளுக்கு கமலின் பதில்கள் தொடரும்........
இன்ஷாஅல்லாஹ்.
நன்றி:'மக்கள் உரிமை'' & அதிரை POST

தீபாவளி நலவாழ்த்துக்கள்இந்த இனிய நாளில் நமது மற்று மத சாகோதரர்கள் அனைத்து மக்களுக்கும் எங்களது உள்ளங்கனித்த தீபாவளி நலவாழ்த்துக்கள்.

வாழ்த்துக்களுடன்,
ஸ்ரீவைமக்கள்

ஸ்ரீவைகுண்டத்தில் ஆதிதிராவிடர் மாணவியர் விடுதி சீரமைப்பு

ஸ்ரீவைகுண்டத்தில் உள்ளது அரசு ஆதிதிராவிடர் மாணவியர் விடுதி. மாணவிர் விடுதியில் மாணவியருக்கு மதியம், காலை, இரவு நேர உணவு சரியில்லை என்றும், நாற்றம் அடிக்கிறது எனவும், சரியான கழிப்பிட வசதி இல்லை, விடுமுறை அல்லாத நாட்களில் அறிவிப்பில்லாமல் மூடுவதால் கடந்த 13ம் தேதி அறிவிப்பின்றி மூடப்பட்டது.இதனால் மாணவியர் அவதியடைந்தனர் என்று செய்தி வெளியானது

பத்திரிக்கை செய்தி எதிரொலியால் மாவட்ட அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கையால் 24 மணி நேரத்தில் ஸ்ரீவைகுண்டத்திலுள்ள ஆதிதிராவிடர் மாணவியர் விடுதி சீரமைக்கப்பட்டது. அனைத்து மாணவியரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

வியாழன், 15 அக்டோபர், 2009

மறக்க முடியாத பாபர் மசூதி - ஒரு பார்வை

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் 475 ஆண்டுகளுக்கு முன்பு பாபர் மசூதி கட்டப்பட்டது. அங்கு ராமர் கோவில் கட்டும் வேலை 6_12_1992 அன்று பகல் 12.15 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக விசுவ இந்து பரிஷத், பாரதீய ஜனதா, ஆர்.எஸ்.எஸ். ஆகிய இயக்கங்களைச் சேர்ந்த 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் திரண்டிருந்தார்கள்.

இந்த இடத்தின் அருகிலேயே பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அங்கு தலைவர்கள் பேசிக்கொண்டு இருந்தார்கள். அந்த நேரத்தில், கூட்டத்தின் ஒரு பகுதியினர் "ஜெய் ஸ்ரீராம்" என்று முழங்கிய படியே பாபர் மசூதி வளாகத்தை நோக்கி பாய்ந்து சென்றனர்.

தலைவர்கள் தடுத்தும் அதைமீறிச் சென்றார்கள். அவர்கள் கைகளில் சுத்தியல், இரும்பு குழாய், மண்வெட்டி போன்ற ஆயுதங்களை வைத்திருந்தனர். பாபர் மசூதியை நோக்கி கற்களை வீசினார்கள். பாபர் மசூதி வளாக பகுதியில் மரப்பட்டைகளால் தடுப்பு வேலி அமைக்கப்பட்டு இருந்தது. அதை கரசேவை தொண்டர்கள் அடித்து உடைத்து எறிந்துவிட்டு பாபர் மசூதிக்குள் புகுந்தனர். போலீசார் எண்ணிக்கையில் மிகக்குறைவாக இருந்ததால் தடுத்து நிறுத்த முடியவில்லை. தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள். அதற்கும் பலன் அளிக்கவில்லை. பாபர் மசூதி சுற்றுச்சுவர் `மெயின்கேட்' (பிரதான நுழைவு வாயில்) ஆகியவை நொறுக்கி சேதப்படுத்தப்பட்டன.

பாபர் மசூதியின் மேல் பகுதியில் உருண்டை வடிவில் 3 கோபுரங்கள் (டூம்) இருந்தன. அவற்றின் மீது ஏறி நின்று, காவிக்கொடியை ஏற்றினார்கள். பிறகு டூமை (கோபுரம்) இடிக்கத்தொடங்கினார்கள். செங்கற்களை உருவி எடுத்தனர். சிலர் சம்மட்டியால் உடைத்துத் தள்ளினார்கள். பகல் 2.45 மணி அளவில், முதல் கோபுரம் இடித்து தள்ளப்பட்டது. 4.30 மணிக்கு 2_வது கோபுரமும், 4.45 மணிக்கு 3_வது கோபுரமும் இடிக்கப்பட்டது.

இதுபற்றி மத்திய உள்துறை மந்திரி சவானுக்கு தகவல் எட்டியது. உடனே அவர் உத்தரபிரதேச முதல்_மந்திரியாக இருந்த கல்யாண்சிங்குடன் அவசரமாக டெலிபோனில் தொடர்பு கொண்டு பேசினார். "நிலைமையை சமாளிக்க அயோத்தியை சுற்றி நிறுத்தி வைத்துள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படையை பயன்படுத்துங்கள்" என்று உத்தரவிட்டார். அதன் பிறகு மத்திய ரிசர்வ் போலீஸ் படையும், அதிரடிப்படையும் பாபர் மசூதி வளாகத்துக்கு கிளம்பினார்கள். ஆனாலும் அவர்களால் எளிதாக செல்ல முடியவில்லை.

ரோடுகளில் கற்கள், தண்ணீர் தொட்டிகள், பீப்பாய்கள் போன்றவைகளை போட்டு தடை ஏற்படுத்தி இருந்தனர். அவற்றையெல்லாம் அகற்றிக்கொண்டே சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் போலீஸ் படை முன்னேறி சென்றது. பாபர் மசூதி வளாகப்பகுதி முழுவதுமே தொண்டர்களாக இருந்தனர். ஒன்றும் செய்ய இயலாததால் போலீஸ் படை வாபஸ் பெறப்பட்டது. அதே நேரத்தில் பொதுக்கூட்டத்தில் முரளி மனோகர் ஜோஷி, எல்.கே.அத்வானி, அசோக் சிங்கால், செ.வி.சேஷாத்திரி ஆகியோர் பேசிக்கொண்டிருந்தார்கள்.

தொண்டர்களில் சிலர் அங்குள்ள ராமர் கோவில் கர்ப்பகிரகத்துக்குள் புகுந்து ராமர் சிலை மற்றும் சில சிலைகளை எடுத்துச் சென்றனர். அங்கு பூஜை நடத்தி வந்த விஜயகுமார் என்ற பூசாரியை தாக்கிவிட்டு சென்றுவிட்டார்கள். பின்னர் மாலையில் ராமர் சிலை மீண்டும் அதே இடத்தில் கொண்டு வந்து வைக்கப்பட்டது.

பாதுகாப்பாக இருப்பதற்காகவே ராமர் சிலை எடுத்துச் செல்லப்பட்டதாக பிறகு அறிவிக்கப்பட்டது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் காட்டுத்தீ போல பரவியது. பதட்டமான சூழ்நிலை உருவானது. இந்த நிலையில் பாபர் மசூதி ஒருங்கிணைப்பு கமிட்டி தலைவர் சையத் சகாபுதீன் ஒரு வேண்டுகோள் விடுத்தார். அதில், "பாபர் மசூதியை பாதுகாக்க தவறிய கல்யாண்சிங் அரசை "டிஸ்மிஸ்" செய்ய வேண்டும். முஸ்லிம்கள் பொறுமையாக இருக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டிருந்தார். இதேபோல டெல்லியில் ஜூம்மா மசூதி முன்பு திரண்டிருந்தவர்கள் மத்தியில் இமாம் சையத் அப்துல் புகாரில் பேசுகையில், "இந்த சமயத்தில் முஸ்லிம்கள் பொறுமையையும், சகிப்புத் தன்மையையும் கடைபிடிக்க வேண்டும்.

பாபர் மசூதி இடிக்கப்படுவதை தடுக்க முன் நடவடிக்கை எடுக்காததற்கு பிரதமர் நரசிம்மராவ், உள்துறை மந்திரி சவான் ஆகியோர்தான் காரணம்" என்று குற்றம் சாட்டினார். பாபர் மசூதி இடிக்கப்பட்டதை அடுத்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கலவரம் ஏற்பட்டது. டெல்லி, மும்பை, ஜெய்ப்பூர், ஐதராபாத் போன்ற நகரங்களில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அன்று ஒரே நாளில் 233 பேர் பலியானார்கள்.

அதிகபட்சமாக மராட்டியத்தில் 68 பேர் கொல்லப்பட்டனர். குஜராத்தில் 41 பேரும், உத்தரபிரதேசத்தில் 35 பேரும், ராஜஸ்தானில் 23 பேரும், கர்நாடகத்தில் 24 பேரும், மத்தியபிரதேசத்தில் 21 பேரும், ஆந்திராவில் 10 பேரும், மேற்கு வங்காளத்தில் 5 பேரும், டெல்லியில் பீகாரில் 2 பேரும், கேரளாவில் ஒருவரும் இறந்தார்கள். அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவம் பற்றி, மத்திய அரசு அவசர ஆலோசனை நடத்தியது. உத்தரபிரதேசத்தில் கல்யாண்சிங் தலைமையில் இருந்த பாரதீய ஜனதா மந்திரிசபையை "டிஸ்மிஸ்" செய்வது என்றும், அந்த மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை பிரகடனம் செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

மத்திய மந்திரிசபையின் சிபாரிசை ஏற்று, கல்யாண்சிங் மந்திரி சபையை டிஸ்மிஸ் செய்து, ஜனாதிபதி வெங்கடராமன் உத்தரவு பிறப்பித்தார். அதைத்தொடர்ந்து உத்தரபிரதேச மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமுலுக்கு வந்தது.

பாபர் மசூதி வரலாறு கி.பி. 1528:_அயோத்தியில் பாபர் மசூதி கட்டப்பட்டது. இதைக் கட்டியவர் பெயர் மிர் பாகி. இவர், பாபர் மீது மிகுந்த பற்று கொண்டவர். பாபர் மசூதி கட்டப்பட்ட இடம் ராமர் பிறந்த இடம் என்றும், அங்கு 11_ம் நூற்றாண்டில் ராமர் கோவில் கட்டப்பட்டது என்றும், அந்தக் கோவில் மீது பாபர் மசூதியைக் கட்டிவிட்டார்கள் என்றும் இந்துக்கள் குற்றம் சாட்டினர்.

1853:_ ராமர் பிறந்த இடம் தொடர்பாக இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே மோதல் நடந்து 75 பேர் கொல்லப்பட்டனர்.

1857:_ இந்து சாமியார் ஒருவர், பாபர் மசூதி வளாகத்தில் ஒரு சிறு பகுதியில் ராமர் கோவில் அமைத்தார்.

1859:_ இந்துக்களும், முஸ்லிம்களும் தனித்தனியே வழிபாடு நடத்துவதற்கு வசதியாக சுவர் ஒன்றை அரசாங்கம் கட்டியது.

1934:_ இந்து _ முஸ்லிம் கலவரத்தில், பாபர் மசூதி சுவரும், ஒரு கோபுரமும் சேதம் அடைந்தன.

1983:_ பாபர் மசூதி உள்ள இடத்தில் ராமர் கோவில் கட்டவேண்டும் என்ற இயக்கத்தை, விஸ்வ இந்து பரிஷத் தொடங்கியது.

1986:_ இந்துக்களும் சென்று வழிபடுவதற்கு வசதியாக, பாபர் மசூதி கதவுகளைத் திறந்து விடும்படி, பைஜாபாத் மாவட்ட நீதிபதி கட்டளையிட்டார்.

1989:_ பாபர் மசூதி அருகே இந்து கோவில் கட்ட ராஜீவ் காந்தி அரசாங்கம் அனுமதி அளித்தது. இதைத்தொடர்ந்து நடந்த கலவரங்களில் சுமார் 500 பேர் இறந்தனர்.

1990:_ ராமர் கோவில் கட்ட ஆதரவு திரட்டும் நோக்கத்துடன், பாரதீய ஜனதா தலைவர் எல்.கே.அத்வானி "ரத யாத்திரை" தொடங்கினார். அயோத்தியில், ராமர் கோவில் கட்ட ஒரு லட்சம் தொண்டர்கள் ("கர சேவகர்கள்") திரண்டனர். இவர்கள், பாபர் மசூதிக்குள் நுழைந்தபோது கலவரம் மூண்டது. போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 30 பேர் கொல்லப்பட்டனர்.

1992 டிசம்பர் 6:_ பாபர் மசூதி இடிக்கப்பட்டது.தொடர்ந்து நடந்த கலவரங்களில் 2 ஆயிரம் பேர் இறந்ததாக மதிப்பிடப்படுகிறது.

உயகுர் இஸ்லாமியர்கள் 6 பேருக்கு சீன நீதிமன்றம் மரணதண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது

கடந்த ஜூலை மாதம் சிஞ்சியான் மாகாணத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேருக்கு சீன நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

சீனாவின் சிஞ்சியான் மாகாணத்தில் உள்ள உரும்கியில் உய்குர் இன இஸ்லாமியர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர்.இங்கு கடந்த ஜூலை 5 ஆம் தேதியன்று கலவரத்தில் ஏறக்குறைய 200 பேர் கொல்லப்பட்டனர்.ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர்.

இந்த கலவரம் தொடர்பாக 718 பேர் கைது செய்யப்பட்டனர்.இதில் 21 பேர் மீது கொலை,கொள்ளை, தீ வைப்பு மற்றும் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியது உள்ளிட்ட குற்றச்சாற்றுகள் சுமத்தப்பட்டன.

இவர்கள் மீதான வழக்கு விசாரணை சிஞ்சியான் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.இந்நிலையில், முதல் கட்டமாக 6 பேர் மீதான குற்றச்சாற்று நிரூபிக்கப்பட்டதாக கூறி அவர்களுக்கு மரணதண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இத்தகவலை சீன மத்திய தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.தண்டனை விதிக்கப்பட்ட அனைவருமே உயகுர் இஸ்லாமியர்களே என்பது அவர்களது பெயர்கள் மூலம் தெரியவந்துள்ளது.

குஜராத் இனப்படுகொலை குற்றவாளிகள்பிப்ரவரி 28, 2002 நரோதாவில் பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்ட ஒருவரின் ஒப்புதல் வாக்குமூலம் "தெகல்கா' வெளியிட்ட ஒலிப்பதிவுகளில் உள்ளது. நரோதாவில் 112 பேர் கொடூரமாகத் தாக்கப்பட்டு, வெட்டிக் கொல்லப்பட்டு, எரிக்கப்பட்டு வெகு நேரம் ஆவதற்குள் மோடி அங்கு வந்ததாகவும், தனது கறுப்புப் பூனை கமாண்டோக்கள் சுற்றியிருந்த நிலையிலும் கூட அக்கொடூரக் குற்றங்களில் ஈடுபட்டவர்களை அவர் மனதாரப் பாராட்டியதாகவும் அந்த ஒலிப்பதிவில் அவர் குறிப்பிடுகிறார் (இதன் மூலம் மோடியின் கறுப்புப் பூனை கமாண்டோக்களும் இந்நிகழ்விற்கு சாட்சிகளாகின்றனர்).

"ஆபரேசன் கலங்க்' "தெகல்கா'வால் பல மாதங்கள் திட்டமிட்டு நடத்தப்பட்டு அக்டோபர் 2007இல் வெளியிடப்பட்டது. 2002 குஜராத் இனப்படுகொலைகளில் ஏதோ ஒரு வகையில் தொடர்பு கொண்டிருந்த பலரது வாக்குமூலங்களும், உரையாடல்களும் கொண்ட ஒலிப்பதிவுகளை தற்போது சி.பி.அய். நீதிமன்றத்திற்கு வெளியே பெறப்பட்ட வாக்குமூலங்கள் என்ற அடிப்படையில் விசாரணைக்கு எடுத்துக் கொண்டிருக்கின்றன.

இந்த உரையாடல்களின் உள்ளடக்கங்கள் அதிர்ச்சியூட்டுவனவாகவும் பல செய்திகளை அளிப்பனவாகவும் உள்ளன. கும்பல் கொலைகள், பாலியல் வன்புணர்வுகள் போன்றவற்றை அச்சமின்றி வெளிப்படையாக ஒப்புக் கொள்வதோடு, பிப்ரவரி 27, 2002க்கு பல வாரங்களுக்கு முன்பாகவே கோத்ரா மற்றும் கோத்ராவிற்குப் பிந்தைய வன்முறைகளுக்கான திட்டமிடுதல்களும், பிற மாநிலங்களிலிருந்து எவ்வாறு ஆயுதங்கள் வரவழைக்கப்பட்டன என்பது குறித்தும் விளக்குகின்றனர்.

அதோடு கும்பல் கொலைகள் மற்றும் வன்புணர்ச்சிகளைத் தூண்டி விடுவதில் முதலமைச்சர் நரேந்திர மோடிக்கு இருந்த நேரடி பங்கையும் விவரிக்கின்றன "தெகல்கா' ஒலிப்பதிவுகள் மூலம் வெளிப்பட்டவற்றின் அடிப்படையில் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் இந்த ஒலிப்பதிவுகளின் நம்பகத்தன்மை குறித்து ஆராய வேண்டும். "தெகல்கா' பதிவில் பேசிய அனைவரையும், தங்கள் உரையாடலில் அவர்கள் குறிப்பிடும் நபர்களையும் (அவர்கள் எவ்வளவு அதிகாரம் கொண்ட பதவிகளில் இருந்த போதிலும்) சிறப்புப் புலனாய்வுக்குழு விசாரிக்க வேண்டும்.

மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் கணக்கு அலுவலகத்தில் பணிபுரிந்த வதோதரா என்பவருடன் இப்படியான ஓர்உரையாடல் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருடன் மோடி மற்றும் மோடியின் கையாளான பாபு பஜ்ரங்கியின் நேரடி உத்தரவுகள் குறித்து அவர் சொல்கிறார். கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மோடி சென்றது, கொடூரமாக பாதிக்கப்பட்டு சிதைந்து போய் அருகிலுள்ள புனரமைப்பு முகாம்களில் அடைக்கலம் புகுந்துள்ள மக்களை காண அல்ல; இந்த உரையாடல்களின் மூலம் அவர் கொடூரத்தின் வெற்றி நாயகனாகவே அங்கு சென்றுள்ளதாகத் தெரிகிறது. - அடுத்த இதழிலும்

“கொல்லப்பட்டவர்களின் தலையை வைத்து கிரிக்கெட் விளையாடினோம்''

மோடி நடத்திய ஆவணப்படுத்தப்படாத ரகசியக் கூட்டங்கள் :

பிப்ரவரி 27, 2002 அன்று முதலமைச்சர் மோடியின் அலுவலகத்தில் நடத்தப்பட்ட ரகசியக் கூட்டத்திற்கு கூட்டக் குறிப்புகளோ அல்லது வேறு ஆவணங்களோ இல்லாதது மட்டுமல்ல; இதே போன்ற பல கூட்டங்கள் உயர் அதிகாரிகளால் நடத்தப்பட்டு, அவர்களுக்கு கீழிருக்கும் அதிகாரிகள் அதில் கலந்து கொண்டுள்ளனர் என்பதோடு, அந்தக் கூட்டங்களுக்கும் எவ்வித ஆவணமும் பராமரிக்கப்படவில்லை.

அன்று காவல் துறை கண்காணிப்பாளர் (பாதுகாப்பு) பதவி வகித்த சஞ்சீவ் பட், இம்மாதிரியான பல கூட்டங்களில் காவல் துறை கூடுதல் தலைவரான ஜி.சி. ரெய்கரின் ஊழியர் அதிகாரியாக கலந்து கொண்டுள்ளார். ஆனால் தனக்கு இடப்பட்ட உத்தரவுகள் குறித்து எவ்வித ஆவணங்களையும் அவர் வைத்திருக்கவில்லை.

கே. என். ஷர்மா, அகமதாபாத் பகுதி காவல் துறை அய்.ஜி. பதவி வகித்த இவரது பகுதியில்தான், அதிகமான எண்ணிக்கையில் மக்கள் கலவரத்தில் கொல்லப்பட்டிருந்தனர். இவரும் இத்தகைய சட்ட விரோதமான கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறார்.

தீபக் ஸ்வரூப், வதோரா பகுதி காவல் துறை அய்.ஜி. இவர் பதவி வகித்த பகுதியில்தான் கோத்ரா நிகழ்வு நடந்தது. அதோடு, சிறுபான்மையினருக்கு எதிரான கும்பல் கொலைகள் மற்றும் பிற வன்கொடுமைகளையும் நடத்தியிருக்கின்றன. இவரும் இக்கூட்டங்களில் பங்கேற்றிருக்கிறார்.

எம்.கே. டாண்டன், அகமதாபாத் உதவி ஆணையர். இவரது பகுதியில்தான் நரோதா பாட்டியா, குல்பர்கா சமூகம் உள்ளிட்ட பல கொடூர கும்பல் கொலைகள் நடந்துள்ளன. இவர் உயர் மட்ட வலைப் பின்னலின் பகுதியாக இருந்திருக்கிறார்
.

குல்பர்கா தாக்குதலில் தப்பியவர்கள் பாதுகாப்பான பகுதிக்கு தப்பியோடிய போதும், கொல்லப்பட்ட 70 பேரின் உடல்கள் அடையாளம் காணக்கூடிய நிலையில் இருந்த போது அவர் அந்த இடத்தில் இருந்திருக்கிறார். 3 நாட்களுக்குப் பிறகு, குல்பர்க் மற்றும் நரோதாவில் கொல்லப்பட்ட 133 உடல்கள் மொத்தமாக புதைக்கப்பட்ட போது உடல்கள் சிறு துண்டுகளாக வெட்டப்பட்டிருந்தன. "தெகல்கா' விடம் உரையாடும்போது குல்பர்க் சமூக படுகொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான மதன் சவால், கொல்லப்பட்டவர்களின் தலையை வைத்து தான் கிரிக்கெட் விளையாடியதாகக் குறிப்பிடுகிறார், விடை தெரியாத கேள்வி என்னவென்றால் அந்த உடல்களைத் துண்டாடியதில் டாண்டனும் பங்கேற்றாரா என்பதே.

அமிதாப் பதக், காந்தி நகர் பகுதி அய்.ஜி. இவரது பகுதியில்தான் கோத்ராவிற்கு பிந்தைய கலவரத்தில் அதிக எண்ணிக்கையில் மக்கள் கொல்லப்பட்டிருந்தனர். எடுத்துக்காட்டாக, மெஹ்சானா மாவட்டம் சர்தார்புரா மற்றும் சபர்கந்தா மாவட்டத்தில் பல இடங்கள். இவரும் இச்சதியில் பங்கு பெற்றிருந்தார்.

ஷவானந்த் ஜா, அகமதாபாத் காவல் துறை கூடுதல் ஆணையர். இவரது பகுதியில் சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிராக பல கொடுமைகள் நடந்தன. இவர் முதலமைச்சருக்கு மிக நெருக்கமானவர். 2004-2006க்கு இடைப்பட்ட காலத்தில் உள்துறைச் செயலாளராக, அரசு சார்பாக பல தவறான அறிக்கைகளை அவர் உச்ச நீதிமன்றத்தில் அளித்தார். தற்போது உச்ச நீதிமன்றம் நியமித்திருக்கும் சிறப்புப் புலனாய்வுக் குழுவில் இவரும் ஓர் உறுப்பினர் என்பது நகை முரண்.

டி.டி. துதேஜா, வதோரா பகுதி காவல் துறை ஆணையர். ஏறத்தாழ 37க்கும் மேற்பட்ட வன்முறை நிகழ்வுகள் இவரது பகுதியில் நடந்துள்ளன. இதில் பெஸ்ட் பேக்கரி நிகழ்வும் அடங்கும்.

நான் ஏன் புஷ் ஷின் மீது செருப்பை வீசினேன் ?

ஜார்ஜ் புஷ்ஷின் மீது செருப்பை வீசியெறிந்த ‘குற்றத்திற்காக’ ஒன்பது மாத சிறை வாசத்திற்குப் பின், கடந்த வாரம் விடுதலையாகியுள்ள முன்தாஜர் அல் ஜெய்தி எழுதிய கீழ்க்காணும் கட்டுரை, கார்டியன் செய்தித்தாளில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது. அதன் தமிழாக்கம் கீழே தரப்பட்டுள்ளது.

முன்தாஜர் அல் ஜெய்தி
நான் விடுதலையடைந்து விட்டேன். ஆனால், எனது நாடு இன்னமும் போர்க் கைதியாக சிறை வைக்கப்பட்டிருக்கிறது. செயல் குறித்தும், செயல்பட்டவர் குறித்தும், நாயகனைக் குறித்தும், நாயகத்தன்மை வாய்ந்த செயல் குறித்தும், குறியீடு குறித்தும், குறியீடான செயல் குறித்தும் நிறையப் பேச்சுக்கள் அடிபடுகின்றன. ஆனால், எனது எளிமையான பதில் இதுதான். என் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியும், எனது தாயகத்தை ஆக்கிரமிப்பானது எவ்வாறு தனது பூட்சுக் கால்களால் நசுக்கி இழிவுபடுத்த விரும்பியதென்பதும்தான், என்னை செயல்படக் கட்டாயப்படுத்தியது.
கடந்த சில ஆண்டுகளில், ஆக்கிரமிப்பின் துப்பாக்கி ரவைகளுக்கு இரையாகி பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட தியாகிகள் தமது இன்னுயிரை இழந்தார்கள். கணவனை இழந்த ஐம்பது இலட்சம் பெண்களும், உடல் உறுப்புகளை இழந்த ஆயிரக்கணக்கான மக்களும் நிறைந்து கிடக்கும் தேசம்தான் இன்றைய இராக். நாட்டுக்குள்ளும், வெளியிலும் இலட்சக்கணக்கானவர்கள் அகதிகளாய் உழன்று கொண்டிருக்கிறார்கள்.

துருக்கியர், அசிரியர், சபியர், யாசித் என அனைவரோடும் தனது அன்றாட உணவை அரபு இனத்தவன் பகிர்ந்துண்ட ஒரு தேசமாக நாங்கள் வாழ்ந்திருந்தோம். சன்னியுடன் ஷியா ஒரே வரிசையில் நின்று வழிபட்ட காலமது. கிறிஸ்துவின் பிறந்தநாளை கிறிஸ்தவரோடு இசுலாமியர் இணைந்து கொண்டாடிய நாட்கள் அவை. இவையனைத்தும் பத்தாண்டுகளுக்கும் மேலான பொருளாதாரத் தடைகளுக்கிடையே, பசியை பகிர்ந்து கொள்ள நேர்ந்த போதிலும் கூட நீடித்திருந்தன.
எமது பொறுமையும், ஒற்றுமையும் ஏவப்பட்ட ஒடுக்குமுறையை மறக்கவிடாமல் தடுத்தன. ஆனால், ஆக்கிரமிப்போ சகோதரர்களையும், நெருக்கமானவர்களையும் பிரித்துத் துண்டாடியது. எங்கள் வீடுகளை சுடுகாடுகளாக்கியது.

நான் நாயகனல்ல. ஆனால் எனக்கு ஒரு கண்ணோட்டம் உண்டு. ஒரு நிலைப்பாடு உண்டு. எனது நாடு இழிவுபடுத்தப்படுவதைக் கண்ட பொழுது, எனது பாக்தாத் நகரம் தீயில் கருகிய பொழுது, எனது மக்கள் படுகொலை செய்யப்பட்ட பொழுது, நான் இழிவுபடுத்தப்பட்டவனாக உணர்ந்தேன். ஆயிரக்கணக்கான துயரம் தோய்ந்த காட்சிகள் எனது மனதில் அலைமோதிக் கொண்டிருந்தன. என்னை போரிடத் தூண்டின. இழிவுபடுத்தப்பட்ட அபுகிரைப்…பலூஜா, நஜாஃப், ஹடிதா, சதர் நகரம், பஸ்ரா, தியாலா, மொசூல், தல் அஃபர் என ஒவ்வொரு இடத்திலும் நடைபெற்ற படுகொலைகள்… ஒரு அங்குலம் குறையாமல் காயமுற்ற எனது நாடு… எரியும் தேசத்தினூடாகப் பயணம் செய்து, நேரடியாக பாதிக்கப்பட்டவர்களின் வலியைக் கண்ணால் கண்டேன். துயருற்றவர்களின் ஓலத்தை, அனாதைகளாக்கப்பட்டவர்களின் அலறலை காதுகளில் கேட்டேன். ஒரு அவமானம் என்னை அழுத்தி வாட்டியது. நான் பலவீனனாக உணர்ந்தேன்.

அன்றாடம் நிகழ்ந்த துயரங்களை தெரிவிக்கும் ஒரு தொலைக்காட்சி நிருபராக, எனது தொழில்சார்ந்த கடமைகளை முடித்த பின்னால், தரைமட்டமாக்கப்பட்ட இராக்கிய வீடுகளின் இடிபாடுகளின் தூசியையோ அல்லது ஆடைகளில் படிந்த இரத்தக் கறைகளையோ, நான் தண்ணீரால் கழுவிய பொழுதுகளில், பற்கள் நெறுநெறுக்க, பாதிக்கப்பட்ட எனது நாட்டு மக்களின் பேரால் பழிக்குப் பழி வாங்குவேனென நான் உறுதிமொழி எடுத்துக் கொள்வேன்.

வாய்ப்பு வழிதேடி வந்தது. நான் அதனைக் கைப்பற்றிக் கொண்டேன்.
ஆக்கிரமிப்பினூடாகவும், ஆக்கிரமிப்பின் விளைவாகவும் சிந்தப்பட்ட அப்பாவிகளின் ஒவ்வொரு இரத்தத் துளிக்கும், வேதனையில் கதறிய ஒவ்வொரு தாயின் ஒலத்திற்கும், துயரத்தில் முனகிய ஒவ்வொரு அனாதையின் கண்ணீருக்கும், பாலியல் வன்புணர்ச்சியால் சிதைக்கப்பட்ட பெண்களின் அலறலுக்கும், நான் செய்ய வேண்டிய கடமையாகக் கருதியதனால்தான் அச்செயலை செய்தேன்.
என்னைக் கண்டிப்பவர்களுக்கு நான் சொல்வது: “நான் வீசியெறிந்த காலணி, உடைந்து நொறுங்கிய எத்தனை வீடுகளை தாண்டி வந்திருக்கிறதென்று உங்களுக்குத் தெரியுமா? பலியான எத்தனை அப்பாவிகளின் குருதியைக் கடந்து வந்திருக்கிறதென்று உங்களுக்குத் தெரியுமா? எல்லா மதிப்பீடுகளும் மீறப்படும்பொழுது செருப்புதான் சரியான பதிலடியாகத் தோன்றுகிறது.”
குற்றவாளியான ஜார்ஜ் புஷ்ஷின் மீது செருப்பை வீசியெறிந்த பொழுது, எனது நாட்டின் மீதான ஆக்கிரமிப்பை, எனது மக்களைப் படுகொலை செய்ததை, எனது நாட்டின் வளத்தை கொள்ளையடித்ததை, அதன் கட்டுமானங்களை தரைமட்டமாக்கியதை, அதன் குழந்தைகளை அகதிகளாக்கியதை, நான் ஏற்க மறுக்கிறேன் என்பதையே தெரிவிக்க விரும்பினேன்.
ஒரு தொலைக்காட்சி நிருபராக, நிர்வாகத்திற்கு தொழில்ரீதியாக ஏற்பட்ட சங்கடத்திற்கும், ஒருவேளை நான் பத்திரிக்கை தருமத்திற்கும் ஊறு விளைவித்திருப்பதாகக் கருதினால், அத்தகைய நோக்கம் எனக்கு இல்லாத போதும், எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஒட்டுமொத்தத்தில், ஒவ்வொரு நாளும் தனது தாயகம் இழிவுபடுத்தப்படுவதைக் காணச் சகியாத ஒரு குடிமகனின் அணையாத மனசாட்சியை வெளிப்படுத்தவே நான் விரும்பினேன். ஆக்கிரமிப்பின் அரவணைப்பிற்குள்ளிருந்து தொழில் தர்மம குறித்து முனகுவோரின் குரல் நாட்டுப்பற்றின் குரலை விடவும் ஓங்கி ஒலிக்கக் கூடாது. நாட்டுப்பற்று பேச விரும்பும் பொழுது, அதனோடு தொழில் தர்மம இணைந்து கொள்ள வேண்டும்.

எனது பெயர் வரலாற்றில் இடம் பெறுமென்றோ, காசு, பணம் கிடைக்குமென்றோ, நான் இதனைச் செய்யவில்லை. நான் எனது நாட்டைக் காக்க மட்டுமே விரும்பினேன்

முஸ்லீம் மட்டும்தான் திவிரவாதியா ??????????

எனக்கு வந்த e Mail

உன்னைப் போல் ஒருவன் என்று படத்தின் தலைப்பு சொல்கிறது. பார்வையாளனான என்னைப் பார்த்து உன்னைப்போல் ஒருவன் என்று சொல்வதாகத்தான் பெரும்பாலும் அர்த்தப்படுத்திக் கொள்கிறோம். அது சரியான அர்த்தம் தானா? படத்தில் பெயர் இல்லாத நாயகனே, என்னைப் போல் ஒருவனா நீ?! நான் மனசாட்சியின் குரலுக்கு எப்போதும் செவி கொடுக்கிற ஒரு நடுத்தர வகுப்பு மனிதன்.

என்னால் பிறருக்கு வலியும், பிறரால் எனக்கு வலியும் ஏற்படக்கூடாது என்று விரும்பும் சாதாரண மனிதன். ஜாதி, மதம், மொழி, இனம் அடிப்படையில் மனிதரை மனிதர் உயர்வு தாழ்வு பார்க்கக் கூடாது என்று விரும்பும் ஒருவன். குற்றம் சாட்டப்பட்ட எவரும் முறையாக விசாரிக்கப்பட்டு சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டும் என்றே விரும்புகிறவன். கொலைக் குற்றவாளிக்குக் கூட அதிகபட்சமாக ஆயுள் தண்டனையே தரப்படலாமே தவிர, மரண தண்டனை கூடாது என்று நினைக்கிறவன்.
சட்டத்தை என் கையில் எடுத்துக் கொள்ள ஆசைப்படாதவன். நீ என்னைப் போல் ஒருவனா? நிச்சயம் இல்லை. எனக்கு எல்லா தீவிரவாதமும் அருவருப்பானது. நீ இஸ்லாமிய தீவிரவாதத்தை மட்டுமே தேர்ந்தெடுத்து எதிர்க்கிறாய்.

மேலவளவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலித் தலைவர் முருகேசனைக் கொன்றவர்களும், தருமபுரியில் அப்பாவியான கல்லூரி மாணவிகளை பேரூந்திலேயே வைத்து எரித்தவர்களும், மதுரையில் பத்திரிகை அலுவலகத்தை தாக்கி அப்பாவி ஊழியர்களைக் கொன்றவர்களும் இது போன்ற எண்ணற்ற தீவிரவாத செயல்களில் ஈடுபட்டவர்கள் பலரும் தமிழகச் சிறையில் தான் இருக்கிறார்கள்.

அவர்களை விசாரணை இல்லாமல் கொல்ல வேண்டும் என்ற கோபம் உனக்கு வரவில்லை. இஸ்லாமிய தீவிரவாதிகளையும் அவர்களுக்கு உதவி செய்ததால் ஹிந்து வெடிமருந்து வியாபாரியையும் கொல்லப் புறப்படுகிறாய்.

உனக்கு ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்து விற்றவன் மட்டும் மகாத்மா காந்தியா? அவனை ஏன் கொல்லாமல் விட்டிருக்கிறாய்? அவனிடம் ஆர்.டி.எக்ஸ் தொடர்ந்து வாங்கியவர்கள் / வாங்குகிறவர்கள் எல்லோரும் உன்னைப்போல தீவிரவாத எதிர்ப்பாளர்களா என்ன? இஸ்லாமிய தீவிரவாதிகளை போலீஸ் பிடித்தால் உடனே சுட்டுக் கொன்றுவிட வேண்டும் என்று சொல்லுகிற இந்து தீவிரவாதத்தின் குரலாகவே நீ பேசுகிறாய்.

அப்படிச் செய்யாமல் போலீஸ் இருப்பதில் எரிச்சலடைந்து மிரட்டல் வேலையில் ஈடுபடுகிறாய். எந்த மதத்து திவிரவாதியாக இருந்தாலும் சரி, அவர்களை விசாரிக்காமல் சுட்டுக்கொன்றுவிட வேண்டும் என்று நினைக்கிறவர்கள் சார்பாக புறப்பட்டு வந்தவனும் அல்ல நீ. அப்படி நினைக்கிறவர்கள் கருத்தை ஏற்பதாக இருந்தால், மசூதியை இடித்து மதக்கலவரங்களை உற்பத்தி செய்த அத்வானியையும் அரசு இயந்திரத்தின் உதவியோடு முஸ்லிம்களை கும்பல் கும்பலாகக் கொல்ல ஏற்பாடு செய்த மோடியையும் சுட்டுக் கொல்ல நீ புறப்பட்டிருப்பாய்.
ஆனால் உனக்கு செலக்டிவ் அம்னீஷியா இருக்கிறது. நீ என்னைப்போல் ஒருவன் அல்லவே அல்ல. நான், குற்றம் சாட்டப்படுவர் மோடியானாலும், முகமது ஆனாலும் சரி முறையான நீதி விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டும் என்றே வலியுறுத்தும் சாமான்யன்.
உன்னைப் போல் ஒருவன் என்று நீ சொல்வது என்னையல்ல என்றால், யாரைப் பார்த்து அப்படிச் சொல்லியிருக்கிறாய்? படத்தில் இன்னொரு நாயகனாக வருகிற காவல் அதிகாரியைப் பார்த்துத்தான்.
அதுதான் அசல் அர்த்தம். நாங்கள் தான் எங்களைச் சொன்னதாக தப்பாக எடுத்துக்கொண்டிருக்கிறோம். அந்தக் காவல் அதிகாரி யார்? முதலமைச்சர், தலைமைச் செயலாளர் எல்லோரும் முழு அதிகாரத்தைத் தன்னிடம் கொடுத்தால் தான் பிரச்னையைத் தீர்க்க முடியும் என்று மிரட்டுபவர் அவர்.

முழு அதிகாரமும் போலீஸிடம் இருந்தால் தான் விசாரணையில்லாமல் சுட்டுக் கொல்ல முடியும் அல்லவா? அவர் கருத்தும் உன் கருத்தே தான். கடைசியில் நீ கேட்டபடி அந்தத் தீவிரவாதிகளை ஒப்படைக்கிறார். மூன்று பேர் ஜீப் குண்டில் செத்ததும் நீ அவர் ஆள்தான் என்பது அவருக்குத் தெரிந்துவிடுகிறது.

நீ எந்த இடத்திலும் குண்டு வைக்கவில்லை அது வெற்று மிரட்டல் தான் என்று பின்னர் போனில் சொல்லும்போது அது தனக்கு முன்பே தெரியும் என்கிறார்.

அப்படி தெரியுமென்றால், நான்காவது தீவிரவாதியை சுட்டுக்கொல்லும்படி அவர் சொல்லியிருக்கத் தேவையே இல்லையே. உன் மிரட்டலை சாக்காக வைத்து அவர் அந்தத் தீவிரவாதிகளை விசாரணையில்லாமல் கொல்லும் தன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்கிறார் என்பது தான் உண்மை.

கடைசியில் நீ இருக்கும் இடத்தையும், உன்னையும் கண்டுபிடித்த பிறகு உன்னை சுட்டுக் கொல்லாமல் கைகுலுக்கி வழியனுப்பி வைக்கிறார். ஏன்? நீ அவரைப்போல் ஒருவன் என்பதனால்தான். காவல் துறை என்கவுன்ட்டர் என்ற பெயரில் விசாரணையில்லாமல் தான் கொல்ல விரும்புபவர்களைக் கொல்லும் வசதிக்காக, உன்னைப் போன்றவர்களை மறைமுகமாக ஆதரிக்கும் என்பதுதான் உன்படத்திலிருந்து எனக்குக் கிடைக்கும் முக்கியச் செய்தி. நீ நிச்சயம் என்னைப் போல் ஒருவன் அல்ல. நான் நிச்சயம் உன்னைப்போல் ஒருவனாக இருக்க விரும்பவே மாட்டேன்.

நன்றி : குமுதம் வார இதழ் 14.10.2009

96% சீனர்களுக்கு இந்தியா மீது வெறுப்பு!

அருணாச்சல் பிரதேசத்திற்கு இந்தியத் தலைவர்கள் செல்வதை கிட்டத்தட்ட 96 சதவீத சீனர்கள் விரும்பவில்லையாம். இப்படி ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது சீன நாளிதழ் ஒன்று.

அந்த நாளிதழ் தனது இணையத் தள வாசகர்களிடையே ஒரு கருத்துக் கணிப்பை நடத்தியதாம். அதில் இந்த முடிவு தெரிய வந்துள்ளதாம்.

huanqiu.com என்ற அந்த நாளிதழின் இணையதளம் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி ...

மொத்தம் 6000 பேர் கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தனர். அவர்களில் 96 சதவீதம் பேர் இந்தியத் தலைவர்கள் சர்ச்சைக்குரிய பகுதியில் (அருணாச்சல் பிரதேசத்தைத்தான் இப்படிப் பெயரிட்டு அழைக்கின்றனர் சீனர்கள்) நுழைவதை எதிர்த்துள்ளனர். 2 சதவீதம் பேர் போகலாம் என்று கூறியுள்ளனர். 2 சதவீதம் பேர் கவலை இல்லை என்று தெரிவித்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது.

இந்த நாளிதழ் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான பீப்பிள்ஸ் டெய்லியின் சகோதர பத்திரிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று முதல் ஏ.டி.எம்.-களில் பணம் எடுக்க கட்டுப்பாடு


இன்று முதல் ஒரு மாதத்தில் 5 முறை மட்டுமே வேறு வங்கி ஏ.டி.எம்-இல் பணம் எடுக்க முடியும் என்றும் அதற்கு மேல் பணம் எடுக்கப்படும் ஒவ்வொரு தடவைக்கும் சேவை வரி விதிக்கப்படும் என்றும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள உத்தரவில், அக்டோபர் 15ஆம் தேதி முதல், ஒரு மாதத்தில் 5 முறை மட்டுமே வேறு வங்கி ஏ.டி.எம்-ல் பணம் எடுக்க முடியும். அதற்கு மேல் பணம் எடுக்கப்படும் ஒவ்வொரு தடவைக்கும் சேவை வரி விதிக்கப்படும்.

அதுமட்டுமின்றி ஒரு தடவைக்கு ரூ.10 ஆயிரத்துக்கு மேல், மற்ற வங்கி ஏ.டி.எம்.ல் பணம் எடுக்க முடியாது. அதேநேரத்தில், வாடிக்கையாளர் தான் கணக்கு வைத்துள்ள வங்கியின் ஏ.டி.எம்-ல் பணம் எடுப்பதற்கு எவ்வித கட்டுப்பாடும் கிடையாது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீவைகுண்டம் கூட்டுறவு சிக்கன நாணய சங்க செயலர் தாற்காலிக பணிநீக்கம்

ஸ்ரீவைகுண்டத்தில் முறைகேடுகள் புகாரைத் தொடர்ந்து, கூட்டுறவு சிக்கன நாணய சங்க செயலர் தாற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தனி அலுவலர் செ. சந்திரசேகர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஸ்ரீவைகுண்டத்தில் அமைந்துள்ள மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அனைத்துப் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தின் செயலராக சு. பிரபு என்பவர் பணியாற்றி வருகிறார்.

இவர் மீது பல்வேறு முறைகேடு புகார்கள் வந்துள்ளன. அதன் அடிப்படையில் அவரை தாற்காலிக பணிநீக்கம் செய்து செவ்வாய்க்கிழமை உத்தரவிடப்பட்டுள்ளது.

எனவே, சங்கம் தொடர்பான எந்தவித வரவு செலவுகம் குறித்தும் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் இவருடன் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது. அவ்வாறு மீறி வைத்து கொண்டால் அதற்கு சங்க நிர்வாகம் எந்த வகையிலும் பொறுப்பாகாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீவைகுண்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியக் குழுக் கூட்டம்

ஸ்ரீவைகுண்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியக் குழுக் கூட்டம் எம்.சேர்மசிங் தலைமையில் நடைபெற்றது

அதில் வாழைத்தாரை பாதுகாக்க குளிர்சாதன கிட்டங்கி அமைக்க வேண்டும் என, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

மாவட்ட உதவித் தலைவர் த.சீனிவாசன், சி.பி.எம். ஒன்றியச் செயலர் கி.சந்தசாமி, மூலக்கரை மாயாண்டி, இந்திராநகர் சிவனணைந்த பெருமாள், மாவட்ட உதவிச் செயலர் இசக்கியம்மாள், சந்திரன், பால்துரை, பேருராட்சி முன்னாள் தலைவர் தி.உலகம்மாள், விவசாய சங்க ஒன்றியச் செயலர் ஐ.கணபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1. திண்டுக்கல்லில் நடைபெறும் மாநில மாநாட்டிற்கு 200 பேர் கலந்து கொள்ள வேண்டும்.

2. வாழைத்தார் கெட்டுப் போகாமல் இருப்பதற்கு குளிர்சாதனக் கிட்டங்கி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஸ்ரீவை, வருவாய்க் கிராம ஊழியர் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது

தாமிரபரணி ஆற்றில் நடக்கும் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தும் அரசு அலுவலர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என, தமிழக அரசுக்கு வருவாய்க் கிராம ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இச் சங்கத்தின் வட்டக் கிளைக் கூட்டம் ஏ.காந்தி தலைமையில் நடைபெற்றது. எஸ்.கே.ராமையா, முருகானந்தம், சுந்தரம், அப்பு, இல.ராமமூர்த்தி உள்ளிட்டோர் பேசினர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

தமிழக அரசு அலுவலக உதவியாளர்களுக்கு வழங்ங்கிய ஊதிய விகிதத்தை கிராம உதவியாளர்களுக்கும் வழங்க வேண்டும்.

வீட்டு வாடகைப்படி மத்திய அரசு போல வழங்க வேண்டும். தாமிரபரணி ஆற்றில் நடைபெற்று வரும் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தும் பணியில் ஈடுபடும் வருவாய் கிராம ஊழியர் முதல் வட்டாட்சியர் வரையிலான அலுவலர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

புதன், 14 அக்டோபர், 2009

2010ம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்கள்: தமிழக அரசு அறிவிப்பு

2010ஆம் ஆண்டுக்கான மாநில அரசு அலுவலகங்கள், கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட வணிக வங்கிகளுக்கான அரசு பொது விடுமுறை நாட்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.

2010ஆம் ஆண்டு மொத்தம் 24 நாட்கள் அரசு பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.


1. ஆங்கில வருடப் பிறப்பு 01-01-2010 வெள்ளிக்கிழமை

2. தமிழ் புத்தாண்டு, பொங்கல் 14-01-2010 வியாழக்கிழமை

3. திருவள்ளூவர் தினம் 15-01-2010 வெள்ளிக்கிழமை

4. உழவர் திருநாள் 16-01-2010 சனிக்கிழமை

5. குடியரசு தினம் 26-01-2010 செவ்வாய்க்கிழமை

6. மிலாடி நபி 27-02-2010 சனிக்கிழமை

7. தெலுங்கு வருடப் பிறப்பு 16-03-2010 செவ்வாய்க்கிழமை

8. மகாவீர் ஜெயந்தி 28-03-2010 ஞாயிற்றுக்கிழமை

9. வங்கி முழுஆண்டு கணக்கு 01-04-2010 வியாழக்கிழமை

10. புனித வெள்ளி 02-04-2010 வெள்ளிக்கிழமை

11. அம்பேத்கர் பிறந்தநாள் 14-04-2010 புதன்கிழமை

12. மே தினம் 01-05-2010 சனிக்கிழமை

13. சுதந்திர தினம் 15-08-2010 ஞாயிற்றுக்கிழமை

14. கிருஷ்ண ஜெயந்தி 01-09-2010 புதன்கிழமை

15. ரம்ஜான் 10-09-2010 வெள்ளிக்கிழமை

16. விநாயகர் சதுர்த்தி 11-09-2010 சனிக்கிழமை

17. வங்கி அரையாண்டு கணக்கு 30-09-2010 வியாழக்கிழமை

18. காந்தி ஜெயந்தி 02-10-2010 சனிக்கிழமை

19. ஆயுத பூஜை 16-10-2010 சனிக்கிழமை

20. விஜயதசமி 17-10-2010 ஞாயிற்றுக்கிழமை

21. தீபாவளி 05-11-2010 வெள்ளிக்கிழமை

22. பக்ரீத் 17-11-2010 புதன்கிழமை

23. முகரம் 17-12-2010 வெள்ளிக்கிழமை

24. கிறிஸ்துமஸ் 25-12-2010 சனிக்கிழமை

இத்தகவல் தமிழக தலைமைச் செயலாளர் கே.எஸ். ஸ்ரீபதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி நெரிசல் - சென்னையில் இரவு விடிய விடிய பஸ்கள்

தீபாவளிப் பண்டிகைக்காக ஜவுளி உள்ளிட்ட பொருட்களை வாங்க வரும் மக்கள் கூடடம் அலை மோதுவதால் சென்னை கோயம்பேடு பஸ் நிலையம் மற்றும் தி.நகருக்கு விடிய விடிய டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. கிட்டத்தட்ட 100 பஸ்களை மாநகரப் போக்குவரத்துக் கழகம் இயக்கவுள்ளது.

சென்னை நகரில் தீபாவளி வெப்பம் அதிகரித்துள்ளது. ஜவுளிப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்டவற்றை வாங்கும் மும்முரத்தில் மக்கள் பெருமளவில் நகரின் முக்கியப் பகுதிகளில் குவிந்து கொண்டிருக்கின்றனர்.

இவ்வாறு பொருட்கள் வாங்கும் பயணிகளின் வசதிக்காக மாநகர போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்து வசதிகளை செய்து வருகிறது.

பிராட்வேயில் இருந்து கோயம்பேடு புறநகர் பஸ் நிலையத்திற்கு சிறப்பு பஸ்கள் விடப்படுகின்றன.

வழக்கமாக ஓடும் பஸ்களை விட கூடுதலாக 100-க்கும் மேலான பஸ்களை இயக்க மாநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.

தியாகராயநகர், வட பழனி உள்ளிட்ட பல பகுதிகளுக்கு கூடுதல் சேவை இயக்கப்படுகிறது. கூட்டம் எங்கு அதிகமாக இருக்கிறது என்பதை பார்த்து அதற்கேற்ப பஸ்களை விடவுள்ளனர்.

15 மற்றும் 16 ஆகிய இரு நாட்களும் இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

மெகா பணக்காரர்கள் பட்டியல் - அமெரிக்கா முதலிடம்- இந்தியாவுக்கு 4வது இடம்

உலகிலேயே மிகப் பெரும் பணக்காரரர்களைக் கொண்ட நாடாக அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இந்தியாவுக்கு இதில் 4வது இடம் கிடைத்துள்ளது.

உலகின் மிகப் பெரும் பணக்காரர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. இதில் ரூ. 5000 கோடிக்கு மேல் வைத்துள்ளவர்கள் எண்ணிக்கை, அவர்களின் நாடுகள் குறித்த விவரங்கள் இடம் பெற்றுள்ளன.

இதில் வழக்கம் போல அமெரிக்கா வுக்கு முதலிடம் கிடைத்துள்ளது. அங்கு ரூ. 5000 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ளவர்களின் எண்ணிக்கை 359 ஆகும்.

2வது இடத்தில் சீனா உள்ளது. அங்கு 130 பேர் மெகா கோடீஸ்வரர்கள். கடந்த ஆண்டு சீனாவில் 101 பேர்தான் மெகா கோடீஸ்வரர்களாக இருந்தனர். ஆனால் தற்போது கிடுகிடுவென இந்த பட்டியல் வளர்ந்துள்ளது.

அமெரிக்காவுக்கு ஒரு காலத்தில் கடும் வைரியாக இருந்து வந்த ரஷ்யா மெகா கோடீஸ்வரர்கள் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. அங்கு 32 பேர் ரூ. 5000 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ளனர்.

இந்தியாவும் இப்போது மெகா கோடீஸ்வரர்கள் பட்டியலில் வேகமாக முன்னேறி வருகிறது. இந்தியா வில் 24 மெகா கோடீஸ்வரர்கள் உள்ளனர். இந்த விஷயத்தில் ரஷ்யாவை இந்தியா முந்தும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றும் தெரிய வந்துள்ளது.

LinkWithin

Blog Widget by LinkWithin