
எல்லா இடத்துக்கும் பணத்தை எடுத்துக் கொண்டு அலைய முடியாது. ஓர் அட்டையை கொண்டு சென்றால் நமக்குத் தேவையான பொருள்களை வீட்டுக்குக் கொண்டு வரலாம். இப்படி ஒரு சுலபமான வசதியை வங்கிகள் உருவாக்கிக் கொடுத்துள்ளன.
வாடிக்கையாளர்களுக்கு டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு என்று வங்கிகள் பல்வேறு அட்டைகளை கொடுத்துள்ளன. இந்த அட்டைகள் ஒரு வகையில் வசதியாக இருந்தாலும் மற்றொரு வகையில் வாடிக்கையாளர்களுக்குத் தொந்தரவாக மாறி வருகின்றன.
இதுவரை போலீஸ் நிலையம், நீதிமன்றத்தை எட்டிக்கூட பார்க்காத நடுத்தர குடும்பத்தினர் பலர், வங்கிகள் விரிக்கும் "கடன் அட்டை' வலையில் சிக்கி நீதிமன்றம் வரை செல்ல வேண்டிய நிலைக்கு வந்துள்ளனர். உண்மையில் கடன் வாங்கும் எண்ணமே இல்லாதவர்களையும் கடன் அட்டை வாங்கலாமே என்ற எண்ணத்தை உருவாக்கி அவர்களுக்கு நிர்பந்தம் செய்து கொடுத்து விடுகின்றனர். அந்த அட்டையை வாங்கியவர்களும் இதனால் ஏற்படும் பின் விளைவுகளைப் பற்றி தெரியாமல் மாட்டிக் கொள்கின்றனர்.
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் தனியார் நிறுவனத்தின் மூலம் கிரெடிட் கார்டு வசதி கொடுத்து வருகிறது. இந்த கார்டு வாங்கிய நடுத்தர வகுப்பினர் பலர் கடன் தொகை அதிகமாகி திருப்பிக் கொடுக்க முடியாத நிலையில் உள்ளனர்.
தேசியமயமாக்கப்பட்ட வங்கி என்பதால் இது போன்ற நபர்களிடம் சமாதான முறையில் அவர்களிடமிருந்து எவ்வளவு குறைவாக வாங்க முடியுமோ அந்த அளவுக்குப் பேசி தீர்க்கின்றன. அதற்காக அந்த வங்கி இலவச சட்ட உதவி மன்றத்தை அணுகியுள்ளது. புதுவையில் நீதிமன்றம் 150 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதில் 13 வழக்குகள் செவ்வாய்க்கிழமை தீர்வு காணப்பட்டன.
பாதிக்கப்பட்ட உஷாராணி என்பவர் கூறுகையில், ""கிரெடிட் கார்டு மூலம் ரூ.15 ஆயிரம் கடன் பெற்றேன். 2 ஆண்டுகளாக வட்டி உள்ளிட்டவைக்கு ரூ.30 ஆயிரம் கட்டிவிட்டேன். இப்போது ரூ.53 ஆயிரம் கட்ட வேண்டும் என்று கூறுகின்றனர். என்னுடைய கணவர் இறந்து விட்டார். என்னுடைய குடும்பத்தை நடத்த முடியாமல் கஷ்டப்படுகிறேன். இவ்வளவு பெரிய தொகையை கட்ட முடியாது என்று நீதிபதி டி.ஆர். வேணுகோபால் முன்பு கூறினார். வங்கி அதிகாரிகள் முன்னிலையில் சமரசம் நடந்தது. மாதம் ரூ.1500 வீதம் 6 மாதம் கட்டினால் போதும் என்று ஒப்புக் கொண்டனர். அதனால் இந்த வழக்கில் தீர்வு காணப்பட்டது'' என்றார்.
"ஆட் ஆன் அட்டை' (Add On Card) மூலம் ஒரே வங்கி கணக்கில் 2 பேர் பணம் போடலாம், எடுக்கலாம். அது போன்ற அட்டையை பசுபதி பயன்படுத்தி வந்தார். இந்த அட்டையில் இருந்து 4 ஆயிரம் கடன் பெற்றிருந்தார். இவருடன் இணைந்து அட்டை வைத்திருந்த இவரது நண்பர் இவருக்குத் தெரியாமல் பணம் எடுத்துள்ளார். இதனால் இப்போது ரூ.40 ஆயிரம் வங்கிக்குச் செலுத்த வேண்டியுள்ளது. அந்த அளவுக்குச் செலுத்த தன்னால் இயலாது. மணிலா கொள்முதல் செய்துவந்த தனக்கு இப்போது வேலையில்லை என்று கூறினார். இதையடுத்து அவர் ரூ.10 ஆயிரம் கட்டினால் போதும் என்று கூறி இந்த வழக்கில் தீர்வு காணப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக