புதன், 29 ஜூலை, 2009

நெல்லை மாநகராட்சியில் கவுன்சிலர்கள் மீது வடை வீசியதால் அடிதடி



நெல்லை: நெல்லை மாநகராட்சிக் கூட்டத்தில் திமுகவினரைக் குறை கூறிப் பேசிய அதிமுக கவுன்சிலர் மீது திமுக கவுன்சிலர் வடை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டு பெரும் அமளி துமளியானது.

நெல்லை மாநகராட்சிக் கூட்டம் இன்று நடந்தது. அப்போது 17வது வார்டில், குடிநீர் இணைப்புகள் அனுமதி இல்லாமல் வழங்கப்பட்டிருப்பது குறித்து அந்த வார்டு அதிமுக கவுன்சிலர் சுதா பரமசிவம் கேள்வி எழுப்பினார்.

முறைகேடாக இந்த இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மேயர் ஏன் மெளனம் சாதிக்கிறார். இந்த விவகாரத்தில் திமுக கவுன்சிலர் ஒருவருக்கும் தொடர்பு உள்ளது என்று அவர் மேயர் சுப்ரமணியத்திடம் குற்றம் சாட்டினார்.

இதைக் கேட்டதும் திமுக கவுன்சிலர்கள் எழுந்து சத்தம் போட்டனர். அப்போது திமுக கவுன்சிலர் பிரான்சிஸ் என்பவர் சாப்பிடக் கொடுத்த வடையை எடுத்து சுதா பரமசிவம் மீது வீசினார். இதனால் அதிமுகவினர் கொந்தளித்தனர்.

இதைத் தொடர்ந்து இரு தரப்பு கவுன்சிலர்களும் கடும் வாய்ச் சண்டையில் இறங்கினர். பின்னர் கைகலப்பில் ஈடுபட்டனர்.

இதையடுத்து மேயர் சுப்ரமணியம், துணை மேயர் முத்துராமலிங்கம் உள்ளிட்டோர் குறுக்கிட்டு இரு தரப்பினரையும் அமைதிப்படுத்தினர். அதன் பின்னர் அமளி குறைந்து சகஜ நிலை திரும்பியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin