புதன், 22 ஜூலை, 2009

கிரகணத்தின்போது சாப்பிட கூடாதா?- இன்று திராவிடர் கழக சார்பில் விருந்து


சென்னை: சூரிய கிரகணத்தின்போது சாப்பிடக் கூடாது என்ற மூடநம்பிக்கையை உடைத்து மடமையைப் போக்கும் வகையில் கிரகண நேரத்தில் திறந்த வெளியில் காலை உணவு சாப்பிட திராவிடர் கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

இது குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சூரிய கிரகணத்தின்போது சாப்பிட்டால் ஆகாது என்ற மூடநம்பிக்கைகளை உடைத்துக் காட்டி பாமர மக்கள், படித்த பாமர மக்களின் அறியாமை- மடமையை போக்கிடும் வண்ணம்,

பெரியார் கல்வி நிறுவனங்களில் காலையில் மாணவர்கள்- ஆசிரியர்கள் அனைவரும் திறந்தவெளி அரங்கில், சிற்றுண்டியை அனைவரும் சேர்ந்து உண்டு கிரகணத்திற்கும், சாப்பிடுவதற்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது என்று செயல்முறை விளக்கமாக செய்து காட்ட உள்ளோம்.

தஞ்சை வல்லத்தில் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வளாகத்திலும், பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்திலும், திருச்சி கல்வி வளாகத்திலும், ஜெயங்கொண்டம் பெரியார் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும், சென்னை பெரியார் திடலிலும் அனைவரும் கிரகண நேரத்தில் சிற்றுண்டி சாப்பிடுவோம் என்று கூறியுள்ளார்.

பழனியில் கிரகணம் குறித்த கல்வெட்டு..

இந் நிலையில் பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் சூரிய கிரகணம் குறித்த, பண்டை கால அரிய கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் முக்கிய உபகோயில் தான் அருள்மிகு பெரியநாயகியம்மன் கோயில். இக்கோயிலில்தான் தைப்பூசம், வைகாசி விசாகம் உள்ளிட்ட பெருவிழாக்கள் நடைபெறுகின்றன.

கி.பி. 14ம் நூற்றாண்டுக்கு முன், பாண்டிய மன்னர்களால் சிவன் கோயிலாகக் கட்டப்பட்ட இக்கோயில், மாலிக் கபூரின் தாக்குதலுக்குப் பின் 17ம் நூற்றாண்டில், திருமலைநாயக்கர் காலத்தில் அம்மன் கோயிலாக உருமாற்றம் செய்யப்பட்டது.

இக்கோயிலில் தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி, கட்டடக்கலை நிபுணர் மணிவண்ணன் மற்றும் மகளிர் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது கோயிலின் யாகசாலை அறை சுவற்றில் பழங்காலக் கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டது. முன், பின் எழுத்துக்கள் அழிந்த நிலையில் 4 வரிகள் மட்டுமே இதில் மீதம் உள்ளன.

''பலவைய பேர்களுக்கு...... சூரிய கிராணப் புண்ணிய காலத்தில்..... நீராகத் தாரை வாத்து.........கல்வெட்டிக் கொள்ள.......'' என்று பொறிக்கப்பட்டுள்ள இந்த எழுத்துகள் 17ம் நூற்றாண்டின்போது சூரியகிரகணத்தன்று, பெரியநாயகியம்மன் கோயிலுக்கு நிவந்தத்துக்கு நிலம் தானமாக வார்த்துக் கொடுக்கப்பட்ட செய்தி பொறிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் பண்டைய காலத்தில் நவீன கருவிகள் இல்லாமலேயே, சூரிய கிரகணத்தை தமிழர்கள் அறிந்துள்ளதும், அது நடக்கும் காலத்தில், இறைவனுக்கு நிவந்தங்கள் அளித்ததும், பழங்காலத்தில் சூரியகிரகண நேரத்தில் கோயில்களுக்குத் தானம் வழங்கும் பழக்கம் இருந்ததும் தெரியவந்துள்ளது.

பழனி மலைக்கோயில் கருவறை வடக்குப் பகுதியில், மல்லிகார்ச்சுனராயர் பொறித்த சூரியகிரகணம் குறித்த கல்வெட்டு முன்னரே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறி்ப்பிடத்தக்கது. அந்தக் கல்வெட்டிலும், இதேபோல, சூரியகிரகண காலத்தை புண்ணியகாலம் என்றே தானத்துக்கு சிறந்த நேரமாகக் குறித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin