புதன், 29 ஜூலை, 2009

ஏலத்திற்கு வரும் மகாத்மாவின் தென் ஆப்பிரிக்க வீடு


டர்பன்: ஜோஹன்னஸ்பர்க் நகரில் உள்ள மகாத்மா காந்தி வசித்த வீடு ஏலத்திற்கு வந்துள்ளது. வீட்டின் தற்போதைய உரிமையாளர் இந்த வீட்டை ஏலத்திற்கு விட்டுள்ளார்.

ஜோஹன்னஸ்பர்க் நகரின் வடக்கு மத்தியில் உள்ள ஆர்ச்சர்ட்ஸ் என்ற இடத்தில் உள்ள ஒரு குறுகிய தெருவில் இந்த வீடு உள்ளது. காந்தியின் நண்பரும், கட்டடக் கலை நிபுணருமான ஹெர்மன் கேலன்பேக் இந்த வீட்டை வடிவமைத்தார்.

ஓடுகளால் வேயப்பட்ட வீடாகும் இது. இந்த வீட்டுக்கு கிரால் (The Kraal) என்ற செல்லப் பெயரும் உண்டு. இந்த வீட்டில் கேலன்பேக்குடன் 1908ம் ஆண்டு முதல் 3 ஆண்டுகள் தங்கியிருந்தார் காந்தி.

இந்த வீடு தற்போது நான்சி பால் என்பவர் வசம் உள்ளது. இந்த வீட்டில் நான்சி பால், கடந்த 25 வருடங்களாக குடியிருந்து வருகிறார். இவர் தற்போது கேப்டவுன் நகருக்கு இடம் பெயர முடிவு செய்துள்ளார். இதையடுத்து இந்த வீட்டை ஏலத்திற்கு விட அவர் தீர்மானித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

ஆனால் இந்த வீட்டை வாங்க யாருமே ஆர்வம் காட்டவில்லையாம். இந்திய வம்சாவளியினர் கூட இந்த வீட்டை வாங்க ஆர்வம் காட்டாமல் உள்ளனராம்.

இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள நான்சி பால், இந்திய வம்சாவளியினர் யாராவது இதை வாங்க விரும்புகிறார்களா என்பதை அறிய ஆப்பிரிக்காவுக்கான இந்திய கல்வி மையத்தின் நிறுவன இயக்குநர் ஸ்டீபன் கெல்பின் உதவியை நாடியுள்ளார்.

அவரும், தென் ஆப்பிரிக்காவின் இந்திய வம்சாவளி பிரமுகர்களை அணுகிக் கேட்டுப் பார்த்தார். ஆனால் யாரும் வீட்டை வாங்க முன்வரவில்லையாம்.

இதுகுறித்து நான்சி கூறுகையில், மகாத்மா காந்தி வசித்த வீடு இது. இங்கு அவர் விட்டுச் சென்ற அமைதி நிறைய உள்ளது. இது மிகவும் விசேஷமான இடம் என்றார்.

இதே ஜோஹன்னஸ்பர்க் நகரில் காந்தி சம்பந்தப்பட்ட வேறு சில இடங்களும் உள்ளன. காந்தி பார்ம் என்ற இடம் இதே பகுதிக்கு அருகில் உள்ளது. இங்குதான் மகாத்மா காந்தி தங்கியிருந்து தனது ஆதரவாளர்களிடையே, சத்யாகிரகம் குறித்து போதித்தார்.

அதேபோல டர்பன் நகரில் பீனிக்ஸ் என்ற இடத்தில் மகாத்மா காந்தி குடியிருப்பு உள்ளது. இங்கும் காந்தி தங்கியிருந்து சத்யாகிரகத்தைப் போதித்துள்ளார்.

1800களின் இறுதியில் தொடங்கி 1900களின் தொடக்கம் வரை தென் ஆப்பிரிக்காவில் இனவெறி, நிற வெறிக்கு எதிரான போராட்டம் உலகப் புகழ் பெற்றவை என்பது நினைவிருக்கலாம்.

காந்தியடிகள் தங்களுக்காகப் போராடியதை நன்றியுடன் நினைவு கூறும் வகையில், தென் ஆப்பிரிக்காவில் பல தெருக்கள், மையங்களுக்கு காந்தியடிகளின் பெயர் சூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin