வெள்ளி, 31 ஜூலை, 2009

திருச்செந்தூரில் அனிதா ஆதரவாளர்களுடன் சண்முகநாதன் சந்தி்ப்பு


திருச்செந்தூரில் அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர்களைச் சந்தித்து அதிமுகவை விட்டுப் போய் விட வேண்டாம் என்று கோரிக்கை விடுத்து வருகிறார் தூத்துக்குடி மாவட்ட புதிய அதிமுக செயலாளர் சண்முகநாதன்.

அதி்முகவில் இருந்து நீக்கப்பட்ட அனிதா ராதாகிருஷ்ணன் திமுகவுக்குப் போய் விட்டார். விரைவில் முதல்வர் கருணாநிதி முன்னிலையி்ல் பிரமாண்ட விழா எடுத்து திமுகவில் தனது ஆதரவாளர்களுடன் இணையவுள்ளார் அனிதா.

அந்த இணைப்பு விழாவில் அனிதாவின் ஆதரவாளர்கள் பலரும் திமுகவில் சேரக் கூடும் என்று தெரிகிறது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் அதிமுகவுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படக் கூடிய வாய்ப்புகள் உருவாகியுள்ளன.

இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட அதி்முக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் மாவட்டம் முழுவதும் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ளார்.

கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர்களை சந்தித்து கட்சியை பலப்படுத்த ஆதரவு திரட்டி வருகிறார். மாவட்ட செயலாளரான பின்னர் முதன்முறையாக சண்முகநாதன் நேற்று அனிதா ராதாகிருஷ்ணனின் தொகுதியான திருச்செந்தூருக்கு வந்தார்.

அப்போது ராதாகிருஷ்ணனின் தீவிர ஆதரவாளரான திருச்செந்தூர் பேரூராட்சி தலைவரும் நகர செயலாளருமான மகேந்திரனை சந்தித்து ஆதரவு திரட்டினார். கட்சியை விட்டுப் போய் விட வேண்டாம் என்று அனிதாவின் ஆதரவாளர்களை அவர் கோரியுள்ளதாக தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin