வெள்ளி, 31 ஜூலை, 2009

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் 11 வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், தேமுதிக, பா.ஜ.க. ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் உள்ளிட்ட 11 வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 11 சுயேச்சைகளின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

ஸ்ரீவைகுண்டம் சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஜூலை 22-ல் துவங்கி ஜூலை 29-ல் முடிவடைந்தது.

அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் உள்பட 22 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் மீதான பரிசீலனை வியாழக்கிழமை முற்பகல் 11 மணிமுதல் நடைபெற்றது. தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான மாவட்ட வருவாய் அலுவலர் துரை. ரவிச்சந்திரன் தலைமையில், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சிவன், தேர்தல் வட்டாட்சியர் சாமுவேல், ஆட்சியர் அலுவலக மேலாளர்கள் செல்லப்பா, முருகானந்தம் உள்ளிட்ட அதிகாரிகள் வேட்புமனுக்களை பரீசீலனை செய்தனர்.

வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

இந்தப் பரிசீலனையின்போது 11 சுயேச்சைகளின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் உள்ளிட்ட 11 வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலர் துரை. ரவிச்சந்திரன் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

காங்கிரஸ் வேட்பாளர் எம்.பி. சுடலையாண்டி, இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஞா. தனலெட்சுமி, பா.ஜ.க. வேட்பாளர் அ. சந்தனகுமார், தே.மு.தி.க. வேட்பாளர் மா. செüந்திரபாண்டியன், சுயேச்சை வேட்பாளர்கள் எம். ராமசுப்பிரமணியன், சி. மருதநாயகம், யு. நாகூர்மீரான் பீர்முகமது, எஸ். ஆறுமுகராஜ், எஸ். யாதவ், சி. அருணாசலம், எஸ். முருகன் ஆகிய 11 வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

காங்கிரஸ் மாற்று வேட்பாளர் எஸ். வேலம்மாள், இந்திய கம்யூனிஸ்ட் மாற்று வேட்பாளர் ஏ. திலகவதி, தே.மு.தி.க. மாற்று வேட்பாளர் ஐ. இமானுவேல், சுயேச்சை வேட்பாளர்கள் ஜி. முருகன், ஏ. அங்கப்பன், பி. அன்புசிங், சி. கிருஷ்ணபாக்கியம், எஸ். ராஜா, எம். குமார், ஆர். சுப்பிரமணியன், பி. தமிழ்ச்செல்வன் ஆகிய 11 பேரது வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

2006, பேரவைத் தேர்தலின்போது இருந்த எல்லை அடிப்படையில் தற்போது இடைத்தேர்தல் நடைபெறுகிறது. ஆனால், பெரும்பாலான சுயேச்சை வேட்பாளர்களுக்கு முன்மொழிந்தவர்கள் தொகுதி சீரமைப்புக்குப் பின்னர் உள்ள வரிசை எண், பாகம் எண் ஆகியவற்றைக் குறிப்பிட்டிருந்ததால், வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

வேட்புமனுக்களை ஆகஸ்ட் 1 பிற்பகல் 3 மணிக்குள் வாபஸ் பெறலாம். அதன்பின்னர் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு, சுயேச்சை வேட்பாளர்களுக்கான சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin