வியாழன், 29 அக்டோபர், 2009

நெல்லை ராணி அண்ணா கல்லூரியில் நவ. 4-ல் வேலைவாய்ப்பு முகாம்

திருநெல்வேலி பேட்டை ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் நவம்பர் 4-ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் மு. ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருநெல்வேலி மாவட்ட கல்லூரிகளில் 2006 ஆம் ஆண்டு முதல் 2009 ஆண்டு வரை பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., பி.பி.ஏ., பி.சி.ஏ., எம்.ஏ., எம்.எஸ்சி., எம்.காம்., எம்.பி.ஏ., எம்.சி.ஏ. ஆகியவை படித்துள்ளவர்களும், இப் படிப்புகளை இறுதியாண்டு படிப்பவர்களும் திருநெல்வேலி பேட்டை ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் நவம்பர் 4 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம்.

இதேபோல, பொறியியல் பட்டதாரிகளுக்கும், பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. படித்தோருக்கும் திருநெல்வேலி அருகே சர்.சி.வி. ராமன் நகரில் உள்ள ஐன்ஸ்டின் பொறியியல் கல்லூரியிலும், பாவூர்சத்திரத்தில் உள்ள எம்.எஸ்.பி. வேலாயுதநாடார் லட்சுமிதாய் பாலிடெக்னிக் கல்லூரியிலும் நவம்பர் 5 ஆம் தேதி காலை 9 மணிக்கு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும்.

இதில் கலந்துகொள்ள விரும்பும் மாணவ, மாணவிகள் தாங்கள் படித்த கல்லூரியில் விண்ணப்ப படிவத்தை பெற்று, முதல்வரின் கையெழுத்தோடு இம் மாதம் 30 ஆம் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், திருநெல்வேலி என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும், தகவலுக்கு பொறியியல் துறையைச் சார்ந்தோர் 94434 - 24479, பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. படித்தோர் 98944 - 06548 ஆகிய செல்போன் எண்களை தொடர்பு கொள்ளலாம் என்றார் ஜெயராமன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin