செவ்வாய், 31 மார்ச், 2009

'ஓ' போடு ஒரு சமூக விழிப்புணர்வு இயக்கம்

'ஓ' போடு என்றால் ஓட்டு போடு என்று அர்த்தம். ஓட்டு போடுவது மக்களின் உரிமையும் கடமையும் ஆகும். ஓட்டு போடும்போது 49 ஓ பிரிவின் கீழ் ஓட்டு போட ஒவ்வொரு வாக்காளருக்கும் அரசியல் சட்டப்படி உள்ள உரிமையை தெளிவுபடுத்துவது எமது இயக்கத்தின் இன்னொரு நோக்கம்.

சராசரியாக எந்தத் தேர்தலிலும் 45 சத விகித வாக்காளர்கள் ஓட்டு போடுவதில்லை. வெற்றி பெறுவதாக அறிவிக்கப்படும் வேட்பாளர் பதிவான வாக்குகளில் 30 சதவிகிதம் வாங்கினாலும், அது மொத்த வாக்குகளில் 16 சதவிகிதம் மட்டுமேதான். ஓட்டு போடாதவர்களும் ஓட்டு போட வந்தால், பல தேர்தல் முடிவுகள் மாறிவிடும்.

ஏன் ஓட்டு போடுவதில்லை என்பதற்கு சொல்லப்படும் பல காரணங்களில் ஒன்று இருப்பதில் ஒருவருக்கு ஓட்டு போடவும் விருப்பமில்லை; எந்த வேட்பாளரையும் ஏற்க முடியவில்லை என்பதாகும்.

எல்லா வேட்பாளர்களையும் நிராகரிக்கும் உரிமையையும் வாக்காளருக்கு சட்டப்படி கொடுத்திருப்பது இந்திய அரசியல் சட்டத்தின் சிறப்பாகும். தேர்தல் விதிகள் 1961ன் கீழ் 49 (ஓ) பிரிவு இந்த உரிமையை வாக்காளருக்கு வழங்கியிருக்கிறது. ஓட்டு போடுவதற்காக விரலில் மை வைத்த பிறகு, எந்த வேட்பாளருக்கும் ஓட்டளிக்க விரும்பவில்லை என்று வாக்காளர் தெரிவிக்கலாம். அதை ஓட்டுச் சாவடி அதிகாரி பதிவு செய்யவேண்டும் என்பதே 49 (ஓ).

வாக்காளர் இதற்காக எந்த விண்ணப்பத்தையும் நிரப்பத் தேவையில்லை. ஓட்டுச் சாவடி அதிகாரியிடம் சொன்னால் போதும். அவர் தன்னிடம் உள்ள பாரம் 17 ஏ என்ற பதிவேட்டில் இதை எழுதிக் கொள்வார். அதில் நாம் கையெழுத்திட்டால் போதும்.

எந்த வேட்பாளரும் ஏற்கத் தகுந்தவராக இல்லை என்றால் அதை அரசியல் கட்சிகளுக்கு நாம் உணர்த்த வேண்டும். அதற்கு சிறந்த வழி ஓட்டு போடாமல் இருப்பது அல்ல. 49 ஓவின் கீழ் பதிவு செய்வதே சரியான முறையாகும். அரசியலே சரியில்லை என்று அலுத்துக் கொண்டு நாம் ஓட்டு போடாமல் இருந்தால், அதனால் அரசியல் கட்சிகளுக்கு எந்த நஷ்டமும் கிடையாது. ஆனால் 49 ஓவின் கீழ் நம்முடைய ஓட்டைப் பதிவு செய்தால் நமது அதிருப்தியை அவர்களுக்குத் தெரியப்படுத்த முடிகிறது. ஒரு தொகுதியில் ஜெயிக்கிற வேட்பாளரை விட , 49 ஓவுக்கு அதிக ஓட்டு விழுந்தால், எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். அப்போது 'இனி நேர்மையான அரசியல் செய்ய வேண்டும், நல்ல வேட்பாளர்களை நிறுத்த வேண்டும்; இல்லாவிட்டால் மக்கள் ஆதரவு கிடைக்காது' என்பது அரசியலில் உள்ளவர்களுக்கு உறைக்கும். மக்களுடைய அதிருப்தியை அரசியல்வாதிகளுக்கு தெரியப்படுத்த சிறந்த வழி - 49 ஓ.

'ஓ' போடு இயக்கம் கீழ் வரும் கோரிக்கைகளை வலியுறுத்துகிறது.

1. எல்லா வாக்காளர்களும் ஓட்டு போட வேண்டும். ஓட்டு போடாமல் இருப்பது அரசியலின் தரத்தை மேம்படுத்த விடாமல் தடுப்பதாகும்.

2. எந்த வேட்பாளரும் ஏற்கத் தகுந்தவராக இல்லை என்றால் அதை அரசியல் கட்சிகளுக்கு உணர்த்துவதற்கான சிறந்த வழி ஓட்டு போடாமல் இருப்பது அல்ல. 49 ஓவின் கீழ் பதிவு செய்வதே சரியான முறையாகும்.

3. ரகசிய ஓட்டு என்பது அரசியல் சட்டப்படி வாக்காளருக்கு அளிக்கப்பட்டுள்ள உரிமையாகும். ஆனால் 49 ஓவை ரகசியமாகப் போடமுடியாமல் தேர்தல் ஆணையம் வைத்திருப்பது சட்டப்படி தவறாகும். இதையும் ரகசிய வாக்காக அளிக்கும் விதத்தில் மின் வாக்கு இயந்திரத்தில் 49 ஓவுக்கு ஒரு தனி பட்டனை வரும் தமிழக சட்ட மன்றத் தேர்தலிலேயே தேர்தல் ஆணையம் ஏற்படுத்த வேண்டும்.

4. ஓட்டுச் சாவடி அதிகாரிகளுக்கு வகுப்பு நடத்தும்போது தவறாமல் 49 ஓ பிரிவு பற்றி கற்றுத் தருவது தேர்தல் ஆணையத்தின் கடமையாகும். ஓட்டுச் சாவடிக்கு வந்து 49 ஓ பிரிவின் கீழ் பதிவு செய்ய விரும்பும் எந்த வாக்காளரையும், அது பற்றி எனக்குத் தெரியாது என்று சாவடி அதிகாரி திருப்பி அனுப்புவது தவிர்க்கப்பட வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி 'ஓ' போடு இயக்கம் பிரசாரம் செய்யும்.

ஓட்டு போடாமல் இருப்பது, நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும்.49 ஓ போடுவது, நம்மை இனி ஏமாற்ற முடியாது என்று அறிவிப்பதாகும்.ஓட்டு போடுங்க. 49 ஓ போடுங்க.

நன்றி : A C M இப்ராஹிம் , சவுதி அரேபியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin