திங்கள், 27 ஜூன், 2011

ஸ்ரீவை , அணைக்கட்டில் அமலைச்செடிகளை அகற்றாவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதம் என ஸ்ரீவை.சிவாஜி நற்பணி மன்றம் அறிவிப்பு


ஸ்ரீவை அணைக்கட்டில் அமலைச்செடிகளை அகற்றாவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக ஸ்ரீவைகுண்டம் சிவாஜி நற்பணி மன்றத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீவைகுண்டம் சிவாஜி நற்பணி மன்றத்தின் சார்பில் கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது;

ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றில் அமலைச் செடிகள் ஆற்று நீரில் மிதந்து வந்து தண்ணீரை வீணாக்குகிறது. மேலும் ஆற்றங்கரையில் நீராடும் பொதுமக்களுக்கு அரிப்பு ஏற்படுத்தி பெரும் பாதிப்பை ஏற்படுத்திவருகிறது.

மேலும் தண்ணீரை உறிஞ்சி வீணாக்குவது மட்டுமல்லாமல் அசுத்தமாக்கி தண்ணீரின் தன்மையும் கெட்டுவிடுகிறது. இதுகுறித்து பல முறை கோரிக்கை விடுத்தும் பொதுப்பணித்துறை நிர்வாகம் மற்றும் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை.

எனவே அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் சார்பில் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

ஸ்ரீவைகுண்டம் மக்களுக்கு குடிதண்ணீர் பாதுகாக்கப்படாத நிலையில் ஆற்றிலிருந்து நேரடியாக மக்களுக்கு குழாய்கள் உதவியுடன் வழங்கப்பட்டு வருகிறது.

ஸ்ரீவையில் சுகாதாரமான தண்ணீர் கிடைக்காததாலும்.ஆக்கிரமித்துள்ள அமலை செடிகளாலும் தோல் நோய் பரவும் அபாயம் உருவாகி உள்ளது.

கலங்கலான சகதி கலந்த சேறுடன் சில வேளைகளில் தண்ணீர், குடிநீராக வழங்கப்படும் நிலையும் இருப்பதால் மக்களுக்கு தோல் நோயுடன் பல்வேறு நோய்கள் ஏற்பட்டு வருகிறது.

கடந்த 5 ஆண்டுகளாக அரசியல் அமைப்புகள் மற்றும் பொது நலச்சங்கங்கள் குரல் கொடுத்தும் போராட்டம் நடத்தியும் இன்று வரை எந்தவிதமான தீர்வும் ஏற்படவில்லை.

ஸ்ரீவைகுண்டம் அணையை தூர்வாருவது சம்பந்தமாக பொதுப்பணித்துறையும், வனத்துறையும் இணைந்து ஆய்வு செய்ய தற்போது தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு ஆவண செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள ஸ்ரீவை சார்த்த ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ, திரு. சண்முகநாதன் இதனை நிறைவேற்றுவார் என்று ஸ்ரீவை பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

தகவல் : செய்திதாள்கள்

ஸ்ரீவை, பஸ் ஸ்டாண்டு கடைகள் ஏலம் விடுவதை நிறுத்தி வைக்க கோர்ட் உத்தரவு

ஸ்ரீவைகுண்டம் பஸ் நிலையத்துக்குள் கட்டப்பட்டுள்ள கடைகளை வாடகைக்கு ஏலம் விடுவதில் முறைகேடு நடந்துள்ளதாக ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டதையடுத்து செயல்பாடுகளை நிறுத்தி வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

ஸ்ரீவைகுண்டம் பஸ் நிலையத்துக்குள் 9 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் 8 புதிய கடைகள் கட்டப்பட்டன. இந்த கடைகளை நகர பஞ்சாயத்து நிர்வாகம் சில நாட்களுக்கு முன்பு வாடகைக்கு ஏலம் விட்டது.

இந்த ஏலத்தில் முறைகேடு நடந்துள்ளதாகவும், ஏலத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் பத்மநாபமங்கலத்தைச் சேர்ந்த சுப்பையா மகன் பூமிநாதன் ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி, பஸ் நிலையத்தில் உள்ள கடைகளை வாடகைக்கு விடுவது தொடர்பான செயல்பாடுகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிட்டார்.

இதற்கிடையே மனு விசாரணைக்கு வந்த அன்றே ஸ்ரீவைகுண்டம் நகர பஞ்சாயத்து தலைவர் கந்த சிவசுப்பு தலைமையில் நடந்த கவுன்சிலர்கள் கூட்டத்தில், மொத்தம் உள்ள 8 கடைகளில் கடை எண் 1-ஐ தவிர மற்ற 7 கடைகளையும் அதிக வாடகை தொகைக்கு டெண்டர் வைத்தவர்களுக்கு வாடகைக்கு விட கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

எனவே இது குறித்து மாவட்ட கலெக்டர், பஞ்சாயத்துக்களின் இயக்குனர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பூமிநாதன் மனு கொடுத்தார். அந்த மனுவில், ஸ்ரீவைகுண்டம் பஸ் நிலையத்தில் உள்ள கடைகளை ஏலம் விட்டதில் முறைகேடு நடந்துள்ளது.

இது குறித்து விசாரணை நடத்த வேண்டும். எனவே கவுன்சிலர்கள் கூட்டத்தில் கடை ஏலம் குறித்த தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

தகவல் : தூத்துக்குடி வெப்சைட்

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க ஸ்ரீவை, வட்டார மாநாடு

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க ஸ்ரீவைகுண்டம் வட்டார மாநாடு தி.உலகம்மாள் தலைமையில் கடத்த வாரம் நடைபெற்றது.

மாவட்டச் செயலர் ருக்மணி முன்னிலை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் மல்லிகா சிறப்புரையாற்றினார். வட்டாரச் செயலராக ரா.குணேஷ்வரி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தாமிரபரணி ஆற்றில் அமலைச் செடிகளை அப்புறப்படுத்த வேண்டும். பேட்மாநகரம் அருகேயுள்ள தனியார் கிரஷர் நிறுவனத்தை தடை செய்ய வேண்டும்.

ஸ்ரீவைகுண்டத்தில் ஆற்றுத் தண்ணீர் மாசுபடுவதால் பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கவேண்டும். தகுதியானவர்களுக்கு முதியோர் உதவித்தொகை கிடைக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

இதில் வேலம்மாள், நாச்சியார், கனி, பேச்சியம்மாள், மாரியம்மாள், ராஜலட்சுமி, லட்சுமி, விஜயா, செல்லம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

செவ்வாய், 21 ஜூன், 2011

ஸ்ரீவைகுண்டத்தில் அதிசயம் 4 செ.மீட்டர் உயரத்தில் நாட்டுக்கோழி முட்டை

ஸ்ரீவைகுண்டம் தெற்கு யாதவர் தெருவைச் சேர்ந்தவர் ரங்கநாதன் யாதவ். இவர் பேருந்து நிலையத்தில் பேக்கிரி நடத்தி வருகிறார். மேலும் கடந்த 10 ஆண்டுகளாக கால்நடைகளையும் விருப்பமுடன் வளர்த்து வருகிறார்.

இவர் வீட்டில் வளர்த்த கோழி ஒன்று பருவம் அடைந்த நாள் முதல் 3 அங்குல உயரத்தில் வழக்கமான அளவில் முட்டைகளை இட்டு வந்தது.

தற்போது முட்டைகளை அடைகாத்து, குஞ்சுகள் பொறிக்கப்பட்ட நிலையில், தாய் கோழி இடும் முட்டை 4 செ.மீட்டர் உயரத்தில் உள்ளது.

இதர முட்டைகளை விட பல மடங்கு சிறியதான பல்லி முட்டையை விட சற்று பெரியதாக காணப்படும் நாட்டுக்கோழி முட்டையை அப்பகுதி மக்கள் ஆர்வமுடன் பார்த்தனர்.

அதில் ஒரு முட்டையை உடைத்து பார்த்த போது,மஞ்சள் மற்றும் வெள்ளைக்கரு எனத் தனித்தனியாக இன்றி கலங்கிய நிலையில் அந்த முட்டை காணப்பட்டது.

இன்னும் ஓரிரு நாட்களுக்கு இதே அளவில் தான் அந்த கோழி முட்டை இடும் என ரங்கநாதன் யாதவ் தெரிவித்துள்ளார்.

இந்த அதிசய முட்டை ஸ்ரீவைகுண்டம் பகுதி மக்களிடம் பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது.

சனி, 18 ஜூன், 2011

ஸ்ரீவைகுண்டம் பள்ளிகளின் புதிய கல்வி கட்டண விபரங்கள்: தமிழக அரசு வெளியிட்டது!

நீதிபதி ரவிராஜ பாண்டியன் கமிட்டி, தனியார் பள்ளிகளுக்கான திருத்தப்பட்ட கல்வி கட்டணத்தை திங்களன்று வெளியிட்டது. அதன்படி ஸ்ரீவைகுண்டம் பள்ளிக்கூடங்களின் புதிய கல்வி கட்டணம் வருமாறு:-

1. ஹிந்து வித்யாலய மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி :-

எல்.கே.ஜி : 2250

யூ.கே.ஜி : 2250

வகுப்பு 1 : 2850

வகுப்பு 2 : 2850

வகுப்பு 3 : 2850

வகுப்பு 4 : 2850

வகுப்பு 5 : 2850

வகுப்பு 6 : 3500

வகுப்பு 7 : 3500

வகுப்பு 8 : 3500

வகுப்பு 9 : 4150

வகுப்பு 10 : 4150

வகுப்பு 11 : 6150

வகுப்பு 12 : 6150


2. ST. ஜேம்ஸ் மெட்ரிக் பள்ளி :-

எல்.கே.ஜி : 2600

யூ.கே.ஜி : 2600

வகுப்பு 1 : 3200

வகுப்பு 2 : 3200

வகுப்பு 3 : 3200

வகுப்பு 4 : 3200

வகுப்பு 5 : 3200

வகுப்பு 6 : 4400

வகுப்பு 7 : 4400

வகுப்பு 8 : 4400

வகுப்பு 9 : 6300

வகுப்பு 10 : 6300

3. S T A பள்ளி :-

வகுப்பு 1 : 4600

வகுப்பு 2 : 4600

வகுப்பு 3 : 4600

வகுப்பு 4 : 4600

வகுப்பு 5 : 4600

வகுப்பு 6 : 5150

வகுப்பு 7 : 5150

வகுப்பு 8 : 5150

கடந்த மே மாதம் நீதிபதி கே.கோவிந்தராஜன் தலைமையிலான குழு 10,000 தனியார் பள்ளிகளின் கல்வி கட்டணத்தை நிர்ணைத்திருந்தது. அதனை ஏற்றுக்கொள்ளாத சுமார் 6400 பள்ளிகள் மேல் முறையீடு செய்திருந்தனர். அதனை தொடர்ந்தே தற்போது நீதிபதி ரவிராஜ பாண்டியன் கமிட்டி புதிய கட்டணங்களை வெளியிட்டுள்ளது.

திங்கள், 13 ஜூன், 2011

ஹஜ் குழு பயணிகளுக்கு பாஸ்போர்ட் பற்றிய தகவல்: இந்திய ஹஜ் குழு

இந்திய ஹஜ் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

இவ்வருடம் இந்திய ஹஜ் குழு மூலம், ஹஜ் பயணம் மேற்கொள்பவர்கள் காலதாமதமாக தங்கள் பாஸ்போர்டை சமர்பிக்க - போதிய ஆதாரங்களையும், உரித்த காரணங்களையும், மும்பையில் உள்ள இந்திய ஹஜ் குழுவிடம் ஜூன் 15 க்குள் தெரிவிக்கவேண்டும். அவ்வாறு தெரிவிக்கவில்லை என்றால், அவர்கள் பயணம் ரத்து செய்யப்படும்.

இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சி.என்.மகேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கை: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

விழாவையொட்டி வருகிற 13ம் தேதி (திங்கட்கிழமை) தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.

ஆனால் 13ம் தேதி அரசு தேர்வுகள் ஏதேனும் அறிவிக்கப்பட்டு இருந்தால் சம்பந்தப்பட்ட மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், தொடர்புடைய பணியாளர்களுக்கு மட்டும் இந்த விடுப்பு பொருந்தாது. இது செலாவணி முறிவு சட்டத்தின்படி பொதுவிடுமுறை நாள் அல்ல என தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடுமுறைக்குப் பதிலாக 09-07-2011 அன்று அலுவலக நாளாக அறிவிக்கப்படுகிறது என்று ஆட்சியர் அறிவித்துள்ளார்.

சனி, 11 ஜூன், 2011

ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் ஜமாபந்தி துவக்க விழா நடத்தது

ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் ஜமாபந்தி துவங்கியது. மனுக்கொடுத்த அன்றே பயனாளிகளுக்கு தீர்வு, வருவாய் துறையினரின் அதிரடி நடவடிக்கையால் பயனாளிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் ஜமாபந்தி மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட சார்ஆட்சியர் லதா தலைமை வகித்தார். ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் வசந்தா முன்னிலை வகித்தார்.

ஜமாபந்தியில் முதியோர் பெண்கள் திருமண உதவித்திட்டம் சான்று விண்ணப்பம் பட்டா மாறுதல் என வரும் பயனாளிகளின் விண்ணப்பங்கள் அன்றே தீர்வு காணபட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. முதியோர் பென்சன் கேட்டு விண்ணப்பித்த அருணாசலம் திருமண உதவித் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த முருகன் லட்சுமி ஆகியோருக்கு காசோலைகளை சார் ஆட்சியர் லதா வழங்கினார்.

நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்பு நலத்திட்ட தாசில்தார் நயினார் பிள்ளை, துணை தாசில்தார் லிங்கராஜ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நன்றி : தினமலர்

தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் 15ஆம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும், என மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அறிவிப்பு


தமிழகம் முழுவதும் சமச்சீர் கல்வி திட்டம் இந்த ஆண்டில் அமல்படுத்த முந்தைய திமுக அரசு முடிவு செய்தது. ஆனால் அதிமுக அரசு பதவி ஏற்றதால் சமச்சீர் கல்வி திட்டம் ரத்து செய்யப்பட்டு முந்தைய பாடத்திட்டம் செயல்படும் என்று அறிவித்தது.

இதனால் புதிய புத்தகம் அச்சடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் கடந்த ஜூன் 1ம் தேதி திறக்க வேண்டிய பள்ளிகள் வரும் 15ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டது

இதனை பள்ளி தலைமையாசிரியர்கள் அனைவருக்கும் தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சபீதா அனுப்பிய சுற்றறிக்கை வழங்கப்பட்டது. அந்த சுற்றறிக்கை படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளையும் வரும் 15ஆம் தேதி திறக்க வேண்டும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி உத்தரவிட்டார்

வெள்ளி, 10 ஜூன், 2011

ஸ்ரீவைகுண்டம் அணை

கடத்த 2009 ஆம் ஆண்டு ஸ்ரீவைகுண்டம் அணையில் நீர் நிரப்பி வழித்தது. அதனை தினமலர் செய்தியாக வந்தது. அது உங்கள் பார்வைக்கு !

புதன், 8 ஜூன், 2011

ச‌வுதி அரேபியாவில் வெளிநாட்டினர் 6 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்ற தடை வருகிறது !

ச‌வுதி அரேபியாவில் 6 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து பணியாற்றத் தடை விதிக்க அந் நாடு திட்டமிட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கான இந்தியர்கள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

இது குறித்து ச‌வுதியின் அல் வதான் செய்தித் தாளுக்கு அந் நாட்டு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அதெல் அல் பகி அளித்துள்ள பேட்டியில், ச‌வுதியில் உள்நாட்டினருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. வேலைவாய்ப்பைப் பெற உள்நாட்டினரிடையே போட்டியை உருவாக்கி, அவர்களது பணித் திறமையை ஊக்குவிக்க அரசு முடிவு செய்துள்ளது.

இதனால் வெளிநாட்டினர் தொடர்ந்து 6 ஆண்டுகளுக்கு மேல் ச‌வுதியில் பணியாற்ற தடை விதிக்கப்படும். இந்த சட்டத்தை கொண்டு வந்த பின், அதை அமலாக்க வெளிநாட்டு ஊழியர்களை பணியமர்த்தும் நிறுவனங்களுக்கு 5 மாத கால அவகாசம் வழங்கப்படும்.கறுப்பு சந்தையில் உலவும் விசாக்களை 99 சதவீதம் கட்டுப்படுத்தவும் புதிய நடைமுறைகள் கொண்டு வரப்படும் என்றார்.

இந்த புதிய விதிமுறை அமலுக்கு வந்தால் பல லட்சம் இந்தியர்கள் பாதிக்கப்படுவர். இந்த ஆண்டு இறுதிக்குள் ச‌வுதி அரேபியாவில் உள்ள இந்தியர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தைத் தாண்டவுள்ளது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 7 ஜூன், 2011

ஸ்ரீவை, நுகர்பொருள் வாணிப கழக அலுவலகத்தில் பிரிவுபசார விழா

ஸ்ரீவைகுண்டம் நுகர்பொருள் வாணிப கழக அலுவலகத்தில் பிரிவுபசார விழா நடைபெற்றது.

ஸ்ரீவைகுண்டம் நுகர்பொருள் வாணிப கழக ஆய்வாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற சீத்தாராமனுக்கு பிரிவுபசார விழா நடைபெற்றது.

வட்ட வழங்கல் அலுவலர் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். கிட்டங்கி பொறுப்பாளர் சுப்பிரமணியன் வரவேற்றார். கூட்டுறவு சார்பதிவாளர் நட்டார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


நன்றி : தினமணி

ஸ்ரீவையில், அதிக அளவில் குப்பை கொட்டப்படுவதால் நோய் பரவும் அபாயம் !

ஸ்ரீவைகுண்டம் பாலத்தின் அருகே குப்பைகள் கொட்டப்படுவதால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சிக்குள்பட்ட 18 வார்டுகளிலும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தினமும் டிராக்டர் மூலம் குப்பைகள் அள்ளப்படுகின்றன.

குப்பைகளைச் சேகரிப்பதற்காக அனைத்து வார்டுகளிலும் குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இது தவிர முகூர்த்த நாள்களில் திருமண மண்டபங்களில் வீணாகும் பொருள்கள் சாப்பிட்ட பின்பு கொட்டப்படும் இலைகள் என குப்பைகள் அளவுக்கு அதிகமாக கொட்டப்படுகின்றன.

திருச்செந்தூர் கோயிலுக்கு பாதயாத்திரையாகச் செல்லும் பக்தர்கள் புதுக்குடி சாலையோர டீ கடைகளில் டீ குடித்து விட்டு, போடும் பிளாஸ்டிக் கப்புகள் குப்பைத் தொட்டியில் கொட்டப்படுகிறது.

இவ்வாறு கொட்டப்படும் குப்பைகள் அனைத்தும் டிராக்டர் மூலமாக பேரூராட்சி பணியாளர்கள் அள்ளி ஸ்ரீவைகுண்டத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் பாலம் அருகே பல ஆண்டுகளாக கொட்டி வருகிறார்கள்.

இது பலஅடி உயரத்துக்கு குப்பைமேடாக உருவாகி உள்ளது. இதனால் அந்த பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நன்றி : தினமணி

சனி, 4 ஜூன், 2011

வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஹஜ் பயணத்திற்கு தேர்வாகி இருத்தல் பாஸ்போர்டுக்கு பதிலாக வேறு ஆவணங்களை தற்காலிகமாக சமர்பிக்கலாம்!


இந்த வருடம் இந்திய ஹஜ் குழு மூலம் ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ளவர்கள் தங்கள் பாஸ்போர்டினை ஜூன் 15 க்குள் தாக்கல் செய்யவேண்டும்.

ஹஜ் பயணத்திற்கு தேர்வாகும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் சிலர் தங்கள் பாஸ்போர்டுகளை சமர்பிக்க கால அவகாசம் கேட்டுள்ளனர். அவர்களுக்கு என இந்திய ஹஜ் குழு தற்காலிக விதிமுறைகளை அறிவித்துள்ளது. அதன்படி ஜூன் 15க்குள் பாஸ்போர்ட் சமர்பிக்க இயலாத வெளிநாடு வாழ் இந்தியர்கள் - அதற்கு பதிலாக

1. விசா நகல்

2. இந்திய பூர்விக அடையாள அட்டை (PIO Card)

3. தற்போது (வெளிநாட்டில்) வேலை செய்யும் நிறுவனத்தின் வேலைசெய்வதை ஊர்ஜிதம் செய்யும் கடிதம்


ஆகிய மூன்று ஆவணங்களையும் ஜூன் 15 க்குள் சமர்பிக்கலாம். அவ்வாறு சமர்பிக்கவில்லை என்றால், விண்ணப்பதாரரின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என இந்திய ஹஜ் குழு செய்தி குறிப்பு ஒன்றில் அறிவித்துள்ளது.

100 ஆண்டுகளுக்கு மேலாக தூர்வாரப்படாத ஸ்ரீவைகுண்டம் அணை !

ஸ்ரீவைகுண்டம் அணை கட்டு 1873-ல் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. இந்த அணையில், சுமார் இரண்டு லட்சம் சதுரஅடி பரப்பில் தண்ணீரைத் தேக்கி வைக்கலாம்.
ஆனால், சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாக அணை தூர்வாரப்படாமல் மணல் மேடாக காட்சியளிக்கிறது.

இவை முறையாக தூர்வாரப் படாததால், குளங்களின் மொத்த கொள்ளளவு சுமார் 1000 மில்லியன் கனஅடியாக குறைந்துள்ளதாகவும், 32,601 ஏக்கர் நிலங்களில் சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது

8 அடி இருக்கவேண்டிய அணையின் உயரம், 2 அடி தண்ணீரைக்கூட தேக்கி வைக்க முடியாத வகையில் உள்ளது. அணைப்பகுதி முழுவதும் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு அமலைச் செடிகள் ஆக்கிரமித்துள்ளன.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஸ்ரீவைகுண்டம் குமர குருபரர் சுவாமிகள் கலைக்கல்லூரியின் காந்திய சிந்தனை மையத்தினர் அமலைச் செடிகளை அகற்றினர். அதனை தொடர்ந்து பராமரிக்காமல், பொதுப்பணித் துறை அதிகாரிகள் அலட்சியம் செய்ததால் மீண்டும் அமலைச் செடிகளின் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.

இதுதொடர்பாக பல்வேறு தரப்பிலும் அறிவுறுத்தியும், அமலைச் செடிகளை அகற்றவோ, அணையைத் தூர்வாரவோ அரசுத் தரப்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஸ்ரீவைகுண்டம் அணைப் பகுதிகளில் 53 குளங்கள் உள்ளன. இந்தக் குளங்களின் மொத்த கொள்ளளவு 2274.27 மில்லியன் கனஅடி

தூர்ந்துபோன அணைக்கட்டுகளையும், குளங்களையும் தூர்வாரினால் மட்டுமே பருவமழை மற்றும் தாமிரபரணியின் கருணையால் கிடைக்கும் தண்ணீரை சேமிக்க முடியும்.

வெள்ளி, 3 ஜூன், 2011

ஸ்ரீவையில், இலவச அரிசி திட்ட தொடக்க விழா

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜூன் 1 முதல் மாதந்தோறும் 20 கிலோ இலவச அரிசி விநியோகிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

அதன்படி ஸ்ரீவைகுண்டம் கீழபஜாரில் உள்ள அமுதம் 2-வது எண் ரேஷன் கடையில் இலவச அரிசி திட்ட தொடக்க விழா நடைபெற்றது.மாதம் முழுவதும் எப்போது வேண்டுமானாலும் இலவச அரிசியை வாங்கி கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

சமூகப் பாதுகாப்பு நலத்திட்ட சாராட்சியர் லதா, திட்டத்தைத் தொடங்கி வைத்தார். ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் வசந்தா, வட்ட வழங்கல் அலுவலர் முத்துராமலிங்கம், தனிவருவாய் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ரேஷன் கடைகள் உரிய நேரத்தில் திறக்கப்படவில்லை என்றாலோ, வழங்கப்படும் அரிசியின் தரம் ஆகியவற்றில் குறைபாடுகள் இருந்தாலோ சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில் உள்ள வட்ட வழங்கல் அலுவலரிடமோ, மாவட்ட வழங்கல் அலுவலரிடமோ செல்போன் மூலம் தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

ரேஷன் கடை குறைபாடுகளை புகார் தெரிவிக்க - 9445000372 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். மேலும் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளரை 9486504392 என்ற எண்ணிலும், மாவட்ட வழங்கல் அலுவலரை 9445000370 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

வியாழன், 2 ஜூன், 2011

அதிக நேரம் செல் போன் பேசினால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம்: உலக சுகாதார மையம் எச்சரிக்கை


கைத்தொலைபேசி பயன்படுத்தாதவர்கள் யாராவது இருக்கிறார்‌களா என்றால் கிட்டதட்ட இல்லை என்று சொல்லும் அளவிற்கு இன்று சர்வதேச சமுதாயத்தில் கைத்தொலைபேசியின் பயன்பாடு ஊடுருவி இருக்கிறது.

இன்றி‌யமையாத அத்தியாவசியப் பொருட்களில் ஒன்றாக கருதப்படும் கைத்தொலைபேசிகளை காலம், நேரம் பார்க்காமல் உபயோகப்படுத்துவதால் உடலில் புற்றுநோய் ஆபத்தை ஏற்படுத்தும் என அவ்வப்போது எச்சரிக்கை செய்திகள் வந்து கொண்டு தான் இருக்கின்றன.

இருப்பினும் கைத்தொலைபேசிகள் பயன்பாட்டால் புற்றுநோய் ஏற்படும் என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை என்ற வாதமும் நிலவி வருகிறது. இந்தச் சூழ்நிலையில் தான் கைத்தொலைபேசிகள் பயன்பாட்டால் புற்றுநோய் நோய் தாக்கும் அபாயம் அதிகம் இருப்பதாக உலக சுகாதார மையம் அண்மையில் விடுத்துள்ள எச்சரிக்கை குறிப்பில் தெரிவித்துள்ளது.

உலக சுகாதார மையத்தின் ஒரு அங்கமான சர்வதேச புற்றுநோய் சிகிச்சை ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. கைத்தொலைபேசிகள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்ட அந்தக் குழுவில் 14 நாடுகளைச் சேர்ந்த 31 விஞ்ஞானிகள் இடம் பெற்றிருந்தனர்.

குழுவுக்கு தலைவராக அமெரிக்க அ‌திபர் ஒபாமாவின் தேசிய புற்றுநோய் ஆலோசனைக் குழுவின் உறுப்பினரான டாக்டர் ஜொனாதான் சாமெட் இருந்தார்.

கைத்தொலைபேசிகள் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடும் என்றும் எனவே அதனை அபாயகரமான பூச்சிக்கொல்லி, சலவை காரங்கள் ஆகிய ரசாயனப் பொருட்களுக்கு நிகராக பட்டியலிட வேண்டும் என்றும் அந்த ஆராய்ச்சிக் குழு பரிந்துரைத்துள்ளது.

கைத்தொலைபேசிகளில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு தான் புற்றுநோயை ஏற்படுத்தும் என்பது விஞ்ஞானிகளின் கருத்து. வெளிநாட்டில் கைத்தொலைபேசிகள் வாங்குபவர்கள், அந்த போனில் இருந்து வெளியேறக்கூடிய கதிர்வீச்சு அளவு ஆகியனவற்ற‌ை அறிந்து கொண்டு பின்னர் தான் கைத்தொலைபேசியை வாங்குகின்றனர்.

ஆனால் இந்தியா போன்ற மற்ற ஆசிய நாடுகளில் நுகர்வோர் மத்தியில் இந்த விழிப்புணர்வு இல்லை என்று பரவலாக கூறப்படுகிறது. இத்தகைய விழிப்புணர்வோடு கைத்தொலைபேசிகளை வாங்கினால் புற்றுநோய் அபாயத்தில் இருந்து ஓரளவுக்கு நாம் நம்மை தற்காத்துக் கொள்ளலாம்

புதன், 1 ஜூன், 2011

பேட்மாநகரம் எம்.எம்.மெட்ரிக் பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி

ஸ்ரீவைகுண்டம் அருகே பேட்மாநகரத்தில் உள்ள எம்.எம்.மெட்ரிக் பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதனை படைத்துள்ளனர்.

ஸ்ரீவைகுண்டம் அருகே பேட்மாநகரம் எம்.எம்.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அனைத்து மாணவர்களும் முதல் வகுப்பில் தேர்ச்சி அடைந்து 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பள்ளியில் முதலாவதாக சௌரத் 468 மதிப்பெண்களும், முஹ்சினா பீவி 451 மதிப்பெண்களும், மணிகண்டன் 426 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.

சாதனை படைத்த மாணவர்களையும், பயிற்சி அளித்த ஆசிரியர்களையும் பள்ளியின் தாளாளர் ரெனால்ட் முகமது மீரான், பேராசிரியர் நிசார், தலைமையாசிரியர் விஜய் மற்றும் பெற்றோர்கள், பொதுமக்கள் பாராட்டினர்

தகவல் : தினமலர்

ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் இன்று ஜமாபந்தி தொடக்கம்

ஸ்ரீவைகுண்டம் வட்டத்துக்குள்பட்ட பகுதிகளுக்கான ஜமாபந்தி இன்று முதல் தொடங்குகிறது.

இது குறித்து வட்டாட்சியர் வசந்தா கூறியதாவது: ஸ்ரீவைகுண்டம் வட்டத்துக்குள்பட்ட பகுதிகளுக்கான ஜமாபந்தி ஜூன் 1-ம் தேதி சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் லதா தலைமையில், ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.

ஜூன் 1-ம் தேதி வல்லநாடு உள்வட்டப் பகுதிகளான கலியாவூர், உழக்குடி, ஆலந்தா, பூவாணி, சிங்கத்தாக்குறிச்சி, வடவல்லநாடு, வல்லநாடு ஆகிய பகுதிகளுக்கு நடைபெறுகிறது.

2-ம் தேதி ஆழிக்குடி, முறப்பநாடு புதுக்கிராமம், கீழப்புத்தநேரி, முறப்பநாடு கோவில்பத்து, வசவப்பபுரம், தெய்வச்செயல்புரம் உள்வட்டப் பகுதிகளான செக்காரக்குடி பகுதி- 1, மீனாட்சிபுரம், செக்காரக்குடி பகுதி- 2 ஆகிய பகுதிகளுக்கு நடைபெறுகிறது.

3-ம் தேதி வடக்குகாரசேரி, தெய்வச்செயல்புரம், செட்டிமல்லன்பட்டி, எல்லைநாயக்கன்பட்டி, கீழவல்லநாடு, நாணல்காடு, மணக்கரை ஆகிய பகுதிகளுக்கு நடைபெறுகிறது.

7-ம் தேதி ஆழ்வார்கற்குளம், ஆராம்பண்ணை, கொங்கராயக்குறிச்சி ஆகிய பகுதிகளுக்கும், செய்துங்கநல்லூர் உள்வட்டப் பகுதிகளான விட்டிலாபுரம், விட்டிலாபுரம் கோவில்பத்து, முத்தாலங்குறிச்சி, செய்துங்கநல்லூர் ஆகிய பகுதிகளுக்கு நடைபெறுகிறது.

8-ம் தேதி கருங்குளம், தெற்குகாரசேரி, சேரகுளம், வல்லகுளம், கால்வாய், ஆறுமுகமங்கலம் உள்வட்டப் பகுதிகளான ஆறுமுகமங்கலம், சிறுத்தொண்டநல்லூர் ஆகிய பகுதிகளுக்கு நடைபெறுகிறது.

9-ம் தேதி வாழவல்லான், திருப்பணிசெட்டியா பத்து, கொற்கை, கொடுங்கனி, கொட்டாரக்குறிச்சி, மாரமங்கலம், அகரம் ஆகிய பகுதிகளுக்கு நடைபெறுகிறது.

10-ம் தேதி மஞ்சள்நீர்க்காயல், பழையகாயல், முக்காணி, தன்னூத்து, சிவகளை, கீழப்பிடாகை அப்பன்கோவில், கீழப்பிடாகை ஆகிய பகுதிகளுக்கு நடைபெறுகிறது.

14-ம் தேதி மங்கலக்குறிச்சி, பெருங்குளம், நட்டாத்தி, திருப்பணிசெட்டிகுளம், சாயர்புரம், இருவப்பபுரம் பகுதி- 1, இருவப்பபுரம் பகுதி- 2 ஆகிய பகுதிகளுக்கு நடைபெறுகிறது.

15-ம் தேதி ஸ்ரீவைகுண்டம் உள்வட்டப் பகுதிகளான வேளூர், வேளூர் ஆதிச்சநல்லூர், தோழப்பன்பண்ணை, பத்மநாபமங்கலம், அணியாபரநல்லூர், ஸ்ரீமூலக்கரை, ஸ்ரீவைகுண்டம் ஆகிய பகுதிகளுக்கு நடைபெறுகிறது.

16-ம் தேதி வேளூர் புதுக்குடி, ஸ்ரீபராங்குச நல்லூர், திருப்புளியங்குடி, கீழ்பிடாகை வரதராஜபுரம், பராக்கிரமபாண்டி, பேரூர் ஆகிய பகுதிகளுக்கு நடைபெறுகிறது என்றார் அவர்.

LinkWithin

Blog Widget by LinkWithin