செவ்வாய், 28 ஜூலை, 2009

இடைத்தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடாது என்று அக்கட்சியின் தலைவர் அறிவிப்பு

இடைத்தேர்தலில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடாது என்று அக்கட்சியின் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார்.

இது குறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

ஸ்ரீவைகுண்டம், இளையான்குடி, கம்பம், தொண்டாமுத்தூர், பர்கூர் ஆகிய 5 சட்டப் பேரவை தொகுதிகளில் ஆகஸ்டு 18-ம் தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி முடிவெடுத்துள்ளது.

வரும் 2011-ல் நடைபெறும் சட்டப் பேரவைத் தேர்தலின்போது இந்த 5 தொகுதிகளின் எல்லைகளும் மாறிவிடும். அடுத்த பொதுத்தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகளே உள்ளதால் தற்போது தேர்ந்தெடுக்கப்படும் எம்.எல்.ஏ.க்கள் மக்கள் நலத்திட்டங்களை முழுமையாக செயல்படுத்த முடியாது.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து நாடு முழுவதும் விவாதிக்கப்பட்டு வருகிறது.

வெற்றி தோல்விகளை பொருட்படுத்தாமல் போட்டியிடுவதுதான் ஜனநாயகக் கடமை. ஆனால் இடைத்தேர்தல் மட்டுமே ஒரு கட்சியின் பலத்தை நிரூபிக்கும் வாய்ப்பாக கருதிவிட முடியாது. எனவே இடைத்தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று முடிவு செய்துள்ளோம்.

2011 சட்டப் பேரவைத் தேர்தலை இலக்காகக் கொண்டு கட்சி வளர்ச்சிப் பணியில் ஈடுபட வேண்டும் என்று தொண்டர்களைக் கேட்டுக் கொள்கிறேன் என்று சரத்குமார் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin