டெல்லி: பொது இடங்களில் கோவில்கள், சர்ச்சுகள், மசூதிகல், குருத்வாராக்கள் உள்ளிட்ட எந்தவிதமான வழிபாட்டு தலங்களையம் கட்டக் கூடாது. இதை அரசு அனுமதிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் பொது இடங்கள், சாலைகள், தெருக்களில் இடம் பெற்ற வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட அங்கீகாரம் பெறாத கட்டடங்களை இடிக்குமாறு 2006ம் ஆண்டு குஜராத் மாநில உயர்நீதிமன்றம் அகமதபாத் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதையடுத்து குஜராத் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று இந்த மனு மீண்டும் நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, எம்.கே.சர்மா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்துத.
அப்போது சாலைகள், தெருக்கள் உள்ளிட்ட பொது இடங்களில் கோவில்கள், சர்ச்சுகள், மசூதிகள், குருத்வாராக்கள் என எந்த வழிபாட்டுத் தலமும் இடம் பெறக் கூடாது.
தற்போது உள்ள வழிபாட்டுத் தலங்களை அகற்றினால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படக் கூடும் என வாதிடுவதை ஏற்க முடியும். இருப்பினும், மத்திய அரசு எதிர்காலத்தில் பொது இடங்களில் எந்தவிதமான வழிபாட்டுத் தலமும் இடம் பெறாமல் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொது இடத்தில் யாராவது ஒருவர் வழிபாட்டுத் தலத்தை ஏற்படுத்தினாலும் கூட அதை அனுமதித்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இந்த விவகாரம் குறித்து அரசு சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம் நான்கு வாரங்களுக்குள் மத்திய அரசின் கருத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
அதற்குப் பதிலளித்த கோபால் சுப்ரமணியம், மத்திய அரசு இதுகுறித்து அனைத்து மாநில அரசுகளுடன் பேசி ஒருமித்த முடிவை ஏற்படுத்த முயலும் என்று உறுதியளித்தார்.
இதையடுத்து வழக்கு செப்டம்பர் 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக