வியாழன், 30 ஜூலை, 2009

ஸ்ரீவைகுண்டம் இடைத்தேர்தல்: 22 பேர் வேட்புமனுத் தாக்கல்

ஸ்ரீவைகுண்டம் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட 22 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.

வேட்புமனுத் தாக்கல் கடந்த 22-ம் தேதி தொடங்கியது. 8 நாள்களாக நடைபெற்ற வேட்புமனுத் தாக்கல் புதன்கிழமை பிற்பகல் 3 மணியுடன் முடிவடைந்தது.

கடைசி நாளில் 12 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.

காங்கிரஸ் கட்சி சார்பில் எம்.பி. சுடலையாண்டி, மாற்று வேட்பாளராக அவரது மனைவி வேலம்மாள் என்ற வேணி, இந்திய கம்யூ. சார்பில் தனலட்சுமி, மாற்று வேட்பாளராக மாதர் சங்க மாநிலக் குழு உறுப்பினர் திலகவதி ஆகியோர் வேட்புனுத் தாக்கல் செய்தனர்.

சுயேச்சை வேட்பாளர்களாக தூத்துக்குடி மாவட்டம், மணக்கரை தெற்கூரைச் சேர்ந்த சுப்பிரமணியன் (35), உமரிக்காடு பி. தமிழ்ச்செல்வன் (53), செவத்தையாபுரம் அன்புசிங் (40), முடிவைத்தானேந்தல் புதூரைச் சேர்ந்த அருணாசலம் (63), ஸ்ரீவைகுண்டம் புதுக்குடியைச் சேர்ந்த எஸ். ராஜா (33), திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகேயுள்ள மூலச்சியைச் சேர்ந்த செ. கிருஷ்ணபாக்கியம் (30), மானூர் தெற்குபட்டி எஸ். முருகன் (33), சென்னை, சாலிகிராமத்தைச் சேர்ந்த எம். குமார் (50) ஆகியோர் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.

சமத்துவ மக்கள் கட்சி: இவர்களில், அன்புசிங் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் மாவட்ட விவசாய அணிச் செயலர்.

கட்சித் தலைவர் சரத்குமார் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ள நிலையில், இவர் சுயேச்சையாக வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.

கட்சித் தலைமையை மீறி போட்டியிடுகிறீர்களா என்று அவரிடம் கேட்டபோது, கட்சித் தலைமை முடிவை தொண்டர்கள் ஏற்கவில்லை.

தொண்டர்கள் ஆதரவுடன்தான் போட்டியிடுகிறேன்.

இது தொடர்பாக கட்சி என்ன நடவடிக்கை எடுத்தாலும் பரவாயில்லை என்றார் அவர்.

22 பேர் மனுத் தாக்கல்: இத் தொகுதிக்கு மொத்தம் 22 பேர் வேட்புனுத் தாக்கல் செய்துள்ளனர்.

இவர்களில், காங்கிரஸ் வேட்பாளர் எம்.பி. சுடலையாண்டி, இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஞா. தனலட்சுமி, பாஜக வேட்பாளர் அ. சந்தனக்குமார், தேமுதிக வேட்பாளர் மா. செüந்திரபாண்டியன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

காங்கிரஸ், தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒருவர் மாற்று வேட்பாளராக வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். 15 பேர் சுயேச்சை வேட்பாளர்கள்.

மனுக்கள் மீதான பரிசீலனை வியாழக்கிழமை முற்பகல் 11 முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறுகிறது.

வேட்புமனுவை விலக்கிக் கொள்ள ஆகஸ்ட் 1 கடைசி. அன்று மாலை வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். சுயேச்சைகளுக்கு சின்னங்களும் ஒதுக்கப்படும்.

காலம் கடந்து வந்த 2 பேர்

ஸ்ரீவைகுண்டம் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் புதன்கிழமை பிற்பகல் 3 மணியுடன் முடிவடைந்தது.

3 மணிக்கு மேல் வேட்புமனுத் தாக்கல் செய்ய வந்த 2 பேர் மனுத் தாக்கல் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

சாயர்புரம் செவத்தையாபுரத்தைச் சேர்ந்த பி. ராஜன் (43), தூத்துக்குடி வடக்கு ரத வீதியைச் சேர்ந்த டி. வீரபாகு (25) ஆகிய இருவரும் 3 மணிக்கு மேல் தேர்தல் நடத்தும் அலுவலர் அறைக்குள் வந்ததால், அவர்களது வேட்புமனுவை ஏற்க முடியாது என தேர்தல் அலுவலர் மறுத்துவிட்டார்.

இதனால், அவர்கள் மனுத்தாக்கல் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin