புதன், 21 அக்டோபர், 2009

ஹஜ் பயணிகள் இருக்கும் இடத்தை அறிய இன்டர்நெட் வசதி

ஹஜ் யாத்திரை சென்றுள்ள இந்தியர்களுக்கு இன்டர்நெட் வசதி செய்யப்பட்டுள்ளது.

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை 200 பேர் அடங்கிய முதலாவது ஹஜ் யாத்ரீகர்கள் அணி சவூதி புறப்பட்டுச் சென்றனர்.

இவர்களை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா வழியனுப்பி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

ஹஜ் யாத்திரை செல்லும் இந்திய யாத்ரீகர்களுக்கு மெக்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கம்ப்யூட்டர்கள் நிறுவப்பட்டு இண்டர்நெட் இணைப்பு தரப்பட்டுள்ளது.

இந்திய ஹஜ் கமிட்டி இணையத் தளத்தின் மூலம், ஹஜ் யாத்திரை மேற்கொண்டுள்ள இந்திய யாத்ரீகர்கள் எங்குள்ளனர் என்பதை அவர்களது உறவினர்கள் அறிந்து கொள்ளலாம்.

இந்த ஆண்டு இந்திய ஹஜ் கமிட்டி மூலம் 1,15,000 யாத்ரீகர்கள் ஹஜ் யாத்திரை மேற்கொள்கின்றனர். இவர்கள் தவிர, இந்தியாவிலிருந்து தனியார் பயண ஏற்பாட்டாளர்கள் மூலம் 45,000 பேர் ஹஜ் யாத்திரை மேற்கொள்கின்றனர்.

இந்தியா முழுவதிலும் உள்ள 19 மையங்களிலிருந்து இந்த மாதம் 20 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 20 ஆம் தேதி வரை இவர்கள் ஹஜ் புனித யாத்திரையை மேற்கொள்கின்றனர்.

இந்த முறை ராஞ்சி (ஜார்கண்ட்), மங்களூர் (கர்நாடகம்) ஆகிய புதிய மையங்களும் இணைந்துள்ளன.

ஹஜ் யாத்ரீகர்களுக்காக இந்தியா விலும், சவூதி அரேபியாவிலும் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை மத்திய அரசு உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.

ஜெட்டா, மெக்கா, மதினா, மினா, முன்னாவ்வரா உள்ளிட்ட இடங்களில் இந்திய ஹஜ் யாத்ரீகர்களுக்கு தேவையான வசதிகளைச் செய்து கொடுப்பதற்கும், ஏற்கெனவே உள்ள வசதிகளை மேம்படுத்துவதற்கும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் இதர அமைப்புகளுடன் மத்திய வெளியுறவு அமைச்சகம் ஒருங்கிணைந்து செயலாற்றி வருகிறது.

2004 ஹஜ் யாத்திரையின் போது அறிமுகப்படுத்தப்பட்ட ரொக்கம் மற்றும் பொருள்கள் இழப்புக்கான இழப்பீட்டுத் தொகை வழங்கும் திட்டம் தொடரும்.

பன்றிக் காய்ச்சல் பரவுவதைத் தடுக்க அரசின் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சவூதி அரேபியாவில் உள்ள இந்திய மருத்துவக் குழுவினர் எந்த நிலைமையையும் சமாளிக்க ஆயத்த நிலையில் உள்ளனர்.

நமது நாட்டைச் சேர்ந்த யாத்ரீகர்களுக்கு ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் ரியாத்தில் உள்ள இந்தியத் தூதரகம் மற்றும் ஜெட்டாவில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளலாம்.

ஹஜ் யாத்ரீகர்களுக்கு உதவுவதற்காக, நிர்வாக மற்றும் மருத்துவ அலுவலர்கள் 600 பேரை மத்திய அரசு பணியில் ஈடுபடுத்தியுள்ளது. இவர்கள் மெக்கா, மதினா, ஜெட்டா, மினா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தங்கியிருந்து, இந்திய ஹஜ் யாத்ரீகர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து கொடுப்பர் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin