தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
திருச்செந்தூர் தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்ட அனிதா ராதாகிருஷ்ணன் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததால் சட்டசபையில் திருச்செந்தூர் தொகுதிக்கான இடம் 31-7-2009 முதல் காலியாக உள்ளது. இந்த காலி இடத்துக்கு 30-1-2010க்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். தேர்தல் ஏற்பாடுகள் தொடங்கி விட்டது.
தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டரிடம், திருச்செந்தூர் தொகுதி இடைத்தேர்தல் ஏற்பாடுகளை செய்ய உத்தர விடப்பட்டுள்ளது. தேர்தல் பணியாளர்கள் மற்றும் தகவல் தொடர்புக்கான எல்லா ஏற்பாடுகளையும் விரைவில் செய்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் தொகுதியில் உள்ள பதற்றமான ஓட்டுச்சாவடிகள் பற்றிய கணக்கெடுப்பை மாவட்ட தேர்தல் அதிகாரி நடத்தி உள்ளார். ஓட்டுப்பதிவுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இடைத்தேர்தலை நடத்துவது தொடர்பாக மாவட்ட கலெக்டர் அறிக்கை கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் திருச்செந்தூர் தொகுதி வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் சமீபத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்த போது ஓட்டுப்பதிவை முழுமையாக இணையத்தளத்தில் காட்டினோம். அதே போன்று திருச்செந்தூர் தொகுதி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவையும் இணையத் தளத்தில் நேரடியாக காணலாம்.
ஓட்டுப்பதிவு நிர்வாக வசதிக்காக எஸ்.எம்.எஸ். வசதியும் பயன்படுத்தப்படும். மத்திய தேர்தல் கமிஷன் திருச்செந்தூர் தொகுதி இடைத்தேர்தல் தேதியை அறிவித்ததும் மற்ற பணிகள் தொடங்கும்.
ஓட்டுப் பதிவுக்கு தேவையான பொருட்களை தயாராக வைத்திருக்க உத்தர விடப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் மற்றும் வேட்பாளர்பட்டியலை வெளியிட தேவையான ஏற்பாடுகளை செய்து கொள்ளவும் அறி வுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த பாராளுமன்றத்தேர்தலின் போது தேர்தல் கமிஷன் மூலம் பெங்களூர் “பெல்” நிறுவனத்திடம் இருந்து மின்னணு எந்திரங்கள் வாங்கப்பட்டன. திருச்செந்தூர் இடைத்தேர்தலுக்கு அந்த மின்னணு எந்திரங்கள் பயன்படுத்தப்படும்.
வாக்காளர் பட்டியலை நிர்வாக வசதிக்காக ஒரே சர்வரில் கொண்டு வந்துள்ளோம். இதன் மூலம் போலி வாக்காளர்களை நீக்க முடியும். இது வரை 12 முதல் 15 சதவீத போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
வாக்காளர் பட்டியலை வீடு வீடாக சென்று சரி பார்த்து 100 சதவீதம் மிகச் சரியான வாக்காளர் பட்டியலை தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பெயர் இட மாற்றம் மற்றும் பெயர் நீக்குவது போன்ற பணிகள் நடத்தி முடிக்கப்படும். இந்த பணிகள் அடுத்த மாதம் (நவம்பர்) 2-வது வாரத்தில் தொடங்கி நடைபெற உள்ளது.
மின்னணு எந்திரங்களை ஓட்டுச்சாவடிக்கு கொண்டு செல்லும் போது, பெட்டிகளில் ஜி.பி.எஸ்.கருவி பொருத்தப்படும். இதன் மூலம் மின்னணு எந்திரங்கள் எங்கு உள்ளது? எந்த பகுதியில் சென்று கொண்டிருக்கிறது என்பத கண்காணித்து உறுதி செய்து கொள்ள முடியும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் நரேஷ்குப்தா கூறி உள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக