வியாழன், 29 அக்டோபர், 2009

எம்பிபிஎஸ், பிஇ- முஸ்லீம் மாணவர் எண்ணிக்கை 72% அதிகரிப்பு

முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கப்பட்டதையடுத்து மருத்துவ படிப்பில் அந்த சமூக மாணவர்கள் சேருவது 74 சதவீதமும், பொறியியல் படிப்பில் இஸ்லாமியர்கள் சேருவது 72 சதவீதமும் அதிகரித்துள்ளது.

இது குறித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:

இஸ்லாமிய சமுதாயத்தினரோடு நமது திராவிட இயக்கமும், நானும் கொண்டுள்ள தொய்வில்லாத தொடர்பும், உறவும் இன்று நேற்று ஏற்பட்டதல்ல. 70 ஆண்டுகளுக்கு முன்பு, பள்ளி செல்லும் மாணவனாக இருந்தபோதே, திருவாரூரிலே நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாட்டிலேயே - நான் கொடிபிடிக்கும் சிறுவனாக, பச்சைப் பிறைக் கொடியை கையிலே ஏந்துகின்ற சிறுவனாக, அந்த மாநாட்டிலே கலந்து கொண்டேன் என்பதை நான் பெருமையோடு நினைவு கூர்கிறேன்.

மாணவப் பருவத்திலே என்னுள் முகிழ்த்த அந்த உறவும், உணர்வும் இன்றைக்கு செழித்துப் பசுமையாகப் பரவியிருக்கின்றன. எனவே நான், இளமைப் பருவத்திலேயே இஸ்லாமிய சமுதாயத்தினரின் எண்ணற்ற நிகழ்ச்சிகளில், கூட்டங்களில், மாநாடுகளில் கலந்து கொண்டிருக்கிறேன்.

நான் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோதெல்லாம் அந்த சமுதாயத்தினருக்கு ஆற்ற வேண்டிய கடமைகளைத் தவறாது ஆற்றி வந்திருக்கிறேன்.

இளமைக் காலத்திலேயே இஸ்லாமிய சமுதாயத்தினர்மீது நான் கொண்டிருந்த மதிப்பின் தொடர்ச்சியாக காயிதே மில்லத் மீது நான் கொண்டிருந்த அன்புக்கும், பாசத்துக்கும் அடையாளமாக- இஸ்லாமிய சமுதாயத்தினருக்கு வாய்ப்பு கிடைத்திடும் போதெல்லாம் பல்வேறு நன்மைகளை வழங்கியிருக்கிறேன்.

1969ல் மீலாது நபிக்கு முதன் முதல் அரசு விடுமுறை; முந்தைய அதிமுக அரசு 2001ல் ரத்து செய்த மீலாது நபி அரசு விடுமுறையை 15.11.2006 ஆணை மூலம் மீண்டும் விடுமுறை நாளாக அறிவித்தது; 1973ல் உருது பேசும் லப்பைகள், தெக்கனி முஸ்லிம்கள் ஆகியோரைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது;

1974ல் சென்னை-அண்ணாசாலை அரசினர் மகளிர் கல்லூரிக்கு "காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி'' எனப் பெயர் சூட்டியது; 1989- இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மையினர் சமுதாய மக்கள் பெரும்பயன் எய்திடும் வகையில் சிறுபான்மையினர் நல ஆணையம் உருவாக்கியது;

1999ல் வக்பு வாரியச் சொத்துக்களைப் பராமரிப்பதற்கென முதன்முறையாக 40 லட்ச ரூபாய் வழங்கியது, 1999ல் "தமிழ்நாடு சிறுபான்மையினர் மேம்பாட்டுக் கழகம்'' என ஒரு அமைப்பினை உருவாக்கியது;

2000ல் உலமா ஓய்வூதியத் திட்டத்தை தர்க்காக்களில் பணிபுரியும் முஜாவர்களுக்கும் நீட்டிப்பு செய்தது, 2000ல் இஸ்லாமியர்களின் நீண்டநாள் கோரிக்கை ஏற்கப்பட்டு, 21.7.2000 அன்று உருது அகடமியைத் தொடங்கியது;

2001ல் காயிதே மில்லத் மணிமண்டபம் சென்னையில் அமைத்திட 25.2.2001 அன்று அடிக்கல் நாட்டி, திறக்கப்பட ஆவன செய்தது; சென்னைப் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய ஆய்வு மையம் ஏற்படுத்தியது;

சிறுபான்மையினரின் நலனுக்கென தனி இயக்குநரகம் ஒன்றை 2007ல் அமைத்தது; உலமா மற்றும் பணியாளர்கள் நல வாரியம் என ஒரு வாரியத்தை 2009, மார்ச் திங்களில் ஏற்படுத்தியது என்று இஸ்லாமிய சமுதாயத்திற்கு கழக அரசு வழங்கியுள்ள சலுகைகளும், நன்மைகளும் கணக்கிலடங்காதவை.

1947ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்றபிறகு, 1947ம் ஆண்டு முதல் 1962ம் ஆண்டு வரையில், தமிழகத்தில் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த யாரும் அமைச்சராக இல்லை. அண்ணா குரல் எழுப்பிய பின்னர் தான் 1962ல் கடையநல்லூர் மஜீத் காங்கிரஸ் அமைச்சரவையிலே இடம்பெற்றார். திமுக தான் முதன்முதலாக தமிழகச் சட்டமன்ற மேலவைக்கு முஸ்லிம் உறுப்பினர் ஒருவரை, அதாவது திருச்சி ஜானி பாயை நியமித்தது.

அப்துல் சமதுவை மாநிலங்களவை உறுப்பினராக ஆக்கியதும் திமுகதான். 1967ம் ஆண்டு திமுக சார்பில் பெரியகுளம் மேத்தா, நெல்லை கதிரவன், சாதிக்பாட்சா ஆகிய மூவர் முஸ்லிம் சமுதாயத்தின் சார்பில் சட்டப்பேரவை உறுப்பினர்களாக ஆனார்கள்.

2001 முதல் 2006 வரை அதிமுக ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது, முதலில் ஒரு ஆறு மாதகாலம் முஸ்லிம் சமுதாயத்தின் பிரதிநிதியாக அன்வர்ராஜா இடம் பெற்றிருந்தார்; ஆனால் அதற்கு பிறகு முஸ்லிம் பிரதிநிதியே இல்லாமல்தான் அதிமுக அமைச்சரவை நடைபெற்றது.

தற்போது 2006ல் பொறுப்பேற்ற திமுக ஆட்சியில் இரண்டு முஸ்லிம்கள், அதாவது உபயதுல்லா, மைதீன்கான் ஆகியோர் அமைச்சர்களாக இருந்து வருகின்றனர். முஸ்லிம் சமுதாயத்தினருக்கு பிரதிநிதித்துவம் இல்லாத திமுக அமைச்சரவையே இதுவரை இருந்ததில்லை என்ற உண்மைகள் அனைத்தையும் அந்த சமுதாயத்தினர் நன்கறிவார்கள்.

சிறுபான்மை முஸ்லிம்களுக்கு கல்வி நிலையங்களிலும், அரசுப் பணிகளிலும் தனியே இடஒதுக்கீடு வேண்டுமென்ற கோரிக்கை நீண்டகாலமாகவே இருந்து வந்தது. அதை ஏற்று, அண்ணாவின் 99ம் ஆண்டு பிறந்தநாள் பரிசாக, பிற்படுத்தப்பட்டோருக்கான 30 சதவீத இடஒதுக்கீட்டிலிருந்து, தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம்பெற்றுள்ள முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதம் தனி இடஒதுக்கீடு வழங்கி, 15.9.2007 அன்று அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

மருத்து படிப்பில் 74 சதவீதம்:

இப்படி இஸ்லாமியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கியதன் காரணமாக, கல்வி நிலையங்களில் அவர்கள் பெற்றுள்ள இடங்களின் எண்ணிக்கை பெருமளவுக்கு அதிகரித்துள்ளன.

எம்.பி.பி.எஸ். மருத்துவப் பட்டப்படிப்பைப் பொறுத்தவரை, இஸ்லாமியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு முன்; அதாவது, 2006-2007ம் ஆண்டில் அவர்கள் பெற்ற இடங்களின் எண்ணிக்கை 46.

2007-2008ம் ஆண்டில் அவர்களுக்கு கிடைத்த இடங்கள் 57. ஆனால், அவர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு பிறகு- 2008-2009ம் ஆண்டில் கிடைத்து்ள இடங்கள் 78.

2009-2010ம் ஆண்டில் கிடைத்துள்ள இடங்கள் 80.

அதாவது, மருத்துவப் பட்டப்படிப்பைப் பொறுத்தவரை இஸ்லாமிய மாணவர்கள் தனி இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு முன்பு பெற்றதைவிட 74 சதவீத அதிகமான இடங்களை தனி இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்குப் பின்பு பெற்றிருக்கிறார்கள்.

பொறியியல் படிப்பில் 72 சதவீதம்:

அதைப் போலவே, பி.இ. பொறியியல் பட்டப்படிப்பைப் பொறுத்தவரை, இஸ்லாமியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு முன், அதாவது, 2007-2008ம் ஆண்டில் அவர்களுக்கு கிடைத்த இடங்கள் 2,125.

ஆனால், இஸ்லாமியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு பிறகு- 2008-2009ம் ஆண்டில் அவர்களுக்கு கிடைத்த இடங்கள் 3,288.

2009-2010ம் ஆண்டில் அவர்களுக்கு கிடைத்த இடங்கள் 3,655.

அதாவது, பொறியியல் பட்டப்படிப்பைப் பொறுத்தவரை இஸ்லாமிய மாணவர்கள் தனி இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு முன்பு பெற்றதைவிட 72 சதவீதத்திற்கு அதிகமான இடங்களை தனி இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு பின்பு பெற்றிருக்கிறார்கள்.

இஸ்லாமியர்களுக்கு கழக அரசு வழங்கிய தனி இடஒதுக்கீட்டின் காரணமாக இப்பொழுது அவர்கள் பெற்றுள்ள வெற்றி, எதிர்காலத்தில் அவர்கள் பெறவேண்டிய பல வெற்றிகளுக்கு அடிப்படையாக அமைந்திட வேண்டுமென்பதே எனது ஆசை.

சிறுபான்மையினர் என்பதால் இஸ்லாமியர்களிடம் நாம் கொண்டிருக்கும் அக்கறையின் காரணமாக, அவர்களுக்கு பல்வேறு நன்மைகளைச் செய்திருந்தாலும்; இப்போதும் நான் சொல்லுகின்றேன்- எல்லாவற்றையும் நாம் செய்து முடித்து விடவில்லை.

அவர்களது மேம்பாட்டுக்கு நாம் ஆற்றிட வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது!. நம்மைப் பொறுத்தவரையில், சமூக நீதிக்கான பயணம் என்பது "நீதிக்கட்சி'' காலத்திலேயே தொடங்கிய நெடிய பயணமல்லவா!.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin