இந்தியாவில் இருந்து ஹஜ் புனித யாத்திரை செல்லும் பயணிகளின் முதலாவது குழு இன்று புதுடெல்லியில் இருந்து மெக்கா புறப்பட்டுச் சென்றது.
இந்த ஆண்டில் முதல்முறையாக ஹஜ் கமிட்டி இணையதளத்தில் பயணிகள் எங்கிருக்கிறார்கள் என்ற தகவல் கணினி மூலம் தெரிவிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டிருப்பதால், ஹஜ் பயணிகளின் உறவினர்கள் அவர்களைத் தொடர்பு கொள்ள வசதி ஏற்படும் என்று வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி விமான நிலையத்தில் முதல் ஹஜ் குழுவினரை வழியனுப்பி வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசுகையில் அமைச்சர் இத்தகவலைத் தெரிவித்தார்.
இந்திய ஹஜ் கமிட்டியின் இணைய தளத்தில் சவுதி அரேபியாவில் தங்கியிருக்கும் ஹஜ் பயணிகளுடன் தொடர்பு கொள்ளும் வசதியும் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
ஏர் இந்தியா விமானம் மூலம் சுமார் 200 ஹஜ் யாத்ரிகர்கள் இன்று புனிதப் பயணம் புறப்பட்டுச் சென்றனர்.
இந்திய ஹஜ் கமிட்டி மூலமாக இந்த ஆண்டு ஒரு லட்சத்து 15 ஆயிரம் பேரும், மேலும் 45 ஆயிரம் பேர் தனியார் அமைப்புகள் மூலமாகவும் புனிதப் பயணம் மேற்கொள்கிறார்கள்.
இன்று முதல் அடுத்த மாதம் (நவம்பர்) 20ஆம் தேதி வரை ஹஜ் பயணிகள் புனிதப் பயணம் மேற்கொள்வார்கள்.
ஹஜ் யாத்திரைக்காக இந்தியாவிலும், சவுதி அரேபியாவிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகளை அரசு உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் கிருஷ்ணா கூறினார்.
ஜெட்டா, மெக்கா முக்கார்மா, மதீனா, முனாவாரா, மினா, அராபத் ஆகிய பகுதிகளில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்து, சிவில் விமான போக்குவரத்து அமைச்சககும், இதர அரசு நிறுவனங்களும் மேற்பார்வையிட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.
பன்றிக்காய்ச்சல் நோய் பரவுவதையும் கவனத்தில் கொண்டு, அரசு உரிய சுகாதார வசதிகளையும் அளிப்பதாகக் கூறிய அவர், ரியாத், ஜெட்டா உள்ளிட்ட இடங்களில் உள்ள இந்தியத் தூதகரங்களுக்கும் பயணிகள் தொடர்பு கொண்டு உரிய உதவியைப் பெறலாம் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக