வியாழன், 15 அக்டோபர், 2009

உயகுர் இஸ்லாமியர்கள் 6 பேருக்கு சீன நீதிமன்றம் மரணதண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது

கடந்த ஜூலை மாதம் சிஞ்சியான் மாகாணத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேருக்கு சீன நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

சீனாவின் சிஞ்சியான் மாகாணத்தில் உள்ள உரும்கியில் உய்குர் இன இஸ்லாமியர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர்.இங்கு கடந்த ஜூலை 5 ஆம் தேதியன்று கலவரத்தில் ஏறக்குறைய 200 பேர் கொல்லப்பட்டனர்.ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர்.

இந்த கலவரம் தொடர்பாக 718 பேர் கைது செய்யப்பட்டனர்.இதில் 21 பேர் மீது கொலை,கொள்ளை, தீ வைப்பு மற்றும் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியது உள்ளிட்ட குற்றச்சாற்றுகள் சுமத்தப்பட்டன.

இவர்கள் மீதான வழக்கு விசாரணை சிஞ்சியான் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.இந்நிலையில், முதல் கட்டமாக 6 பேர் மீதான குற்றச்சாற்று நிரூபிக்கப்பட்டதாக கூறி அவர்களுக்கு மரணதண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இத்தகவலை சீன மத்திய தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.தண்டனை விதிக்கப்பட்ட அனைவருமே உயகுர் இஸ்லாமியர்களே என்பது அவர்களது பெயர்கள் மூலம் தெரியவந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin