வியாழன், 15 அக்டோபர், 2009

குஜராத் இனப்படுகொலை குற்றவாளிகள்



பிப்ரவரி 28, 2002 நரோதாவில் பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்ட ஒருவரின் ஒப்புதல் வாக்குமூலம் "தெகல்கா' வெளியிட்ட ஒலிப்பதிவுகளில் உள்ளது. நரோதாவில் 112 பேர் கொடூரமாகத் தாக்கப்பட்டு, வெட்டிக் கொல்லப்பட்டு, எரிக்கப்பட்டு வெகு நேரம் ஆவதற்குள் மோடி அங்கு வந்ததாகவும், தனது கறுப்புப் பூனை கமாண்டோக்கள் சுற்றியிருந்த நிலையிலும் கூட அக்கொடூரக் குற்றங்களில் ஈடுபட்டவர்களை அவர் மனதாரப் பாராட்டியதாகவும் அந்த ஒலிப்பதிவில் அவர் குறிப்பிடுகிறார் (இதன் மூலம் மோடியின் கறுப்புப் பூனை கமாண்டோக்களும் இந்நிகழ்விற்கு சாட்சிகளாகின்றனர்).

"ஆபரேசன் கலங்க்' "தெகல்கா'வால் பல மாதங்கள் திட்டமிட்டு நடத்தப்பட்டு அக்டோபர் 2007இல் வெளியிடப்பட்டது. 2002 குஜராத் இனப்படுகொலைகளில் ஏதோ ஒரு வகையில் தொடர்பு கொண்டிருந்த பலரது வாக்குமூலங்களும், உரையாடல்களும் கொண்ட ஒலிப்பதிவுகளை தற்போது சி.பி.அய். நீதிமன்றத்திற்கு வெளியே பெறப்பட்ட வாக்குமூலங்கள் என்ற அடிப்படையில் விசாரணைக்கு எடுத்துக் கொண்டிருக்கின்றன.

இந்த உரையாடல்களின் உள்ளடக்கங்கள் அதிர்ச்சியூட்டுவனவாகவும் பல செய்திகளை அளிப்பனவாகவும் உள்ளன. கும்பல் கொலைகள், பாலியல் வன்புணர்வுகள் போன்றவற்றை அச்சமின்றி வெளிப்படையாக ஒப்புக் கொள்வதோடு, பிப்ரவரி 27, 2002க்கு பல வாரங்களுக்கு முன்பாகவே கோத்ரா மற்றும் கோத்ராவிற்குப் பிந்தைய வன்முறைகளுக்கான திட்டமிடுதல்களும், பிற மாநிலங்களிலிருந்து எவ்வாறு ஆயுதங்கள் வரவழைக்கப்பட்டன என்பது குறித்தும் விளக்குகின்றனர்.

அதோடு கும்பல் கொலைகள் மற்றும் வன்புணர்ச்சிகளைத் தூண்டி விடுவதில் முதலமைச்சர் நரேந்திர மோடிக்கு இருந்த நேரடி பங்கையும் விவரிக்கின்றன "தெகல்கா' ஒலிப்பதிவுகள் மூலம் வெளிப்பட்டவற்றின் அடிப்படையில் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் இந்த ஒலிப்பதிவுகளின் நம்பகத்தன்மை குறித்து ஆராய வேண்டும். "தெகல்கா' பதிவில் பேசிய அனைவரையும், தங்கள் உரையாடலில் அவர்கள் குறிப்பிடும் நபர்களையும் (அவர்கள் எவ்வளவு அதிகாரம் கொண்ட பதவிகளில் இருந்த போதிலும்) சிறப்புப் புலனாய்வுக்குழு விசாரிக்க வேண்டும்.

மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் கணக்கு அலுவலகத்தில் பணிபுரிந்த வதோதரா என்பவருடன் இப்படியான ஓர்உரையாடல் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருடன் மோடி மற்றும் மோடியின் கையாளான பாபு பஜ்ரங்கியின் நேரடி உத்தரவுகள் குறித்து அவர் சொல்கிறார். கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மோடி சென்றது, கொடூரமாக பாதிக்கப்பட்டு சிதைந்து போய் அருகிலுள்ள புனரமைப்பு முகாம்களில் அடைக்கலம் புகுந்துள்ள மக்களை காண அல்ல; இந்த உரையாடல்களின் மூலம் அவர் கொடூரத்தின் வெற்றி நாயகனாகவே அங்கு சென்றுள்ளதாகத் தெரிகிறது. - அடுத்த இதழிலும்

“கொல்லப்பட்டவர்களின் தலையை வைத்து கிரிக்கெட் விளையாடினோம்''

மோடி நடத்திய ஆவணப்படுத்தப்படாத ரகசியக் கூட்டங்கள் :

பிப்ரவரி 27, 2002 அன்று முதலமைச்சர் மோடியின் அலுவலகத்தில் நடத்தப்பட்ட ரகசியக் கூட்டத்திற்கு கூட்டக் குறிப்புகளோ அல்லது வேறு ஆவணங்களோ இல்லாதது மட்டுமல்ல; இதே போன்ற பல கூட்டங்கள் உயர் அதிகாரிகளால் நடத்தப்பட்டு, அவர்களுக்கு கீழிருக்கும் அதிகாரிகள் அதில் கலந்து கொண்டுள்ளனர் என்பதோடு, அந்தக் கூட்டங்களுக்கும் எவ்வித ஆவணமும் பராமரிக்கப்படவில்லை.

அன்று காவல் துறை கண்காணிப்பாளர் (பாதுகாப்பு) பதவி வகித்த சஞ்சீவ் பட், இம்மாதிரியான பல கூட்டங்களில் காவல் துறை கூடுதல் தலைவரான ஜி.சி. ரெய்கரின் ஊழியர் அதிகாரியாக கலந்து கொண்டுள்ளார். ஆனால் தனக்கு இடப்பட்ட உத்தரவுகள் குறித்து எவ்வித ஆவணங்களையும் அவர் வைத்திருக்கவில்லை.

கே. என். ஷர்மா, அகமதாபாத் பகுதி காவல் துறை அய்.ஜி. பதவி வகித்த இவரது பகுதியில்தான், அதிகமான எண்ணிக்கையில் மக்கள் கலவரத்தில் கொல்லப்பட்டிருந்தனர். இவரும் இத்தகைய சட்ட விரோதமான கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறார்.

தீபக் ஸ்வரூப், வதோரா பகுதி காவல் துறை அய்.ஜி. இவர் பதவி வகித்த பகுதியில்தான் கோத்ரா நிகழ்வு நடந்தது. அதோடு, சிறுபான்மையினருக்கு எதிரான கும்பல் கொலைகள் மற்றும் பிற வன்கொடுமைகளையும் நடத்தியிருக்கின்றன. இவரும் இக்கூட்டங்களில் பங்கேற்றிருக்கிறார்.

எம்.கே. டாண்டன், அகமதாபாத் உதவி ஆணையர். இவரது பகுதியில்தான் நரோதா பாட்டியா, குல்பர்கா சமூகம் உள்ளிட்ட பல கொடூர கும்பல் கொலைகள் நடந்துள்ளன. இவர் உயர் மட்ட வலைப் பின்னலின் பகுதியாக இருந்திருக்கிறார்
.

குல்பர்கா தாக்குதலில் தப்பியவர்கள் பாதுகாப்பான பகுதிக்கு தப்பியோடிய போதும், கொல்லப்பட்ட 70 பேரின் உடல்கள் அடையாளம் காணக்கூடிய நிலையில் இருந்த போது அவர் அந்த இடத்தில் இருந்திருக்கிறார். 3 நாட்களுக்குப் பிறகு, குல்பர்க் மற்றும் நரோதாவில் கொல்லப்பட்ட 133 உடல்கள் மொத்தமாக புதைக்கப்பட்ட போது உடல்கள் சிறு துண்டுகளாக வெட்டப்பட்டிருந்தன. "தெகல்கா' விடம் உரையாடும்போது குல்பர்க் சமூக படுகொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான மதன் சவால், கொல்லப்பட்டவர்களின் தலையை வைத்து தான் கிரிக்கெட் விளையாடியதாகக் குறிப்பிடுகிறார், விடை தெரியாத கேள்வி என்னவென்றால் அந்த உடல்களைத் துண்டாடியதில் டாண்டனும் பங்கேற்றாரா என்பதே.

அமிதாப் பதக், காந்தி நகர் பகுதி அய்.ஜி. இவரது பகுதியில்தான் கோத்ராவிற்கு பிந்தைய கலவரத்தில் அதிக எண்ணிக்கையில் மக்கள் கொல்லப்பட்டிருந்தனர். எடுத்துக்காட்டாக, மெஹ்சானா மாவட்டம் சர்தார்புரா மற்றும் சபர்கந்தா மாவட்டத்தில் பல இடங்கள். இவரும் இச்சதியில் பங்கு பெற்றிருந்தார்.

ஷவானந்த் ஜா, அகமதாபாத் காவல் துறை கூடுதல் ஆணையர். இவரது பகுதியில் சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிராக பல கொடுமைகள் நடந்தன. இவர் முதலமைச்சருக்கு மிக நெருக்கமானவர். 2004-2006க்கு இடைப்பட்ட காலத்தில் உள்துறைச் செயலாளராக, அரசு சார்பாக பல தவறான அறிக்கைகளை அவர் உச்ச நீதிமன்றத்தில் அளித்தார். தற்போது உச்ச நீதிமன்றம் நியமித்திருக்கும் சிறப்புப் புலனாய்வுக் குழுவில் இவரும் ஓர் உறுப்பினர் என்பது நகை முரண்.

டி.டி. துதேஜா, வதோரா பகுதி காவல் துறை ஆணையர். ஏறத்தாழ 37க்கும் மேற்பட்ட வன்முறை நிகழ்வுகள் இவரது பகுதியில் நடந்துள்ளன. இதில் பெஸ்ட் பேக்கரி நிகழ்வும் அடங்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin