சனி, 17 அக்டோபர், 2009

பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள் உறுதிமொழி அளிக்க உத்தரவு

"சமர்ப்பிக்கும் சான்றிதழ்கள் உண்மையானவை' என பாஸ்போர்ட் பெற விண்ணப்பிப்போர் உறுதிமொழி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மதுரை மண்டல அலுவலகத்தில் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கும் சிலர் முகவரி, வயது, இருப்பிட ஆதாரங்களுக்காக போலி சான்றிதழ்களை தருகின்றனர்.

போலீசில் புகார் செய்து அதன் பிறகு இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இதைத் தவிர்த்து, போலி சான்றிதழ் கொடுப்போர் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வசதியாக, உறுதிமொழி பெறப்படுகிறது. விண்ணப்பங்களை பெறும்போதே, உறுதிமொழி அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரத்தையும் பாஸ்போர்ட் அலுவலக ஊழியர்கள் தருகின்றனர். இதில் விண்ணப்பதாரர் கையெழுத்திட்டு தர வேண்டும். உறுதிமொழியில் கூறப்பட்டுள்ளதாவது:

"எனது பாஸ்போர்ட் விண்ணப்பத்துடன் இணைக்கப் பட்ட அனைத்து சான்றிதழ்களும் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து வழங்கப்பட்டவை என உறுதி அளிக்கிறேன். இதில் எந்த சான்றிதழும் பொய்யானதோ அல்லது தவறான முறையில் தயாரிக்கப்பட்டதோ அல்ல. பொய்யான சான்றிதழ்களை சமர்ப்பித்தால் பாஸ்போர்ட் மறுக்கப்படும் அல்லது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் அல்லது இவை இரண்டும் சேர்த்து எடுக்கப்படும் என்பதை நான் அறிவேன்.

மேலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சான்றிதழ்கள் அனைத்தும் அவற்றை வழங்கிய அதிகாரிகளின் உண்மைச்சான்றுக்கு உட்படுத்தப்படும் என்பதையும் அறிவேன்' என குறிப்பிடப்பட்டுள்ளது. பாஸ்போர்ட் அலுவலர் ஜோஸ் கே.மாத்யூ கூறும்போது, ""அவ்வப்போது போலி சான்றிதழ்களை சமர்ப்பிக்கின்றனர்.

வருமான வரி ரிட்டர்ன் படிவங்களிலும் போலிகள் வருவதால் அவற்றை சான்றிதழாக ஏற்றுக்கொள்ள முடியாது. மூன்று வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் பெற விரும்புவோர், குழந்தைகளை அழைத்து வர வேண்டியதில்லை. பெற்றோரில் ஒருவர் வந்தால் போதும்'' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin