ஸ்ரீவை மக்களை பற்றியும் ஊர் நடப்புகளையும் தெரிந்து கொள்ளலாம்,உங்களுடைய கருத்துகளையும் பதிவு செய்யலாம்..
சனி, 17 அக்டோபர், 2009
ரூபாய் நோட்டுகள் எந்தப் பகுதியில் கிழிந்தாலும் மாற்றலாம் : விதிமுறைகளை எளிதாக்கி ஆர்.பி.ஐ., அறிவிப்பு
ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு, ரிசர்வ் வங்கியால் திருத்தப்பட்ட விதிமுறைகள், கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி முதல் அமலாக்கப்பட்டுள்ளது. புதிய விதிமுறையின்படி, ரூபாய் நோட்டுகள் எந்தப் பகுதியில் கிழிந்திருந்தாலும், அது அழுக்கடைந்த நோட்டுகளாக கருதி, வேறு ரூபாய் நோட்டு மாற்றித் தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அழுக்கான மற்றும் கிழிந்த ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக, புதிய நோட்டுகளை மாற்றுவதற்கான விதிமுறைகள், ரிசர்வ் வங்கியால் 1975ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. 1985ம் ஆண்டு மாற்றம் செய்யப்பட்ட இவ்விதிமுறைகள், பொதுமக்களின் வசதிக்காக தற்போது மேலும் எளிமையாக்கப்பட்டுள்ளன.
இது குறித்து, சென்னை ரிசர்வ் வங்கியின் பணம் வழங்கும் துறையின் துணைப் பொது மேலாளர் ரங்கநாதன் கூறியதாவது:ரூபாய் நோட்டுகளின் வரிசை எண் பகுதியில் கிழிந்திருந்தால், முன்பு அவை செல்லாத நோட்டுகளாக கருதப்படும். இவற்றை ரிசர்வ் வங்கியால் அனுமதிக்கப் பட்ட, பண கருவூலங்கள் உள்ள வங்கிகளின் கிளைகளில் மட்டும் தான் மாற்ற முடியும்.தற்போதைய விதிமுறையின்படி, ரூபாய் நோட்டுகளின் எந்த பகுதியிலும் (வரிசை எண் பகுதி உட்பட) இரு துண்டுகளாக கிழிந்திருக்கும் பட்சத்தில், அவை அழுக்கடைந்த நோட்டுகளாகவே கருதப்படும்.
இவற்றை இந்தியாவிலுள்ள அனைத்து வங்கிகளிலும், அவற்றின் கிளைகளிலும் மாற்றிக் கொள்ளலாம்.இரண்டுக்கும் மேற்பட்ட துண்டுகளாக கிழிந்திருக்கும் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு, புதிய விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன. பல துண்டுகளாக கிழிந்திருக்கும் ரூபாய் நோட்டில், கிழியாத மிகப்பெரிய ஒரு துண்டு 50 சதவீத பரப்பளவிற்கு மேல் இருந்தால், அதற்கு முழுத்தொகை வழங்கப்படும்.இதற்கு அந்த ரூபாய் துண்டின் பரப்பளவு ஒரு ரூபாய்க்கு 31 ச.செமீ, இரண்டு ரூபாய்க்கு 34 ச.செ.மீ., ஐந்து ரூபாய்க்கு 38 ச.செ.மீ., 10 ரூபாய்க்கு 44 ச.செ.மீ., மற்றும் 20 ரூபாய்க்கு 47 ச.செ.மீ., ஆகவும் இருக்க வேண்டும்.கிழிந்த நோட்டின்,கிழியாத மிகப்பெரிய துண்டின் பரப்பளவு 50 சதவீதம் மற்றும் அதற்கு கீழும் இருந்தால், அதன் மதிப்பு முழுவதும் நிராகரிக்கப்படும்.
பல துண்டுகளாக கிழிந்திருக்கும் ரூபாய் நோட்டின் (50 ரூபாய் முதல் 1,000 ரூபாய் வரை), கிழியாத மிகப்பெரிய ஒரு துண்டின் பரப்பளவு 65 சதவீதத்திற்கு மேல் இருந்தால், அதற்கு முழுதொகை தரப்படும். இதற்கு அந்த ரூபாய் துண்டின் பரப்பளவு 50 ரூபாய்க்கு 70 ச.செ.மீ., 100 ரூபாய்க்கு 75 ச.செ.மீ., 500 ரூபாய்க்கு 80 ச.செ.மீ., மற்றும் 1,000 ரூபாய்க்கு 84 ச.செ.மீ., ஆகவோ அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்.
பல துண்டுகளாக கிழிந்திருக்கும் ரூபாய் நோட்டின், கிழியாத மிகப்பெரிய ஒரு துண்டின் பரப்பளவு 40 சதவீதத்திற்கு மேலும், 65 சதவீதம் வரையிலும் இருந்தால், அவற்றுக்கு பாதி தொகை வழங்கப்படும். இதற்கு அந்த ரூபாய் துண்டின் பரப்பளவு 50 ரூபாய்க்கு 43 ச.செ.மீ., 100 ரூபாய்க்கு 46 ச.செ.மீ., 500 ரூபாய்க்கு 49 ச.செ.மீ., மற்றும் 1,000 ரூபாய்க்கு 52 ச.செ.மீ., ஆகவோ அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்.கிழியாத மிகப்பெரிய ரூபாய் துண்டின் பரப்பளவு 40 சதவீதம் மற்றும் அதற்கு கீழும் இருந்தால், அவற்றின் மதிப்பு முழுவதுமாக நிராகரிக்கப்படும்.
இந்த ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கியிலும், ரிசர்வ் வங்கியால் அனுமதிக்கப்பட்ட தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மற்றும் இதர வணிக வங்கிகளின் 303 பண கருவூலங்கள் உள்ள கிளைகளிலும் மாற்றிக் கொள்ளலாம். இவ்வாறு ரங்கநாதன் கூறினார்
செய்தி : தினமலர்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக