பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் தேசிய தர மதிப்பீட்டுக் (நாக்) குழுவினர் திங்கள், செவ்வாய் ஆகிய இரண்டு தினங்கள் தர மதிப்பீடு செய்ய உள்ளனர்.
இதுகுறித்து கல்லூரியின் முதல்வர் முனைவர் ஹெச். செய்யது உதுமான், ஒருங்கிணைப்பாளர் ஏ. நிசமத்துல்லா ஆகியோர் சனிக்கிழமை கூறியதாவது: எமது கல்லூரிக்கு 2003 ஆம் ஆண்டில் "நாக்' குழு வழங்கிய தர மதிப்பீடு சான்றிதழ் இந்த ஆண்டுடன் காலாவதியாகிறது. எனவே, அங்கீகாரத்தை புதுப்பிப்பதற்காக அக் குழுவினர் கல்லூரியில் உள்ள வசதிகளை ஆய்வு செய்ய உள்ளனர். அதன் அறிக்கையை "நாக்' அமைப்பிடம் தாக்கல் செய்வார்கள்.
2003-ம் ஆண்டு "நாக்' அங்கீகாரம் பெற்ற பின்பு 6 ஆண்டுகளில் தன்னாட்சி, ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ், பல்வேறு உள்கட்டமைப்புகள், புதிய பாடத் திட்டங்கள், ஆசிரியர் நியமனம், கிராம சீரமைப்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் கல்லூரி வளர்ச்சி கண்டுள்ளது.
எனவே, இந்த முறை மதிப்பீடு செய்யும் "நாக்' குழுவினர் கல்லூரிக்கு "ஏ கிரேடு' வழங்குவார்கள் என எதிர்பார்க்கிறோம் என்றனர்.
"நாக்' குழுவினரின் தர மதிப்பீட்டுக்கான ஏற்பாடுகளை கல்லூரித் தாளாளர் பத்ஹூர் ரப்பானி வழிகாட்டுதலின்பேரில் கல்லூரி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக