சனி, 17 அக்டோபர், 2009

ஹஜ் சிறப்பு விமான சேவை: ஏர் இந்தியா அறிவிப்பு

ஹஜ் பயணிகளின் வசதிக்காக ஏர் இந்தியா 137 சிறப்பு விமான சேவைகளை, வரும் 20ம் தேதி முதல் இயக்க உள்ளது. இது குறித்து, வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: ஹஜ் பயணிகளின் வசதிக்காக ஏர் இந்தியா நிறுவனம் வரும் 20ம் தேதி முதல், 137 சிறப்பு விமான சேவைகளை இயக்குகிறது.

மேலும், நாடெங்கிலும் உள்ள ஹஜ் பயணிகள், சவுதி அரேபியன் மற்றும் என்.ஏ.எஸ்., ஏர் நிறுவனங்களின் விமானங்களில் பயணிக்க வசதியாக 117 உள்நாட்டு சிறப்பு விமான சேவைகளையும் இயக்க உள்ளது.

இதன் மூலம், ஏர் இந்தியா 40 ஆயிரம் ஹஜ் பயணிகளுக்கு சேவை அளிக்கும். ஜெட்டா, மதீனா ஆகிய இடங்களுக்கு, கோல்கட்டா, நாக்பூர், கவுகாத்தி, ஜெய்பூர், இந்தூர், அவுரங்காபாத், ஸ்ரீநகர் ஆகிய இடங்களில் இருந்து தனது சொந்த விமானங்களில் ஏர் இந்தியா நிறுவனம் விமான சேவைகளை இயக்குகிறது.

சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் விமானங்களை இணைக்கும் வகையில், மும்பை, ஆமதாபாத், டில்லி, லக்னோ, ஐதராபாத், பெங்களூரு மற்றும் சென்னை ஆகிய இடங்களுக்கு விமான சேவை இயக்கப்படும்.

இந்தியாவில் இருந்து ஜெட்டா, மதீனா ஆகிய இடங்களுக்கு வரும் 20ம் தேதி முதல் அடுத்த மாதம் 20ம் தேதி வரை ஏர் இந்தியாவின் முதற்கட்ட ஹஜ் சிறப்பு விமான சேவை இயக்கப்படும். அடுத்த கட்டமாக, வரும் டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதியில் இருந்து அடுத்த ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி வரை, ஹஜ் பயணிகளை திரும்ப அழைத்து வருவதற்காக சிறப்பு விமான சேவை இயக்கப்படும். இவ்வாறு, அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin