சனி, 24 அக்டோபர், 2009

சென்னையில் இருத்து ஹஜ் பயணிகளின் முதல் விமானம் நேற்று புறப்பட்டது

சென்னையிலிருந்து 417 ஹஜ் யாத்ரீகர்கள் நேற்று காலை மதீனாவுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள விரும்பும் பயணிகளுக்கு தமிழக அரசின் ஹஜ் கமிட்டி, ஆண்டுதோறும் தேவையான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

புனிதப் பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகளின் முதல் குழுவில் 417 பேர் உள்ளனர். இவர்கள் நேற்று அதிகாலை 4 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மதீனாவுக்கு புனிதப் பயணம் கிளம்பினர்.

இவர்களை வக்பு வாரியம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான் வழியனுப்பி வைத்தார். தமிழ்நாடு ஹஜ் கமிட்டித் தலைவரும் எம்.பி.யுமான ஜே.எம்.ஆரூண் ரஷீத், துணைத்தலைவர் பிரசிடெண்ட் அபுபக்கர் உறுப்பினர் செயலாளர் கே.அலாவுதீன் உட்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்த ஆண்டுக்கான புனித பயணத்தில் சில மாறுபாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பயணிகளை தவிர்ப்பதற்காக, சவூதி அரேபியா அரசு சில கட்டுப்பாடுகளை விதித்தது. பன்றிக் காய்ச்சல் நோய்க்கான அறிகுறி இல்லை என்ற மருத்துவ சான்றிதழைப் பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இந்தியாவில் இருந்து செல்லும் அனைத்து ஹஜ் பயணிகளும் சர்வதேச பாஸ்போர்ட்டு வைத்திருக்க வேண்டும் என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. எனவே, அனைத்து ஹஜ் பயணிகளுக்கும் 8 மாதத்துக்கு மட்டுமே பயன்படுத்தக் கூடிய சர்வதேச பாஸ்போர்ட்டுகளை மத்திய அரசு வழங்கியது. .

இந்த பாஸ்போர்ட்டை ஒருமுறைதான் பயன்படுத்த முடியும். மேற்கொண்டு அதை புதுப்பிக்க இயலாது. இதுவரை பொதுவான பாஸ்போர்ட் மூலம் ஹஜ் பயணிகள், புனிதப் பயணம் மேற்கொண்டு வந்தனர். ஆனால் சவுதி அரேபியா அரசு விதித்த சில நிபந்தனைகளால், சர்வதேச பாஸ்போர்ட்டுகளுடன் பயணம் செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. அந்த வகையில் இந்தியாவில் இருந்து சர்வதேச பாஸ்போர்ட் மூலம் பயணிகள் ஹஜ் பயணம் செல்வது இதுதான் முதன்முறை.

இந்தியாவில் இருந்து செல்லும் ஹஜ் பயணிகளுக்கு தேவைப்படும் மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவக் குழுவும் ஏற்கனவே சவூதி அரேபியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு இந்தியாவிலிருந்து 1 லட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் ஹஜ் செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin