வியாழன், 15 அக்டோபர், 2009

மறக்க முடியாத பாபர் மசூதி - ஒரு பார்வை

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் 475 ஆண்டுகளுக்கு முன்பு பாபர் மசூதி கட்டப்பட்டது. அங்கு ராமர் கோவில் கட்டும் வேலை 6_12_1992 அன்று பகல் 12.15 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக விசுவ இந்து பரிஷத், பாரதீய ஜனதா, ஆர்.எஸ்.எஸ். ஆகிய இயக்கங்களைச் சேர்ந்த 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் திரண்டிருந்தார்கள்.

இந்த இடத்தின் அருகிலேயே பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அங்கு தலைவர்கள் பேசிக்கொண்டு இருந்தார்கள். அந்த நேரத்தில், கூட்டத்தின் ஒரு பகுதியினர் "ஜெய் ஸ்ரீராம்" என்று முழங்கிய படியே பாபர் மசூதி வளாகத்தை நோக்கி பாய்ந்து சென்றனர்.

தலைவர்கள் தடுத்தும் அதைமீறிச் சென்றார்கள். அவர்கள் கைகளில் சுத்தியல், இரும்பு குழாய், மண்வெட்டி போன்ற ஆயுதங்களை வைத்திருந்தனர். பாபர் மசூதியை நோக்கி கற்களை வீசினார்கள். பாபர் மசூதி வளாக பகுதியில் மரப்பட்டைகளால் தடுப்பு வேலி அமைக்கப்பட்டு இருந்தது. அதை கரசேவை தொண்டர்கள் அடித்து உடைத்து எறிந்துவிட்டு பாபர் மசூதிக்குள் புகுந்தனர். போலீசார் எண்ணிக்கையில் மிகக்குறைவாக இருந்ததால் தடுத்து நிறுத்த முடியவில்லை. தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள். அதற்கும் பலன் அளிக்கவில்லை. பாபர் மசூதி சுற்றுச்சுவர் `மெயின்கேட்' (பிரதான நுழைவு வாயில்) ஆகியவை நொறுக்கி சேதப்படுத்தப்பட்டன.

பாபர் மசூதியின் மேல் பகுதியில் உருண்டை வடிவில் 3 கோபுரங்கள் (டூம்) இருந்தன. அவற்றின் மீது ஏறி நின்று, காவிக்கொடியை ஏற்றினார்கள். பிறகு டூமை (கோபுரம்) இடிக்கத்தொடங்கினார்கள். செங்கற்களை உருவி எடுத்தனர். சிலர் சம்மட்டியால் உடைத்துத் தள்ளினார்கள். பகல் 2.45 மணி அளவில், முதல் கோபுரம் இடித்து தள்ளப்பட்டது. 4.30 மணிக்கு 2_வது கோபுரமும், 4.45 மணிக்கு 3_வது கோபுரமும் இடிக்கப்பட்டது.

இதுபற்றி மத்திய உள்துறை மந்திரி சவானுக்கு தகவல் எட்டியது. உடனே அவர் உத்தரபிரதேச முதல்_மந்திரியாக இருந்த கல்யாண்சிங்குடன் அவசரமாக டெலிபோனில் தொடர்பு கொண்டு பேசினார். "நிலைமையை சமாளிக்க அயோத்தியை சுற்றி நிறுத்தி வைத்துள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படையை பயன்படுத்துங்கள்" என்று உத்தரவிட்டார். அதன் பிறகு மத்திய ரிசர்வ் போலீஸ் படையும், அதிரடிப்படையும் பாபர் மசூதி வளாகத்துக்கு கிளம்பினார்கள். ஆனாலும் அவர்களால் எளிதாக செல்ல முடியவில்லை.

ரோடுகளில் கற்கள், தண்ணீர் தொட்டிகள், பீப்பாய்கள் போன்றவைகளை போட்டு தடை ஏற்படுத்தி இருந்தனர். அவற்றையெல்லாம் அகற்றிக்கொண்டே சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் போலீஸ் படை முன்னேறி சென்றது. பாபர் மசூதி வளாகப்பகுதி முழுவதுமே தொண்டர்களாக இருந்தனர். ஒன்றும் செய்ய இயலாததால் போலீஸ் படை வாபஸ் பெறப்பட்டது. அதே நேரத்தில் பொதுக்கூட்டத்தில் முரளி மனோகர் ஜோஷி, எல்.கே.அத்வானி, அசோக் சிங்கால், செ.வி.சேஷாத்திரி ஆகியோர் பேசிக்கொண்டிருந்தார்கள்.

தொண்டர்களில் சிலர் அங்குள்ள ராமர் கோவில் கர்ப்பகிரகத்துக்குள் புகுந்து ராமர் சிலை மற்றும் சில சிலைகளை எடுத்துச் சென்றனர். அங்கு பூஜை நடத்தி வந்த விஜயகுமார் என்ற பூசாரியை தாக்கிவிட்டு சென்றுவிட்டார்கள். பின்னர் மாலையில் ராமர் சிலை மீண்டும் அதே இடத்தில் கொண்டு வந்து வைக்கப்பட்டது.

பாதுகாப்பாக இருப்பதற்காகவே ராமர் சிலை எடுத்துச் செல்லப்பட்டதாக பிறகு அறிவிக்கப்பட்டது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் காட்டுத்தீ போல பரவியது. பதட்டமான சூழ்நிலை உருவானது. இந்த நிலையில் பாபர் மசூதி ஒருங்கிணைப்பு கமிட்டி தலைவர் சையத் சகாபுதீன் ஒரு வேண்டுகோள் விடுத்தார். அதில், "பாபர் மசூதியை பாதுகாக்க தவறிய கல்யாண்சிங் அரசை "டிஸ்மிஸ்" செய்ய வேண்டும். முஸ்லிம்கள் பொறுமையாக இருக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டிருந்தார். இதேபோல டெல்லியில் ஜூம்மா மசூதி முன்பு திரண்டிருந்தவர்கள் மத்தியில் இமாம் சையத் அப்துல் புகாரில் பேசுகையில், "இந்த சமயத்தில் முஸ்லிம்கள் பொறுமையையும், சகிப்புத் தன்மையையும் கடைபிடிக்க வேண்டும்.

பாபர் மசூதி இடிக்கப்படுவதை தடுக்க முன் நடவடிக்கை எடுக்காததற்கு பிரதமர் நரசிம்மராவ், உள்துறை மந்திரி சவான் ஆகியோர்தான் காரணம்" என்று குற்றம் சாட்டினார். பாபர் மசூதி இடிக்கப்பட்டதை அடுத்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கலவரம் ஏற்பட்டது. டெல்லி, மும்பை, ஜெய்ப்பூர், ஐதராபாத் போன்ற நகரங்களில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அன்று ஒரே நாளில் 233 பேர் பலியானார்கள்.

அதிகபட்சமாக மராட்டியத்தில் 68 பேர் கொல்லப்பட்டனர். குஜராத்தில் 41 பேரும், உத்தரபிரதேசத்தில் 35 பேரும், ராஜஸ்தானில் 23 பேரும், கர்நாடகத்தில் 24 பேரும், மத்தியபிரதேசத்தில் 21 பேரும், ஆந்திராவில் 10 பேரும், மேற்கு வங்காளத்தில் 5 பேரும், டெல்லியில் பீகாரில் 2 பேரும், கேரளாவில் ஒருவரும் இறந்தார்கள். அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவம் பற்றி, மத்திய அரசு அவசர ஆலோசனை நடத்தியது. உத்தரபிரதேசத்தில் கல்யாண்சிங் தலைமையில் இருந்த பாரதீய ஜனதா மந்திரிசபையை "டிஸ்மிஸ்" செய்வது என்றும், அந்த மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை பிரகடனம் செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

மத்திய மந்திரிசபையின் சிபாரிசை ஏற்று, கல்யாண்சிங் மந்திரி சபையை டிஸ்மிஸ் செய்து, ஜனாதிபதி வெங்கடராமன் உத்தரவு பிறப்பித்தார். அதைத்தொடர்ந்து உத்தரபிரதேச மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமுலுக்கு வந்தது.

பாபர் மசூதி வரலாறு கி.பி. 1528:_அயோத்தியில் பாபர் மசூதி கட்டப்பட்டது. இதைக் கட்டியவர் பெயர் மிர் பாகி. இவர், பாபர் மீது மிகுந்த பற்று கொண்டவர். பாபர் மசூதி கட்டப்பட்ட இடம் ராமர் பிறந்த இடம் என்றும், அங்கு 11_ம் நூற்றாண்டில் ராமர் கோவில் கட்டப்பட்டது என்றும், அந்தக் கோவில் மீது பாபர் மசூதியைக் கட்டிவிட்டார்கள் என்றும் இந்துக்கள் குற்றம் சாட்டினர்.

1853:_ ராமர் பிறந்த இடம் தொடர்பாக இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே மோதல் நடந்து 75 பேர் கொல்லப்பட்டனர்.

1857:_ இந்து சாமியார் ஒருவர், பாபர் மசூதி வளாகத்தில் ஒரு சிறு பகுதியில் ராமர் கோவில் அமைத்தார்.

1859:_ இந்துக்களும், முஸ்லிம்களும் தனித்தனியே வழிபாடு நடத்துவதற்கு வசதியாக சுவர் ஒன்றை அரசாங்கம் கட்டியது.

1934:_ இந்து _ முஸ்லிம் கலவரத்தில், பாபர் மசூதி சுவரும், ஒரு கோபுரமும் சேதம் அடைந்தன.

1983:_ பாபர் மசூதி உள்ள இடத்தில் ராமர் கோவில் கட்டவேண்டும் என்ற இயக்கத்தை, விஸ்வ இந்து பரிஷத் தொடங்கியது.

1986:_ இந்துக்களும் சென்று வழிபடுவதற்கு வசதியாக, பாபர் மசூதி கதவுகளைத் திறந்து விடும்படி, பைஜாபாத் மாவட்ட நீதிபதி கட்டளையிட்டார்.

1989:_ பாபர் மசூதி அருகே இந்து கோவில் கட்ட ராஜீவ் காந்தி அரசாங்கம் அனுமதி அளித்தது. இதைத்தொடர்ந்து நடந்த கலவரங்களில் சுமார் 500 பேர் இறந்தனர்.

1990:_ ராமர் கோவில் கட்ட ஆதரவு திரட்டும் நோக்கத்துடன், பாரதீய ஜனதா தலைவர் எல்.கே.அத்வானி "ரத யாத்திரை" தொடங்கினார். அயோத்தியில், ராமர் கோவில் கட்ட ஒரு லட்சம் தொண்டர்கள் ("கர சேவகர்கள்") திரண்டனர். இவர்கள், பாபர் மசூதிக்குள் நுழைந்தபோது கலவரம் மூண்டது. போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 30 பேர் கொல்லப்பட்டனர்.

1992 டிசம்பர் 6:_ பாபர் மசூதி இடிக்கப்பட்டது.தொடர்ந்து நடந்த கலவரங்களில் 2 ஆயிரம் பேர் இறந்ததாக மதிப்பிடப்படுகிறது.

1 கருத்து:

  1. உங்களுடைய இந்தப் பதிவினை எங்கள் தளத்தில், வலைப்பார்வை பகுதியில் இணைத்துள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றோம். நன்றி!
    - 4TamilMedia Team

    http://ww1.4tamilmedia.com/index.php/2009-04-20-00-21-36/2009-05-01-01-53-36/4247-2009-11-24-19-55-07

    பதிலளிநீக்கு

LinkWithin

Blog Widget by LinkWithin