சனி, 30 ஜூலை, 2011

ஸ்ரீவைகுண்டத்தில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்

ஸ்ரீவைகுண்டத்தில் சமச்சீர் கல்வியை அறிமுகப்படுத்தக் கோரி ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஸ்ரீவைகுண்டம் தொடக் கக்கல்வி அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். வட்டார செயலாளர் வீரமுர்த்தி வரவேற்றார். ஆர்ப்பாட்டத் தில் தலைமை ஆசிரியர்கள் ஜெயபிரகாஷ், ஆண்ட்ரூ குருஸ், தேவ ராஜன், மாவட்ட செயலாளர் சம்பத் சாமுவேல், வட்டார பொருளாளர் பாப்ஹயஸ், ஆகியோர் ஆர்ப்பாட்டத் தின் நோக்கம் பற்றி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் சமச்சீர் கல்வியை நடப்பு கல் வியாண்டில் அமல்படுத்திட வேண்டும் எனவும், தன் பங்கேற்பு ஓய்வு ஊதிய திட்டத்தை கைவிடவும், ஆறாவது ஊதியகுழுவின் மாற்ற குறைபாடுகளை களைந்திட வேண்டும் எனவும், ஒளிவு மறைவற்ற ஆசிரியர் கலைந்தாய்வு முறையை அமல்படுத்த வேண்டும் எனவும் பணிக் கால அடிப்படையில் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

செய்தி : தினமலர்

புதன், 27 ஜூலை, 2011

ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆய்வு


ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டை பொதுப்பணித்துறை அமைச்சர் கே.பி.ராமலிங்கம், பார்வையிட்டார். தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா உத்தரவுபடி தாமிரபரணி பாசன அணைக்கட்டுக்களை பார்வையிட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு விவசாயிகளின் குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

தாமிரபரணி ஆற்றுப் பாசனத்தில் கனடியன் அணைக்கட்டில் இருந்து கடைசி அணைக்கட்டான ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டுப்பகுதி வரை உள்ள பாசன பகுதிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் கே.பி.ராமலிங்கம் பார்வையிட்டார்.

ஸ்ரீவைகுண்டம் வந்த அமைச்சருக்கு தாமிரபரணி பாசன வடிநில கோட்ட திட்டக்குழு தலைவர் உதயசூரியன், பேய்க்குளம் விவசாய சங்க பொருளாளர் குணசேகரன், ஒன்றிய அதிமுக. செயலாளர் ஆறுமுகநயினார், நகர செயலாளர் பால்துரை, பெருங்குளம் நகர செயலாளர் செல்லத்துரை ஆகியோர் வரவேற்றனர். பின்னர் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் உள்ள 18 மணல்வாரிகளிலும் உள்ள சர்ட்டர்கள் உடைந்து திறக்க முடியாமல் பயனற்றுப்போய் கிடப்பதை பார்வையிட்டார்.

ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டுப் பகுதியில் ஆக்கிரமித்துள்ள அமலைச் செடிகளை அமைச்சர் பார்வையிட்டார். வடகால் வாய்க்காலை பார்வையிட்டபோது, வடகால் வாய்க்கால் தடுப்புச் சுவர்கள் இடிந்து கிடப்பதையும், மதகு பகுதியில் மணல் திட்டுக்கள் ஆக்கிரமித்திருப்பதையும் பார்வையிட்டார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம், இதையெல்லாம் பராமரிப்பது கிடையாதா என்ன இப்படி கிடக்கிறது, மீண்டும் 10 நாட்கள் கழித்து வருவேன் அப்போது அனைத்து குறைகளும் சரிசெய்யப்பட்டிருக்கவேண்டும் என்று அதிகாரிகளை எச்சரித்தார்.

வடகால் வாய்க்காலில் 20 எம்.ஜி.டி. திட்டத்தில் தண்ணீர் எடுக்கப்பட்டு இருவப்பபுரத்தில் இருந்து தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்பட்டு வந்தது. தற்போது அணைக்கட்டுக்கு மேல் பகுதியில் 28 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு ராட்ஷச இயந்திரங்கள் மூலம் வடகால் வாய்க்கால் மூலம் எடுக்கப்பட்டு வந்த 20 எம்.ஜி.டி. தண்ணீரை எடுத்துச் செல்வதற்கான சோதனை ஓட்டத்தை நடத்தி வருகின்றனர்.

அந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், தாமிரபரணி அணைக்கட்டு, வடகால், தென்கால் பகுதியில் 25 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும். ராட்ஷச இயந்திரங்கள் மூலம் தண்ணீர் எடுப்பதால், அணைக்கட்டுப்பகுதியில் தண்ணீர் வரத்து மிகவும் குறைவாக உள்ளது. எனவே அந்த திட்டத்தை கைவிட்டு வழக்கம் போல் வடகால் வாய்க்கால் மூலம் 20 எம்.ஜி.டி. தண்ணீர் எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாமிரபரணி வடிநில கோட்ட திட்டக்குழு தலைவர் டி.உதயசூரியன் அமைச்சரிடம் கூறினார். அப்போது விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் அந்த கோரிக்கையை தமிழக முதல்வருக்கு அறிக்கையாக சமர்ப்பித்து, விவசாயிகள் துயர் துடைக்கவேண்டும் என்று அமைச்சரிடம் விவசாயிகள் கோரிக்கைவைத்தனர்.

அப்போது விவசாயிகளிடம், தொழிற்சாலைகளின் நலனை விட விவசாயிகளின் நலனையே பெரிதாக நினைப்பவர் ஜெயலலிதா, எனவே விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தும் ஜெயலலிதா ஆட்சியில் நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் கூறினார்.

பொதுப்பணித்துறை அமைச்சர் கே.பி.ராமலி-ங்கம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, தமிழக முதல் அமைச்சர் என்னை அழைத்து, தாமிரபரணி பாசனத்தில் பல்வேறு குறைபாடுகள் உள்ளதாக, விவசாயிகளிடமிருந்து பல புகார்கள் வந்துள்ளது. எனவே தாமிரபரணி பாசன அணைக்கட்டு மற்றும் பாசன பகுதிகளை பார்வையிட்டு, அப்பகுதி விவசாயிகளின் குறைகளை கேட்டு வாருங்கள் என்று அனுப்பியுள்ளார்.

ஜெயலலிதா உத்தரவு படி நேற்று தாமிரபரணி பாசன கனடியன் அணைக்கட்டுப்பகுதியில் இருந்து கடைசி அணைக்கட்டான ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டுப் பகுதிவரை பார்வையிட்டுள்ளேன். தாமிரபரணி பாசன விவசாயிகள் பாசனத்துக்கு முறையாக தண்ணீர் கிடைக்கவில்லை என்றும், பாசன கால்வாய்கள், குளங்களை தூர்வாரி மராமத்து செய்யவேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

கன்னடியன் அணைக்கட்டில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. எனவே இப்பகுதி விவசாயத்துக்கு தண்ணீர் விரைவில் வந்து சேரும். அணைக்கட்டில் பழுதாகியுள்ள மதகுகள், ஆற்றில் ஆக்கிரமித்துள்ள அமலைச்செடிகள், ஆற்றை தூர்வாருவது மற்றும் விவசாயிகள் கொடுத்துள்ள கோரிக்கை மனுக்கள் அனைத்தும் அறிக்கையாக தயாரிக்கப்பட்டு, தமிழக முதல்வரிடம் சமர்ப்பிக்கப்படும். தமிழக முதல்வர் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற உடனடியாக நடவடிக்கை எடுப்பார். இவ்வாறு பேட்டியில் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை தலைமை எஞ்சினியர் சம்பத்குமார், கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கால்ராஜ், செயற்பொறியாளர் காமராஜ், பிரிவு அலுவலர்கள் ரகுநாதன், வினோத்குமார், தாமிரபரணி பாசன வடிநில கோட்ட திட்டக்குழு தலைவர் டி.உதயசூரியன், தமிழ்நாடு விவசாய சங்க தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பெருமாள், ஒன்றிய செயலாளர் கணபதி, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் கந்தசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நன்றி : தூத்துக்குடி வெப்சைட்

ஸ்ரீவைகுண்டம் குருசுகோவில் புனித சந்தியாகப்பர் ஆலய தேர்பவனி


ஸ்ரீவைகுண்டம் குருசுகோவில் புனித சந்தியாகப்பர் ஆலய தேர்பவனி இன்று நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வடம்பிடித்து தேர் இழுத்தனர்.

ஸ்ரீவைகுண்டம் புனித சந்தியாகப்பர்கோயில் திருவிழா கடந்த 16 ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா தொடக்க நிகழ்ச்சியாக முதல்நாள் காலை 7மணிக்கு ஊர் பொதுமக்களுக்காகவும் மீனவ மக்களுக்காகவும் பங்குதந்தை பெஞ்சமின்டிசூசா தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது.

பின்னர் மாலை 6.30மணிக்கு கொடியேற்றம் நடந்தது. திருவிழா நாட்களில் தினமும் காலை 5.30 மணிக்கு திருப்பலியும் மாலை 6.30மணிக்கு திருயாத்திரை திருப்பலியும் நற்கருணை ஆராதனையும் நடந்தது. கடந்த 16 ந் தேதி தொடங்கி 25 ந் தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடந்தது.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான 10ம் திருவிழாவையொட்டி இன்று காலை 4.30 மணிக்கு முதல் திருப்பலி நடந்தது. காலை 7 மணிக்கு பெருவிழா கூட்டுத்திருப்பலி நடந்தது. தேர்பவனியில் கலந்துகொள்ள தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் உள்பட பல மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் நேற்று முன்தினம் இரவே வந்து கோயிலில் தங்கி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர். குறிப்பாக திருவிழாவில் கடலோர மக்கள் திரளாக வந்து கலந்துகொண்டனர்.

இன்று காலையில் கோயிலின் முன் புனித சந்தியாகப்பர் சப்பரத்திலும், மாதா தேரிலும் எழுந்தருளினர். பக்தர்கள் நேர்ச்சையாக மாலை, எலுமிச்சை மாலை ஆகியவற்றை செலுத்தினர். புனித சந்தியாகப்பருக்கும், மாதாவுக்கும் பக்தர்கள் நேர்ச்சையாக வழங்கிய மாலைகள் அணியப்பட்டு தேர் அலங்கரிக்கப்பட்டது.

தேருக்கும் சப்பரத்துக்கும் முன் மிக்கேல் அதிதூதர் சிறிய சப்பரத்தில் எழுந்தருளி முன்னால் சென்றார். அப்போது பாடல் குழுவினர் பாடல்கள் பாடிக்கொண்டு முன் செல்ல பக்தர்களின் கரகோசத்துடன் கோயில் முன்பிருந்து காலை 10.45 மணிக்கு புனித சந்தியாகப்பர் சப்பரத்தில் புறப்பட்டார். தொடர்ந்து மாதா தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேர்ப்பவனி நடந்தது. முக்கிய வீதிகள் வழியாக தேர் வந்தது. தேரோட்டத்தில கலந்துகொண்ட பக்தர்கள் உப்பு, மிளகு, பூ ஆகியவற்றை தேரில் தூவி வழிபட்டனர்.

பின்னர் பக்தர்கள் புனித சந்தியாகப்பர் கோவிலில் சென்று, புனித சந்தியாகப்பருக்கு மாலை மற்றும் மெழுகுவர்த்தி நேர்ச்சை செலுத்தி வழிபட்டனர். அப்போது பக்தர்களுக்கு கோயிலில் இருந்து வெள்ளை நூல் வழங்கப்பட்டது. திருவிழாவில் கலந்துகொண்ட பக்தர்கள் அனைவரும் கையில் வெள்ளை நூல் அணிந்து ஆசி பெற்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கிறிஸ்தவ கோவிலாக புனித சந்தியாகப்பர் கோவில் விளங்குகிறது. எனவே 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் விதவிதமான ராட்டினங்கள், சர்க்கஸ், விசித்திர காட்சி அரங்கங்கள், குழந்தைகள் பொழுது போக்கு விளையாட்டுகள், விதவிதமான விளையாட்டு பொருட்கள் கடைகள், மிட்டாய் கடைகள் என்று 10 நாட்களும் குருசுகோவில் களைகட்டியது.

முக்கிய வீதிகள் வழியாக தேர் பவனி வந்து மதியம் 2.15 மணிக்கு நிலையம் வந்து சேர்ந்தது. தேர்நிலையம் வந்ததும் திருப்பலி நடந்தது. இன்று காலை 6 மணிக்கு நன்றி திருப்பலி நடக்கிறது.

பாதுகாப்பு ஏற்பாடுகளை ஸ்ரீவைகுண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு ஸ்டீபன்ஜேசுபாதம் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள்முருகன், தனிப்பிரிவு சப்இன்ஸ்பெக்டர் வீரராஜன், சப்இன்ஸ்பெக்டர்கள் சேக்அப்துல்காதர், சண்முகவடிவு மற்றும் போலீசார் செய்திருந்தனர்.

இந்நிகழ்ச்சியில் பங்குதந்தைகள் அலெக்சாண்டர், டிக்சன், ஜெயக்குமார், ரஞ்சித்குமார், பெஞ்சமின், கிஷோக்கிராசியுள், லூசன், செல்வன், பென்சிகர், இருதயராஜா, சூசைராஜ், ஸ்டார்வின் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

திருவிழாவுக்கான ஏற்பாடுகளை குருசுகோவில் பங்குதந்தை ஜெயகர் மற்றும் அருட் சகோதரிகள், பங்குபேரவையினர், ஊர்நலக்கமிட்டியினர், இறைமக்கள் செய்திருந்தனர்.

நன்றி : தூத்துக்குடி வெப்சைட்

வியாழன், 21 ஜூலை, 2011

ஸ்ரீவைகுண்டம் கே ஜி எஸ் கல்லூரியில் விழிப்புணர்வு வார விழா

ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் சுவாமிகள் கல்லூரியில் சுற்றுச் சூழல் விழிப்புணர்வு வார விழா நடைபெற்றது.

காந்திய சிந்தனை பண்பாட்டு மையம் சார்பில் கடந்த 10 ஆம் தேதி தொடங்கிய விழாவில் முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகள் கல்லூரி வளாகம் வகுப்பறைகள், அலுவலகம், நூலகம் உள்ளிட்ட இடங்களில் இருந்த பிளாஸ்டிக் பொருள்களையும், குப்பைகளையும் அகற்றி தூய்மைப்படுத்தினர்.

இறுதி நாள் நிகழ்ச்சிக்கு,கல்லூரி முதல்வர் சங்கரநாராயணன் தலைமை வகித்து பேசினார். விலங்கியல் துறைத் தலைவர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.

பாளையங்கோட்டை செயின்ட் சேவியர் கல்லூரி தாவரவியல் துறைத் தலைவர் ஜான் டீ பிரிட்டோ பேசினார். விழாவில் கல்லூரி மாணவ, மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

காந்தியசிந்தனை பண்பாட்டு மைய இயக்குநர் போஸ் வரவேற்றார். பொருளியல் துறை பேராசிரியர் முருகன் நன்றி கூறினார்.

நன்றி : தினமணி

ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோயில் முன்பு கட்டப்படும் அரசு கட்டடத்தை தடை செய்ய வேண்டும்

ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோயில் முன்பு கட்டப்பட உள்ள அரசு கட்டடத்தை தடை செய்ய வேண்டும் என ஸ்ரீவைகுண்டம் பொதுமக்கள், பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நவகைலாயங்கள் என்று அழைக்கப்படும் ஒன்பது சிவன் கோயில்கள் பாபநாசம் முதல் துவங்கி சேர்ந்தபூமங்கலம் வரையில் உள்ளது. ஆதிகாலத்தில் உரோமோச மகரிஷி தாமிரபரணியில் ஒன்பது தாமரை மலர்களை மிதக்கவிட அவைகள் ஒவ்வொன்றும் தாமிரபரணி நதிக்கரையில் கரை ஒதுங்கிய இடத்தில் அமைந்துள்ள ஸ்தலங்கள் நவகைலாய ஸ்தலங்களாகும்.

அவைகள் தாமிரபரணி மலையை விட்டு கீழிறங்கும் இடமான பாபநாசம், சேரன் மகாதேவி, கோடகநல்லூர், குன்னத்தூர், முறப்பநாடு, ஸ்ரீவைகுண்டம், தென்திருப்பேரை, ராஜபதியை சேர்ந்தபூமங்கலம் ஆகும். இவை ஒன்பது நவகைலாயங்களில் நவகிரகங்களின் ஆட்சியின்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த கோயில்களில் நவகைலாயமும், நவதிருப்பதிகளில் ஒன்றான ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி குடிகொண்டு அருள் பாலிக்கும் திருத்தலமாகவும் விளங்குகிறது. வந்தாரை வாழவைக்கும் வைகுண்டம் ஸ்ரீவைகுண்டம் என்பார்கள்.

பூலோகத்தில் ஸ்ரீவைகுண்டம் என பெயர் பெற்ற ஒரே ஆன்மிகஸ்தலம் என்ற பெயர் பெற்றது இங்குள்ள பெருமாள் கள்ளபிரான். 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகும். தாமிரபரணி நதியின் தீரத்தில் வைகுண்டமும், கைலாயமும் புகழ் பெற்று விளங்கி வடகரை கைலாயம், தென்கரை வைகுண்டம் என ஆங்கிலேயர் ஆட்சியின் அரசு ரிக்கார்டுகள் கூட உள்ளது. முன்னொரு காலத்தில் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவின் எல்லை பெரிய பரப்பளவில் உள்ளது என அரசு ரிக்கார்டுகள் கூறுகின்றது.

சுதந்திர போராட்டத்திற்கு போராடிய வீரபாண்டிய கட்டபொம்மன் ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள அரசு நெற்களஞ்சியத்தில் இருந்து தான் ஆங்கிலேயரிடம் இருந்து நெல்லை கொள்ளை அடித்து ஆங்கிலேயருக்கு பாடம் புகட்டினார் என்பது வரலாறு. பழமையான அணைக்கட்டும், பாலமும் இன்றும் இதன் பழமையை பறைசாற்றி வருகிறது. இத்தனை பழமையும், புகழும் வாய்ந்த ஊரில் ஆழ்வார்கள் வந்து பாடிய ஸ்தலங்களும் உண்டு என்ற பெருமைக்குரியது. மாமன்னர் பராக்கிரம பாண்டியனால் கட்டப்பட்ட பிரம்மாண்டமான கோயில் கள்ளபிரான் கோயில் ஆகும்.

பிரம்மாண்டமான மதில் சுவர்கள் உயர்ந்த கோபுரம், திருவிழாக்கள் என கோலாகலமாக நடக்கும் புனித நகரத்தில் உள்ள கோயில்கள் காலத்தின் கோரத்தால் இடைக்காலத்தில் மக்கள் தங்களை மட்டும் கவனித்ததால் ஆலயங்கள் சிதிலமடைந்தது. கடந்த 1991ம் ஆண்டு தமிழக அரசு இந்திய கலாச்சார பண்பாட்டு அறக்கட்டளை என்ற தனியார் தொண்டு நிறுவனத்தை அமைத்து டிவிஎஸ்.,அதிபர் வேணுசீனிவாசன் தலைமையில் நவதிருப்பதி ஆலயங்களை புனர்நிர்மானம் செய்தது. அதை தொடர்ந்து தற்போது சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை சார்பில் பல்வேறு ஆன்மிக பணிகள் நடந்து வருகிறது. மேலும் பாழடைந்து கிடக்கும் கோயில்கள் அனைத்திலும் திருப்பணிகள் நடந்து வருகிறது.

இதனை ஒட்டி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள கைலாசநாதர் கோயிலுக்கும் கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்ற பக்தர்களின் பேராவலை பூர்த்தி செய்யும் வண்ணம் இந்து சமய அறநிலையத்துறை, டிவிஎஸ்.,நிறுவனத்தார் பல லட்சங்கள் செலவில் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகளை துவக்கினர். திருப்பணிகளின் முதற்கட்டமாக தேவபிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சி நடந்தது. பிரசன்னத்தில் கோயிலின் நிலை பூஜைகள் நின்று போன திருவிழாக்கள் போன்றவற்றை பற்றியும், கோயில் கும்பாபிஷேகம் பற்றியும் ஸ்ரீவைகுண்டம் நகரத்தின் வருங்காலநிலை பற்றியும் கூறினர். இதனை தொடர்ந்து கோயில் பிரகாரம் முழுவதும் 3 அடி ஆழம் உயரம் குறைத்து புதிய கல் போடும் பணி, மண்டபம் புதுப்பித்தல் பணி என மூன்று கட்ட பணிகள் நடந்து வருகிறது.

பக்தர்களின் ஆதரவுடன் நடந்து வரும் திருப்பணிகளால் வெளியூர் பக்தர்கள், உள்ளூர் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் ஸ்ரீவைகுண்டத்தில் வாடகை கட்டடத்தில் இயங்கிவந்த அரசு ஆதரவற்றோர் மாணவர் காப்பகம் கட்ட புதிய இடம் தேவை என்ற நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்குமுன் ஸ்ரீவைகுண்டம் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் நிதி திரட்டப்பட்டு அறநிலையதுறைக்கு சொந்தமான கோயிலின் கிழக்கு வாசல் முன்புள்ள இடத்தை வாங்கி சமூகநலத்துறைக்கு கொடுத்தனர். அரசு அந்த இடத்தில் காப்பகம் கட்ட டெண்டர்விட்டு தற்போது கட்டடம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது.

பல நூறு ஆண்டுகளாக மூடிக்கிடந்த கோயிலின் கிழக்குவாசல் திறக்கவும் திருவிழாக்கள், பூஜைகள் அனைத்தும் இந்த வழியே தான் நடந்து வருகிறது. டவுன் பஞ்.,நிர்வாகம் புதிய தார்ரோடு அமைத்தும் விளக்கு வசதிகள் செய்துள்ளது. தற்போது இந்த இடத்தில் புதிய காப்பகம் கட்டும் பணிகள் நடந்து வருவதால் வருங்காலங்களில் கோயில் திருவிழாக்கள் நடக்கும்போதும், தேர் உற்சவத்தின் போதும் இந்த கட்டடம் மிகவும் இடையூறாக இருக்கும் என்று பக்தர்கள், பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். மெல்ல மெல்ல பூதாகரமான எதிர்ப்பு கிளம்பி தற்போது புதிய கட்டட பணி நடக்கும் போது குடிநீர் தொட்டி கட்ட குழி தோண்டும் போது யானையின் எலும்புகள் கிடைத்தது தற்போது பெரும் பிரச்னையை கிளப்பி உள்ளது. கோயில் யானை இறந்தால் தான் கோயிலின் அருகில் புதைப்பார்கள். எனவே கோயில் யானை என்பது புனிதத்துவம் வாய்ந்த ஒன்று.

எனவே அதனை புதைத்த இடமும் புனிதமானது தான். மேலும் கோயிலின் முன்புறம் இதுபோன்ற கட்டடங்கள் கட்டும் போது திருவிழா காலமான சிவராத்திரி அன்று ஆயிரக்கணக்கான டூரிஸ்ட் வாகனங்கள் நிறுத்தும் இடமாக இந்த இடம் பயன்படுட்டு வந்தது. மேலும் வருங்காலங்களில் கோயில் பிரசித்து பெற்று விளங்கும் என பிரசன்னத்தில் கூறியது போல் ஸ்ரீவைகுண்டம் முன்னேற்றம் அடையும் நிலை இந்த இரண்டு கோயில்களை வைத்துதான். நகரின் முன்னேற்றத்திற்கு பிரதானமாக விளங்கக்கூடிய கோயிலின் முன்னேற்றத்திற்கு இந்த கட்டடம் தடையாகவும் ஆகம விதிகளுக்கு எதிராகவும் இருக்கும் என பக்தர்கள் கூறி வருகின்றனர்.

கோயில் இல்லாத ஊரில் குடியிருக்காதே என்று முன்னோர்கள் கூறி உள்ளனர். ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்பார்கள். ஆன்மிகம் தான் மனித குலத்தின் மகத்தான மருந்து. உடல், ஆன்மா, மனம் அனைத்தும் ஆண்டவன் பெயரில் தான் தனது இயக்கங்களை செய்து வருகிறது. ஆன்மிகம் அழியும் நாட்டில் குற்றங்கள் அதிகரிக்கும். ஆன்மிகம் வளர வளர அங்கே குற்றங்கள் குறையும். மக்கள் மனஅமைதி பெருகி சுபிட்சம் அடைவர். ஜாதி, மத பிணக்குகள் குறைந்து காணப்படும். எனவே ஆன்மிக வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்குவது கோயில்தான். கோயிலின் வளர்ச்சிதான் அந்த நகரின் வளர்ச்சி, நகரின் வளர்ச்சிதான் மக்களின் வளர்ச்சி.

இந்தியாவில் புகழ்பெற்ற நகரங்கள் ஆரம்பகால கட்டத்தில் அந்த நகரின் பிரதான ஆலயத்திற்கு பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க அதிகரிக்க ஊரின் முன்னேற்றம் அதிகரித்தது என்பது வரலாறு. ஸ்ரீவைகுண்டம் அதே போலத்தான் மிகவும் அமைதியான, அழகான இந்த ஊரில் உள்ள இவ்விரண்டு நவதிருப்பதி, நவகைலாயங்களின் வளர்ச்சியில் கொண்டு சேர்க்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஓடாமல் நிலையிலேயே நின்ற கள்ளர்பிரான்சுவாமி சித்திரை தேர் ஓட ஆரம்பித்த பிறகுதான் ஸ்ரீவைகுண்டத்தில் மக்கள் நெருக்கம், வீடுகள் விலை ஏற்றம், விவசாயத்தில் முன்னேற்றம், பணபுழக்கம் அதிகரித்துள்ளது. எனவே தூர்ந்து கிடக்கும் இந்த கைலாசநாதர் கோயிலும் விழிப்பு பெற்று பிரபலமடையும் போது ஸ்ரீவைகுண்டத்திற்கு பக்தர்களின் வருகை அதிகரிக்கும். சனிஸ்தலம் என்பதால் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் செய்யும் பூஜைகள் இங்கு செய்தாலும் சனிகிரகத்தால் ஏற்படும் இன்னல்கள் விலகும் என்பது ஐதீகம். தற்போது பிரதோஷ கால பூஜைகளுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து கொண்டிருப்பது. இதற்கு உதாரணமாக தேவ பிரசன்னத்தில் கூறியது போல மகாதேவன் பிரசித்தி பெறும்போது இங்குள்ள குடிகளின் நிலை உயரும். இதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

அப்படிப்பட்ட கோயிலின் வளர்ச்சிக்கு அரசின் இந்த காப்பகம் இடையூறாக இருக்கும் என பக்தர்கள் கருதுகின்றனர். எனவே அரசு புறம்போக்கு இடங்கள் ஸ்ரீவைகுண்டத்தில் நிறைய உள்ளது. அதில் ஏதாவது ஒரு இடத்தை தேர்வு செய்து புதிய கட்டடத்தை மாற்றவேண்டும். ஆன்மிகம் சம்பந்தமாக அக்கறை கொள்ளும் அரசு இந்த அரசு என்பதால் ஒரு கோயிலின் வளர்ச்சிக்கு அரசே காரண கர்த்தாவாகிவிடக் கூடாது என்பது இங்குள்ள பக்தர்களின் ஏகோபித்த விருப்பம். எனவே அரசு இதனை உடனடியாக நிறுத்தி இடத்தை மாற்றி அமைக்க வேண்டும். ரூ.70 லட்சம் செலவுள்ள கட்டடத்தை எளிதில் எங்கு வேண்டுமானாலும் மாற்றி அமைக்கலாம்.

காரணம் ஆரம்பகட்ட அஸ்திவார பணிகள் மட்டுமே நடந்துள்ளது. ஆனால் ரூ.700 கோடி கொடுத்தாலும் இதுபோன்ற கோயிலை நாம் உருவாக்குவது கடினம். எனவே அரசின் இந்த வேலையை ஆண்டவனே யானை உருவத்தில் வந்து தடை செய்து உள்ளார் என்று பக்தர்கள் கருதுகின்றனர். மக்களின் மனசாட்சிதான் அரசு என்பதில் ஐயமில்லை. மக்களுக்காகத்தான் அரசு, மக்களுக்கும் மக்களின் எண்ணங்களுக்கும் எதிரான இந்த கட்டடத்தை இடமாற்ற வேண்டும் என்பது மக்களின் கோரிக்கை. கைலாசநாதரின் ஆவல் ஏதோ? பார்ப்போம்.

நன்றி : தினமலர்

ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோவிலில் பாதாளஅறை கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு


நவகைலாயங்களில் ஒன்றான ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோவிலில் திருப்பணிகள் நடந்த போது பாதாள அறை கண்டுபிடிக்கப்பட்டது.

நவகைலாயங்களில் ஒன்றான. ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோவிலில் விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது அதற்காக தற்போது இந்திய கலாச்சார பண்பாட்ட அறக்கட்டளை சார்பில் பல கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் திருப்பணிகள் நடந்து வருகிறது.

இதற்காக கோவிலின் உள்பிரகாரத்தில் பழைய கல்தளத்தை எடுத்துவிட்டு புதிய கல்தளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக இரவு பகலாக பணிகள் நடந்து வருகிறது. கோவிலின் உள் பிரகாரத்தில் சுனை சுப்பிரமணிய சுவாமி சன்னதி உள்ளது. உள்பிரகாரத்தில் இருந்து இந்த சன்னதிக்கு ஏறி செல்லும் படிக்கட்டை அகற்றி விட்டு புதிய படிகட்டுகள் அமைக்கும் பணிக்காக படிக்கட்டுகளை உடைத்து அகற்றினர்.

அப்போது படிக்கட்டுகளுக்கு பின்னால் வெற்றிடம் இருப்பது போல் இருந்தது. எனவே குகை போல் இருப்பதாக அறநிலைய அதிகாரிகளுக்கு கட்டிட பணியாட்கள் தகவல் கொடுத்தனர்.

தகவல்அறிந்ததும் துத்துக்குடி மாவட்ட இந்து சமய அறநிலைய துறை துணை ஆணையர் வீரராஜன், ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் வசந்தா, நிர்வாக அதிகாரி ராமசுப்பிரமணியன், கோயில் ஆய்வாளர் பாலு, ஸ்ரீவைகுண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள்முருகன், ஆழ்வார்திருநகரி நகர பஞ்சாயத்து தலைவர் ஆதிநாதன், கள்ளபிரான் சுவாமி கோவில் ஸ்தலத்தார் வெங்கடாச்சாரி, டி.வி.எஸ் ஆலோசகர் முருகன், டி.வி.எஸ். என்ஜினியர் சுப்பு ஆகியோர் கோவிலுக்கு வந்தனர்.

அவர்கள் முன்னிலையில் நேற்று அப்பகுதியில் தோண்டினர். தோண்டி பார்த்ததில் அப்பகுதியில் சிறிய அறை ஒன்று இருந்தது தெரியவந்தது. மேலும் குகையோ, அல்லது பாதாள அறையோ, சுரங்க பாதையோ இருக்கலாம் என்று கருதப்பட்டதால், தொடர்ந்து அப்பகுதியில் தோண்டினர். மூன்று அடி வரை தோண்டி பார்த்ததில், அங்கிருந்து வேறு எங்கும் அந்த அறை செல்லவில்லை.

அந்த படிக்கட்டு அருகில் இருந்த கல்தூணில், தோண்டப்பட்ட இடத்தில் இருந்த அறைக்கான வரைபடம் ஒன்று செதுக்கப்பட்டிருந்தது. எனவே அந்த அறை அக்காலத்தில் முக்கியமான அறையாக இருந்திருக்கலாம் என்று அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் கருதுகின்றனர்.

இதே போல் கோவிலின் உள்புறத்தில் உள்ள கல் சுவர்கள் மற்றும் தூண்களில் அக்கால எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. எனவே நவகைலாயங்களில் ஒன்றான ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோவிலில் தொல்லியல் துறை ஆய்வு நடத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏற்கனவே கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோவிலுக்கு அருகில் அரசு குழந்தைகள் காப்பகம் கட்டுவதற்கு தோண்டப்பட்ட இடத்தில் யானையின் எலும்புகள் புதைந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி : தூத்துக்குடி வெப்சைட்

புதன், 20 ஜூலை, 2011

ஸ்ரீவை. கோவிலில் கண்டுபிடிக்கப்பட்ட வரைபடம் 4ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பிரதான கருவரையின் வரைபடமா?


நவகைலாயங்களில் ஒன்றான ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோவிலில் திருப்பணிகள் நடந்த போது பாதாள அறை கண்டுபிடிக்கப்பட்டதால், பக்தர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாதாள அறைக்கு அருகில் உள்ள தூணில் காணப்படும் வரைபடம் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பிரதான கருவரை அமைந்திருக்கும் இடத்தைக் குறிக்கும் வரைபடமாக இருக்கலாம் என்பதால், தொடர்ந்து அப்பகுதியில் ஆய்வு பணியை தொடரவேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நவகைலாயங்களில் ஒன்றான. ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோவில் சேர, சோழ, பாண்டிய மற்றும் பராக்கிரமபாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டுள்ளது. எனவே இந்த கோவில் கட்டப்பட்டு சுமார் 4 ஆயிரத்து 300 ஆண்டுகளுக்கு மேல் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 4 மன்னர்கள் சேர்ந்து கட்டிய இந்த கைலாசநாதர் கோவிலுக்கு இந்த மன்னர்கள், கோயிலுக்கு வருமானத்தை அளிக்கும் விதத்தில் இப்பகுதியில் சொத்துக்களை அளித்துள்ளனர். நவகைலாயங்களும் தாமிரபரணி ஆற்றின் கரையிலேயே அமைந்துள்ளது.

தற்போது ஸ்ரீவைகுண்டத்தின் தென்பகுதியில் செல்லும் தாமிரபரணி ஆறு அக்காலத்தில் ஊரின் வடபுறத்தில் தற்போது கைலாசநாதர் கோவில் இருக்கும் அருகில் தான் சென்றுள்ளது. காலப்போக்கில் ஆற்றின் போக்கு மாறி தென்பகுதியில் ஓடுகிறது.

தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ளதால் அக்காலங்களில் கைலாசநாதர் கோவிலில் முனிவர்கள் தவம் இருந்துள்ளனர். மிகவும் பிரசித்திபெற்ற கைலாசநாதர் கோவில் சனிஸ்தலமாக அமைந்துள்ளதால், சனிக்கிரஹ பிரீதி இங்கு நடந்துள்ளது. எனவே மன்னர்கள் இந்த கோவிலுக்கு மிகவும் முக்கியத்துவம் அளித்தள்ளனர். இக்கோவிலில் யானைகள் இருந்ததற்கு சான்றாக கடந்த சில நாட்களுக்கு முன் கோவிலின் முன்பகுதியில் தோண்டியபோது, கிடைத்த யானையின் எலும்புகள் சான்றாக உள்ளது.

இதுவரை கைலாசநாதர் கோவிலில் உள்பிரகாரத்தில் தோண்டி திருப்பணிகள் நடைபெறவில்லை. தற்போது, கைலாசநாதர் கோவிலில் விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

இதற்காக தற்போது இந்திய கலாச்சார பண்பாட்டு அறக்கட்டளை சார்பில் 13 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் திருப்பணிகள் நடந்து வருகிறது. இதற்காக கோவிலின் உள்பிரகாரத்தில் பழைய கல்தளத்தை எடுத்துவிட்டு புதிய கல்தளம் அமைக்கும் பணியில் ஈடுபட்டபோதுதான் கோவிலுக்குள் பாதாள அறை இருப்பது தெரியவந்துள்ளது.

அருகிலேயே மூன்று அடுக்குகளாக குறிக்கும் விதத்தில் வரைபடம் ஒன்று உள்ளது. எனவே 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆண்ட சேர, சோழ, பாண்டிய, பராக்கிரம மன்னர்கள் இந்த கோவிலின் பிரதான கருவரையை இப்பகுதியில் அமைத்திருக்கலாம் என்று பக்தர்கள் கருதுகின்றனர்.

கருவரை என்பது இறைவனுக்கு மன்னர்கள் மற்றும் பக்தர்களால் வழங்கப்படும் பொன் பொருள், ஆபரணங்களை பாதுகாக்கும் அறையாக அக்காலத்தில் மன்னர்கள் ரகசியமாகஅமைத்ள்ளனர். கருவரையானது மிகவும் ரகசியமாக அமைக்கப்பட்டு, அந்த கருவரையை அடைவதற்கு ரகசிய வழியை அருகில் உள்ள கல்தூண்களில் குறிப்புகளாக வரைந்து வைப்பது அக்காலத்து மன்னர்களின் அரச சபை ரகசியங்களாக இருந்துள்ளது.

ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோவிலில் தற்போது உள்ள கருவரை சுண்ணாம்பு மற்றும் செங்கற்களைப் பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே இந்த கருவரை ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையதாகவே இருக்கமுடியும்.

எனவே அக்கால மன்னர்கள் அமைத்திருந்த பிரதான கருவரை வேறு இடத்தில் தான் இருக்கமுடியும். எனவே பாதாள அறை அமைந்துள்ள இடத்தை மீண்டும் தோண்டவேண்டும் என்பது பக்தர்களின் கோரிக்கை.

ஒரு அடுக்கை மட்டுமே தோண்டிவிட்டு மீண்டும் தோண்டாமல் அப்பகுதியில் பணியை நிறுத்திவிட்டு திருப்பணிக்குழுவினர் மறைப்பதோடு, விபரங்கள் கேட்கும் நிருபர்களிடம் மலுப்பலான பதிலை கூறுகின்றனர். பாதாள அறை கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் தொடர்ந்து ஆய்வு செய்தால், பல ரகசியங்கள் கிடைக்கும் என்பது பக்தர்களின் கோரிக்கை. எனவே தொடர்ந்து அப்பகுதியில் தோண்டி ஆய்வு பணியை மேற்கொள்ளவேண்டும்.

ஏற்கனவே ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோவில் திருப்பணிகளை தொடங்குவதற்கு முன்பு கோவிலில் வைத்து ஊரில் முக்கியபிரமுகர்கள் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் பிரசன்னம் பார்த்தபோது, விரைவில் ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோவில் உலகப்புகழ் பெறும் என்று கூறியுள்ளார்.

எனவே கைலாசநாதர் கோவிலில் கண்டுபிடிக்கப்பட்ட பாதாள அறை அமைந்துள்ள பகுதியில் தொல்லியல் துறை அதிகாரிகளின் உதவியோடு கல்வெட்டு ரகசியங்களை அறிந்து, புதைந்து கிடக்கும் மர்மங்களை ஆய்வு செய்யவேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நன்றி : தூத்துக்குடி வெப்சைட்

ஸ்ரீவைகுண்டம் குருஸ் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

ஸ்ரீவைகுண்டம் புனித சந்தியாகப்பர் கோவில் திருத்தல திருவிழா கொடி யேற்றத்துடன் துவங்கியது. இயேசுவின் 12 சீடர்களில் ஒருவரான புனித சந்தியாகப்பருக்கு ஸ்ரீவை குண்டம் தாமிரபரணி நதிக் கரையில் 400 ஆண்டுகளுக்கு முன்பு கோயில் கட்டப்பட்டு இதன் திருத்தல திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 16ம்தேதி முதல் 25ம்தேதி வரை நடக்கிறது.

குருஸ் கோவில் என்றழைக்கப்படும் புனித சந்தியாகப்பர் கோவிலில் நேற்று முன்தினம் மாலை கொடிகள் அர்ச்சிக்கப் பட்டு ஸ்ரீவைகுண்டம் நகர் முழுவதும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. பின்னர் கோவிலை சுற்றி வந்து சாத்தான்குளம் மறை மாவட்ட முதன்மை குரு எட்வர்ட் தலைமையில் கொடியேற்றப்பட்டது.

இரவு கொம்புத்துறை பங்கு தந்தை விக்டர்லோயோ தலைமை யில் மறையுரையும், நற் கருணை ஆராதனையும் நடந்தது. திருவிழா நாட்களில் தினமும் காலை 5.30 மணிக்கு திருப்பலியும் மாலை 6.30 மணிக்கு திருயாத்திரை திருப்பலியும் நற்கருணை ஆராதனையும் நடக்கிறது.

வரும் 24ம்தேதி 9ம்திருவிழா அன்று தூத்துக்குடி இளை யோர் பணியகம் உதவி இயக்குனர் பங்குத்தந்தை கிராசியுஸ் மைக்கில், தலைமையில் காலை 6.30 மணிக்கு திருப்பலியும் நடக்கிறது. காலை 9.30 மணிக்கு மாதா, புனித சந்தியாகப்பர், மிக்கேல்தூதர் ஆகியோர் சப்பரபவனி நடக்கிறது.

பங்கு தந்தை லூசன் தலைமையில் 12 மணிக்கு ஜெபமாலை திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு மணப்பாடு மறை மாவட்ட முதன்மை குரு செல்வராஜ் தலைமையில் நற்கருணை பவனியும், தூத்துக்குடி புனித அந்தோணியார் பங்குத்தந்தை ஸ்டார்வின் தலைமையில் நற்கருணை ஆராதனையும் நடக்கிறது.

வரும் 25ம்தேதி 10ம் திருவிழாவையொட்டி காலை 4.30 மணிக்கு முதல் திருப்பலியும், 5.15 மணிக்கு இரண்டாவது திருப்பலியும், காலை 6 மணிக்கு மூன்றாம் திருப்பலியும், காலை 7 மணிக்கு நான்காம் கூட்டுத் திருப்பலியும், பகல் 10 மணிக்கு தேர்பவனியும், பகல் 12 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் ஆண்டகை தலைமையில் திருவிழா திருப்பலி நடக் கிறது. வரும் 26ம்தேதி காலை 6மணிக்கு திருப்பலியும், கொடியிறக்கமும் நடக்கிறது.

திருவிழா நாட்களில் பங்கு தந்தைகள் ஜாண்பென்சன், மகிழன், ரெமிஜியுஸ், ஆரோக்கியராஜ், ஆரோக்கிய தாஸ், கி÷ஷார், சேவியர் அந்தோணி ஆகியோர் தலைமையில் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீவைகுண்டம் பங்குதந்தை ஜெயகர், அருள் சகோதரிகள், பங்குப்பேரவை, ஊர்நலக் கமிட்டி ஆகியோர் செய்து வருகின்றனர்.

செய்தி : தினமலர்

புதன், 13 ஜூலை, 2011

ஸ்ரீவைகுண்டம் சிவன் கோயில் அருகே அஸ்திவாரம் தோண்டியபோது சிக்கிய யானையின் எலும்புகள்


ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோவிலுக்கு அருகில் தோண்டியபோது புதைந்து கிடந்தது யானையின் எலும்புகூடா என்று பக்தர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து இப்பகுதியில் தொல்லியல் ஆய்வு செய்ய பக்தர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

ஸ்ரீவைகுண்டத்தில் நவகைலாயங்களில் ஒன்றான கைலாசநாதர் கோவில் உள்ளது. இக்கோயில் மிகவும் பழமைவாய்ந்த கோயிலாகும். அரிய சிற்பங்களை கொண்டுள்ள இந்த கோயிலுக்கு கிழக்குப்பகுதியில் தலைவாசல் உள்ளது.

தற்போது தெற்கு வாசல்தான் பக்தர்கள் தரிசனம் செய்யும் வழியாக உள்ளது. கோயிலின் கிழக்குப்பகுதியில் தலைவாசலுக்கு கீழ்பகுதியில் மண்டபம் ஒன்று உள்ளது.



ஸ்ரீவைகுண்டத்தில் அன்னை சத்யா ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. எனவே அரசு சொந்த கட்டடம் கட்டவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்காக ஸ்ரீவைகுண்டம் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் கைலாசநாதர் கோயிலுக்கு அருகில் இடம் வாங்கி இலவசமாக அரசுக்கு அளிக்கப்பட்டது. இதையடுத்து அன்னை சத்யா அரசு ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் கட்ட கடந்த ஆட்சியில் நிதி ஒதுக்கப்பட்டது.

இதற்கான கட்டடம் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. கட்டடம் கட்டுவதற்காக அஸ்திவாரம் தோண்டும் போது, ஏதோ எலும்புகள் பூமிக்குள் இருந்து வந்துள்ளது. தொடர்ந்து தோண்டிப் பார்த்தபோது, அந்த எலும்புகள் யானையின் எலும்புகள் என்று கூறப்பட்டது.

உடனே அந்த இடத்தை மூடி வைத்துவிட்டனர். இதையறிந்த பக்தர்கள் பல நூறு ஆண்டுகளுக்கு முன் புதைக்கப்பட்ட யானையின் எலும்பா--- அல்லது முற்காலத்தில் வாழ்ந்த அதிசய பிராணிகளின் எலும்பா என்பதை தொல்லியல் ஆய்வு நடத்தவேண்டும் என்றும், இப்பகுதியில் தொல்லியல் ஆய்வு மேற்கொள்ளப்படும் போது பல அரிய தகவல்கள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது என்றும் அரசுக்கு கோரிக்கைவிடுத்துள்ளனர்.

ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோவிலுக்கென்று சிறப்பான வரலாறு உள்ளது. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கோவிலுக்கு அருகில் எலும்புகூடு இருப்பதால் பக்தர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த எலும்புகூடை தொல்லியல் ஆய்வு செய்வதன் மூலம் இந்த கோவிலுக்கு யானைகள் இருந்த காலத்தை அறியமுடியும். மேலும் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டால் கோவிலின் சிறப்புகள் தெரியவரும்.

தற்போது கோவில்களில் பல நூறு ஆண்டுகளாக புதைந்து கிடந்த அரிய பொக்கிஷங்கள் கிடைத்துவரும் நிலையில் ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோவிலிலும் பல அரிய பொக்கிஷங்கள் கிடைக்கலாம் என்று பக்தர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

ஏற்கனவே ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோவிலுக்கு சொத்துக்களும் உள்ளது. எனவே சொத்துக்களை உருவாக்கி வைத்த மன்னர்கள் இந்த கோவிலுக்கு பொற்காசுகளையும், தங்கநகைகளையும் வழங்கியிருக்கலாம் என்றும் தங்கபுதையல் கிடைக்கலாம் என்றும் எனவே இப்பகுதியில் தொல்லியல் ஆய்வு மேற்கொண்டால் பல அரிய தகவல்களை அறிந்துகொள்ளமுடியும் என்றும் பக்தர்கள் கருதுகின்றனர்.

நன்றி : தூத்துக்குடி இணைதளம் ( 12-07-11 ).

செவ்வாய், 12 ஜூலை, 2011

ஸ்ரீவையில் வரும் 15ம் தேதி அனுமதி இன்றி தண்ணீர் எடுப்பதை தடுக்க கோரிக்கை போராட்டம்

தாமிரபரணி ஆற்றில் அனுமதியின்றி தனியார் நிறுவனங்கள் தண்ணீர் எடுப்பதை தடை செய்யவேண்டும் என கோரி வரும் 15ம் தேதி மா.கம்யூ.,சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்த ஒன்றிய கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய சி.பி.எம்., கூட்டம் நடந்தது.

மார்க்ஸ் இல்லத்தில் வைத்து நடந்த கூட்டத்திற்கு ஒன்றிய விவசாய சங்க செயலாளர் கணபதி தலைமை வகித்தார். கூட்டத்தில் ஒன்றிய சிபிஎம் செயலாளர் கந்தசாமி, கூட்டத்தின் நோக்கம், கோரிக்கைகள் பற்றி பேசினார். ராமலிங்கம், சுவாமிதாஸ், முருகன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து வடகால், தென்கால் பகுதிகளுக்கு முறையான பாசனவசதிகளுக்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் கிடைக்காததால் வாழை, நெல், சாகுபடி கருகும் நிலையில் உள்ளது. அணையில் உள்ள தண்ணீரும் ராட்சத குழாய்கள் மூலம் தொழிற்சாலைகளுக்கு செல்வதால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே கடல்நீரை நல்ல நீராக்கி தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்துவது குறித்தும் விவசாயிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும், மேலும் ஸ்ரீவைகுண்டம் அணையை தூர்வார தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் எடுத்து வரும் நடவடிக்கையை பாராட்டியும், அணையை தூர்வார வன இலாக்கா விரைந்து காலம் கடத்தாமல் அனுமதி வழங்க வேண்டும் எனவும், அமலை செடிகளை அப்புறப்படுத்துவது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மேலும் தாமிரபரணி ஆற்றில் தனியார் நிறுவனங்கள் எந்த அனுமதியின்றியும் தண்ணீர் எடுக்கும் முயற்சிகளை கண்டித்தும் வரும் 15ம் தேதி ஸ்ரீவைகுண்டத்தில் உண்ணாவிரதம் இருக்க கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

செய்தித்தாள் : தினமலர்

புதன், 6 ஜூலை, 2011

ஸ்ரீவைகுண்டம் அணையை தூர்வார முடிவு மாவட்ட கலெக்டர் தகவல்

பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருக்கும் ஸ்ரீவைகுண்டம் அணையை எந்தவித செலவும் இல்லாமல் தூர்வார புதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக வனத்துறை மூலம் சென்னையில் உள்ள முதன்மை வனப்பாதுகாவலருக்கு அனுமதி கேட்டு கடிதம் அனுப்பப்பட்டிருப்பதாக மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்தார்.

கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது; நீண்டகால கோரிக்கையாக இருந்து வரும் ஸ்ரீவைகுண்டம் அணையை தூர்வாரி வீணாக கடலுக்கு செல்லும் தண்ணீரை சேமிக்கும் வகையில் கடந்த வாரம் வனத்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இந்த அணையின் அமலைச்செடிகளை அகற்றி தூர்வார வேண்டும் என்றால் வனத்துறையிடம் அனுமதி பெற வேண்டும்.

இதனை தொடர்ந்து மாவட்ட வன அதிகாரி நிகார் ரஞ்சன் மூலம் சென்னையில் உள்ள முதன்மை வனப்பாதுகாவலருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக அவரிடம் நானும் பேசி, விரைவாக அதற்கு அனுமதி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஸ்ரீவைகுண்டம் அணையின் மொத்த கொள்ளளவு 3 மில்லியன் கன அடியாகும். (மூன்று டி.எம்.சி பீட்) தற்போது அதில் 2.25 டி.எம்.சி பீட் மண் அடைத்துள்ளது. பாயிண்ட் 75 டி.எம்.சி.பீட்டில் மட்டுமே தண்ணீர் தேக்கப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் ஆ ண்டுக்கு 10 டி.எம்.சி தண்ணீர் வீணாக கடலுக்கு சென்று கொண்டிருக்கிறது. இதனால் இந்த அணை யை தூர்வார வேண்டும் என்கிற கோரிக்கை தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது.

வனத்துறை அனுமதி போன்ற உள்ளிட்டவற்றால் இந்த பணிகளை செய்ய முடியாத நிலை இருந்து வந்தது. தற்போது அதற்கான பணிகளை மேற்கொள்ள துரிதமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த அணையை தூர்வார வேண்டும் என்றால் 25 கோடி ரூபாய் தேவையாகும்.

ஆனால் செலவு இல்லாமல் உடனடியாக இந்த பணிகளை மேற்கொள்ளும் வகையில் பொதுப்பணித்துறை மூலம் இதில் உள்ள மணலை குவாரி அமைத்து மணலை எடுப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட உள்ளது. இதன் மூலம் 50 லட்ச ரூபாய் வரை வருவாய் கிடைக்கும். அரசுக்கும் வருவாய் கிடைத்தது போல் ஆகிவிடும். அணையும் தூர்வாரப்பட்டு விடும். அணையில் உள்ள 8 அடியில் 3 அடி வண்டல் மற்றும் களிமண் உள்ளது.

இந்த மணலை விவசாய நிலங்களுக்கு எடுத்து செல்வதற்கு அனுமதிக்கப்படும். மீதியுள்ள 5 அடியில் ஆற்று மணல் உள்ளது. அதனை பொதுப்பணித்துறை மூலம் குவாரி அமைத்து மணல் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என கலெக்டர் தெரிவித்தார்.

செய்தி : தினமலர்

வெள்ளி, 1 ஜூலை, 2011

ஸ்ரீவை, சின்ன பள்ளிவாசலில் சிறப்பு பாயன்.

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )

இன்ஷா அல்லா நாளை ( 02-07-11 ) சனிகிழமை நமது சின்ன பள்ளிவாசலில் வைத்து சிறப்பு பாயன் நடைபெற உள்ளது.

இடம் : சின்ன பள்ளிவாசல்

நாள் : 02 – 07 - 2011, சனிகிழமை

நேரம் : அசர் முதல் இஷா தொலூகை வரை

தலைப்பு : " இஸ்லாமிய உறவுகள் "

சிறப்பு உரை : ஜனாப் அப்துல் மஜீத் மற்றும் காஜா முகைதீன் பாகவி

நிகழ்ச்சி ஏற்பட்டு : சென்னை ஸ்ரீவை ஜமாஅத்.

நமது ஜமாஅத் மக்கள் அனைவரும் கலந்து கொள்ள அன்புடன் கேட்டு கொள்கிறோம்.

வஸ்ஸலாம்
ஸ்ரீவை மக்கள்


தகவல் : சிராஜ்தீன், சென்னை

ஸ்ரீவைகுண்டம் ஆற்றில் குதித்து பெண் தற்கொலை

ஸ்ரீவைகுண்டத்தில் குடும்பத்தகாராறு காரணமாக பூ வியாபாரி மனைவி ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

ஸ்ரீவைகுண்டம் தெப்பகுளத்தெருவைச் சேர்ந்த உலகநாதன் மனைவி விஜயலெட்சுமி (21). உலகநாதன் பூ வியாபாரம் செய்து வருகிறார். இவர்களுக்கு திருமணமாகி 6 மாத குழந்தை உள்ளது.

நேற்று முன்தினம் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த விஜயலெட்சுமி வீட்டை விட்டு வெளியேறினார்.

இந்நிலையில் ஆற்றில் பெண் பிணமாக மிதப்பதைப் பார்த்து ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் பரபரப்பாக பேசினர். இதையறிந்ததும் விஜயலெட்சுமியின் உறவினர்கள் அங்கு சென்று பார்த்தனர். ஆற்றில் பிணமாக மிதந்துகொண்டிருந்தது விஜயலெட்சுமியின் உடல்தான் என்பதை அடையாளம் கண்டனர். இவரது உடலைக்கண்டதும் உறவினர்கள் கதறி அழுதனர்.

இச்சம்பவம் குறித்து கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த சங்கரன் மகன் சிவகுமார் (29) ஸ்ரீவைகுண்டம் போலீசில் புகார் கொடுத்தார். இவர் கொடுத்த புகாரின் பேரில், ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம் ஆலோசனையின் பேரில் ஸ்ரீவைகுண்டம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பேச்சி வழக்குப்பதிவு செய்து விஜயலெட்சுமியின் உடலை கைப்பற்றி ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.

உலகநாதனுக்கும், விஜயலெட்சுமிக்கும் திருமணமாகி இரண்டு ஆண்டுகளே ஆனதால் தூத்துக்குடி மாவட்ட சப் கலெக்டர் சஜன்சிங் சவான் இச்சம்பவம் குறித்து நேற்று விசாரணை நடத்தினார்.

தகவல் : தூத்துக்குடி இணைதளம்

LinkWithin

Blog Widget by LinkWithin