புதன், 6 ஜூலை, 2011

ஸ்ரீவைகுண்டம் அணையை தூர்வார முடிவு மாவட்ட கலெக்டர் தகவல்

பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருக்கும் ஸ்ரீவைகுண்டம் அணையை எந்தவித செலவும் இல்லாமல் தூர்வார புதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக வனத்துறை மூலம் சென்னையில் உள்ள முதன்மை வனப்பாதுகாவலருக்கு அனுமதி கேட்டு கடிதம் அனுப்பப்பட்டிருப்பதாக மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்தார்.

கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது; நீண்டகால கோரிக்கையாக இருந்து வரும் ஸ்ரீவைகுண்டம் அணையை தூர்வாரி வீணாக கடலுக்கு செல்லும் தண்ணீரை சேமிக்கும் வகையில் கடந்த வாரம் வனத்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இந்த அணையின் அமலைச்செடிகளை அகற்றி தூர்வார வேண்டும் என்றால் வனத்துறையிடம் அனுமதி பெற வேண்டும்.

இதனை தொடர்ந்து மாவட்ட வன அதிகாரி நிகார் ரஞ்சன் மூலம் சென்னையில் உள்ள முதன்மை வனப்பாதுகாவலருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக அவரிடம் நானும் பேசி, விரைவாக அதற்கு அனுமதி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஸ்ரீவைகுண்டம் அணையின் மொத்த கொள்ளளவு 3 மில்லியன் கன அடியாகும். (மூன்று டி.எம்.சி பீட்) தற்போது அதில் 2.25 டி.எம்.சி பீட் மண் அடைத்துள்ளது. பாயிண்ட் 75 டி.எம்.சி.பீட்டில் மட்டுமே தண்ணீர் தேக்கப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் ஆ ண்டுக்கு 10 டி.எம்.சி தண்ணீர் வீணாக கடலுக்கு சென்று கொண்டிருக்கிறது. இதனால் இந்த அணை யை தூர்வார வேண்டும் என்கிற கோரிக்கை தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது.

வனத்துறை அனுமதி போன்ற உள்ளிட்டவற்றால் இந்த பணிகளை செய்ய முடியாத நிலை இருந்து வந்தது. தற்போது அதற்கான பணிகளை மேற்கொள்ள துரிதமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த அணையை தூர்வார வேண்டும் என்றால் 25 கோடி ரூபாய் தேவையாகும்.

ஆனால் செலவு இல்லாமல் உடனடியாக இந்த பணிகளை மேற்கொள்ளும் வகையில் பொதுப்பணித்துறை மூலம் இதில் உள்ள மணலை குவாரி அமைத்து மணலை எடுப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட உள்ளது. இதன் மூலம் 50 லட்ச ரூபாய் வரை வருவாய் கிடைக்கும். அரசுக்கும் வருவாய் கிடைத்தது போல் ஆகிவிடும். அணையும் தூர்வாரப்பட்டு விடும். அணையில் உள்ள 8 அடியில் 3 அடி வண்டல் மற்றும் களிமண் உள்ளது.

இந்த மணலை விவசாய நிலங்களுக்கு எடுத்து செல்வதற்கு அனுமதிக்கப்படும். மீதியுள்ள 5 அடியில் ஆற்று மணல் உள்ளது. அதனை பொதுப்பணித்துறை மூலம் குவாரி அமைத்து மணல் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என கலெக்டர் தெரிவித்தார்.

செய்தி : தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin