புதன், 13 ஜூலை, 2011

ஸ்ரீவைகுண்டம் சிவன் கோயில் அருகே அஸ்திவாரம் தோண்டியபோது சிக்கிய யானையின் எலும்புகள்


ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோவிலுக்கு அருகில் தோண்டியபோது புதைந்து கிடந்தது யானையின் எலும்புகூடா என்று பக்தர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து இப்பகுதியில் தொல்லியல் ஆய்வு செய்ய பக்தர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

ஸ்ரீவைகுண்டத்தில் நவகைலாயங்களில் ஒன்றான கைலாசநாதர் கோவில் உள்ளது. இக்கோயில் மிகவும் பழமைவாய்ந்த கோயிலாகும். அரிய சிற்பங்களை கொண்டுள்ள இந்த கோயிலுக்கு கிழக்குப்பகுதியில் தலைவாசல் உள்ளது.

தற்போது தெற்கு வாசல்தான் பக்தர்கள் தரிசனம் செய்யும் வழியாக உள்ளது. கோயிலின் கிழக்குப்பகுதியில் தலைவாசலுக்கு கீழ்பகுதியில் மண்டபம் ஒன்று உள்ளது.ஸ்ரீவைகுண்டத்தில் அன்னை சத்யா ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. எனவே அரசு சொந்த கட்டடம் கட்டவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்காக ஸ்ரீவைகுண்டம் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் கைலாசநாதர் கோயிலுக்கு அருகில் இடம் வாங்கி இலவசமாக அரசுக்கு அளிக்கப்பட்டது. இதையடுத்து அன்னை சத்யா அரசு ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் கட்ட கடந்த ஆட்சியில் நிதி ஒதுக்கப்பட்டது.

இதற்கான கட்டடம் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. கட்டடம் கட்டுவதற்காக அஸ்திவாரம் தோண்டும் போது, ஏதோ எலும்புகள் பூமிக்குள் இருந்து வந்துள்ளது. தொடர்ந்து தோண்டிப் பார்த்தபோது, அந்த எலும்புகள் யானையின் எலும்புகள் என்று கூறப்பட்டது.

உடனே அந்த இடத்தை மூடி வைத்துவிட்டனர். இதையறிந்த பக்தர்கள் பல நூறு ஆண்டுகளுக்கு முன் புதைக்கப்பட்ட யானையின் எலும்பா--- அல்லது முற்காலத்தில் வாழ்ந்த அதிசய பிராணிகளின் எலும்பா என்பதை தொல்லியல் ஆய்வு நடத்தவேண்டும் என்றும், இப்பகுதியில் தொல்லியல் ஆய்வு மேற்கொள்ளப்படும் போது பல அரிய தகவல்கள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது என்றும் அரசுக்கு கோரிக்கைவிடுத்துள்ளனர்.

ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோவிலுக்கென்று சிறப்பான வரலாறு உள்ளது. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கோவிலுக்கு அருகில் எலும்புகூடு இருப்பதால் பக்தர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த எலும்புகூடை தொல்லியல் ஆய்வு செய்வதன் மூலம் இந்த கோவிலுக்கு யானைகள் இருந்த காலத்தை அறியமுடியும். மேலும் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டால் கோவிலின் சிறப்புகள் தெரியவரும்.

தற்போது கோவில்களில் பல நூறு ஆண்டுகளாக புதைந்து கிடந்த அரிய பொக்கிஷங்கள் கிடைத்துவரும் நிலையில் ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோவிலிலும் பல அரிய பொக்கிஷங்கள் கிடைக்கலாம் என்று பக்தர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

ஏற்கனவே ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோவிலுக்கு சொத்துக்களும் உள்ளது. எனவே சொத்துக்களை உருவாக்கி வைத்த மன்னர்கள் இந்த கோவிலுக்கு பொற்காசுகளையும், தங்கநகைகளையும் வழங்கியிருக்கலாம் என்றும் தங்கபுதையல் கிடைக்கலாம் என்றும் எனவே இப்பகுதியில் தொல்லியல் ஆய்வு மேற்கொண்டால் பல அரிய தகவல்களை அறிந்துகொள்ளமுடியும் என்றும் பக்தர்கள் கருதுகின்றனர்.

நன்றி : தூத்துக்குடி இணைதளம் ( 12-07-11 ).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin