ஸ்ரீவை மக்களை பற்றியும் ஊர் நடப்புகளையும் தெரிந்து கொள்ளலாம்,உங்களுடைய கருத்துகளையும் பதிவு செய்யலாம்..
புதன், 20 ஜூலை, 2011
ஸ்ரீவை. கோவிலில் கண்டுபிடிக்கப்பட்ட வரைபடம் 4ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பிரதான கருவரையின் வரைபடமா?
நவகைலாயங்களில் ஒன்றான ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோவிலில் திருப்பணிகள் நடந்த போது பாதாள அறை கண்டுபிடிக்கப்பட்டதால், பக்தர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாதாள அறைக்கு அருகில் உள்ள தூணில் காணப்படும் வரைபடம் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பிரதான கருவரை அமைந்திருக்கும் இடத்தைக் குறிக்கும் வரைபடமாக இருக்கலாம் என்பதால், தொடர்ந்து அப்பகுதியில் ஆய்வு பணியை தொடரவேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நவகைலாயங்களில் ஒன்றான. ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோவில் சேர, சோழ, பாண்டிய மற்றும் பராக்கிரமபாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டுள்ளது. எனவே இந்த கோவில் கட்டப்பட்டு சுமார் 4 ஆயிரத்து 300 ஆண்டுகளுக்கு மேல் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 4 மன்னர்கள் சேர்ந்து கட்டிய இந்த கைலாசநாதர் கோவிலுக்கு இந்த மன்னர்கள், கோயிலுக்கு வருமானத்தை அளிக்கும் விதத்தில் இப்பகுதியில் சொத்துக்களை அளித்துள்ளனர். நவகைலாயங்களும் தாமிரபரணி ஆற்றின் கரையிலேயே அமைந்துள்ளது.
தற்போது ஸ்ரீவைகுண்டத்தின் தென்பகுதியில் செல்லும் தாமிரபரணி ஆறு அக்காலத்தில் ஊரின் வடபுறத்தில் தற்போது கைலாசநாதர் கோவில் இருக்கும் அருகில் தான் சென்றுள்ளது. காலப்போக்கில் ஆற்றின் போக்கு மாறி தென்பகுதியில் ஓடுகிறது.
தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ளதால் அக்காலங்களில் கைலாசநாதர் கோவிலில் முனிவர்கள் தவம் இருந்துள்ளனர். மிகவும் பிரசித்திபெற்ற கைலாசநாதர் கோவில் சனிஸ்தலமாக அமைந்துள்ளதால், சனிக்கிரஹ பிரீதி இங்கு நடந்துள்ளது. எனவே மன்னர்கள் இந்த கோவிலுக்கு மிகவும் முக்கியத்துவம் அளித்தள்ளனர். இக்கோவிலில் யானைகள் இருந்ததற்கு சான்றாக கடந்த சில நாட்களுக்கு முன் கோவிலின் முன்பகுதியில் தோண்டியபோது, கிடைத்த யானையின் எலும்புகள் சான்றாக உள்ளது.
இதுவரை கைலாசநாதர் கோவிலில் உள்பிரகாரத்தில் தோண்டி திருப்பணிகள் நடைபெறவில்லை. தற்போது, கைலாசநாதர் கோவிலில் விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
இதற்காக தற்போது இந்திய கலாச்சார பண்பாட்டு அறக்கட்டளை சார்பில் 13 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் திருப்பணிகள் நடந்து வருகிறது. இதற்காக கோவிலின் உள்பிரகாரத்தில் பழைய கல்தளத்தை எடுத்துவிட்டு புதிய கல்தளம் அமைக்கும் பணியில் ஈடுபட்டபோதுதான் கோவிலுக்குள் பாதாள அறை இருப்பது தெரியவந்துள்ளது.
அருகிலேயே மூன்று அடுக்குகளாக குறிக்கும் விதத்தில் வரைபடம் ஒன்று உள்ளது. எனவே 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆண்ட சேர, சோழ, பாண்டிய, பராக்கிரம மன்னர்கள் இந்த கோவிலின் பிரதான கருவரையை இப்பகுதியில் அமைத்திருக்கலாம் என்று பக்தர்கள் கருதுகின்றனர்.
கருவரை என்பது இறைவனுக்கு மன்னர்கள் மற்றும் பக்தர்களால் வழங்கப்படும் பொன் பொருள், ஆபரணங்களை பாதுகாக்கும் அறையாக அக்காலத்தில் மன்னர்கள் ரகசியமாகஅமைத்ள்ளனர். கருவரையானது மிகவும் ரகசியமாக அமைக்கப்பட்டு, அந்த கருவரையை அடைவதற்கு ரகசிய வழியை அருகில் உள்ள கல்தூண்களில் குறிப்புகளாக வரைந்து வைப்பது அக்காலத்து மன்னர்களின் அரச சபை ரகசியங்களாக இருந்துள்ளது.
ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோவிலில் தற்போது உள்ள கருவரை சுண்ணாம்பு மற்றும் செங்கற்களைப் பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே இந்த கருவரை ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையதாகவே இருக்கமுடியும்.
எனவே அக்கால மன்னர்கள் அமைத்திருந்த பிரதான கருவரை வேறு இடத்தில் தான் இருக்கமுடியும். எனவே பாதாள அறை அமைந்துள்ள இடத்தை மீண்டும் தோண்டவேண்டும் என்பது பக்தர்களின் கோரிக்கை.
ஒரு அடுக்கை மட்டுமே தோண்டிவிட்டு மீண்டும் தோண்டாமல் அப்பகுதியில் பணியை நிறுத்திவிட்டு திருப்பணிக்குழுவினர் மறைப்பதோடு, விபரங்கள் கேட்கும் நிருபர்களிடம் மலுப்பலான பதிலை கூறுகின்றனர். பாதாள அறை கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் தொடர்ந்து ஆய்வு செய்தால், பல ரகசியங்கள் கிடைக்கும் என்பது பக்தர்களின் கோரிக்கை. எனவே தொடர்ந்து அப்பகுதியில் தோண்டி ஆய்வு பணியை மேற்கொள்ளவேண்டும்.
ஏற்கனவே ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோவில் திருப்பணிகளை தொடங்குவதற்கு முன்பு கோவிலில் வைத்து ஊரில் முக்கியபிரமுகர்கள் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் பிரசன்னம் பார்த்தபோது, விரைவில் ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோவில் உலகப்புகழ் பெறும் என்று கூறியுள்ளார்.
எனவே கைலாசநாதர் கோவிலில் கண்டுபிடிக்கப்பட்ட பாதாள அறை அமைந்துள்ள பகுதியில் தொல்லியல் துறை அதிகாரிகளின் உதவியோடு கல்வெட்டு ரகசியங்களை அறிந்து, புதைந்து கிடக்கும் மர்மங்களை ஆய்வு செய்யவேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நன்றி : தூத்துக்குடி வெப்சைட்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக