ஸ்ரீவை மக்களை பற்றியும் ஊர் நடப்புகளையும் தெரிந்து கொள்ளலாம்,உங்களுடைய கருத்துகளையும் பதிவு செய்யலாம்..
வியாழன், 21 ஜூலை, 2011
ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோவிலில் பாதாளஅறை கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு
நவகைலாயங்களில் ஒன்றான ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோவிலில் திருப்பணிகள் நடந்த போது பாதாள அறை கண்டுபிடிக்கப்பட்டது.
நவகைலாயங்களில் ஒன்றான. ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோவிலில் விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது அதற்காக தற்போது இந்திய கலாச்சார பண்பாட்ட அறக்கட்டளை சார்பில் பல கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் திருப்பணிகள் நடந்து வருகிறது.
இதற்காக கோவிலின் உள்பிரகாரத்தில் பழைய கல்தளத்தை எடுத்துவிட்டு புதிய கல்தளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக இரவு பகலாக பணிகள் நடந்து வருகிறது. கோவிலின் உள் பிரகாரத்தில் சுனை சுப்பிரமணிய சுவாமி சன்னதி உள்ளது. உள்பிரகாரத்தில் இருந்து இந்த சன்னதிக்கு ஏறி செல்லும் படிக்கட்டை அகற்றி விட்டு புதிய படிகட்டுகள் அமைக்கும் பணிக்காக படிக்கட்டுகளை உடைத்து அகற்றினர்.
அப்போது படிக்கட்டுகளுக்கு பின்னால் வெற்றிடம் இருப்பது போல் இருந்தது. எனவே குகை போல் இருப்பதாக அறநிலைய அதிகாரிகளுக்கு கட்டிட பணியாட்கள் தகவல் கொடுத்தனர்.
தகவல்அறிந்ததும் துத்துக்குடி மாவட்ட இந்து சமய அறநிலைய துறை துணை ஆணையர் வீரராஜன், ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் வசந்தா, நிர்வாக அதிகாரி ராமசுப்பிரமணியன், கோயில் ஆய்வாளர் பாலு, ஸ்ரீவைகுண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள்முருகன், ஆழ்வார்திருநகரி நகர பஞ்சாயத்து தலைவர் ஆதிநாதன், கள்ளபிரான் சுவாமி கோவில் ஸ்தலத்தார் வெங்கடாச்சாரி, டி.வி.எஸ் ஆலோசகர் முருகன், டி.வி.எஸ். என்ஜினியர் சுப்பு ஆகியோர் கோவிலுக்கு வந்தனர்.
அவர்கள் முன்னிலையில் நேற்று அப்பகுதியில் தோண்டினர். தோண்டி பார்த்ததில் அப்பகுதியில் சிறிய அறை ஒன்று இருந்தது தெரியவந்தது. மேலும் குகையோ, அல்லது பாதாள அறையோ, சுரங்க பாதையோ இருக்கலாம் என்று கருதப்பட்டதால், தொடர்ந்து அப்பகுதியில் தோண்டினர். மூன்று அடி வரை தோண்டி பார்த்ததில், அங்கிருந்து வேறு எங்கும் அந்த அறை செல்லவில்லை.
அந்த படிக்கட்டு அருகில் இருந்த கல்தூணில், தோண்டப்பட்ட இடத்தில் இருந்த அறைக்கான வரைபடம் ஒன்று செதுக்கப்பட்டிருந்தது. எனவே அந்த அறை அக்காலத்தில் முக்கியமான அறையாக இருந்திருக்கலாம் என்று அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் கருதுகின்றனர்.
இதே போல் கோவிலின் உள்புறத்தில் உள்ள கல் சுவர்கள் மற்றும் தூண்களில் அக்கால எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. எனவே நவகைலாயங்களில் ஒன்றான ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோவிலில் தொல்லியல் துறை ஆய்வு நடத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏற்கனவே கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோவிலுக்கு அருகில் அரசு குழந்தைகள் காப்பகம் கட்டுவதற்கு தோண்டப்பட்ட இடத்தில் யானையின் எலும்புகள் புதைந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி : தூத்துக்குடி வெப்சைட்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக