புதன், 27 ஜூலை, 2011

ஸ்ரீவைகுண்டம் குருசுகோவில் புனித சந்தியாகப்பர் ஆலய தேர்பவனி


ஸ்ரீவைகுண்டம் குருசுகோவில் புனித சந்தியாகப்பர் ஆலய தேர்பவனி இன்று நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வடம்பிடித்து தேர் இழுத்தனர்.

ஸ்ரீவைகுண்டம் புனித சந்தியாகப்பர்கோயில் திருவிழா கடந்த 16 ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா தொடக்க நிகழ்ச்சியாக முதல்நாள் காலை 7மணிக்கு ஊர் பொதுமக்களுக்காகவும் மீனவ மக்களுக்காகவும் பங்குதந்தை பெஞ்சமின்டிசூசா தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது.

பின்னர் மாலை 6.30மணிக்கு கொடியேற்றம் நடந்தது. திருவிழா நாட்களில் தினமும் காலை 5.30 மணிக்கு திருப்பலியும் மாலை 6.30மணிக்கு திருயாத்திரை திருப்பலியும் நற்கருணை ஆராதனையும் நடந்தது. கடந்த 16 ந் தேதி தொடங்கி 25 ந் தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடந்தது.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான 10ம் திருவிழாவையொட்டி இன்று காலை 4.30 மணிக்கு முதல் திருப்பலி நடந்தது. காலை 7 மணிக்கு பெருவிழா கூட்டுத்திருப்பலி நடந்தது. தேர்பவனியில் கலந்துகொள்ள தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் உள்பட பல மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் நேற்று முன்தினம் இரவே வந்து கோயிலில் தங்கி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர். குறிப்பாக திருவிழாவில் கடலோர மக்கள் திரளாக வந்து கலந்துகொண்டனர்.

இன்று காலையில் கோயிலின் முன் புனித சந்தியாகப்பர் சப்பரத்திலும், மாதா தேரிலும் எழுந்தருளினர். பக்தர்கள் நேர்ச்சையாக மாலை, எலுமிச்சை மாலை ஆகியவற்றை செலுத்தினர். புனித சந்தியாகப்பருக்கும், மாதாவுக்கும் பக்தர்கள் நேர்ச்சையாக வழங்கிய மாலைகள் அணியப்பட்டு தேர் அலங்கரிக்கப்பட்டது.

தேருக்கும் சப்பரத்துக்கும் முன் மிக்கேல் அதிதூதர் சிறிய சப்பரத்தில் எழுந்தருளி முன்னால் சென்றார். அப்போது பாடல் குழுவினர் பாடல்கள் பாடிக்கொண்டு முன் செல்ல பக்தர்களின் கரகோசத்துடன் கோயில் முன்பிருந்து காலை 10.45 மணிக்கு புனித சந்தியாகப்பர் சப்பரத்தில் புறப்பட்டார். தொடர்ந்து மாதா தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேர்ப்பவனி நடந்தது. முக்கிய வீதிகள் வழியாக தேர் வந்தது. தேரோட்டத்தில கலந்துகொண்ட பக்தர்கள் உப்பு, மிளகு, பூ ஆகியவற்றை தேரில் தூவி வழிபட்டனர்.

பின்னர் பக்தர்கள் புனித சந்தியாகப்பர் கோவிலில் சென்று, புனித சந்தியாகப்பருக்கு மாலை மற்றும் மெழுகுவர்த்தி நேர்ச்சை செலுத்தி வழிபட்டனர். அப்போது பக்தர்களுக்கு கோயிலில் இருந்து வெள்ளை நூல் வழங்கப்பட்டது. திருவிழாவில் கலந்துகொண்ட பக்தர்கள் அனைவரும் கையில் வெள்ளை நூல் அணிந்து ஆசி பெற்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கிறிஸ்தவ கோவிலாக புனித சந்தியாகப்பர் கோவில் விளங்குகிறது. எனவே 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் விதவிதமான ராட்டினங்கள், சர்க்கஸ், விசித்திர காட்சி அரங்கங்கள், குழந்தைகள் பொழுது போக்கு விளையாட்டுகள், விதவிதமான விளையாட்டு பொருட்கள் கடைகள், மிட்டாய் கடைகள் என்று 10 நாட்களும் குருசுகோவில் களைகட்டியது.

முக்கிய வீதிகள் வழியாக தேர் பவனி வந்து மதியம் 2.15 மணிக்கு நிலையம் வந்து சேர்ந்தது. தேர்நிலையம் வந்ததும் திருப்பலி நடந்தது. இன்று காலை 6 மணிக்கு நன்றி திருப்பலி நடக்கிறது.

பாதுகாப்பு ஏற்பாடுகளை ஸ்ரீவைகுண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு ஸ்டீபன்ஜேசுபாதம் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள்முருகன், தனிப்பிரிவு சப்இன்ஸ்பெக்டர் வீரராஜன், சப்இன்ஸ்பெக்டர்கள் சேக்அப்துல்காதர், சண்முகவடிவு மற்றும் போலீசார் செய்திருந்தனர்.

இந்நிகழ்ச்சியில் பங்குதந்தைகள் அலெக்சாண்டர், டிக்சன், ஜெயக்குமார், ரஞ்சித்குமார், பெஞ்சமின், கிஷோக்கிராசியுள், லூசன், செல்வன், பென்சிகர், இருதயராஜா, சூசைராஜ், ஸ்டார்வின் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

திருவிழாவுக்கான ஏற்பாடுகளை குருசுகோவில் பங்குதந்தை ஜெயகர் மற்றும் அருட் சகோதரிகள், பங்குபேரவையினர், ஊர்நலக்கமிட்டியினர், இறைமக்கள் செய்திருந்தனர்.

நன்றி : தூத்துக்குடி வெப்சைட்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin