ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோயில் முன்பு கட்டப்பட உள்ள அரசு கட்டடத்தை தடை செய்ய வேண்டும் என ஸ்ரீவைகுண்டம் பொதுமக்கள், பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நவகைலாயங்கள் என்று அழைக்கப்படும் ஒன்பது சிவன் கோயில்கள் பாபநாசம் முதல் துவங்கி சேர்ந்தபூமங்கலம் வரையில் உள்ளது. ஆதிகாலத்தில் உரோமோச மகரிஷி தாமிரபரணியில் ஒன்பது தாமரை மலர்களை மிதக்கவிட அவைகள் ஒவ்வொன்றும் தாமிரபரணி நதிக்கரையில் கரை ஒதுங்கிய இடத்தில் அமைந்துள்ள ஸ்தலங்கள் நவகைலாய ஸ்தலங்களாகும்.
அவைகள் தாமிரபரணி மலையை விட்டு கீழிறங்கும் இடமான பாபநாசம், சேரன் மகாதேவி, கோடகநல்லூர், குன்னத்தூர், முறப்பநாடு, ஸ்ரீவைகுண்டம், தென்திருப்பேரை, ராஜபதியை சேர்ந்தபூமங்கலம் ஆகும். இவை ஒன்பது நவகைலாயங்களில் நவகிரகங்களின் ஆட்சியின்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த கோயில்களில் நவகைலாயமும், நவதிருப்பதிகளில் ஒன்றான ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி குடிகொண்டு அருள் பாலிக்கும் திருத்தலமாகவும் விளங்குகிறது. வந்தாரை வாழவைக்கும் வைகுண்டம் ஸ்ரீவைகுண்டம் என்பார்கள்.
பூலோகத்தில் ஸ்ரீவைகுண்டம் என பெயர் பெற்ற ஒரே ஆன்மிகஸ்தலம் என்ற பெயர் பெற்றது இங்குள்ள பெருமாள் கள்ளபிரான். 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகும். தாமிரபரணி நதியின் தீரத்தில் வைகுண்டமும், கைலாயமும் புகழ் பெற்று விளங்கி வடகரை கைலாயம், தென்கரை வைகுண்டம் என ஆங்கிலேயர் ஆட்சியின் அரசு ரிக்கார்டுகள் கூட உள்ளது. முன்னொரு காலத்தில் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவின் எல்லை பெரிய பரப்பளவில் உள்ளது என அரசு ரிக்கார்டுகள் கூறுகின்றது.
சுதந்திர போராட்டத்திற்கு போராடிய வீரபாண்டிய கட்டபொம்மன் ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள அரசு நெற்களஞ்சியத்தில் இருந்து தான் ஆங்கிலேயரிடம் இருந்து நெல்லை கொள்ளை அடித்து ஆங்கிலேயருக்கு பாடம் புகட்டினார் என்பது வரலாறு. பழமையான அணைக்கட்டும், பாலமும் இன்றும் இதன் பழமையை பறைசாற்றி வருகிறது. இத்தனை பழமையும், புகழும் வாய்ந்த ஊரில் ஆழ்வார்கள் வந்து பாடிய ஸ்தலங்களும் உண்டு என்ற பெருமைக்குரியது. மாமன்னர் பராக்கிரம பாண்டியனால் கட்டப்பட்ட பிரம்மாண்டமான கோயில் கள்ளபிரான் கோயில் ஆகும்.
பிரம்மாண்டமான மதில் சுவர்கள் உயர்ந்த கோபுரம், திருவிழாக்கள் என கோலாகலமாக நடக்கும் புனித நகரத்தில் உள்ள கோயில்கள் காலத்தின் கோரத்தால் இடைக்காலத்தில் மக்கள் தங்களை மட்டும் கவனித்ததால் ஆலயங்கள் சிதிலமடைந்தது. கடந்த 1991ம் ஆண்டு தமிழக அரசு இந்திய கலாச்சார பண்பாட்டு அறக்கட்டளை என்ற தனியார் தொண்டு நிறுவனத்தை அமைத்து டிவிஎஸ்.,அதிபர் வேணுசீனிவாசன் தலைமையில் நவதிருப்பதி ஆலயங்களை புனர்நிர்மானம் செய்தது. அதை தொடர்ந்து தற்போது சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை சார்பில் பல்வேறு ஆன்மிக பணிகள் நடந்து வருகிறது. மேலும் பாழடைந்து கிடக்கும் கோயில்கள் அனைத்திலும் திருப்பணிகள் நடந்து வருகிறது.
இதனை ஒட்டி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள கைலாசநாதர் கோயிலுக்கும் கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்ற பக்தர்களின் பேராவலை பூர்த்தி செய்யும் வண்ணம் இந்து சமய அறநிலையத்துறை, டிவிஎஸ்.,நிறுவனத்தார் பல லட்சங்கள் செலவில் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகளை துவக்கினர். திருப்பணிகளின் முதற்கட்டமாக தேவபிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சி நடந்தது. பிரசன்னத்தில் கோயிலின் நிலை பூஜைகள் நின்று போன திருவிழாக்கள் போன்றவற்றை பற்றியும், கோயில் கும்பாபிஷேகம் பற்றியும் ஸ்ரீவைகுண்டம் நகரத்தின் வருங்காலநிலை பற்றியும் கூறினர். இதனை தொடர்ந்து கோயில் பிரகாரம் முழுவதும் 3 அடி ஆழம் உயரம் குறைத்து புதிய கல் போடும் பணி, மண்டபம் புதுப்பித்தல் பணி என மூன்று கட்ட பணிகள் நடந்து வருகிறது.
பக்தர்களின் ஆதரவுடன் நடந்து வரும் திருப்பணிகளால் வெளியூர் பக்தர்கள், உள்ளூர் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் ஸ்ரீவைகுண்டத்தில் வாடகை கட்டடத்தில் இயங்கிவந்த அரசு ஆதரவற்றோர் மாணவர் காப்பகம் கட்ட புதிய இடம் தேவை என்ற நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்குமுன் ஸ்ரீவைகுண்டம் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் நிதி திரட்டப்பட்டு அறநிலையதுறைக்கு சொந்தமான கோயிலின் கிழக்கு வாசல் முன்புள்ள இடத்தை வாங்கி சமூகநலத்துறைக்கு கொடுத்தனர். அரசு அந்த இடத்தில் காப்பகம் கட்ட டெண்டர்விட்டு தற்போது கட்டடம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது.
பல நூறு ஆண்டுகளாக மூடிக்கிடந்த கோயிலின் கிழக்குவாசல் திறக்கவும் திருவிழாக்கள், பூஜைகள் அனைத்தும் இந்த வழியே தான் நடந்து வருகிறது. டவுன் பஞ்.,நிர்வாகம் புதிய தார்ரோடு அமைத்தும் விளக்கு வசதிகள் செய்துள்ளது. தற்போது இந்த இடத்தில் புதிய காப்பகம் கட்டும் பணிகள் நடந்து வருவதால் வருங்காலங்களில் கோயில் திருவிழாக்கள் நடக்கும்போதும், தேர் உற்சவத்தின் போதும் இந்த கட்டடம் மிகவும் இடையூறாக இருக்கும் என்று பக்தர்கள், பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். மெல்ல மெல்ல பூதாகரமான எதிர்ப்பு கிளம்பி தற்போது புதிய கட்டட பணி நடக்கும் போது குடிநீர் தொட்டி கட்ட குழி தோண்டும் போது யானையின் எலும்புகள் கிடைத்தது தற்போது பெரும் பிரச்னையை கிளப்பி உள்ளது. கோயில் யானை இறந்தால் தான் கோயிலின் அருகில் புதைப்பார்கள். எனவே கோயில் யானை என்பது புனிதத்துவம் வாய்ந்த ஒன்று.
எனவே அதனை புதைத்த இடமும் புனிதமானது தான். மேலும் கோயிலின் முன்புறம் இதுபோன்ற கட்டடங்கள் கட்டும் போது திருவிழா காலமான சிவராத்திரி அன்று ஆயிரக்கணக்கான டூரிஸ்ட் வாகனங்கள் நிறுத்தும் இடமாக இந்த இடம் பயன்படுட்டு வந்தது. மேலும் வருங்காலங்களில் கோயில் பிரசித்து பெற்று விளங்கும் என பிரசன்னத்தில் கூறியது போல் ஸ்ரீவைகுண்டம் முன்னேற்றம் அடையும் நிலை இந்த இரண்டு கோயில்களை வைத்துதான். நகரின் முன்னேற்றத்திற்கு பிரதானமாக விளங்கக்கூடிய கோயிலின் முன்னேற்றத்திற்கு இந்த கட்டடம் தடையாகவும் ஆகம விதிகளுக்கு எதிராகவும் இருக்கும் என பக்தர்கள் கூறி வருகின்றனர்.
கோயில் இல்லாத ஊரில் குடியிருக்காதே என்று முன்னோர்கள் கூறி உள்ளனர். ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்பார்கள். ஆன்மிகம் தான் மனித குலத்தின் மகத்தான மருந்து. உடல், ஆன்மா, மனம் அனைத்தும் ஆண்டவன் பெயரில் தான் தனது இயக்கங்களை செய்து வருகிறது. ஆன்மிகம் அழியும் நாட்டில் குற்றங்கள் அதிகரிக்கும். ஆன்மிகம் வளர வளர அங்கே குற்றங்கள் குறையும். மக்கள் மனஅமைதி பெருகி சுபிட்சம் அடைவர். ஜாதி, மத பிணக்குகள் குறைந்து காணப்படும். எனவே ஆன்மிக வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்குவது கோயில்தான். கோயிலின் வளர்ச்சிதான் அந்த நகரின் வளர்ச்சி, நகரின் வளர்ச்சிதான் மக்களின் வளர்ச்சி.
இந்தியாவில் புகழ்பெற்ற நகரங்கள் ஆரம்பகால கட்டத்தில் அந்த நகரின் பிரதான ஆலயத்திற்கு பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க அதிகரிக்க ஊரின் முன்னேற்றம் அதிகரித்தது என்பது வரலாறு. ஸ்ரீவைகுண்டம் அதே போலத்தான் மிகவும் அமைதியான, அழகான இந்த ஊரில் உள்ள இவ்விரண்டு நவதிருப்பதி, நவகைலாயங்களின் வளர்ச்சியில் கொண்டு சேர்க்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஓடாமல் நிலையிலேயே நின்ற கள்ளர்பிரான்சுவாமி சித்திரை தேர் ஓட ஆரம்பித்த பிறகுதான் ஸ்ரீவைகுண்டத்தில் மக்கள் நெருக்கம், வீடுகள் விலை ஏற்றம், விவசாயத்தில் முன்னேற்றம், பணபுழக்கம் அதிகரித்துள்ளது. எனவே தூர்ந்து கிடக்கும் இந்த கைலாசநாதர் கோயிலும் விழிப்பு பெற்று பிரபலமடையும் போது ஸ்ரீவைகுண்டத்திற்கு பக்தர்களின் வருகை அதிகரிக்கும். சனிஸ்தலம் என்பதால் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் செய்யும் பூஜைகள் இங்கு செய்தாலும் சனிகிரகத்தால் ஏற்படும் இன்னல்கள் விலகும் என்பது ஐதீகம். தற்போது பிரதோஷ கால பூஜைகளுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து கொண்டிருப்பது. இதற்கு உதாரணமாக தேவ பிரசன்னத்தில் கூறியது போல மகாதேவன் பிரசித்தி பெறும்போது இங்குள்ள குடிகளின் நிலை உயரும். இதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
அப்படிப்பட்ட கோயிலின் வளர்ச்சிக்கு அரசின் இந்த காப்பகம் இடையூறாக இருக்கும் என பக்தர்கள் கருதுகின்றனர். எனவே அரசு புறம்போக்கு இடங்கள் ஸ்ரீவைகுண்டத்தில் நிறைய உள்ளது. அதில் ஏதாவது ஒரு இடத்தை தேர்வு செய்து புதிய கட்டடத்தை மாற்றவேண்டும். ஆன்மிகம் சம்பந்தமாக அக்கறை கொள்ளும் அரசு இந்த அரசு என்பதால் ஒரு கோயிலின் வளர்ச்சிக்கு அரசே காரண கர்த்தாவாகிவிடக் கூடாது என்பது இங்குள்ள பக்தர்களின் ஏகோபித்த விருப்பம். எனவே அரசு இதனை உடனடியாக நிறுத்தி இடத்தை மாற்றி அமைக்க வேண்டும். ரூ.70 லட்சம் செலவுள்ள கட்டடத்தை எளிதில் எங்கு வேண்டுமானாலும் மாற்றி அமைக்கலாம்.
காரணம் ஆரம்பகட்ட அஸ்திவார பணிகள் மட்டுமே நடந்துள்ளது. ஆனால் ரூ.700 கோடி கொடுத்தாலும் இதுபோன்ற கோயிலை நாம் உருவாக்குவது கடினம். எனவே அரசின் இந்த வேலையை ஆண்டவனே யானை உருவத்தில் வந்து தடை செய்து உள்ளார் என்று பக்தர்கள் கருதுகின்றனர். மக்களின் மனசாட்சிதான் அரசு என்பதில் ஐயமில்லை. மக்களுக்காகத்தான் அரசு, மக்களுக்கும் மக்களின் எண்ணங்களுக்கும் எதிரான இந்த கட்டடத்தை இடமாற்ற வேண்டும் என்பது மக்களின் கோரிக்கை. கைலாசநாதரின் ஆவல் ஏதோ? பார்ப்போம்.
நன்றி : தினமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக