திங்கள், 20 ஜூலை, 2009

ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ.வை நிர்ணயிக்கும் 1.16 லட்சம் வாக்காளர்கள்

ஸ்ரீவைகுண்டம் இடைத் தேர்தல் வருகிற 18ம் தேதி நடைபெறுகிறது. அதற்கான தேர்தல் பணிகள் விறுவிறுப்படைந்துள்ள நிலையில் 1,16,607 வாக்களர்கள் சட்ட மன்ற உறுப்பினரை நிர்ணயிக்க உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி செல்வராஜ் அன்மையில் காலமானார். இதனையடுத்து ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்கு, தொண்டாமுத்தூர், பக்கூர், கம்பம், இளையன்குடி ஆகிய தொகுதிகளுடன் இணைந்து அடுத்த மாதம் 18ம் தேதி இடைத் தேர்தல் நடக்கிறது.

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் போட்டியிடுவது யார்? என அரசியல் கட்சியினர் தங்களுக்கு சீட்டு கேட்டு கட்சியின் தலைமையகத்தில் காத்துக்கிடக்கின்றனர். இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலக ஊழியர்கள் தேர்தல் ஆயத்தப் பணிகளை விறுவிறுப்பாக செய்து வருகின்றனர்.

இன்று தூத்துக்குடி தாலூகா அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் கோ.பிரகாஷ், தொகுதி தேர்தல் அதிகாரி, மாவட்ட வருவாய் அலுவலர் துரை ரவிச்சந்திரன், வட்டாட்சியர் வேலாயுதம், தாசில்தார் பூமி ஆகியோர் கலந்துகொண்டு தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினர்.

ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் 57,353 ஆண் வாக்காளர்கள், 59,254 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 1,16,607 பேர் வாக்களிக்க உள்ளனர். 1,16,607 வாக்காளர்களில் 1,16,517 வாக்காளர்களுக்கு போட்டோவுடன் கூடிய வாக்களர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. 172 வாக்குச் சாவடிகளில், 60 வாக்குச் சாவடிகள் பதட்டம் நிறைந்த வாக்குச் சாவடிகளாக கண்டறியப்பட்டு, துணை ராணுவப் படையுடன் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அன்மையில் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் நடைபெற்ற விவசாயிகள் நிலப் பாசன சங்கத் தேர்தலில் வாக்களித்தவர்களின் கைகளில் அடையாள மை வைக்கப்பட்டதால், தற்போதைய தேர்தலில் நடுவிரல் அல்லது மோதிர விரலில் மை வைக்கப்படும் என தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin