ஜனவரி
8- சென்னை துறைமுகம், கோயம்பேடு இடையிலான உயர் மட்ட பாலத்திற்கான அடிக்கல்லை பிரதமர் மன்மோகன் சிங் நாட்டினார்.
12- திருமங்கலம் இடைத் தேர்தலில் திமுகவின் லதா அதியமான் வெற்றி பெற்றார்.
13 - தென் மண்டல திமுக அமைப்புச் செயலாளராக மு.க.அழகிரி நியமிக்கப்பட்டார்.
19 - விடுதலைப் புலிகளுக்கு ஆதராகப் பேசியதாக கூறி கைது செய்யப்பட்ட இயக்குநர் சீமானுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் அளித்தது.
- சந்திராயன் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரைக்கு சென்னை பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் அளித்தது.
21 - உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்புறுதித் திட்டத்தை ஆளுநர் பர்னாலா சட்டசபையில் அறிவித்தார்.
26 - கடும் முதுகு வலியால் அவதிப்பட்ட முதல்வர் கருணாநிதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
28- சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
பிப்ரவரி
2 - சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு செயல் அதிகாரியை நியமித்த தமிழக அரசின் உத்தரவு செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
8- தமிழகத்தைச் சேர்ந்த வாலிபர் சைமன், ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளில் கொல்லப்பட்டார்.
- சன் டிவியின் காமெடி சானலான ஆதித்யா தனது ஒளிபரப்பைத் தொடங்கியது.
11 -முதல்வர் கருணாநிதிக்கு முதுகுத் தண்டவடத்தில் 11 மணி நேரம் அறுவைச் சிகிச்சை நடந்தது.
15- கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் என்ற கட்சி தொடங்கப்பட்டது.
17 - தமிழக சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
19 - சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் வக்கீல்களுக்கும், போலீஸாருக்கும் பெரும் மோதல் மூண்டு நாட்டையே அதிர வைத்தது.
20 - விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரித்துப் பேசியதாக புதுச்சேரியில் தொடரப்பட்ட வழக்கில், நெல்லை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சீமான் சரணடைந்தார்.
22 -புதிய திருப்பூர் மாவட்டத்தை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
25 - முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.
26 - அருந்ததியர் இனத்தினருக்கு 3 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.
27 - ராஜ கண்ணப்பன் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
- பூங்கோதை ஆலடி அருணா மீ்ண்டும் அமைச்சராகப் பதவியேற்றார்.
28 - தூத்துக்குடியில் பிரணாப் முகர்ஜிக்கு கருப்புக் கொடி காட்டிப் போராட்டம் நடத்தப்பட்டது.
மார்ச்
7 - இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கூறி மதிமுக கொள்கை விளக்க அணிச் செயலாளர் நாஞ்சில் சம்பத் கைது செய்யப்பட்டார்.
9- சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக எச்.எல்.கோகலே பதவியேற்றார்.
11 - மதிமுகவிலிருந்து மு.கண்ணப்பன் விலகினார். பின்னர் திமுகவில் இணைந்தார்.
12 - ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி மதுரையில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது.
13 - சென்னையில் பிறந்து 3 நாளே ஆன கைக்குழநதையை கிணற்றில் வீசிக் கொலை செய்தார் அக்குழந்தையின் தந்தையான நிரஞ்சன் குமார்.
16 - இலங்கைத் தமிழர்களுக்கு உதவுவதற்காக ரூ. 2 கோடி நிதியை செஞ்சிலுவைச் சங்கத்திடம் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஒப்படைத்தார்.
- நடிகர் ராதாரவி திமுகவில் இணைந்தார்.
19 - சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் நடத்தி வந்த காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது.
- ஜீவஜோதி கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் சரவண பவன் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
23 - முன்னாள் எம்.எல்.ஏ ஆண்டித்தேவர் மரணமடைந்தார்.
26 - அதிமுக கூட்டணியில் இணைவது என பாமக பொதுக்குழு வாக்கெடுப்பு நடத்தி முடிவெடுத்தது.
- கம்பம் ராமகிருஷ்ணன் மதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார். எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்தார்.
28 - லோக்சபா தேர்தலில் திமுக 21, காங்கிரஸ் 15, விடுதலைச் சிறுத்தைகள் 2, முஸ்லீம் லீக் ஒரு தொகுதியில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டது.
- பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக ஜெயலலிதா அறிவித்தார். மத்திய அமைச்சர் பதவியிலிருந்து வேலு, அன்புமணி ராமதாஸ் விலகினர்.
29 - ஜனநாயக முன்னேற்றக் கழகத் தலைவர் ஜெகத்ரட்சகன் கட்சியோடு திமுகவில் இணைந்தார்.
- சிபிஐக்கு 3 சீட் தருவதாக ஜெயலலிதா அறிவித்தார்.
ஏப்ரல்
1 - முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் தேமுதிகவிலிரு்நது விலகி அதிமுகவில் இணைந்தார்.
3 - வேலூர் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் எம்.பி. காதர் மொய்தீன் வெற்றி பெற்றது செல்லும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
- மதுரை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடத்த விதிமுறைகளுடன் உயர்நீதிமன்றம் அனுமதி.
- சிபிஎம்முக்கு 3 சீட் ஒதுக்கினார் ஜெயலலிதா.
8 - மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
9 - அதிமுக 23 தொகுதிகளிலும், மதிமுக 4 தொகுதிகளிலும் போட்டியிடும் என ஜெயலலிதா அறிவித்தார்.
21 - நாஞ்சில் சம்பத் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு.
29 - சென்னையில் மின்சார ரயிலைக் கடத்திய மர்ம மனிதன் சரக்கு ரயிலுடன் அதை மோதினான். இதில் 4 பேர் பலியானார்கள்.
23 - இலங்கையில் போர் நிறுத்தம் கோரி தமிழகம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டம்.
25 - பாஸ்போர்ட் வழங்குவதில் பெருமளவில் முறைகேடுகள் செய்ததாகவும், லஞ்சம் வாங்கியதாகவும், மண்டல பாஸ்போர்ட் அதிகாரி சுமதி ரவிச்சந்திரன் கைது.
26- ஸ்டண்ட் மாஸ்டர் ராம்போ ராஜ்குமார் மரணம்.
27- கொளத்தூர் மணியை குண்டர் சட்டத்தில் கைது செய்தது செல்லாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு.
- விதிகளை மீறி மும்பை நிறுவனத்திற்குக் கடன் வழங்கிய வழக்கில் இந்தியன் வங்கியின் முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணனுக்கு 14 ஆண்டு சிறைத் தண்டனை.
மே
2 - கோவையில் ராணுவ லாரிகள் மீது பெரியார் திராவிடர் கழகத்தினர் தாக்குதல்.
- தேமுதிக தேர்தல் பிரிவு செயலாளர் ஏ.ஜி.சம்பத், திமுகவில் இணைந்தார்.
6 -நாமக்கல் அருகே நடந்த தனியார் எண்ணை ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.
10 - சென்னையில் சோனியா காந்தி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பழ. நெடுமாறன், பாரதிராஜா உள்ளிட்டோர் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்.
11 - டிவி நடிகை லட்சுமி கோபகுமாரின் பின்பக்கத்தில் தட்டியதாக தொடரப்பட்ட வழக்கிலிருந்து கேரள முன்னாள் அமைச்சர் பி.ஜே.ஜோசப் விடுதலை.
12 - முன்னாள் தமிழக அமைச்சர் பி.டி.சரஸ்வதி மரணமடைந்தார்.
- பொய்யான குற்றச்சாட்டைக் கூறியதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீது தயாநிதி மாறன் வழக்கு தொடர்ந்தார்.
13 - தமிழகத்தில் லோக்சபா தேர்தல் நடைபெற்றது.
21 - அமைச்சர் பதவிகள் மற்றும் இலாகாக்களில் திருப்தி இல்லை என்று கூறி அமைச்சரவையில் சேர முடியாது, வெளியிலிருந்து ஆதரவு தருவதாகவும் திமுக கூறியது. முதல்வர் கருணாநிதி டெல்லியிலிருந்து சென்னைக்குக் கிளம்பினார்.
- செக்ஸ் டாக்டர் பிரகாஷுக்கு 10 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
28 - இலாகாக்கள் மற்றும் அமைச்சர் பதவிகளில் ஏற்பட்ட சிக்கல்கள் நீங்கியதைத் தொடர்ந்து தமிழகத்தைச் சேர்ந்த மு.க.அழகிரி, தயாநிதி மாறன் உள்ளிட்டோருடன் 59 மத்திய அமைச்சர்கள் பதவியேற்றனர்.
- சென்னை மாநகர காவல்துறை ஆணையராக ராஜேந்திரன் பொறுப்பேற்றார்.
29 - மு.க.ஸ்டாலின் துணை முதல்வராக நியமிக்கப்பட்டார்.
31 - ஆறாவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு இதன் மூலம் 30 சதவீத ஊதிய உயர்வு கிடைத்தது.
ஜூன்
7 - சென்னையில் நகை வியாபாரி சுரேஷ்குமாரின் துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல் கைப்பற்றப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.
8 - சென்னையில் சட்டக் கல்லூரி மாணவர்களிடையே நடந்த மோதல் தொடர்பான நீதிபதி சண்முகம் கமிஷன் அறிக்கை தாக்கல்.
10 - புழல் சிறையில் நடந்த பயங்கர மோதலில், வெல்டிங் குமார் கொல்லப்பட்டார்.
11- ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.
16 - மதுரை அருகே 16 டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகள் சிக்கி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
27 - சென்னை அருகே ஊரப்பாக்கத்தில் ஊராட்சித் தலைவர் ஜி.என்.ஆர்.குமார் குண்டு வீசிக் கொல்லப்பட்டார்.
29 - தமிழறிஞர் வ.அய்.சுப்ரமணியம் மரணமடைந்தார்.
ஜூலை
1 - என்.எஸ்.ஜி. மையத்தை சென்னையில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தொடங்கி வைத்தார்.
5- ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வராஜ் மரணமடைந்தார்.
12 - துரைமுருகனிடமிருந்து பொதுப்பணித்துறை பறிக்கப்பட்டது.
16 - இசையரசி டி.கே.பட்டம்மாள் தனது 90வது வயதில் சென்னையில் காலமானார்.
20- பர்கூர், ஸ்ரீவைகுண்டம், தொண்டாமுத்தூர், கம்பம், இளையாங்குடி இடைத் தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்தது.
23 - தனது கோபாலபுரம் வீட்டை தனது காலத்திற்குப் பின்னர் முத்துவேலர்- அஞ்சுகத்தம்மாள் என்ற பெயரில் இலவச மருத்துவமனை அமைக்க வழங்குவதாக முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.
29 - நடிகர் எஸ்.வி.சேகர், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் அதிமுகவிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டனர்.
- மதுரையில் கள்ளக்காதலைத் தட்டிக் கேட்ட மகனை, கள்ளக்காதலனுடன் சேர்ந்து வெட்டிக் கொலை செய்து உடலை பிரிட்ஜுக்குள் போட்டு வைத்த தாயை போலீஸார் கைது செய்தனர்.
31 - அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். திமுகவில் இணைவதாக அறிவித்தார்.
ஆகஸ்ட்
1 - துணை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சென்னை அண்ணா பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியது.
4- சென்னை துறைமுக பொறுப்புக் கழக முன்னாள் தலைவர் சுரேஷ் வீட்டில் அதிரடி சிபிஐ ரெய்டு. ரூ. இரண்டே கால் கோடி மதிப்புள்ள பணம், நகை, சொத்து ஆவணங்கள் பறிமுதல்.
5 - ஆலடி அருணா கொலை வழக்கில் எஸ்.ஏ.ராஜாவுக்கு ஆயுள் தண்டனை, 2 பேருக்கு தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து மதுரை உயர்நீதிமன்றக் கிளை தீர்ப்பு.
10- பன்றிக் காய்ச்சலுக்கு தமிழகத்தில் முதல் பலி. சென்னையைச் சேர்ந்த சிறுவன் சஞ்சய் மரணமடைந்தான்.
12 - சென்னையில் கடற்கரை- தாம்பரம் உள்ளிட்ட 3 வழித்தடங்களில் மகளிர் சிறப்பு ரயில்கள் தொடங்கி வைக்கப்பட்டன.
- தமிழகத்தில் உறுப்பு தானத்திற்கு வித்திட்ட ஹிதேந்திரனின் தாயார் புஷ்பாஞ்சலி உள்ளிட்ட 3 பேருக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டது.
13 - சென்னையில் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் கன்னடக் கவிஞர் சர்வக்னரின் சிலையை கர்நாடக முதல்வர் எதியூரப்பா திறந்து வைத்தார்.
20- தங்கபாலு மீதான சொத்துக் குவிப்பை விசாரிக்கக் கோரிய மனு தள்ளுபடி.
- நாட்டிலேயே முதல் முறையாக தசைத் திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளியை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் திறந்து வைத்தார்.
21 - ஐந்து தொகுதி சட்டசபை இடைத் தேர்தலில் திமுக கூட்டணி அனைத்திலும் வெற்றி. கம்யூனிஸ்ட் கட்சிகள் டெபாசிட் இழந்தன.
- கலர் டிவி வாங்கியதில் நடந்த ஊழல் தொடர்பான வழக்கிலிருந்து ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டது செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு.
24 - சென்னை அருகே பனையூரில் முன்னாள் கப்பல் கேப்டன் இளங்கோவனும், அவரது மனைவி ரமணியும் சினிமா பாணியில் நடந்த சம்பவத்தில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் பிடிபட்ட சண்முகராஜன் என்பவர் காவல் நிலையத்தில் மர்மமான முறையில் மரணமடைந்தார்.
26 - 2010ம் ஆண்டிலிருந்து முதல் கட்டமாக 1ம் வகுப்பு முதல் 6ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்ததப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
28 - மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மூன்றரை மணி நேரத்தில் 14 பெண்களுக்கு நடந்த மார்பக அறுவைச் சிகிச்சை சர்ச்சையை ஏற்படுத்தியது.
- உறுப்பு தானம் செய்வதாக துணை முதல்வர் மு.க.ஸ்டாலினும், அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் அறிவித்து ஆவணத்தில் கையெழுத்திட்டுக் கொடுத்தனர்.
31 - முறைகேடாக சொத்து சேர்த்தது தொடர்பாக கோவை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ராதாகிருஷ்ணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
செப்டம்பர்
1- இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து ஆடத் தடை விதிக்கக் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு.
8 - காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி தமிழகத்தில் 3 நாள் சுற்றுப்பயணத்தைத் தொடங்கினார்.
13 - திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த ஹிதேந்திரனின் இதயம் பொருத்தப்பட்ட பெங்களூர் சிறுமி அபிராமி சென்னையில் மரணம்.
15 - அண்ணா நூற்றாண்டையொட்டி கோவை குண்டுவெடிப்புக் கைதிகள் 9 பேர் விடுதலை.
- சிதம்பரம் நடராஜர் கோவிலை நிர்வகிக்க தமிழக அரசுக்கு உரி்மை உண்டு என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
16 - தென்கச்சி சுவாமிநாதன் சென்னையில் மரணமடைந்தார்.
17 - சென்னை அரசு பொது மருத்துவமனையில் முதலாவது இருதய மாற்று அறுவைச் சிகிச்சை நடைபெற்றது.
18 - தமிழக மீனவர்கள் 21 பேரை கடத்திச் சென்றது இலங்கைக் கடற்படை. முதல்வர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்தார்.
21 - சென்னை- டெல்லி இடையிலான அதிவேக எங்கும் நிற்காமல் செல்லும் ரயிலை ப.சிதம்பரம் தொடங்கி வைத்தார்.
- நளினி வேலூர் சிறையில் உண்ணாவிரதத்தில் குதித்தார்.
24 - சென்னை அசோக் நகரி்ல அனந்தலட்சுமி என்ற பெண்மணியும், அவரது மகனும் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- திருவண்ணாமலையில் பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில் வீடு தரைமட்டமானது. அதில் இருந்த 15 பேர் கொல்லப்பட்டனர்.
26 - காஞ்சிபுரத்தில் நடந்த விழாவில் முதல்வர் கருணாநிதிக்கு அண்ணா விருதினை திமுக வழங்கியது.
30 - திருவாரூரில் மத்திய பல்கலைக்கழகத்தை மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் திறந்து வைத்தார்.
- தேக்கடியில் நடந்த படகு விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 18 பேர் உயிரிழந்தனர். மொத்தம் 47 பேர் பலியானார்கள்.
அக்டோபர்
1- அரியலூர் அருகே ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முந்தைய டைனசோர் முட்டைகள் குவியல் குவியலாக கண்டுபிடிப்பு.
2 - நடிகை புவனேஸ்வரி வீட்டில் விபச்சாரம் செய்ததாக போலீஸாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
- திருச்சி அருகே திருவெறும்பூரில் பிரபல ரவுடி குரங்கு செந்தில் என்கவுண்டரில் சுட்டுக் கொலை.
4 - அதிமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக பாமக அறிவிப்பு.
6- மதுரை சோழவந்தான் ரயில் நிலையத்தில் வெடிவிபத்து. 2 பேர் பலி. பட்டாசு வெடித்ததாக போலீஸார் அறிவிப்பு.
16 - திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டில் பட்டாசுக் கடையில் பயங்கர தீவிபத்து, 32 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
- கோவையில் உலகத் தமிழ் மாநாடு ஜூன் மாதம் 24ம் தேதி தொடங்கி நான்கு நாட்களுக்கு நடைபெறும் என முதல்வர் கருணாநிதி அறிவிப்பு.
25 - முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா திமுகவிலிருந்து நீக்கப்பட்டார்.
29 - சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீல்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் முன்னாள் கமிஷனர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட நான்கு காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.
30- மதுரை முன்னாள் எம்.பி. மோகன் சென்னையில் மரணம்.
நவம்பர்
2 - வந்தவாசி தொகுதி திமுக எம்.எல்.ஏ ஜெயராமன் சென்னையில் மரணம்.
3 - முதல்வர் கருணாநிதி உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் உள்ள அகதிகள் முகாம்களில் துணை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் ஆய்வு.
8- நீலகிரி மாவட்டத்தில் 3 நாட்களாக பெய்த பேய் மழையால் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டு 30 பேர் உயிரிழந்தனர். நீலகிரி மாவட்டமே ஸ்தம்பித்துப் போனது.
9 - முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் பாஜகவிலிருந்து விலகி காங்கிரஸில் சேர்ந்தார்.
12 - அகதிகள் முகாம்களின் மேம்பாட்டுக்காக ரூ. 100 கோடி ஒதுக்கீடு. தமிழக அரசின் திட்டங்கள் அகதிகளுக்கும் நீட்டிக்கப்படுவதாக முதல்வர் அறிவிப்பு.
14 - சேலம் சென்னை இடையிலான விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.
16 - கோவில் கருவறையில் அசிங்கமாக நடந்து கொண்ட வழக்கில் தேடப்பட்டு வந்த காஞ்சிபுரம் அர்ச்சகர் தேவநாதன் கோர்ட்டில் சரணடைந்தார்.
27 - கரூர் மாவட்ட திமுக செயலாளர் வாசுகி முருகேசன் கோவை சாலை விபத்தில் மரணம்.
30 - அனைத்து மதத்தினரும் திருமணங்களை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது.
டிசம்பர்
1 - பென்னாகரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ பெரியண்ணன் மரணம்.
3 - கூவம் நதி சீரமைப்புக்காக சென்னை நதி நீர் ஆணையம் அமைக்கப்பட்டது.
- வேதாரண்யத்தில் பள்ளிக்கூட வேன் கோவில் குளத்தில் பாய்ந்ததில், ஆசிரியை மற்றும் 9 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
4 - சென்னை உயர்நீதிமன்ற மோதல் வழக்கில் 4 போலீஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
5 - சென்னையில் அருந்ததியர் இன மக்கள் நடத்திய பாராட்டு விழாவில் பேசிய முதல்வர் கருணாநிதி, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்குப் பின்னர் அரசியல், பதவிக்கு விடை கொடுத்து விடப் போகிறேன் என்று அறிவித்தார்.
9 - உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கான இணையதளம் தொடங்கி வைக்கப்பட்டது.
15 - தமிழகத்தில் மின்வாரியம் 3 ஆக பிரிக்கப்பட்டது. மின் தொடரமைப்புக் கழகத்தை முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.
- தாராபுரத்தில் காடராக்ட் அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட 9 பேருக்கு பார்வை பறிபோனது.
18 - கோவை குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 18 பேருக்கு தண்டனையை உறுதி செய்தும், 22 பேரின் தண்டனையை ரத்து செய்தும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
19 - திருச்செந்தூர், வந்தவாசி தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடந்தது.
22 - உடல் நலக்குறைவு காரணமாக அமைச்சர் கோ.சி.மணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
23 - திருச்செந்தூர், வந்தவாசி இடைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றது.
24 - தமிழகத்தில் ஆம்பூர், மடத்துக்குளம், ஆலந்தூர், சோழிங்கநல்லூர் ஆகிய புதிய தாலுகாக்கள் அமைக்கப்பட்டன.
27- பென்னாகரம் தொகுதி இடைத் தேர்தலை ஒத்திவைப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
- சென்னை ராமாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். வீட்டில் துணிகர கொள்ளைச் சம்பவம் நடந்தது.
29 - கம்பத்தில் கேரள வாகனங்களை மறிக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டார்.
30 - கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பி.டி.தினகரனின் நில ஆக்கரமிப்பு தொடர்பான சர்வே குழுவினரின் விசாரணை தொடங்கியது.
- பாஜக மாநிலத் தலைவராக பொன்.ராதாகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- பென்னாகரம் தொகுதியில் பொது வேட்பாளரை நிறுத்த கட்சிகளுடன் பேசி வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்தார்.
- எம்.ஜி.ஆர். வீட்டில் திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து திமுக எம்.எல்.ஏ. புரசை ரங்கநாதனும், அவரது மனைவியும் விடுதலை செய்யப்பட்டனர்.
- பழனி கோவில் கலசம் கழன்று விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நன்றி: Thatstamil