ஸ்ரீவை மக்களை பற்றியும் ஊர் நடப்புகளையும் தெரிந்து கொள்ளலாம்,உங்களுடைய கருத்துகளையும் பதிவு செய்யலாம்..
திங்கள், 14 செப்டம்பர், 2009
காயல்பட்டினம் ஆறாம்பள்ளியில் முழு குர் ஆன் ஓதும் நிகழ்ச்சி
காயல்பட்டினம் நகர் மன்றத் தலைவர் வாவு செய்யித் அப்துல் ரஹ்மான், வாவு சாகுல் ஹமீத், கூபா ஷெய்க் சுலைமான், பொருளாளர் எஸ்.ஏ.கே. ஷேக் தாவூத், எம்.டி. ஜெய்னுத்தீன், வாவு மொகுதஸீம், என்.டி. அஹ்மத் ஸலாஹூத்தீன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பஜர் தொழுகைக்குப்பின் முழு குர்ஆனையும் ஓதிய முஹம்மத் நூஹ் துஆ ஓதினார்.
பின்னர் அவர் அரபி பைத் பாடி நகர்வலமாக இல்லம் அழைத்துச் செல்லப்பட்டார்.
இதேபோல ஒரே இரவில் முழு குர்ஆன் ஓதி தமாம் செய்தல் கடந்த 1974-ல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
சனி, 12 செப்டம்பர், 2009
துபாய் சர்வதேச குர்ஆன் கிராஅத் போட்டியில் இந்திய மாணவருக்கு முதல் பரிசு
துபாய்: பதிமூன்றாவது சர்வதேச புனித குர்ஆன் கிராஅத் போட்டியில் இந்திய மாணவர் முதலிடம் பிடித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள ராசல்கைமாவில் அல்ஜவ்தா செகண்டரி ஸ்கூலில் 12ம் வகுப்பு பயிலும் ஹைதராபாத்தைச் சேர்ந்த மாணவர் இப்ராஹீம் ஹாபிழ் அஹ்மது, 84 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்களை முந்தி முதலிடம் பெற்றுள்ளார்.
இவர் கேரள மாநிலம் கோழிக்கோட்டிலுள்ள காரந்தூர் மர்க்கஸ் ஹிப்ழுல் குர்ஆன் கல்லூரியிலிருந்து முழு குர்ஆனையும் மனப்பாடமாக்கி ஹாபிழ் பட்டம் பெற்றவர் ஆவார்.
அவருக்கு முதல் பரிசாக 2.5 லட்சம் திர்ஹம் வழங்கப்பட்டது. துபாய் புனித குர்ஆன் கிராஅத் போட்டியில் இந்தியர் ஒருவர் முதலிடம் பெறுவது இதுவே முதல்முறையாகும்.
இந்தப் பரிசை ஷேஹ் ஹம்தான் பின் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் வழங்கினார்.
இப்ராஹீமின் தந்தை ராசல்கைமா அஹ்மத் பின் ஃபவ்ல் மஸ்ஜிதில் 20 வருடமாக இமாமாக வேலைபார்த்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளாக துபாய் புனித குர்ஆன் மனனப்போட்டியில் இந்தியாவின் சார்பாக பங்குக்கொள்வது கோழிக்கோடு மர்க்கஸைச் சார்ந்த மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
திங்கள், 7 செப்டம்பர், 2009
நான் தான் “திருக்குர்ஆன்” பேசுகிறேன் !

( ஆக்கம்- மெளலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி )
என் இனிய இஸ்லாமிய சொந்தங்களே, உங்கள் மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் என்றென்றும் நிலவிட வேண்டுமென்பது தான் எனது ஆவல்! அதற்காகத்தான் நானும் உங்களுக்காக இறைவனிடமிருந்து இறக்கி அருளப்பட்டிருக்கிறேன். நான் சுவர்க்கத்தின் லவ்ஹூல் மஹ்பூல் என்னும் ஏட்டில் வசித்து வருபவன். இவ்வுலகில் நான் முதன் முதலில் ஆரத்தழுவி கட்டி அணைத்து முத்தமிட்டது நமதருமை நாயகம் (ஸல்) அவர்களைத்தான்! மனிதர்கள் எல்லோருமே என்னைத்தான் முத்தமிடுவீர்கள். ஆனால் நானோ எம்பெருமானாரை முத்தமிட்டவன்.
என்னை சுமப்பதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பட்ட ஆரம்ப கட்ட சிரமத்தை நானும் எனது இறைவனுமே நன்கு அறிவோம். அதனை சாதாரண மனிதர்களாகிய நீங்கள் உணர்ந்து கொள்ள மாட்டீர்கள்!. இத்தனை நெருக்கடிக்குள்ளும் என்னை சுமந்து எனது பெருமைகளை உணர்ந்து எனது சகவாசம் உலகம் அழியும் வரைக்கும் வாழக்கூடிய தனது உம்மத்தினர் அனைவருக்கும் வேண்டும் என்பதற்காகத்தான் ஆரம்பத்தில் என்னை மாட்டுத் தோலிலும், மரக்கட்டைகளிலும் பதிய வைத்து என்னை ஓர் பொக்கிஷமாக உங்களிடம் ஒப்படைத்துள்ளார்கள் நாயகம் (ஸல்) அவர்கள். ஆனால் நீங்களோ, எனது சகவாசத்தை விரும்பாமல் ஷைத்தானின் சகவாசத்தை விரும்பக்கூடியவர்களாக மாறி விட்டீர்கள். “கூடா நட்பு கேடாய் முடியும்” என்ற பழமொழி மறந்து விட்டதோ?.
என்னை மறக்க ஆரம்பித்ததும் எவ்வளவு இழிவுகளையும் சோதனைகளையும் சந்தித்து வருகிறீர்கள். எனது சிறப்பைப் பற்றி ஒரே வரியில் சொல்வதென்றால் ”ஹுதன்லில் முத்தக்கீன்” இறையச்சமுடையவர்களுக்கு நேர்வழி காட்டக்கூடியவனாயிருக்கிறேன். யார் என்னை நம்பி பின்பற்றினாலும் நிச்சயம் நான் அவர்களை ஈருலகிலும் நல்லோர்களாய் வாழச் செய்வேன் என்பதை அளவு கடந்த உறுதியுடன் என்னால் கூற முடியும்.
இன்று யார் யாருக்கோ பின்னால் போய்க்கொண்டிருக்கும் மனிதர்களே!. அவர்களெல்லாம் நாளை மறுமையில் உங்களுக்கு துணை நிற்பவர்கள் என நினைத்தால் ஏமாந்து தான் போவீர்கள். ஒரு காலத்தில் வீடு தோறும் புனிதமானவனாக மதிக்கப்பட்டு உயர்ந்த ரக ஆடைகளை கொண்டு என்னை மூடி வீட்டின் உயர்வான இடத்தில் எனக்கென்று தனியொரு இடம் அமைத்து அதில் வைத்து அழகு பார்த்த நீங்கள் இன்று உங்கள் வீட்டு குழந்தைகளின் பள்ளிக்கூட புத்தகங்களோடும், அறுவருக்கத்தக்க புகைப்படங்களை சுமந்து வரும் நாலாந்தர புத்தகங்களோடும், மார்க்கத்தின் பெயரால் மனிதர்கள் தம் மனம் போன போக்கில் கண்டதையும் எழுதிவரும் மற்ற நூல்களுடனும் சேர்த்தே என்னையும் வைத்து விட்டீர்களே!. இது நியாயமா?
டி.வி. என்ற இப்லீஸின் நாசகார கவர்ச்சி பெட்டிகள் வருவதற்கு முன்பெல்லாம் வீடுதோறும் குடும்ப பெண்கள் அதிகாலையே எழுந்து சுபுஹு தொழுகையை முடித்து விட்டு என்னை கரத்தில் ஏந்தி கம கமக்கும் சந்தன ஊதுபத்தியின் புகையில் எனது வசனங்களை ஓதும் போது வெளியாகும் அந்த இனிமையான ஓசை தென்றல் காற்றோடு கலக்கும் ரம்மியம் தானே, அன்றைய மக்களின் சங்கீதமாய் இருந்தது. ஆனால் இன்றோ நள்ளிரவு வரை டி.வி.யில் தொடர்களை பார்த்து விட்டு உறங்குவதால் பள்ளியில் கூறப்படும் அதிகாலை பாங்கின் ஓசைக்கு எதிர் ஓசையாய் உனது குறட்டை சத்தம் வெளியாவது இறைவனின் கோபத்திற்குரியதல்லவா?.
ஓ….. ஜெய்னம்பு பீவியே … படைத்தவனையே மறந்து விட்ட நீ என்னையா கையில் எடுத்து ஓதி விடப் போகிறாய் ?
எனதருமை தெரியாத மனிதர்களே! என்னைப்பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதை கேளுங்கள்;- “திருக்குர்ஆனிலிருந்து சிறிதளவு கூட தம் உள்ளத்தில் மனனம் இல்லாதவர் பாழடைந்த வீடு போன்றவர் ஆவார்.”
(அறிவிப்பாளர்: ஹழ்ரத் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி), நூல்: திர்மிதி)
பார்த்தாயா? நான் இல்லாத இதயம் பாழடைந்த வீட்டைப் போன்றதாகி விடுகிறது.
என்னைப் பார்த்தால் அதற்கு ஒரு கூலி, ஓதினால், பிறர் ஓத கேட்டால், மனனம் செய்தால் என ஒவ்வொன்றுக்கும் தனித்தனி அந்தஸ்தில் இறைவனின் நற்கூலிகள் உங்களுக்கு கிடைக்கும் என்பதை மறந்து விட்டீர்களா?. வருடம் முழுவதும் என்னை நினைத்து வாழ்ந்த நீங்கள், இன்றோ வருடத்தில் ஒரு மாதம் ரமலானில் மட்டுமே நினைக்ககூடிய பச்சோந்திகளாய் மாறி விட்டீர்கள்.
ஒவ்வொரு நாளும் குளித்து சீவி சிங்காரித்து சுத்தம் செய்து கொள்ளும் நன்றி கெட்ட மனிதனே! என்னை மட்டும் உன் வீட்டு பரணி மேல் தூசியடைய வைத்து விட்டு ரமலான் வரும் போது மட்டும் சுத்தம் செய்து கையிலெடுப்பது ஓரவஞ்சனையில்லையா?. உன் போன்ற சந்தர்ப்பவாத வேடதாரிகளை நாளை மறுமையில் எனது இறைவனுக்கு முன்பாக தோலுரித்துக் காட்டுவேன் என்பதை நினைவில் வைத்துக் கொள்!.
ஒரு நேரத்தில் (ஒளு) சுத்தமில்லாமல் என் அருகில் வருவதற்கே பயந்து நடுங்கிய மனிதன் இன்று குளிப்பு கடமையான நிலையிலும் கூட என்னை சர்வ சாதாரணமாக தொடுவதற்கு துணிந்து விட்ட கன்றாவியை கண்டு சகித்துக் கொள்ள முடியவில்லை. ”லாய மஸ்ஸுஹு இல்லல் முதஹ்ஹரூன்” ( தூயவர்களைத் தவிர மற்றெவரும் அதை தொட மாட்டார்கள் ) என்ற இறை வசனத்தை அவமரியாதை செய்கின்ற பாவத்தை எந்தப் பாவிப்பயல் வழிகாட்டி கொடுத்தானோ?. அவன் ஈருலகிலும் நாசமடைவது திண்ணம்!.
தமிழக முஸ்லிம்களாகிய நீங்கள் தான் என் சிறப்பை உணராமல் என்னை உதாசீனப்படுத்தி வருகிறீர்கள். ஆனால் ஒரு வகையில் மலேசியா நாட்டு முஸ்லிம்களை நினைத்து நான் பெருமிதம் கொள்கிறேன். ஆமாம் அவர்கள்தான் ஆண், பெண் என்ற பாகுபாடில்லாமல் என்னை தலையில் வைத்து கொண்டாடி வருகிறார்கள். மலேசியாவின் கோலா கங்ஸார் என்ற ஊரில் நடக்கின்ற திருமணங்களின் போது திருமணத்திற்கு முதல் நாள் இரவு ஒரு நிகழ்ச்சி நடக்கும்.
பெண் வீட்டில் மணமகன் வீட்டார் உட்பட உறவினர் அனைவரும் கூடி இருப்பார்கள். அச்சம், மடம், நாணம் என்று அந்த காலத்தில் சொல்வார்களே, அத்தனையும் ஒருங்கே பொதிந்த நிலையில் மணப்பெண் வந்து சபையில் அமர்வாள். பிறகு அவளுக்கு முன்பாக வைக்கப்பட்டிருக்கும் திருக்குர்ஆனாகிய என்னை புரட்டி தஜ்வீத் என்ற விதி முறைப்படி எனது வசனங்களை அட்சரம் பிசகாமல் ஓதி முடிப்பாள். பின்னர் எல்லோருக்கும் இனிப்பு வழங்குவார்கள். அதை விட ஓதப்பட்ட தித்திக்கும் எனது வசனத்தை கேட்ட மன நிறைவோடு வந்தவர்கள் வீடு திரும்புவார்கள்.
மணமகளுடைய அழகைவிட, கற்ற அறிவைவிட, பெற்றிருக்கும் செல்வத்தைவிட எனது வசனங்களை பிழையின்றி ஓதுவதில் தான் மணப்பெண்ணின் சிறப்பு இருக்கிறது என்று மலேசியா முஸ்லிம்கள் கருதுகிறார்கள். திருக்குர்ஆனை ஓதுவதில் தான் அந்த எதிர்காலத்தாய், குலவிளக்கு, குடும்பத் தலைவியின் பூரணத்துவம் இருக்கிறது என மலாய் மக்கள் முழு நம்பிக்கையுடன் வாழ்கிறார்கள்.
எனதருமை தமிழ் முஸ்லிம் சமுதாயமே, பார்த்தாயா? மலாய் முஸ்லிம்களும் நானும் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறோமென்று!. பெண் பார்க்கும் படலத்தில் கூட அங்கு என்னைத் தான் முன்னிலைப்படுத்துகிறது மலாய் முஸ்லிம் சமுதாயம். அந்நாட்டில் தான் என்னை ஓதுவதை பெண்களுக்கு ஒரு முக்கியமான அம்சமாக ஆக்கி வைத்திருக்கிறார்கள். அங்கு வாழும் தாய்க்குலத்தினரின் முணுமுணுப்பும், குழந்தைகளின் தாலாட்டும் கூட எனது வசனங்களாக இருப்பதினாலேயே அகில உலக கிராஅத் போட்டியில்கூட மலாய் மக்கள் அரபுகளை விட சிறப்பாக ஓதி உயர்வான பரிசுகளை பெற்று விடுகிறார்கள்.
ஆனால் நீயோ சினிமா பாடல்களை பாடி உன் குழந்தைகளை தூங்க வைக்கிறாய்!. உன் பிள்ளை கண் விழித்து பாடுவதும் சினிமா பாடல் களாகவே ஆகிவிட்டது. உனது முணுமுணுப்பிலும் கூட சினிமா, டி.வி. தொடர் பற்றியேத் தான் போய்க்கொண்டிருக்கிறது. அதனால் தான் உனது வாழ்க்கையும் ஒரு டிராமா போல் முடிந்து விடுகிறது!. எல்லாம் அந்த இப்லீஸ் படுத்தும் பாடுதான்!.
இவ்வருட ரமலான் வரைக்கும் நான் உங்களது போலித்தனமான பக்திக்குரிய செல்லப் பிள்ளையாக் இருப்பேன். பின்னர் வழக்கம் போல பரணி மீது படுத்துவிடுவேன். அடுத்த வருட நோன்புவரை!. அறிவுள்ளவர்களுக்கு மட்டும் உறுதியாக ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். யார் என்னை தங்களது நெஞ்சத்தில் வைத்து பாதுகாக்கிறார்களோ? அவர்களின் மரணத்திற்குப்பின் மண்ணறை வாழ்க்கையின் போது வேதனையை விட்டும் கொடிய விஷமுள்ள பாம்பு, தேள் போன்ற ஜந்துகளின் தீங்குகளை விட்டும் அவர்களை நான் பாதுகாப்பேன். நாளை மறுமையிலும் இறைவனிடம் பரிந்துரை செய்வேன்.
என்னை சுமந்து வாழும் இதயங்கள் மட்டுமே ஈருலகிலும் ஒளிமயமாக இருக்கும். என்னைப் பற்றி இவ்வளவு கூறிய பிறகும் தினந்தோறும் நீ என்னை உன் இதயத்தில் சுமக்க மறுத்தால் நஷ்டம் எனக்கல்ல, உனக்குத்தான் என்பதை நினைவில் வைத்துக்கொள்!.
( வஸ்ஸலாம்!)
வாசகர்கள் விமர்சனங்களை sjaroosi@yahoo.com என்ற மின்னஞ்சல் அல்லது 050- 7959960 என்ற கைபேசிக்கோ தெரிவிக்கலாம்!
வியாழன், 27 ஆகஸ்ட், 2009
துபாயில் இன்று 13வது திருக்குர்ஆன் மாநாடு
துபாய் செம்பி இன்டர்நேஷனல் குரூப்பின் கே.எஸ்.எம். முஹம்மது யாசின் தலைமை வகிக்கிறார். சங்கீதா உணவக பங்குதாரர் முஹிப்புல் உலமா ஏ. முஹம்மது மஃரூப் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.
200 வார தஃப்ஸீர் டிவிடியினை ஈடிஏ அஸ்கான் நிதித்துறை இயக்குநர் பி.எஸ்.ஏ. ஆரிஃப் ரஹ்மான் வெளியிட முதல் பிரதியினை ஈடிஏ அஸ்கான் இயக்குநர் செய்யது எம். ஹமீது ஸலாஹுத்தீன் பெற்றுக் கொள்கிறார்.
வேலூர் நாடாளுமன்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான், அரேபியா டாக்ஸி இயக்குநர் பி.எஸ்.எம். ஹபீபுல்லாஹ், பாபநாசம் ஆர்.டி.பி. கல்லூரி அரபித்துறை பேராசிரியர் கவிஞர் எம். ஷரபுத்தீன் ஆலிம் மிஸ்பாஹி, தமுமுகவின் தலைமைக் கழகப் பேச்சாளர் கோவை ஜாஹீர் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.
மவ்லவி ஏ. முஹம்மது இஸ்மாயில் ஹஸனி, ஆவூர் தாருஸ்ஸலாம் அரபிக் கல்லூரி முதல்வர் மவ்லானா அப்துஷ் ஷுக்கூர் ஆலிம் மன்பயீ உள்ளிட்டோ ஏற்புரை நிகழ்த்துகின்றனர்.
தேரிழந்தூர் தாஜுத்தீன், அடமங்குடி அப்துல் ரஹ்மான் ஆகியோர் இஸ்லாமிய கீதம் பாடுவர். வின்னர் குரூப் நிர்வாக இயக்குநர் டி.ஏ. அப்துல் கபூர் காகா நன்றியுரை நிகழ்த்துகிறார்.
மேலும் விபரங்களுக்கு: 050 - 4255 256
செவ்வாய், 25 ஆகஸ்ட், 2009
ரமளானும் அல்குர்ஆனும்
http://www.mudukulathur.com/religiondetails.asp?id=149
நோன்பும் குர்ஆனும்
சங்கை மிகுந்த ரமளான் மாதம் நம்மிடையே வருகை புரிந்துள்ளது. குறைந்த காலத்தில் குறைந்த செயலின் மூலம் அதிகமான நன்மை களை நமக்கு பெற்றுத்தரும் மாதமாகும் இது. இம்மாதம் குறித்து அல்லாஹு தஆலா, “ரமளான் மாதம் எத்தகையது என்றால் அதில் தான் மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும் நேர்வழியிலிருந்தும் சத்தியத்தையும் அசத்தியத்தை யும் பிறித்தறிவிக்க கூடியதிலிருந்தும் தெளிவான விளக்கமாகவும் உள்ள குர்ஆன் இறக்கியருளப்பட்டது.”
அல்குர்ஆன் (2:185) என்று கூறுகிறான். அவ்வாறு ரமளானில் அருளப் பட்ட குர்ஆனைக் குறித்து அண்ணலார் (ஸல்) அவர்கள் குறிப்பிடும் பொழுது “நீங்கள் அல்லாஹ்விடம் திரும்பிச் செல்வதற்கும் அவனிடம் நெருங்குவதற்கும் உதவியாக அவனிடமிருந்து வந்த குர்ஆன் ஷரீ பைத் தவிர வேறு சிறந்த பொருளை பெற்றுக் கொள்ள முடியாது” என்று கூறியுள்ளார்கள்.அறிவிப்பாளர்கள் : ஹள்ரத் அபூதர் (ரளி) நூல் : ஹாகிம்
அல்லாஹ்வின் நெருக்கத்தை பெற்றுத்தரும் அற்புத வேதமான குர்ஆன் ஷரீபை அல்லாஹுதஆலா குர்ஆனின் அதிகமான வசனங் களை ரமளான் மாதத்தில் தான் இறக்கி வைத்துள்ளான். நோன்பை நமக்கு கடமையாக்க விரும்பிய அல்லாஹுதஆலா குர்ஆன் இறக்கி அருளப்பட்ட ரமளான் மாதத்தை நோன்பு மாதமாக தேர்ந்தெடுத்தான்.
குர்ஆனில் கூறப்பட்ட பெரும்பாலான விஷயங்களை மனிதன் உடனடி யாக செயல்படுத்தும் முகமாக குர்ஆன் அருளப்பட்ட ரமளான் மாதத்தையே நோன்பை நோற்க கடமையாக்கி இரவில் நின்று வணங்குவதையும் வலியுறுத்தினான். நோன்பு வைப்பதின் காரணமாக மற்ற மாதங்களில் தொழுகை மற்றும் இன்ன பிற விஷயங்களில் கவனக் குறைவாக இருக்கும் முஃமின்கள் ரமளான் மாதத்தில் தொழுகை மற்றும் தான தர்மங்கள் செய்வது என்ற நிலையில் முஃமின்கள் ஈடுபடுகின்றனர். குர்ஆன் கூறும் தொழுகை, தான தர்மங்கள், நற்செயல்கள் ஆகியவற்றை உடனடியாக அமல் செய்யும் விதமாக ரமளான் மாதம் அமைகிறது.
அனைத்தும் உள்ளடக்கிய அல்குர்ஆன் குர்ஆன் அருளப்பட்ட இந்த ரமளான் மாதத்தில் குர்ஆனைப்பற்றி சில விஷயங்களை நாம் நினைவு கூர்வோம். குர்ஆனில் அல்லாஹ் இம்மை, மறுமை மற்றும் அனைத்து விஷயங்களையும் கூறியுள்ளான். குர்ஆனில் அல்லாஹ் கூறாத விஷயங்களே இல்லை. இருப்பினும் அண்ணலார் (ஸல்) அவர்கள் குர்ஆனில் பொதிந்துள்ள விஷயங்களை ஐந்து அம்சங்களில் உள்ளடக்கி கூறுகிறார்கள்.
“புனித குர்ஆனில் ஐந்து விஷயங்கள் உள்ளன.
1. ஹலால் (ஆகுமாக்கப்பட்ட விஷயங்கள்)
2. ஹராம் (விலக்கப்பட்ட விஷயங்கள்
3. முஹ்கம் (தெளிவான மொழிநடை கொண்ட வசனங்கள்)
4. முதஷா பிஹாத் (மறைவான விஷயங்களான சுவனம், நரகம் அர்ஷ் போன்ற விஷயங்களை கூறும் வசனங்கள்
5. உதாரணங்கள் கூறும் வசனங்கள்.
இவ்வாறு குர்ஆனில் ஹலால் என்று கூறப்பட்டுள்ள விஷயங்களை ஹலால் என்று கருதுங்கள். ஹராமை ஹராமாக கருதுங்கள். கொள்கைகள் கோட்பாடுகள் சட்டங்கள் ஆகியவற்றை கூறும் முஹ்கம் வசனங்கள் படி செயல்படுங்கள். மறைவான விஷயங்களை சுவர்க்கம், நரகம், அர்ஷ் ஆகியவற்றை விபரிக்கும் முதஷாபிஹான வசனங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். அதனை துருவி ஆராய முற்படாதீர்கள். முந்தைய சமுதாயங்கள் அழிந்து மடிந்தது பற்றிய படிப்பினை தரும் சம்பவங்களில் மூலம் படிப்பினை பெறுங்கள். அறிவிப்பாளர்: ஹள்ரத் அபூஹூரைரா (ரளி) நூல்: மிஷ்காத்
குர்ஆன் முழுவதிலும் அல்லாஹ் கூறியுள்ள விஷயங்களை அண்ணலார் (ஸல்) அவர்கள் ஐந்து அம்சங்களில் பொதிய வைத்து கூறிவிட்டார்கள். குர்ஆனில் வழிகாட்டுதல் படி வாழ்வது என்பது சிரமத்திற்குரிய விஷயமல்ல. விளங்க முடியாத வேதாந்தத்தையோ புரிய முடியாத தத்துவத்தை குர்ஆன் கூறிவிடவில்லை. மிக எளிதாக பாமரர்களும் புரிந்து கொள்ளும் விதமாக இலகுவான வழிகாட்டுதல் களைத்தான் குர்ஆன் முன் வைக்கிறது
உதாரணமாக மனித வாழ்க்கையின் நோக்கமென்ன? என்ற வினாவை முன் வைத்தால் இன்று அறிஞர்கள், யோகிகள் தவத்திரு என்று கூறிக்கொள்பவர்கள் விளக்கம் சொல்ல ஆரம்பித்தார்கள் என்றால் ஜீவன், முக்தி, ஆன்மா என்றெல்லாம் கூறி நம்மை குழப்பி விடுவார்கள்.
ஆனால் குர்ஆன் மிகமிக இலகுவாக அனைவரும் புரிந்து கொள்ளும் விதமாக விடை பகர்கிறது. மனித வாழ்வின் நோக்க மென்ன? தெரியுமா? “மனித இனம் இறைவனை வழிபட்டு வாழ வேண்டும் என்பதற்காகவே படைக்கப்பட்டுள்ளான்” என ஒற்றை வரியில் திருக்குர்ஆன் (51:56) பதில் பகர்கிறது. குர்ஆனின் கருத்துக் களும் வழிகாட்டலும் இலகுவானது என்பதை அல்லாஹ்வே தனது குர்ஆனில் தெளிவுபடுத்துகிறான். :இந்த குர்ஆனை அறிவுரை பெறு வதற்காக திட்டமாக நாம் எளிதாக்கி வைத்துள்ளோம். எனவே அறிவுரை பெறுகிறவர் எவரேனும் உண்டா? (54:32) என்று அல்லாஹ் கேட்கிறான்.
பழங்கதை புத்தகமல்ல
திருக்குர்ஆனை ”வேதம்” என்றதும் அது பூர்வீகமான நூல் என்றதும் அதில் பழங்கதைகள் புராண இதிகாசங்கள் நிறைந்திருக்கும் என்று நாம் எண்ணி விடக்கூடாது. முற்காலம், தற்காலம் இனிவரும் காலம் ஏன் உலக அழியும் காலம் வரை உண்டான அனைத்து விஷயங்களை யும் அல்குர்ஆனில் காணலாம். அறிவியல் அற்புதங்களையும் குர் ஆனின் மூலமாக காணமுடியும். உதாரணத்துக்கு திருகுர்ஆன் கூறும் சில விஞ்ஞான சங்கதிகளை காணலாம். சில ஆண்டுகளுக்கு முன்னர் பூகோள வல்லுநர்கள் வானவியல் சம்பந்தமாக சில கருத்த்துக்களை குறிப்பிட்டனர். அதாவது “இந்த பிரபஞ்சம் நிபுலா என்ற பேரண்டத்தில் சேர்ந்திருந்தது. பின்பு அதிலிருந்து பிரிக்கப்பட்டது. அதன் பின்பு தான் பால்வெளி உருவாயின” என்று கூறினர்.
இந்த விஷயத்தை அல்லாஹு தஆலா சுமார் 1400 வருடங்களுக்கு முன்பே திருகுர்ஆனில் பதிவு செய்து வைத்துள்ளான். “நபியின் கூற்றை நிராகரிப்பவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? வானங்கள் பூமி அனைத்தும் ஒன்றோடொன்று சேர்ந்திருந்தன. பிறகு நாம் அவற்றை தனித்தனியாக பிளந்தோம். -அல்குர்ஆன் (21:30)
தாவர வர்கத்திலும் ஜோடிகள் உண்டு
தாவர இனத்தைச் சார்ந்த பூக்கள், செடிகள், கனிகள் அனைத்திலும் ஆண்,பெண் என்ற இருபாலும் உண்டு. தாவரவியல் வல்லுநர்கள் இது குறித்து கூறும் பொழுது பூக்களில் “ஸ்டோமென்” (STOMEN) என்ற ஆண் இன அம்சமும், “ஓவன்ஸ்” (OVENS) என்ற பெண் இன அம்சமும் உண்டு. இவற்றிலிருந்து தான் கனிகள் உற்பத்தி ஆகின்றன என்று கூறு கின்றனர். அல்லாஹுதஆலா சுமார் 1400 வருடங்களுக்கு முன்பே இது குறித்து குர்ஆனில் பதிவு செய்து வைத்திருக்கிறான். “ஒவ்வொரு கனி வகை தாவரங்களின் ஜோடிகளையும் அல்லாஹ் படைத்துள்ளான்.” – அல்குர்ஆன் (13:3) என்று குர்ஆனில் கூறுகிறான்.
ஆணிகளாக சிகரங்கள்
பூமியின் அமைப்பு குறித்து பூமி ஆய்வாளர்கள் கூறும்போது பூமியின் தூரம் 3750 மைல்களாகும். நாம் வாழும் பூமிப்பகுதி சுமார் 30 மைல்கள் வரையிலான பகுதி மெலிதான இலகுவான பகுதிகளாகும். மெலிதான பகுதி என்பதால் அதிர்வுகள் ஏற்பட சாத்தியக்கூறுகள் உண்டு. எனவே அதிர்வுகளும் பூமி அசைவுகளும் ஏற்படாவண்ணம் மலைகள் தாங்கிப் பிடிக்கின்றன. அதாவது பூமியில் அடிக்கப்பட்ட ஆணிகள் போன்று மலைகள் பூமியின் அசைவை தடுக்கும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளன. இது நில ஆய்வாளர்களின் கூற்றாகும். ஆனால் அல்லாஹுதஆலா சுமார் 1400 வருடங்களுக்கு முன்பே இது குறித்து குர்ஆனில் கூறி உள்ளான். “நாம் பூமியை விரிப்பாக்கவில்லையா? மேலும் மலைகளை, முளைகளாக ஊன்றி வைக்கவில்லையா? -அல்குர்ஆன் (78:6, 21:31)
இனிக்கும் கடல்நீர்
உலகில் பெரும்பாலான பகுதிகள் கடல்நீரால் சூழப்பட்டுள்ளது. அந்த கடலிலும் அல்லாஹு தஆலா பல அற்புதங்களை ஏற்படுத்தியுள்ள தாக குர்ஆனில் கூறியுள்ளான். கடலில் மத்திய தரைக்கடலும் அட்லாண்டிக் கடலும் “ஜிப்ரால்டர்” என்ற பகுதியில் இணைகின்றன. மத்திய தரைக்கடல் சங்கமிக்கும் இந்த இடத்தில் அதன் நீரின் தன்மை மற்றும் சுவை மாறுபடுவதாக கடல் ஆராய்ச்சியாளர்கள் கூறிகிறார்கள். இவ்வாறு இருகடல்கள் சங்கமிக்கும் இடத்தில் கண்ணுக்கு புலப்படாத தடுப்பு போன்ற அமைப்பு இருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
அந்த தடுப்பை சைக்னாக் லைன் (PYCNOCLINE) பகுதி என்று கடல் ஆய்வாளர்கள் பெயரிட்டு அழைக்கிறார்கள். இவர்கள் தெரிவிக்கக் கூடிய இந்த விஷயத்தை அல்லாஹு தஆலா சுமார் 14 நூற்றாண்டு களுக்கு முன்பே குர்ஆனில் பதிவு செய்து வைத்துள்ளான். ”அல்லாஹ் எத்தகையவன் என்றால் இரு கடல்களையும் ஒன்றாக கலந்திடச் செய்துள்ளான். இது இனிமையானது. மதுரம் மிக்கது. மற்றொன்று உப்பும் கசப்பும் நிறைந்தது. (இரண்டும் ஒன்றோடொன்று கலந்திடாத வண்ணம்) இரண்டுக்குமிடையே மீற முடியாத ஒரு தடுப்பையும் ஏற்படுத்தி உள்ளான்.” -அல்குர்ஆன் (25:53)
திருகுர்ஆனில் புதைந்துள்ள அறிவியல் கண்டுபிடிப்புகள் குறித்த ஒரு நூலில் ஒரு அற்புத நிகழ்வை குறிப்பிட்டுள்ளார்கள். மத்திய தரைக்கடல் பகுதியில் “கப்தான் லாக் குஸ்ஸோ” என்ற பிரஞ்சு ஆராய்ச்சியாளர் கடலில் மூழ்கி ஆய்வு நிகழ்த்திக் கொண்டிருந்த போது திடீரென்று அவரின் முகத்தில் மாட்டியிருந்த முகமூடி சற்று விலகுகிறது. அப்போது கடல்நீர் சிறிதளவு அவரின் வாயினுள் சென்று விடுகிறது. கடல் நீரை சுவைத்த அவருக்கு பெரும் ஆச்சர்யம். காரணம் வாயினுள் புகுந்த நீர் உப்பு கரிக்காமல் இனித்தது. “இது என்ன வியப்பாக இருக்கிறது. கடல்நீர் இனிக்கிறதே ! என்று நினைத்து சற்று தள்ளி இன்னொரு இடத்தில் நீரை சுவைத்துப் பார்த்தார்.
ஆனால் அந்த நீர் உப்பு கரிப்பாக இருந்தது. பெரும் வியப்படைந்த “கப்தான்” அவர்கள் கடலில் மேலும் பல இடங்களில் ஆராய்ந்து பார்த்தார். பெரும்பாலான இடங்களில் கடல்நீர் உப்பு கரிப்பாக இருந்தாலும் சில இடங்களில் நீர் தித்திப்பாக இருந்தது. இருவகையான நீரும் கலந்தே கடலில் இருந்தாலும் இரண்டுக்கும் மத்தியில் ஒரு ”வகையான” தடுப்பு இருப்பதைப் போன்று உணர்ந்தார். தனது ஆராய்ச்சியை முடித்துக் கொண்டு வெளியில் வந்த கப்தான் இதைப் பற்றி யாரிடமாவது விசாரிக்க வேண்டும் என நினைத்தார். அப்போது தான் அவருக்கு பிரஞ்சு ஆய்வாளர் டாக்டர் மாரீஸ் புகைல் அவர்களின் நினைவு வந்தது. ( இந்த மாரிஸ் புகைல் என்பவர் உலகப் பிரசித்தி பெற்ற “பைபிலும் குர்ஆனும் விஞ்ஞானமும்” என்ற நூலை எழுதியவர் ) அவரிடம் தனது கண்டுபிடிப்பை ஆச்சர்யத்தோடு விபரித்தார். அப்போது அவர் “நான் சர்வசமய நூல்களையும் படித்து அதன் கருத்துக்களை ஆராய்ந்து வருபவன் என்ற முறையில் சொல்கிறேன். நீங்கள் சொல்கிற இந்த விஷயம் முஸ்லிம் சமய வேதமான அல்குர்ஆனில் (25:53, 35:12, 55:19,20) ஆகிய வசனங்களில் தெளிவான முறையில் சொல்லப்பட்டிருக்கிறது. தாங்கள் சொல்வதைப் பார்க்கும் போது 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே திருகுர்ஆனில் இவ் விஷயம் பதியப்பட்டுள்ளது என நினைக்கும்போது பெரும் வியப்பாக உள்ளது” என பதில் பகர்ந்தார். சுப்ஹானல்லாஹ் ! குர்ஆனின் அறிவியல் விஷயங்களால் எண்ணிப்பார்க்கும் போது கடலை விட ஆழமான கருத்துக்கள், அறிவியல் விஷயங்கள் குர் ஆன் தன்னிடம் புதைத்து வைத்துள்ளது. என்று உறுதியிட்டு கூறமுடியும். குர்ஆன் எனும் இந்த ஆழ்கடலில் மூழ்கி அதன் அரிய கருத்துக்கள் எனும் முத்தை எடுக்க இந்த ரமளான் மாதத்தை விட சிறப்பான மாதம் வேறென்ன இருக்க முடியும்
தேன்,தேனீ, திருகுர்ஆன்
மனிதகுலத்துக்கு அல்லாஹ் வழங்கியுள்ள அற்புத நோய் நிவாரணி தேன் என்பதில் இருகருத்து இருக்க முடியாது. அண்ணலார் (ஸல்) அவர்கள் தனது மருத்துவ வழிகாட்டுதலில் (திப்பநபவி) அதிகமான இடங்களில் தேனைப்பற்றி குறிப்பிட்டுள்ளார்கள். மருத்துவத்துறைகள் ஒப்பற்ற இடத்தை பிடித்துள்ள இந்த தேனை உருவாக்கும் தேனியைப் பற்றியும் ஆய்வாளர்கள் ஆய்ந்து வந்துள்ளார்கள். அவர்களில் “வான் பிரிஸ்க்” என்ற ஆய்வாளர். தேனீ பற்றி குறிப்பிடும் போது மலரி லிருந்து தேனீ அதன் சாற்றை உறிஞ்சி அதனை உற்பத்தி செய்கிறது. இவ்வாறு தேனீ சாறு கிடைக்கக்கூடிய மலர்களை கண்டால் உடனே அது திரும்பிச் சென்று மற்ற தேனீக்களுக்கும் குறிப்பிட்ட மலர்களை யும் அது இருக்கும் பகுதிகளையும் தெளிவான முறையில் விபரிப் பதாக குறிப்பிடுகிறார்.
இவ்வாறு அறிவிப்புச் செய்யும் தேனீயும் தேனை சேகரிக்க செல்லும் தேனீக்களும் அனைத்தும் பெண் தேனீக்கள் தான் என்றும் தன் ஆய்வில் குறிப்பிடுகிறார். இந்த விஷயங்களை அல்லாஹு தஆலா தனது குர்ஆனில் தெளிவான முறையில் குறிப் பிடுகிறான்.
“உம்முடைய இறைவன் தேனீக்கு “மலைகளிலிருந்தும் மரங்களி லிருந்தும் ( மனிதர்களாகிய) அவர்கள் கட்டுகின்ற (தேன்கூடு முதலிய) வற்றிலிருந்தும் வீடுகளை நீ அமைத்துக்கொள்?” என்ற உள்ளுணர்வை ஏற்படுத்தினான். பிறகு எல்லாக்கனி மலர் வகைகளிலிருந்தும் நீ உணவருந்தி உன்னுடைய இறைவனின் எளிதான வழிகளில் நீ புகுந்து செல்வாயாக ! என்றும் உள்ளுணர்வை ஏற்படுத்தினான்.
அல்குர்ஆன் (16:68) இந்த ஆயத்தில் அல்லாஹ் தேனீயைப் பற்றி குறிப்பிடும் பொழுது ”நீ சாப்பிடு” நீ நுழைந்து கொள்” என்ற அர்த்தத்தை பொதிந்துள்ள “குலீ” “ஃபஸ்லுகீ” என்ற வாசகத்தை கூறி யுள்ளான். இந்த வாசகம் பெண்பாலிடம் உபயோகப்படுத்தும் வார்த்தை களாகும். இதன்மூலம் அல்லாஹுதஆலா தேனைத் தேடிச் சென்று மலர்களின் சாறுகளை சேகரிக்கும் தேனீக்கள் பெண் தேனீக்கள் தான் என்ற விஷயத்தையும் தெரியப்படுத்துகிறான். தற்கால ஆய்வில் அறியப்படுகிற விஷயத்தை சுமார் 1400 வருடங்களுக்கு முன்பே அல்குர்ஆன் பதிவு செய்து வைத்திருப்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம் அல்லவா !
மேகம் கருக்கிறது மழை வரப்பார்க்கிறது பிரபஞ்சத்தில் அல்லாஹ் எவ்வளவோ ஆச்சரியமான விஷயங்களை வைத்திருப்பதைப் போன்று வான் மண்டலத்திலும் அல்லாஹ் ஆச்சர்யங்களை வைத்துள்ளான். அவைகளில் ஒன்று மழை பெய்வது. நீலவானில் திடீரென மேகங்கள் ஒன்று சேர்ந்து கருத்துப்போய் மழை பொழிய ஆரம்பிக்கிறது. நீரியல் ஆய்வாளர்கள் இது குறித்து கூறும் போது “காற்றுதான் மேகங்களை ஒன்றிணைத்து – குளிர்வித்து மழை பொழிய வைக்கிறது.” என கூறுகிறார்கள். இதை நாம் செயற்கையாக வும் செய்ய முடியும். மழை பொய்த்துப் போய் வறட்சி ஏற்படும் கால கட்டத்தில் விமானத்தின் மூலம் ரசாயணப் பொருட்களைத் தூவி மேகங்களை செயற்கையாக குளிரவைத்து மழை பொழிய வைக்க முடியும் என்று கண்டுபிடித்து அதில் சிறிதளவு வெற்றியும் பெற்றார் கள்.
ஆக மேகங்களை காற்று ஒன்றிணைத்து குளிர்விப்பதால் மழை பொழிகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். இக்கருத்தை அல்லாஹுதஆலா குர்ஆனில் முன்பே பதிய வைத்துள்ளான். “காற்றுகளை சூல் கொண்ட மேகங்களாக நாம் அனுப்பி வைத்தோம். பிறகு வானத்திலிருந்து தண்ணீரை இறக்கி வைத்து அதனை உங்களுக்கு நாம் புகட்டினோம்.” -அல்குர்ஆன் ( 15:22 )இவ்வாறு அல்லாஹுதஆலா காற்றின் மூலம் மேகங்களை குளிர வைத்து மழை பொழிய வைப்பதை குறித்து அல்லாஹுதஆலா திரு குர்ஆனில் பல இடங்களில் கூறியுள்ளான்
அல்லாஹுதஆலா திருகுர்ஆனின் மூலம் மனித சமுதாயத்தின் முழு வாழ்க்கைக்கு வழிகாட்டி என்பதை நிரூபிப்பதைப் போன்று தற்கால நவீன அறிவியல் விஷயங்களையும் சுமார் 14 நூற்றாண்டு களுக்கு முன்பே தன்னில் கொண்டுள்ளது என்பதை விபரிப்பதற்காகத் தான் மேற்கண்ட ஆய்வு விஷயங்களை நாம் பதிவு செய்துள்ளோம். இது போன்று எண்ணற்ற நவீன கண்டுபிடிப்பு விஷயங்களை பற்றியும் குர்ஆன் தெரிவிக்க காத்திருக்கிறது. எனவேதான் அல்லாஹ் குர்ஆனை அவர்கள் ஆழ்ந்து ஆராய வேண்டாமா? “ – அல்குர்ஆன் ( 4: 82 ) என்று கேட்கிறான்.
குர்ஆனும் நாமும்
மனித சமுதாயத்திற்கு அவன் சார்ந்த அனைத்து துறைகளுக்கும் முழு வழிகாட்டிய அல்லாஹ்வால் அருளப்பட்ட குர்ஆனை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம்? குர்ஆனை அது ஏதோ சடங்கு சம்பிரதாயங்களை போதிக்கும் நூல் என்பதைப் போன்று பள்ளிவாசல் களிலும் வீட்டில் ஒரு பெட்டியிலோ உரையிலோ போட்டு வைத்து விடுகிறோம். யாராவது இறந்து விட்டால் குர்ஆனின் ஞாபகம் நமக்கு வருகிறது.
அதை ஓதி இறந்தவர்களுக்கு நன்மை சேர்ப்பித்துவிட்டால் – அத்துடன் குர்ஆனோடு நம்முடைய தொடர்பு முடிந்து விட்டது என்ற நிலையில் நாம் உள்ளோம். அஸ்தஃபிருல்லாஹ். குர்ஆனுடைய வழி காட்டுதலை மனித சமுதாயம் அலட்சியப்படுத்தியதால்தான் பாவங் களும், தீமைகளும் பல்கிப் பெருகிப் போய் உலகம் பெரும் பிரச்சனையை சந்தித்துக் கொண்டிருக்கிறது. உணவுப் பற்றாக்குறை. பணவீக்கம் – அத்தியாவசியப்பொருள்கள் விலையேற்றம். உலகம் வெப்ப மயமாகுதல் நாட்டுக்கு நாடு அரசியல் குழப்பங்கள்.
இன்னும் பல பிரச்சனைகள். இவைகளெல்லாம் ஏன்? ஏன்? குர்ஆன் அதற்கு பதிலுரைக்கிறது.“மனிதர்களுடைய கைகள் சம்பாதித்த (கெடுதலான) வற்றின் காரணத்தால் தரையிலும், கடலிலும் (அழிவு) குழப்பம் பரவி விட்டது. அவர்கள் செய்ததில் சிலதை அவர்களுக்கு அவன் சுவைக்கச் செய் வதற்காக (இவ்வாறு செய்கிறான். இதனால் பாவங்களிலிருந்த) அவர்கள் திரும்பி விடக்கூடும்.” -அல்குர்ஆன் ( 30:41 )
மனிதர்களுக்கு மனிதர்களே தேடிக்கொண்ட வினைகள் தான் உலகில் தற்போது நிகழும் சூழ்நிலைகள் என குர்ஆன் தெளிவாக பதிலுரைத்து விட்டது.
அது போன்று முஃமினானவர்களுக்கு மத்தியில் நிகழக்கூடிய பிரச்சனைகள் பிளவுகள் இஸ்லாமிய நாடுகளுக்கு மத்தியில் நிகழ்ந்துள்ள கருத்து வேறுபாடுகள், இஸ்லாமிய நாடுகளை நோக்கி ஐரோப்பிய நாடுகள் போர் தொடுக்கும் சூழ்நிலைகள் இவை களேல்லாம் எதனால்? ஏன்? இதற்கும் குர்ஆன் தெளிவான விடை தருகிறது.
“முஃமின்களே ! உங்களுக்கிடையில் நீங்கள் பிணங்கித் தர்கித்துக் கொள்ளாதீர்கள். அவ்வாறு செய்தால் நீங்கள் கோழைகளாகி விடுவீர்கள். உங்களுடைய பலம் குன்றி விடும். – அல்குர்ஆன் (8:46)
முஃமின்கள் குர்ஆனின் வழிகாட்டுதல்களை புறந்தள்ளியதின் காரணமாக சர்வர்தேச இஸ்லாமிய சமுதாயத்திடம் கருத்து வேறுபாடு, பிளை, உண்டானது. அதனால் பிற சமுதாயத்தின் பார்வையில் இஸ்லாமிய சமுதாயத்தைப் பற்றி காழ்ப்புணர்ச்சியும் வெறுப்புணர்வும் தான் ஏற்பட்டுள்ளது. “உயர்வான உம்மத்” என குர்ஆனால் போற்றப்பட்ட சமுதாயம் கேவலப்பட்டு நிற்பதற்கு காரணம் குர் ஆனின் வழிகாட்டுதலை கைவிட்டது தான் காரணம்.
என்ன செய்ய வேண்டும் ?
உலகம் முழுவதும் மனித சமுதாயத்திடம் குறிப்பாக இஸ்லாமிய சமுதாயத்திடம் சுபிட்சமும், மகிழ்ச்சியும் செழிப்பும் மலர வேண்டும் என்றால் குர்ஆன் அருளப்பட்ட இந்த ரமளான் மாதத்தில் குர்ஆனுட னான நம் தொடர்பை வலுப்படுத்த வேண்டும். “சடங்கு நூலாக” திரு குர்ஆனைப் பயன்படுத்துவதை விட்டு விட்டு நம் வாழ்வின் அஸ்தி வாரமாக குர்ஆனை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். உலகின் அனைத்து மொழிகளிலும் திருகுர்ஆன் மொழிபெயர்ப்பு விரிவுரை களை நூற்களாகவும் குறுந்தகடு ( ) களாகவும் வெளிவந்துள்ளது. அர்த்தமும் விளக்கமும் புரிந்து குர்ஆனை ஓதி – விளங்கி, நமது வாழ்விலும் நமது சந்ததியினரின் வாழ்விலும் குர்ஆனின் வழிகாட்டு தல்களை கொண்டு வர வேண்டும். பின்பு அந்த வழிகாட்டுதல்களை பிறருக்கும் எத்தி வைக்க வேண்டும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் திருகுர்ஆன் அருளப்பட்ட இந்த ரமளான் மாதத்தில் குர்ஆனை விளங்கி அதன் வழிகாட்டுதல்படி வாழ்க்கை வாழ நமக்கு வழிகாட்டுவானாக !
நன்றி : குர்ஆனின் குரல் மாத இதழ்
வியாழன், 25 ஜூன், 2009
குடும்பத்தை பிளவுபடுத்தும் பாவிகள்
'.....அவர்களிடமிருந்து கணவன் மனைவியரிடையே பிரிவை உண்டாக்கும் செயலை கற்றுக் கொண்டார்கள்'. (அல்குர்ஆன் 2:102)
குடும்ப வாழ்க்கையின் அவசியம் குறித்து நாம் நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறோம். நமது குடும்பத்தில் எப்போதும் மகிழ்ச்சியும் நல்லுறவும் நீடிக்க வேண்டும் என்றெல்லாம் ஆசைப்படுகிறோம்.
ஆனால் மற்றவர்களின் குடும்பங்களைப் பற்றி நமக்கு இத்தகைய நல்லெண்ணம் இருப்பதில்லை.
ஒரு ஆணைப் பற்றியோ பெண்ணைப் பற்றியோ ஏதேனும் சிறு குறை நமக்குத் தெரியவந்தால் நம்மால் இயன்ற அளவுக்கு அதைப் பெரிதாக்குகிறோம். கணவனின் குறையை மனைவியிடமும் மனைவியின் குறையைக் கணவனிடமும் பன்மடங்கு அதிகப்படுத்தி பற்ற வைக்கிறோம். இருக்கின்ற குறைகளை மட்டுமின்றி இல்லாத வதந்திகளையும் கூட உண்மை போல சித்திரித்து அதனைப் பரப்புவதில் இன்பம் காண்கிறோம்.
இதனால் நமக்கு கிடைக்கும் லாபம் என்ன? நன்மை என்ன? ஒன்றுமே இல்லை. ஆனாலும் இச்செயலில் ஈடுபடுவதில் அளவிலாத ஆனந்தம் அடைகிறோம்.
நமது குடும்பத்தைப் பற்றிப் பரப்பப்படும் வதந்திகளால் நமது நிம்மதி குறைந்தால் நமது நிலை என்ன? அதே நிலையைத் தானே மற்றவர்களும் அடைவார்கள் என்றெல்லாம் நாம் சிந்திப்பதில்லை.
இந்த விஷயத்தில் ஆண்களைவிட பெண்கள் பலபடிகள் மேலே உள்ளனர். ஒரு பெண்ணின் குறைகளைப் பெரிதுபடுத்துவதிலும் வதந்திகளைப் பரப்புவதிலும் இவர்களுக்குக் கிடைக்கும் ஆனந்தமே அலாதியானது.
மற்றவர்கள் இவ்வாறு நடந்து கொள்வதில் ஆச்சரியம் ஏதுமில்லை. ஆனால் மறுமை வாழ்க்கையைப் பூரணமாக நம்பக்கூடியவர்கள் இந்தச் செயலின் பயங்கர விளைவுகளைப் பற்றி அறிந்து கொண்டால் குடும்பங்களைப் பிரிக்கின்ற கொடுஞ்செயலில் இறங்க மாட்டார்கள்.
இத்தகைய மக்களுக்கு இந்த வசனத்தில் போதுமான எச்சரிக்கை இருக்கிறது. குடும்பங்களுக்கிடையே பிளவு ஏற்படுவது ஷைத்தானின் செயல்பாடுகள் என்று இவ்வசனம் கூறுகிறது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு மறுமையில் எந்தப் பாக்கியமும் கிடையாது என்று இவ்வசனம் கடுமையாக எச்சரிக்கிறது. மனிதர்கள் செய்யும் காரியங்களில் மகா கெட்ட காரியம் இது எனவும் இவ்வசனம் அறிவுறுத்துகிறது.
எந்தச் செயலில் ஷைத்தான் அதிகமாக திருப்தியடைகிறானோ அந்தச் செயல் அல்லாஹ்வின் கடும் கோபத்திற்குரியதாகும் என்பதை நாம் அறிவோம். ஷைத்தான்கள் மிகமிக மகிழ்ச்சியடையும் காரியங்களில் முதலிடம் தம்பதியருக்கிடையே பிளவை ஏற்படுத்தும் இந்தச் செயலுக்கே உள்ளது. இதைப் பின்வரும் நபிமொழியிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.
(ஷைத்தான்களின் தலைவனாகிய) இப்லீஸ் தனது சிம்மாசனத்தை தண்ணீரில் அமைத்துக் கொள்கிறான். அங்கிருந்து கொண்டு (மக்களை வழி கெடுப்பதற்காக) தனது படையினரை அனுப்புகிறான். பெரிய அளவில் குழப்பம் ஏற்படுத்துபவரே அவனுக்கு நெருக்கமானவர்களாக இருப்பார்கள். ஒரு ஷைத்தான் வந்து நான் இன்னின்ன காரியங்களைச் செய்தேன் என்று இப்லீசிடம் கூறுவான். அதற்கு இப்லீஸ் 'நீ ஒன்றுமே செய்யவில்லை' எனக் கூறுவான். மற்றொரு ஷைத்தான் வந்து 'நான் கணவன் மனைவிக்கிடையே பிரிவை ஏற்படுத்தி விட்டேன்' என்பான். அதைக் கேட்ட இப்லீஸ் அவனைத் தன்னருகில் நிறுத்திக் கொள்வான். நீயே சிறந்தவன் எனவும் கூறுவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: புகாரி)
இப்லீஸ் மிகவும் மகிழ்ச்சியடையும் காரியம் செய்பவர்கள் கணவன் மனைவியரிடையே பிரிவை ஏற்படுத்துவோர் தான் என்பதைவிட கடுமையான எச்சரிக்கை வேறு என்ன இருக்க முடியும்? இத்தகைய காரியத்தில் ஈடுபடுவோர் தாங்கள் ஷைத்தானுக்குத் துணை செய்கின்றனர் என்பதை உணர வேண்டும்.
மற்றொரு நபிமொழியைப் பாருங்கள்! 'அல்லாஹ்வின் அடியார்களில் மிகவும் கெட்டவர்கள் கோள் சொல்லித் திரிபவர்களும் நேசமாக இருப்பவர்களிடையே பிரிவை ஏற்படுத்துபவர்களும் தான்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் பின் கனம் (ரலி), நூல்: அஹ்மத்
அன்னியோன்யமாக இருப்பவர்களைப் பிரிப்பது தான் அல்லாஹ்வுக்கு மிகவும் வெறுப்பூட்டும் என்பதை இதிலிருந்து உணரலாம். மேலும் கோள் சொல்லித் திரிபவர்கள் சொர்க்கத்தில் நுழைய முடியாது என்றும் நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள். (புகாரி)
அன்னியோன்யமாக இருப்பவர்கள் என்பது பலதரப்பினரைக் குறிக்கும் என்றாலும் கணவன் மனைவியர் தான் இதில் முதலிடம் வகிப்பவர்கள். அவர்களுக்கிடையே உள்ள நெருக்கம் வேறு எவருக்கிடையேயும் இருக்க முடியாது.
மேலும் இல்லாத குற்றங்களைக் கற்பனை செய்து வதந்திகளைப் பரப்பி குடும்பங்களைப் பிரிப்பதையும் நபி (ஸல்) அவர்கள் வன்மையாகக் கண்டித்துள்ளனர்.
கற்பனை செய்வதை விட்டும் உங்களை எச்சரிக்கிறேன். கற்பனை செய்வது தான் மிகப் பெரிய பொய்யாகும். மேலும் பிறர் குறைகளைத் துருவித் துருவி ஆராயாதீர்கள் என்பதும் நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: அஹ்மத்)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெண்களாகிய எங்களிடம் உறுதிமொழி எடுத்தனர். நாங்கள் இட்டுக் கட்டி அவதூறுகளைப் பரப்புவது கூடாது என்பதும் அந்த உறுதி மொழியில் அடங்கும். (அறிவிப்பவர்: உமைமா பின்த் ரகீகா, நூல்: அஹ்மத்)
குடும்பங்களில் பிரிவை ஏற்படுத்துவதில் முக்கியப்பங்கு அவதூறுக்கு உண்டு. கற்பொழுக்கமுள்ள பெண்களைப் பற்றி அவதூறு கூறுவது எந்த அளவுக்கு குற்றமாகக் கருதப்படுகிறது என்றால் அவ்வாறு அவதூறு கூறுவோர் ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் அவர்களுக்கு 80 கசையடிகள் அளிக்கப்பட வேண்டும் என்று திருக்குர்ஆன் (24:04) கூறுவதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
ஒரு பெண் மீது களங்கம சுமத்துவோர் இதற்கு நான்கு நேரடி சாட்சிகளைக் கொண்டு வந்து நிறுத்த வேண்டும் எனவும் அந்த வசனம் (24:04) கூறுகிறது. ஒரு பெண்ணின் தவறான நடத்தையை ஒருவர் அல்லது இருவர் அல்லது மூவர் நேரடியாகக் கண்டால் கூட அதை அவர்கள் பகிரங்கப்படுத்தினால் அவர்கள் அவதூறு கூறியவர்களாகவே கருதப்படுவார்கள்.
அவதூறின் காரணமாக ஒரு பெண்ணின் வாழ்க்கை பாதிக்கும். குடும்பம் பிளவுபடும். அதை அறவே தவிர்ப்பதற்காகத் தான் இதற்கு மட்டும் நான்கு சாட்சிகள் தேவை என்று குர்ஆன் கூறுகிறது. ஏனைய எந்தக குற்றச் செயலுக்கும் இரண்டு சாட்சிகள் போதும் எனக்கூறும் இஸ்லாம் இந்த விஷயத்தில் மட்டும் நான்கு சாட்சியம் தேவை எனக் கூறுவது ஏன் என்பதை நாம் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.
நேருக்கு நேர் கண்ட நடத்தை கெட்ட செயலைக் கூட பரப்பக்கூடாது. குறைந்த பட்சம் நான்கு பேருக்கு முன்னிலையில் நடந்தால் மட்டுமே அது குறித்துப் பேசவேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.
ஒரு பெண்ணிடம் நாம் கண்ட இழிசெயலையே கூறக்கூடாது என்றால் இல்லாத ஒன்றைக் கற்பனை செய்து கூறி பெண்ணின் வாழ்க்கையைப் பாழாக்குவது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை சொல்லத் தேவையில்லை.
ஒரு வீட்டிலிருந்து ஒரு ஆண் வெளியே வருவதைக் காண்கிறோம். அவன் எதற்குச் சென்றான் என்பது நமக்குத் தெரியாது. உள்ளே வேறு யாரெல்லாம் இருந்தார்கள் என்பதும் நமக்குத் தெரியாது. ஆனால் இந்தக் காட்சிக்கு கண், காது, மூக்கு வைத்து ஊரெல்லாம் பரப்பி விடுகிறோம். இஸ்லாமிய ஆட்சி நடந்தால் நமக்கு 80 கசையடி வழங்கப்பட்டிருக்கும். இவ்வளவு பெரிய குற்றத்தை சர்வ சாதாரணமாக நாம் செய்து வருகிறோம்.
தன் மீது இப்படி ஒரு பழி சுமத்தப்பட்டால் தனது நிலை என்ன என்று எந்த பெண்ணும் சிந்திப்பதில்லை. தன் குடும்பத்துப் பெண்கள் மீது இத்தகைய அவதூறு பரப்பப்பட்டால் தனது நிலை என்ன என்பதை எந்த ஆணும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.
இன்னும் சொல்வதாக இருந்தால் தம்பதியரிடையே மனக்கசப்பு இருந்தால் அதை நீக்கி இருவருக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதே முஸ்லிம்களின் பணியாக இருக்க வேண்டும். இந்தப் பணிக்காக பொய் கூட கூறலாம் என்று இஸ்லாம் கூறுகிறது.
மனிதர்களிடையே நல்லிணக்கம் ஏற்படுத்துவதற்காக ஒருவர் எதைக் கூறினாலும் அவர் பொய்யரல்ல என்பது நபிமொழி. அறிவிப்பவர்: உம்மு குல்சூம் (ரலி), நூல்கள்: அஹ்மத், புகாரி
பிரிந்து கிடப்பவர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காக பொய்களைக் கூட கூறலாம் என்றால் இணக்கம் ஏற்படுத்துவது எந்த அளவு இறைவனுக்கு உகந்தது என்பதை அறிந்து கொள்ளலாம்.
இறைவன் தனக்குப் பிடிக்காத பொய்யைக் நட நல்லிணக்கம் ஏற்படுத்துவதற்காக அனுமதிக்கிறான்.
இந்த நல்ல நோக்கத்திற்காகத் தான் நாம் கற்பனை செய்யலாம். கசப்பை நீக்க உதவும் எத்தகைய பொய்யையும் கூறலாம். ஆனால் நாமோ பிரிப்பதற்காக இதைச் செய்து கொண்டிருக்கிறோம்.
தொழுகை, நோன்பு, தர்மம் ஆகிய காரியங்களை இறைதிருப்திக்காக நாம் செய்கிறோம். மறுமையில் நல்ல நிலையைப் பெறுவதற்காக இந்தக் காரியங்களில் ஏற்படும் சிரமங்களைச் சகித்துக் கொள்கிறோம்.
இதை விட சிறந்த காரியம் ஏதும் இருக்க முடியுமா? இருக்கிறது அதுதான் குடும்பத்தார்களிடையே நல்லுறவை ஏற்படுத்துவது.
நோன்பு, தொழுகை, தர்மம் ஆகியவற்றுக்காக கிடைக்கும் மதிப்பை விட சிறந்த மதிப்பைப் பெற்றுத் தரும் ஒரு காரியத்தை நான் உங்களுக்குக் கூறட்டுமா என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நபித்தோழர்கள் ஆம் என்றனர். அது தான் குடும்பத்தில் நல்லிணக்கம் ஏற்படுத்துதல் என்று நபி (ஸல்) அவர்கள் விளக்கம் அளித்தனர். மேலும் குடும்பங்களில் பிளவை ஏற்படுத்துவது நல்லறங்களை அழித்து விடக்கூடியது எனவும் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபுத்தர்தா (ரலி), நூல்கள்: திர்மிதி, அபூதாவூத்)
ஆகவே பிரிந்தவர்களைச் சேர்த்து வைப்போம். நல்லறங்களைப் பாழாக்கும் குடும்பப் பிரிவினை செய்வதைத தவிர்ப்போம்.
வெளியீடு : இது ஓர் இஸ்லாமிய தமிழ் தஃவா குழுவின் இணையத்தளம்
வேதத்தை வியாபாரமாக்குதல்
உங்களிடமிருப்பதை (வேதத்தை) உண்மைப் படுத்தும் விதமாக நான் அருளியதை (குர்ஆனை) நம்புங்கள்! அதை மறுப்பவர்களில் முதன்மையானவராக நீங்கள் ஆகிவிடாதீர்கள்! எனது வசனங்களை அற்பக்கிரயத்திற்கு விற்று விடாதீர்கள்! என்னையே அஞ்சுங்கள்!
(அல்குர்ஆன் 2:41)
தங்கள் மார்க்கத்தையும் வேதத்தையும் வியாபாரப் பொருட்களாக ஆக்கிவிட்ட நபி(ஸல்) காலத்து யூத கிறித்தவர்களை நோக்கி இந்த வசனம் பேசுகின்றது. இந்த கருத்தில் இன்னும் பல வசனங்களும் உள்ளன. (பார்க்க 5:44, 3:187, 3:199)
இவ்வசனங்கள் நேரடியாக இவ்விரு சமுதாயங்களைக் குறிப்பிட்டாலும் வேதத்தை வியாபாரமாக்கும் முஸ்லிம்களும் இதில் அடங்குவார்கள் என்பதை அறிவுடையோர் மறுக்க மாட்டார்கள். இறைவனின் இந்தத் தெளிவான கட்டளை அப்பட்டமாக அலட்சியப்படுத்தப்படும் நிலையை முஸ்லிம்களிடம் நாம் காண்கிறோம். முஸ்லிம் சமுதாயத்தில் பெரும் பகுதியினர் மார்க்கத்தையும், வேதத்தையும் விற்பவர்களாகவோ விலைக்கு வாங்குபவர்களாகவோ இருப்பதையும் காணமுடிகின்றது.
இதற்குக் காரணம் என்ன? இந்த வசனம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கவேண்டும். அல்லது அறவே இவ்வசனங்கள் புரிந்து கொள்ளப்படாமலிருக்க வேண்டும். இந்த இரண்டு காரணங்களைத் தவிர வேறு எதுவும் காரணமாக இருக்க முடியாது.
வேதத்தையும் அந்த வேதம் கற்றுத்தரும் மார்க்கத்தையும் அந்த மார்க்கத்தில் வலியுறுத்தப்படும் வணக்கங்களையும் வியாபாரமாக்கி விட்டார்கள். அந்த வியாபாரத்தையும் நியாயப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளதை நாம் காண்கிறோம். அதற்கு சில ஆதாரங்களையும் வாதங்களையும் முன் வைக்கின்றனர். அவற்றைப் பார்த்து விட்டு இந்த வசனத்தின் சரியான விளக்கத்தைக் காண்போம்.
நபித்தோழர்களில் சிலர் ஒரு தண்ணீர்த் துறையைக் கடக்கலானார்கள். அந்தத் தண்ணீர்த் துறைக்குரியவர்களில் ஒருவர் விஷக்கடிக்கு ஆளாகி விட்டார். உடனே அவர்கள் நபித்தோழர்களிடம் வந்து 'உங்களில் மந்திரிப்பவர் எவருமுண்டோ?' என்று கேட்டார்கள். உடனே நபித்தோழர்களில் ஒருவர் புறப்பட்டுச் சென்று ஆட்டுக்குக் கூலியாக ஃபாத்திஹா அத்தியாயத்தை ஓதினார். (விஷக்கடிக்கு ஆளானவர் குணமடைந்ததும்) கூலியாகப் பெற்ற ஆட்டையும் தோழர்களிடம் கொண்டு வந்தார். அவர்கள் அதிருப்தியுற்று அல்லாஹ்வின் வேதத்துக்குக் கூலி வாங்கி விட்டீரே என்று கூறினர். முடிவில் மதீனாவுக்கு வந்து 'அல்லாஹ்வின் தூதரே! இந்த மனிதர் அல்லாஹ்வின் வேதத்துக்குக் கூலி பெற்று விட்டார்' எனக் கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'நீங்கள் கூலி பெறத் தகுதியானது அல்லாஹ்வின் வேதமாகும்' எனக் கூறினார்கள். இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் புகாரியில் இடம் பெற்றுள்ளது.
மற்றொரு அறிவிப்பில் மந்திரிக்கச் சென்ற நபித்தோழர், அவர்களிடம் சில ஆடுகள் தர வேண்டும் என்று பேரம் பேசி அல்ஹம்து அத்தியாயத்தை ஓதிப்பார்த்ததாகவும், அவர் உடனடியாக நிவாரணம் பெற்றதும் பேசியபடி ஆடுகளைப் பெற்றதாகவும், அதைப் பங்கு வைக்குமாறு சிலர் கூறியதாகவும் அப்போது மந்திரித்தவர், 'நபி(ஸல்) அவர்களிடம் சென்று இதைக் கூறி அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை அறியாமல் நாம் பங்கு வைக்க வேண்டாம்' என்று கூறியதாகவும் அவ்வாறே நபி(ஸல்) அவர்களிடம் வந்து விபரம் கூறிய போது 'அந்த அத்தியாயம் ஓதிப்பார்க்கத்தக்கது என்று உமக்கு எப்படித் தெரியும்? என்று கேட்டு விட்டு 'நீங்கள் செய்தது சரியானதே! அதைப் பங்கு வையுங்கள்! எனக்கும் ஒரு பங்கைத் தாருங்கள்!' என்ற கூறி சிரித்ததாகவும் கூறப்படுகின்றது. அபூஸயீத்(ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், திர்மிதி, இப்னுமாஜா ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.
காரிஜா இப்னுஸ் ஸல்த் என்பவரின் சிறிய தந்தை நபி(ஸல்) அவர்களைச் சந்தித்து விட்டு திரும்பும் போது ஒரு கூட்டத்தினரைக் கடந்தார்கள். அவர்களில் இரும்பு (சங்கிலியால்) கட்டப்பட்ட ஒரு பைத்தியக்காரர் இருந்தார். அவரது குடும்பத்தினர் அந்த நபித்தோழரை நோக்கி 'உங்கள் தோழராகிய நபி(ஸல்) சிறந்த மார்க்கத்தைக் கொண்டு வந்துள்ளதாக அறிகிறோம். இந்தப் பைத்தியத்திற்கு உங்களிடம் ஏதேனும் வைத்தியம் உண்டா? என்றனர். அந்த நபித்தோழர் ஒவ்வொரு நாளும் இரண்டு தடவை வீதம் மூன்று நாட்கள் ஃபாத்திஹா அத்தியாயத்தை ஓதிப் பார்த்தார். பைத்தியம் விலகியது. அவர்கள் அவருக்கு இருநூறு ஆடுகள் தந்தார்கள். அவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து இதைக் கூறிய போது 'அதை நீ வைத்துக் கொள்! தவறாக ஓதிப் பார்த்து உண்பதை விட இது சத்தியத்தை ஓதிப்பார்த்த கூலியாகும்' என்றார்கள். காரிஜா அறிவிக்கும் இந்த ஹதீஸ் அஹ்மத், நஸயீ, அபூதாவூத், இப்னு ஹிப்பான், ஹாகிம் ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.
வீடு வீடாகச் சென்று குர்ஆன் ஓதிவிட்டு கூலி வாங்கலாம். ரமளானில் குர்ஆன் ஓதி தொழ வைப்பதற்கு கூலி வாங்கலாம். தொழ வைப்பதற்கு சம்பளம் வாங்கலாம் என்பதற்கு இந்த ஹதீஸ்களை ஆதாரங்களாகச் சமர்ப்பிக்கின்றனர். குர்ஆனுக்குக் கூலி வாங்கலாம் என்று இந்த ஹதீஸில் தெளிவாகவே கூறப்படுவதால் இவ்வாறு அவர்கள் கூறுகின்றனர். அவர்கள் எடுத்து வைக்கும் வேறு சில ஆதாரங்களையும் நாம் காண்போம்.
ஒரு பெண் நபி(ஸல்) அவர்களிடம் வந்து தன்னை நபி(ஸல்) அவர்களிடம் ஒப்படைத்தார். அப்போது ஒரு மனிதர் எழுந்து தங்களுக்குத் தேவையில்லை என்றால் இப்பெண்ணை எனக்கு மணமுடித்து வையுங்கள் என்றார். அவளுக்கு மஹராக வழங்க ஏதும் உம்மிடம் உள்ளதா? என்று நபி(ஸல்) கேட்டார்கள். அதற்கு அவர் 'இந்த எனது ஆடையைத் தவிர என்னிடம் வேறு ஏதும் இல்லை என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் நீ உனது ஆடையை அவளுக்குக் கொடுத்தால் ஆடையே இல்லாமல் நீ இருக்க வேண்டி வரும். எனவே வேறு எதையாவது தேடுவீராக என்றனர். அதற்கு அவர் எனக்கு ஏதும் கிடைக்கவில்லை என்றார். அப்படியானால் ஒரு இரும்பு மோதிரத்தையாவது தேடுவீராக என்று நபி(ஸல்) கூறினார்கள். அவர் எதுவும் கிடைக்கவில்லை என்றார். குர்ஆனில் உமக்கு ஏதேனும் தெரியுமா? என நபி(ஸல்) கேட்டார்கள். இன்னின்ன அத்தியாயங்கள் தெரியும் என்று அந்த அத்தியாயங்களின் பெயர்களை அவர் குறிப்பிட்டார். உம்மிடம் இருக்கும் குர்ஆன் அத்தியாயங்களுக்காக உமக்கு நான் மணமுடித்துத் தந்தேன் என்று கூறினார்கள். லஹ்ல் பின் ஸஃது(ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம் ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.
மணப்பெண்ணுக்கு மஹர் தொகையாக நபி(ஸல்) அவர்கள் குர்ஆனையே ஆக்கியுள்ளதால் குர்ஆன் மற்ற பொருட்களைப் போலவே நபி(ஸல்) அவர்களால் கருதப்பட்டுள்ளது. எனவே குர்ஆனுக்குக் கூலி வாங்கலாம் என்பதும் இவர்களின் வாதம்.
எனக்கு நபி(ஸல்) அவர்கள் பாங்கைக் கற்றுத் தந்தனர். அவர்கள் கற்றுத் தந்தவாறு பாங்கு சொல்லி முடித்ததும் எனக்கு ஒரு பை தந்தனர். அதில் சிறிதளவு வெள்ளி இருந்தது என்று அபூமஹ்தூரா(ரலி) அறிவிக்கும் ஹதீஸ் நஸயீ, இப்னு ஹிப்பான் ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.
பாங்கு என்பது ஒரு வணக்கம். இந்த வணக்கத்தை செய்து முடித்தபோது நபி(ஸல்) அவர்கள் அவருக்கு கூலி கொடுத்திருப்பதால் வணக்கங்களுக்கும் வேதத்துக்கும் கூலி வாங்கலாம் என்பதும் இவர்களின் வாதம்.
இந்த ஹதீஸ்கள் யாவும் ஆதாரப்பூர்வமானவை என்பதில் ஐயமில்லை. இவர்கள் கூறுவது தான் இதன் விளக்கம் என்றால் மேற்கண்ட வசனத்திற்கு எந்த அர்த்தமும் இல்லாமல் போய்விடும். மேலும் பின்வரும் ஹதீஸ்களுக்கும் எந்த அர்த்தமும் இல்லாமல் போய் விடும்.
குர்ஆனை ஓதுங்கள்! அதில் வரம்பு மீறாதீர்கள்! அதை அலட்சியப்படுத்தாதீர்கள்! அதன் மூலம் சாப்பிடாதீர்கள். அதன் மூலம் (பொருளையும் புகழையும்) பெருக்கிக் கொள்ளாதீர்கள் என்று நபி(ஸல்) கூறியதாக அப்துர்ரஹ்மான் பின் ஷிப்ல்(ரலி) அறிவிக்கும் ஹதீஸ் அஹ்மதில் இடம் பெற்றுள்ளது.
நாங்கள் குர்ஆனை ஓதிக் கொண்டிருந்த போது எங்களிடம் நபி(ஸல்) வந்தார்கள். எங்களில் அரபியரும் அரபியல்லாதவரும் இருந்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் எல்லோருமே (அதாவது இரண்டு சாரார் ஓதுவதும்) அழகாகத்தான் உள்ளது. அம்பு (வளைவின்றி நேராக ஆக்கப்படுவது) போல் குர்ஆனை நேராக ஆக்கும் கூட்டத்தினர் தோன்றுவார்கள். (அதாவது உச்சரிப்புகள் ராகங்கள் ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பார்கள்) அவர்கள் (இம்மையிலேயே) அதன் கூலியை அவசரமாகத் தேடுவார்கள். மறுமைக் கூலிக்காகக் காத்திருக்க மாட்டார்கள் என்று நபி(ஸல்) கூறினார்கள். ஜாபிர்(ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் அபூதாவூதில் இடம் பெற்றுள்ளது. இதே கருத்தை ஸஹ்ல் பின் ஸஃது(ரலி) அறிவிப்பதாகவும் அபூதாவூதில் இடம் பெற்றுள்ளது.
தமது பாங்குக்காக கூலி எதுவும் பெறாத முஅத்தினை நீ ஏற்படுத்துவாயாக என்பதே நபி(ஸல்) அவர்கள் என்னிடம் எடுத்துக் கொண்ட உடன்படிக்கையில் இறுதியானதாகும் என்று உஸ்மான் பின் அபில் ஆஸ்(ரலி) அறிவிக்கும் ஹதீஸ் அஹ்மத், அபூதாவூது, நஸயீ, திர்மிதி, இப்னுமாஜா, ஹாகிம் ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.
இந்த ஹதீஸ்கள் வணக்கங்களுக்கோ குர்ஆனுக்கோ இவ்வுலகக் கூலியைப் பெறலாகாது என்று அறிவிக்கின்றன. இவ்விரண்டு வகையான ஹதீஸ்களையும் இணைத்துத் தான் நாம் ஒரு முடிவுக்கு வரவேண்டும்.
குர்ஆன் சம்பந்தமாக எந்தவித கூலியும் பெறக்கூடாது என்றால் முதல் வகையிலான ஹதீஸ்களை மறுக்கும் நிலை ஏற்படும். குர்ஆனை எந்தவிதத்தில் பயன்படுத்தினாலும் கூலி வாங்கலாம் என்றால் இரண்டாம் வகையிலான ஹதீஸ்களை மறுக்கும் நிலை ஏற்படும். இரண்டு வகையிலான ஹதீஸ்களில் எதையும் மறுக்காமல் பொதுவான விளக்கத்துக்கு வருவது சிரமமானதல்ல. இரண்டு வகையான ஹதீஸ்களையும் நாம் சிந்திக்கும் போது இதை விளங்கலாம்.
குர்ஆன் ஓதுவது என்பது இரண்டு வகைகளில் அமைகின்றது. ஒன்று மனிதனுக்கு உதவுவதற்காக ஓதிப்பார்த்தல் போன்ற வழிகளில் பயன்படுத்துவது. மற்றொன்று மறுமைப் பயன் கருதி ஓதுவது. முதல் வகையில் பயன்படுத்தும் போது கூலி வாங்கலாம் என்பதை முதல் ஹதீஸ்கள் கூறுகின்றன. இரண்டாவது வகையில் பயன்படுத்தினால் கூலி வாங்கக் கூடாது என்பதை இரண்டாவது வகை ஹதீஸ்கள் கூறுபின்றன என்று விளங்கிக் கொண்டால் முரண் ஏதுமில்லை.
குர்ஆனை அச்சிட்டு விற்பனை செய்வதும் அதன் தமிழாக்கத்தை அச்சிட்டு விற்பதும் அதன் போதனைகளை அச்சிட்டு விற்பதும் குர்ஆனை விற்பது என்பதில் அடங்காது. வணக்க வழிபாடுகளுக்கு கூலி வாங்குவதுடன் இதை ஒப்பு நோக்க முடியாது. அச்சுத் தொழில், புத்தக விற்பனை என்பது தொழில் என்ற முறையில் முதலீடு செய்யப்படுகின்றது. அச்சிடுவோர், அச்சுக்கோர்ப்போர், பைண்டிங் செய்வோர் ஆகியோருக்கு சம்பளம் கொடுக்கப்படுகின்றது.
தொழில் என்ற முறையில் தான் இதை எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர குர்ஆனை விற்பது என்ற குற்றத்தில் அடங்காது. வீடுவீடாகப் போய்க் குர்ஆனை ஓதுவதற்கும் ரமளானில் தொழுகை நடத்துவதற்கும் எந்த முதலீடும் செய்யப்படுவதில்லை. அது முற்றிலும் கலப்பற்ற வணக்கமாகும். இந்த வணக்கத்தைச் செய்து விட்டு கூலி கேட்பது குர்ஆனை விற்றதாகத்தான் அமையும்.
பாங்கு சொல்லிய பிறகு அபூமஹ்தூரா(ரலி) அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் கூலி வழங்கியுள்ளார்களே வணக்கங்களுக்கு கூலி கொடுக்கலாம் என்பதற்கு இது சான்றாக உள்ளதே என்ற கேள்வி தவறாகும்.
'கூலி வாங்காத முஅத்தினை ஏற்படுத்திக் கொள்வீராக!' என்று நபி(ஸல்) அவர்கள் தெளிவாக அறிவித்து விட்ட பிறகு நபி(ஸல்) அவர்களின் பள்ளிவாசலில் நீண்ட காலம் முஅத்தின்களாகப் பணிபுரிந்த பிலால்(ரலி) அப்துல்லாஹ் இப்னு உம்மிமக்தும்(ரலி) ஆகியோருக்கு கூலி எதுவும் கொடுக்காமலிருந்த பிறகும் நபி(ஸல்) அவர்கள் அபூமஹ்தூரா(ரலி) அவர்களுக்கு வழங்கியது எப்படி பாங்கின் கூலியாக இருக்க முடியும்?
புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர் என்பதால் பைதுல்மால் எனும் பொது நிதியிலிருந்து நபி(ஸல்) அவர்கள் வழங்கிய அன்பளிப்பாகவே அதைக் கருத முடியும்.
இன்னொரு கோணத்திலும் இதை நாம் சிந்திக்கலாம். வணக்கங்களுக்குக் கூலி வாங்கலாம் என்ற வாதத்தின்படி எல்லா வணக்கங்களுக்கும் கூலி வாங்கலாம் என்று ஆகும். நான் நோன்பு வைக்கப் போகிறேன். அதற்கு ஒரு நூறு ரூபாய் தாருங்கள் என்று கேட்க முடியுமா? இவ்வாறு கேட்க முடியாது என்றால் நான் தொழப்போகிறேன். அதற்கு இவ்வளவு ரூபாய் தாருங்கள் என்று எப்படிச் சொல்ல முடியும்? நோன்பைப் போலவே தொழுகையும் குர்ஆன் ஓதுவதும் வணக்கம் தானே.
மார்க்கத்தை வியாபாரமாக ஆக்குவோர் மற்றோர் புதுமையான வாதத்தையும் எடுத்து வைக்கிறார்கள்.
நாங்கள் குர்ஆன் ஓதிவிட்டு வாங்குவது குர்ஆனுடைய கூலி அல்ல. எங்கள் நேரத்தை ஒதுக்கியதற்காகவே வாங்குகிறோம். அந்த நேரத்தில் வேறு வேலை செய்து நாங்கள் பொருள் திரட்டியிருப்போமல்லவா. அதை விட்டு விட்டு இதற்காக நேரத்தை ஒதுக்கியதற்கே கூலி வாங்குகிறோம் என்கின்றனர்.
ஒரு வேலை செய்வதென்றால் நேரத்தை ஒதுக்காமல் எந்த வேலையையும் செய்ய முடியாது. இந்தச் சாதாரண உண்மையைக் கூட விளங்காமல் இவ்வாறு வாதிடுகின்றனர்.
ஒருவர் சாராயக்கடையில் கணக்கெழுதச் சென்று சம்பளம் பெறுகிறார். நான் நேரம் ஒதுக்கியதற்காகவே சம்பளம் பெறுகிறேன் என்றும் கூறுகிறார் என்றால் நாம் அதை ஏற்கமாட்டோம். மார்க்கத்தை வியாபாரமாக ஆக்கக்கூடாது என்பதும், சாராயக்கடையில் கணக்கெழுதக்கூடாது என்பதும் இரண்டுமே மார்க்கத்தின் கட்டளை தான்.
எதை வியாபாரமாக ஆக்கக் கூடாது என்று மார்க்கம் சொல்கிறதோ அந்த வழிகளில் வியாபார நோக்கத்தில் ஒருவர் நேரத்தை ஒதுக்கவும் கூடாது என்றே கொள்ள வேண்டும். இல்லை என்றால் எல்லா பித்அத்களையும் எல்லா தவறுகளையும் நியாயப்படுத்த நேரிடும்.
மஹர் சம்பந்தமான ஹதீஸிலும் மார்க்கத்தை வியாபாரமாக்கும் போக்குக்கு ஆதாரம் கிடையாது. மஹர் என்பது பெண் தீர்மானிக்க வேண்டிய விஷயம். ஒரு பெண் எவ்வளவு கூடுதலாகவும், குறைவாகவும் மஹர் கேட்கலாம். விரும்பினால் தனக்கு மஹர் எதுவும் வேண்டாம் என்றும் கூறலாம். சம்பந்தப்பட்ட ஹதீஸில் அப்பெண்மணி தனக்குள்ள இந்த உரிமையை நபி(ஸல்) அவர்களின் கையில் ஒப்படைத்து விட்டார்.
நபி(ஸல்) அவர்கள் இயன்றவரை அவரிடம் மஹர் பெற முயற்சிக்கிறார்கள். இரும்பு மோதிரமாவது கொண்டு வா என்ற அளவுக்கு இறங்கி வருகிறார்கள். எதுவும் இல்லை என்ற நிலையில் அவர் குர்ஆனை அறிந்தவர் என்பதால் மஹர் இல்லாமல் அவருக்கு மணமுடித்துக் கொடுக்கிறார்கள்.
நல்ல குணமுடைய ஒரு மணமகன் கிடைக்கும் போது 'உங்கள் நற்குணமே போதும் மஹர் வேண்டாம்' என்று ஒரு பெண் கூறினால் நற்குணம் விலை பேசப்பட்டு விட்டது என்று எப்படி கருத முடியாதோ அது போன்றது தான் இதுவும். இதையெல்லாம் மார்க்கத்தை வியாபாரமாக்குவதற்கு சான்றாகக் காட்ட முடியாது.
வணக்கமாக அமைந்துள்ள இடங்களில் குர்ஆனைப் பயன்படுத்திவிட்டு கூலி கேட்கக் கூடாது. யூத கிறித்தவர்கள் அன்று வேதத்தையும் அதன் போதனைகளையும் மறைத்து விட்டு அதன் மூலம் உலக லாபங்களை அடைந்து வந்தனர். அது கூடாது என்பது தான் மேற்கண்ட வசனத்தின் பொருள் என்பதை அறிந்து கொண்டால் குழப்பங்களுக்கு இடமில்லை
வெளியீடு : இது ஓர் இஸ்லாமிய தமிழ் தஃவா குழுவின் இணையத்தளம்
வெள்ளி, 19 ஜூன், 2009
மனிதத் தன்மையில் ஆணும் பெண்ணும் சமமே!
وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلاَ مِنْهَا رَغَداً حَيْثُ شِئْتُمَا وَلاَ تَقْرَبَا هَـذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الْظَّالِمِينَ
'ஆதமே! நீயும் உமது மனைவியும் இந்த சொர்க்கத்தில் தங்கிக் கொள்வீராக! நீங்கள் விரும்பியவாறு உண்டு மகிழ்வீர்களாக! இந்த மரத்தை மட்டும் நெருங்கி விடாதீர்கள்! அவ்வாறு நெருங்கினால் அநீதியிழைத்தவராவீர்கள்' என்று நாம் கூறினோம்.
ஆனால் அவ்விருவரையும் ஷைத்தான் அதிலிருந்து தடம் புரளச் செய்தான். அவர்கள் எதிலிருந்தார்களோ அதிலிருந்து அவ்விருவரையும் அவன் அப்புறப்படுத்தினான். (அல்குர்ஆன் 2:35,36)
பெண்கள் ஆண்களுக்கு இன்பம் அளிப்பதற்காக மட்டுமே படைக்கப்பட்டவர்கள், அவர்களுக்கென ஆசாபாசங்களோ உரிமைகளோ கிடையாது என்று தான் பெரும்பாலான மதங்கள் கூறுகின்றன. பெண்களுக்கு 'ஆன்மா' இருக்கிறதா என்ற வாதப்பிரதி வாதங்கள் கூட நடந்துள்ளன.
சொத்தில் அவர்களுக்கு உரிமை இல்லை. தங்கள் பெயரில் எந்தச் சொத்துக்களையும் அவர்கள் வைத்துக் கொள்ள முடியாது. திருமணம் நடக்கு முன் தந்தையையும் திருமணத்திற்குப் பின் கணவனையும் சார்ந்தே அவள் இருக்க வேண்டும் என்றெல்லாம் கோட்பாடுகளை உருவாக்கி பெண்களை பகுத்தறிவு இல்லாத பிராணிகளைப் போல் நடத்தி வந்தனர்.
இன்றைக்கும் கூட பெண்ணுரிமை என்ற பெயரால் கவர்ச்சி காட்டி ஆண்களை மயக்கக் கூடியவர்களாகவும் தாங்கள் நடந்து கொள்வதற்கு உரிமை கேட்டுப் போராடி வருகின்றனர்.
அந்தக் கோட்பாடுகளை திருக்குர்ஆனின் இந்த வசனங்கள் தகர்த்துத் தரைமட்டமாக்குகின்றன.
கடவுள் முதன் முதலில் ஒரே ஜோடிளைத்தான் நேரடியாகப் படைத்தான். அவர்களிலிருந்து பல்கிப் பெருகியதே மனித சமுதாயம் என்பது இஸ்லாமிய நம்பிக்கை.
கடவுளால் முதன் முதலில் படைக்கப்பட்ட தம்பதிகள் குறித்தே மேற்கண்ட வசனங்களில் கூறப்படுகின்றது.
அவ்விருவரையும் படைத்த இறைவன் அவர்களை சொர்க்கப் பூங்காவில் தங்கச் செய்து அதன் பாக்கியங்களை அனுபவித்துக் கொள்ள அனுமதிக்கின்றான். அந்தக் கட்டத்தில் கடவுள் பயன்படுத்தியிருக்கும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் கருத்துடன் கவனிக்கத் தக்கவையாகும்.
இன்றைய நவீன காலத்தில் கூட ஒரு தம்பதியரை விருந்துக்கு அழைத்தால் கணவரிடம் மட்டும் கூறினாலே போதும் என்ற நிலை இருக்கிறது. குடும்பத்துடன் வந்து விடுங்கள் என்ற அழைப்பின் காரணமாக - மனைவி தனியாக அழைக்கப்படா விட்டாலும் - மனைவியையும் அழைத்துச் செல்வோர் நாகரீக உலகத்திலும் இருக்கிறார்கள்.
ஆனால் மனித சமுதாயம் உள்ளிட்ட அகில உலகையும் படைத்த இறைவன், நீங்கள் இருவரும் தங்குங்கள்! நீங்கள் இருவரும் உண்ணுங்கள்! என்று இருவரையும் சமநிலையில் நிறுத்துகிறான்.
பொதுவாக உணவுகள் விஷயத்தில் பெண்களுக்கு என தனி விருப்பம் இருப்பதை ஆண்கள் உணர்வதில்லை. ஆண்கள் எதை வாங்கிப் போடுகிறார்களோ அதை ஆக்கிப் போடுவது மட்டும் தான் மனைவியரின் வேலை என்பது தான் நடைமுறை.
விருப்பமான உணவுகள் சமைக்கப்பட்டால் கூட சமைத்தவளை மறந்துவிட்டு அனைத்தையும் மேய்ந்து விட்டு பாத்திரத்தைக் காலியாக வைத்துச் செல்லும் கணவர்கள் ஏராளம்.
ஆனால் படைத்த இறைவன் அப்படிக் கருதவில்லை. நீங்கள் இருவரும் விரும்பியவாறு உண்ணுங்கள் என்கிறான். பெண்களுக்கு தனி விருப்பங்கள் உள்ளன என்கிறான். ஆண் விரும்புவதைத் தான் பெண்ணும் விரும்ப வேண்டும் என்பது கிடையாது என்கிறான்.
அது ஏதோ இந்த நூற்றாண்டில் கூறப்பட்டதன்று. நபிகள் நாயகம் காலத்தில் கூறப்பட்டதன்று. பெண்ணுரிமைக்காக பலத்த குரல் எழுப்பப்பட்ட போது கூறப்பட்டதன்று. 'ஆன்மா' இருக்கிறதா என்ற சர்ச்சை நடந்த காலத்தில் கூறப்பட்டதுமன்று.
வேறு எவரும் படைக்கப்படாத நேரத்திலேயே, இரண்டே இரண்டு பேர் மட்டும் படைக்கப்பட்டிருந்த நேரத்திலேயே இறைவன் இவ்வாறு கூறிவிட்டான். அதை நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் நினைவு படுத்துகிறான்.
அதுமட்டுமின்றி இறைவன் குறிப்பிட்ட மரத்தை நெருங்க வேண்டாம் என்று தடையுத்தரவு பிறப்பித்தான். அந்தத் தடையுத்தரவு பிறப்பிக்கும் போதும் இருவரையும் அழைத்தே தடையுத்தரவைக் கூறுகிறான். நீங்கள் இருவரும் நெருங்காதீர்கள் என்ற வாசகத்திலிருந்து இதை உணரலாம்.
அந்தக் கட்டளையை மீறி தடை செய்யப்பட்ட மரத்தை நெருங்கினார்கள். அந்த நிகழ்ச்சி குறித்து பைபிள் கூறும் போது, ஆதம் மிகவும் கட்டுப்பாடாக நடந்து கொண்டது போலவும், அவரது மனைவியிடம் தான் ஷைத்தான் கைவரிசையைக் காட்டியதாகவும், அவள் தான் தடையை மீறியதாகவும் குறிப்பிடுகிறது.
பெண்கள் வழிகெட்டவர்கள், பிறரை வழி கெடுப்பவர்கள், ஆண்கள் மகா பரிசுத்தர்கள் என்று சித்தரிக்கும் வகையில் பைபிள் அந்த நிகழ்ச்சியைக் கூறுகிறது.
ஆனால் திருக்குர்ஆனின் இந்த வசனங்கள் அதை மறுக்கின்றன.
ஷைத்தானுக்கு கட்டுப்பட்டு கடவுளின் கட்டளையை இருவரும் தான் மீறினார்கள். தடை செய்யப்பட்டவைகளை விரும்புவது பெண்களுக்கு மாத்திரம் உரியது அல்ல. ஆண்களும் அத்தன்மையைப் பெற்றவர்கள் தாம் என்று இவ்வசனங்கள் கூறுகின்றன.
மனிதன் என்ற தன்மை, அதாவது ஆசை, கோபம், கடவுளின் கட்டளையை மீறுதல், மனோ இச்சைக்கு அடிபணிதல் ஆகிய குணாதியங்கள் பெண்களிடம் இருப்பது போலவே ஆண்களிடமும் உள்ளன. அதனால் தான் இருவரும் பாவம் செய்தார்கள் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.
அது மாத்திரமின்றி தவறுகளுக்குத் தண்டனை வழங்குவதிலும் இன்றைய உலகில் பாரபட்சம் காட்டப்படுகின்றது.
ஆண்களின் தவறுகள், 'ஆண்கள் அப்படித்தான் இருப்பார்கள்' என்ற வார்த்தை ஜாலத்தால் நியாயப்படுத்தப்படுகின்றன.
அதே போல் தவறுகளுக்காக பெண்கள் தண்டிக்கப்படும் போது, 'பாவம் பெண்கள்! ஆண்களைப் போல் அவர்களைத் தண்டிக்கலாமா?' என்று பச்சாதாபம் காட்டப்படுகின்றது.
அந்த இரண்டு தவறான கோட்பாடுகளையும் இஸ்லாம் ஒப்புக் கொள்வதில்லை. இருவரையும் உடனே வெளியேறுமாறு கட்டளையிடுகிறான்.
ஆண் தப்புச் செய்யலாம். பெண் தப்புச் செய்யலாமா என்று கூறி பெண்களை மட்டும் தண்டிக்கவில்லை. பெண் பலவீனமானவள். அவளைத் தண்டிக்க முடியாது. நீ மட்டும் வெளியே போய் விடு என்று ஆணை மட்டும் வெளியேற்றவில்லை.
அந்த வசனங்கள் இரண்டையும் இன்னும் ஆழமாகச் சிந்திக்கும் போது உடலமைப்பில் ஆண் பெண் வித்தியாசம் இருந்தாலும் மனிதத் தன்மையில் இருவரும் சமமானவர்களே என்று குர்ஆன் கூறுவதை உணரலாம்.
மனிதத் தன்மையில் ஆணும் பெண்ணும் சமமே என்ற கோட்பாடு தான் உலகின் முதல் கோட்பாடு மனிதர்கள் தான் அந்தக் கோட்பாடுகளை மாற்றிவிட்டார்கள் என்பதை தெளிவுபடுத்துவதற்குத் தான், முதல் தம்பதிகளுக்கு இறைவன் பிறப்பித்த கட்டளையை நினைவுபடுத்துகிறான்.
வெளியீடு : இது ஓர் இஸ்லாமிய தமிழ் தஃவா குழுவின் இணையத்தளம்
திருக்குர்ஆன் அருளப்பட்ட வரலாறு
நபிகள் நாயகத்துக்கு முன் ஏராளமான இறைத் தூதர்கள் அனுப்பப்பட்டனர். இவ்வாறு அனுப்பப்பட்ட தூதர்கள் வரிசையில் இறுதியானவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்பது தான் இஸ்லாமிய நம்பிக்கை.
முதல் மனிதராகிய ஆதம் முதல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வரை எத்தனை தூதர்கள் வந்துள்ளனர் என்று குர்ஆன் கூறாவிட்டாலும் ஏராளமான தூதர்கள் அனுப்பப்பட்டதாகக் கூறுகிறது.
நபிகள் நாயகத்துக்கு முன் அனுப்பப்பட்ட தூதர்கள் குறிப்பிட்ட மொழியினருக்கோ, குலத்தினருக்கோ, சமுதாயத்தினருக்கோ அனுப்பப்பட்டனர். அவரவர் மொழியில் மக்களை நல்வழிப்படுத்த அவர்களுக்கு இறைவன் வழங்கிய செய்தியே வேதம் எனப்படும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்கு முன் இருந்த எல்லா மொழிகளிலும் இறைத் தூதர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். (பார்க்க: 14:4)
இவ்வாறு அனுப்பப்பட்ட தூதர்களில் இறுதியானவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். அவர்களுக்குப் பின் உலகம் அழியும் காலம் வரை இறைத் தூதர்கள் அனுப்பப்பட மாட்டார்கள்.
மற்ற இறைத்தூதர்கள் போல் குறிப்பிட்ட சமுதாயத்துக்கோ, குறிப்பிட்ட மொழியினருக்கோ அன்றி அகில உலகுக்கும் இறைத்தூதராக அனுப்பப்பட்டவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.
அவர்களுக்கு வழங்கப்பட்ட குர்ஆன் எனும் வேதத்துக்குப் பின் உலகில் வேறு வேதம் ஏதும் அருளப்படாது என்பதால் குர்ஆன் இறுதி வேதம் எனப்படுகிறது.
உலகம் முழுவதற்கும் வழிகாட்ட அருளப்படும் வேதம் அரபு மொழியில் ஏன் அருளப்பட வேண்டும் என்று சிலர் கருதலாம்.
அரபு மொழி தான் தேவ மொழி என்பதோ அது தான் உலகிலேயே உயர்ந்த மொழி என்பதோ இதற்குக் காரணம் அல்ல. எல்லா மொழிகளும் சமமானவை என்றே இஸ்லாம் கூறுகிறது. மொழியின் அடிப்படையில் எவரும் உயர்வு தாழ்வு கற்பிக்கக் கூடாது என்பதும் இஸ்லாத்தின் கொள்கை.
இஸ்லாம் அரபு மக்களுக்கு மட்டுமின்றி உலகில் உள்ள அனைத்து மொழி பேசுவோருக்காகவும் அருளப்பட்ட வாழ்க்கை நெறியாகும். பல்வேறு மொழி பேசும் மக்களுக்கு ஒரு வழிகாட்டு நெறியைக் கொடுத்து ஒரு வழிகாட்டியை அனுப்பும் போது ஏதாவது ஒரு மொழியில் தான் கொடுத்தனுப்ப முடியும். எந்த மொழியில் அந்த வழிகாட்டு நெறி இருந்தாலும் மற்ற மொழியைப் பேசுவோர் இது குறித்து கேள்வி எழுப்புவார்கள்.
யாராலும் எந்தக் கேள்வியும் எழுப்ப முடியாதவாறு இதற்கு ஒரு ஏற்பாடு செய்ய முடியாது. அரபு மொழிக்குப் பதிலாக தமிழ் மொழியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுப்பப்பட்டிருந்தால் இதே கேள்வியை மற்ற மொழி பேசும் மக்கள் கேட்காமல் இருக்க மாட்டார்கள்.
எனவே உலக ஒருமைப்பாட்டைக் கருத்தில் கொண்டு செய்யப்படும் காரியங்களில் மொழி உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுத்து உலக ஒருமைப்பாட்டைச் சிதைத்து விடக் கூடாது.
நாம் வாழுகின்ற இந்திய நாட்டில் பல்வேறு மொழி பேசும் மக்கள் வாழ்கின்றனர். ஆனால் நமது நாட்டிற்கு ஒரு தேசிய கீதத்தை வங்காள மொழியில் உருவாக்கி அதை அனைத்து மொழியினரும் ஏற்றுக் கொண்டிருக்கிறோம். இவ்வாறு ஏற்றுக் கொண்டிருப்பதால் இந்தியாவிலேயே முதன்மையான மொழி வங்காள மொழி தான் என்றோ மற்ற மொழிகள் தரம் குறைந்தவை என்றோ ஆகாது.
நாட்டின் ஒருமைப்பாட்டுக்காக மொழி உணர்வை சற்றே ஒதுக்கி வைத்து விட்டு, அந்நிய மொழியை ஏற்றுக் கொள்ளும் போது உலக ஒறுமைப்பாட்டுக்காகவும் உலக மக்கள் அனைவரும் ஒரே நல்வழியை நோக்கி திரும்ப வேண்டும் என்பதற்காகவும் மிகச் சில விஷயங்களில் மொழி உணர்வை ஒதுக்கி வைப்பதால் மனிதகுலத்துக்கு எந்தக் கேடும் ஏற்படாது. மாறாக உலகளாவிய ஒற்றுமை எனும் மாபெரும் நன்மை தான் ஏற்படும்.
ஏதாவது ஒரு மொழியில் தான் உலகாளவிய ஒரு தலைவரை அனுப்ப முடியும் என்ற அடிப்படையில் தான் நபிகள் நாயகத்திற்குத் தெரிந்த அவர்களுடைய தாய் மொழியான அரபு மொழியில் குர்ஆன் அருளப்பட்டது. உலகிலேயே அரபு மொழி தான் சிறந்த மொழி என்பதற்காக அரபு மொழியில் குர்ஆன் அருளப்படவில்லை.
குர்ஆன் எவ்வாறு அருளப்பட்டது?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எப்போது எவ்வாறு இறைத்தூதராக நியமிக்கப்பட்டார்கள்? என்பதையும் எவ்வாறு குர்ஆன் அருளப்பட்டது என்பதையும் நாம் தெரிந்து கொள்வது அதிகம் பயனளிக்கும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இயற்பெயர் முஹம்மத். இவர்கள் இன்றைய சவூதி அரேபியாவில் உள்ள மக்கா எனும் நகரத்தில் கி.பி 570ம் ஆண்டு பிறந்தார்கள்.
தாயின் வயிற்றில் இருக்கும் போது தந்தையை இழந்து, சிறு வயதிலேயே தாயையும் இழந்தார்கள். பெற்றோரை இழந்த பின் அவர்களின் தந்தை வழி பாட்டனார் அப்துல் முத்தலிப் என்பார் தமது பொறுப்பில் அவர்களை எடுத்து வளர்த்து வந்தார். அவரது மரணத்திற்குப் பிறகு அவர்களின் பெரிய தந்தை அபூதாலிபுடைய பொறுப்பில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வளர்ந்து இளமைப் பருவத்தை அடைந்தார்கள்.
சிறுவராக இருந்த போது ஆடு மேய்த்திருக்கிறார்கள். ஓரளவு விபரம் தெரிய வந்த பிறகு தமது பெரிய தந்தையோடு சேர்ந்து வியாபாரமும் செய்திருக்கிறார்கள்.
இந்த வியாபாரத்தின் காரணமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல வெளியூர் பயணங்களை மேற்கொண்டார்கள்.
25வது வயதில் தம்மை விட மூத்தவரான கதீஜா என்ற விதவையை மணந்தார்கள். அவரும் அன்றைய சமுதாயத்தில் பெரிய வசதி படைத்தவராக இருந்ததால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது 25ம் வயதிலேயே மிகவும் வசதிபடைத்தவராக மாறினார்கள்.
குர்ஆன் அருளப்பட்ட கால கட்டம்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த மக்கள் பல கடவுள் நம்பிக்கையுடையோராக இருந்தார்கள்.
ஏராளமான மூட நம்பிக்கைகளில் மூழ்கிக் கிடந்தனர்!
கடவுளை நிர்வாணமாக வழிபட்டனர்!
பெண் குழந்தைகள் பிறப்பதைக் கேவலமாகக் கருதியதுடன் பெண் குழந்தை பிறந்தால் அதை உயிருடன் புதைப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தனர்!
குடம் குடமாக மதுபானங்கள் அருந்தினார்கள்!
காமக் களியாட்டத்தில் மூழ்கித் திளைத்தனர்!
பெண்களை ஆடு மாடுகளைப் போன்று கருதினார்கள்!
தந்தை இறந்து விட்டால் தந்தையின் மனைவியை மகன் பயன்படுத்திக் கொள்வது சர்வசாதாரணமாக இருந்தது!
சாதி வேற்றுமையும் தலை விரித்தாடியது!
நபிகள் நாயகம் எந்தக் குலத்தில் பிறந்தார்களோ அந்தக் குலம் - குறைஷிக் குலம் - மிகவும் உயர்ந்த குலம் எனவும் மற்றவர்கள் அற்பமானவர்கள் எனவும் விதி செய்திருந்தனர்!
அரபு மொழி தான் ஒரே மொழி என்றும் மற்ற மொழி பேசுவோர் அஜமிகள் (கால்நடைகள்) என்றும் கூறும் அளவுக்கு அவர்களிடம் அரபு மொழி வெறி மிகைத்திருந்தது.
மனித உயிர்களைக் கொன்று குவிப்பது மிகச் சிறிய குற்றமாகக்கூட அவர்களுக்குத் தோன்றவில்லை. அற்பமான சண்டைகளுக்காகக் கூட கொலை செய்வார்கள்!
தமது குடும்பத்தில் ஒருவர் கொல்லப்பட்டால் கொலையாளியைப் பழி வாங்காது விட மாட்டார்கள். அவரைத் தம்மால் பழிவாங்க முடியாவிட்டால் தமது வாரிசுகளுக்கு வலியுறுத்திச் செல்வார்கள். பத்து தலைமுறைக்குப் பிறகாவது கொலையாளியின் குடும்பத்தில் ஒருவனைக் கொன்று கணக்குத் தீர்ப்பார்கள்.
இத்தகைய நிலையைக் கண்டு மனம் வெறுத்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது சமுதாயத்தின் நடவடிக்கைகள் சரியானவை அல்ல என்று திட்ட வட்டமாக உணர்ந்தார்கள்.
எனவே தமது நாற்பதாம் வயதில் மக்காவிற்கு வெளியே உள்ள 'ஹிரா' எனும் குகைக்குச் சென்று தனிமையில் சிந்திப்பதை வழக்கமாகக் கொள்ளலானார்கள்.
பல நாட்களுக்குத் தேவையான உணவைத் தயார் செய்து கொண்டு குகையிலேயே தங்கி விடுவார்கள். உணவு முடிந்ததும் வீட்டுக்கு வந்து உணவு தயாரித்துக் கொண்டு மறுபடியும் குகைக்குச் சென்று விடுவார்கள்.
இவ்வாறு குகையில் இருந்த போது தான் வானத்தையும் பூமியையும் தொட்டுக் கொண்டிருக்கும் அளவுக்கு பிரம்மாண்டமான தோற்றத்தில் ஒருவர் நிற்பதைக் கண்டார்கள்.
அவர் நபிகள் நாயகத்தை இறுகக் கட்டியணைத்து 'ஓது' எனக் கூறிய போது தமக்கு ஓதத் தெரியாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
மீண்டும் அவர் 'ஓது' எனக் கூற அப்போதும் தெரியாது என்று பதிலளித்தார்கள். பின்னர் அவர் நபிகள் நாயகத்தை இறுகக் கட்டியணைத்து 'படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக' என்று தொடங்கும் சில வார்த்தைகளைக் கூறினார். (இது குர்ஆனில் 96வது அத்தியாயத்தின் முதல் ஐந்து வசனங்களாக இடம் பெற்றுள்ளது)
இப்படித்தான் நபிகள் நாயகம் இறைத் தூதராக நியமிக்கப்பட்டு முதல் செய்தியும் அருளப்பட்டது. ஆனால் நபிகள் நாயகம் அவர்கள் அதிர்ச்சியடைந்து அச்சம் கொண்டார்கள். தமது மனைவியிடம் வந்து இதைக் கூறினார்கள்.
'இறைவன் உங்களைக் கைவிட மாட்டான், மக்களுக்கு நீங்கள் உதவுகிறீர்கள், ஏழைகளுக்கு வாரி வழங்குகிறீர்கள், உறவினர்களை உபசரிக்கிறீர்கள், எனவே அல்லாஹ் உங்களைக் கைவிட மாட்டான்' என்றெல்லாம் அவர்களின் மனைவி கதீஜா அவர்கள் ஆறுதல் படுத்தினார்கள்.
ஆயினும் தமது ஆறுதல் போதிய பயனளிக்காததைக் கண்டு தமது உறவினர் வரகாவிடம் நபிகள் நாயகத்தை அழைத்துச் சென்றார்கள். இவர் முந்தைய வேதங்களைக் கற்றறிந்து, கிறித்துவ மார்க்கத்தையும் தழுவியிருந்தார்.
'நீர் இறைவனின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளீர், உம்மை உமது சமுதாயத்தினர் ஊரை விட்டே வெளியேற்றும் நிலையை அடைவீர், ஏனெனில் இறைத் தூதர்கள் பிரச்சாரம் செய்யும் போது இது தான் நடந்துள்ளது என்றெல்லாம் அவர் கூறி நம்பிக்கையூட்டினார். (நூல்: புகாரி - 2)
இப்படி ஆரம்பித்த இறைச் செய்தியின் வருகை சிறிது சிறிதாக சந்தர்ப்பத்துக்கு ஏற்ப 23 ஆண்டுகள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது. 23 ஆண்டுகளில் சிறிது சிறிதாக அருளப்பட்ட இறைச் செய்தியின் தொகுப்பே திருக்குர்ஆன்.
வெளியீடு : இது ஓர் இஸ்லாமிய தமிழ் தஃவா குழுவின் இணையத்தளம்
வியாழன், 4 ஜூன், 2009
காயல்பட்டினம் பள்ளியில் திருக்குர்ஆன் விளக்கவுரை வகுப்புகள் துவக்கம்
காயல்பட்டினம் நெய்னா தெருவில் புதிதாகக் கட்டப்பட்ட மஸ்ஜித் ùஸய்யிதினா பிலாஸ் பள்ளிவாசல் கடந்த மார்ச் மாதம் 1-ம் தேதி பொதுமக்களின் வழிபாட்டுக்காக திறந்துவைக்கப்பட்டது.
அங்கு நிரந்தர செயல்பாடுகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அதில் ஒன்றான திருக்குர்ஆன் வாராந்திர விளக்க உரை வகுப்புகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை துவக்கிவைக்கப்பட்டன.
ஞாயிற்றுக்கிழமை தோறும் மஃரிப் தொழுகைக்குப் பிறகு துவங்கி இஷா பாங்கு வரை நடைபெறும் இந்நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைமை இமாம் முஹம்மது இப்ராகிம் மஹ்ழரி இதை இந்த வகுப்புகளை ஞாயிற்றுக்கிழமை நடத்தினார்.
வெள்ளி, 29 மே, 2009
இணை தளத்தில் முதல் முறையாக தமிழ் குரான்
முதல் முறையாக தமிழ் குரானை அதன் உண்மையான புத்தக வடிவில் வலை உலகில் அறிமுகப் படுத்துகிறோம். குரானின் பக்கங்களைப் புரட்டுவது போல் நீங்கள் புரட்டி உங்களுக்கு தேவைப் பட்ட பக்கங்களையோ, திருகுரானின் அத்தியாயங்களையோ புரட்டி பார்த்துக் கொள்ளலாம். நாங்கள் எடுத்துக் கொண்ட முயற்சிக்கு உங்கள் முழுமையான ஆதரவே காரணம் திருகுரானை இந்த புதிய வடிவில் காண கீழ்கண்ட முகவரியில் அமுத்தவும்
http://tamilquranmp 3.com/
தயவு செய்து இந்த மடலை உங்கள் நண்பர்களுக்கும், சகோதரர்களுக்கும் அனுப்பித் தந்து அணைவரும் பயன் பெற செய்யவும். என்றும் உங்கள ஆதரவை நாடும் k@der Adminstrator
ஈமெயில் உதவி : Mr.Abubacker Siddique, Dubai
சமஸ்கிருதத்தில் மொழி பெயர்க்கப்படும் குர்ஆன்

ஞாயிறு, 24 மே, 2009
நாகர்கோவில் திருக்குர்ஆன் மாநாடு
நாகர்கோவில் அருகேயுள்ள பறக்கை ஐஎஸ்இடி நகரில் திருக்குர்ஆன் மாநாடு ஞாயிற்றுக்கிழமை (மே 24) நடைபெறுகிறது.
இதுகுறித்து ஜம்யியது அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ் (ஜே.ஏ.கியூ.எச்) மாநில தலைவர் எஸ். கமாலுத்தீன்மதனி, கோவை எஸ். அய்யூப் உள்ளிட்டோர் நாகர்கோவிலில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மனித சமுதாயம் தன்னைப் படைத்த இறைவனைப் பற்றி அறிந்து மனிதர்கள் எல்லோரும் ஒரே இறைவனுடைய படைப்புகள், எல்லோரும் ஒருதாய் மக்கள், பிறப்பால் மனிதர்களிடையே பாகுபாடு கிடையாது, எல்லோரும் படைத்த இறைவனித்திலேயே போய் சேரவிருக்கிறோம் என்ற உண்மையை மனித சமுதாயத்துக்கு திருக்குர்ஆன் அறிவுறுத்துகிறது.
இந்த உண்மையை மக்களுக்கு எடுத்துக் கூறுவதற்காக இம் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணி முதல் இரவு 9 மணிவரை இம் மாநாடு நடக்கிறது. மாநாட்டில் பங்குபெற்று சிறப்புரையாற்ற இலங்கையிலிருந்து இஸ்மாயில் ஸலபி, கேரளத்திலிருந்து அப்துஸ்ஸலாம் மோங்கம், சென்னையிலிருந்து முப்தி உமர் ஷரீப், மதுரையிலிருந்து ரஹ்மதுல்லாஹ் பிர்தவ்ஸி உள்ளிட்ட பல அறிஞர்கள் வருகிறார்கள்.
மாநாட்டுக்கு ஓய்வுபெற்ற காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் ஏ. மலுக்குமுதலி தலைமை வகிக்கிறார். மாநாட்டின்போது புதிய புத்தகங்களும் வெளியிடப்படுகின்றன. சுமார் 10 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர்கள் தெரிவித்தனர்.
செவ்வாய், 31 மார்ச், 2009
நாவைப் பேணுதல் பற்றி குர்ஆனின் போதனைகள்!

அல்லாஹ், "இது உண்மை பேசுபவர்களுக்கு அவர்களுடைய உண்மை பலனளிக்கும் நாளாகும். கீழே சதா நீரருவிகள் ஒலித்தோடிக் கொண்டிருக்கும் சுவனபதிகள் அவர்களுக்குண்டு, அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பார்கள். 5:119
நேர்மையாக பேசுக!
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (எந்நிலையிலும்) நேர்மையான சொல்லையே சொல்லுங்கள்.அழகானதைப் பேசுக!பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(களான ஏழை)களுக்கும் நன்மை செய்யுங்கள்; மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள். 2:83
கனிவாகப் பேசுக!
நியாயமாகப் பேசுக!
நீங்கள் பேசும்பொழுது அதனால் பாதிக்கப்படுபவர் நெருங்கிய உறவினராக இருந்த போதிலும் - நியாயமே பேசுங்கள். 6:152
அன்பாகப் பேசுக!
அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை. 4:36
வீண் பேச்சை தவிர்த்துடுக!
நம் வசனங்களைப் பற்றி வீண் விவாதம் செய்து கொண்டிருப்போரை நீர் கண்டால், அவர்கள் அதைவிட்டு வேறு விஷயங்களில் கவனம் செலுத்தும் வரையில் நீர் அவர்களைப் புறக்கணித்து விடும். 6:68
பொய் பேசாதீர்!
உங்கள் நாவுகள் (சில பிராணிகள் பற்றி) பொய்யாக வர்ணிப்பது போல், இது ஹலாலானது, இது ஹராமானது என்று அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டாதீர்கள் - நிச்சயமாக, எவர் அல்லாஹ்வின் மீது பெய்யை இட்டுக்கட்டுகிறார்களோ அவர்கள் வெற்றியடைய மாட்டார்கள். 16:116
புறம் பேசாதீர்!
ஆதாரமின்றி பேசாதீர்!
யாதோர் ஆதாரமுமின்றி, அல்லாஹ்வின் வசனங்களைப் பற்றித் தர்க்கம் செய்வது, அல்லாஹ்விடத்திலும் ஈமான் கொண்டவர்களிடத்திலும் மிகவும் வெறுக்கப்பட்டதாகும். 40:35
அவதூறு பேசாதீர்!
எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள, பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்; 24:23
திங்கள், 30 மார்ச், 2009
ஸ்ரீவையில் குரானை புரிந்து கொள்ள தமிழில் பயிற்சி வகுப்பு
ஸ்ரீவைகுண்டம் சின்னபள்ளிவாசல் அடுத்த மண்டப்பத்தில் வைத்து திருகுரான் மற்றும் தொழுகை பற்றி எளிதில் புரிந்து கொள்ள தமிழில் பயிற்சி வகுப்பு நடைபெற்றது..
நேற்று மாலை 4.00 மணி முதல் 7.00 மணி வரை நடைபெற்றது.. இதில் ஆண்கள், பெண்கள் குழந்தைகள் உட்பட சும்மர் 100 பேர் கலத்துக் கொண்டனார்.
வியாழன், 26 மார்ச், 2009
அல்குர்ஆனின் சிறப்புகள
அல்குர்ஆனுடன் இரண்டு விதமான தொடர்புகளை ஏற்படுத்துவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கட்டாயக் கடமையாகும்.
1. திருக்குர்ஆனை பொருளறிந்து படிப்பது. அதன் கட்டளைகளைப் புரிந்து அதன் அடிப்படையில் வாழ்க்கையை அமைத்துக் கொள்வது.
2. அல்குர்ஆனை அதிகமாக ஓதி அளவற்ற நன்மையைப் பெற்றுக் கொள்வது.
அல்குர்ஆனை பொருளறிந்து படிப்பதுதிருமறையை சூரத்துல் ஃபாத்திஹாவிலிருந்து சூரத்துன்னாஸ் வரை முழுமையாகப் படித்து அதன் செய்திகளை அறிந்து கொள்ளவேண்டும். அதன் கட்டளைகளுக்கு கட்டுப்படுவது, அது தடுக்கும் செயல்களை விட்டும் விலகிக் கொள்வது. அதில் கூறப்பட்ட சம்பவங்களின் மூலம் படிப்பினை பெறுவது, இவ்வாறு அல்குர்ஆனோடு நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொள்வது முஸ்லிம்கள் அனைவரின் மீதும் கட்டாயக் கடமையாகும். நபி(ஸல்) அவர்களின் குணநலன்கள் அல்-குர்ஆனாகவே இருந்தது என்று அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் கூறியதின் பொருளும் இதுதான்.
எனவே நம்முடைய வாழ்க்கையை முற்றிலும் அல்-குர்ஆனுக்கு கட்டுப்படும் வாழ்க்கையாக அமைத்துக் கொள்ளவேண்டும். அதுவே அல்-குர்ஆன் இறக்கி அருளப்பட்டதின் மகத்தான நோக்கமாகும்.இந்த நோக்கத்தைப் புரிந்து கொண்ட நபித்தோழர்களும் நபித்தோழியர்களும் அல்-குர்ஆனுக்கு இணங்க தங்களது வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்கள். ஒவ்வொரு வசனம் இறங்கும் போதும் அதன் கட்டளைகளுக்கு உடனே கட்டுப்படுபவர்களாக இருந்தனர். இதற்கு வரலாற்றில் எத்தனையோ சான்றுகள் உள்ளன. எனவே நாமும் அல்குர்ஆனைப் படித்து, அதன் அடிப்படையில் செயல்பட்டு ஈருலக வெற்றியைப் பெறுவோமாக!
திருக்குர்ஆன் பொதுமக்களுக்குப் புரியாது என்று கூறுவது தவறான கூற்றாகும். திருக்குர்ஆனின் அர்த்தம் மற்றும் விளக்கங்களை நேரடியாக அறிவதற்கு அரபி மொழியில் புலமை அவசியம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் மொழி பெயர்க்கப்பட்டவற்றைப் படித்து அதில் உள்ள செய்திகளை ஒவ்வொருவரும் அவரவரின் அறிவுக்கு ஏற்றவாறு புரிந்து கொள்ள முடியும். ஒரு நூல் மொழிபெயர்க்கப்படுகிறது என்றால் அந்த மொழியை அறியாதவர்கள் அதனை புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்குத்தான். எனவே குர்ஆனை அதன் மொழிபெயர்ப்பை புரிந்து கொள்ள முடியாதென்பது தவறானதும் அல்லாஹ்வின் வேதவசனங்களுக்கு மாற்றமான கூற்றுமாகும். அல்லாஹ் இதனை 54: 32, 47: 24 வசனங்களின் மூலம் உணர்த்துகிறான்.
நிச்சயமாக இக்குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம்; எனவே இதிலிருந்து நல்லுணர்வு பெறுவோர் உண்டா? (அல்-குர்ஆன் 54:32)
மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா? (அல்-குர்ஆன் 47:24)
அல்குர்ஆனை ஓதுதல்
பொருளறியாமல் படித்தாலும் ஆன்மீக ரீதியாக நன்மையை பெற்றுத்தரும் ஒரே நூல் அல்குர்ஆன் மட்டும்தான். திருக்குர்ஆனை ஓதுவதில் எண்ணிலடங்கா நன்மைகள் கிடைக்கின்றன. அல்குர்ஆனை முறையாக, புரிந்து ஓதுபவர் மறுமையில் மலக்குமார்களுடன் இருப்பார். திருமறையைப் படித்தவர்களுக்காக அது மறுமையில் அல்லாஹ்விடம் சிபாரிசு செய்யும். இதுபோன்ற இன்னும் பல நன்மைகளும் சிறப்புக்களும் உள்ளன. எனவே பொருட்செலவோ, கடின உடலுழைப்போ இன்றி குறைந்த நேரத்தில் நிறைந்த நன்மையைப் பெற்றுத் தரும் திருமறையை அதிகமாக ஓதிடவேண்டும்.
குறிப்பாக ரமலான் மாதத்தில் அதிமாக ஓதவேண்டும். ரமலான் மாதத்தில் ஒவ்வொரு முஸ்லிம் ஒரு தடவையாவது குர்ஆனை முழுமையாக ஓதி முடிப்பது நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுதலில் ஒன்றாகும்.
நபி(ஸல்) அவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் ரமலானில் ஒரு தடவை குர்ஆனை ஓதிக் காண்பிக்கப்பட்டது. அவர்கள் மரணிக்கும் வருடம் இரண்டு தடவை ஓதிக் காண்பிக்கப்பட்டது. (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) - ஆதாரம் : புகாரி)
அல்குர்ஆனின் எழுத்துக்களை முறையாக உச்சரித்து, நிறுத்தி, நிதானமாக, ஓதவேண்டும்.(நபியே! இரவுத் தொழுகையான) அதில் குர்ஆனை (நன்கு திருத்தமாக) நிறுத்தி, நிறுத்தி ஓதுவீராக! என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான். குர்ஆனை அழகாக, ராகமாக, ஓதாதவன் நம்மைச் சார்ந்தவனல்ல என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
குர்ஆனை ஓதுவதை விட்டும் பொடுபோக்காக இருக்கும் சகோதர, சகோதரிகள், நாளை மறுமை நாளில் ஓரு நன்மைக்காக அங்கும் இங்கும் ஓடித் திரிந்து அல்லோலப்பட்டும் அது கிடைக்காமல் நரகில் விழ நேரிடும் அந்நாளை நாம் மறந்து விடக்கூடாது.
இதோ குர்ஆனின் சிறப்புக்கள் குறித்து குர்ஆன் மற்றும் நபிமொழிகள் கூறிய ஒருசில சிறப்புக்கள்:- குர்ஆன் குறித்து குர்ஆன் கூறுவது
1. குர்ஆனை புரிந்து கொள்வது எளிது - நிச்சயமாக இக்குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம்; எனவே இதிலிருந்து நல்லுணர்வு பெறுவோர் உண்டா? (அல்-குர்ஆன் 54:32)
2. சிந்திக்கத் தூண்டும் குர்ஆன் - மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா? (அல்குர்ஆன் 47:24)
3. குர்ஆன் விசுவாசிகளுக்கு அருமருந்து - இன்னும், நாம் முஃமின்களுக்கு ரஹ்மத்தாகவும், அருமருந்தாகவும் உள்ளவற்றையே குர்ஆனில் (படிப்படியாக) இறக்கிவைத்தோம் ஆனால் அக்கிரமக் காரர்களுக்கோ இழப்பைத் தவிர வேறெதையும் (இது) அதிகமாக்குவதில்லை. (அல்-குர்ஆன் 17:82)
4. குர்ஆன் மனிதர்களின் இதய நோய்நிவாரணி - மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக ஒரு நல்லுபதேசமும் வந்துள்ளது. (உங்கள்) இதயங்களிலுள்ள நோய்களுக்கு அருமருந்தும் (வந்திருக்கிறது) மேலும் (அது) முஃமின்களுக்கு நேர்வழிகாட்டியாகவும், நல்லருளாகவும் உள்ளது. (அல்-குர்ஆன் 10:57)
5. குர்ஆனை ஓதும் முன்பு ஷைத்தானிய தீண்டுதலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருதல் - மேலும் (நபியே!) நீர் குர்ஆனை ஓதுவீராயின் (முன்னதாக) விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் காவல் தேடிக்கொள்வீராக. (அல்-குர்ஆன் 16:98)
6. குர்ஆன் எழுத்து வடிவில் நபிக்கு அருளப்படவில்லை - காகிதத்தில் (எழுதப்பட்ட) ஒரு வேதத்தையே நாம் உம் மீது இறக்கி வைத்து, அதனை அவர்கள் தம் கைகளால் தொட்டுப் பார்த்தபோதிலும், இது பகிரங்கமான சூனியத்தைத்தவிர வேறில்லை என்று அந்நிராகரிப்போர் நிச்சயமாக சொல்வார்கள். (அல்-குர்ஆன் 6:7)
7.குர்ஆன் நபியின் சொந்த கூற்றல்ல - அகிலத்தாருக்கெல்லாம் இறைவனிடமிருந்து (இது) இறக்கியருளப்படடதாகும். அன்றியும், நம்மீது சொற்களில் சிலவற்றை இட்டுக் கட்டிக் கூறியிருப்பாரானால், அவருடைய வலக்கையை நாம் பற்றிப் பிடித்துக் கொண்டு பின்னர், அவருடைய நாடி நரம்பை நாம் தரித்திருப்போம். (அல்-குர்ஆன் 69: 43-46)
குர்ஆன் குறித்து நபிமொழிகள் கூறுவது
1. நிச்சயமாக இந்தக் குர்ஆன் பரிந்துரை செய்யக்கூடியதாகும். அது ஏற்கப்படக்கூடியதுமாகும். அதனைப் பின்பற்றினால் அவரை அது சுவனத்தில் சேர்க்கும். அதனை பின்பற்றாமல் விட்டு விட்டால் அல்லது நிராகரித்தால் அவன் நரகின் அடித்தளத்தில் தள்ளப்படுவான். (அறிவிப்பாளர்: இப்னு மஸ்வூத்(ரலி) – ஆதாரம் : முஸ்லிம்)
2. குர்ஆனை ஓதி அதன்படி அமல் செய்தவரையும், குர்ஆனையும் நாளை மறுமையில் கொண்டு வரப்படும், குர்ஆனின் இரண்டு அத்தியாயங்கள் அல்பகரா, ஆலஇம்ரான் முன் வந்து அந்த இரண்டையும் ஓதியவருக்காக அல்லாஹ்விடத்தில் வாதாடும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)
3. குர்ஆனின் விஷயத்தில் தர்க்கம் புரிவது இறை மறுப்புச் செயலாகும். அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) - ஆதாரம் : அபூதாவூத்
4. குர்ஆனைத் தானும் கற்று பிறருக்கும் கற்றுக் கொடுப்பவரே உங்களில் சிறந்தவர். அறிவிப்பாளர்: உஸ்மான்(ரலி) – ஆதாரம் : புகாரி
5. இக்குர்ஆனின் ஒரு முனை அல்லாஹ்வின் கையிலும் மறுமுனை உங்கள் கைளிலும் உள்ளது. எனவே இதனை உறுதியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் இம்மையில் வழிதவறமாட்டீர்கள், மறுமையில் அழிவுறவும் மாட்டீர்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) - ஆதாரம் : தப்ரானி )
6. பேச்சுக்களில் மிகச் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிகாட்டுதல்களில் மிகச்சிறந்தது முஹம்மது(ஸல்) அவர்களின் பாதையாகும். தீனில் தீமையானது மார்க்கத்தில் புதிதாகப் புகுத்தப்பட்டதாகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். (ஆதாரம் : முஸ்லிம்)
7. இவ்வேதத்தைக் கொண்டே அல்லாஹ் சில கூட்டத்தாரை உயர்த்துகிறான். மற்றோரு கூட்டத்தினரை இதனைக் கொண்டே தாழ்த்துகிறான். சமுதாய உயர்வு, தாழ்வுக்கு காரணம் குர்ஆனே. (அறிவிப்பாளர்: உமர்(ரலி) - ஆதாரம் : முஸ்லிம்)
8. குர்ஆனின் சிறு பகுதியேனும் யார் உள்ளத்தில் மனனம் இல்லையோ அவர் உள்ளம் பாழடைந்த வீட்டைப் போன்றது. அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்(ரலி) – ஆதாரம் : திர்மிதி
9. எவர் குர்ஆனிலிருந்து ஒரு எழுத்தை ஓதினால் நன்மை இருக்கிறது. ஒரு நன்மை அதுபோன்று பத்து மடங்காக்கப்படும். "அலீஃப், லாம், மீம்" ஒரு எழுத்து என்று சொல்லமாட்டேன். மாறாக அலீஃப் ஒரு எழுத்து, லாம் ஒரு எழுத்து, மீம் ஒரு எழுத்துமாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர் : இப்னு மஸ்வூத்(ரலி) - ஆதாரம் : திர்மிதி, தாரமி.)
10. குர்ஆனை ஓதக்கூடியவருக்கு உவமைகளையும், ஓதாமல் இருப்பவருக்கு உவமைகளையும் பெருமானார்(ஸல்) அவர்கள் மொழிந்துள்ளார்கள். குர்ஆனை ஓதக்கூடிய முஃமினின் உவமை பழத்தைப் போன்றது. அதனுடைய வாசனையோ மணமானது. அதனுடைய சுவையோ ருசிக்கத்தக்கது. குர்ஆனை ஓதாத மூஃமீனின் உவமை பேரித்தம் பழத்தை போன்றது. அதற்கு வாசனை இல்லை. அதனுடைய சுவையோ இனிப்பானது. குர்ஆனை ஓதாத நயவஞ்சகனின் உவமை குமட்டிக்காய் போன்றது. அதற்கு வாசனை இல்லை. அதனுடைய சுவையோ கசப்பானது. குர்ஆனை ஓதக்கூடிய நயவஞ்சகனின் உதாரணம் துளசி செடியை போன்றது. அதனுடைய வாசனை மணமானது. அதனுடைய சுவையோ கசப்பானது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபு மூஸா(ரலி) - ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)
11. யார் குர்ஆனை ராகமாக (தஜ்வீத்துடன்) ஓதவில்லையோ அவர் நம்மைச் சார்ந்தவரல்ல. (அறிவிப்பாளர்: பசீர் பின் அப்துல் முன்திர்(ரலி) - ஆதாரம் : அபூதாவூத்)
12. குர்ஆனைக் கற்றுக் கொள்ளுங்கள் மேலும் அதை ஓதுங்கள். குர்ஆனைக் கற்று அதனை ஒதி அதன் அடிப்படையில் நடப்போருக்கு உவமையானது கஸ்தூரியால் நிரப்பப்பட்ட பையைப் போன்றது. அது அனைத்து இடங்களிலும் மணம் வீசிக்கொண்டிருக்கும். குர்ஆனைக் கற்று அது அவருடைய உள்ளத்தில் பசுமையாய் பதிந்தும் அதனடிப்படையில் நடக்கவில்லையோ அவரின் உவமை கஸ்தூரியால் நிரப்பப்பட்ட பையை அது பரவாமல் கட்டிக்கொண்டவரைப் போல என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபுஹூரைரா(ரலி) - ஆதாரம் : திர்மிதி, நஸயீ, இப்னுமாஜா)
13. நாங்கள் திண்ணையில் அமர்ந்து இருக்கிற சமயத்தில் பெருமானார்(ஸல்) எங்களிடம் வந்து உங்களிடம் பாவம் செய்யாது சொந்த பந்தங்களை துண்டிக்காத நிலையில் ஒவ்வொரு நாளும் புத்ஹான் அல்லது ஹதீக் என்ற இடத்திற்கு சென்று திமில்களுடைய இரண்டு ஓட்டகங்களை கொண்டு வர யார் விரும்புவார்? என வினவினார்கள். நாங்கள் அனைவரும் இதை விரும்புவோம் என்று பதிலளித்தோம். உங்களில் ஒருவர் பள்ளிவாசல் பக்கம் செல்லக்கூடாதா? அவ்வாறு சென்று அல்லாஹ்வுடைய வேத்தில் இரண்டு வசனங்களை ஓதுதல் அல்லது கற்றல் இரண்டு ஒட்டகங்களை விட சிறந்தது. மூன்று வசனங்களை ஓதுவது மூன்று ஒட்டகங்களை விட சிறந்தது. நான்கு வசனங்களை ஓதுவது நான்கு ஒட்டகங்களை விட சிறந்தது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். உங்களில் ஒருவர் தன்னுடைய இல்லத்திற்கு செல்லும்போது தன்னுடன் நல்ல கொழுத்த மூன்று ஒட்டகங்களை பெற்றுச் செல்லவேண்டும் என்று விரும்புவாரா? என்று வினவினார்கள். நாங்கள் அனைவரும் அதை விரும்புவோம் என்று கூறினோம். மூன்று (குர்ஆனிய) வசனங்களை உங்களில் ஒருவர் தன்னுடைய தொழுகையில் ஓதுவது அவருக்கு நல்ல கொழுத்த மூன்று ஒட்டகங்கள் கிடைப்பதை விட சிறந்தது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபுஹூரைரா(ரலி) - ஆதாரம் : முஸ்லிம், இப்னுமாஜா)
14. குர்ஆனை ஓதுவதில் தேர்ச்சி பெற்றவர் கண்ணிமிக்க வானவர்களுடன் இருப்பார். குர்ஆனை ஒதுவது சிரமமாக இருப்பினும் அதைத் திருப்பித்திருப்பி சிரமத்துடன் ஓதுவாரானால் அவருக்கு இரண்டு கூலி இருக்கிறது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஆயிஷா(ரலி) - ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)
15. மறுமை நாளில் குர்ஆனை ஓதி அதனடிப்படையில் நடந்தவரிடம் குர்ஆனிய தோழரே ஓதுவீராக என்று கூறப்படும். மேலும் உலகத்தில் எவ்வாறு நிறுத்தி நிதானமாக ஓதினீரோ அவ்வாறு ஓதுவீராக! நிச்சயமாக எந்த வசனத்தை கடைசியாக ஓதி முடிப்பாரோ அதுதான் சொர்க்கத்தில் உமது அந்தஸ்தாகும் என்று கூறப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி) - ஆதாரம் : அபூதாவுத், திர்மிதி)
16. குர்ஆனை ஓதிய தோழர் மறுமையில் வருவார். அப்போது குர்ஆன் இறைவா இவருக்கு ஆடையை அணிவி என்று சொல்லும் அப்போது அவருக்கு உயர்ந்த கிரீடம் அணிவிக்கப்படும். இறைவா இவருக்கு உன் அருளை வழங்குவாயாக! என்று கூறும். அப்போது அவருக்கு உயர்ந்த சீருடை அணிவிக்கப்படும். பிறகு குர்ஆன் இவரை பொருந்திக் கொள்ளுமாறு சொல்லும் அவரை இறைவன் பொருந்திக் கொள்வான். அம்மனிதரிடம் குர்ஆனை நிறுத்தி நிதானமாக ஒதுவீராக!, அவர் ஒதுகிறபோது ஒவ்வொரு வசனத்திற்க்கும் ஒரு நன்மை அதிகப்படுத்தப்படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபுஹூரைரா(ரலி) - ஆதாரம் : திர்மிதி, இப்னு குஸைமா)
குர்ஆன் உயிருடன் இருக்கும் போதே படித்து நேர்வழி பெறுவதற்குத்தானேயொழிய இறந்த பின் மரணித்தவர்களுக்கு குர்ஆனை அஞ்சல் செய்வதற்கு இல்லை. (இது) உயிரோடிருப்பவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறது. நிராகரிப்பவர்களுக்கு (தண்டனையுண்டு என்ற) வாக்கை உண்மையென உறுதிப்படுத்துகிறது (அல்குர்ஆன் 36: 70)
குர்ஆனை அல்லாஹ் நமக்கு அருளிய நோக்கம் நாம் அதைப் படித்து, சிந்தித்துச் செயல்பட வேண்டும் என்பதற்குத்தான். ஆனால் முதிய வயதை அடைந்தும் குர்ஆனை ஓதத் தெரியாதவர்கள் நம்மில் பலர் உள்ளனர். இது கவலை தரக்கூடிய ஒன்றாகும். முதிய வயதாகிவிட்டாலும் குர்ஆனைக் கற்றுக் கொள்ள முடியும் என்பது உண்மை. உங்களை மரணம் வந்தடைவதற்கு முன் குர்ஆனை ஓதத் தெரிந்தவர்களிடம் சென்று குர்ஆனை ஓதத் தெரிந்து கொள்ளுங்கள். புதிதாக இஸ்லாத்தை ஏற்ற பல சகோதரர்கள் குர்ஆனை சரளமாக ஓதவும், அதன்படி செயல்படவும் செய்கின்றார்கள். நாமோ பரம்பரை முஸ்லிம் என்று சொல்லிக்கொண்டு நமது வழிகாட்டியாகிய குர்ஆனைப் பற்றி எதுவும் தெரியாதவர்களாக இருக்கின்றோம். குர்ஆனைப் படியுங்கள். அதைப்படிப்பது மிகவும் இலகுவானது.
குர்ஆனைப் படித்து, விளங்கி, அதன்படி செயல்பட வேண்டும் என்று அல்லாஹ் கூறுகின்றான். ஆகவே அன்புள்ள சகோதர சகோதரிகளே! குர்ஆனை அதிகமதிகம் ஓதுங்கள். அதன் கருத்துக்களை தர்ஜுமதுல் குர்ஆனில் விளங்கிப்படியுங்கள். விளங்காதவற்றை அறிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்துக்கொள்ளுங்கள். அதன் படி செயல்படுங்கள்.
குர்ஆனைப் படித்து அதன்படி நடந்து ஈருலக வெற்றி பெற அல்லாஹ் நம் அனைவருக்கும் வாய்ப்பளிப்பானாக..!
நன்றி : முதுவை ஹிதாயத்
இறை வசனம் :
நபியே!) நீர் பார்க்கவில்லையா? வானங்களிலும் பூமியிலும் உள்ளவையும், பறவைகள் (விண்ணில் தங்கள்) இறக்கைகளை விரித்(துப் பறந்)த வண்ணமாக நிச்சயமாக அல்லாஹ்வைத் தஸ்பீஹு செய்(து துதிக்)கின்றன. ஒவ்வொன்றும் தன் தொழுகையையும், (அல்லாஹ்வை) தஸ்பீஹு செய்யும் வழியையும் திட்டமாக அறிந்தே இருக்கிறது - அல்லாஹ்வும் அவை செய்பவற்றை நன்கறிந்திருக்கிறான். (அல்குர்ஆன்: 24:41)
நிராகரிப்போரின் செயல்கள் கானல் நீரே!
அன்றியும், எவர்கள் காஃபிராக இருக்கிறார்களோ, அவர்களுடைய செயல்கள் பாலைவனத்தில் (தோற்றமளிக்கும்) கானல் நீரைப் போலாகும்; தாகித்தவன் அதைத் தண்ணீரென்றே எண்ணுகிறான் - (எது வரையெனில்) அதற்கு (அருகில்) அவன் வரும் பொழுது ஒரு பொருளையும் (அங்கே) காணமாட்டானே (அது வரை) ஆனால், அங்கு அவன் அல்லாஹ் (அவனுக்கு விதித்திருக்கும் முடி)வை(யே) காண்கின்றான்; (அதன் படி அல்லாஹ்) அவன் கணக்கைத் தீர்க்கிறான்; மேலும், அல்லாஹ் கணக்குத் தீர்ப்பதில் துரிதமானவன். (அல்குர்ஆன்: 24:39)
அல்லாஹ்வின் பெயர் மட்டுமே கூறப்பட வேண்டிய கண்ணியமிக்க மஸ்ஜிதுகள்!
இறை இல்லங்களில் அவனது பெயர் கூறப்படவேண்டுமென்றும் (அவற்றின் கண்ணியம்) உயர்த்தப்பட வேண்டுமென்றும் அல்லாஹ் கட்டளையிடுகிறான். அவற்றில் காலையிலும் மாலையிலும் (முஃமின்கள்) அவனை துதி செய்து கொண்டிருப்பார்கள். (அல்குர்ஆன்: 24:36)
ஒளி மிக்க சத்தியப்பாதை!
அல்லாஹ் வானங்கள் பூமிக்கு ஒளி (ஏற்படுத்துபவன்) அவன் (ஏற்படுத்தும்) ஒளிக்கு உவமை விளக்கு வைக்கப்பட்டுள்ள மாடம் போன்றதாகும். அவ்விளக்கு ஒரு கண்ணாடி(க் குவி)யில் இருக்கிறது அக் கண்ணாடி ஒளிவீசம் நட்சத்திரத்தைப் போன்றதாகும். அது பாக்கியம் பெற்ற ஜைத்தூன் மரத்தி(ன் எண்ணெயி)னால் எறிக்கப் படுகிறது. அது கீழ்த்திசையை சேர்ந்ததுமன்று மேல்திசையை சேர்ந்ததுமன்று. அதனை நெருப்புத் தீண்டாவிடினும், அதன் எண்ணெய் ஒளி வீச முற்படும், (இவை எல்லாம் சேர்ந்து) ஒளிக்கு மேல் ஒளியாகும். அல்லாஹ் தான் நாடியவரை தன்னுடைய ஒளி (என்னும் சத்தியப்பாதை)யின் பால் நடத்திச் செல்கிறான். மனிதர்களுக்கு இத்தகைய உவமைகளை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் யாவற்றையும் நன்கு அறிபவன். (அல்குர்ஆன்: 24:35
குர்ஆன் இறங்கியது எதற்காக?
இன்னும் நிச்சயமாக உங்களுக்குத் தெளிவாக்கும் வசனங்களையும், உங்களுக்கு முன் சென்று போனவர்களின் உதாரணத்தையும், பயபக்தியுடையோருக்கு நல்லுபதேசத்தையும் நாம் இறக்கி வைத்திருக்கின்றோம். (அல்குர்ஆன்: 24:34)
முஸ்லிம்களிடையே பகைமைத் தீ!
அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: "தொழுகையாளிகள் அரபுத் தீபகற்பத்தில் தன்னை இபாதத் செய்வார்கள் - வணங்குவார்கள் - எனும் விஷயத்தில் ஷைத்தான் நிராசை அடைந்து விட்டான். எனினும், முஸ்லிம்களிடையே பகைமைத் தீயை மூட்டுவதில் அவன் நம்பிக்கை இழக்கவில்லை". அறிவிப்பாளர்: ஜாபிர்(ரலி), நூல்: முஸ்லிம்
இங்கு மூலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள இபாதத் எனும் சொல் வழிபாட்டை குறிப்பதில்லை. ஏனெனில், யாராவது ஷைத்தானுக்குச் சிலையோ உருவமோ வடித்து அதனை வணங்குவதாக இதுவரை எங்கும் கேள்விப்படவில்லை. மாறாக, இபாதத் என்பது இந்த இடத்தில் விரிவான பொருளைக் கொண்டுள்ளது. அதாவது, வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் ஷைத்தானின் விருப்பங்களுக்கு ஏற்ப நடப்பது என்பது தான் அது. பின்வரும் திருக்குர்ஆன் வசனமும் இந்தக் கருத்தையே வலியுறுத்துகின்றது.
"என் தந்தையே! ஷைத்தானுக்கு வழிபடாதீர்கள். நிச்சயமாக ஷைத்தான் கருணைமிக்க இறைவனுக்கு மாறு செய்பவனாக இருக்கின்றான்". (திருமறை 19:44)
கவனத்தில் கொள்ளவும்:
இந்த ஹதீஸில் இறைத்தூதர் பயன்படுத்தியுள்ள தொழுகையாளிகள் எனும் சொல் தொழுகையை முறையாகப் பேணி வருபவர்களைக் குறிக்கும். அவ்வாறுத் தொழுகையைப் பேணி வருவதால் அவர்களின் உள்ளத்தில் அல்லாஹ்வின் அன்பும் அச்சமும் நிறைந்திருக்கும். இத்தகைய மக்களுக்கு எதிராக ஷைத்தானின் சூழ்ச்சி செல்லுபடியாகமாட்டா! அதாவது இவர்கள் ஒருபோதும் ஷைத்தானை வழிபட மாட்டார்கள். மேலும் இத்தொழுகையாளிகள் அவனுடைய விருப்பங்களின் படி நடக்கவும் மாட்டார்கள்! எனினும் அவர்களிடையே பரஸ்பரம் தவறான எண்ணங்களை உருவாக்கி அந்தத் தொழுகையாளிகளிடையே மோதலையும் முரண்பாட்டையும் ஷைத்தானால் ஏற்படுத்தி விட முடியும்.
தொழுகையை முறையாகப் பேணி வரும் தொழுகையாளிகளான முஸ்லிம்களில் அதுவும் இறை மார்க்கத்தை மற்றவர்களுக்கு எடுத்துக் கூறுவதில் போட்டி போட்டுச் செயல்படும் சகோதரர்களிடையே இத்தகைய மோதலும் முரண்பாடும் பரவலாகக் காணப்படுவதைத் தற்காலத்தில் கண்கூடாகக் கண்டு வருகிறோம். நபி(ஸல்) அவர்கள் அஞ்சிய இத்தகைய பிளவு நிலையை விட்டு முஸ்லிம்களை இறைவன் காத்தருள்வானாக.
நன்றி : சத்யமார்க்கம்காம்
செவ்வாய், 24 மார்ச், 2009
இறைமொழி
மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக் கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள் எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும்.2:45
குர்ஆன் ஓதப்படும்போது அதனை நீங்கள் செவிதாழ்த்தி (கவனமாகக்) கேளுங்கள். அப்பொழுது நிசப்தமாக இருங்கள் - (இதனால்) நீங்கள் கிருபை செய்யப்படுவீர்கள் 7:204
நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும்(இறைவனிடம்) உதவி தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான். 2:153
(நபியே!) இவை(யெல்லாம்) அல்லாஹ்வின் வசனங்கள் - இவற்றை உண்மையாகவே உமக்கு நாம் கூறுகிறோம். மேலும் அல்லாஹ் உலகத்தோருக்கு அநீதி இழைப்பதை விரும்ப மாட்டான். 3:108
வியாழன், 19 மார்ச், 2009
நாகர்கோவிலில் நடைபெற்ற "எளிய முறையில் குர்ஆன் மற்றும் தொழுகை புரிந்துகொள்ளல்" நிகழ்ச்சி

இறையருளால் எளிய முறையில் குர்ஆன் மற்றும் தொழுகை புரிந்துகொள்ளல்(UNDERSTAND QURAN AND SALAH - The Easy Way) என்ற பயனுள்ள இஸ்லாமியத் தமிழ் நிகழ்ச்சி நாகர்கோவில் IRG ட்ரஸ்ட் அரங்கத்தில் சென்ற வெள்ளியன்று (13,மார்ச் 09) மிகச் சிறப்பாக நடைபெற்றது. சமூக நல அமைதி அறக்கட்டளையும் IRG அறக்கட்டளையும் இணைந்து இந்நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்திருந்தார்கள்.
சென்னையிலிருந்து வந்த சகோதரர் ஜனாப். ஷேக். M.F. அலி அவர்கள் அனைவருக்கும் எளிதாக விளங்கும் விதத்தில் மல்டி மீடியா படக்காட்சிகளின் மூலம் பாடங்களை விளக்கினார். பயிற்சியின் போது, பயிலவந்தவர்களைச் சைகைகள் மூலமும் உரக்க உச்சரிக்கச் செய்வதன் மூலமும் பங்கெடுக்கச் செய்து பாடங்களை நடத்தியது பயனுள்ளதாக இருந்தது.
இந்தப் பாடத்திட்டத்தின் சிறப்பு அம்சமாக, ஒவ்வொரு பாடங்களுக்கு இடையிலும் பயில்பவர்களை உற்சாகமூட்ட மூச்சுப் பயிற்சியளித்தார். இது பங்கெடுத்தவர்களின் கவனத்தில் தொய்வு ஏற்படா வண்ணம், நிகழ்ச்சி முடியும்வரை அவர்களைச் சுறுசுறுப்பாக வைத்திருந்தது.
குர்ஆனிலுள்ள முக்கிய 50 சொற்களை இப்பயிற்சி மூலம் தெரிந்து கொள்வதால் அதிலுள்ள சுமார் 27000 சொற்களைப் புரிந்து ஓத இயலும். குரானிலுள்ள சுமார் 78000 மொத்த சொற்களில் இது 35 சதவீதமாகும்.
மாலை நாலரை மணி முதல் இரவு சுமார் 8 மணி வரை நிகழ்ச்சி நடைபெற்றது. 3 மணி நேரத்தில் 8 பாடங்கள் வாயிலாக இந்த வகுப்பு நடத்தப்பட்டது. மஃக்ரிப் தொழுகைக்காக அரை மணி நேரம் தேனீருடன் இடைவேளை அளிக்கப்பட்டது. ஆண்களும் பெண்களுமாக ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் வழக்கறிஞர் அஸீம் அனைவரையும் வரவேற்றார். இறுதியில் பேசிய IRG அறக்கட்டளையின் சேர்மன் அல்ஹாஜ். செய்யது முஹம்மது மதனீ நிகழ்ச்சியின் சிறப்பு அம்சங்களைப் பாராட்டிப் பேசியதோடு, மேலும் இது போன்ற நல்ல பலனுள்ள நிகழ்ச்சிகளை நடத்த IRGT வளாகத்தின் கதவுகள் திறந்திருக்குமென உறுதியளித்தார். சமூக நல அமைதி அறக்கட்டளையின் செயலர், பொறியாளர். பிஜிலி ஸாஹிப் நன்றியுரை நிகழ்த்தினார்.
இந்த நிகழ்ச்சி சிறப்புற அமைய தொடக்கம் முதலே முழு முயற்சியுடன் எல்லா ஏற்பாடுகளையும் வெற்றிகரமாகச் செயல்படுத்திய சமூக நல அமைதி அறக்கட்டளையின் தலைவர் ஜனாப். கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ் அவர்களை இங்கு நினைவு கூறுவது இன்றியமையாததாகும்.
மேலும் இந்த நிகழ்சியைப் பல்வேறு இடங்களில் சிறப்புற நடத்த பக்க பலமாக இருந்து வரும் ஜனாப். கஸ்ஸாலி அவர்களும் நிகழ்ச்சிக்கான தொழில் நுட்ப அமைப்புகளைப் பொறுப்பாகச் செய்துவரும் ஒருங்கிணைப்பாளர் சகோதரர் ஷேக் மஸ்தான் அவர்களும் நிகழ்ச்சி சிறப்புற உதவினர்.
பயனுள்ள இந்த நிகழ்ச்சியினை தமிழ் முஸ்லிம்கள் வாழும் அனைத்துப் பகுதிகளிலும் நடத்திப் பயன்பெறச் செய்யவேண்டும் என்பது அனைவரின் விருப்பம்.
வல்ல நாயன் அதற்கு அருள்புரிவானாக. ஆமீன்.
தகவல்: அபூ அய்னு.