உலக செய்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உலக செய்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 11 மார்ச், 2011

” ஜப்பான் சுனாமி 2011” கூகிளின் உதவிக்கரம் சற்று முன் கிடைத்த செய்தி


மார்ச் 11, 2011

“Japan sunami 2011 ” கடந்த சில மணி நேரங்களுக்கு முன் ஜப்பானில்
நிலநடுக்கம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது, தங்கள் வீடுகளையும்
குழந்தைகளையும் விட்டு பல இலட்சம் மக்கள் எங்கு இருக்கின்றனர்
என்பதே தெரியாமல் தவிக்கின்றனர் இவர்களுக்காக நம் கூகுள்
உடனடியாக உதவிக் கரம் நீட்டியுள்ளது.
ஜப்பானில் இடம் மாறி இருக்கும் மக்களை ஒன்று சேர்ப்பதற்காக கூகிள்
உடனடியாக Person Finder: 2011 Japan Earthquake என்ற தளத்தை
உருவாக்கி கொடுத்துள்ளது,  ஜப்பானில் இருக்கும் யாரைப்பற்றிய
தகவல் வேண்டுமோ அல்லது யாரைத்தேடுகிறீர்களோ அவர்களை
பற்றிய தகவல்களை நொடியில் கொடுப்பதற்காக இந்தப்பக்கம்
உருவாக்கப்பட்டுள்ளது. இந்தபக்கம் உருவாக்கிய கடந்த 2 மணி
நேரத்திற்குள் 1200 பேர் தங்கள் பெற்றோர்களையும், குழந்தைகளையும்,
உறவினர்களை தேடி கண்டுபிடித்துள்ளனர். ஆபத்து காலத்தில் கூகிள்
செய்யும் இந்த உதவிக்கு அனைத்து மக்களின் சார்பிலும் நெஞ்சார்ந்த
நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். உங்கள் நண்பர்கள் அல்லது
உறவினர்கள் யாராவது ஜப்பானில் இருந்தால் நீங்களும் இதைப்
பயன்படுத்தி அவர்கள் எங்கு இருக்கின்றனர் என்று தெரிந்து
கொள்ளலாம்.மேலும் பாதிப்புகள் தொடராமல் இருக்க இறைவனை
பிரார்த்திப்போம்.
இணையதள முகவரி : http://japan.person-finder.appspot.com/?lang=en
தகவல் உதவி : விண்மணி 

வெள்ளி, 20 நவம்பர், 2009

உல‌க‌ம் சுற்றுவ‌தில் கின்ன‌ஸ் சாத‌னை ப‌டைத்த‌ அமீர‌க‌ இந்திய‌ர்


உல‌க‌ம் சுற்றுவ‌தில் கின்னஸ் சாத‌னை ப‌டைத்துள்ளார் ஐக்கிய‌ அர‌பு அமீர‌க‌த்தின் துபாய் வாழ் இந்திய‌ரான‌ க‌ஷி ச‌ம‌த்த‌ர்.

துபாயில் ப‌ணிபுரிந்து வ‌ரும் ச‌ம‌த்த‌ர், ஐ.நா.ச‌பையில் உறுப்பின‌ராக‌வுள்ள‌ 194 நாடுக‌ளுக்கு 12 வ‌ருட‌ம் எட்டு மாத‌ம் 13 நாட்க‌ளில் சென்று வ‌ந்துள்ளார். 1995ம் ஆண்டு செப்ட‌ம்ப‌ர் 15ம் தேதி முத‌ல் 2008ம் ஆண்டு மே மாத‌ம் 27ம் தேதி வ‌ரை இவர் சுற்றுப்பயணம் செய்துள்ளார்.

அமெரிக்க‌ன் வேர்ல்ட் ரிகார்ட் அகாட‌மி, லிம்கா புக் ஆஃப் ரிக்கார்ட், கின்ன‌ஸ் உல‌க‌ சாத‌னை நிறுவ‌ன‌ம் உள்ளிட்ட‌வை ச‌ம‌த்த‌ரின் ப‌ய‌ண‌ம் உல‌கின் முத‌லாவ‌து ம‌ற்றும் வேக‌மான‌து என‌ சான்று அளித்துள்ள‌ன‌.

இப்ப‌ய‌ண‌த்திற்கான விசா பெறுவ‌த‌ற்கு ப‌ல்வேறு சிர‌ம‌ங்க‌ளைச் ச‌ந்தித்தாலும் த‌ன‌து ப‌ய‌ண‌த்திட்ட‌த்திலிருந்து பின்வாங்க‌வில்லை. இதுகுறித்து அவர் கூறுகையி்ல், '194 நாடுக‌ளில் 160 நாடுக‌ளைச் சேர்ந்த‌வ‌ர்க‌ள் நேர‌டியாக‌ அந்த‌ந்த‌ நாட்டு விமான‌ நிலைய‌ங்க‌ளில் விசா பெற‌ இயலாது.

என‌து ப‌ய‌ண‌த்தின் போது ப‌ல்வேறு நாடுக‌ளின் சுற்றுலாத்துறை அமைச்ச‌ர்க‌ளைச் ச‌ந்தித்து சுற்றுலாப்ப‌ய‌ணிக‌ளுக்கு விசா வ‌ழ‌ங்கும் முறைக‌ளை எளிதாக்க‌ கேட்டுக் கொண்டேன். உல‌க‌ சுற்றுலா குறித்த‌ விழிப்புண‌ர்வினை ஏற்ப‌டுத்துவ‌தே என‌து ப‌ய‌ண‌த்தின் நோக்க‌ம்' என்றார் ச‌ம‌த்த‌ர்.

புதன், 18 நவம்பர், 2009

இது தான் கூகுள்

புதுடில்லி: இன்டர்நெட்டில் தகவல் கூகுள் வெப்சைட் தரும் தகவல்களை நம்புவோர் ஏராளம். ஆனால், இந்தியா மற்றும் சீனா விவகாரத்தில் தனது "நிறத்தை' கூகுள் வெளிப்படுத்தியுள்ளது. அருணாச்சல பிரதேசத்தை சீனா சொந்தம் கொண்டாடி வரும் வேளையில், இந்தியர்களை கூகுள் நிறுவனமும் ஏமாளியாக்கி வருகிறது.

கூகுள் வெளியிட்டுள்ள கூகுள் மேப் பகுதியை, இந்தியாவிலிருந்து http://maps.google.com/ வெப்சைட் வழியாக பார்ப்பவர்களுக்கு அருணாச்சலும், காஷ்மீரும் சர்ச்சைக்குரிய பகுதிகள் என்று காட்டப்படுகின்றன. அதே வேளையில், சீனாவிலிருந்து http://ditu.google.com/ பார்க்கப்படும் கூகுள் வெப்சைட்டில் அருணாச்சல் மற்றும் காஷ்மீரின் அக்சாய் சின் பகுதிகளை, குறைந்த பட்சம் சர்ச்சைக்குரிய பகுதிகள் என்று கூட எழுதாமல், முழுமையாக சீனாவுடன் சேர்க்கப்பட்டுள்ளது. வியாபார தந்திரத்துக்காக,

இந்திய மக்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ள கூகுளின் மோசடியை இந்த மேப்களிலேயே பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.


செய்தி : தினமலர்

புதன், 11 நவம்பர், 2009

லண்டனில் 6 இந்திய முஸ்லீம் மாணவர்கள் மீது தாக்குதல்

வடக்கு லண்டனில் உள்ள இஸ்லாமிய கழக பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் 6 இந்திய மாணவர்கள், ஒரு கும்பலால் கொலை வெறித் தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர்.

30க்கும் மேற்பட்டோர் அடங்கிய கும்பலின் இந்தத் தாக்குதலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்களைப் பிடிக்க லண்டன் போலீஸார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

இதுதவிர மேலும் 3 பேருக்கு கத்திக் குத்து விழுந்துள்ளது. பல்கலைக்கழக வளாகம் அருகே சம்பந்தப்பட்ட இந்திய மாணவர்கள் வந்து கொண்டிருந்தபோது அங்கு 30க்கும் மேற்பட்டோர் அடங்கிய கும்பல் வந்து அவர்களை தடுத்து நிறுத்தியது. பின்னர் அவர்களை இரும்புக் கம்பி, செங்கல், கம்புகளால் சரமாரியாகத் தாக்கினர். இனவெறியுடன் கோஷமும் போட்டபடி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அவர்களைத் தடுக்க 2 மாணவர்களும், இன்னொருவரும் முயன்றபோது அவர்களுக்கு கத்திக் குத்து விழுந்துள்ளது.

கடந்த வாரம் இப்பல்கலைக்கழக மாணவர் ஒருவரைப் பார்த்து ஒரு கும்பல், இஸ்லாமை கேலி செய்து கிண்டலடித்து வம்புக்கு இழுத்துள்ளது. அவரைத் தொழுகைகக்குப் போக விடாமல் ரகளையும் செய்துள்ளனர். அதன் பின்னர் அந்த மாணவரைத் தாக்கியுள்ளனர். இருப்பினும் சக மாணவர்கள் குறுக்கிட்டு அந்தக் கும்பலைத் தடுத்து பிரித்து விட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் ஒரு மாணவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இந்த நிலையில் தற்போது பெரும் கும்பலாக வந்து இந்திய முஸ்லீம் மாணவர்களைத் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

இதுகுறித்து இஸ்லாமிய மாணவர் கழகங்களின் சம்மேளன நிர்வாகிகள் கூறுகையில், முஸ்லீம்களே ஓடி விடுங்கள், பாக்கிஸ் என்று கூறி அவர்கள் தாக்கியுள்ளனர்.

இங்கு படிக்கும் ஆசிய மாணவர்களுக்கு பாதுகாப்பு வழங்க பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அது கோரியுள்ளது.

அமைப்பின் செய்தித் தொடர்பாளர் காசிம் ரபீக் கூறுகையில், கடந்த ஒரு வருடமாகவே பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் இதுபோன்ற இனவெறித் தாக்குதல்கள் நடந்தபடிதான் உள்ளன. இதுகுறித்து போலீஸ் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகிகளுடன் இணைந்து செயல்படுகிறோம் என்றார்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு 17 முதல் 19 வயதுக்குள் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி :தட்ஸ்தமிழ்

சனி, 7 நவம்பர், 2009

முஸ்லீம்களின் சுதந்திரத்தை பறித்தவர்கள் விடுதலைப் புலிகள்!

யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் மாவட்டங்களில் பிற சமூகத்தினருடன் சுமூகமான முறையில் வாழ்ந்து வந்த முஸ்லீ்ம்கள விரட்டியடித்து அவர்களின் சுதந்திரத்தைப் பறித்தவர்கள் விடுதலைப் புலிகள் என்று கூறியுள்ளார் அதிபர் ராஜபக்சே.

கொழும்பில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் முஸ்லீம் பெண்களிடையே இன்று ராஜபக்சே பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், 90களில் இந்த மூன்று மாவட்டங்களிலும் முஸ்லீகளை விரட்டியடிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தனர் விடுதலைப் புலிகள் .

முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களில் பிற சமூகத்தினருடன் இணக்கமாக வாழ்ந்து வந்த முஸ்லீம்களுக்கும், பிற சமூகத்தினருக்கும் இடையிலான ஒற்றுமையை, நல்லிணக்கத்தை சீர்குலைத்தவர்கள் புலிகள் .

அங்கிருந்து விரட்டப்பட்ட முஸ்லீம்கள் அகதிகளாக புத்தளம் மாவட்டத்தில் உள்ள முகாம்களில் தற்போது வாழ்ந்து வருகின்ரனர். இவர்களை சொந்த ஊர்களுக்கு மீள் குடியேற்றும் செய்யும் நடவடிக்கைள் விரைவில் தொடங்கும்.

இலங்கையில் அனைத்து சமூகத்தினருக்கும் இடையிலான உறவு வலுவாகவே உள்ளது. வடக்கு மாகாணத்திற்கு வடக்கில் வசந்தம் திட்டத்தின் கீழ் பல்வேறு நலத் திட்டங்களை அமல்படுத்தி வருகிறோம் என்றார் ராஜபக்சே.

செய்தி : தட்ஸ்தமிழ்

வியாழன், 15 அக்டோபர், 2009

உயகுர் இஸ்லாமியர்கள் 6 பேருக்கு சீன நீதிமன்றம் மரணதண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது

கடந்த ஜூலை மாதம் சிஞ்சியான் மாகாணத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேருக்கு சீன நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

சீனாவின் சிஞ்சியான் மாகாணத்தில் உள்ள உரும்கியில் உய்குர் இன இஸ்லாமியர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர்.இங்கு கடந்த ஜூலை 5 ஆம் தேதியன்று கலவரத்தில் ஏறக்குறைய 200 பேர் கொல்லப்பட்டனர்.ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர்.

இந்த கலவரம் தொடர்பாக 718 பேர் கைது செய்யப்பட்டனர்.இதில் 21 பேர் மீது கொலை,கொள்ளை, தீ வைப்பு மற்றும் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியது உள்ளிட்ட குற்றச்சாற்றுகள் சுமத்தப்பட்டன.

இவர்கள் மீதான வழக்கு விசாரணை சிஞ்சியான் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.இந்நிலையில், முதல் கட்டமாக 6 பேர் மீதான குற்றச்சாற்று நிரூபிக்கப்பட்டதாக கூறி அவர்களுக்கு மரணதண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இத்தகவலை சீன மத்திய தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.தண்டனை விதிக்கப்பட்ட அனைவருமே உயகுர் இஸ்லாமியர்களே என்பது அவர்களது பெயர்கள் மூலம் தெரியவந்துள்ளது.

திங்கள், 12 அக்டோபர், 2009

சவுதி அரேபியாவில் அந்தரங்க விஷயங்களை பொது இடத்தில் பேசியவருக்கு ஐந்தாண்டு சிறை


சவுதி அரேபியாவைச் சேர்ந்த நபர், செக்ஸ் பற்றி "டிவி' யில் பேசியதற்காக ஐந்தாண்டு சிறையும், ஆயிரம் கசையடியும் தண்டனையாக வழங்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபிய ஏர் - லைன்சில் பணிபுரிபவர் அப்துல் ஜாவீத். லெபனான் நாட்டு "டிவி' சேனல் ஒன்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், இவர் தன்னுடைய செக்ஸ் அனுபவங்களை விளக்கினார்.

இவரது பேட்டி பதிவு செய்யப்பட்டு கடந்த ஜூலை மாதம் 15ம் தேதி "டிவி'யில் ஒளிபரப் பானது. இவரது அந்தரங்க விஷயங்களை பொது இடத்தில் பேசியதற்காக, 200க்கும் அதிக மான நேயர்கள், ஜாவீத் மீது புகார் கொடுத்தனர்.

இந்த புகாரின் பேரில் ஜாவீத் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.இந்த வழக்கை விசாரித்த சவுதி கோர்ட், ஜாவீத்துக்கு ஐந்தாண்டு சிறை தண்டனையும், ஆயிரம் கசையடிகளையும் தண்டனையாக அளிக்கும் படி உத்தரவிட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது, இவர் ஐந்தாண்டுகளுக்கு "டிவி' சேனல்களில் பேசக்கூடாது, எனவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்த தண்டனையால் அதிர்ச்சியடைந்துள்ள ஜாவீத், தனது வக்கீல் மூலம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார்.

முஸ்லிம்களின் ஜனத்தொகை அதிகரிப்பு


வாஷிங்டன்:உலகத்தில் நான்கு பேரில் ஒருவர் முஸ்லிம் என்ற அளவுக்கு அந்த சமூகத்தவரின் ஜனத்தொகை அதிகரித்துள்ளது.சமீபத்தில் மத அமைப்பு ஒன்று ஆய்வு மேற்கொண்டது. இந்த அமைப்பின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

உலகம் முழுவதும் 232 நாடுகளில் முஸ்லிம் மக்கள் வசிக்கின்றனர்.157 கோடி முதல் 180 கோடி வரை முஸ்லிம் சமூகத்தவரின் எண்ணிக்கை உள்ளது. லெபனான் முஸ்லிம் நாடு. இருப்பினும் இந்த நாட்டை விட ஜெர்மனியில் அதிக முஸ்லிம்கள் உள்ளனர். இதே போல சிரியா முஸ்லிம் நாடு. ஆனால் இந்தநாட்டை விட சீனாவில் முஸ் லிம்கள் அதிகம் உள்ளனர். ஜோர்டான் மற்றும் லிபியாவை விட, ரஷ்யாவில் முஸ்லிம்கள் அதிகம் பேர் வசிக்கின்றனர்.

ஆப்கானிஸ்தானிலும், எதியோப்பியாவிலும் சரிவிகிதத்தில் முஸ்லிம்கள் வசிக்கின்றனர். உலகம் முழுவதும் 220 கோடி கிறிஸ்துவர்கள் உள்ளனர். இவர்களுக்கு அடுத்த படியாக முஸ்லிம் சமூகத்தினர் தான் அதிக அளவில் உள்ளனர்.

அதாவது மக்கள் தொகையில் நான்கு பேரில் ஒருவர் முஸ்லிம் என்ற அளவுக்கு முஸ்லிம் சமூதாயத்தினரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.அரபு நாட்டவர்கள் தான் முஸ்லிம்கள் என்ற நிலை தற்போது மாறி விட்டதாக பிரின்ஸ்டோன் பல்கலைக் கழக பேராசிரியர் அமானே ஜமால் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்களில் ஷியா, சன்னி பிரிவு வேறுபாடு ஒரு சில நாடுகளில் மட்டுமே அதிகமாக காணப்படுகிறது. ஈரான், ஈராக்,பாகிஸ்தான்,இந்தியா ஆகிய நாடுகளில் அதிக அளவில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் வசிக்கின்றனர்.இவ்வாறு ஆய்வறிக்கை கூறப்பட்டுள்ளது.

வியாழன், 24 செப்டம்பர், 2009

காஷ்மீரை தனி நாடாக்க வேண்டும்-கடாபி


நியூயார்க்: காஷ்மீர் தனி நாடாக வேண்டும் என்று ஐ.நா. கூட்டத்தில் பேசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் லிபிய அதிபர் கடாபி.

ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நியூயார்க் வந்த கடாபி, பொதுச் சபையில் சுமார் ஒரு மணி நேரம் பேசினார் (அவருக்கு ஒதுக்கப்பட்ட நேரம் கால் மணி நேரம்தான்).

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை கடுமையாக சாடிப் பேசிய கடாபி, காஷ்மீர் பிரச்சினையையும் பெரிதாகப் பேசி இந்தியாவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளார்.

அவர் பேசுகையில், ஐ.நா. சபையும், பாதுகாப்பு கவுன்சிலும் உருவாக்கப்பட்ட பின்னர் 65 போர்கள் நடந்துள்ளன. இதற்கு மேலும் இதுபோல நடக்க்க கூடாது.

பாதுகாப்பு கவுன்சில் என்று கூறுவதை விட தீவிரவாத கவுன்சில் என்று கூறினால் பொருத்தமாக இருக்கும்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உள்ளன நிரந்தர உறுப்பினர்களுக்கு வீட்டோ அதிகாரம் இருக்கக் கடாது. ஆப்பிரிக்க யூனியன், லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவற்றுக்கு சபையில் பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டும். மேலும், நிரந்தர உறுப்பு நாடுகளை சுழற்சி முறையில், அதாவது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.

ஜான் கென்னடி, மார்ட்டின் லூதர் கிங் ஆகியோரின் படுகொலைகள் குறித்து சரியான விசாரணை நடத்தப்படவில்லை. அதை ஐ.நா. செய்ய வேண்டும். அதேபோல கொரியா, வியட்நாம், ஈராக், ஆப்கானிஸ்தான் போர்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

பின்லேடன் ஒரு தலிபான் என்று யார் சொன்னது. பின் லேடன் தலிபான் அல்ல, அவர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவரும் அல்ல.

பன்றிக் காய்ச்சல் தானாக பரவவில்லை. மாறாக ராணுவ ஆய்வகத்திலிருந்து பரப்பி விடப்பட்டுள்ளது இது.

அமெரிக்க அதிபராக பாரக் ஒபாமா நிரந்தரமாக நீடித்தால் நான் சந்தோஷப்படுவேன்.

காஷ்மீர் தனி நாடாக வேண்டும்...

காஷ்மீர் இந்தியாவுக்கும் சொந்தமானதல்ல, பாகிஸ்தானுக்கும் சொந்தமானதல்ல. அது ஒரு தனி நாடாக, சுதந்திர நாடாக இருக்க வேண்டும். அது இந்தியா, பாகிஸ்தானுக்கு உரிமை இல்லாத தனி நாடாக வேண்டும். இதன்மூலம் இந்தப் பிரச்சனைக்கு நாம் முடிவு கட்டலாம்.

ஐ.நா. பாதுகாப்பு சபையில் மேலும் எந்த நாட்டையும் சேர்க்கக் கூடாது என்றார் கடாபி.

உலகத் தமிழ் ஒற்றுமை மாநாடு: மலேசியாவில் நாளை தொடங்குகிறது

பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் சார்பில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உலகத் தமிழ் ஒற்றுமை மாநாடு வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 25) தொடங்குகிறது.

மலேசியப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் இந்த மாநாட்டில் உலகம் முழுவதும் இருந்து சுமார் 500 தமிழ் அறிஞர்கள், தொழிலதிபர்கள் பங்கேற்க உள்ளனர். தமிழகத்தில் இருந்து 60 பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் ம. ராசேந்திரன், பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் நிறுவனர் வா.மு. சேதுராமன், மலேசிய இந்திய காங்கிரஸ் தலைவர் டத்தோ சாமிவேலு, மலேசிய அமைச்சர் கோ. சூகூன், சென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பொறுப்பு அலுவலர் க. ராமசாமி, பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமி, பேராயர் எஸ்றா சற்குணம், சென்னை பச்சையப்பன் கல்லூரி பேராசிரியர் வா.மு.சே. ஆண்டவர் உள்ளிட்டோர் மாநாட்டில் பங்கேற்கின்றனர்.

2 நாள்கள் நடைபெறும் மாநாட்டுக்கு முதல்வர் கருணாநிதி, நிதி அமைச்சர் க. அன்பழகன், தமிழக பாஜக தலைவர் இல. கணேசன் ஆகியோர் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளனர் என்று பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் இயக்குநர் வா.மு.சே. திருவள்ளுவர், செய்தியாளர்களிடம் புதன்கிழமை தெரிவித்தார்

வெள்ளி, 11 செப்டம்பர், 2009

அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதல் 8 ஆவது நினைவு தினம்


அமெரிக்காவை மட்டுமல்லாது ஒட்டுமொத்த உலகையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய தினம் 11-9-2001.அன்றையதினம்தான் நியூயார்க் நகரின் இரட்டை கோபுரங்கள் மீது அல் - காய்தா தீவிரவாதிகள் விமானத்தை மோதி வெடிக்கச் செய்து தகர்த்தனர்.

பாஸ்டன், வாஷிங்டன் உள்ளிட நகரங்களிலிருந்து வெளியூர் செல்ல புறப்பட்ட 4 விமானங்களை கடத்திச் சென்று அல் - காய்தா தீவிரவாதிகள் இந்த கோர தாக்குதலை நிகழ்த்தினார்கள்.

4 விமானங்களில் இருந்த பயணிகள் அனைவரும் பலியானார்கள்.இரட்டை கோபுரத்தில் விமானங்கள் மோதிய போது இருகட்டடங்களிலும் 17,400 பேர் இருந்தனர்.விமானம் மோதியதும் கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து தீப்பிடித்து கொண்டது.சிறிது நேரம் கழித்து இருகட்டடங்களும் இடிந்து தரைமட்டமானது.இவற்றில் சிக்கி 2,604 பேர் பலியானார்கள்.


பெண்டகனில் விமானம் மோதியதில் 125 ராணுவ வீரர்கள், ஊழியர்கள் பலியானார்கள்.4 விமானங்களில் மொத்தம் 246 பயணிகள் இருந்தனர்.அவர்களும் ஒட்டு மொத்தமாக பலியானார்கள்.

மொத்தம் இந்ததாக்குதல்களில் 3017 பேர் பலியானார்கள்.6291 பேர் காயம் அடைந்தனர்.தாக்குதலை நடத்தியது தாங்கள் தான் என்று அல் - காய்தா பின்னர் பொறுப்பேற்றுக்கொண்டது.மொத்தம் 19 தீவிரவாதிகள் விமானங்களை கடத்தி இந்த கொடூரத்தை அரங்கேற்றினர்.

அல் - காய்தா தலைவன் பின்லேடனின் உத்தரவின் பேரிலேயே இந்த 19 பேரும் தாக்குதலுக்கு அனுப்பப்பட்டு இருந்தனர்.

இவர்களில் சிலர் விமான பயிற்சி பெற்று இருந்தனர்.4 விமானங்களிலும் டிக்கெட் எடுத்து பயணிபோல ஏறிய அவர்கள் விமானம் நடுவானில் பறந்த போது கத்தி முனையில் விமான ஊழியர்களையும், பைலட்டையும் மிரட்டி விமானத்தை கடத்தினார்கள்.பைலட்டை இருக்கையில் இருந்து அகற்றி தீவிரவாதிகளே விமானத்தை ஓட்டிச் சென்று கட்டடங்களில் மோதச் செய்தனர்

இந்த தாக்குதலைத் தொடர்ந்தே ஆப்கானிஸ்தானுக்குள் புகுந்து தாலிபான்களுக்கு எதிராக மீது அமெரிக்கா தாக்குதலை தொடங்கியது.

அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதல் நடந்து 8-ஆவது நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிற நிலையில், அல் - காய்தா படிப்படியாக வீழ்ச்சியை சந்தித்து வருகிற நிலையில், பின்லேடனும் உயிருடன் இல்லை என்றே கூறப்படுகிறது.

வியாழன், 10 செப்டம்பர், 2009

எச்1பி விசா வாங்கலையோ! விசா வாங்கலையோ

வாஷிங்டன்: அமெரிக்காவி்ல் பணியாற்றத் தேவைப்படும் 20,000 எச்1பி விசாக்களை வாங்க ஆளில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

சாப்ட்வேர் என்ஜினியர்கள், டாக்டர்கள், பொறியாளர்கள் உள்ளிட்டோர் அமெரிக்காவில் பணியாற்ற இந்த விசா அவசியம் என்ற நிலையில் கடந்த ஆண்டு வரை எச்1பி விசா கிடைப்பது என்பது மிகப் பெரிய விஷயமாக இருந்து வந்தது.

ஆண்டுதோறும் உலகம் முழுவதும் 65,000 எச்1பி விசாக்களையே அமெரிக்கா வழங்கி வந்தது. இதில் பெரும்பாலானவற்றை இந்தியர்களும் சீனர்களுமே வாங்கி வந்தனர்.

இந் நிலையில் பொருளாதாரத் தேக்கம் காரணமாக அமெரிக்காவில் வேலைவாய்ப்புகள் குறைந்து போய்விட்டதால் விசாக்களை வாங்க போதுமான ஆட்கள் இல்லை.

இதனால் இந்த ஆண்டுக்கு ஒதுக்கப்பட்ட 65,000 விசாக்களில் 20,000 விசாக்கள் இன்றும் வினியோகிக்கப்படவே இல்லை. அடுத்த மாத்தோடு இந்த விசாக்களின் கோட்டா முடிந்துவிடும்.

இதனால் அடுத்த ஆண்டு்க்கான கோட்டாவை 65,000ல் இருந்து 50,000 வரை அமெரிக்கா குறைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா வில் கடந்த 26 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்புக்கு தட்டுப்பாடு நிலவுவது குறிப்பிடத்தக்கது

துபையில் உள்ள இலங்கை முஸ்லிம்கள் மூலம் பாகிஸ்தானுக்கு அணுசக்திக்கான சாதனங்கள்: விஞ்ஞானி கான் தகவல்

வாஷிங்டன், செப். 9: அணுசக்தி உற்பத்திக்கு தேவையான பொருள்கள், கருவிகள் துபையில் வசிக்கும் இலங்கை முஸ்லிம்கள் மூலம் பாகிஸ்தானுக்கு கிடைத்தது என்று தெரிவித்தார் பாகிஸ்தான் அணுசக்தி விஞ்ஞானி ஏ.கியு.கான்.

பாகிஸ்தான் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கான் கூறியதாவது:

இந்த பொருள்களை பாகிஸ்தானுக்கும் மட்டுமல்லாமல் ஈரான், லிபியா ஆகிய நாடுகளுக்கும் இந்த முஸ்லிம்கள் விற்கின்றனர். அணுசக்தி தொடர்பான பொருள்கள் ஐரோப்பாவிலிருந்து கிடைக்காமல் போனதும் அவர்களுடன் நாங்கள் தொடர்பு வைத்தோம் என்றார்.

ஈரானிடம் அணு ஆயுத தொழில்நுட்பம் இருப்பதாக வெளியாகும் செய்திகள் பற்றி கேட்டதற்கு அவர்களுக்கும் நாங்கள் தான் துபையில் உள்ள இலங்கை முஸ்லிம்கள் பற்றி தெரிவித்தோம் என்றார்.

இதையடுத்தே அணு சக்தி தொடர்பான தேவைகளுக்கு அவர்களை ஈரானிய அதிகாரிகள் தொடர்பு கொண்டனர் என்றார் கான்.

முஸ்லிம் நாடுகளில் மிக முக்கியமானது ஈரான் என்பதால் அதனிடம் அணு ஆயுத தொழில்நுட்பம் இருப்பது அவசியம் என்பதில் எங்களுக்கும் உடன்பாடுதான். ஈரானிடம் அணு ஆயுதத் தொழில்நுட்பம் இருந்தால் இந்த பிராந்தியத்தில் பலம் கொண்டதாக அது மாறி சர்வதேச நெருக்குதல்களை சமாளிக்க முடியும் என்பது எங்கள் எதிர்பார்ப்பு.

ஆனால், வடகொரியாவிடம் இருந்து ஏவுகணைத் தொழில் நுட்பத்தைப் பெற்றுக்கொண்டு அந்நாட்டுக்கு அணு ஆயுதத் தொழில்நுட்பத்தை பாகிஸ்தான் விற்றதாக கூறுவதெல்லாம் பொய் என்றார்.

நீங்கள் அந்த நாட்டுக்கு அணு ஆயுத தொழில்நுட்பத்தை விற்றதாக புகார் உள்ளதே என்று கேட்டதற்கு அதுபற்றி கருத்து ஏதும் அவர் தெரிவிக்கவில்லை. எனினும் வட கொரியாவுக்கு 1994லும் 1999லும் பயணம் செய்தது உண்மை என்றார்.

1999ல் அந்த நாட்டுக்குச் சென்றது 200 ஏவுகணைகளை வாங்குவதற்காகத்தான். அப்போது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கார்கில் போர் நடந்த சமயம் என்றார் கான்

புதன், 9 செப்டம்பர், 2009

மலேசியா : கோவிலுக்கு எதிர்ப்பு தெரிவித்த 6 இஸ்லாமியர்கள் கைது

மலேசியாவில் நூற்றாண்டு பழமைவாய்ந்த மாரியம்மன் கோவிலை தங்கள் பகுதிக்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட 6 இஸ்லாமியர்கள் மீது பிரிவினைவாத குற்றச்சாற்றின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரின் 19 ஆவது வட்டப்பகுதியில் இருந்த பழம்பெருமை வாய்ந்த மகாமாரியம்மன் கோவிலை, இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் 23 ஆவது வட்டப்பகுதிக்கு இடமாற்றம் செய்ய அரசு முடிவு செய்தது.

இதற்கு அப்பகுதியிலுள்ள இஸ்லாமியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்துடன் அரசு செயலக கட்டடத்திலிருந்து சிறிது தொலைவிலுள்ள மசூதி ஒன்றிலிருந்து அரசு செயலக கட்டடம் நோக்கி பேரணியாக சென்று, அதன் வாயில் முன்புறம் ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.

இந்நிலையில் கோவில் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் மீது,இந்து மத உணர்வை புண்படுத்தியதற்காக மலேசிய தண்டனைச் சட்டம் 298 ஆவது பிரிவின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு வழக்கறிஞர் எச்சரித்திருந்தார்.

அதன்படி போராட்டத்தில் ஈடுபட்டு கைதான 6 இஸ்லாமியர்கள் மீது இந்தும்த உணர்வை புண்படுத்துவதற்காக சட்ட விரோதமாக கூடியது மற்றும் பிரிவினைவாத குற்றச்சாற்று சுமத்தப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி,இவர்கள் 6 பேரும் தலா 4,000 ரிங்கிட் செலுத்தினல் ஜாமீனில் விடுவிப்பதாக அறிவித்தார்.அதன்படி அவர்கள் ஜாமீனில் விடுதலை ஆனார்கள்.

இவ்வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை,வருகிற அக்டோபர் மாதம் 21 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

புதன், 2 செப்டம்பர், 2009

ரமலான் நோன்பை முன்னிட்டு பராக் ஒபாமா இஃப்தார் விருந்து

ரமலான் நோன்பை முன்னிட்டு வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இஃப்தார் விருந்து அளித்தார். இதில் அமெரிக்க வாழ் முஸ்லிம்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

உலகில் வாழும் முஸ்லிம் மக்களுக்கும், அமெரிக்காவுக்கு இடையே நல்லுறவை மேம்படுத்தும் நோக்கில் இந்த விருந்துக்கு ஏற்பாடு செய்ததாக தெரிவித்த ஒபாமா, விருந்திற்காக தயார் செய்யப்பட்ட உணவுப் பதார்த்தங்கள் பற்றி தமக்கு ஏதும் தெரியாது என்றாலும், அவை சுவையாக இருக்கும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக நகைக்சுவை பொங்கப் பேசினார்.

ஒபாமாவுக்கு முன் அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ்ஷும், வெள்ளை மாளிகை இஃப்தார் விருந்து அளித்து வந்தது குறிப்பிடத்தக்கது

வியாழன், 27 ஆகஸ்ட், 2009

சித்திரவதை செய்து தமிழர்களை கொன்றது இலங்கை ராணுவம்: விடியோ ஒளிபரப்பு


தம்மிடம் சிக்கிய ஒன்பது தமிழர்களை சித்திரவதை செய்து ஈவிரக்கமில்லாமல் இலங்கை ராணுவ வீரர்கள் கொன்றுள்ளனர். இந்த சம்பவம் கடந்த ஜனவரியில் நடந்துள்ளது. விடியோவில் பதிவான இந்த கொடூர சம்பவத்தை பிரிட்டனைச் சேர்ந்த "சானல் 4' தொலைக்காட்சி புதன்கிழமை ஒளிபரப்பு செய்துள்ளது.

அந்த ஒன்பது பேரும் சித்திரவதை செய்து கொல்லப்படுவதை ஒரு ராணுவ வீரரே தனது மொபைல் போனில் பதிவு செய்துள்ளார். அந்த விடியோ, ஜனநாயக ஆதரவு பத்திரிகையாளர்கள் அமைப்பு மூலம் சானல் 4 தொலைக் காட்சிக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த விடியோ காட்சி நிஜமானதல்ல என்றும் இத்தகைய ஈவிரக்கமற்ற கொடிய செயலில் தமது ராணுவம் ஈடுபடவில்லை என்றும் இலங்கை மறுத்துள்ளது.

சானல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பிய விடியோ காட்சியை அடுத்து கொழும்புக்கு எதிராக கூறப்பட்டு வந்து போர்க்குற்றப் புகார்கள் சூடு புடித்துள்ளன.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான உச்சகட்ட போரின்போது பிடிபட்ட புலிகளை ஈவிரக்கமின்றி சித்திரவதைக்குள்ளாக்கி இலங்கை ராணுவம் கொன்று வருவதாக மனித உரிமைகள் அமைப்பும் இலங்கைத் தமிழர்களும் புகார் கூறிவந்தனர்.

சமாதானம் பேசுவதற்காக வெள்ளைக்கொடி பிடித்தபடி வந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் பாலசிங்கம் நடேசன் மற்றும் மற்றொரு தலைவர் சீவரத்தினம் பூலிதேவன் ஆகியோரை இலங்கை ராணுவம் சுட்டுக்கொன்றதாக மே மாதத்தில் செய்திகள் வெளியாகின.

தலைப்பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டுக்கிடந்த புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உடல் இருக்கும் படத்தை அரசே தனது விடியோவில் வெளியிட்டது.

இலங்கைக்கு எதிரான போர்க்குற்றப் புகார்கள் உண்மைதான் என்பதை சானல் 4 ஒளிபரப்பிய விடியோ நிரூபிப்பது போல அமைந்துள்ளது என்று தி டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனவரியில் கிளிநொச்சியில் விடுதலைப்புலிகளை ஒடுக்கி நிர்மூலமாக்கிய இலங்கை ராணுவம், பிடிபட்ட போர்க்கைதிகளை ஈவிரக்கமின்றி சித்திரவதை செய்து கொன்றதை ராணுவ வீரர் ஒருவரே தனது மொபைல் போனில் பதிவு செய்துள்ளார் என்று இந்த விடியோவை ஒளிபரப்பிய சானல் 4 தொலைக்காட்சி கூறியுள்ளது.

ஆனால் இந்த விடியோ காட்சியை தமக்கு எதிரான அவதூறு புகார் என்று லண்டனில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கை தமிழர்களுக்கு எதிராக எந்த கொடிய சித்திரவதை செயல்களிலும் ராணுவம் ஈடுபட்டதில்லை. விடியோவில் தில்லுமுல்லு செய்தும் பொய்யான ஆவணங்களையும் வெளியிட்டு இலங்கைக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் செயல்கள் கடந்த காலங்களில் பல முறை நடந்துள்ளன. எனவே இந்த விடியோ பற்றி தீர ஆராய்ந்து உண்மையை உறுதி செய்யவேண்டும் என்று லண்டனில் உள்ள இலங்கைத் தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது.


ஆனால், இந்த விடியோ காட்சிகள் போலியானவை என்று இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2009

இன துவேஷத்தை கடைபிடிக்கிறது அமெரிக்கா : இந்திய - அமெரிக்க முஸ்லீம்கள் புகார்

முஸ்லீம்கள் மீது அமெரிக்கா இன துவேஷத்தை கடைபிடிப்பதாக இந்திய - அமெரிக்க முஸ்லீம்கள் குற்றம் சாற்றியுள்ளனர்.

சமீபத்தில் அமெரிக்கா சென்ற பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நியூஜெர்சி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார்.கான் என்ற பெயர் இருப்பதை பார்த்து அவர் மீது சந்தேகம் அடைந்த அமெரிக்க குடியுரிமை அதிகாரிகள், 2 மணி நேரம் அவரிடம் துருவித் துருவி விசாரணை நடத்திய சம்பவம் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முன்னதாக இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமும் டெல்லி விமான நிலையத்தில்,அமெரிக்க விமான நிறுவன அதிகாரிகளால் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டதும் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அமெரிக்காவிலுள்ள இந்திய - அமெரிக்க முஸ்லீம் கவுன்சில் தலைவர் ரஷீத் அகமத்,மேற்கூறிய சம்பவங்கள் மூலம் முஸ்லீம்களுக்கு எதிராக அமெரிக்கா இன துவேஷத்தை கடைபிடிக்கிறது என்பது நிரூபணமாகி உள்ளதாகவும்,இதுபோன்ற இன துவேஷத்தை கடைபிடிப்பதை அனைத்து நாகரீக சமூகங்களும் கைவிட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளில் கடைபிடிக்கப்படும் கட்டுப்பாடுகளை திருத்தியமைத்து, அனைத்து தரப்பினரிடத்திலும், அவர்களது மத, இன மற்றும் நிற வேறுபாடுகளை மனதில் கொள்ளாமல் நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் அதில் கூறியுள்ளார்

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2009

அரபு நாடுகளில் இந்திய சுதந்திர தினம்



அபுதாபியில் உள்ள இந்தியத் தூதரகத்தில் தூதரக அதிகாரி தல்மிஸ் அகமது தலைமையில் கொடியேற்று விழா நடைபெற்றது. முன்னாள் மத்திய அமைச்சர் மணி சங்கர் அமைச்சர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

துபையில், இந்திய தூதரக அதிகாரி வேணு ராஜாமணி இந்தியப் பள்ளிக் கூடம் ஒன்றில் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் துபையில் உள்ள பல்வேறு இந்தியப் பள்ளி மாணவர்களின் கலை, கலாசார நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

குவைத்தில், இந்தியத் தூதரக அதிகாரி அஜய் மல்ஹோத்ரா தேசியக் கொடியை ஏற்றி வைத்து குடியரசுத் தலைவர் உரையை படித்தார். இந்த நிகழ்ச்சியில் ஆயிரக் கணக்கான இந்தியர்கள் கலந்து கொண்டனர்.

சவூதி அரேபிய மன்னர் அப்துல்லா, அந்த நாட்டின் துணைப் பிரதமர், பாதுகாப்புத் துறை அமைச்சர், ஐஜி உள்ளிட்டோர் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலுக்கு வாழ்த்துச் செய்திகளை அனுப்பியுள்ளனர்.

இந்திய மக்கள் நல்ல வளங்களைப் பெற்று மேலும் மேலும் முன்னேற்றம் அடைய தங்களது நாட்டின் சார்பாக வாழ்த்துவதாக அவர்கள் தங்கள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளனர்.

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2009

யாழ். மாநகரசபைக்கு 5 முஸ்லிம்கள் தெரிவு


யாழ். மாநகரசபைக்கு ஐ. ம. சு. முன்னணியுடன் இணைந்து போட்டியிட்ட அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் நான்கு ஆசனங்களைப் பெற்றுள்ளது.

சுயேச்சைக் குழுவாகப் போட்டியிட்ட சுபியான் மௌலவி 1779 விருப்பு வாக்குகளைப் பெற்றுத் தெரிவாகியுள்ளார். இதன்படி முஸ்லிம்கள் ஐவர் யாழ். மாநகரசபைக்குத் தெரிவாகியுள்ளனர்.

யாழ். மாநகர சபை மற்றும் வவுனியா நகர சபையில் ஐ.ம.சு.முன்னணியுடன் இணைந்து போட்டியிட்ட அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஐந்து ஆசனங்களைப் பெற்றுள்ளது.

யாழ். மாநகர சபைக்கு அ. இ. மு.கா. சார்பாக போட்டியிட்ட நான்கு வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர். அத்துடன் வவுனியா நகர சபைக்கும் ஒருவர் தெரிவாகியுள்ளார். இதன்படி, வவுனியா நகர சபைக்கு எம்.எஸ்.எம்.பாரி என்பவர் தெரிவாகியுள்ளார்.இவர் பெற்ற விருப்பு வாக்கு 2270 ஆகும்.

யாழ்.மாநகர சபைக்குத் தெரிவாகியுள்ள முஹம்மது மீரா சாஹிப் முஹம்மது ரமீஸ் 1338 விருப்பு வாக்குகளையும், முஹம்மது மீரா சாஹிப் முஸ்தபா 1029 விருப்பு வாக்குகளையும், பதூர்தீன் அஸ்கர் ரூமி 979 விருப்பு வாக்குகளையும், அஜ்மயின் அஸ்பர் 960 விருப்பு வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

அதேவேளை, வவுனியா நகர சபைக்கு மு.கா. உறுப்பினர் ஒருவரும் தெரிவாகியுள்ளார். 587 வாக்குகளை மாத்திரமே பெற்ற மு.காவுக்கு இந்த ஆசனம் கிடைத்துள்ளது.

யாழ். மாநகர சபைக்கு சுயேச்சைக் குழுவாகப் போட்டியிட்ட சுபியான் மௌலவி 1779 விருப்பு வாக்குகளைப் பெற்றுத் தெரிவாகியுள்ளார்.யாழ். மாநகர சபைக்கு வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த சுமார் 6000 இடம்பெயர்ந்த முஸ்லிம்களில் 70 வீதமானோர் தேர்தலில் வாக்களித்துள்ளனர்

வியாழன், 6 ஆகஸ்ட், 2009

இதே நாள் 06 - 08 - 1945 அன்று ஹீரோஷிமா நகர் மீது அணு குண்டு வீசப்பட்டது


ஒரு கிளிக் செய்தல் பெரிதாக பார்க்கலாம்



உலகின் முதல் அணு குண்டு தாக்குதல் நடந்த 64 ஆவது ஆண்டு நினைவு தினம் ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

கடந்த 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற இரண்டாவது உலகப் போரின்போது ஜப்பான் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்க போர் விமானங்கள், ஆகஸ்ட் 6 ஆம் தேதியன்று ஹிரோஷிமா நகரில் அணு குண்டு வீசி தாக்குதல் நடத்தியது.

இந்த ஒரே குண்டு வீச்சு தாக்குதலில் மட்டும் 1,40,000 பேர் கொல்லப்பட்டனர்.

அதற்கு அடுத்த மூன்று தினங்கள் கழித்து ஜப்பானின் நாகசாகி நகரில் இரண்டாவது அணுகுண்டு வீசப்பட்டது.இதில் சுமார் 70,000 பேர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், ஹிரோஷிமா நகரில் அணு குண்டு வீசப்பட்டதன் 64 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

இதனையொட்டி இன்று ஹிரோஷிமா நகரில் உள்ள நினைவிடத்தில், குண்டுவீசப்பட்ட நேரமான காலை 8.15 மணியளவில் அமைதி பிரார்த்தனை நடைபெற்றது.

குண்டுவீச்சில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும்விதமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பிரதமர் டாரா அஸோ மற்றும் 50 க்கும் அதிமான நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் உள்பட 50,000 க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய ஹிரோஷிமா மேயர் டாட்டோஷி அகிபா, எதிர்காலத்தில் உலகில் உள்ள அணு ஆயுதங்கள் அழிக்கப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்ததோடு, அணு ஆயுதங்களுக்கு எதிராக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கொண்டுள்ள கருத்துக்களை புகழ்ந்தார்.

LinkWithin

Blog Widget by LinkWithin