அண்ணல் நபிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அண்ணல் நபிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 27 பிப்ரவரி, 2010

மீலாது விழா – ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம்

ஆண்டுதோறும் ஹிஜ்ரி மூன்றாவது மாதமான ரபியுல் அவ்வலின் 12ஆவது நாளை, "ஈதே மீலாத்" என்ற பெயரில் முஸ்லிம்களில் அதிகமானோர் மிகவும் முக்கியத்துவம் அளித்துக் கொண்டாடி வருகின்றனர். இந்நாட்களுக்கு முஸ்லிம் சமூகம் அளிக்கும் முக்கியத்துவத்தினைக் கருத்தில் எடுத்து, மாற்றாரும் இந்நாட்களை இஸ்லாத்தின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த நாட்கள் என்று இஸ்லாத்தோடு தொடர்புபடுத்தி தவறான கண்ணோட்டத்துடன் பார்த்தும் வருகின்றனர். அதற்கும் ஒருபடி மேலாக இந்திய அரசால் அந்நாள், இஸ்லாமிய அரசு விடுமுறையாகவே அறிவிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்படும் இந்த நாளின் பின்னணி என்ன?, இது நபிவழியில் அனுமதிக்கப்பட்டதா?, இதனைக் கடைபிடிப்பது ஸுன்னத்தா? பித்அத்தா? போன்ற பல ஆய்வுக் கட்டுரைகள் அவ்வப்போது வெளிவந்து மக்களை விழிப்புணர்ச்சியூட்டி வருவதும், வாத-பிரதி வாதங்களுடன் இது சரிகாணப்படுவதையும், மறுக்கப்படுவதையும் பரவலாக இந்திய அளவில் காண முடிகிறது.

அதேபோன்று இந்தியாவிலிருந்து அரபு நாடுகள் போன்ற வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள் அங்கும் இதைப்பற்றிப் பேசுவதும், இங்கிருந்து சென்ற சிலர் அங்கும் மீலாது கொண்டாட்டங்கள் என்ற பெயரில் கூடும் நிலையும் உள்ளது. அரபு நாடுகளில் "மீலாது" என்ற பெயரில் விடுமுறையோ கொண்டாட்டங்களோ, சிறப்பு நிகழ்ச்சிகளோ நடைபெறுவதில்லை. நபி(ஸல்) அவர்கள் பிறந்த மக்காவிலோ, புலம்பெயர்ந்த மதீனாவிலோகூட இந்நாள்வரை மீலாது என்ற பெயரில் ஏதும் விசேஷ விடுமுறையோ, நிகழ்ச்சிகளோ இல்லையென்பதும் கவனிக்கப்படவேண்டிய உண்மையாகும்.

நபி(ஸல்) அவர்கள் முஸ்லிம்களுக்கு இரண்டு பெருநாட்களை மட்டுமே காட்டிச் சென்றார்கள். அவர்கள் வாழ்ந்த காலகட்டத்தில், மக்களிடம் ஒட்டியிருந்த முந்தைய எல்லா அனாச்சாரக் கொண்டாட்டங்களையும் ஒழித்து, ரமலான் மாதத்தை ஒட்டி "ஈதுல் பிஃத்ர்" எனும் ஈகைப் பெருநாளையும் ஹஜ்ஜை ஒட்டிய "ஈதுல் அழ்ஹா" எனும் தியாகத் திருநாளையும் முஸ்லிம்களுக்கான விழாநாள்கள் என வரையறுத்தார்கள். நபி(ஸல்) அவர்களால் இஸ்லாமியப் பண்டிகை தினங்களாக அடையாளப் படுத்தப்பட்டு இஸ்லாத்தில் அங்கீகரிக்கப்பட்ட பண்டிகை தினங்கள் இரண்டு மட்டுமே. இதனை இன்றும் அரபு நாடுகளில் அதிகப்படுத்தாமல் கடைபிடிக்கப்பட்டு வருவதைக் காண முடிகின்றது.

ஈதே மீலாத் என்ற மீலாது எனும் விழா நபி(ஸல்) அவர்களால் காட்டித் தரப்படாத, அவர்கள் அங்கீகாரம் பெறாத ஒரு செயல் என்பதே தெளிவு. ஆயினும் ஈதே மீலாத் என்பதன் பொருள், இது பின்பற்றப்படுவதன் பின்னணி, மற்றும் மார்க்கத்தில் அதன் நிலை போன்றவற்றை முஸ்லிம்கள் தெளிவாக அறிந்திருக்க வேண்டியது கட்டாயமாகும்.

ஈத் என்றால் பெருநாள்-பண்டிகை என்று பொருள். மீலாத் என்றால் பிறப்பு என்று பொருள். ஆக, ஈதே மீலாத் என்றால், பிறந்த நாள் பண்டிகை(பெருநாள்) என்று பொருள். நபி(ஸல்) அவர்களின் பிறப்பைக் கொண்டாடும் முகமாக அவர்கள் பிறந்ததாகக் கருதப்படும் ரபியுல் அவ்வல் 12ஆம் நாளை ஈதே மீலாத் என முஸ்லிம்கள் கொண்டாடி வருகின்றனர்.

இன்று ஆங்கிலக் காலண்டரில் பல்வேறு பிற மதக் கடவுளர்கள், அரசியல் தலைவர்களின் பிறந்த நாள்களின் பட்டியலோடு 'மீலாது நபி'யும் இடம் பிடித்துள்ளது.

"நபி(ஸல்) அவர்களின் மீது அன்பு வைத்துள்ளவர்கள் அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடுவதில் தவறு ஒன்றும் இல்லையே" என்ற ஒரு கருத்தும், "நபி(ஸல்) அவர்களை நேசிப்பவர்கள் கண்டிப்பாக மீலாது விழா கொண்டாடியே ஆக வேண்டும்" என்ற ஒரு கருத்தும் இன்று பொதுவாக மக்கள் மனதில் பதிந்து கிடப்பதைக் காண முடிகிறது.

மார்க்கத்தில் இவ்வாறு ஒரு தினத்தை விஷேசமாகக் கொண்டாடுவதற்கு அனுமதி உள்ளதா? என்பதைப் பார்க்கும்முன் இந்நாட்களில் "மீலாதுக் கொண்டாட்டம்" என்ற பெயரில் நாட்டில் நடக்கும் விஷயங்களை முதலில் பட்டியலிடுவது அவசியமாகும்.

மீலாதுக் கொண்டாட்டத்தில் மௌலிது ஓதுதல், பொது மார்க்க நிகழ்ச்சிகள் நடத்துதல், ஊர்வலம் செல்லுதல் போன்றவை நடைமுறையில் உள்ளவற்றுள் முக்கியமானவையாகும். இன்றைய அரசியல் கட்சிகளின் ஊர்வலங்கள் மற்றும் பிற மதத்தினரின் ஊர்வலங்களில் நடக்கும் அனாச்சாரங்களை மிஞ்சும் விதத்தில் மீலாது விழா ஊர்வலங்கள் நடத்தப்படுவதும், அதன் மூலமாக சமூகத்தில் குழப்பங்களும், சண்டை சச்சரவுகள் ஏற்படுவதும் வாடிக்கையாகி விட்டன.

ஊர்வலங்களின்போது மார்க்கம் அனுமதிக்காத விதத்தில் உச்சதொனியில் தக்பீர் முழங்குவதோடு, பிற மதத்தினரைச் சீண்டும் விதத்தில் மோசமான வார்த்தைப் பிரயோகங்களை உபயோகிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.

மார்க்கம் அனுமதித்த விதத்தில் பொது நிகழ்ச்சிகள் மூலம் பிற மதத் தலைவர்கள், பிரமுகர்கள் முதல் அனைவருக்கும் இஸ்லாத்தினையும் இறைத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் வாழ்க்கையைப் பற்றியும் எடுத்துரைப்பது தவறு அல்ல. அதே நேரத்தில் நபி(ஸல்) அவர்களால் காட்டித் தரப்படாத ஒரு நாளில் அதுவும் அதை பெருநாளாகக் கருதி செயல்படுத்துவது அல்லாஹுக்கோ அல்லாஹ்வின் அருமைத் தூதர் - முஸ்லிம்களின் உயிருக்கும் மேலான அண்ணல் - நபி(ஸல்) அவர்களுக்கோ உகந்த செயலாக முடியுமா? என்பது சிந்திக்கப்பட வேண்டியதாகும்.

மீலாது விழா அல்லாஹ்வுக்கு உகந்ததோ, நன்மைகளை விளைவிக்கக் கூடியதோ என்றால் அதை மார்க்கத்தை நமக்குக் காட்டித்தர வந்த அண்ணல் நபி(ஸல்) அவர்கள் காட்டித் தந்திருக்க மாட்டார்களா? அவ்வாறு அவர்கள் காட்டித் தராத ஒரு நன்மையான(?) காரியத்தை இன்று முஸ்லிம்கள் செய்கின்றனர் எனில் அதனை காட்டித் தர நபி(ஸல்) அவர்கள் மறந்து விட்டார்கள் அல்லது மறைத்து விட்டார்கள்(நவூது பில்லாஹ்) என்பது அல்லவா பொருள்? அல்லாஹ் பாதுகாப்பானாக.

தனது இறுதிப்பேருரையின் பொழுது அரஃபா மைதானத்தில் வைத்து நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள்:

"கவனியுங்கள்! எனது தூதுத்துவப்பணியை உங்களுக்கு அறிவித்து விட்டேனா?" எனக் கேட்டபோது, "ஆம் அல்லாஹ்வின் தூதரே!" என ஒட்டு மொத்த நபித்தோழர்களும் பதில் கூறினர் (புகாரி).


இதனை சாட்சிப்படுத்திய நபி(ஸல்) அவர்களின் வார்த்தைகளுக்கு பதிலாக வல்ல ரஹ்மான்,

"இன்றைய தினம் உங்களது மார்க்கத்தை உங்களுக்காகப் பூரணப்படுத்தி விட்டேன். எனது அருட்கொடையை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான (பொது) மார்க்கமாகவும் பொருந்திக் கொண்டேன்." (5:3) என்று தனது திருமறையில் வசனத்தை இறக்கி பதிலளித்தான்.


இது தெளிவாக, மார்க்கம் முழுமைபடுத்தப்பட்டு விட்டதை அறிவிக்கும் பொழுது, அவற்றில் அல்லாத புதிதாக ஒரு நன்மையைத் தரக்கூடிய செயலாக சேர்க்கும் எந்த ஒரு செயலும் நரகத்திற்குக் கொண்டு சேர்க்கும் என்பதை நன்றாக முஸ்லிம்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.


மேலும் இவை மறுமையில் நஷ்டத்தை விளைவிக்கும்; அதே வேளையில் மீலாது விழாக்களின்போது நடத்தப்படும் ஊர்வலங்கள், இம்மையில் முஸ்லிம்களின் பிரச்சினைகள் அதிகமாக்குகின்றன. மேலும் மற்றவர்கள் மத்தியில் முஸ்லிம்களைப் பற்றிய வெறுப்பும் இஸ்லாத்தைக் குறித்துத் தவறான கருத்தும் ஏற்படுவதற்குக் காரணியாக மீலாதுக் கொண்டாட்டங்கள் அமைகின்றன.


மீலாது விழாக்களை வருடந்தோறும் நடத்தும் சிலர் அதற்கென சில காரணங்களை அடுக்குவதற்கும் தவறுவதில்லை. அதில் மிக முக்கியமானது, "நாங்கள் நபி(ஸல்) அவர்களைப் புகழ்கின்றோம், மகிமைப் படுத்துகின்றோம்" என்பதாகும்.

ஒருவரை உண்மையில் நேசிப்பது என்பது, அவரை பின்பற்றுவதன் மூலமும் புகழ்வதும் மகிமைப்படுத்துவதும் அவரின் கொள்கைகளை பரப்புவதன் மூலமுமே சாத்தியமாகும். அல்லாமல் தங்களது வாழ்வில் அவர் கூறிய எந்த விஷயத்தையும் பின்பற்றாமல் அவர் காட்டித் தந்த வழிமுறைகளுக்கு எதிராகச் செயல்படுவது மகிமைப்படுத்துவது ஆகாது; அவரின் புகழுக்கு அது களங்கம் விளைவிப்பதாக அமையும்.

இன்றும் அதுதான் நடைமுறையில் காணமுடிகின்றது. மீலாது விழா என்ற பெயரில் சிலர் செய்யும் அனாச்சாரங்கள், தவறுகள் மற்றவர்களை பாதிப்பதாக அமைவதோடு முஸ்லிமல்லாதோர் இதுதான் இஸ்லாம் எனக் கருதி இஸ்லாத்தையும் நபி(ஸல்) அவர்களையும் தூற்றும் நிலைக்கு செல்லும் நிலை உருவாகி உள்ளதை நாம் மறுக்க முடியாது. இதற்கும் விழாக் கொண்டாடுவோர் பதில் கூறக் கடமைப் பட்டுள்ளனர்.

இவ்விடத்தில் மற்றுமொரு விஷயத்தையும் குறிப்பிட்டாக வேண்டும். மீலாது விழாக்கள் என்ற பெயரில் நடத்தப்படும் இஸ்லாத்தில் அங்கீகரிக்கப்படாத செயல்களின் மூலம் பல பிரதிபலன்களை அடைந்த பலர் அதனை எவ்விதத்திலாவது இஸ்லாத்தில் அங்கீகரிக்கப்பட்ட செயல் என்பதாக நிறுவ முயல்கின்றனர். அதற்கு யூசுஃப் அல்கர்ளாவி அவர்கள் அளித்த ஒரு பதிலைத் தங்களுக்கு ஏற்றவாறு திரித்து மின்மடலாற்குழுமங்களில் பரிமாறிக்கொள்வதைச் சான்றாகக் காணலாம்.

மீலாது விழாக்களைக் குறித்து கேட்கப்பட்ட ஓர் கேள்விக்கு, "இன்று முஸ்லிம்களிடையே மறக்கடிக்கப்பட்டு வரும் நபி(ஸல்) அவர்களின் வாழ்வில் நடந்த பல்வேறு சம்பவங்கள், அவர்களின் உறுதி, சஹாபாக்களின் பற்று போன்றவை மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு நினைவுறுத்தப்பட வேண்டும்" என்று 21ஆம் நூற்றாண்டின் சிறந்த மார்க்க அறிஞராக உலக மார்க்க அறிஞர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்ட டாக்டர். யூசுஃப் அல் கர்ளாவி அவர்களின் பதிலை மௌலிது ஓதவும், மீலாது விழாக்கள் கொண்டாடவும் ஆதாரமாகப் பரப்புகின்றனர்.

ஆனால் அவரது பதிலிலேயே, "சுன்னத் வல் ஜமாஅத் மற்றும் ஷியாக்களில் சிலர் இந்நாட்களில் இஸ்லாத்தில் அங்கீகரிக்கப்படாத பல்வேறு செயல்களைச் செய்கின்றனர். அவை இஸ்லாத்தில் எவ்விதத்திலும் அங்கீகரிக்கப்படாது" என்றும் தெளிவாகக் கூறியுள்ளதை வசதியாக இருட்டடிப்புச் செய்து விட்டு, தங்களுக்கு சாதகமான பகுதியை மட்டும் எடுத்துப் பரப்பித் திரிகின்றனர். எனவே இவற்றையும் முஸ்லிம்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.

நபி(ஸல்) அவர்களின் பிறந்த தினத்தைக் குறிப்பிட்டு நபி மொழிகளில் காணக்கிடைக்கும் ஒரு விஷயத்தை தெளிவு படுத்தினால் இன்றைய நாட்களில் மீலாத் பெயரில் நடக்கும் அனாச்சாரங்கள் அனைத்தும் கற்பனையானவை என்றும் அந்நாட்களில் என்ன செய்ய வேண்டும் என்பதும் தெளிவாகும்.

நபி(ஸல்) அவர்கள் பிரதி திங்கள் தோறும் நோன்பு நோற்கும் வழக்குமுடையோராக இருந்தார்கள். அதுபற்றி நபித்தோழர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வினவிய போது: "அந்நாளில் நான் பிறந்தேன். அதில்தான் என் மீது (அல்குர்ஆன்) இறக்கப்பட்டது" எனப் பதில் கூறினார்கள். (முஸ்லிம்).

மார்க்கத்தில் நபி(ஸல்) அவர்களின் பிறந்தநாளாக உறுதியாகப் பதிவு செய்யப்பட்ட ஒரே ஆதாரம் திங்கள் கிழமை என்பது மட்டுமே. இந்நாளில் நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்று வல்ல ரஹ்மானுக்கு நன்றி செலுத்திக் காட்டியுள்ளார்கள். உண்மையிலேயே எம்பெருமானார் (ஸல்) அவர்களின் மீது உயிரை வைத்திருப்பவர்கள் செய்ய வேண்டியது, திங்கள் கிழமைகளில் நோன்பு நோற்பதாகும். இதுவே அவர்களை மகிமைப் படுத்துவதையும் அவர்களின் மீது அன்பு வைத்திருப்பதையும் வெளிப்படுத்தும்.

ஏமாற்றுபவன், பொய் பேசுபவன், பிறருக்குத் தீங்கிழைப்பவன், அநீதி இழைப்பவன், பிறரை தரக்குரைவாகக் கருதுபவன், ஏற்றத்தாழ்வு கற்பிப்பவன், மது அருந்துபவன், சூதாடுபவன், விபச்சாரம் செய்பவன், புறம் பேசுபவன், வட்டி வாங்குபவன், அண்டை வீட்டாருடன் நல்ல முறையில் நடக்காதவன், வீண் விரயம் செய்பவன், பித்அத் புரிபவன், பிரிவினையை ஏற்படுத்துபவன், நபிவழியைப் புறக்கணிப்பவன் ... என்று யாரையெல்லாம் அடையாளம் காட்டி அவர்கள் நம்மைச் சார்ந்தவனல்லன் என்றும் இன்னும் அவர்கள் சுவர்க்கத்தில் நுழைய முடியாது என்றும் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் எச்சரித்தார்களோ அத்தகைய தீயபழக்க வழக்கங்களை விடுத்து வாழ்வதே உண்மையில் நபி(ஸல்) அவர்களைப் புகழ்வதும் மகிமைப்படுத்துவதும் ஆகும் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

நபி(ஸல்) அவர்களை முறையாகப் பின்பற்றி வாழ முனைவதே அவர்களை கண்ணியப்படுத்துவதும் அதுவே இறை பொருத்தத்திற்கு வழிவகுக்கக் கூடியதுமாகும் என்பதை உள்ளத்தில் பதித்து வாழ அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக!

ஆக்கம்: இப்னு முஹம்மத்(ஹனீஃப்)

நன்றி : சத்யமார்க்கம்.காம் ( http://www.satyamargam.com/ )

சனி, 12 டிசம்பர், 2009

புதிதாக உருவாகிறது - நபி(ஸல்) பற்றிய சர்வதேசத் திரைப்படம்!


இறைத் தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களின் வாழ்க்கையை உரிய ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டும் ஆவணமாக பெரும் பொருட்செலவில் புதியதோர் ஆங்கிலத் திரைப்படம் உருவாகிறது.

"இறுதித் தூதர் நபி(ஸல்) அவர்களின் பிறப்பிற்கு முன்பு துவங்கி, நபியவர்களின் மரணம் வரையிலான முழுமையான தொகுப்பான இத்திரைப்படம், நபியவர்கள் பற்றி தவறாக புரிந்து கொள்ளப்பட்ட எண்ணங்களையும், காழ்ப்புணர்ச்சியுடன் திட்டமிட்டுப் பரப்பப்பட்டு வரும் அனைத்து அவதூறுகளையும் களையும்!" என்கிறார் அஹ்மது அப்துல்லாஹ் அல் முஸ்தஃபா. இவர் கத்தர் நாட்டின் தலைநகரான தோஹாவில் அல் நூர் ஹோல்டிங் நிறுவனத்தின் தலைவராவார்.

வளைகுடா நாட்டின் முக்கிய நாடுகளில் ஒன்றான கத்தரிலுள்ள முன்னணி ஊடக நிறுவனமான அல்நூர் ஹோல்டிங் இந்தத் திரைப்படத்தினைத் தயாரிக்கிறது. சுமார் 150 மில்லியன் அமெரிக்க டாலர் பொருட்செலவில் எதிர்வரும் 2011 ஆம் ஆண்டு துவங்கவிருக்கும் இத்திரைப்படம், 25 முதல் 30 மாதங்களில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

“ இத்திரைப்படம், சர்வதேச அளவில் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் மீது பிற மதத்தவர் மட்டுமின்றி இஸ்லாத்தின் அடிப்படையைச் சரியாக விளங்காத முஸ்லிம்களும் இஸ்லாம் மீது கொண்டுள்ள தவறான எண்ணங்களைக் களையும் முகமாக விளங்கும்!" - அப்துல்லாஹ். ”

திரைப்படத் தயாரிப்புக் குழுவிற்கான தேவைக்காக அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் உள்ள திறமையான படத் தயாரிப்புக் நிறுவனங்களைத் தேர்வு செய்து கொண்டு வருகிறது அல் நூர் ஹோல்டிங் நிறுவனம். இப்படத்தைத் தயாரிக்க அமெரிக்கத் தயாரிப்பாளரான பேர்ரி எம். ஆஸ்போர்ன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர், உலகமெங்கும் சிறார்கள் மனதையும் பல ஆஸ்கர் பரிசுகளையும் அள்ளிச் சென்ற “The Lord of the Rings: The Return of the King”படத் தயாரிப்பாளராவார். இத்திரைப்படத்திற்காக இவருக்கு Academy Award for Best Picture விருது கிடைத்திருப்பது குறிப்பிடத் தக்கது. மேலும் புகழ் பெற்ற The Matrix படத்தினைத் தயாரித்தவரும் இவரே.

"ஆங்கிலம் பேசும் முஸ்லிம்களை மட்டுமே கொண்டு இத்திரைப்படம் தயாரிக்கப்படும். இத்திரைப்படம், சர்வதேச அளவில் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் மீது பிற மதத்தவர் மட்டுமின்றி இஸ்லாத்தின் அடிப்படையைச் சரியாக விளங்காத முஸ்லிம்களும் இஸ்லாம் மீது கொண்டுள்ள தவறான எண்ணங்களைக் களையும் முகமாக விளங்கும்!" என்கிறார் அப்துல்லாஹ்.

இத்திரைப்படம் பற்றி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்துள்ள டாக்டர். யூஸுப் அல் கர்ளாவி, "இத்திரைப்படம் ஒரு இஸ்லாமிய தஃவா (அழைப்பு) ஆகும்" என்று தெரிவித்துள்ளார். இந்தத் திரைப்படத் தயாரிப்பின் டெக்னிக்கல் கன்ஸல்டண்ட் மற்றும் முழு மேற்பார்வையையும் இவரே கவனிக்கிறார்.

இத்திரைப்படத்தின் உரைகள் (ஸ்க்ரிப்ட்), படப்பிடிப்பு மற்றும் தயாரிப்பு ஆகியவற்றின் மேற்பார்வையாளராக டாக்டர் யூஸுப் அல் கர்ளாவியும், அவர் தலைமையில் ஒரு இஸ்லாமியக் குழுவும் அமைக்கப் படவுள்ளது என்கிறார் அப்துல்லாஹ்

இத்திரைப்படம், உலகெங்கும் தவறான புரிதல்களுக்குப் பதிலடியாக பெரும் தாக்கத்தையும் கூடவே மறுமலர்ச்சியையும் ஏற்படுத்தும் என்கிறார் சர்வதேச முஸ்லிம் அறிஞர்களுக்கான ஒன்றியத்திற்குத் தலைவரான டாக்டர். யூஸுப் கர்ளாவி

கடந்த 2005 ஆம் ஆண்டு டென்மார்க்கின் ஜில்லண்ட்ஸ் போஸ்டன் என்ற பத்திரிகை 12 கார்ட்டூன்களை தனது தினசரியில் வெளியிட்டிருந்தது. இறைத்தூதர் நபி(ஸல்) அவர்களின் சொல்லுக்கும் செயலுக்கும் அங்கீகாரத்திற்கும் சற்றும் தொடர்பில்லாத அவதூறுகளைச் சுமத்தி இழிவு படுத்தும் எண்ணத்துடன் அப் பத்திரிகை கார்ட்டூன்கள் வெளியிட்டதைத் தொடர்ந்து உலகமெங்கும் முஸ்லிம்கள் கொந்தளித்தனர்.

பெரும் எண்ணிக்கையிலான பேரணிகள், ஊர்வலங்கள் மற்றும் சர்வதேச மீடியா சாதனங்கள் மூலம் முஸ்லிம்களின் கண்டனங்களும், எதிர்ப்புகளும் பதிவு செய்யப் பட்டன. அது நாள் வரை இஸ்லாத்திற்கு எதிராக திரைமறைவில் இருந்து நடந்து வந்த சூழ்ச்சிகளும், உலகெங்கும் இஸ்லாம் மீது வலிந்து பரப்பப் பட்டு வந்த இஸ்லாமோஃபோபியாவின் ஒட்டுமொத்த உருவமும் வெளியானது. அத்துடன் இஸ்லாத்தின் மீதான பொய்ப்பிரச்சாரத்தை முறியடித்து, இஸ்லாம் பற்றிய அறிவை முழு அளவில் உலக மக்களுக்கு எடுத்துச் சொல்லும் பொறுப்பு ஒவ்வொரு முஸ்லிம்கள் மீது சாட்டப் பட்டிருப்பதை உணர்ந்தனர்.

அதனைத் தொடர்ந்த உலகமெங்கும் "இறைத்தூதரை அறிந்து கொள்" எனும் வகையிலான இஸ்லாமிய பிரச்சாரங்கள் பெருமளவில் முஸ்லிம்களால் நடத்தப்பட்டு வருகிறது. இறைத்தூதர் நபி(ஸல்) அவர்களை இழிவு படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்ட டென்மார்க்கிலேயே 27 பெரும் முஸ்லிம் அமைப்புகள் ஒன்றுகூடி European Committee for Honoring the Prophet என்ற பெயரில் வலுவான ஒன்றியத்தை அமைத்திருக்கிறது.

இஸ்லாத்தின் மீதும் இறைத்தூதர் மீதும் உலகமெங்கும் திட்டமிட்டு பரப்பப்பட்டு வரும் தவறான எண்ணங்களுக்கான ஒரு சரியான மறுமொழியாக இத்திரைப்படம் அமையும் என்று நாமும் எதிர்பார்ப்போம்.

- அபூ ஸாலிஹா

தகவல் : சத்தியமார்க்கம்.காம்

வெள்ளி, 8 மே, 2009

கோபப்படாதே சகோதரா!

'ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு' என்ற அருமையான பழமொழியை நாம் செவிமடுத்திருப்போம். உலகில் ஏற்படும் அத்துணை இன்னல்களுக்கும் ஏதேனும் ஒரு வகையில் கோபம் ஒரு காரணமாக அமைந்து இருப்பதை நாம் காணலாம்.

ஒரு நாட்டின் அதிபர் மீது இன்னொரு நாட்டு அதிபர் கொள்ளும் கோபம் இருநாட்டு மக்களின் இன்னுயிரை 'போர்' என்ற பெயரில் பறிக்கிறது. ஒரு அமைப்பின் நிர்வாகிகளுக்குள் ஏற்படும் கோபம் அமைப்பு பிளவுபடவும், அதன்மூலம் நேற்றுவரை சகோதரர்களாக இருந்தவர்கள்

பகைவர்களாக வலம் வரவும் காரணமாவதோடு, சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கும் தடையாகவும் அமைகிறது. ஒரு சாரார் மீது கொண்ட கோபம், அவர்களை இழிவுபடுத்தும் நோக்கில் சமுதாயத்தை 'புறம்தள்ளியவர்களுடன்' கரம் கோர்க்கவைக்கிறது. இது ஒருபுறமிருக்க, குடும்ப அளவில் கணவன்-மனைவி இடையில் ஏற்படும் கோபம் குடும்பமெனும் கப்பல் மூழ்கியேவிடுகிறது. அற்பமான விஷயங்களில் அருமையான உறவினர்கள்மீது கொண்ட கோபம் உறவெனும் கயிறு அறுபட்டு பிரிகிறது. இத்தகைய கோபம் பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது என்பதை பார்ப்போம்

அல்லாஹ் கூறுகின்றான்;

நிச்சயமாக மனிதன் அவசரக்காரனாகவே படைக்கப்பட்டிருக்கின்றான். [70:19]

மனிதனின் அவசர முடிவின் காரணமாகவும், கோபத்தின் காரணமாகவும் அவனுக்கு பாதிப்பு வந்துவிடக்கூடாது என்பதால்தான் மனிதன் அதிகமாக அவசரப்பட்டு முடிவெடுக்கும் தலாக் விசயத்தில் இறைவன், மூன்று வாய்ப்புகளை வழங்குகிறான்

الطَّلاَقُ مَرَّتَانِ فَإِمْسَاكٌ بِمَعْرُوفٍ أَوْ تَسْرِيحٌ بِإِحْسَانٍ وَلاَ يَحِلُّ لَكُمْ أَن تَأْخُذُواْ مِمَّا آتَيْتُمُوهُنَّ شَيْئًا إِلاَّ أَن يَخَافَا أَلاَّ يُقِيمَا حُدُودَ اللّهِ فَإِنْ خِفْتُمْ أَلاَّ يُقِيمَا حُدُودَ اللّهِ فَلاَ جُنَاحَ عَلَيْهِمَا فِيمَا افْتَدَتْ بِهِ تِلْكَ حُدُودُ اللّهِ فَلاَ تَعْتَدُوهَا وَمَن يَتَعَدَّ حُدُودَ اللّهِ فَأُوْلَـئِكَ هُمُ الظَّالِمُونَ

(இத்தகைய) தலாக் இரண்டு முறைகள் தாம் கூறலாம் - பின் (தவணைக்குள்)முறைப்படி கணவன், மனைவியாகச் சேர்ந்து வாழலாம்; அல்லது நேர்மையான முறையில் பிரிந்து போக விட்டுவிடலாம்;;. அவ்விருவரும் அல்லாஹ்வின் வரம்புகளை நிலை நிறுத்த முடியாது என்று அஞ்சும் போது தவிர. நீங்கள் மனைவியருக்கு கொடுத்தவற்றிலிருந்து யாதொன்றையும் திருப்பி எடுத்துக் கொள்ளுதல் கூடாது - இன்னும் நீங்கள் அல்லாஹ்வின் வரம்புகளை அவர்களால் நிலை நிறுத்த முடியாது என்று அஞ்சினால், அவள் (கணவனுக்கு) ஏதேனும் ஈடாகக் கொடுத்து(ப் பிரிந்து) விடுவதில் குற்றமில்லை. இவை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ள வரையறைகளாகும்;. ஆகையால் அவற்றை மீறாதீர்கள்;. எவர் அல்லாஹ்வின் வரையறைகளை மீறுகிறார்களோ, அவர்கள் அக்கிரமக்காரர்கள் ஆவார்கள்.[2:229]

யார் வீரன்..?

நம்மிடத்தில் ஒரு வீரனை அடையாளம் காட்டுமாறு கேட்கப்பட்டால், நாம் பலசாலியான ஒருவரைத்தான் அடையாளம் காட்டுவோம். ஆனால் உண்மையான வீரன் யார் என்று நபியவர்கள் கூறுவதை பாருங்கள்;

நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்: பலசாலி என்பவன் (எதிரியை) கீழே வீழ்த்துபவன் அல்லன். மாறாக கோபத்தின்பொழுது யார் தன்னைக் கட்டுப்படுத்துகிறானோ அவன் தான் பலசாலி![ நூல்: புகாரி, முஸ்லீம்

பலமிருந்தாலும் பணிவு காட்டுங்கள்;

முஆத் பின் அனஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்: ஒருமனிதன் சினத்தைச் செல்லுபடியாக்க ஆற்றல் பெற்றிருக்கும் நிலையிலும் அதனை மென்று விழுங்கினால் அவனை மறுமை நாளில் எல்லாப் படைப்பினங்களுக்கு முன்னிலையில் அல்லாஹ் அழைப்பான். ஹ_ருல் ஈன் எனும் அழகுமிக்க (சுவனத்துப்) பெண்களில் அவன் விரும்புகிறவர்களைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள அவனுக்கு அனுமதி அளிப்பான். (நூல்: அபூதாவூத் , திர்மிதி

கோபத்தை மென்று விழுங்கிய உமர்[ரலி]அவர்கள்;

சகாபாக்களில் உமர்[ரலி] அவர்கள், மார்க்க விஷயத்தில் எவருக்கும் வளைந்து கொடுக்காதவர்கள் என்பதும், மார்க்கத்திற்கு எதிரானவர்கள் விஷயத்தில் கடும் கோபமுடையவர்கள் என்பதும் நாம் அறிந்ததே! இதற்கு சான்றாக ஹுதைபியா உடன்படிக்கையை எடுத்துக்கொள்ளலாம். அந்த உடன்படிக்கையின்போது நபி[ஸல்]அவர்கள், அல்லாஹ்வின் உத்தரவின்பேரில் அல்லது அனுமதியின்பேரில் குறைஷிகளுடன் ஒப்பந்தம் செய்தார்கள். அந்த ஒப்பந்தத்தில் பெரும்பாலும் முஸ்லிம்களுக்கு பாதகமான விஷயங்கள் இடம்பெற்றதையும், உம்ரா செய்யவிடாமல் தடுப்பதையும் கண்ட உமர்[ரலி]அவர்கள், இந்த இணைவைப்பாளர்களுக்கு நாம் எதற்காக விட்டுக்கொடுக்கவேண்டும் என்று நபியவர்களிடமும், அபூபக்கர்[ரலி]அவர்களிடமும் கடுமையான கோபத்துடன் வாதிட்டதை நாம் ஹதீஸில் பார்க்கிறோம்.அப்படிப்பட்ட உமர்[ரலி]அவர்களின் வாழ்வில் ஒரு சம்பவம்;

ப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: "உயைனா இப்னு ஹிஸ்ன் என்பார் (மதீனா) வந்து தன்னுடைய சகோதரர் மகனாகிய ஹ{ர்ரு பின் கைஸ் என்பாரிடம் தங்கியிருந்தார். உமர்(ரலி) அவர்கள் யார் யாரையெல்லாம் தங்களது அவையில் நெருக்கமான அந்தஸ்தில் வைத்தி ருந்தார்களோ அத்தகைய நபர்களுள் ஹ{ர்ரும் ஒருவர். குர்ஆனை கற்ற றிந்த அறிஞர்கள்தான் உமர்(ரலி) அவர்களது அவைத் தோழர்களாகவும் ஆலோசகர்களாவும் இருந்தனர். அவர்கள் பெரிய வயதுடையவர்களாயினும் இளைஞர்களாயினும் சரியே! தன் சகோதரர் மகனிடம் உயைனா சொன்னார்: "மகனே! இந்த அமீரிடத்தில் உனக்கு செல்வாக்குள்ளது. எனவே அவரைச் சத்திப்பதற்கு எனக்கு அனுமதி வாங்கிக் கொடு!"அவ்வாறே அவர் அனுமதி கேட்டார். உமர்(ரலி) அவர்களும் அனுமதி கொடுத்தார்கள்.

உமர்(ரலி) அவர்களின் சமூகத்தில் உயைனா வந்தபொழுது சொன் னார்: "இதோ! கத்தாபின் மகனாரே! நீர் எங்களுக்கு அதிக மானியம் கொடுப்பதில்லை. மேலும் எங்களிடையே நீதியுடன் தீர்ப்பு அளிப்பதில்லை!" (இதனைக் கேட்டதும்) உமர்(ரலி) அவர்கள் அதிகஅளவு கோபம் கொண்டு அவரைத் தண்டிக்கவே முனைந்து விட்டார்கள்!

அப்பொழுது உமர்(ரலி) அவர்களிடம் ஹ{ர்ரு சொன்னார்: "அமீருல் முஃமினீன் அவர்களே! (குர்ஆனில்) அல்லாஹ் தன்னுடைய நபியை நோக்கிக் கூறுகிறான்: (நபியே! மக்களிடத்தில்) மென்மையையும் மன்னிக் கும் போக்கையும் மேற்கொள்வீராக! நன்மை புரியுமாறு ஏவுவீராக. மேலும் அறிவீனர்களைவிட்டும் விலகியிருப்பீராக! (7 : 199) - இந்த மனிதரும் அறிவீனர்களில் ஒருவர்தானே!" - அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இந்த வசனத்தை அவர் ஓதிக்காட்டியபொழுது உமர்(ரலி) அவர்கள் அதை மீறிச் செல்லவில்லை! அவர்கள் இறைவேதத்தின் வரம்புக்குக் கட்டுப்படுப வர்களாய்த் திகழ்ந்தார்கள்!" நூல்: புகாரி.

மிகப்பெரிய ஜனாதிபதியாக இருந்தபோதும், அல்லாஹ்வின் வசனம் ஒதிக்காட்டியபோது அப்படியே கோபத்தை கட்டுப்படுத்திய உமர்[ரலி] அவர்கள் எங்கே? அந்த வசனம் இன்றும் குர்ஆனில் இருந்தும் அதை கண்டுகொள்ளாமல் கச்சைகட்டிக்கொண்டு திரியும் நாம் எங்கே? சிந்திப்போமா?

நபிகளாரின் அறிவுரை;

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து எனக்கு அறிவுரை கூறுங்கள் என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் நீ கோபம் கொள்ளாதிருப்பாயாக என்றார்கள். மீண்டும் அறிவுரை கூறுமாறு பல தடவை அவர் கேட்டதற்கும் நபிகளார்(ஸல்) அவர்கள் நீ கோபம் கொள்ளாதிருப்பாயாக என்றே பதில் அளித்தார்கள்! (நூல்: புகாரி)

எத்துணையோ அறிவுரைகள் இருந்தும், மனிதனின் அத்தனை தீமைக்கும் அடிப்படையாக இருக்கக்கூடிய கோபத்தை தவிர்க்குமாறு நபியவர்கள் சொன்ன உபதேசத்தை நாம் கவனத்தில் கொள்வது சிறந்தது.

கோபத்தை போக்கும் வழி;

சுலைமான் இப்னு ஸுரத்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் அருகில் இரண்டு பேர் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டார்கள். அப்போது நாங்கள் நபி(ஸல்) அவர்கள் அருகில் அமர்ந்துகொண்டிருந்தோம். அவர்களில் ஒருவரின் முகம் சிவந்து விட்டிருக்கக் கோபத்துடன் தம் தோழரைத் திட்டிக் கொண்டிருந்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'எனக்கு ஒரு (பிரார்த்தனை) வார்த்தை தெரியும். அதை இவர் சொல்வராயின் இவருக்கு ஏற்பட்டுள்ள கோபம் போய்விடும். 'அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்' (சபிக்கப்பட்ட ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்) என்பதே அச்சொல்லாகும்' என்று கூறினார்கள். எனவே, மக்கள் அம்மனிதரிடம், நபி(ஸல்) அவர்கள் சொல்வதை நீர் செவியேற்கவில்லையா? என்று கூறினார். அந்த மனிதர், 'நான் பைத்தியக்காரன் அல்லன்' என்றார். [புஹாரி;6115 ]

பொறுமை என்பது இறைவன் புறத்திலிருந்து வருவது, கோபம் என்பது ஷைத்தானின் புறத்திலிருந்து வருவது. எனவே ஷைத்தானின் தூண்டுதலான கோபத்தை விட்டொழித்து, இறைவனின் நேசத்திற்குரிய பொருமையாலர்கலாக நாம் மாறவேண்டும். ஏனெனில் அல்லாஹ் கூறுகின்றான்

ஆத்திரத்தில் ஆகாதெனினும், அன்பு; தன்னை வளர்க்க கூலி தரும்.

மேலும் அவர்கள் இந்தக் குரானை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்களின் இருதயங்களின் மீது பூட்டுக்கள் போடப்பட்டு விட்டனவா? Al Quran (47:24)

ஈமெயில் உதவி : அரம்பன்னை வாசிகள் குரூப்

வியாழன், 26 மார்ச், 2009

அல்குர்ஆனின் சிறப்புகள

அல்லாஹ் மனிதனைப் படைத்து அவன், தான் விரும்புவது போல் வாழ்ந்துக் கொள்ள விட்டுவிடாமல் வாழ்க்கை நெறியை வேதங்களின் மூலமும் தூதர்களின் மூலமும் வகுத்துக் கொடுத்தான். இந்த அடிப்படையில் மனித சமுதாயத்திற்கு இறுதி வேதமாக அல்குர்ஆனையும் இறுதித் தூதராக முஹம்மது(ஸல்) அவர்களையும் அனுப்பியுள்ளான். எனவே நமது வாழ்க்கையை மன இச்சைப்படி அமைத்துக் கொள்ளாமல் அல்குர்ஆனும் நபிமொழியும் காட்டித்தரும் நெறியிலேயே அமைத்துக் கொள்ள வேண்டும். இதுவே முஸ்லிமின் உயரிய பண்பும் குர்ஆன் மற்றும் ஹதீஸின் எதிர்பார்ப்புமாகும். மார்க்கத்தின் இவ்விரு அங்கங்களில் முதலிடம் பெறுவது அல்குர்ஆன் ஆகும்.


அல்குர்ஆனுடன் இரண்டு விதமான தொடர்புகளை ஏற்படுத்துவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கட்டாயக் கடமையாகும்.


1. திருக்குர்ஆனை பொருளறிந்து படிப்பது. அதன் கட்டளைகளைப் புரிந்து அதன் அடிப்படையில் வாழ்க்கையை அமைத்துக் கொள்வது.


2. அல்குர்ஆனை அதிகமாக ஓதி அளவற்ற நன்மையைப் பெற்றுக் கொள்வது.


அல்குர்ஆனை பொருளறிந்து படிப்பதுதிருமறையை சூரத்துல் ஃபாத்திஹாவிலிருந்து சூரத்துன்னாஸ் வரை முழுமையாகப் படித்து அதன் செய்திகளை அறிந்து கொள்ளவேண்டும். அதன் கட்டளைகளுக்கு கட்டுப்படுவது, அது தடுக்கும் செயல்களை விட்டும் விலகிக் கொள்வது. அதில் கூறப்பட்ட சம்பவங்களின் மூலம் படிப்பினை பெறுவது, இவ்வாறு அல்குர்ஆனோடு நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொள்வது முஸ்லிம்கள் அனைவரின் மீதும் கட்டாயக் கடமையாகும். நபி(ஸல்) அவர்களின் குணநலன்கள் அல்-குர்ஆனாகவே இருந்தது என்று அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் கூறியதின் பொருளும் இதுதான்.


எனவே நம்முடைய வாழ்க்கையை முற்றிலும் அல்-குர்ஆனுக்கு கட்டுப்படும் வாழ்க்கையாக அமைத்துக் கொள்ளவேண்டும். அதுவே அல்-குர்ஆன் இறக்கி அருளப்பட்டதின் மகத்தான நோக்கமாகும்.இந்த நோக்கத்தைப் புரிந்து கொண்ட நபித்தோழர்களும் நபித்தோழியர்களும் அல்-குர்ஆனுக்கு இணங்க தங்களது வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்கள். ஒவ்வொரு வசனம் இறங்கும் போதும் அதன் கட்டளைகளுக்கு உடனே கட்டுப்படுபவர்களாக இருந்தனர். இதற்கு வரலாற்றில் எத்தனையோ சான்றுகள் உள்ளன. எனவே நாமும் அல்குர்ஆனைப் படித்து, அதன் அடிப்படையில் செயல்பட்டு ஈருலக வெற்றியைப் பெறுவோமாக!


திருக்குர்ஆன் பொதுமக்களுக்குப் புரியாது என்று கூறுவது தவறான கூற்றாகும். திருக்குர்ஆனின் அர்த்தம் மற்றும் விளக்கங்களை நேரடியாக அறிவதற்கு அரபி மொழியில் புலமை அவசியம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் மொழி பெயர்க்கப்பட்டவற்றைப் படித்து அதில் உள்ள செய்திகளை ஒவ்வொருவரும் அவரவரின் அறிவுக்கு ஏற்றவாறு புரிந்து கொள்ள முடியும். ஒரு நூல் மொழிபெயர்க்கப்படுகிறது என்றால் அந்த மொழியை அறியாதவர்கள் அதனை புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்குத்தான். எனவே குர்ஆனை அதன் மொழிபெயர்ப்பை புரிந்து கொள்ள முடியாதென்பது தவறானதும் அல்லாஹ்வின் வேதவசனங்களுக்கு மாற்றமான கூற்றுமாகும். அல்லாஹ் இதனை 54: 32, 47: 24 வசனங்களின் மூலம் உணர்த்துகிறான்.


நிச்சயமாக இக்குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம்; எனவே இதிலிருந்து நல்லுணர்வு பெறுவோர் உண்டா? (அல்-குர்ஆன் 54:32)


மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா? (அல்-குர்ஆன் 47:24)


அல்குர்ஆனை ஓதுதல்


பொருளறியாமல் படித்தாலும் ஆன்மீக ரீதியாக நன்மையை பெற்றுத்தரும் ஒரே நூல் அல்குர்ஆன் மட்டும்தான். திருக்குர்ஆனை ஓதுவதில் எண்ணிலடங்கா நன்மைகள் கிடைக்கின்றன. அல்குர்ஆனை முறையாக, புரிந்து ஓதுபவர் மறுமையில் மலக்குமார்களுடன் இருப்பார். திருமறையைப் படித்தவர்களுக்காக அது மறுமையில் அல்லாஹ்விடம் சிபாரிசு செய்யும். இதுபோன்ற இன்னும் பல நன்மைகளும் சிறப்புக்களும் உள்ளன. எனவே பொருட்செலவோ, கடின உடலுழைப்போ இன்றி குறைந்த நேரத்தில் நிறைந்த நன்மையைப் பெற்றுத் தரும் திருமறையை அதிகமாக ஓதிடவேண்டும்.


குறிப்பாக ரமலான் மாதத்தில் அதிமாக ஓதவேண்டும். ரமலான் மாதத்தில் ஒவ்வொரு முஸ்லிம் ஒரு தடவையாவது குர்ஆனை முழுமையாக ஓதி முடிப்பது நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுதலில் ஒன்றாகும்.


நபி(ஸல்) அவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் ரமலானில் ஒரு தடவை குர்ஆனை ஓதிக் காண்பிக்கப்பட்டது. அவர்கள் மரணிக்கும் வருடம் இரண்டு தடவை ஓதிக் காண்பிக்கப்பட்டது. (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) - ஆதாரம் : புகாரி)


அல்குர்ஆனின் எழுத்துக்களை முறையாக உச்சரித்து, நிறுத்தி, நிதானமாக, ஓதவேண்டும்.(நபியே! இரவுத் தொழுகையான) அதில் குர்ஆனை (நன்கு திருத்தமாக) நிறுத்தி, நிறுத்தி ஓதுவீராக! என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான். குர்ஆனை அழகாக, ராகமாக, ஓதாதவன் நம்மைச் சார்ந்தவனல்ல என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.


குர்ஆனை ஓதுவதை விட்டும் பொடுபோக்காக இருக்கும் சகோதர, சகோதரிகள், நாளை மறுமை நாளில் ஓரு நன்மைக்காக அங்கும் இங்கும் ஓடித் திரிந்து அல்லோலப்பட்டும் அது கிடைக்காமல் நரகில் விழ நேரிடும் அந்நாளை நாம் மறந்து விடக்கூடாது.


இதோ குர்ஆனின் சிறப்புக்கள் குறித்து குர்ஆன் மற்றும் நபிமொழிகள் கூறிய ஒருசில சிறப்புக்கள்:- குர்ஆன் குறித்து குர்ஆன் கூறுவது


1. குர்ஆனை புரிந்து கொள்வது எளிது - நிச்சயமாக இக்குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம்; எனவே இதிலிருந்து நல்லுணர்வு பெறுவோர் உண்டா? (அல்-குர்ஆன் 54:32)


2. சிந்திக்கத் தூண்டும் குர்ஆன் - மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா? (அல்குர்ஆன் 47:24)


3. குர்ஆன் விசுவாசிகளுக்கு அருமருந்து - இன்னும், நாம் முஃமின்களுக்கு ரஹ்மத்தாகவும், அருமருந்தாகவும் உள்ளவற்றையே குர்ஆனில் (படிப்படியாக) இறக்கிவைத்தோம் ஆனால் அக்கிரமக் காரர்களுக்கோ இழப்பைத் தவிர வேறெதையும் (இது) அதிகமாக்குவதில்லை. (அல்-குர்ஆன் 17:82)


4. குர்ஆன் மனிதர்களின் இதய நோய்நிவாரணி - மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக ஒரு நல்லுபதேசமும் வந்துள்ளது. (உங்கள்) இதயங்களிலுள்ள நோய்களுக்கு அருமருந்தும் (வந்திருக்கிறது) மேலும் (அது) முஃமின்களுக்கு நேர்வழிகாட்டியாகவும், நல்லருளாகவும் உள்ளது. (அல்-குர்ஆன் 10:57)


5. குர்ஆனை ஓதும் முன்பு ஷைத்தானிய தீண்டுதலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருதல் - மேலும் (நபியே!) நீர் குர்ஆனை ஓதுவீராயின் (முன்னதாக) விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் காவல் தேடிக்கொள்வீராக. (அல்-குர்ஆன் 16:98)


6. குர்ஆன் எழுத்து வடிவில் நபிக்கு அருளப்படவில்லை - காகிதத்தில் (எழுதப்பட்ட) ஒரு வேதத்தையே நாம் உம் மீது இறக்கி வைத்து, அதனை அவர்கள் தம் கைகளால் தொட்டுப் பார்த்தபோதிலும், இது பகிரங்கமான சூனியத்தைத்தவிர வேறில்லை என்று அந்நிராகரிப்போர் நிச்சயமாக சொல்வார்கள். (அல்-குர்ஆன் 6:7)


7.குர்ஆன் நபியின் சொந்த கூற்றல்ல - அகிலத்தாருக்கெல்லாம் இறைவனிடமிருந்து (இது) இறக்கியருளப்படடதாகும். அன்றியும், நம்மீது சொற்களில் சிலவற்றை இட்டுக் கட்டிக் கூறியிருப்பாரானால், அவருடைய வலக்கையை நாம் பற்றிப் பிடித்துக் கொண்டு பின்னர், அவருடைய நாடி நரம்பை நாம் தரித்திருப்போம். (அல்-குர்ஆன் 69: 43-46)


குர்ஆன் குறித்து நபிமொழிகள் கூறுவது


1. நிச்சயமாக இந்தக் குர்ஆன் பரிந்துரை செய்யக்கூடியதாகும். அது ஏற்கப்படக்கூடியதுமாகும். அதனைப் பின்பற்றினால் அவரை அது சுவனத்தில் சேர்க்கும். அதனை பின்பற்றாமல் விட்டு விட்டால் அல்லது நிராகரித்தால் அவன் நரகின் அடித்தளத்தில் தள்ளப்படுவான். (அறிவிப்பாளர்: இப்னு மஸ்வூத்(ரலி) – ஆதாரம் : முஸ்லிம்)


2. குர்ஆனை ஓதி அதன்படி அமல் செய்தவரையும், குர்ஆனையும் நாளை மறுமையில் கொண்டு வரப்படும், குர்ஆனின் இரண்டு அத்தியாயங்கள் அல்பகரா, ஆலஇம்ரான் முன் வந்து அந்த இரண்டையும் ஓதியவருக்காக அல்லாஹ்விடத்தில் வாதாடும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)


3. குர்ஆனின் விஷயத்தில் தர்க்கம் புரிவது இறை மறுப்புச் செயலாகும். அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) - ஆதாரம் : அபூதாவூத்


4. குர்ஆனைத் தானும் கற்று பிறருக்கும் கற்றுக் கொடுப்பவரே உங்களில் சிறந்தவர். அறிவிப்பாளர்: உஸ்மான்(ரலி) – ஆதாரம் : புகாரி


5. இக்குர்ஆனின் ஒரு முனை அல்லாஹ்வின் கையிலும் மறுமுனை உங்கள் கைளிலும் உள்ளது. எனவே இதனை உறுதியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் இம்மையில் வழிதவறமாட்டீர்கள், மறுமையில் அழிவுறவும் மாட்டீர்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) - ஆதாரம் : தப்ரானி )


6. பேச்சுக்களில் மிகச் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிகாட்டுதல்களில் மிகச்சிறந்தது முஹம்மது(ஸல்) அவர்களின் பாதையாகும். தீனில் தீமையானது மார்க்கத்தில் புதிதாகப் புகுத்தப்பட்டதாகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். (ஆதாரம் : முஸ்லிம்)


7. இவ்வேதத்தைக் கொண்டே அல்லாஹ் சில கூட்டத்தாரை உயர்த்துகிறான். மற்றோரு கூட்டத்தினரை இதனைக் கொண்டே தாழ்த்துகிறான். சமுதாய உயர்வு, தாழ்வுக்கு காரணம் குர்ஆனே. (அறிவிப்பாளர்: உமர்(ரலி) - ஆதாரம் : முஸ்லிம்)


8. குர்ஆனின் சிறு பகுதியேனும் யார் உள்ளத்தில் மனனம் இல்லையோ அவர் உள்ளம் பாழடைந்த வீட்டைப் போன்றது. அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்(ரலி) – ஆதாரம் : திர்மிதி


9. எவர் குர்ஆனிலிருந்து ஒரு எழுத்தை ஓதினால் நன்மை இருக்கிறது. ஒரு நன்மை அதுபோன்று பத்து மடங்காக்கப்படும். "அலீஃப், லாம், மீம்" ஒரு எழுத்து என்று சொல்லமாட்டேன். மாறாக அலீஃப் ஒரு எழுத்து, லாம் ஒரு எழுத்து, மீம் ஒரு எழுத்துமாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர் : இப்னு மஸ்வூத்(ரலி) - ஆதாரம் : திர்மிதி, தாரமி.)


10. குர்ஆனை ஓதக்கூடியவருக்கு உவமைகளையும், ஓதாமல் இருப்பவருக்கு உவமைகளையும் பெருமானார்(ஸல்) அவர்கள் மொழிந்துள்ளார்கள். குர்ஆனை ஓதக்கூடிய முஃமினின் உவமை பழத்தைப் போன்றது. அதனுடைய வாசனையோ மணமானது. அதனுடைய சுவையோ ருசிக்கத்தக்கது. குர்ஆனை ஓதாத மூஃமீனின் உவமை பேரித்தம் பழத்தை போன்றது. அதற்கு வாசனை இல்லை. அதனுடைய சுவையோ இனிப்பானது. குர்ஆனை ஓதாத நயவஞ்சகனின் உவமை குமட்டிக்காய் போன்றது. அதற்கு வாசனை இல்லை. அதனுடைய சுவையோ கசப்பானது. குர்ஆனை ஓதக்கூடிய நயவஞ்சகனின் உதாரணம் துளசி செடியை போன்றது. அதனுடைய வாசனை மணமானது. அதனுடைய சுவையோ கசப்பானது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபு மூஸா(ரலி) - ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)


11. யார் குர்ஆனை ராகமாக (தஜ்வீத்துடன்) ஓதவில்லையோ அவர் நம்மைச் சார்ந்தவரல்ல. (அறிவிப்பாளர்: பசீர் பின் அப்துல் முன்திர்(ரலி) - ஆதாரம் : அபூதாவூத்)


12. குர்ஆனைக் கற்றுக் கொள்ளுங்கள் மேலும் அதை ஓதுங்கள். குர்ஆனைக் கற்று அதனை ஒதி அதன் அடிப்படையில் நடப்போருக்கு உவமையானது கஸ்தூரியால் நிரப்பப்பட்ட பையைப் போன்றது. அது அனைத்து இடங்களிலும் மணம் வீசிக்கொண்டிருக்கும். குர்ஆனைக் கற்று அது அவருடைய உள்ளத்தில் பசுமையாய் பதிந்தும் அதனடிப்படையில் நடக்கவில்லையோ அவரின் உவமை கஸ்தூரியால் நிரப்பப்பட்ட பையை அது பரவாமல் கட்டிக்கொண்டவரைப் போல என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபுஹூரைரா(ரலி) - ஆதாரம் : திர்மிதி, நஸயீ, இப்னுமாஜா)


13. நாங்கள் திண்ணையில் அமர்ந்து இருக்கிற சமயத்தில் பெருமானார்(ஸல்) எங்களிடம் வந்து உங்களிடம் பாவம் செய்யாது சொந்த பந்தங்களை துண்டிக்காத நிலையில் ஒவ்வொரு நாளும் புத்ஹான் அல்லது ஹதீக் என்ற இடத்திற்கு சென்று திமில்களுடைய இரண்டு ஓட்டகங்களை கொண்டு வர யார் விரும்புவார்? என வினவினார்கள். நாங்கள் அனைவரும் இதை விரும்புவோம் என்று பதிலளித்தோம். உங்களில் ஒருவர் பள்ளிவாசல் பக்கம் செல்லக்கூடாதா? அவ்வாறு சென்று அல்லாஹ்வுடைய வேத்தில் இரண்டு வசனங்களை ஓதுதல் அல்லது கற்றல் இரண்டு ஒட்டகங்களை விட சிறந்தது. மூன்று வசனங்களை ஓதுவது மூன்று ஒட்டகங்களை விட சிறந்தது. நான்கு வசனங்களை ஓதுவது நான்கு ஒட்டகங்களை விட சிறந்தது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். உங்களில் ஒருவர் தன்னுடைய இல்லத்திற்கு செல்லும்போது தன்னுடன் நல்ல கொழுத்த மூன்று ஒட்டகங்களை பெற்றுச் செல்லவேண்டும் என்று விரும்புவாரா? என்று வினவினார்கள். நாங்கள் அனைவரும் அதை விரும்புவோம் என்று கூறினோம். மூன்று (குர்ஆனிய) வசனங்களை உங்களில் ஒருவர் தன்னுடைய தொழுகையில் ஓதுவது அவருக்கு நல்ல கொழுத்த மூன்று ஒட்டகங்கள் கிடைப்பதை விட சிறந்தது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபுஹூரைரா(ரலி) - ஆதாரம் : முஸ்லிம், இப்னுமாஜா)


14. குர்ஆனை ஓதுவதில் தேர்ச்சி பெற்றவர் கண்ணிமிக்க வானவர்களுடன் இருப்பார். குர்ஆனை ஒதுவது சிரமமாக இருப்பினும் அதைத் திருப்பித்திருப்பி சிரமத்துடன் ஓதுவாரானால் அவருக்கு இரண்டு கூலி இருக்கிறது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஆயிஷா(ரலி) - ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)


15. மறுமை நாளில் குர்ஆனை ஓதி அதனடிப்படையில் நடந்தவரிடம் குர்ஆனிய தோழரே ஓதுவீராக என்று கூறப்படும். மேலும் உலகத்தில் எவ்வாறு நிறுத்தி நிதானமாக ஓதினீரோ அவ்வாறு ஓதுவீராக! நிச்சயமாக எந்த வசனத்தை கடைசியாக ஓதி முடிப்பாரோ அதுதான் சொர்க்கத்தில் உமது அந்தஸ்தாகும் என்று கூறப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி) - ஆதாரம் : அபூதாவுத், திர்மிதி)


16. குர்ஆனை ஓதிய தோழர் மறுமையில் வருவார். அப்போது குர்ஆன் இறைவா இவருக்கு ஆடையை அணிவி என்று சொல்லும் அப்போது அவருக்கு உயர்ந்த கிரீடம் அணிவிக்கப்படும். இறைவா இவருக்கு உன் அருளை வழங்குவாயாக! என்று கூறும். அப்போது அவருக்கு உயர்ந்த சீருடை அணிவிக்கப்படும். பிறகு குர்ஆன் இவரை பொருந்திக் கொள்ளுமாறு சொல்லும் அவரை இறைவன் பொருந்திக் கொள்வான். அம்மனிதரிடம் குர்ஆனை நிறுத்தி நிதானமாக ஒதுவீராக!, அவர் ஒதுகிறபோது ஒவ்வொரு வசனத்திற்க்கும் ஒரு நன்மை அதிகப்படுத்தப்படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபுஹூரைரா(ரலி) - ஆதாரம் : திர்மிதி, இப்னு குஸைமா)


குர்ஆன் உயிருடன் இருக்கும் போதே படித்து நேர்வழி பெறுவதற்குத்தானேயொழிய இறந்த பின் மரணித்தவர்களுக்கு குர்ஆனை அஞ்சல் செய்வதற்கு இல்லை. (இது) உயிரோடிருப்பவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறது. நிராகரிப்பவர்களுக்கு (தண்டனையுண்டு என்ற) வாக்கை உண்மையென உறுதிப்படுத்துகிறது (அல்குர்ஆன் 36: 70)


குர்ஆனை அல்லாஹ் நமக்கு அருளிய நோக்கம் நாம் அதைப் படித்து, சிந்தித்துச் செயல்பட வேண்டும் என்பதற்குத்தான். ஆனால் முதிய வயதை அடைந்தும் குர்ஆனை ஓதத் தெரியாதவர்கள் நம்மில் பலர் உள்ளனர். இது கவலை தரக்கூடிய ஒன்றாகும். முதிய வயதாகிவிட்டாலும் குர்ஆனைக் கற்றுக் கொள்ள முடியும் என்பது உண்மை. உங்களை மரணம் வந்தடைவதற்கு முன் குர்ஆனை ஓதத் தெரிந்தவர்களிடம் சென்று குர்ஆனை ஓதத் தெரிந்து கொள்ளுங்கள். புதிதாக இஸ்லாத்தை ஏற்ற பல சகோதரர்கள் குர்ஆனை சரளமாக ஓதவும், அதன்படி செயல்படவும் செய்கின்றார்கள். நாமோ பரம்பரை முஸ்லிம் என்று சொல்லிக்கொண்டு நமது வழிகாட்டியாகிய குர்ஆனைப் பற்றி எதுவும் தெரியாதவர்களாக இருக்கின்றோம். குர்ஆனைப் படியுங்கள். அதைப்படிப்பது மிகவும் இலகுவானது.


குர்ஆனைப் படித்து, விளங்கி, அதன்படி செயல்பட வேண்டும் என்று அல்லாஹ் கூறுகின்றான். ஆகவே அன்புள்ள சகோதர சகோதரிகளே! குர்ஆனை அதிகமதிகம் ஓதுங்கள். அதன் கருத்துக்களை தர்ஜுமதுல் குர்ஆனில் விளங்கிப்படியுங்கள். விளங்காதவற்றை அறிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்துக்கொள்ளுங்கள். அதன் படி செயல்படுங்கள்.

குர்ஆனைப் படித்து அதன்படி நடந்து ஈருலக வெற்றி பெற அல்லாஹ் நம் அனைவருக்கும் வாய்ப்பளிப்பானாக..!

நன்றி : முதுவை ஹிதாயத்

வியாழன், 19 மார்ச், 2009

தொழுகையில் குர்ஆனைப் பார்த்து ஓதுவது ?

கேள்வி : தொழும் பொழுது குர்ஆனைத் திறந்துப் பார்த்து அல்லது கைகளில் ஏந்திக் கொண்டு அதைப் பார்த்து ஓத அனுமதி உள்ளதா?

பதில்: தொழும்போது குர்ஆனைத் திறந்து பார்ப்பதற்கோ அல்லது கைகளில் ஏந்தி அதைப் பார்த்து ஓதுவதற்கோ நாமறிந்தவரை மார்க்கத்தில் வழிகாட்டல் ஏதும் இல்லை.

(தொழுகையில்) ''உள்ளச்சத்துடன் - கட்டுப்பட்டு - நில்லுங்கள்'' (அல்குர்ஆன், 2:238)

(அவர்கள்) ''தமது தொழுகையில் பணிவைப் பேணுவார்கள்'' (அல்குர்ஆன், 23:2)

ஒருவர் தம்மைத் தொழுகைக்குத் ஆயத்தப்படுத்திக்கொண்டு, தொழுகையின் ஆரம்ப நிலையில் நின்று, தொழுகைக்குள் நுழையும் முதல் தக்பீர், ''தக்பீர் தஹ்ரீமா'' எனப்படும். இத்துவக்க தக்பீரைக் கூறியவுடன் தொழுகைக்கு வெளியே செயலாற்றும் உண்ணுதல், பருகுதல், பேசுதல் போன்ற உலகச் செயல்பாடுகள் விலக்கப் பட்டதாகிவிடும். தொழுகை என்பது வணக்கங்களின் சிகரமாகும். அந்நேரம் தொழுபவர் தன் கவனம் முழுமையும் இயன்றவரை தொழுகையில் மட்டுமே செலுத்த வேண்டும். தொழுகையில் இஸ்லாம் கற்பிக்கும் முறைகளை முடிந்த அளவுக்குக் கடைப்பிடித்து உள்ளச்சத்துடன் தொழ வேண்டும்; மற்றவற்றை ஒதுக்கிவிட வேண்டும்.

'முடிந்த அளவுக்கு' என்பதில் தொழுகையின்போது எதிர்பாராது நாம் எதிர் கொள்ளும் தும்மல், இருமல் போன்ற உபாதைகளின்போது சளியை உமிழ்தல் / துடைத்துக் கொள்ளுதல் ஆகியவையும் மனிதருக்குத் தொல்லை தரும் ஊர்வன / பறப்பனவற்றை அப்புறப் படுத்தலும் தொழுகைக்குக் குறைவை ஏற்படுத்தா என்பதற்கு நபிவழியில் சான்றுகள் உள்ளன.

மேற்சொன்னவை அனைத்தும் தொழுகையில் நமது கவனம் சிதறுவதற்குக் காரணமாக இருந்தாலும் அவை அனைத்தும் நமது விருப்பத்துக்கு மாற்றமாக, நாம் எதிர்பாராமல் நடப்பவை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தங்கள் கேள்வியில் கண்டவாறு தொழும்போது குர்ஆன் பிரதியைக் கையில் வைத்துக் கொண்டு ஓதும்போதும் ஒரு ஸ்டாண்டில் வைத்துப் பார்த்து ஓதும்போதும் அடுத்த பக்கத்தைத் திருப்புவதற்காக அடிக்கடி நமது கைகளைப் பயன் படுத்த வேண்டி வரும். அப்போதெல்லாம், "தொழுகையில் நிற்கும்போது நபி (ஸல்) அவர்கள் தங்கள் இடக்கையை நெஞ்சில் வைத்து அதற்குமேல் வலக்கையை வைத்திருப்பார்கள்" என்ற நபிவழிக்கு அடிக்கடி மாறு செய்ய வேண்டி வரும்.

[நபித்தோழர் வாஇல் இப்னு ஹுஜ்ரு (ரலி) அவர்களது ஆதாரப் பூர்வமான இந்த அறிவிப்பை இமாம் இப்னு ஹுஸைமா, பஸ்ஸார் ஆகிய இருவரும் பதிவு செய்திருக்கிறார்கள். நபித்தோழர் ஹல்புத் தாஇ (ரலி) அவர்களின் ஆதாரப் பூர்வமான அறிவிப்பை இமாம் அஹ்மது அவர்கள் தங்களது முஸ்னதில் பதிவு செய்திருக்கிறார்கள். இவ்வனைத்தையும் புகாரீ ஹதீஸ் எண் 698க்கு விரிவுரையாக ஃபத்ஹுல் பாரீயில் இமாம் அஸ்கலானீ அவர்கள் மேற்கோள் காட்டியுள்ளார்கள்.]

மேலும், கைகளிலோ ஸ்டாண்டிலோ குர் ஆன் பிரதிகளை வைத்துக் கொண்டு, அதில் பார்வையைச் செலுத்தி ஓதும்போது நமது கவனம் முழுவதும் காற்றடித்தால் குர்ஆனின் பக்கங்கள் மாறிவிடுமோ என்ற எண்ணத்திலும் அது கீழே விழுந்து விடாமல் இருப்பதிலும் குவிக்கப்படும். இதுவும் தொழுகையின் ஒழுங்குகளுக்கு மாற்றமானதாகும்.

"நல்லது, நன்மையானது" என்று நாமாக நினைத்துக் கொண்டு, வணக்க-வழிபாடுகளில் நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தராத எதையும் புகுத்தி விடக் கூடாது. "நீண்ட குர்ஆன் வசனங்கள் மனப்பாடம் இல்லையென்றால் குர்ஆன் பிரதிகளைப் பார்த்துத்தான் ஓதியாக வேண்டும்" என்று இஸ்லாம் நம்மைக் கட்டாயப் படுத்தவே இல்லை. மேலும் நீண்ட குர்ஆன் வசனங்கள் ஓதித்தான் தொழ வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. மாறாக, ஒரு இஷாத் தொழுகையில் நீண்ட அத்தியாயமான சூரத்துல் பகரா முழுவதையும் ஓதித் தொழ வைத்த முஆத் இபுனு ஜபல் (ரலி) அவர்களைப் பற்றி "தொழுகையை அளவுக்கதிகம் நீட்டுகிறார்" என்று புகார் சொல்லப் பட்டவேளை, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஆத் (ரலி) அவர்களைக் கடிந்து கொண்டார்கள். மேலும், "அவ்வாறு நீட்ட வேண்டாம்; அஷ்ஷம்ஸு, அல்-லைல், அல்-அஃலா, ஆகிய அத்தியாயங்களை ஓதிப் போதுமாக்கிக் கொள்க" என்று அறிவுரை கூறினார்கள். [புகாரீ ஹதீஸ் எண் 660] எனும்போது, இஸ்லாத்தில் இல்லாத வழிகளை நாமாக ஏற்படுத்திக் கொண்டு, அதன் மூலம் நமக்கு நாமே தொல்லைகளைச் சுமக்க வேண்டுவதில்லை.

"மார்க்கம் எளிமையானது; அதை (உங்களுக்கு நீங்களே) கடினமாக்கிக் கொள்ளாதீர்கள்" [புகாரீ ஹதீஸ் எண் 38] என்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கட்டளைப்படி, தொழும்போது குர்ஆன் பிரதிகளைப் பார்த்து ஓதுவதற்குக் கட்டாயப் படுத்தும் இஸ்லாமிய வழிகாட்டல் ஏதுமில்லாததால் அதைத் தவிர்த்துக் கொண்டு, எளிமையான இஸ்லாத்தைக் கடினமாக்காமல் நடைமுறைப் படுத்துவதே சரியான நபிவழியாகும்.

முற்றாக அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே!

நன்றி : சத்யமார்க்கம்

அண்ணல்நபிகள் நடந்த பாதையில்...!

"உங்களுடைய தேவைக்குப் போக மீதமுள்ளவற்றை தருமமாக செலவு செய்யுங்கள்" - எம்பெருமானார் நபிகள் நாயகம்.

சிக்கனமாயிரு... கருமியாயிராதே....!

நபிகள் நாயகத்தின் போதனைகளில் இதுவும் ஒன்று.ஒரு சமயம்...எம்பெருமானார், நபிகள் நாயகம் அவர்களைத் தேடிக்கொண்டு ஒரு பெரியவர் வந்தார். வந்த பெரியவரை அமரவைத்து என்ன காரியமாக வந்தீர்கள் என்று கேட்கிறார்."எங்கள் ஊரில் பள்ளிவாசல் கிடையாது... தொழுகைக்குப் பக்கத்து ஊருக்குப் போக வேண்டிய நிலையில் நாங்கள் இருக்கின்ற நிலையை மாற்ற வேண்டும். எல்லோருமாகச் சேர்ந்து கொஞ்சம் வரி மாதிரிப் போட்டு பணம் வசூல் செய்து பள்ளி வாசல் வேலையைத் துவக்கிவிட்டோம்.

ஆனால், போதிய பணம் இல்லாமல் பாதியோடு வேலை அப்படியே நிற்கிறது. அதை எப்படியும் கட்டியாகணும். நீங்கதான் அதற்கு ஒரு வழி சொல்ல வேண்டும்", என்று கேட்டுக்கொண்டார்.

அதற்கு நபிகள் நாயகம் அந்தப் பெரியவரைப் பார்த்துச் சொன்னார்,

"அருகிலுள்ள ஊரில் ஒரு செல்வந்தர் இருக்கிறார்... அவருடைய பெயர், விபரம் எல்லாம் தருகிறேன். நீங்கள்அவரிடம் போய் பள்ளிவாசல் கட்டுவதற்கு உதவவேண்டும் என்று கேளுங்கள்; உங்கள் வேலை சுலபமாகவே முடிந்துவிடும், " என்று சொன்னார்கள் எம்பெருமானார்.

எம்பெருமானார் சொன்னதைக் கேட்ட பின்னும் சற்றுத் தயக்கமாக நின்றார், அந்தப் பெரியவர். அவரது தயக்கத்தைப் பார்த்த எம்பெருமானார் அவர்கள், "உங்கள் தயக்கம் எனக்குப் புரிகிறது நீங்கள் அவரிடம் போய்க் கேளுங்கள், அவர் நிச்சயம் கொடுப்பார் " என்றார். அதற்குப் பிறகு பெரியவர், எம்பெருமானார் அவர்கள் குறிப்பிட்ட அந்தப் பணக்காரர் வசிக்கின்ற ஊரைத் தேடிப் போனார்.

அந்தப் பணக்காரரையும் பார்த்தார். பணக்காரரைப் பார்த்ததும் பெரியவருக்கு மிகப் பெரிய அதிர்ச்சி!

பெரியவர் அதிர்ச்சிக்குக் காரணம் இல்லாமல் இல்லை. தாம் பார்க்கப் போகின்ற பணக்காரர் பெரிய கருமி என்றும் எச்சில் கையால் காக்கையைக்கூட விரட்டாதவர் என்ற அளவில் ஏற்கனவே கேள்விப்பட்டிருந்தார். அப்படிக் கேள்விப்பட்டது எவ்வளவு உண்மை என்பதைத்தான் அந்தப் பணக்காரரைப் பார்த்தபோது தெரிந்து கொண்டார்.

பார்த்த மாத்திரத்தில் எப்படி அப்படி ஒரு முடிவுக்கு வந்தார்? பெரியவர் பணக்காரரைப் பார்க்கப்போன நேரத்தில், அந்தப் பணக்காரர், ஒருத்தரை தூணில் கட்டிவைத்து அடித்துக் கொண்டிருந்தார். அதைப்பார்த்த பெரியவர், அங்கே நின்றுகொண்டிருந்தவர்களில் ஒருவரிடம், "எதுக்காக அந்த மனிதரை அப்படி அடிக்கிறார்?" என்று கேட்டார். அதற்கு அங்கிருந்தவர் சொன்னார், "அய்யா அவங்க, அந்த ஆளைக் கடைக்கு அனுப்பிப் பருப்பு வாங்கி வரச் சொல்லியிருக்கின்றார். அந்த ஆள் பருப்பு வாங்கிவரும்போது பத்துப் பருப்பு கீழே சிந்திச் சிதறவிட்டுவிட்டாராம். அதுக்காக பத்து அடி அடிக்கிறார்," என்று விளக்கம் சொல்லியிருக்கிறார். ஒரு பருப்புக்கு, ஒரு அடி வீதம் பத்து அடி என்று கணக்குப் பார்த்து அடிக்கின்ற இந்தக் கஞ்சப் பேர்வழி எங்கே பள்ளிவாசல் கட்டப் பணம் தரப்போகின்றார்? இந்த நேரம் போய் நாம் பணம் கேட்டால் நமக்கு என்ன நடக்குமோ என்று அங்கிருந்து தலை தப்பினால் போதும் என்று நடையைக் கட்டிவிட்டார்.

அங்கே எடுத்த ஓட்டம் நேரே நபிகள் முன்னால் வந்து நின்றார், பெரியவர். அவரைப்பார்த்து நபிகள் அவர்கள் கேட்கிறார்கள்,"பணக்காரர் என்ன கொடுத்தார்?""கொடுத்தார், கொடுத்தார் நல்லாவே கொடுத்தார்...அடி, உதை என்று ஆரம்பித்து நடந்ததை விபரமாகச் சொல்லி அப்படிப்பட்டவரிடம் என்னை அனுப்பினீர்களே?!", என்று சொல்லி நிறுத்தினார்.

எம்பெருமானார் அமைதியாகச் சொன்னார், "மறுபடியும் அந்தப் பணக்காரரைப் போய் பார்த்துக் கேளுங்கள், " என்று சொல்கிறார்.பெரியவருக்கு எம்பெருமானார் சொல்லைத் தட்டயியலாம, மீண்டும் அந்தப் பணக்காரரைப் போய் பார்க்கக் கிளம்பிச் சென்றார். இந்த முறை பெரியவர் பணக்காரரைப் போய் பார்த்தபோது மேலும் அதிர்ந்து போனார். அவருக்கு எம்பெருமானார் மீதே கோபம் வந்தது. அப்படிக் கோபம் வர என்ன காரணம் என்கிறீர்களா? இந்த முறையும் அந்தப் பணக்காரர் ஒரு ஆளை ஒரு மரத்தில் கட்டி வைத்து சாட்டையால் அடித்துக்கொண்டிருந்தார்.

அங்கிருந்தவரிடம் பெரியவர், "ஏன் இப்படி மாட்டை அடிக்கிற மாதிரி அடிக்கின்றார்? காரணம் என்ன?" என்று கேட்டார். "அந்த ஆளைக் கடையில் போய் எண்ணெய் வாங்கிவரச் சொல்லியிருக்கின்றார், அந்த ஆள் எண்ணெய் வாங்கி வரும்போது பத்துச் சொட்டு எண்ணெயை கீழே சிந்தி விட்டாராம், அதனால் பத்து சவுக்கடி கொடுத்துக் கொண்டிருக்கிறார், " என்றார் அங்கிருந்தவர். பள்ளிவாசல் கட்டப் பணம் கேட்க வந்த நம்ம பெரியவருக்கு நபிகள் பேச்சைக் கேட்டு வந்தது தப்பாப்போச்சு; இந்தக் கருமியிடம் பணம் கேட்டு பள்ளிவாசல் கட்டுவதைவிட பள்ளிவாசல் கட்டுகின்ற எண்ணத்தையே விட்டுவிடுவது நல்லது என்ற முடிவுக்கு கிட்டத்தட்ட வந்து விட்டார்.

இந்தக் கருமியிடம் பணம் கேட்டு அவரும் பத்துரூபாய் நன்கொடை என்று கொடுத்துவிட்டு பள்ளிவாசலை சரியாக் கட்டவில்லை என்று ரூபாய்க்கு ஒரு அடியோ உதை என்று கொடுத்தால் அதை வாங்குவது நாம்தான் என்றெண்ணிய பெரியவர், கருமியிடம் பணம் கேட்பதை கைவிட்டுவிட்டு பேசாமல் நபிகள் முன்னால் வந்து நின்றார். "செல்வந்தர் என்ன கொடுத்தார்?" என்று எம்பெருமானார் கேட்கின்றார்கள்"சவுக்கடிதான்.... ", என்று சொல்லி நடந்த விபரத்தையும் அந்தக் கருமியிடம் பணம் கேட்கவேண்டாம் என்று முடிவெடுத்துத் திரும்பியதாகச் சொல்கின்றார்.

இந்த முறை எம்பெருமானார் " மறுபடியும் நீங்கள் அவரிடம் போய்க் கேளுங்கள்! " என்று உத்தரவிடும் தொனியில் சொல்கின்றார்கள்.எம்பெருமானாரின் கட்டளையை மீற முடியாத பெரியவர் மறுபடியும் அந்தப் பணக்காரரைப் பார்க்கப்போகின்றார். பெரியவர் பணக்காரர் வீட்டுக்குள் நுழையும்போது சிறிது நின்று யோசித்தார். சரி வருவது வரட்டும் என்று துணிச்சலை வரவழைத்துக் கொண்டு போனார்.நல்லவேளையாக அங்கே யாரும் அடிபடவில்லை;

ஆனால் அந்தப்பணக்காரர் வீட்டுக்குள் யாரிடமோ சத்தமாக திட்டிப் பேசிக்கொண்டிருந்தார். எம்பெருமானாரின் கட்டளை நினைவில் எழ, பெரியவர் துணிந்து அவரை அணுகி தாம் வந்த காரியத்தைப் பற்றிச் சொல்லி உங்களால் முடிந்ததை தந்து உதவ வேண்டுமென்று மிகப் பணிவாகக் கேட்டுக்கொண்டார், பெரியவர். "பள்ளி வாசலைக் கட்டிமுடிக்க எவ்வளவு செலவு செய்வதாக உத்தேசித்திருக்கின்றீர்கள்?" என்று அந்தச் செல்வந்தர் கேட்டார்."பள்ளிவாசல் கட்டி முடிக்க பத்தாயிரம் ரூபாய் தேவைப்படும். நீங்க உங்களால் முடிந்ததைக் கொடுத்தீர்களானால் மீதியை மத்தவங்களிடம் நன்கொடையா வாங்கி பள்ளி வேலையை முடித்திடுவோம்," என்றார் பெரியவர்.அதுக்கு அந்தப் பணக்காரர் என்ன சொன்னார் தெரியுமா?என்ன சொல்லீருப்பார்ன்னு நினைக்கிறீங்க? கொஞ்சம் யூகிச்சுப் பாருங்களேன்! "இவ்வளவு காலம் உங்கள் ஊரில் பள்ளிவாயில் இல்லாமல் இருந்ததே தவறு. இதில் இன்னமும் பலபேர்களிடம் போய் நன்கொடை அது... இது என்று காலம் தள்ளுவது நல்லதல்ல; பள்ளிவாயில் கட்டத் தேவையான பத்தாயிரத்தையும் நானே தருகின்றேன்.

இந்த மாதிரி ஒரு நல்ல காரியத்திற்கு உதவாத பணம் என்னிடம் இருந்து என்ன ஆகப் போகின்றது?" என்று சொன்னவர் சற்றும் தாமதிக்காமல் உள்ளே சென்று பத்தாயிரம் ரூபாயை எடுத்து வந்து பெரியவரிடம் கொடுத்தார். பெரியவருக்கு நடப்பது கனவா? நனவா? என்று குழம்பிய நிலையில் எம்பெருமானார் முன் வந்து விபரத்தைச் சொல்கின்றார். விபரம் சொன்னதோடு நிற்காமல் நபி அவர்களிடம் கேட்கின்றார்."பத்துப் பருப்பு சிந்தியதற்கும், பத்துச் சொட்டு எண்ணெய் சிந்தியவருக்கும் அடியும் உதையும் கொடுத்தார்; அப்படிப்பட்டவர் பள்ளிவாசல் கட்ட எதாவது கொடுங்கள் என்றால் பத்தாயிரத்தை சுளையாகத் தூக்கிக் கொடுக்கின்றாரே இவரை கருமி என்பதா? கொடைவள்ளல் என்று சொல்வதா?" என்று தன் ஆச்சரியம் விலகாமல் கேட்கின்றார் பெரியவர்.

பெரியவர் சுவற்றில் அடித்த பந்து போல திரும்பத் திரும்ப வந்து நின்ற போதெல்லாம் நபியவர்கள், 'போய் அவரிடம் கேளுங்கள்' என்றுதான் சொன்னாரேயொழிய வேறு எதுவும் சொல்லாவில்லை. ஆனால் இப்போது விளக்கம் சொல்கின்றார்."கருமித்தனம்ங்கறது வேற! சிக்கனம்ங்கறது வேற!! அந்த ஆள் கருமி கிடையாது. சிக்கனத்தைக் கையாளுபவர்; அவர் சிக்கனமாய் இருந்து சேர்த்து வைத்ததால்தான் அந்தப் பணம் பள்ளிவாசல் கட்டப் பயன்படுகிறது. எனவே சிக்கனமாக இருப்பவரை கருமி என்று எண்ணாதீர்கள்", என்று சொன்னார்கள். (நம்மாளுகள்ள பலபேர் இப்படித்தான் சிக்கனமா இருக்காங்களோ!!)எம்பெருமானார் சொன்ன அந்த வைர வார்த்தைகள்தான் கருமித்தனத்துக்கும் சிக்கனத்துக்கும் உள்ள இடைவெளியை நமக்குப் புலப்படவைக்கின்றது. இந்தச் செய்தியை நீங்கள் படித்துவிட்டு உங்கள் வீட்டம்மாவிடம் சொன்னாலும் சொல்லலாம்; அல்லது யார் மூலமாவது இந்தச் செய்தி காற்று வாக்கில் பல குடும்பத் தலைவிகளின் காதிலும் விழுந்திருக்கலாம்!குடும்பத் தலைவர்கள் மேல எனக்கு அனுதாபம் அதிகமா இருக்கிறதால ஒன்றைச் சொல்ல வேண்டியது அவசியம்ன்னு நெனைக்கேன்..

இனிமேலும் நீங்கள் கடைக்குப் போய் பருப்போ இல்லை எண்ணெய்யோ வாங்கி வருகின்ற சந்தர்ப்பம் ஏற்படலாம்!? அப்படி வாங்கி வர்ற‌ வழியில் எதாவது தப்பித் தவறி சிந்திட்டா இவ்வளவு சிந்திப் போய்ட்டதுன்னு வெகுளித்தனமாக வீட்டில் சொல்லிக்கொண்டிருக்காதீர்கள். ஏன்னா ஒரு நேரம் போல் ஒரு நேரம் இருக்காது...???

நன்றி : முதுவை ஹிதாயத்

புதன், 18 மார்ச், 2009

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் சிறப்பு மீலாது நபி மாநாடு

மீலாது நபியை முன்னிட்டு குவைத்தில், குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் சார்பில் சிறப்பு மாநாடு நடைபெற்றது.

அப்ரக் (பழைய) ஃகைத்தான் பகுதியில் உள்ள இந்தியன் கம்யூனிட்டி ஸ்கூல், ஹழ்ரத் உமர் இப்னு ஃகத்தாப் அரங்கத்தில் மாநாடு நடைபெற்றது.

மழலையர் நிகழ்ச்சி, உத்தம நபியின் உதய தின சிறப்பு சொற்பொழிவு மற்றும் 'மீலாது போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு பரிசளிப்பு விழா' என முப்பெரும் விழாவாக நடைபெற்றது.

சங்கத்தின் தலைவர் மவ்லானா அப்துல் லத்தீஃப் தலைமையேற்க, குவைத் லக்கி அச்சகத்தின் அதிபர் லக்கி. சுலைமான் பாட்சா முன்னிலை வகிக்க, சங்கத்தின் துணைத் தலைவர் அல்ஹாஜ் கபீர் அலீ திருக்குர்ஆன் கிராஅத் ஓத, சங்கத்தின் துணைத் தலைவர் மவ்லானா முஹம்மது மீராஷா வரவேற்புரையாற்ற, குவைத் முத்தமிழ் மன்றத்தின் தலைவர் கவிஞர் ஷம்சுதீன் கவிதை வாசிக்க, சங்கத்தின் பொதுச் செயலாளர் பரங்கிப்பேட்டை மவ்லவீ கலீல் அஹ்மத் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மக்ரிப் தொழுகை முடிந்தவுடன் மாலை 6:30 மணி முதல் மாநாட்டு நிகழ்ச்சிகள் இனிதே துவங்கின.

முதல் நிகழ்ச்சியாக தமிழ் இஸ்லாமிய மாணவ மாணவியருக்கு நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் முதலிடத்தை பெற்ற செல்வி. S. பர்வீன் ஃபாத்திமா என்ற மாணவியின் சொற்பொழிவும், சங்கத்தின் தலைமை நிலைய சொற்பொழிவாளர் மவ்லவி முஹம்மது அஜ்வத் (இலங்கை) அவர்களின் மதரஸா அல் ஃபலாஹ் திருக்குர்ஆன் பயிற்சி மையம் நடத்திய பல்வேறு போட்டிகளில் முதலிடங்களை வென்ற மூன்று மாணவ மாணவியரின் திருக்குர்ஆன் ஓதுதல் மற்றும் கலிமா, பிரார்த்தனைகள் ஒப்புவித்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இரண்டாவது நிகழ்ச்சியின் முதல் அமர்வாக பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளின் நிர்வாகிகள் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் செயற்பாடுகள் குறித்து வாழ்த்தி பிரார்த்தனை செய்யும் வாழ்த்தரங்கம் நடைபெற்றது.

இவ் வாழ்த்தரங்கில் குவைத் இந்திய முஸ்லிம்கள் கூட்டமைப்பின் (Federation of Indian Muslim Associations - FIMA) துணைத் தலைவர் அல்ஹாஜ் ஸித்தீக் வளியகாத், அய்யம்பேட்டை அல்-இஹ்ஸான் நற்பணி மன்றத்தின் குவைத் அமைப்பாளரும், குவைத் தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சாரப் பேரவையின் (TMCA) காப்பாளர் குழு உறுப்பினரும், குவைத் அய்யம்பேட்டை சக்கராப்பள்ளி முஸ்லிம் ஜமாஅத்தின் ஆட்சி மன்ற அமைப்பாளர் குழு உறுப்பினருமான கம்பளி பஷீர் மற்றும் குவைத் அய்யம்பேட்டை சக்கராப்பள்ளி முஸ்லிம் ஜமாஅத்தின் பொதுச்செயலாளர் அல்ஹாஜ் ஆவூர் பஷீர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

தமிழகத்திலிருந்து வருகை தந்த சிறப்பு விருந்தினர் மவ்லானா மவ்லவீ அல்ஹாஜ் அஃப்ழலுல் உலமா ஜியாவுத்தீன் அஹ்மத் பாகவீ கிப்லா அவர்கள் 'மாநபி முஹம்மது (ஸல்) அவர்கள் பெற்ற மகத்தான வெற்றி' என்ற தலைப்பில் மிகச்சிறப்பாக மாநாட்டு பேருரையாற்றினார்.

மூன்றாவது நிகழ்ச்சியாக... குவைத்தில் வசிக்கும் தமிழறிந்த அனைத்து இஸ்லாமிய மாணவ மாணவியருக்கு 'இஸ்லாமிய சொற்பொழிவு, பொது அறிவு போட்டி மற்றும் திருக்குர்ஆன் மனனப் போட்டிகள்'; ஆகியவற்றையும், தமிழ் முஸ்லிம் பெண்மணிகளுக்கு 'இஸ்லாமிய பொது அறிவு போட்டி'யையும், மாநாட்டு அரங்கத்தில் ஆண்களுக்கென்று 'இஸ்லாமிய பொது அறிவு போட்டி' யையும் K-Tic சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.

இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கும், பெண்களுக்கும் முறையாக முதலாவது, இரண்டாவது, மூன்றாவது மற்றும் மூன்று ஆறுதல் பரிசுகளும், போட்டிகளில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் நிர்வாகிகள், கிளை பொறுப்பாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள், களப்பணியாளர்கள் மற்றும் ஸீரத்துன் நபி விழாக் குழுவினர் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர்.

செவ்வாய், 17 மார்ச், 2009

துபாயில் நாளை மீலாதும் - மௌலீதும்

துபாயில் சுன்னத் வல்ஜமாஅத் ஐக்கிய பேரவையின் சார்பில் 18.03.2009 புதன்கிழமை மாலை மீலாதும் - மௌலீதும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

மஃரிபு தொழுகைக்குப் பின்னர் மௌலீது மஜ்லீசும், இஷா தொழுகைக்குப் பின்னர் காயல்பட்டணம் மவ்லவி அல்ஹாஜ் அல்ஹாபிழ் எம். சுலைமான் ஆலிம் மஹ்ளரி அவர்கள் “மீலாதும் மௌலீது” எனும் தலைப்பில் உரை நிகழ்த்த உள்ளார்கள்.

மீலாத் குறித்தும், மவ்லீத் குறித்தும் அறிந்து கொள்ள விரும்பும் அனைவரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தெளிவு பெறலாம்.

பெண்களுக்கு தனியிட வசதியும், நிகழ்ச்சி முடிந்த பின்னர் இரவு உணவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலதிக விபரம் பெற : முஹம்மது மஹ்ரூப் 050- 42 55 253

திங்கள், 2 மார்ச், 2009

இறைத்தூதர் அவர்களின் இறுதிப் பேருரை!

இதற்கு முன் என்றுமே இருந்திராத அளவிற்கு மாபெரும் கூட்டத்தால் அன்று சங்கைமிகு மக்காவின் புனித பள்ளிவாசல் நிரம்பி வழிந்தது. அங்கு கூடியிருந்தோரின் உள்ளச்சமும் வணக்க வழிபாடுகளும் அவர்களின் ஆன்மிக உணர்வுகள் முழுமை அடைந்திருந்ததை வெளிப்படுத்திக் கொண்டிருந்தன


அதுதான் ஹிஜ்ரி 10-ஆம் ஆண்டு ஹஜ் கடமையை நிறைவேற்ற கூடியிருந்த மாபெரும் கூட்டத்தின் எதார்த்த நிலையாகும். அரபுலகம் முழுவதிலுமிருந்து சுமார் ஒரு இலட்சத்து இருபதாயிரத்திற்கும் அதிகமானவர்கள் அங்கே குழுமியிருந்தார்கள். அதுவும் ஒரு மகத்தான வணக்கத்தை, மகத்தான இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுடன் சேர்ந்து நிறைவேற்றுகிற மன மகிழ்ச்சியில் திளைத்திருந்தார்கள்.


இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் அங்கு வந்திருந்த அனைவரையும் துல்ஹஜ் பிறை எட்டின் நடுப்பகலுக்குப் பிறகு மக்காவிலிருந்து 'மினா'விற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு ளுஹர், அஸ்ர், மக்ரிப், இஷா, ஸுப்ஹு ஆகிய தொழுகைகளை முடித்துவிட்டு சூரிய உதயத்திற்குப் பின், தோழர்களுடன் அரஃபா நோக்கிப் புறப்பட்டார்கள். அங்கு நமிரா பள்ளத்தாக்கில் நபியவர்களுக்காக கூடாரம் அமைக்கப்பட்டிருந்தது. அதில் சூரியன் உச்சி பொழுதைக் கடக்கும் வரை தங்கி இருந்தார்கள். அதன் பிறகு தமது 'கஸ்வா' ஒட்டகத்தைத் தயார் படுத்தக் கூறி, அதில் பயணித்து, 'பத்னுல்வாதி' எனும் பகுதிக்கு வந்தார்கள்.


அமைதி காத்த நிலையில் அந்த மக்கள் நபி (ஸல்) அவர்களைப் பார்த்தபடி நிற்க, அதே இடத்தில் தமது ஒட்டகத்தின் மீதமர்ந்தபடி நபியவர்கள் ஒரு சொற்பொழிவு ஆற்றினார்கள்.நபி(ஸல்) அவர்கள் அப்போது ஆற்றிய அந்த உரையே 'நபியவர்களின் இறுதிப் பேருரை' என்பதாக இன்று அறியப்படுகிறது


கூட்டம் பிரமாண்டமாக இருந்ததால், நபி (ஸல்) அவர்களின் சொற்பொழிவு அனைவரின் செவிகளுக்கும் சென்றடைவது சாத்தியமில்லை என்ற நிலை உருவானது. எனவே, அங்கிருந்தோரிலேயே மிக உரத்த குரல் கொண்டிருந்த ரபீ இப்னு உமய்யா இப்னு கலஃபை அழைத்து, தமது பேச்சை எல்லோரும் செவியுறும் விதமாக ஒவ்வொரு வாக்கியமாய் திரும்பச் சொல்லுமாறு பணித்தார்கள். (அல் பிதாயா இப்னு கஸீர் 5/189)


தொடக்க துதி மொழிகள்


நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவனையே நாம் புகழ்கிறோம்; அவனிடமே நாம் உதவி தேடுகிறோம். நம்முடைய மன இச்சைகளின் கெடுதிகளை விட்டும், நம்முடைய செயல்களின் தீமைகளை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறோம். யாருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவானோ, அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. யாரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுவானோ, அவரை நேர்வழியில் செலுத்துபவர் யாரும் இல்லை. இன்னும், நான் சாட்சி சொல்கிறேன்: 'அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாரும் இல்லை. அவன் தனித்தவன்; அவனுக்குக் கூட்டாளி யாரும் இல்லை.' மேலும், நான் சாட்சி சொல்கிறேன்: 'நிச்சயமாக முஹம்மது, அவனுடைய அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்.' (ஸுனன் இப்னு மாஜா 1892,1893)


பிரிவின் முன்னறிவிப்பு


ஒ… மக்களே! என் பேச்சை கவனமாகக் கேளுங்கள்! இந்த ஆண்டிற்குப் பிறகு மீண்டும் இந்த இடத்தில் சந்திப்பேனா என்பது எனக்குத் தெரியாது (தாரீக் இப்னு கல்தூன் 2/58, இப்னு ஹிஷாம் 2/603, அர்ரஹீக் அல்மக்தூம் 461)பிறப்பால் உயர்வு தாழ்வு காட்டாதீர்!


மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; (உங்களது தந்தையும் ஒருவரே!) அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான். (அஸ்ஸில்ஸலதுல் ஸஹீஹா2700, அத்தர்கீப் வத்தர்ஹீப், அல்பைஹகீ, தஹாவி)


தலைமைக்குக் கீழ்ப்படிவீர்!


ஒ… மக்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் கருப்பு நிற (அபிசீனிய) அடிமை ஒருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் அவர் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தும் காலமெல்லாம் (அவரது சொல்லைக்) கேட்டு நடங்கள்; (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள்! (ஸுனன் நஸாயி 4192, ஜாமிவுத் திர்மிதி௧௭0௬


பிறர் உடமையைப் பேணுவீர்!


ஒ… மக்களே! இந்த (துல்ஹஜ்) மாதமும், இந்த (துல்ஹஜ் 9ம்) நாளும், இந்த (மக்கா) நகரமும் எவ்வளவு புனிதமானவையோ, அப்படியே உயிர்களும், உங்கள் உடமைகளும் உங்கள் மானம் மரியாதைகளும் உங்களுக்குப் புனிதமானவை


அராஜகம் செய்யாதீர்கள்!


அறிந்து கொள்ளுங்கள்! எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்ளும் வழிகெட்டவர்களாய் இறை நிராகரிப்பாளர்களாய் மாறி விடாதீர்கள். (ஸஹீஹுல் புகாரி 4403)


உங்களது இறைவனை நீங்கள் சந்திக்கும் வரை (இப்படியே வாழுங்கள்!) நீங்கள் அனைவரும் தவறாமல் அல்லாஹ்வின் முன்னிலையில் ஆஜராகப் போகிறீர்கள்! அப்போது அல்லாஹ் உங்களது செயல்களைப் பற்றி விசாரிப்பான்.


நான் மார்க்கத்தை உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். உங்களில் எவராவது மற்றவருடைய பொருளின் மீது பொறுப்பேற்றிருந்தால், அதை அவர் உரிய முறையில் அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்து விடட்டும்! (ஸஹீஹ் முஸ்லிம் 2334, ஸஹீஹுல் புகாரி 67, 105, 1741, 1742)


பணியாளர்களைப் பேணுவீர்!



ஒ..மக்களே! முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்கள். உங்கள் அடிமைகள் விஷயத்தில் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ளுங்கள்! அவர்களை நன்றாகப் பராமரியுங்கள்! நீங்கள் உண்பதையே அவர்களுக்கும் உண்ணக் கொடுங்கள்; நீங்கள் உடுத்துவதையே அவர்களுக்கும் உடுத்தச் செய்யுங்கள்! (தபகாத் இப்னு ஸஅது, முஹம்மது அந்நபிய்யுல் காதிம் மாஜித் அலீ கான்)



மறுமைக்கு அஞ்சுவீர்!



ஓ… குரைஷிகளே! நாளை மறுமைக்கான தயாரிப்புடன் மக்கள் வரும்போது நீங்கள் உங்கள் பிடரிகளின் மீது உலகச் சுமைகளைச் சுமந்துகொண்டு வந்து விடாதீர்கள். அப்போது அல்லாஹ்வின் புறத்திலிருந்து நான் எந்த ஒரு விஷயத்திலும் உங்களுக்குப் பலன் அளித்திட முடியாது (மஜ்மவுஸ் ஸவாயிது 272/3)அநீதம் அழிப்பீர்!



அறியாமைக்கால அனைத்து விவகாரங்களும் என் பாதங்களுக்குக் கீழ் புதைப்பப்பட்டு விட்டன. மேலும், இன்று வரையிலான எல்லா வட்டிக் கணக்குகளையும் ரத்துச் செய்து விட்டேன். எனினும், உங்களது மூலதனம் உங்களுக்கே உரியது. வட்டியை அல்லாஹ் தடைசெய்து விட்டான். எனவே, முதலில் (என் குடும்பத்தைச் சேர்ந்த) அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிபின் வட்டியைச் செல்லாததாக ஆக்குகிறேன்.



அறியாமைக்கால இரத்தப் பழிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு விட்டன. இனி, பழைய கொலைக்குப் பழிவாங்கும் உரிமை எவருக்கும் இல்லை. இதில் முதலாவதாக என் குடும்பத்தைச் சேர்ந்த ரபீஆ இப்னு அல்ஹாரிஸ் இப்னு அப்துல் முத்தலிப் கொல்லப்பட்டதற்கான பழிவாங்கலை ரத்துச் செய்கிறேன். அறியாமைக் கால கொலை குற்றத்தில் இதை நான் முதலாவதாக தள்ளுபடி செய்கிறேன் (ஸஹீஹ் முஸ்லிம் 2334, இப்னு மாஜா 3074)



முறைதவறி நடக்காதீர்!



அறிந்து கொள்ளுங்கள்! குழந்தை விரிப்புக்கே சொந்தமானது. (அனுமதிக்கப்பட்ட திருமண உறவுடன் இருக்கும் கணவனுக்கே குழந்தை உரியதாகும்) மணமுடித்துக் கொண்ட பிறகும் விபசாரம் செய்பவர் கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும். எவர் தம் தந்தை அல்லாதவரை தம்முடைய தந்தையாக அழைக்கிறாரோ, எவர் தம் உரிமையாளர் அல்லாதவருடன் தம்மை இணைத்துக் கொள்கிறாரோ, அவர்கள் மீது அல்லாஹ்வுடைய, வானவர்களுடைய இன்னும், மக்கள் அனைவருடைய சாபமும் உண்டாகட்டும்! அவர்களின் கடமையான உபரியான எந்த வணக்கமும் ஏற்றுக் கொள்ளப்படாது. (இப்னு மாஜா 2712, ஸஹீஹுல் ஜாமிஇ1789)



உரிமைகளை மீறாதீர்!



ஒரு பெண் தமது கணவரின் வீட்டிலிருந்து அவரது அனுமதியின்றி எதையும் செலவு செய்யக்கூடாது. அப்போது, 'உணவையுமா?' என்று கேட்கப்பட்டது. அதற்கு நபியவர்கள், 'ஆம்! அதுதான் நமது செல்வங்களில் மிகச் சிறந்தது' என்றார்கள். (ஸஹீஹுல் ஜாமிஇ1789, ஸுனன் அபூ தாவூத் 3565)



ஒ… மக்களே! ஒவ்வொருவருக்கும் சொத்தில் அவரவரின் உரிமைகளை அல்லாஹ் வழங்கி இருக்கின்றான். இனி, எவரும் தமது எந்த வாரிசுக்கும் உயில் எழுதக் கூடாது.(நஸாயி 3642, ஸுனன் அபூதாவூத் 2870, 3565, தபகாத் இப்னு ஸஅது)



இரவலாக வாங்கப்பட்ட பொருட்கள் உரியவரிடமே ஒப்படைக்கப் படவேண்டும்; பாலைக் கொண்டு பயன்பெற கொடுப்பட்ட கால்நடைகள் (அவற்றின் பயன்பாடு தீர்ந்தவுடன்) அவற்றின் உரிமையாளரிடமே திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும்; கடன்கள் நிறைவேற்றப்பட வேண்டும்; இழப்பீடுகளை நிறைவேற்ற தலைவனே பொறுப்பாளன். (ஸுனன் அபூதாவூத் 3565, ஜாமிவுத் திர்மிதி 2120, 2121, ஸுனன் இப்னு மாஜா தபகாத் இப்னு ஸஅது, தாரீக் இப்னு இஸ்ஹாக்)



பெண்களை மதிப்பீர்!



கவனியுங்கள்! பெண்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்; அவர்களுக்கு நன்மையே நாடுங்கள்; அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள். அல்லாஹ்வுடைய அமானிதமாக அவர்களை நீங்கள் பெற்றுள்ளீர்கள்! எப்படி உங்கள் மனைவியர் மீது உங்களுக்கு உரிமைகள் இருக்கின்றனவோ, அதே போல் உங்கள் மனைவியருக்கும் உங்கள் மீது உரிமைகள் இருக்கின்றன. அவர்கள் உங்களுக்குச் சிறந்த முறையில் பணிவிடை ஆற்றட்டும்! அவர்களுக்குரிய கடமை என்னவென்றால், நீங்கள் எவரை விரும்ப மாட்டீர்களோ, அவரை அவர்கள் வீட்டுக்குள் அனுமதிக்காமல் இருக்கட்டும்; இன்னும், மானக்கேடான செயலைச் செய்யாமல் இருக்கட்டும்! அவர்கள் குற்றம் புரிந்தால், அவர்களைத் தண்டிக்கிற உரிமையும் உங்களுக்கு உண்டு. அது அவர்களை இலேசாக காயம்படாதபடி அடிப்பதாகும். அவர்களுக்கு ஒழுங்கான முறையில் உணவும் உடையும் வழங்குங்கள்; அவர்களுக்கு நன்மையை நாடுங்கள்; அவர்கள் உங்களின் உதவியாளர்களாகவும் உங்களைச் சார்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள். அல்லாஹ்வின் பெயரை முன்மொழிந்தே நீங்கள் அவர்களுடன் மணவாழ்க்கை மேற்கொண்டுள்ளீர்கள்! (ஸஹீஹ் முஸ்லிம் 2334, ஸஹீஹ் ஜாமிஇ 7880)



இரண்டைப் பின்பற்றுவீர்!



மக்களே! சிந்தித்துப் புரிந்து கொள்ளுங்கள்; எனது பேச்சை கவனமாக கேட்டுக் கொள்ளுங்கள். நான் எனது பிரசாரத்தை உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். உங்களிடையே அல்லாஹ்வின் வேதத்தை(யும் அவனது தூதரின் வழிமுறையும்) விட்டுச் செல்கிறேன். நீங்கள் அவற்றைப் பின்பற்றினால், ஒருபோதும் வழிகெட மாட்டீர்கள்! (ஸஹீஹ் முஸ்லிம் 2334, இப்னு மாஜா 3074) (முஅத்தா இமாம் மாலிக்/மிஷ்காத்182. ஸஹீஹுத் தர்கீப் 40.)



எச்சரிக்கையாக இருப்பீர்!



மக்களே! உங்களது இந்த நகரத்தில், தான் வணங்கப்படுவதைப் பற்றி ஷைத்தான் நம்பிக்கை இழந்து விட்டான். ஆனாலும், அவன் மகிழ்ச்சியுறும் விதமாய் நீங்கள் அற்பமாக கருதும் சில விஷயங்களில் அவனுக்கு நீங்கள் கீழ்ப்படிவீர்கள். ஆகவே, உங்களது மார்க்க விஷயத்தில் அவனிடம் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்! (பிக்ஹு சூரா456. ஸஹீஹ் ஜாமிஇ 7880/முஸ்தத்ரகுல் ஹாகிம். ஸஹீஹுத் தர்கீப் 40)

இன்னும், (மகா பொய்யன்) தஜ்ஜாலைப் பற்றியும் உங்களுக்கு எச்சரிக்கிறேன். அல்லாஹ் அனுப்பிய எந்த இறைத்தூதரும் (அவனைப் பற்றித்) தம் சமுதாயத்தாரை எச்சரிக்காமல் இருந்ததில்லை. (இறைத் தூதர்) நூஹ் அவர்கள் (தம் சமுதாயத்தாருக்கு) அவனைப் பற்றி எச்சரித்தார்கள். அவர்களுக்குப் பின்னால் வருகை தந்த இறைத்தூதர்களும் எச்சரித்தார்கள். மேலும், (என் சமுதாயத்தினரான) உங்களிடையேதான் (இறுதிக் காலத்தில்) அவன் தோன்றுவான். அவனது (அடையாளத்) தன்மைகளில் எதேனும் சில உங்களுக்குப் புலப்படாமல் போனாலும், நிச்சயமாக உங்களுடைய இறைவன் உங்களுக்குத் தெரியாதவனல்லன் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்! உங்கள் இறைவன் ஒற்றைக் கண்ணன் அல்லன். அவனோ, (தஜ்ஜாலோ) வலது கண் குருடானவன். அவனது கண் (ஒரே குலையில்) துருத்திக் கொண்டிருக்கும் திராட்சை போன்று இருக்கும். (ஸஹீஹ்ுல் புகாரி 4402)

இறை ஏற்பாட்டை மாற்றாதீர்!

மாதத்தின் நாட்களை தன் இஷ்டப்படி) முன் பின்னாக்குவதெல்லாம் இறை நிராகரிப்பை அதிகரிக்கும் செயலாகும். ஆதனால் நிராகரிப்பவர்கள்தான் வழிகெடுக்கப்படுகிறார்கள். எனென்றால், அவர்கள் தங்கள் இஷ்டப்படி மாதங்களை முன் பின்னாக்கி ஒர் அண்டில் அம்மாதங்களில் போர் புரிவதை ஆகுமாக்கிக் கொள்கிறார்கள். மற்றோர் ஆண்டில் அதே மாதங்களில் போர் புரிவது கூடாது என்று தடுத்து விடுகிறார்கள். இவ்வாறு அவர்கள் செய்வதன் நோக்கமெல்லாம் தாங்கள் தடுத்திருக்கும் மாதங்களின் எண்ணிக்கையை அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களின் எண்ணிக்கைக்குச் சரியாக்கி, அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களையும் தாங்கள் ஆகுமாக்கிக் கொள்வதற்குத்தான். (அல்குர்அன்9:37) (தாரீக் இப்னு கல்தூன் 59/2)

அறிந்து கொள்ளுங்கள்: நிச்சயமாக காலம், வானங்களையும் பூமியையும் அல்லாஹ் படைத்த அன்றிருந்த அதன் அமைப்பைப் போன்றே, இப்போதும் சுற்றிவருகின்றது. அல்லாஹ்விடத்தில் மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டாகும். இப்படித்தான் வானங்களையும் பூமியையும் அல்லாஹ் படைத்த அன்று, அவனது புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் நான்கு மாதங்கள் சங்கைக்குரியன. மூன்று, தொடர்ந்து வருபவை. அவை துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம், நான்காவது ஜுமாதல் உலாவிற்கும் ஷஅபானிற்கும் இடையில் உள்ள ரஜப் ஆகும். (ஸஹீஹுல் புகாரி 4662, ஸுனன் அபூதாவூத் 1942)

சகோதரம் பேணுவீர்!

ஒவ்வொரு முஸ்லிமும் மற்ற முஸ்லிமுக்குச் சகோதரர் ஆவார். முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்களே! ஒரு முஸ்லிமின் பொருள் பிறருக்கு அறவே ஆகுமானதல்ல; மனமுவந்து கொடுத்தாலே தவிர! உங்களுக்கு நீங்கள் அநீதம் இழைத்துக் கொள்ளாதீர்கள் (ஸஹீஹுல் ஜாமிஇ 7880, தாரீக் இப்னு கல்தூன் 59/2, பிக்ஹுஸ் ஸீரா ௪௫௬

சொர்க்கம் செல்ல இதுதான் வழி!

ஒ… மக்களே! உங்கள் இறைவனையே வணங்குங்கள்; உங்கள் இறைவனுக்கே பயந்து கொள்ளுங்கள்; கடமையான ஐவேளைத் தொழுகைகளையும் தவறாது பேணுங்கள்; (ரமழானில்) நோன்பு நோற்று வாருங்கள்; விருப்பமுடன் ஸகாத் கொடுத்து விடுங்கள்; அல்லாஹ்வின் இல்லத்தை ஹஜ் செய்யுங்கள்; உங்களில் அதிகாரம் உடையோருக்குக் கட்டுப்பட்டு நடங்கள்; நீங்கள் சொர்க்கம் செல்வீர்கள்!. (ஜாமிவுத் திர்மிதி616, ஸஹீஹுத் திர்மிதி516, மிஷ்காத் 576, முஸ்னத் அஹ்மத், தாரீக் இப்னு ஜரீர், தாரீக் இப்னு அஸப்கிர், மஆதினுல் அஃமால் 1108,1109)

குற்றவாளியே தண்டிக்கபடுவார்!

ஒருவர் குற்றம் செய்தால் அதற்கான தண்டனை அவருக்கே கொடுப்படும்; மகனுடைய குற்றத்திற்காக தந்தையோ, தந்தையின் குற்றத்திற்காக மகனோ தண்டிக்கப்பட மாட்டார். (ஸஹீஹுல் ஜாமிஇ 7880, ஜாமிவுத் திர்மிதி2159,3078, ஸஹீஹுத் திர்மிதி373,461, ஸுனன் இப்னு மாஜா 3055, ஸஹீஹ் இப்னு மாஜா 1015.)

இஸ்லாம் முழுமையாகி விட்டது!

ஒவ்வோரு இறைத்தூதரின் பிரார்தனையும் (இவ்வுலகிலேயே) முடிந்து விட்டன; என் பிரார்த்தனையைத் தவிர! நான் அதை மறுமை நாளுக்காக என் இறைவனிடம் சேமித்து வைத்திருக்கிறேன். அறிந்து கொள்ளுங்கள்; மறுமை நாளில் இறைத்தூதர்கள் தங்களது சமுதாயத்தினர் அதிகமாக இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியுறுவார்கள். அப்போது என்னை நீங்கள் கேவலப்படுத்தி விடாதீர்கள். நான் உங்களுக்காக கவ்ஸர் நீர் தடாகத்திற்கு அருகில் உட்கார்ந்திருப்பேன். (மஜ்மவுஸ் ஸவாயிது 271/3)

மக்களே! எனக்குப்பின் எந்த ஒர் இறைத்தூதரும் இல்லை; உங்களுக்குப்பின் எந்த ஒரு சமுதாயமும் இல்லை. (ளிலாலுஸ் ஜன்னா 1061)

இங்கு வந்திருப்பவர்கள், வராதவர்களுக்கு இந்த வழிகாட்டல்களை எடுத்துச் சொல்லட்டும்; விஷயம் சென்று சேருபவர்களில் சிலர், நேரடியாக கேட்பவரைவிட நன்கு ஆராயும் தன்மை உடையவராக இருக்கலாம். (ஸஹீஹுல் புகாரி 67,105,1741)பிறகு நபி (ஸல்) அவர்கள் மக்களை நோக்கி, 'மறுமை நாளில் உங்களிடம் என்னைப் பற்றி விசாரிக்கப்படும்போது நீங்கள் என்ன சொல்வீர்கள்?'' என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், 'நீங்கள் (மார்க்க போதனைகள் அனைத்தையும் எங்களிடம்) தெரிவித்து விட்டீர்கள்; (உங்களது தூதுத்துவப் பொறுப்பை) நீங்கள் நிறைவேற்றி விட்டீர்கள்; (சமுதாயத்திற்கு) நன்மையை நாடினீர்கள் என நாங்கள் சாட்சியம் அளிப்போம்' என்றார்கள்.

உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தமது ஆட்காட்டி விரலை வானை நோக்கி உயர்த்தி சைகை செய்துவிட்டுப் பிறகு, அதை மக்களை நோக்கித் தாழ்த்தி 'இறைவா! இதற்கு நீயே சாட்சி! இறைவா! இதற்கு நீயே சாட்சி! இறைவா! இதற்கு நீயே சாட்சி!' என்று முடித்தார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் 2334)இவ்வாறு அவர்கள் கூறிய அதே இடத்தில் அல்லாஹ்வின் புறத்திலிருந்து கீழ் வருமாறு இறைவசனம் இறங்கியது:'இன்றைய தினம் உங்களுக்காக உங்களுடைய மார்க்கத்தை முழுமையாக்கி விட்டேன்; மேலும், நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும், உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே தேர்ந்தெடுத்துக் கொண்டேன். (அங்கீகரித்துக் கொண்டேன்.)'' (அல்குர்அன் 5:3) (ஸஹீஹுல் புகாரி 4406, 4407, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா, தாரீக் இப்னு ஜரீர், தாரீக் இப்னு கஸீர், அத்துர்ருல் மன்ஸுர்)

வெள்ளி, 27 பிப்ரவரி, 2009

அண்ணல் நபிகள் பற்றி அறிஞர் அண்ணா

அறிஞர் அண்ணா" என்று அகிலம் போற்றும் காஞ்சீபுரம் நடராஜன் அண்ணாதுரை (C. N. Annadurai) (15 செப்டம்பர் 1909 - 3 பெப்ரவரி 1969), தமிழ்நாட்டின் ஆறாவது முதலமைச்சர் ஆவார்.

புற்று நோய்க்கு ஆளான அவர், 2-3 பிப்ரவரி 1969இல் காலமானார். ஒரு முதலமைச்சராக மட்டுமன்றி, ஒரு அறிஞராகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும், ஒரு சிறந்த அரசியல்வாதியாகவும், மிகச் சிறந்த பேச்சாளராகவும், மக்கள் தலைவனாகவும், இன்றும் தமிழக மக்களால் அவர் நினைவுகூரப்படுகிறார்.

அண்ணல் நபி பற்றி அறிஞர் அண்ணா

பலாச்சுளையை சுவைக்க முற்படுவோர், முதலில் மேல் தோலைநீக்கி, பிசிறுகளைக் களைந்துவிட்டு, பிறகு சுளையை எடுத்து அதிலுள்ள கொட்டைகளையும் நீக்கிவிட்டே தின்பார்கள். அதுபோன்றே மதக்கருத்துக்களையும் உணரவேண்டும்

சிலர் பலாப்பழத்தின் முன்தோலையே மதம் என்கிறார்கள். அவர்களுக்காகப் பரிதாபப்படுகிறோம். சிலர் பிசிறுகளை ஒட்டிக் கொண்டு மதம் என்று அலைகிறார்கள். அவர்களைக் கண்டால் நமக்கு அருவருப்பாக இருக்கிறது. மற்றும் சிலர் கொட்டையுடன் பலாச்சுளையை விழுங்க முற்படுகிறார்கள். அவர்களைக் கண்டு அனுதாபப்படுகிறோம். ஆனால் உரித்தெடுத்த பலாச்சுளையைப் போன்றது தான் இஸ்லாம்.

இஸ்லாம் எல்லாக்காலத்திற்கும், எல்லா நாட்டினருக்கும் பொருந்திய மதமாக அமைந்திருக்கிறது. ஒரு பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஏதாவது ஒரு பிரச்சினை தோன்றினாலும் செய்ய வேண்டுவதெல்லாம் நபிகள் நாயகம் அவர்களுடைய கருத்துக்களிலிருந்து பகுத்தறிவு விளக்கம் கொடுக்க வேண்டியதுதான், எல்லாப் பிரச்சினைகளுக்கும் விடை காணமுடியும்.

பிற மதங்களிலே அற்புதங்கள் அதிகம்; அடிப்படை உண்மைகள் குறைவு. இஸ்லாத்திலே அடிப்படை உண்மைகள் அதிகம் அற்புதங்கள் குறைவாகவேயுள்ளன.

இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்ற கூற்று அர்த்தமற்றது; இஸ்லாத்தை பரப்ப வாள் பயன்பட்டதில்லை. ஆனால் சிலுவை யுத்தங்களிலே இஸ்லாத்தைக் காக்க அது பயன்பட்டதுண்டு

இந்தியாவில் முகலாயர் ஆட்சியும் மற்ற முஸ்லிம் மன்னர்கள் ஆட்சியும் இருந்தபோது முஸ்லிம்கள் ஒரு கோடிபேர் கூட இருக்கவில்லை. அந்த அரசுகளெல்லாம் மறைந்த பிறகே பத்து கோடி மக்களாகப் பெருகினார்கள்.

ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்ன நன்னெறி பரவியிருந்த நாட்டிலே இடையிலே அக்கருத்துக்களெல்லாம் மறந்திருந்த நிலையில் இஸ்லாம் அக்கருத்துக்களையே வலியுறுத்தவும், 1300 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தில் இஸ்லாம் பரவிற்று.

தொட்டிலிலே படுத்துறங்கும் குழந்தையைத் தட்டி எழுப்பிய உடனே தாயை எப்படி கட்டியணைத்துக் கொள்கிறதோ அவ்வாறே தமிழகத்தில் இஸ்லாமிய கருத்துக்கள் தழுவப்பட்டன

இருளும் ஒளியும்

இங்கு எனக்கு முன்பு பேசிய தோழர்கள் எல்லோரும், நல்ல முறையிலே, இஸ்லாமிய கோட்பாடுகளையும், நபிகள் நாயகத்தின் மாண்புகளையும் எடுத்துரைத்தார்கள். இங்கு பேசியவர்கள் அனைவரும் இளைஞர்களாகவும், இந்த இளைஞர்கள் எல்லோரும் இஸ்லாமியர்களாகவும், இருந்தார்கள் என்பதையறிந்து நான் மூன்று காரணங்களால் மகிழ்ச்சியடைகிறேன்

இஸ்லாமிய இளைஞர்கள் நல்ல முறையிலே பேசிப் பழகவேண்டும் என்பது என் ஆசை; அதன்படி, பேசிய இளைஞர் அனைவருமே நன்றாகப் பேசினார்கள்

இரண்டாவதாக, இஸ்லாமியருக்கும்-தி.மு.கழகத்தித் தொடர்பு அதிகம் இருப்பதால் சில முஸ்லிம் பெரியவர்கள் பயப்படுகிறார்கள். "அது தவறு" என்பதை எடுத்துரைத்தார்கள்.

மூன்றாவதாக, இஸ்லாமிய இளைஞர்கள் முகம்மது நபியின் அருமை பெருமைகளை நன்றாக அறிந்திருக்க வேண்டும் என்பதிலே நாட்டம் கொண்டவன் நான். இங்கு பேசியவர்கள் முகம்மது நபியைப் பற்றி நல்ல முறையிலே, எல்லோருக்கும் புரியும் வகையிலே, நல்ல தமிழிலே எடுத்துரைக்கும் ஆற்றலைப் பெற்றிருப்பதிலே மெத்த மகிழ்ச்சி அடைகிறேன். இங்கு பேசிய நண்பர்கள் கூறினார்கள்- இந்த விழாவில் அண்ணா கலந்து கொள்ளலாமா என்று யாரோ சிலர் கேட்டதாக நினைத்துக் கொண்டு, அதற்கு பதிலளிக்கும் வகையிலே பேசினார்கள். இப்பொழுதெல்லாம் அப்படி கேட்பதில்லை. அதற்கு பதிலாக, "இவ்வாண்டு அண்ணாதுரை ஏன் கலந்து கொள்ளவில்லை?" என்று தான் கேட்கிறார்கள். ஒரு 20, 25ஆண்டுகளுக்கு முன்பு கேட்டார்கள் - முகம்மது நபி விழாவிலே அண்ணாதுரை கலந்து கொள்ளலாமா? என்று! ஆனால் இப்பொழுது கேட்பதில்லை

எனக்கும் இஸ்லாமியர்களுக்கும் ஏற்பட்ட தொடர்பு இன்று நேற்றல்ல - 30 ஆண்டுகளுக்கு முன்பே ஏற்பட்டிருக்கிறது. நண்பர் ஒருவர் இங்கு பேசுகையில் நான் வெளியூரில் ஒரு விழாவிலே கலந்து கொண்டபோது யாரோ என்னை ஒரு கேள்வி கேட்டதாகவும், அதற்கு நான் இன்ன விதத்தில் பதிலளித்தேன் என்று குறிப்பிட்டார். அதை உங்களிடத்திலே விளக்கமாகச் சொல்லுவதும் நல்லது என்று நினைக்கிறேன். என்னைக் கேட்டவருடைய பெயர் கூட எனக்கு நினைவிருக்கிறது

"நீங்கள் இவ்வளவு நன்றாக முகம்மது நபியையும், இஸ்லாமியக் கோட்பாடுகளையும் பற்றிப் பேசுகிறீர்கள். நீங்கள் ஏன் இஸ்லாமியத்திலே சேர்ந்து விடக்கூடாது?" என்று அவர்கள் கேட்டார்கள்.

அவர்களுக்கு அளித்த பதில் இதுதான்: "இஸ்லாத்தில் மார்க்கக் கட்டளை என்றும், திட்டங்கள் என்றும் சில உண்டு. இஸ்லாமிய சமுதாய அமைப்புக்கு 'ஜமாஅத்' என்று பெயர். இஸ்லாமிய கோட்பாடுகளை மார்க்கத் துறையை ஏற்று, அதிலே தங்களை ஈடுபடுத்திக் கொள்பவர்கள் ஏக தெய்வம் என்ற கொள்கையுடையவர்களாக இருக்க வேண்டும். ஆண்டவனுக்கு உருவம் கொடுத்து, அதற்குப் பூசை செய்து பிறரை ஏமாற்றும் எண்ணம் கூடாது. அந்த வகையிலே பார்த்தால் நான் இஸ்லாமியன் தான். ஆனால் இஸ்லாமிய 'ஜமாஅத்'திலே நான் இல்லை".

நான் இஸ்லாத்தில் சேர்ந்து அதன் பிறகு பாராட்டுவதிலே அருமை பெருமை இல்லை. என்வீடு மிக நல்ல வீடு என்று நானே எடுத்துச் சொல்வது எப்படிச் சரியில்லையோ, அதைப் போலத்தான் அது அமையும். என் வீட்டைப் பற்றி நான் பெருமைப் படுவதிலே ஆச்சரியமில்லை, 'ஜமாஅத்'திலே சேராமலே இஸ்லாத்தின் நன்மைகளை எடுத்துச் சொல்வதில் தான் பெருமை.

எனக்கு முன் பேசியவர்கள் எச்.ஜி.வெல்ஸ், ஜார்ஜ் பெர்னாட்ஷா, காந்தி போன்ற பெரியவர்கள் முஹம்மது நபியைப் பற்றிக் கூறியுள்ளதை எடுத்துச் சொன்னார்கள். அந்தப் பெரியவர்களெல்லாம் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களானதால் அவர்கள் பாராட்டியதிலே பெருமை இருக்கிறது. எனவே, ஆயிரத்தோடு ஆயிரத்தொன்று என்று என்னையும் இஸ்லாமியனாக்குவதிலே பெருமையில்லை

யார் எந்த மார்க்கத்தைச் சேர்ந்தவரானாலும், எந்த இனத்தில்-குலத்தில் பிறந்தவரானாலும் நபிகள் நாயகத்தைப் பற்றிப் பேசினால். இஸ்லாமிய சமூகத்தினர் வரவேற்கின்றனர்.

இந்நாட்டிலேயுள்ள இஸ்லாமியர்கள் சிறுபான்மையான மைனாரிட்டி சமூகமாக உள்ளவர்கள்; மற்றவர்கள் பெருவாரியான எண்ணிக்கையுள்ளவர்கள். இந்த இரு மார்க்கத்தாரிடையேயும் ஒற்றுமை நிலவ - அவர்களிடையே நல்ல தொடர்பும், சகோதரபாவமும் ஏற்பட இப்படிப்பட்ட திரு நாட்களை, பலரையும் அழைத்து நடத்துவது நல்லதாக அமையும்.

தென்னாட்டை பொறுத்த வரையில் இந்த ஒரு சமூகத்தாரிடையிலே என்றும் பகை ஏற்பட்டதில்லை. இரு சாராரிடையேயும் நல்ல தொடர்பு தலைமுறை தலைமுறையாக இருந்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் பார்த்தால் அங்குள்ள முஸ்லிம்களும் மற்ற சமூகத்தினரும் ஒருவருக்கொருவர் அண்ணன், தம்பி என்று முறை வைத்துப் பேசிக் கொள்வதைப் பார்க்கலாம்.

வடநாட்டிலே இந்து - முஸ்லிம் கலகம் கொலை வெறியாட்டம் நடந்த போது கூடத் தென்னாட்டில் நல்ல தோழமை நிலவியது. அப்படிப்பட்ட தோழமை உணர்ச்சியும் ஒற்றுமைப் பண்பாடும் வளரச் செய்வது தி.மு.கழகப்பணிகளில் ஒன்றாகும்.

நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றினை அவர் பிறந்த நாடு, அவர் காலத்திலிருந்த சூழ்நிலை, மத நம்பிக்கைகள், பிற்போக்கான சீர்கேடான நிலை, மூடநம்பிக்கைகள், பெண்களுக்கு இழைக்கப்பட்டு வந்த கொடுமைகள் ஆகியவற்றைப் பற்றிய துணுக்குகளை, நண்பர்கள் இங்கு உங்களிடையே விளக்கமாக எடுத்துரைத்தார்கள்.

முகம்மது நபி, ஒரு மார்க்கத்தை உண்டாக்கியது மட்டுமல்ல, தவறான குருட்டு நம்பிக்கையிலே சிக்கிக் கிடந்தவர்களை விடுவித்துக் காப்பாற்றி, நல்லதொரு சமுதாயத்தையும் உருவாக்கினார். அதற்கான ஒரு நல்ல அரசியலையும் ஏற்படுத்தினார். மிகுந்த நெருக்கடியான - ஆபத்தான காலத்திலேயே வெற்றிகரமாக தமது இலட்சியங்களை நிறைவேற்றிக் காட்டினார்.

அதே போல் தி.மு.கழகமும் மூன்று துறைகளில் பணியாற்றி வருகிறது; இதை நான் சொல்வதால் தி.மு.கழகத்தையும் இஸ்லாத்தையும் ஒன்றாக்கிக் காட்ட முயலுவதாகக் கருதவேண்டாம்! ஏனென்றால், தி.மு.கழகம் இக்கருத்துக்களை விஞ்ஞானமும் கல்வியறிவும் நன்கு பரவியுள்ள இக்காலத்தில் சொல்லி வருகிறது. இந்தக் காலத்தில் நல்ல கொள்கைகளை எடுத்துச் சொல்ல அதிகத் தைரியம் தேவையில்லை. நபிகள் நாயகம் அவர்களுடைய காலத்தில் சொல்ல வேண்டுமானால், நெஞ்சுரம் அதிகம் தேவையாக இருந்தது! "பூமி உருண்டையானது; சூரியனை பூமி சுற்றி வருகிறது" என்கின்ற உண்மைகளையெல்லாம் அறியாத - விஞ்ஞானத் தெளிவு இல்லாத காலம் அது! மக்கள் பய உணர்ச்சியும் காட்டுமிராண்டித்தனமும் கொண்டிருந்த காலம்!

இருட்டுக் காலத்தில் நல்ல ஒளியைத் தந்தார் முகம்மது நபி. அந்த ஒளியின் வெளிச்சத்தை எடுத்துக் காட்டிபவர்கள்தான் நாங்கள்.

சீர்திருத்தவாதிகள் செய்கின்ற காரியத்துக்கே இந்தக்காலத்தில் எத்தனையோ தொல்லைகள் ஏற்படும்போது, உலகத்தில் நபிகள் நாயகம் போன்றவர்கள் அந்தக் காலத்தில் எத்தனை இன்னல்களைத் தாங்க நேர்ந்திருக்கும்?

நம்மில் சிலர் நம் கொள்கைகளைப் பரப்ப அதைரியம் ஏற்படுகிற நேரத்தில் அவர்களுக்கு நபிகள் நாயகத்தினுடைய நினைவு வரவேண்டும்.ஆரம்ப காலத்திலே முகம்மது நபியினுடைய கொள்கைகளை அங்குள்ள மக்கள் இலகுவிலே ஏற்றுக்கொண்டார்களா என்றால் இல்லை. அரேபிய பாலைவனத்திலே வசித்த மக்கள் 360 உருவங்களை ஆண்டவர்களாக வைத்து ஒரு நாளைக்கு ஒன்றாக வணங்கி வந்தனர் என்று சொல்லப்படுகிறது. அப்படிப்பட்ட மக்களிடம் நபிகள் நாயகம் அவர்கள் "360 உருவங்களும் ஆண்டவனல்ல" என்று எடுத்துச் சொல்ல எப்படிப்பட்ட ஆற்றல் படைத்தவராக இருந்திருக்க வேண்டும்; எப்படிப்பட்ட ஆபத்துக்களையெல்லாம் அவர் ஏற்றிருக்க வேண்டும் என்பதை எண்ணிப்பார்த்தால் நமக்கும் சீர்திருத்தக் கருத்துக்களை எடுத்துச் சொல்வதிலே ஏற்படக்கூடிய பயம் ஓரளவு நீங்கும்.

பொது வாழ்விலே உள்ள சந்தேகங்களையெல்லாம் நபிகளை நினைத்தால் பறக்கும். அவர் காலத்தில் ஏற்பட்ட ஆபத்துகளை நினைத்தால் இக்காலத்து ஆபத்துக்கள் வெறும் துரும்புக்குச் சமானம் ஆகும்.

நபிகள் நாயகம் அவர்களுடைய வரலாறு வீரத்துக்கு ஒரு ஊற்று!சமுதாயத்துக்கு ஒரு நல்ல எடுத்துக் காட்டு

வேண்டாம் அற்புதங்கள்!

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் காயல்பட்டினத்துக்குச் சென்றிருந்தேன். அப்போது என்னுடன் திருப்பூர் மொய்தீனும், முஹம்மது ஹூசைன் நயினார் அவர்களும் வந்திருந்தார்கள். நாங்கள் மூவரும் முஹம்மது நபி விழாவிலே பேசினோம். அப்பொழுது அந்த விழாவிலே பேசிய ஒருவர் இஸ்லாமிய கதை என்று ஒன்றைச் சொல்லி குர்ஆனுக்கும் அதற்கும் சம்பந்தப்படுத்தி விளக்கினார்.

யாரோ ஒருவர் காட்டு வழி செல்கையில், தனது செருப்பையும், கைத்தடியையும் மற்றொருவருக்குத் தானம் கொடுக்கும்படி ஆண்டவன் கட்டளையிட்டாராம். உடனே அவர் தானம் கொடுத்து விட்டாராம். அதன் பிறகே அவர் காட்டுவழியே செல்லுகையில் கள்வரிடம் சிக்கிக்கொண்டாராம். அந்தச் சமயத்தில், முன்பு தான் தானம் கொடுத்த கைத்தடியும் செருப்பும் வந்து, கள்வர்களிடமிருந்து அவரைக்காப்பாற்றினவாம்.

அந்தக் கதையைக் கேட்டதும் எனக்கு ஒரு சந்தேகம் வந்தது. ஏனக்கு அருகிலிருந்த முஹம்மது ஹூசைன் நயினார் அவர்களிடம் இக்கதையைப் பற்றிக் கேட்டேன் - இந்தக் கதை குர்ஆனில் இருக்கிறதா? முஹம்மது நபி இதைச் சொல்லியிருக்கிறாரா? என்று. அதற்கு அவர் - அதெல்லாம் ஒன்றுமில்லை. குர்ஆனுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. பிற்காலத்தில் யாராலோ கட்டிவிடப்பட்ட கட்டுக்கதை அது என்றார்.

அதன்பிறகு நான் பேசுகையில், இதைப்பற்றிக் குறிப்பிட்டு கட்டுக்கதை என்பதை விளக்கி, இப்படிப்பட்ட அற்புதங்களை காட்ட வேண்டுமென்பது ஐயன் கட்டலையல்ல என்பதையும் எடுத்துச் சொன்னேன். காயல்பட்டினத்து மக்கள் அதனாலே என்னை எதிர்க்கவோ, கண்டிக்கவோ இல்லை. தமிழ்நாட்டிலே மிகப்பெரிய அரபுக்கல்லூரி ஒன்றும் இருக்கிறது. 15 ஆண்டுகளுக்கு முன்பே அங்குள்ள மக்கள் நான் எடுத்துச் சொன்ன உண்மையை உணர்ந்தார்கள் என்றால், இன்று ஒப்ப மறுத்து விடமாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது

இந்த நேரத்தில் இஸ்லாமிய சமூகத்தினருக்கு நான் ஒன்று சொல்லிக்கொள்வேன்! அற்புதங்களைக் காட்டி, அதனாலே இஸ்லாம் சிறந்தது என்று நீங்கள் வாதாடினால் உங்களிடமுள்ள அற்புதங்களுக்கு அப்பன், பாட்டன் என்று சொல்லும்படியான அற்புதங்களெல்லாம், எங்களுடைய மதம் என்று வர்ணிக்கப்படும் இந்து மதத்திலே இருக்கின்றன.

உலகத்தில் இஸ்லாம் கடைசி வரை நிலைத்து நிற்கும் என்று ஜார்ஜ்பெர்னாட்ஷா கூறியதற்குக் காரணம், அந்த மதத்தில் அற்புதங்கள் குறைவு - அறிவுக் கருத்துக்கள் நிறைவு என்பதால்தான்

அறிவுக்கொவ்வாத அற்புதக் கதைகள் இந்துக்களிடத்திலே ஏராளமுண்டு. நமது தாய்மார்களைக் கேட்டுப்பாருங்கள் பிரகலாதன் கதையை விடவா அற்புதக் கதை ஒன்று இருக்கிறது? என்பார்களே! அற்புதங்களை விற்பனை செய்தவர்களே நாங்கள் - அற்புதங்களின் பிறப்பிடமே நாங்கள் - என்று சொல்லிக்கொள்ளும்படியான எண்ணற்ற கதைகளை இந்துக்கள் எடுத்துச்சொல்வார்கள்!

எனவே, அற்புதங்களைக் காட்டி இஸ்லாமிய கொள்கைக்கு அருமை பெருமை தேடாதீர்கள்! நபிகள் நாயகத்தின் அஞ்சா நெஞ்சுருதியாலும், அவர் செய்த அறப்போரினாலும் தான் இஸ்லாம் பரவியது.

அடிக்கடி ஆண்டவன் அவதாரம் எடுக்காமலே இஸ்லாத்தில் அரிய கருப்பொருள்கள் ஏராளமாக இருக்கின்றன!

இஸ்லாத்தின் மாண்பைப் போற்றுவதற்குக் காரணம் அந்த மார்க்கதிலே "இதை நம்பு" என்று ஆண்டவனால் கட்டளை பிறப்பிக்கப்படவில்லை, காரணம் கூறுவதால் தான் நம்பப்படுகிறது.

சீனாவுக்குச் சென்றேனும் (தொலைவுகருதி) கல்வி கற்கவேண்டும் என்று அந்த மார்க்கத்திலே சொல்லப்படுகிறது

இன்றைய இஸ்லாமியச் சமுதாயத்திலே பெரும்பாலோர் கல்வியறிவு பெறாமலிருக்கின்றனர். அந்த மார்க்கத்திலே சொல்லப்பட்டிருக்கின்ற கட்டளை - கருப்பொருள் - கல்வியறிவு பரப்பப்படவேண்டும்.

சொல்லும் செயலும்!

மதத்தைப் பற்றிச் சில பொதுவான கருத்துக்ளை கூற விரும்புகிறேன்.

யார் என்ன சொன்னாலும், எவ்வளவு முயற்சிகள் எடுத்துக்கொண்டாலும் பொதுவாக மதத்தில் நம்பிக்கை குறைந்து வருகிறது. இதை நான் சொல்லுவதால் வருந்துவதில் பலனில்லை. சற்று ஆராய வேண்டும்.

இன்றைய சூழ்நிலை என்ன, நல்ல தத்துவம் ஏன் நம்பிக்கை இழக்கிறது? ஆராயவேண்டும். யார் பேரிலோ பழிபோடுவதிலே பயனில்லை. நம்பிக்கை குறைவதற்குக் காரணம் என்ன? கருத்துப் பரப்பும் இயந்திரம் பழுதுபட்டிருக்கிறது

அச்சடிக்கப்பட்ட ஒரு புத்தகத்தில் எல்லாம் சரியாக இருக்கிறது, எட்டாம்பக்கத்தில் மட்டும் கொஞ்சம் எழுத்துப் படாமலிக்கிறது என்றால் அதற்குக் காரணம் என்ன? அச்சுப்பொறியிலே பழுதா, அல்லது பழுத்துக்கோர்த்தவர் தவறா என்று பார்த்தால், எல்லாம் சரியாகத்தான் இருக்கின்றன. ஆனால் அச்சடிக்கையில் எல்லாப் பக்கமும் பட்டு, எட்டாம் பக்கத்தில் மட்டும் கொஞ்சம் படவில்லை. அதற்குக் காரணத்தைக் கண்டு பிடிக்க இயலவில்லை. ஆனாலும் பழுது எங்கே இருக்கிறது? அதைக் கண்டு பிடித்தால் தான் சரியாக அச்சாகும்.

இதற்கு யாரைக் கேட்பது? ஜோதிடரையா கேட்பது? ஜோதிடரைக் கேட்டால் உனக்கு அஷ்டமத்திலே சனி. அதனாலே எட்டாம் பக்கம் அச்சாகவில்லை என்பார். அச்சுத் தொழில் நுணுக்கம் தெரிந்தவரிடம் சொன்னால், அவர் நன்கு ஆராய்ந்து பார்த்து விட்டுப் பிறகு சொல்லுவார் எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது. அச்சுப்பொறியிலோ, அச்சுக்கோத்ததிலோ பழுதில்லை, ஆனால் எட்டாம் பக்கம் அச்சாகும் இடத்தில் ஒரு நூலிழை எழுத்தின் உயரம் குறைந்திருக்கிறது. அதை உயர்த்தினால் சரியாக எழுதப்படும் என்று கூறி கையாலே எழுத்தைத் தடவிப் பார்க்கச் சொல்லுவார். தடவிப்பார்த்தால் அப்பொழுது நமக்கு உண்மை விளங்கும். அதைப் போல பழுது இருக்குமிடத்தைக் கண்டு பிடிக்கவேண்டும்.

மார்க்கத் துறையிலுள்ள தூய கருத்துக்கள் சரியான வழியில் சரியான நோக்கத்தில் பரப்பப்பட வேண்டும்.

கருத்தை உபதேசிப்பவர்கள் உபதேசித்தபடி நடந்து காட்ட வேண்டும். உபதேசிக்க என்று ஒரு கூட்டம், உபதேசித்தபடி நடப்பதற்கென்று ஒரு கூட்டம் இருக்கக்கூடாது.

நபிகள் நாயகம் சொன்னார். சொல்லியபடி நடக்கிறேன் என்று நடந்து காட்டினார். அப்படி மற்றவர்களும் நடந்து காட்டினால்தான் உலகத்தில் சாந்தி, சமாதானம், சமரசம் எல்லாம் நிலவும்.

சொல்லுபவர்கள் உயர்ந்தவர்களாகவும், நடப்பவர்கள் கீழ்த்தரத்திலுள்ளவர்களாகவும் இருக்கிறார்கள்.

சமத்துவ மார்க்கம்

இஸ்லாத்தில் ஒரு சிறப்பு, இஸ்லாத்தில் யார் சேர்ந்தாலும் சாதியை மறைத்து விடுகிறது. முதுகுளத்தூரில் ஒருவர் தலையை ஒருவர் சீவிக்கொள்ளும் தேவர், தாழ்த்தப்பட்ட மக்களானாலும் சரி, மற்றும் யார் சேர்ந்தாலும் சரி, சாதியை நீக்கிவிடுகிறது, இஸ்லாத்தின் கொள்கை. அதனால் அது என்னை மிகவும் ஈர்க்கக்கூடிய கொள்கையாக இருக்கிறது.

இதையெல்லாம் அறிந்து தான், எதையும் துருவித்துருவி ஆராயும் பண்பு படைத்த அறிஞர் பெர்னாட்ஷா அவர்கள், 'உலகில் கடைசிவரை நிலைத்திருக்கக் கூடிய மார்க்கம் இஸ்லாமிய மார்க்கம் ஒன்றுதான்' என்று எழுதியிருக்கிறார்.

நபிகள் நாயகத்தை மகான் என்று ஏன் கொண்டாடுகிறார்கள் என்றால், 1957 ஆம் ஆண்டில் சமுதாய ஒழிப்பு வேண்டும் என்பதை எடுத்துச்சொன்னால் எங்களை ஒடஒட விரட்டுகிறார்கள் என்றால், 1400 ஆண்டுகளுக்கு முன்பு, பல்வேறு தெய்வங்களை வணங்கிய மக்களிடம் நீ வணங்கும் கடவுள் இதுவல்ல, நீ செல்ல வேண்டிய கோயில் இதுவல்ல என்று கூறியவரை விட்டு வைத்தார்களே அதுவும், அந்த மக்களிடம் தன் கொள்கையை நெஞ்சுறுதியோடு எடுத்துச் சொன்னதே அதுவும், அவரை 'மகான்' என்று கொண்டாடக்காரணம். இப்பொழுது நபிகள் கொடுத்த நெஞ்சுரம் தான் இப்பொழுது அவரது மார்க்கத்தைத் தழுவியிருப்பவர்களுக்கு இன்றும் இருக்கிறது என்றால் அது ஆச்சரியமில்லை.

மார்க்கம் என்பது மக்களை ஒன்றுபடுத்துவது, மக்களை அறிவுத் தெளிவுபடுத்துவது, மக்களை ஒற்றுமைப்படுத்துவது, அரிய பந்தங்களை ஏற்படுத்துவது, நல்ல தோழமையை வளர்ப்பது, சிறந்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவது. அது, 'மதம்' எனச் சொன்னால், அது மக்களை மதமதப்பில் ஆழ்த்தும், அதற்கு போலீஸ் தேவைப்படும். மார்க்க நெறியில் நின்றால் மக்கள் அன்பு வழியில் ஒன்றுபடுவார்கள்

மதத்தின் பயன் எத்தகையதாக இருக்கவேண்டும் என்பது பற்றி நமக்குள் வேறுபாடு இருக்கலாம். ஆகையினாலே, யாராவது சிலர் நாஸ்திகர் என்றும், சிலர் ஆஸ்திகர் என்றும் கருதப்பட்டால் அந்தப்பட்டம் ஆஸ்திகர் என்று தங்களைச் சொல்லிக்கொள்பவர்கள், தங்களுக்கு அவர்களைப் பிடிக்காத காரணத்தால், அவர்களுக்கு இட்டப்பெயர்தானே தவிர வேறொன்றுமில்லை, அதைத் தவிர நாஸ்திகம் என்பது இருந்ததுமில்லை. இனி இருக்கவேண்டிய அவசியமுமில்லை. அப்படி இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாங்கள் அந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பதை இப்புனித நாளில் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். ஏனென்றால் ஆஸ்திகம் என்பது இயற்கை. இயற்கைக்கு மாறுபட்டு யாரும் இருக்கமாட்டார்கள்.

இஸ்லாம் மார்க்கத்தின் மாண்புகளை வேறுநாடுகளில் மேலேயிருப்பவர்கள் கீழேயிருப்பவர்களுக்கு உபதேசம் செய்வார்கள். ஆனால் நமது நாட்டில் அப்படியிக்கக்கூடாது. நமது நாட்டைப் பொறுத்த வரையில் கீழேயிருப்பவர்கள் தான் மேலேயிருப்பவர்களுக்கு உபதேசம் செய்யவேண்டும். அப்பொழுது தான் கடவுள் தன்மையை எல்லோரும் அறிந்தவர்கள் ஆவார்கள். ஏன் அவ்வாறு சொல்கிறேன் என்றால், புகைவண்டி நிலையத்திலிருந்து நாம் குதிரை வண்டியில் வீடடு வருகிறோம், நாம் முதலில் இறங்கிவேண்டிய இடத்தைச் சொல்லி, வண்டிக்காரனிடம் வாடகை பேசுகிறோம். வண்டிக்காரன் நாம் குறிப்பிட்ட தூரம் வந்ததும் அவன் தான் நினைத்ததை விட தூரம் அதிகமாக இருப்பதாகக் கருதி வாடகையைக் கொஞ்சம் அதிகம் கேட்கிறான். அப்பொழுது பலர் இயற்கையாகவே என்ன கூறுகிறார்கள்? ' அப்பா கடவுளுக்குப் பொதுவாக நட!' என்கிறார்கள். ஆனால் உண்மையாகவே அதிக தூரம் வந்து நாம் வாடகையைக் குறைத்துக் கொடுத்தால், அப்பொழுது அவன் 'ஐயா கடவுளுக்கு பொதுவாக நடங்கள்' என்றால் அதை எத்தனை பேர் பின்பற்றுகிறோம்? உங்களை மனதார எண்ணிப் பார்க்க வேண்டுகிறேன்' – கடவுளுக்குப் பொதுவாக' என்பதை எத்தனை பேர் பின்பற்றுகிறோம்?

ஆகையினாலே தான், நமது நாட்டைப் பொறுத்தவரையில் கீழேயிருப்பவர்கள் மேலேயிருப்பவர்களுக்கு உபதேசம் செய்ய வேண்டும் என்கிறேன்

மதத்தின் மார்க்கத்தில் யாருக்கும் மாறுபாடு இருக்க முடியாது. ஆனால், மார்க்கம் நடைமுறையில் வரும்போது அது மக்களுக்குப் பயன்பட வேண்டும். அதற்குச் சுற்றுச் சார்பும், சூழ்நிலையும் அமைய வேண்டும். சூழ்நிலையை மனிதன் உண்டாக்குகிறான். ஆனால் சுற்றுச் சார்பு எப்படி இருக்கிறதோ, அப்படியே – அதன் வழியே செல்பவர்கள் கொஞ்சம் கூற்றுச் சார்பு அறிந்தவர்கள். ஆனால் சுற்றுச் சார்புக்கு மாறாற நாம் நடந்தால் தனக்குத் தீமையை அளிக்கும் என்பதைத் தெளிவாக அறிந்தும், கெட்டிருக்கின்ற சுற்றுச் சார்புகளை அழிந்து நல்ல சுற்றுச்சார்புகளை ஏற்படுத்துகிறானோ அவனைத் தான் 'மகான்' என்று சொல்லுகின்றோம்

ஆனால் அவர்கள் எப்பொழுதும் நமக்குக் கிடைப்பதில்லை. அவர்கள் கிடைக்கும் போது நாம் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். அப்படிப்பட்ட மகான்களில் ஒருவர் நபிகள் நாயகம். அவரைப் போன்ற மகான்கள் நம்மிடையே அடிக்கடி தோன்றுவதில்லை. ஆகையினால் அத்தகையவரின் சிறந்த கருத்துக்களை நாட்டில் பரப்ப நல்ல சுற்றுச் சார்புகள் உருவாக வேண்டும். சுற்றுச் சார்பு நல்லமுறையில் அமைய மக்களிடத்திலே நல்ல அறிவுத்தெளிவும், அத்தெளிவு ஏற்பட நல்ல கல்வி முறையும், நல்ல கல்விமுறை ஏற்பட நல்ல ஆட்சியும், நல்ல ஆட்சிமுறை ஏற்படுவதற்கு நல்ல ஆட்சியாளர்களும் வேண்டும். நல்ல ஆட்சியாளர்களை ஏற்படுத்த நல்லவர்களை வாழவிடவேண்டும்

நபிகள் போதித்த இஸ்லாம் மார்க்கம் வைரம் போன்றது. நல்ல வைரத்தைப் பட்டைதீட்டி, அதைக் கையிலே மோதிரமாகவும் செய்து போட்டுக்கொள்ளலாம். காதில் கடுக்கனாகவும் அணிந்து கொள்ளலாம். அதே வைரத்தை விற்று, கிண்டி குதிரைப்பந்தயத்தில் வைத்தும் ஆடலாம். ஆனால் வைரத்தைப் பயன்படுத்துவதிலிருந்து தான், அந்தப் பயனின் தரத்தை அறிந்துகொள்ள முடியும். ஆதைப் போல இஸ்லாம் மார்க்கம் என்ற வைரம் யாருக்கு, எந்த இடத்ததிலே, எப்படி பயன்படுகிறது என்பதிலே தான் அதன் மாண்பு உணரப்படும். இதை எண்ணும் போது நல்லவர்கள் கிடைப்பது என்பது கூட எளிதாகி விடும். ஆனால் அவர்கள் சொல்லி சென்ற கருத்துக்களை பயன்படுத்துவதிலே தான் மதிப்பு உயரும்

இஸ்லாத்தின் உயர்ந்த மாக்கம் இன்று யாருக்கு பயன்படுகிறது? இதை எண்ணிப்பார்க்க வேண்டும். ஆதிக்கக் காரர்களுக்குப் பயன்படுமானால், ஏழையை ஐயோ என்று கதற வைப்பவர்களுக்குப் பயன்படுமானால் அதில் இந்த உயரிய மார்க்கத்தின் பலன் இல்லை. இவ்வுயரிய மார்க்கம் அக்கிரமத்தை அழிக்கப்பயன்படவேண்டும். உலகத்தில் நல்ல தோழமையை உண்டாக்குவதற்குப் பயன்படவேண்டும். என்றைக்கு இந்நோக்கங்களுக்கு இம்மார்க்கம் பயன்படுகிறதோ அன்றைக்குத் தான் மார்க்கத்தின் முழுப்பலன்களை அடைய முடியும்.

திருத்தொண்டு

கடவுள் தத்துவத்தை யார் யார் பயன்படுத்துகிறார்கள், எப்பொழுது பயன்படுத்துகிறார்கள் என்பதை ஆராய வேண்டும். எதையும் கண்டு மருளவோ, மயங்கவோ அச்சப்படவோ கூடாது.

யார் என்ன சொன்னாலும், எவர் எப்படி ஆராய்ந்தாலும் அத்தனையையும் தாண்டி ஒரு மார்க்கம் இருக்குமானால் அது தான் நிலைத்து நிற்க முடியும்

சாமான்யர்களின் பேச்சுக்கே ஒரு மதம் நிற்காது என்றால் என்ன அர்த்தம்? நல்ல பொன் என்றால் அது எத்தனை முறை உரைத்துப் பார்த்தாலும் மாற்றுக் குறையாது நிற்கும். அதைப் போல இஸ்லாமிய மார்க்கம் யாரால் எப்படி எப்படி ஆராயப்பட்டாலும் நிற்கிறது.

எனவே எங்களை இந்த விழாவுக்குத் துணிவுடன் அழைத்துப் பேசச் செய்கிறார்கள். வேண்டுமானால் நவாராத்திரி விழாவுக்கு எங்களைக் கூப்பிட்டுப் பார்க்கட்டுமே! அதற்குத் தைரியம் இருக்கவேண்டும். இதை நீ யார் நிறுத்துப்பார்க்க என்று கூறக்கூடாது. யார் நிறுத்தாலும் எடை சரியாக இருந்தால் தான் அது சரியானதாக இருக்க முடியும்

சிறந்த மார்க்கம்

இஸ்லாத்தின் உரிய பண்புகள் இதற்கு முன் உலகுக்கு எவ்வளவு அவசரமாகத் தேவைப்பட்டதோ அதைவிட இப்பொழுது தத்துவக் காட்டுக்குள் ஒளி தேடி அலையும் இந்த உலகுக்கு மிக அவசரமாகத் தேவைப்படுகின்றன.

இஸ்லாம் என்பது ஒரு மதம் அல்ல. ஒரு சிறந்த மார்க்கம். இஸ்லாமிய மார்க்கத்தை உலகத்தின் பல்வேறு நாடுகளிலும் கொண்டாடுகிறார்கள். இஸ்லாமிய மார்க்கம் சிறந்ததொரு மார்க்கமாக இருப்பதால் உலகில் உள்ள பெருங்குணவான்கள் இஸ்லாத்தை ஒரு மதமாகக் கொள்ளாமல் ஒரு மார்க்கமாகவே கருதுகின்றனர்

நான் மதத்தைப் பற்றிக் கொண்டுள்ள கருத்துக்கும் இங்கு நடைபெறும் நபிகள் நாயகம் விழாவிற்கும் முரண்பாடு இல்லை. இஸ்லாத்தை ஒரு மார்க்கமாகக் கருதி நான் இவ்விழாக்களில் கலந்து கொள்கிறேன்.

இஸ்லாமிய மார்க்கம் ஏன் சிறந்ததெனப் போற்றப்படுகிறதென்றால், மனிதனுக்கு என்னென்ன ஐயப்பாடுகள் ஏற்படுகின்றனவோ அதையெல்லாம் நீக்கக் கூடிய வகையில் அதில் நல்ல கொள்கைள் இருக்கின்றன. நபிகள் நாயகத்தின் போதனைகளில் ஒன்று, "ஆண்டவனுக்கு இணை வைத்தல் ஆகாது" என்பதாகும். இந்தப் போதனையை நான் நெஞ்சம் நெக்குருக எண்ணிப் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன்

ஏன் நான் இந்தப் போதனையைச் சிறப்பாகக் கூறுகிறேன் என்றால், இப்போதனை மனிதனைச் சிந்திக்கத் தூண்டுகிறது. "ஆண்டவனுக்கு இணை வைத்தல் ஆகாது. ஏன் இணை வைத்தல் ஆகாது? ஆண்டவன் எப்படி இருக்கக் கூடும்? என்றெல்லாம் சிந்தனைக்கு வேலை கொடுத்து ஆண்டவன் இப்படியிருக்கக்கூடும் என்று சிந்தனை முடிவடைவதில்லை. எனவேதான், பழந்தமிழர் மக்கள் "கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்". "பார்த்தவர் சொன்னதில்லை. சொன்னவர் பார்த்ததில்லை" என்று கூறியிருக்கிறார்கள்.

கடவுள் தன்மையின் தத்துவமே இதுதான். ஆண்டவனுக்கு இணை வைத்தால் ஆண்டவனுக்கு முன் ஒருவரை வைக்க வேண்டும். அந்த ஒருவர் யாராக இருக்க வேண்டும்? யாருக்குத் தெரியும்! அதனால்தான் ஆண்டவனுக்கு இணை வைத்தல் ஆகாது என்ற போதனையை நபிகள் நாயகம் கூறியிருக்கின்றார். மற்ற மார்க்கத்தில் இணைவைத்துக் கூறிய காரணத்தால்தான், எங்களைப் போன்றவர்களுக்கு ஏராளமான மாற்சரியங்கள் தோன்றின

கடவுள் தூதரை அனுப்பியதற்குக் காரணம், தன்னை நேரடியாக "நான்தான்" கடவுள் என்று கூறி மக்களை நம்பவைக்க முடியும். ஆனாலும், தூதுவரை அனுப்பியதற்குக் காரணம், "நான் அனுப்பியதாகச் சொல்லு!" சொன்னால்தான், மக்கள் "கடவுள்தான் அனுப்பினாரா?" என்று சிந்தித்துப் பார்ப்பார்கள், எண்ணிப்பார்ப்பார்கள் என்று.

ஒன்றே குலம், ஒருவனே தேவன்

தத்துவக் காட்டிலே சிக்கித் தடுமாறிக்கொண்டிருக்கும் உலகுக்கு தக்கதோர் வழிகாட்டும் ஒளி விளக்காக இஸ்லாத்தை நாங்கள் கருதுகிறோம்.

மதம் என்று சாதாரணமாக உணரப்படுவதை போன்றதல்ல இஸ்லாமிய மதம். எனவே இஸ்லாத்திலுள்ள மேலோர் இஸ்லாத்தை மதம் என்று அழைப்பதை விட மார்க்கம் என்றே அழைக்கின்றனர். இஸ்லாத்திலுள்ள ஒளியும், அந்த ஒளியிலுள்ள மாண்பும் வரவேற்கத்தக்கது

மனித சிந்தனை வளர்ச்சியுறாத காலத்திலே மனிதர்களுக்கு ஏற்பட்ட ஐயப்பாடுகளை நீக்கவே தூதர்கள் தோன்றினார்கள். நபிகள் நாயகம் இறுதி நபியாகத் தோன்றியதால் அவர்களுக்கு பின்னரும் பலர் நானும் நபிதான் என்று சொல்லி மக்களிடையே குழப்பத்தை உண்டு பண்ண முடியவில்லை

ஆண்டவன் மனிதனுக்குச் சிந்தனையை அருளியதே அவனுடைய தன்மையை அறிந்து கொள்ளத்தான்.

இஸ்லாத்திலே இறைவனுக்கு இணைவைக்கக்கூடாது. என்று கூறப்பட்டிருப்பதை நினைத்து நினைத்து மகிழ்ந்திருக்கிறேன். ஏனெனில் ஆண்டவனுக்கு ஒன்றை இணைவைப்பது என்றால் அதைப் பற்றி முன்னரே அறிந்திருக்கவேண்டும்

ஆண்டவனுக்கு இணைவைப்பதால் தான், அவனைக்காட்ட எட்டணா தரகு வேலையும் ஆரம்பமாகிறது. இஸ்லாமிய மார்க்கம், மனிதனைப் பூரண மனிதனாக்கத்தக்க மார்க்கமாய் விளங்குகிறது.

ஆண்டவன் தானாகத் தோன்றி உபதேசிக்காமல் தூதர்களை அனுப்பியதேன் என்றால் மனிதர்களுக்கு வெறும் நம்பிக்கையை யூட்டுவதற்கு மட்டுமல்லாமல் அவர்களுடைய ஐயங்களைத் தெளிவாக்கி அவர்கள் பின்பற்றுவதற்கு வழிகாட்டிகளாகவே அனுப்பியிருக்கிறான். இஸ்லாமிய மார்க்கம் கூறும் ஆண்டவன் தான், உருவத்திற்குள்ளே தன்னை அடக்கிக்கொள்ளாத ஆண்டவனாக இருக்கிறான். அந்த ஆண்டவனும் சிந்தித்து உணரத் தூண்டுகிறான்

இஸ்லாத்தின் மிகச்சிறந்த மாண்பு அதன் சமுதாய அமைப்பாகும். சாதிப் பீடையை அது ஒழித்துக்கட்டுவதாகும். முதுகுளத்தூரிலே இன்று அடித்துக்கொண்டிருக்கும் ஹரிஜனும் தேவரும் அப்துல்சத்தாராகவோ, அப்துல் சமதாகவோ மாறிவிட்டால் இந்த வேற்றுமைகள் எல்லாம் மறைந்து விடுகின்றன.

இம்மாதிரியான கூட்டங்களிலே இஸ்லாமிய வரலாறு அறிந்தோர் வாயிலாக நபிகள் நாயகத்தின் வீர வரலாற்றை கேட்க விரும்புகிறேன். ஏங்களைப் போன்றோரைப் பேசச் செய்து, இஸ்லாத்தைப் பற்றிய எங்கள் ஞானத்தைச் சோதிப்பதைவிட எங்களைப் போன்றோரை கூட்டிவைத்து இஸ்லாமிய தத்துவ விளக்கம் செய்யப்பட வேண்டும் என விரும்புகிறேன்.

காட்டுமிராண்டி காலமான அக்காலத்தில் 1400 ஆண்டுகளுக்கு முன்னே நபிகள் நாயகம் அவர்கள் தன்னந்ததனியாக அக்காலத்து மக்கள் வணங்கிய தெய்வங்கள் பொய்யானவை என்றும் அவர்கள் சென்று வழிபட்டக் கோவில், இறைவனின் உண்மையான உறைவிடமல்ல என்றும் எடுத்துக்கூறித் திருத்தினார்கள் என்றால் அதற்காகவாவது சுயமரியாதைக்காரர்கள் அவரை மகான் என்று கொண்டாடுவார்கள். அக்கால மக்கள் ஈடுபட்டிருந்த கோட்பாடுகளையெல்லாம் இடித்துரைக்க எவ்வளவோ நெஞ்சுரம் வேண்டும். நபிகள் நாயகத்தின் நெஞ்சுரம் இறுதி வரையிலே கொஞ்சமும் மாறாததாக இருந்தது. அது மாத்திரமல்ல. அந்த நெஞ்சுரத்தை இஸ்லாமியருடைய பரம்பரைச் சொத்தாக அவர்கள் விட்டு சென்றுள்ளார்கள்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற நெறி தழிழ்நாட்டில் பரவி இருந்தது. ஆனால் பாதகர்களாலும் காதகர்களாலும் அந்த நெறி மறைக்கப்பட்டிருந்த நேரத்தில் இஸ்லாம் அந்த நெறியை எடுத்துரைத்தது. எனவே காணாமல் போன குழந்தையைத் தாய்ப்பாசத்துடன் கட்டிணைப்பதைப் போன்றே தமிழகத்தில் இஸ்லாமிய கருத்துக்கள் தழுவப்பட்டன. இதைக் கண்டு மற்றவர்கள் பொறாமைப்பட்டால் நாங்கள் என்ன செய்ய முடியும்.

மார்க்கத்தைப் பயன்படுத்துவதைப் பொறுத்து அதன் மாண்பும் உணரப்படுகிறது.

இஸ்லாம் சிறந்த மார்க்கம். அது உலகத்தில், அக்கரமத்தையும் அநியாயத்தை அடக்கப் பாடுபடவேண்டும்

மேலே இருப்பவர்கள் கீழே இருப்பவர்களுக்கு உபதேசிப்பதாக மார்க்கம் இருந்து வருகிறது. கீழே உள்ளவர்களால் மேலே உள்ளவர்களுக்கும் உபதேசிப்பதாக மார்க்கம் இருக்கவேண்டும்.

பிறரிடமிருந்து பணம் பறிக்கவோ, பேரம் பேசிப் பயனடையவோ அன்றி, அக்கரமத்தை ஒழிக்க, மக்களிடையே அன்பை வளர்க்க மார்க்கம் பயன்படவேண்டும்

எங்களை நாஸ்திகர்கள் எனக்குற்றஞ்சாட்டுகிறார்கள். ஆனால் உருவமற்ற ஒரு தெய்வத்தை நாங்கள் என்றும் மறந்ததில்லை. ஆஸ்திகர்கள் எனத் தன்மைத் தாமே அழைத்துக் கொள்வோர் தங்களுக்குப் பிடிக்காதவர்களுக்குச் சூட்டிய பட்டம் தான் 'நாஸ்திகர்கள்' என்பது உண்மையிலேயே உலகத்தில் நாஸ்திகள் என ஒரு கூட்டத்தார் இருந்ததில்லை. அப்படி ஒருவேளை இருந்தாலும், நிச்சயமாக நாங்கள் அந்தக் கூட்டத்தைச் சார்ந்தவர்களல்ல

ஆண்டவனை ஐயப்படும் அளவுக்கு ஈனப்பிறவிகளாக அந்த ஆண்டவனால் படைக்கப்ட்டவர்களல்ல நாங்கள் என்பதை தெளிவுபடுத்துகிறேன்.

அறப்பணி

எனக்கும் இஸ்லாத்துக்கும் ஏற்பட்ட பிணைப்பு இந்த வகையில் ஏற்பட்ட பிணைப்பல்ல! நான் வசிக்கும் காஞ்சீபுரம் ஒலி முஹம்மது பேட்டை இஸ்லாமிய நண்பர்களுடனும், மார்க்க பேரறிஞர்களான ஆலிம்களுடனும் என் இளமை முதல் உற்ற நண்பர்கள் என்கிற போழ்து, குடும்பத்தோடு குடும்பமாய்க் கலந்து சகோதர வாழ்க்கை நடத்தியவன் நான். இஸ்லாத்தைப் பற்றியும் அதன் இன்னிலக்கியமான, இறைமறை திருக்குர்ஆனைப் பற்றியும் நான் அறிந்து கொள்ளும்வாய்ப்பு என் இளமைக்காலத்திலேயே என் இதயத்தில் இடம்பிடித்து விட்டது. திருக்குறளை நான் தெரிந்து கொண்ட காலத்திலேயே திருக்குர்ஆனையும் நான் தெரிந்து கொள்ளும் வாய்ப்புப் பெற்றிருந்தேன் என்று நான் துணிந்து சொல்வதில் பெருமை கொள்கிறேன்

என்னுடைய பொதுவாழ்வு சுடர்விட என்னுடைய இதயமூச்சின் இலட்சிய மேடையான திராவிடக் கழக மேடையுடன் நபிகள் நாயக மீலாது மேடையும் எனக்குக் கைக்கொடுத்ததை நான் மறந்து விட முடியாது. ஏறத்தாழ முந்நூற்றுக்கதிகமான மீலாது மேடைகளில் நான் பேசியிருக்கிறேன். நானும் எனது கொள்கையும் சொல்லி வந்த சமுதாய சீர்திருத்த பிரச்சார பலத்துக்கு பெருமான் நபிகள் நாயகத்தின் ஏகதெய்வக்கொள்கை எங்கட்டு பெரிதும் பிரச்சாரத்துணை நின்றது. கல்லையும் மண்ணையும் பூசிக்காதீர், கடவுளால் படைக்கப்பட்ட மனிதன் உண்டு மனிதனால் படைக்கப்பட்ட கடவுள் இல்லை என்று நபிகள் நாயகம் வலியுறுத்திய அதே கொள்கையைக்கொண்டிருந்த எங்கள் இலட்சியப்பணி, மீலாது மேடையின் மூலம் சுடர்விட நல்லவாய்ப்பு இருந்தது.

ஏகதெய்வக்கொள்கையை "ஒன்றே குலம் ஒருவனேதேவன்" எனும் உண்மை தாத்பரியத்தை, மக்களை ஏற்கச் செய்ய எவ்வளவோ பிரச்சாரம் தொடுத்தும், முழுப்பயனும் எட்ட முடியாமல் உள்ளம் வெதும்பும் நம்முடைய பிரச்சாரத்தையும், 1400 ஆண்டுகட்கு முன்பு எந்த வித நவயுக பிரச்சார சாதனமும் இல்லாத அந்த நாட்களில் திரும்பும் திசைதோறும் கடவுளின் சிலை வடித்து தினமொரு இறைவனை உண்டு செய்த அறிவாற்றலற்ற அந்த மக்களை – நபிகள் நாயகத்தின் 23 வருட பிரச்சார பலம் எத்துனை வெற்றிக்கு இழுத்து வந்து, ஒரே இறை, ஒரே மறை என்ற கருத்தை உள்ளத்தால் ஒத்துக்கொள்ளச் செய்து, அதுவும் உலகின் மூலை முடுக்குக்கெல்லாம் பரவி, பண்புடன் வாழச் செய்திருக்கிறது என்றால், அந்த மனிதப் புனிதரின் நாவன்மைக்கிருந்த நல்ல மதிப்பீட்டை, மகத்துவத்தை எண்ணிப் பூரித்து நன்னயத்திற்கு துணைபோக வேண்டியவர்களாக இருக்கிறோம்

இத்துணை மகத்துவம் அந்த மாநபிக்கு இருக்கக் காரணமே, அந்த பெருமகன் தன் உயிரினும் மேலாக கட்டிக் காத்து வந்த பொறுமையும், சொல்லும், செயலும் இணைந்த வாழ்வும், நடைமுறை வாழ்க்கையில் தடையின்றிச் செல்லத்ததுணை நின்ற சட்டமும், தன்னையும் தன்னை பின்பற்றுவோருள் ஒருவராக்கி சொன்னதோடல்லாமல் செய்து காட்டும் செம்மலாமல் செம்மலாகவே இருந்ததும் மூல முதல் காரணமாகும்! மற்றெல்லா மதங்களிடையேயும் இல்லாதிருக்கும் இணையற்ற மதிப்பு, அதன் சட்டத்திட்டங்கள் மனிதனின் நடைமுறை வாழ்க்கைக்கேற்ற நல் அமைப்பாகும். நபிகள் நாயகத்தின் வாழ்வும் வாக்கும் நிரம்பிய ஹதீசும் இஸ்லாத்தின் இணையற்ற இலட்சிய பொக்கிஷமான இறைமறை திருக்குர்ஆனும் மனிதன் அன்றாட வாழ்வில் கடைபிடிக்கும் நடைமுறை வழிகளைக் கடைபிடிக்க வலியுறுத்துகின்றன, இது இஸ்லாத்தின் வளர்ச்சிக்குக் கிடைத்த மிகப்பெரிய தூண்டுகோலாகும்!

எழுச்சி இதயம் என்பது அறிவைத் தேடி அலையும் ஆற்றல் உள்ளதாக அமைதல் வேண்டும். நான் இதற்கு முன்னும் சொல்லியிருக்கிறேன் இப்போதும் சொல்கிறேன். நான் ஒரு கைலி கட்டாத முஸ்லிம், சிலுவை போடாத கிறிஸ்தவன், திருநீறு அணியாத ஹிந்து, நல்லவை எங்குதென்படுகிறதோ அங்கெல்லாம் நான் பழந்தோட்டத்தை நாடி பறவையினங்கள் பறந்தோடுவது போல, ஏற்புடைய என் இதயத்துக்கு இனியவைகளை, வல்லவைகளை – அவை இருக்கும் இடம் பற்றி கவலைப்படாமல் எடுத்து வந்து விடுவதுண்டு.

அப்படி இஸ்லாத்தில் நான் எடுத்துக் கொண்டவைகளுள் மிக முக்கியமானது பொறுமை. அந்தப் பொறுமையின் உரிமையை நான் மிகப் பெருமையாக அனுபவித்து வருகிறேன். வாய்மையில், வளர்க்கும் மனத்தூய்மையில் சிறக்கும் பொருமை ஒன்றில் தான் உலகம் அளப்பரிய சாதனைகளைக் காண முடிந்தது. அந்த சாதனைகள் இஸ்லாமிய வரலாறெங்கும் வளர்ந்து நிற்பதையும் நம்மால் பார்க்க முடிகின்றது. வாளேந்தி, வன்சமர்புரிந்து சாதிக்க முடியாத சாதனைகளைக் கூட நபிகள் பிரானின் இன்சொல்லும், புன்முறுவலும் தனக்கே உரிய தனித்த ஆயுதமான பொறுமையினாலும் வெற்றி கொண்டு இருக்கிற சக்தி அண்ணலின்பால் எனக்கு அளப்பரிய பக்தியை உண்டாக்கி விட்டது

இஸ்லாம் என்பது ஒரு பலாப்பழத்துக்கு ஒப்பாகும். இத்துணை சம்பிரதாய சடங்குகள் கொண்டதா இஸ்லாம் என்று அதனைப் பற்றி புரிந்து கொள்ள அஞ்சுபவர்களால் அதன் உள்புகுந்து உயர் நோக்கறிய முனையாதவர்களால் இஸ்லாத்தைப் புரிந்துகொள்ளமுடியும். பலாப்பழத்தின் மேலுள்ள முள் குத்துமே என்று அஞ்சுபவர்களுக்கு அதன் உள்ளே உள்ள சுவையான கனிகளை உண்ணும் வாய்ப்பு எப்படி கிடைக்கும்? அதே போன்றே இஸ்லாம், சம்பிரதாயம் என்ற முள்கூட கையிலே குத்தி, குருதியைக் கொண்டு வந்து விடுவதில்லை. தெரிந்துகொள்ளும் ஆவலுடன் உள்புகுந்து அறிந்தால், தோல் நீக்கிய கனி கிடைப்பது போல், நல்ல சுவையுள்ள கனி கிடைக்கும் சுந்தரமார்க்கம் இஸ்லாமாகும்.

பெருமான் நபிகள் இஸ்லாத்தின் இனிய சங்க நாதத்தை உலகின் நாலா பக்கமும் ஒலிக்கச் செய்வதற்குப் பட்டதுயர்கள், தொட்ட தொல்லைகள், தியாகம் பலகண்ட தியாகத் தழும்புகள் கொஞ்சம் நஞ்சமல்ல.

அண்ணல் நபிகள் நாயகத்தின் அறப்பணி, அகிலத்தை தரமுடையதாக்கவும், திறமுடையதாக்கவும் கிடைத்த திருப்பணி, இப்பணியை எண்ணி பூரிக்க நாம் ஒவ்வொருவரும் கடமைப்பட்டவர்களாவோம்.

நன்றி : www.arignaranna.blogspot.com

LinkWithin

Blog Widget by LinkWithin