சிங்கப்பூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிங்கப்பூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2009

சிங்கப்பூரில் பன்றிக் காய்ச்சலுக்கு இந்தியப் பெண் மரணம்


பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண் சிங்கப்பூரில் மரணமடைந்தார்.

அவருக்கு வயது 29. சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பன்றிக் காய்ச்சலுக்கு இந்தியர் ஒருவர் பலியாவது இதுவே முதல் முறையாகும்.

இறந்த பெண்ணின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை. ஜூலை 25ம் தேதி சிங்கப்பூரில் உள்ள சாங்கி பொது மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த நான்கு நாட்களாக அவரது நிலை மோசமானது. இதையடுத்து அவர் கோமா நிலைக்குச் சென்றார். நேற்று அவர் உயிரிழந்தார்.

சனி, 1 ஆகஸ்ட், 2009

சிங்கப்பூர் சுற்றுலாத்துறையின் உயர்வுக்கு உதவும் இந்தியர்கள்


சிங்கப்பூர்: சிங்கப்பூருக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் தொடர்ந்து இந்தியர்களே முக்கிய இனக்குழுவினராக உள்ளனர். இதனால் சிங்கப்பூர் சுற்றுலாத்துறை நல்ல உயர்வைக் கண்டு வருகிறாம்.

இந்த ஆண்டு இந்தியாவிலிருந்து 7 லட்சத்து 47 ஆயிரம் சுற்றுலா பயணிகள் சிங்கப்பூருக்கு வருவார்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூருக்கு வரும் சுற்றுலா பயணிகள் வரிசையில் இந்தியர்கள் நான்காவது இடத்தில் உள்ளனர். முதலிடத்தில் இந்தோனேசியர்கள், அடுத்து சீனர்கள், 3வதாக ஆஸ்திரேலியர்கள் உள்ளனர்.

இந்திய சுற்றுலாப் பயணிகள் மூலம் சிங்கப்பூருக்கு இந்த ஆண்டு 672 மில்லியன் முதல் 1.05 பில்லியன் சிங்கப்பூர் டாலர் வருவாய் கிடைக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 3,61,000 இந்தியர்கள் சிங்கப்பூர் வந்துள்ளனர். இருப்பினும் இது கடந்த ஆண்டை விட 13 சதவீதம் குறைவாகும். காரணம், வேறென்ன பொருளாதார மந்த நிலைதான்.

இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை மட்டும் இந்தியர்கள் மூலம் சிங்கப்பூருக்குக் கிடைத்துள்ள வருவாய் 431 மில்லியன் சிங்கப்பூர் டாலர்களாகும்.

வெள்ளி, 17 ஜூலை, 2009

சிங்கப்பூரில் டாக்டர் ஜாகிர் நாயக்!


சிங்கப்பூரில் வரும் 18ம் தேதி இரவு 8 மணி அளவில் இன்ஷா அல்லாஹ்,மனித குலத்துக்கு இஸ்லாம் தீர்வாகுமா? எனும் தலைப்பில் டாக்டர் ஜாகிர் நாயக் உரையாற்ற உள்ளார்.

இடம்:SUNTEC EXHIBITION,HALL 404,LEVEL 4.

மேலும் அதிக விவரங்களுக்கு :

WWW.DARUL-ARQAM.ORG.SG
EDDSTAFF@DARUL-ARQAM.ORG.SG
PHONE:6348 8344(PRESS 2 )

அனுமதி இலவசம்,

நீங்களும் செல்லுங்கள்,முஸ்லிம் அல்லாத நண்பர்களையும் அழைத்துச் செல்லுங்கள்!!

சனி, 11 ஜூலை, 2009

சிங்கபூரில் தமிழ்மொழி பேச்சாளர் மன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்றனர்


சிங்கபூரில் தமிழ்மொழி பண்பாட்டு கழகத்தின் பேச்சாளர் மன்ற புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா சிறப்பாக நடந்தது

வியாழன், 26 மார்ச், 2009

மூன்றாவது முறையாக சிங்கப்பூர் தேசிய விருது வென்ற கனகலதா


சிங்கப்பூரின் தேசிய மொழிகளில் ஒன்றாக தமிழ் உள்ளது. சிங்கப்பூர் அரசு தமிழ் மூலமான கலை இலக்கிய வளர்ச்சிக்குப் பெரும் ஊக்கம் தருகிறது. தேசிய கலை மன்றம், தேசிய புத்தக மேம்பாட்டு மன்றம், தேசிய நூலக வாரியம் போன்ற அமைப்புக்களின் மூலம் நாட்டின் கலை இலக்கிய வளர்ச்சிக்கு பல்வேறு உதவிகளையும் ஆதரவையும் வழங்கி வருகின்றன.

சிங்கப்பூரில் தேசிய புத்தக மேம்பாட்டு வாரியம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆங்கிலம், தமிழ், மலாய், சீனம் ஆகிய அந்நாட்டின் நான்கு தேசிய மொழிகளிலும் வெளிவரும் சிங்கப்பூர் குடிமக்கள், மற்றும் அந்நாட்டின் நிரந்தரக் குடிமக்களின் நூல்களுக்கு விருது வழங்கிக் கௌரவிக்கிறது. 10,000 சிங்கப்பூர் வெள்ளி பணப் பரிசில் கொண்டதாக இந்த விருது உள்ளது.

எழுத்தை ஊக்கப்படுத்தி வளர்க்கும் நோக்கில் தேசிய புத்தக மேம்பாட்டு வாரியம், தேசிய புத்தகப் பரிசு என்ற பெயரில் 1980ம் ஆண்டு முதல் இவ்விருதினை வழங்கி வருகிறது. இடையில் சில காலம் தடைப்பட்டிருந்த இவ்விருது 2004ம் ஆண்டு முதல் மீண்டும் தேசிய இலக்கிய விருது என்ற பெயரில் நான்கு மொழி நூல்களுக்கும் இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படுகிறது.

தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக தமிழ் மொழி நூலுக்கான இந்த விருதைத் தனியொருவராக நிலைத்து நின்று பெற்று வருகிறார் கனகலதா என்ற பெண் படைப்பாளி. இலங்கையில் நீர்கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்ட கனகலதா இளம் வயதிலேயே சிங்கப்பூரில் புலம்பெயர்ந்து வாழத் தலைப்பட்டவர்.சிங்கப்பூர் ஊடகத்துறையிலும், தமிழ் சமூகத்திலும் வி.ரி.அரசு என்று பரவலாக அறியப்பெற்ற அமரர் வை.திருநாவுக்கரசு, சிங்கப்பூர் தமிழ்ப் பத்திரிகையான தமிழ் முரசு ஆசிரியராக இருந்தபோது, அதில் இணைந்து தமிழ் முரசு ஞாயிறு பதிப்பின் ஆசிரியராகப் பணியாற்றியவர்.

அதனூடாக சொந்தப் பெயரிலும் புனைபெயரிலும் பல கதைகளையும் கவிதைகளையும் எழுதித் தன் படைப்பாற்றலை அமரர் திருநாவுக்கரசுவின் வழிகாட்டலில் வளர்த்துக் கொண்டவர். இவரது முதலாவது நூலான தீவெளி என்ற கவிதைத் தொகுப்பிற்கு சிங்கப்பூர் தேசிய இலக்கிய விருதினை 2004ல் பெற்றுக்கொண்ட கனகலதா, 2006ம் ஆண்டில் தனது பாம்புக் காட்டில் ஒரு தாழை என்ற கவிதைத் தொகுப்பிற்காக சிங்கப்பூர் தேசிய இலக்கிய விருதினை இரண்டாவது முறையாக பெற்றார்.

'நான் கொலை செய்யும் பெண்கள்'...

அண்மையில் இவர் எழுதிய 'நான் கொலை செய்யும் பெண்கள்' என்ற சிறுகதைத் தொகுப்பிற்கு 2008ம் ஆண்டுக்கான சிங்கப்பூர் தேசிய இலக்கிய விருது கிடைத்துள்ளது.நான் கொலை செய்யும் பெண்கள் என்ற இந்நூலில் லதாவின் தேர்ந்த பத்துச் சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. இக்கதைகளின் களம் சிங்கப்பூராக இருந்தாலும், அதில் வெளிப்படுத்தப்படும் கருவும் சிந்தனைகளும் எண்ணப்போக்குகளும் உலகப் பெண்கள் பொதுவாக எதிர்நோக்கும் பிரச்சினைகளாகவே அமைந்திருக்கின்றன.

பலவீனமானவர்களாகவே சித்திரிக்கப்படும் இனமான பெண்கள் அதிலிருந்து மீண்டுவர முனையும் போக்கும் அந்த மீட்சிக்கான அவர்களின் முனைப்பும் காத்திருப்பும் இக்கதைகளின் அடிநாதமாக அமைந்துள்ளது.அடையாளம் என்ற முதலாவது கதையில் சிங்கப்பூரில் வாழும் ஓர் இந்தியப்பெண் தன் அடையாளத்தை நிலைநிறுத்தும் முயற்சி சித்திரிக்கப்படுகின்றது. அதன் பின்னணியில் அவளது குடும்பவாழ்வியல் சூழலில் பலவீனமான பெண் என்ற அடையாளச் சிக்கலிலிருந்து விடுபடமுனையும் தீவிரமும், அங்கலாய்ப்பும் கூடவே வெளிப்படுகின்றது.

நாளை ஒரு விடுதலை என்ற கதையில் வரும் வசந்தி வீட்டுப் பணிப்பெண்ணாக 200 வெள்ளி மாத வேதனத்திற்காக வேலைவாய்ப்புப் பெற்று குடும்பத்தினரைக் காக்கவென்று சிங்கப்பூர் வந்தவள். சிங்கப்பூர் தெருக்களிலும் தொழில்புரியும் வீட்டிலும் பெண் என்ற காரணத்தினால் அவள் எதிர்நோக்கும் விரச நோக்குகள் அதிலிருந்து விடுபட அவள் தேடும் பாதைகள் அழகாக விவரிக்கப்படுகின்றன.

ஆணாதிக்க விடுதலை...மழை-

அப்பா என்ற கதையில் தான் அறவே வெறுக்கும் பொறுப்பற்ற குடிகாரத் தந்தை என்ற ஆண்மையின் ஆளுமையிலிருந்து விடுபடத் துடித்த ஒரு பெண்ணின் ஆதங்கம் கோபம் என்பன நளினமாக வெளிப்படுகின்றன.

அறை என்ற கதையில் தான் ஒரு அறையில் தற்காலிகமாகக் குடியிருக்கும் வீட்டில் நிகழ்ந்த ஒரு மரணத்தைத் தொடர்ந்து அடுத்தநாள் இயல்புவாழ்வுக்குத் தயாராகும் ஒரு பெண்ணின் ஒட்டாத உறவுகளின் சலனங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன.வாழ்வின்மீதான துளித்துளியான நம்பிக்கைகள் கதைகளில் மறைந்தும் மறையாமலும் வெளிப்படுவதை இக்கதைகளில் மிக நுணுக்கமாகப் பின்னியிருக்கிறார் கனகலதா.

ஒவ்வொரு மனிதருக்கும் பல அடையாளங்கள் இருக்கின்றன. சுயம் என்ற ஒன்று இருக்கின்றது. வாழ்க்கையும், அதை வாழ்ந்து வரும் சூழலும், தான் சார்ந்துள்ள சமூகமும், அந்தச் சுயத்தையும், இயல்பான அடையாளங்களையும் மெல்ல மெல்லச் சிதைக்கின்றன அல்லது சிதைவடைவதற்கான அல்லது சிதைத்துக்கொள்வதற்கான சூழலை அவை உருவாக்கித் தருகின்றன.

இப்படியாக ஒரு பெண்ணின் சுயம் அழிக்கப்படுவதையும், மாற்றம்பெறுவதையும், தொலைக்கப்படுவதையும் நான் கொலை செய்யும் பெண்கள் என்ற இந்த நூலில் உள்ள பத்துக் கதைகளும் சொல்கின்றன. புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழ்ப் படைப்பாளியொருவர், தான் தொடர்ந்து வாழத் தேர்ந்த ஒரு வாழிட நாட்டினால் அங்கீகரிக்கப்பட்டு விருதினைப் பெறுவதென்பது, அதுவும் தொடர்ந்து மூன்று தடவைகள் அந்த இலக்கிய விருதினைப் பெற்றுக்கொள்வதென்பது அந்தப் படைப்பாளிக்கு மட்டும் பெருமைதரும் விடயம் அல்ல,

அவரது தொப்புள்க்கொடி உறவுகளான ஈழத்தமிழர்களுக்கும் பெருமைதரும் விஷயமாகும். தமது விருப்பத் தெரிவாக அல்லாது, தமது பெற்றோருடன் கூடிப் புலம்பெயர்ந்தமையால் புகலிட நாடுகளில் நிரந்தரமாக வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுவிட்ட இரண்டாம் தலைமுறை ஈழத் தமிழர்களுக்கும் இத்தகைய வெற்றிகள் ஊக்கசக்தியாகவும், வழிகாட்டிகளாகவும் அமைந்துவிடும் என்பது ஆரோக்கியமான விஷயமாகும்.

புதன், 25 மார்ச், 2009

இந்தியர்களுக்கு சித்திரவதை-பிளாக் லிஸ்ட்டில் 122 மலேசிய நிறுவனங்கள்


இந்தியத் தொழிலாளர்களை முறையாக நடத்தாமல், சித்திரவைத செய்யும், சம்பளம் சரியாக தராமல் கொடுமைப்படுத்தும் 122 மலேசிய நிறுவனங்கள் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

ஒரு காலத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பலருக்கு சொர்க்க பூமியாக திகழ்ந்தது மலேசியா. ஆனால் இன்றைய நிலை தலைகீழாக மாறியுள்ளது.

மலேசியாவுக்குப் போவதை பலரும் இப்போது விரும்புவதில்லை. காரணம் அங்கு இந்தியர்களை மலேசிய நிறுவனங்கள் நடத்தும் விதம். சரியாக சம்பளம் தருவதில்லை, பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றைப் பிடுங்கி வைத்துக் கொண்டு சித்திரவதை செய்வது, சிலருக்கு உயிருக்கு ஆபத்தும் ஏற்படுகிறது.

இதையெல்லாம் வைத்து இப்போது மலேசியாவுக்கு போகும் மோகம் குறைந்து கொண்டு வருகிறது.

இந்த நிலையில் இந்தியத் தொழிலாளர்களை முறையாக நடத்தாமல், சித்திரவதை செய்யும் 122 நிறுவனங்கள் கருப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது இந்திய அரசு.

இந்த நிறுவனங்களில் பல வேலை வாய்ப்பு ஏஜென்சிகளும் அடக்கம். இவர்களை இதயமற்ற, மோசடி நிறுவனங்கள் என மத்திய அரசு வர்ணித்துள்ளது.

இந்த கருப்புப் பட்டியல் சென்னையில் உள்ள இந்திய குடியுரிமை அலுவலகத்தில் (சாஸ்திரி பவன், பாஸ்போர்ட் அலுவலகம்) ஒட்டப்பட்டுள்ளது.

இதற்கிடையே, மலேசியாவில் உள்ள இந்தியர்களுக்கு இன்னொரு பிரச்சினை எழுந்துள்ளது.

மலேசியாவில் 8 சதவீதம் பேர் இந்திய வம்சாவளியினர். அங்கு தமிழ் டிவிகள் உள்ளன. மேலும், அரசு தொலைக்காட்சி நிறுவனங்களும் உள்ளன.

அரசுத் தொலைக்காட்சி நிறுவனங்களில் இந்தியர்களுக்கான (பெரும்பாலும் தமிழ் நிகழ்ச்சிகள்தான்) நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப குறைந்த கால அளவே தரப்படுவதாக மலேசிய இந்திய கலைஞர்கள் சங்கம் குற்றம் சாட்டுகிறது.

அந்த அமைப்பின் தலைவர் பழனிச்சாமி இதுகுறித்து அளித்துள்ள பேட்டியில், உள்ளூர் தயாரிப்புகளுக்கு தொலைக்காட்சி நிறுவனங்கள் குறைந்த கால அளவையே ஒதுக்குகின்றன.

இந்திய வம்சாவளியினர் 8 சதவீதம் பேர் இருந்தாலும் கூட அவர்களுக்கான நிகழ்ச்சிகளுக்கு அதிக வாய்ப்புகள் தர தொலைக்காட்சி நிறுவனங்கள் மறுக்கின்றன என்றார்.

LinkWithin

Blog Widget by LinkWithin