வியாழன், 4 ஜூன், 2009

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் தேர்வுத்தாள் திருத்தும் பணி: "மூட்டா' புறக்கணிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரி நிர்வாகத்தின் சட்டவிரோத நடவடிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் தேர்வுத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்கும் போராட்டத்தை "மூட்டா' அமைப்பினர் செவ்வாய்க்கிழமை முதல் தொடங்கியுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம், தூத்தூர் புனித யூதா கல்லூரி நிர்வாகத்தில் நடைபெற்று வரும் ஆசிரியர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கை, நிதி மற்றும் நிர்வாகச் சீர்கேடு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்கலைக்கழக கல்லூரி மற்றும் சுயநிதிக் கல்லூரி ஆசிரியர் பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்பது உள்ளிட்ட மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

"மூட்டா' அமைப்பினரின் இந்த போராட்டத்தினால் தேர்வுத் தாள்கள் திருத்தும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. பிரச்னைக்கு தீர்வுகாணும் வரை போராட்டம் தொடரும் என "மூட்டா' நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இந்த போராட்டம் குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் இரா.தி. சபாபதி மோகன் கூறியதாவது:

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தமிழக முதல்வர் ஏராளமான சலுகைகளை வழங்கி உள்ளார். அதனால் எல்லோரும் மகிழ்ச்சியாக உள்ளனர்.

இந்த வேளையில் "மூட்டா' அமைப்பினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட வேண்டிய அவசியம் ஒன்றும் இல்லை. தேர்வுத்தாள்களை திருத்தும் பணியை ஆசிரியர்கள் புறக்கணிப்பதால் சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். ஆசிரியர்களின் பிரச்னைகள் எதுவாக இருந்தாலும் பேசித் தீர்த்துக் கொள்ளலாம்.

எனவே, "மூட்டா' அமைப்பினர் தங்களகது போராட்டத்தை உடனடியாகக் கைவிட்டு தேர்வுத்தாள்களை திருத்தும் பணியை மேற்கொள்ள முன்வர வேண்டும் என்றார் துணைவேந்தர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin