
இவர் பாடி பைரவி ராகத்தை கேட்க வேண்டும் என்று போற்றப்பட்டவர் டி.கே. பட்டம்மாள். 90 வயதான பட்டம்மாள் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள தனது இல்லத்தில் இன்று காலை 11.30 மணிக்கு காலமானதாக அவருடைய குடும்பத்தினர் தெரிவித்தனர்.
1919ஆம் ஆண்டு மார்ச் 28ஆம் தேதி காஞ்சீபுரம் தாமல் கிருஷ்ணசாமி தீட்சிதருக்கும், காந்திமதிக்கும் பிறந்த பட்டம்மாளின் இயற்பெயர் அலமேலு. அவருடைய தந்தையார் பட்டு என்று அழைத்ததே பிறகு அவுருடைய பெயராக நிலைத்தது என்று கூறுவர்.
தனது சகோதரர்கள் டி.கே. ரங்கநாதன், டி.கே.ஜெயராமன் போல இவரும் இளம் வயதிலேயே இசையில் சிறந்து விளங்கினார். துவக்கத்தில் பக்திப் பாடல்களை மட்டுமே பாடி வந்த பட்டம்மாள், பிறகு முறையாக இசையைக் கற்றார். தனது 10வது வயதிலேயே வானொலியில் பாடினார்.
13வது வயதில் சென்னை ரசிக ரஞ்சனி சபாவில் இவரது இசை அரங்கேற்றம் நடந்தது. அதற்குப் பிறகே பட்டம்மாள் சென்னைக்கு குடியேறினார்.
எழும்பூர் மகளிர் சங்கத்தில் நடந்த இவருடைய இசைக் கச்சேரியே இவரை ரசிகர்களிடையே அடையாளம் காட்டியது. அதன்பிறகு தொடர்ந்து இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமானார்.
இசைக் கலைஞர் பாபநாசம் சிவன் இயற்றிய பல பாடல்கள் இவர் பாடியதால் பிரபலமாயிற்று. பைரவி இராகத்தில் இவரைப் போல் பாட யாருமில்லை என்ற அளவிற்கு தனிப் புகழ் பெற்றார்.
பாபநாசம் சிவன் இவரை திரைப்படத்திலும் பாட வைத்தார். தியாக பூமி, நாம் இருவர் ஆகிய படங்களில் பட்டம்மாள் பாடியுள்ளார்.
சங்கீத சாகர ரத்னா, சங்கீத நாடக அகாதமி, சங்கீத கலாநிதி ஆகிய மிகச் சிறந்த விருதுகளைப் பெற்ற பட்டம்மாள் ‘ஞான சரஸ்வதி’ விருதும் வழங்கப்பட்டதையே மிக உயர்வானதாகக் கருதினார்.
கர்நாடக இசைக்கு பட்டம்மாள் அளித்த பங்கை கெளரவிக்கும் வகையில் அவருக்கு 1971ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருதையும், 1998ஆம் ஆண்டு பத்ம விபூஷண் விருதையும் அளித்து இந்திய அரசு கெளரவித்துள்ளது.
இன்றைக்கு உச்ச ஸ்தாயில் பாடும் பெண் இசைக் கலைஞர்களுக்கெல்லாம் முன்னோடி டி.கே.பட்டம்மாள்தான் என்று கூறுவார்கள். இவருடைய பக்திப் பாடல்களும், பாரதியாரின் விடுதலைப் பண்களை இவர் பாடியதும் ரசிகர்கள் இன்றும் மறக்காதவையாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக