செவ்வாய், 2 ஜூன், 2009

தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளில் கட்டாய நன்கொடை

தூத்துக்குடி மாவட்டத்தில் கட்டாய நன்கொடை வசூல் செய்யும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக இச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் பா. புவிராஜ், தூத்துக்குடி நகரச் செயலர் முத்து மற்றும் நிர்வாகிகள் திங்கள்கிழமை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ. பிரகாஷை நேரில் சந்தித்து அளித்த மனு:

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஏழை, நடுத்தர மாணவர்கள் ஏராளமானோர் பயின்று வருகின்றனர். ஆனால், பெரும்பாலான அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு (உயர்நிலை, மேல்நிலை) ரசீது கொடுக்காமல் பல்லாயிரக்கணக்கான ரூபாய் கட்டாய நன்கொடை என்ற பெயரில் வசூல் செய்யப்படுகிறது.

சில பள்ளிகளில் நல்ல மதிப்பெண் பெற்றிருந்தாலும் நன்கொடை இல்லையென்றால், மாணவர்களைச் சேர்க்க மறுக்கின்றனர்.

தமிழக அரசு ஏற்கெனவே கல்விக் கட்டணம் செலுத்த வேண்டாம் என அறிவித்துள்ள சூழ்நிலையில், அரசின் உத்தரவையும் மீறி செயல்படும் இத்தகைய பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தக் கட்டாய நன்கொடை வசூலால், ஏழைக் குழந்தைகள் கல்வி கற்பதில் சிரமம் ஏற்படுகிறது. தூத்துக்குடி, கோவில்பட்டி உள்ளிட்ட மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள பள்ளிகளில் நன்கொடை வசூல் செய்யப்படுகிறது.

இந்தப் பள்ளிகளில் மாவட்ட ஆட்சியர் நேரடியாக ஆய்வு செய்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கட்டாய நன்கொடை வசூல்களை பள்ளிகள் நிறுத்தாவிட்டால், பள்ளிகளின் முன்பாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பாக போராட்டங்கள் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம் என குறிப்பிட்டுள்ளனர் அவர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin