புதன், 3 ஜூன், 2009

நெல்லையில் ஜூன் 3-வது வாரத்தில் அரசுப் பொருள்காட்சி: ஆட்சியர்

திருநெல்வேலி மாநகராட்சி பொருள்காட்சி மைதானத்தில் இம் மாதம் 3-வது வாரத்தில் அரசுப் பொருள்காட்சி தொடங்கி, தொடர்ந்து 45 நாள்கள் நடைபெறும் என, மாவட்ட ஆட்சியர் அர. பழனியாண்டி தெரிவித்தார்.

இதுதொடர்பாக இங்கு திங்கள்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை வகித்து அவர் மேலும் பேசியதாவது:

அரசின் கொள்கைகள், மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் சாதனைகளை மக்கள் அறிந்துகொள்ளும் வகையில், சுற்றுலா, தொழில், உள்ளாட்சி, வனம், மீன்வளர்ச்சி, வேளாண், காவல், மருத்துவம் மற்றும் குடும்பநலம், ஆதிதிராவிடர் நலம், கால்நடைப் பராமரிப்பு, இந்து சமய அறநிலைய ஆட்சி, செய்தி -மக்கள் தொடர்பு உள்ளிட்ட துறைகளின் அரங்குகளும், தமிழ்நாடு மின் வாரியம், குடிநீர் வடிகால் வாரியம், கிராம கைத்தொழில் வாரியம், கோ- ஆப்டெக்ஸ், தாட்கோ, திருநெல்வேலி மாநகராட்சி, அரசுப் போக்குவரத்துக் கழகம், தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழகம் போன்ற அரசு சார்பு நிறுவனங்களின் அரங்குகளும் இப் பொருள்காட்சியில் இடம்பெற உள்ளன.

சிறப்பு பஸ் வசதி: பொருள்காட்சி நடைபெறும் நாள்களில் பிற்பகல் 3 மணி முதல் இரவு 11 மணி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். மாநகராட்சி சார்பில் குடிநீர் வசதியும், சுகாதார வசதியும் செய்து கொடுக்கப்படும்.

காவல்துறை மூலம் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.
பொருள்காட்சியில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் கண்டுகளிக்கும் வகையில் பொழுதுபோக்கு அம்சங்கள், பலவகையான ராட்டி னங்கள், சிற்றுண்டி கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளும் இடம்பெறும்.

இந்த கடைகளுக்கான ஏலம் சென்னை அரசினர் தோட்டத்தில் உள்ள ராஜாஜி அரங்கில் இம் மாதம் 5-ம் தேதி நடைபெறும் என்றார் ஆட்சியர்.

செய்தி - மக்கள் தொடர்புத் துறை துணை இயக்குநர் (பொருள்காட்சி) ஜீ. மணிக்குமார், மாநகராட்சி ஆணையர் த. மோகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட அலுவலர் கே. வீரணன், செய்தி - மக்கள் தொடர்பு அலுவலர்கள் உல. ரவீந்திரன் (மாவட்டம்), ராஜேந்திரன் (பொருள்காட்சி), மாவட்ட சுற்றுலா அலுவலர் டி. செல்லப்பா, மாவட்ட சமூக நல அலுவலர் வீ. உமாதேவி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் முருகைய்யா, வேளாண் துறை இணை இயக்குநர் வேலுச்சாமி, கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் ஜனார்த்தனன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin